ராஜம் பெண்கள் விடுதி வளாகத்தில், ஓங்கி வளர்ந்திருந்த வேப்பமரத்துக்கு கீழ் நின்று கொண்டிருந்த சிதம்பரத்தை நோக்கி, புன்னகை முகத்தோடு வந்து கொண்டிருந்தாள் மலர்விழி.
கடந்திருந்த மூன்று வருட சென்னை வாழ்க்கை மலர்விழியின் நடை, உடை, பாவனைகளில் எந்த ஒரு அனாவசியமான மாற்றங்களையும் கொண்டு வந்திருக்கவில்லை. ஆனால், அவள் முகத்தில் மட்டும் படிப்புக்கே உரிய தனி வசீகரம் நர்த்தனம் ஆடியது.
ஆமாம்… மலர்விழி இப்போது தன்னுடைய இளங்கலை பட்டப்படிப்பின் இறுதிக்கட்டத்தில் இருக்கிறாள். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், நாளைமுதல் அவளுடைய கடைசிபருவத் தேர்வு ஆரம்பமாகிறது.
சிதம்பரத்திற்கு அருகே வந்ததும் கைகள் இரண்டையும் குவித்து வணக்கம் வைத்த மலர்விழி, முகம் மலர “வாங்க அங்கிள்” என்றாள்.
சிறு தலையசைப்போடு அவள் வரவேற்பை ஏற்றுக் கொண்ட சிதம்பரம், “ஃபைனல் செமஸ்டரையும் அட்டகாசமா எழுதி யூனிவர்சிட்டி ஃபர்ஸ்ட் வர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் மலர்” என்றவர், தன் கையிலிருந்த பழங்கள், ஸ்வீட்ஸ் அடங்கிய பையை மலர்விழியிடம் நீட்டினார்.
வாழ்த்துக்கு நன்றி சொல்லி அதை பெற்றுக்கொண்ட மலர்விழி, “எதுக்கு அங்கிள் இவ்ளோ வாங்கியிருக்கீங்க?” என்றாள் மென்னகையோடு.
“உன் ரூம்ல இருக்கிறவங்களோட ஷேர் பண்ணி சாப்பிடும் போது சரியா வரும் மலர்” என்றபடியே, தன் சட்டைப் பாக்கெட்டில் புதிதாக வாங்கி வைத்திருந்த பார்க்கர் பேனாவை எடுத்து மலர்விழியிடம் நீட்டிய சிதம்பரம்,
“ஒரு சின்ன ரிக்வெஸ்ட். இந்த பேனாவை வச்சுதான் மலர்விழி ஃபைனல் எக்ஸாம் எழுதணும். அப்போ தான், யூனிவர்சிட்டி ரேங்க் ஹோல்டர், நான் குடுத்த பேனாவை வச்சித்தான் டெஸ்ட் எழுதுனாங்கன்னு நான் தம்பட்டம் அடிச்சுக்க முடியும்” என்றார் சிரித்தபடி.
“ஐயோ அங்கிள்… நீங்க சொன்னா, நான் செய்துட்டு போறேன். அதுக்கு போய் ஏன் ரிக்வெஸ்ட், அது இதுன்னு பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிகிட்டு?” மெலிதாக பதறிய மலர்விழி, “உங்க தயவு மட்டும் இல்லன்னா நான் இந்த இடத்துல நிக்க முடியுமா அங்கிள்?” என்றாள் உள்ளார்ந்த குரலில்.
இந்தக் காலம் தான், எத்தனை விந்தையானது! மூன்று வருடங்களுக்கு முன்னர், மலர்விழியைப் பற்றிய உண்மையான விபரங்களை ராகவன் சொல்லவும் முகம் சுழித்த மனிதரை, இன்று முற்றுமுழுதாக அவளின் அபிமானி ஆக்கியிருக்கிறதே.
