அதைக் கேட்டு, அப்போ எப்படி நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு வந்தாங்க? என்ற கேள்வியும் அதைவிட முக்கியமாக, இவ ஏன் உமேஷை அண்ணானு கூப்பிடறா? என்ற கேள்வி எழுந்தது உமாவிற்கு.
அதே நேரத்தில், ப்ரீத்தியின் அண்ணன், அவனுடைய அப்பா நாகேஸ்வரனுடன் பேசிக் கொண்டிருந்தான். உமா வீட்டில் பார்வதியும் ப்ரீத்தியும் தங்கியிருப்பதைத் தெரிவித்து விட்டு, அடுத்த நாள் காலை இதே தகவலை ஜெயந்தியுடன் ப்ரீத்தி பகிர்ந்து கொள்ளும் போது, அங்கே வெடிக்கப் போகும் கேள்விக் கணைகளுக்கு, ஏற்கனவே , உமாவின் வீட்டிலிருந்து புறப்படுமுன் அவனுடைய பாட்டியைத் தயார் செய்து வைத்ததைப் போல் அவரையும் தயார்ச் செய்தான்.
“என்ன டா இப்போ சொல்ற? நான் தனியா எப்படி உன்னோட அம்மாவையும் தாத்தாவையும் சமாளிக்கறது?” என்று கேட்டார் நாகேஸ்வரன்.
“மதுரைலேர்ந்து கிளம்பும் போதே உங்ககிட்டே சொல்லியாச்சு..அதை அவங்ககிட்டே சொல்ல முகூர்த்தம் தேடிட்டு இருந்திருக்கீங்க..நாளைக்குக் காலைலே சுந்தரி பாட்டியை அழைச்சிட்டுப் போய் உமா வீட்லே விட்டிட்டு வேலைக்குப் போயிடுவேன்..மூணு மணி போல திரும்ப அங்கே போவேன்..அதுக்குள்ளே சுந்தரி பாட்டிகிட்டே விஷயத்தை சொல்லியிருப்பாங்க பாட்டி..நாளைக்கு இராத்திரி ராம நாதன் அங்கிளுக்கு ஃபோன் செய்து நீங்களே விஷயத்தை சொல்லிடுங்க.” என்றான் உமேஷ்.
“ப்ரீத்திக்குத் தெரியுமா டா?” என்று கேட்டார் நாகேஸ்வரன்.
“இப்போவரை நம்ம மூணு பேருக்கு தான் தெரியும்..நாளைக்கு இராத்திரி, இதே டைம்லே மொத்த பேருக்கும் தெரிஞ்சிருக்கணும்.” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தான் உமேஷ்.
அன்றிரவு, அவளை அணைத்தபடி உறங்கிக் கொண்டிருந்த ப்ரீத்தி, நிஜமா? என்று சோதிக்க, அவளின் கையை லேசாகத் தொட்டுப் பார்த்தாள் உமா.அது கனவல்ல நிஜம் என்று உணர்ந்த தருணத்தில் கண்களில் நீர் கோத்தது. அந்த நிஜத்தை நடத்திக் கொடுத்தவனின் நினைவில் அது உறங்கா இரவாகிப் போனது உமாவிற்கு.
அடுத்த நாள் காலை, உமேஷ் எதிர்பார்த்தது போல், சம்பவங்கள் அனைத்தும் சரியாக, சற்றும் பிசகமால் நடந்தேறியது. ஜெயந்தியின் மூலம், உமா வீட்டில், ப்ரீத்தியும் பார்வதியும் தங்கியிருப்பதை ஏகாம்பரமும் மீனாவும் தெரிந்து கொண்டனர்.உமேஷின் மனத்தில் இருப்பதை அவர்களுக்கு நாகேஸ்வரன் வெளிப்படுத்தியவுடன் வெடிகுண்டு வெடித்தது. அதன் விளைவாக, நண்பகலில் அவளுடைய வீட்டிற்குக் கிளம்பிப் போனாள் ஜெயந்தி.கணவரின் சமாதானத்தில் சமாதானமடையாமல் மகனுடன் பேச வேண்டுமென்று அடம் பிடித்துக் கொண்டிருந்தார் மீனா.
பகல் ஒரு மணிக்கு, வீட்டில் இருந்த நால்வரும் சாப்பிட்டு கொண்டிருந்த போது, குறுஞ்செய்தி மூலம், இரண்டு மணி நேரம் என்று உமாவிற்குத் தகவல் கொடுத்தான் உமேஷ். அதைப் பார்த்து,
“ஐயோ பாட்டி.” என்றாள் உமா.
“என்ன ஆச்சு? லீவ் கொடுக்கலையா? இராத்திரி நீ வேலைக்குப் போகணுமா?” என்று கேட்டார் சுந்தரி பாட்டி.
“இல்லை..இல்லை..மூணு மணிக்கு வரப் போறேன்னு அவங்க மெஸெஜ் போட்டிருக்காங்க.” என்றாள்.
உடனே. அவர்களின் சாப்பாட்டைக் கண்களால் அளந்த சுந்தரி,’ஏதாவது பொரியல் செய்து..ரசம் வைச்சிடு..சரியா இருக்கும் பசுபதி தம்பிக்கு.” என்றார்.
அவர்களுடைய பேச்சிலிருந்து அவருடைய பேரன் சாப்பிட வரப் போகிறானென்று தெரிந்து கொண்டார் பார்வதி. அவன் வருவதற்கு முன், அவன் செய்யச் சொன்ன வேலையை இன்னும் செய்து முடிக்கவில்லை. காலையிலிருந்து பேத்திகள் இருவரும் அவர்களையே சுற்றி வருவதால், இதோ, அதோ என்று தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தார் பார்வதி. அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் சம்மந்தி சுந்தரியிடம் எப்படியாவது பேசி விட வேண்டுமென்று முடிவு செய்து அதற்கான வேலையில் இறங்கினார்.
“ப்ரீத்தி, சாப்பிட்டு முடிச்ச பிறகு நாங்க இரண்டு பேரும் கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துக்கறோம்..நீ உமாக்குச் சமையலறைலே உதவி செய்யறேயா? என்று கேட்டார்.
அவளுக்கு எந்த வேலையும் வராது என்று தெரியும்.அதனால் தான் அவளை உமாவிற்கு உதவியாளர் ஆக்கி அவர்களுடைய அறைக்கு வராமல் இருக்க வழி செய்து கொண்டிருந்தார் பார்வதி.
“எனக்கு ஒண்ணும் வராதுன்னு உங்களுக்குத் தெரியாதா? நான் உங்க இரண்டு பேரோட பேசிட்டு இருக்கேன்.” என்று அவர் எதிர்பார்த்த பதிலைத் தந்தாள் ப்ரீத்தி.
“அவளோட உதவி எல்லாம் வேணாம்..ஒரு பொரியலும் ரசமும் நானே தனியாச் சமைச்சிடுவேன்..அவளும் மாடி ரூம்லே ரெஸ்ட் எடுத்துக்கட்டும். என்றாள் உமா.
உமேஷ் வீட்டிற்கு வந்த போது மாடி அறையில் இளைப்பாறிக் கொண்டிருந்தாள் ப்ரீத்தி.இரண்டு பாட்டிகளும், கீழே இருந்த படுக்கையறையில், கட்டிலில், எதிரும் புதிருமாக அமர்ந்திருந்தனர்.கடந்த இரண்டு மணி நேரமாக, கடந்து போன நிகழ்வுகளைப் பேசி பேசி, இனி நடக்க போவதை அலசி அலசி களைப