ஆமாம்… அன்று, மலர்விழியைப் பற்றி ராகவன் தன்னிடம் சொல்லவும், “விஷயம் தெரிஞ்சா உன்னோட சேர்த்து என்னையும் பொலி போட்டுருவான் டா உங்கப்பன்” என்று பதறினார் சிதம்பரம். மலர்விழி மீது காதல் இருக்கிறது என்றுவேறு ராகவன் சொல்லியிருக்க, அவரின் பதட்டத்தின் அளவு அதிகமாகவே இருந்தது.
“ஏதோ ஆதரவு இல்லாத பொட்டபிள்ளையைப் படிக்க வைக்க முயற்சிக்கிறன்னு நினைச்சா, நீ வில்லங்கத்தை விலை குடுத்துல்ல வாங்க பாக்குற ராகவா. உங்க அப்பாவைப் பத்தி உனக்கு தெரியும் தானே? மனசுல வீணா ஆசையை சுமக்காத, நடக்கவே நடக்காது” என்றார் அண்ணன் மகனிடம்.
அவனோ, “ஆளைப் பார்த்து, அவங்களோட அடையாளத்தைப் பார்த்து வராது சித்தப்பூ காதல்” என்று தத்துவம் பேசினான்.
“டயலாக் பேசும் போது நல்லா தான் இருக்கும். ஆனா, ப்ராக்டிக்கல் லைஃப் க்கு இதெல்லாம் ஒத்துவராது ராகவா. அதுலயும் உங்க அப்பா… சான்ஸ்ஸே இல்ல” என்றார் சிதம்பரம்.
‘படித்து நல்ல வேலையில் அமர்ந்துவிட்ட தன்னாலேயே கரகாட்ட குடும்ப பின்னணி உடைய மலரை தன் குடும்பத்தின் மருமகளாக சிந்திக்க முடியவில்லை என்னும்போது, குடும்ப பாராம்பரியம் என்ற வட்டத்துக்குள் அடைபட்டு கிராமத்தில் வாழும் அண்ணனால் கண்டிப்பாக முடியாது’ என்றே அவருக்கு தோன்றியது.
“எங்கப்பா சொல்லுறது இருக்கட்டும் சித்தப்பா, நீங்க என்ன நினைக்கிறீங்க? அதை மொதல்ல சொல்லுங்க.” கிடுக்கிப்பிடி போட்டான் ராகவன்.
“நா… நான் என்ன நினைக்க ராகவா?” சற்றே தடுமாறிய சிதம்பரம், “கரகாட்டம் ஆடுற குடும்பத்துல உள்ள பொண்ணு எப்பிடி டா நம்ம குடும்பத்துக்கு சரிபட்டு வரும்?” என்றுவிட்டார் மெதுவாக.
சித்தப்பாவிடமிருந்து இப்படியொரு பதிலை எதிர்பாராத ராகவனோ, “இன்கம்டேக்ஸ் ஆஃபீஸருக்குள்ள இப்படியொரு பட்டிக்காட்டான் ஒளிஞ்சிருப்பான்னு நான் நினைச்சு கூட பார்க்கல சித்தப்பூ” என்றான் அதிருப்தியாக.
“நானே இப்படின்னா, எங்கண்ணன் எப்படி ரீஆக்ட் பண்ணுவாருன்னு நினைச்சு பாருடா மகனே” என்று அதற்கும் பதில் வைத்திருந்தார் சிதம்பரம்.
“அண்ணனும் தம்பியும் வேண்டாம்னு சொல்லுற அளவுக்கு, அப்பிடி என்ன குறைஞ்சு போனாளாம் மலர்?” குரலில் கோபம் எட்டிப்பார்க்க கேட்டான் ராகவன்.
“வேண்டாம் ராகவா… இது யோசிச்சு நிதானமா பேச வேண்டிய விஷயம், இப்போ நாம பேசவேண்டாம்” என்றார் சிதம்பரம்.
“இதுல யோசிக்க எதுவுமே இல்ல சித்தப்பூ. என்னோட வாழ்க்கைல ஒரு பொண்ணு உண்டுன்னா, அது மலர்விழி மட்டும் தான். இல்லைன்னா ராகவன் வாழ்க்கையில எந்த பொண்ணுமே இல்ல.” உறுதிபடச் சொன்னான் ராகவன்.
“வார்த்தைகளை விடாத ராகவா?” அதட்டினார் சிதம்பரம்.
அவனோ, சில வினாடிகள் மௌனத்திற்கு பிறகு, “மலரோட படிப்பு இப்போ உங்க கைல தான் இருக்கு சித்தப்பா” என்றான் ஆழ்ந்த குரலில்.
“இல்ல… உங்க அண்ணன் மேல உள்ள அபிமானத்துல, அவர்கிட்ட நீங்க விஷயத்தை போட்டு குடுத்துறக் கூடாதுல்ல, அதான்…” வாக்கியத்தை முடிக்காமல் தயங்கினான் ராகவன்.
“படவா ராஸ்கல்… என்னைப் பாத்தா த்தேர்ட் ரேட் வில்லன் மாதிரியா உனக்கு தெரியுது?” விட்டால் அங்கிருந்தே அவன் கழுத்தைப் பிடித்து நெறித்துவிடும் ஆவேசத்தில் சிதம்பரம் கத்த, எதுவும் சொல்லாமல் அழைப்பைத் துண்டித்துக் கொண்டான் ராகவன்.
ராகவன் சொன்னது போல விஷயத்தை அண்ணன் காதுவரைக் கொண்டு போகும் எண்ணம் எல்லாம் சிதம்பரத்துக்கு இல்லை. என்றாலும், மலர்விழியை தங்கள் வீட்டு மருமகளாக அவரால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
திருமணம் என்பது இரு மனங்களின் பிணைப்பு மட்டுமல்லாது, இரு குடும்பங்களின் இணைப்பாயிற்றே. அப்படியிருக்கும்போது, இந்த திருமணத்தின் மூலம் கரகாட்டத்தை தொழிலாக கொண்ட ஒரு குடும்பம் தங்கள் குடும்பத்துடன் உறவு என்று சொல்லி இணைவதை கற்பனைக்கூட அவரால் செய்ய முடியவில்லை.
தன் சிந்தனையின் போக்கில் சிதம்பரத்துக்கு வெட்கமாகக்கூட இருந்தது. ‘மனிதர்கள் தங்களுக்குள் உருவாக்கி வைத்திருக்கும் வர்க்கபேதத்தை, இளம் தலைமுறையினரைப் போல எளிதாக என்னால் ஏன் தாண்டி வரமுடியவில்லை?’ என்ற எண்ணம் அவரை அலைக்கழித்தது.
ஆகமொத்தம், படித்தும் பாமரனைப் போல சிந்தித்த சிதம்பரம், என்ன செய்வது என்று தெரியாமல் இரண்டும் கெட்டான் மனநிலையில் குழம்பிப் போய் நின்றார். ராகவனோ, செயினை மீட்க சிறிய தகப்பன் தருவதாகச் சொன்ன பணத்தை வாங்க மறுத்தான்.
பணத்தை வாங்க மறுத்து, மகன் தன்னைத் தள்ளி வைப்பது புரிந்து கோபம் வந்தது சிதம்பரத்துக்கு. அவனை அப்படியே விட்டுவிட மனமின்றி, “எங்கிட்ட பணத்தை நீ வாங்கலைன்னா, உங்கப்பா கிட்ட எல்லா விஷயத்தையும் சொல்லிடுவேன் ராகவா” என்று மிரட்டியே பணத்தை வாங்கவைத்தார்.
கடைசியில், மகனின் சந்தோஷத்திற்கு முன் எதுவும் பொருட்டில்லை என்ற முடிவுக்கு சிதம்பரம் வந்திருந்தாலும், மனதின் ஓரத்தில் சின்ன நெருடல் ஒன்று இருந்து கொண்டே தான் இருந்தது.
அதன் பிறகு தகப்பனும் மகனும் பேசிக்கொண்டாலும் கூட, முயன்று மலர்விழியைப் பற்றி பேசுவதை தவிர்த்து வந்தார்கள்.
அந்தக் கொள்கையை ஒருநாள் கைவிட்ட ராகவன், “மலர்விழி தன்னுடைய முதல்பருவத் தேர்வில் பல்கலைகழக அளவில் முதல் மதிப்பெண் பெற்றிருக்கிறாள்” என்ற தகவலை சித்தப்பாவிடம் பகிர்ந்து கொள்ள, இதோ, இன்று மலர்விழியை வாழ்த்த வந்திருப்பது போல, அன்றும் அவளை வாழ்த்துவதற்காக விடுதிக்கு ஓடோடி சென்றிருந்தார் சிதம்பரம்.
ஆமாம்… படிப்பின் வாசம் தெரிந்தவருக்கு, மலர்விழியின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் உழைப்பு புரிந்தது.
அந்த உழைப்புக்கு மரியாதை செய்ய, தன் குழப்பத்தை எல்லாம் ஓரங்கட்டி வைத்துவிட்டு ஓடோடி வந்துவிட்டார் மனிதர்.
ஏதோ, தானே வெற்றிபெற்றது போல குரலில் உற்சாகம் பீறிட மலர்விழியை வாழ்த்தியவருக்கு, வெற்றியை தலைக்கேற்றிக் கொள்ளாத மலர்விழியின் சுபாவம் அத்தனை பிடித்திருந்தது.
‘உங்கள் இத்துப்போன பரம்பரைக்கு இதைவிட அப்பாடக்கர் பெண்ணை நீங்கள் பார்த்துவிடுவீர்களோ?’ என்று, அவர் மனம்வேறு கிடந்து ஏகத்திற்கும் குதிக்க, மனதிலிருந்த சிறு நெருடலும் அவரிடம் சொல்லிக் கொள்ளாமலேயே விடை பெற்று சென்று விட்டது.
தன் மனமாற்றத்தை மகனிடம் சிதம்பரம் பகிர்ந்து கொண்டார். மகிழ்ந்த ராகவன், “யூனிவர்சிட்டி ரேங்க் ஹோல்டர் ஆனதும், மலர்விழியை உங்க குடும்பத்துக்குள்ள வளைச்சி போட திட்டம் போட்டுட்டீங்க போல சித்தப்பூ” என்றான் கேலியாக.
மகனின் அன்றைய கேலியில் இப்போதும் உதடுகள் புன்முறுவலைச் சிந்த, “ராகவன் ஃபோன் பண்ணுனானா மலர்?” என்று கேட்டார் சிதம்பரம்.
“முந்தாநாள் பண்ணுனாங்க அங்கிள். நாளைக்கு டெஸ்ட் ஆரம்பிக்கிறதால கண்டிப்பா இன்னைக்கு பண்ணுவாங்க” என்றாள் மலர்விழி.
இந்த விஷயத்தில் அண்ணன் மகனின் நிதானத்தையும், பொறுமையையும் பாராட்டாமல் இருக்கமுடியவில்லை சிதம்பரத்தால். ஆமாம்… மனதிற்கு பிடித்த பெண் இங்கே இருக்கிறாள் என்பதற்காகவெல்லாம், மாதம் ஒருமுறை வந்து நிற்கவில்லை ராகவன்.
இத்தனை வருடங்களில் நான்கு அல்லது ஐந்து தடவைகள் ராகவன் சென்னை வந்திருந்தாலே பெரிய விஷயம்.
கடந்த முறை ராகவன் சென்னைக்கு வந்திருக்கும் போது, “என்னடா மகனே உன் காதலை மலர்கிட்ட சொல்லிட்டியா?” ஒரு ஆர்வத்தில் சிதம்பரம் கேட்க,
தெய்வீகச் சிரிப்பொன்றை சிந்திய ராகவன், “சொல்லித்தான் தெரியணுங்கிற நிலைமையில இல்ல சித்தப்பூ எங்க காதல்” என்று கண் சிமிட்டியிருந்தான்.
இப்போது ராகவனைப் பற்றி பேசும்போதே குழைந்து போய் வந்த மலர்விழியின் குரலே, ராகவன் சொன்னது உண்மைதான் என்று கட்டியங்கூறியது.
எது எப்படியோ, ராகவனுக்கு ஜோடி மலர்விழி தான். இருவரும் வாழ்க்கையில் இணைய எத்தனை தடைகள் வந்தாலும், அவற்றை கடக்க அவர்களோடு இணைந்து நிற்க வேண்டும் என்று ஆயிரமாவது தடவையாக உறுதி பூண்ட சிதம்பரம், மலர்விழியிடம் விடை பெற்றுக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார்.
சிதம்பரம் கிளம்பவும் விடுதியை நோக்கி நடந்த மலர்விழி, தரைத்தளத்தில், தங்கள் வீட்டின் முன்னே நின்றிருந்த விடுதி உரிமையாளரின் மனைவி ராஜத்தை கண்டு புன்னகைத்தாள்.
“நாளைக்கு எக்ஸாம் க்கு விஷ் பண்ணிட்டு போறாரா உங்க அங்கிள்?” என்று கேட்டார் ராஜம். அவ்வப்போது சிதம்பரத்தின் வருகை அங்கேயிருந்ததால் அவரை ராஜத்திற்கு தெரிந்திருந்தது.
இவ்வளவு ஏன்? பெற்றவர்கள் இல்லாததால் ராகவன் தான் மலர்விழி படிப்புக்கு உதவி செய்வது என்றுகூட ராஜத்துக்கு தெரியும். இத்தனை வருடங்களில், ராஜத்திடம் ஏற்பட்டிருந்த நட்பின் காரணமாக அதை சொல்லியிருந்தாள் மலர்விழி.
அதைத்தாண்டி தன்னைப் பற்றி வேறெதுவும் சொல்லவில்லை மலர்விழி. ‘வீணாக அடுத்தவர்கள் தன்னைப் பார்த்து ஏன் புருவத்தை உயர்த்த வேண்டும்?’ என்று எண்ணம் தான் அதற்கு காரணம்.
அவளின் குரலைக் கேட்டு வீட்டுக்குள்ளிருந்து ஓடிவந்த தீபக், கையிலிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாளை மலர்விழியிடம் நீட்டியபடியே, “அக்கா, இந்த தீக்குச்சி, மேத்ஸ்ல எனக்கு சென்டம் வராதுன்னு சொல்லுறா க்கா” என்றான் கோபத்தில் மூக்குவிடைக்க.
தீபக், ராஜத்தின் மகன். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியிருக்கிறான். அவன் தீக்குச்சி என்று சொன்னது அவனுடைய அக்கா தீக்ஷிதா வைத் தான். அவள் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதியிருக்கிறாள்.
தம்பியின் பின்னோடே ஓடிவந்த தீக்ஷிதா, “அவன் தான் மொதல்ல எனக்கு சென்டம் கிடைக்காதுன்னு சொன்னான் க்கா” என்று பதிலுக்கு புகார் வாசித்தாள்.
இருவரின் செயலிலும் தானாக மலரின் இதழ்களில் புன்னகை அரும்ப, “அடேய்… டெஸ்ட் முடிஞ்சு எத்தனை நாள் ஆகுது, இன்னுமா டா கொஸ்டின் பேப்பரோட அலையிறீங்க?” என்றாள் கேலியாக.
ராஜத்திற்கு மலர்விழியை பிடித்திருந்தாலும், தனிப்பட்ட முறையில் அவர்களுக்கிடையே நட்பு ஏற்பட்டது பிள்ளைகளின் படிப்பு மூலமாகத் தான். தீக்ஷிதா பத்தாவது படிக்கும் போது, தாயும் மகளுமாக போர்ட்டிக்கோவில் அமர்ந்து விடை வராத கணக்கோடு மல்லுக்கட்டிக் கொண்டிருந்த நேரம், அங்கே வந்த மலர்விழி அதை எளிதாக சொல்லிக் கொடுத்தாள்.
அன்றிலிருந்து பிள்ளைகள் இருவருமே கணித பாடத்தில் என்ன சந்தேகம் ஏற்பட்டாலும் மலர்விழியைத் தான் தேடினார்கள். அது, அவர்களுக்கிடையே நல்ல நட்பை உண்டாக்கி இருந்தது.
பதிலுக்கு புன்னகைத்த மலர்விழி, சிதம்பரம் வாங்கி வந்திருந்த இனிப்புகளை இளையவர்களோடு பகிர்ந்து, அவர்களுடைய வாழ்த்துகளையும் வாங்கிக்கொண்டு அறைக்கு வந்திருந்தாள்.
கையிலிருந்த பையை ஸ்டடி டேபிளில் வைத்தவள், அதற்கு முன்னால் கிடந்த நாற்காலியில் அமர்ந்தாள். கிடைத்திருந்த வாழ்த்துகளாலோ என்னவோ, மனம் நிறைந்து போயிருந்தது. உடன் தங்கியிருந்த பெண்கள் வேலைக்குச் சென்றிருந்ததால் அறையில் அவள் மட்டும் தான்.
டேபிளில் இருந்த தாயின் புகைப்படத்தை விரல்களால் தடவிக் கொடுத்தவள், “ம்மா… உங்க பொண்ணு இன்னும் கொஞ்ச நாள்ல பட்டதாரி” என்று வாய்விட்டு முணுமுணுத்துக் கொண்டாள்.
“இதோ, இப்போது தான் கல்லூரியில் சேர்ந்தது போல இருக்கிறது, அதற்குள் மூன்று வருடங்கள் ஓடிவிட்டது” என்று சொல்ல முடியாத கல்லூரி வாழ்க்கை தான் மலர்விழியுடையது.
இந்த மூன்று வருடங்களில், விடுமுறைக்கு செல்ல வீடு, வாசல், உற்றார், உறவினர் என்று யாரும் இல்லாமல், இந்த விடுதியே தஞ்சம் என்று இருந்த மலர்விழியின் தனிமையை ராகவன், தீபக், தீக்ஷிதா மூவரும் தான் போக்கியிருந்தார்கள்.
ராகவனை நினைக்கும் போதே மலர்விழியின் இதயத்தில் மென்மை வந்து அமர்ந்து கொண்டது. தன்னை படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக அவன் செய்த தகிடுதத்தங்களை நினைத்து பார்த்தவளின் இதழ்கள் புன்னகையில் விரிந்தன.
ஆமாம்… அத்தனையும் செந்தில் மூலமாக மலர்விழிக்கும் தெரிய வந்திருந்தது.
மலர்விழி முதல் செமஸ்டர் தேர்வில் பல்கலைகழக அளவில் முதல் இடம் பெறவும், மூன்று வருடங்களுக்கும் கட்டணம் கட்டத்தேவை இல்லை என்று கல்லூரி நிர்வாகம் அவளுக்கு சலுகை வழங்கியது.
அதை சந்தோஷமாக ராகவனிடம் பகிர்ந்து கொண்ட மலர்விழி, “உங்க ஹெச்ஓடி கிட்ட எனக்கு காலேஜ் ஃபீஸ் கட்ட வேண்டாம்னு சொல்லிடுங்க தலைவரே. தேவைப்படுற வேற யாருக்காவது அந்த பணம் யூஸ் ஆகும்ல” என்றாள். ஒரு சிரிப்போடு ஒத்துக் கொண்டான் ராகவன்.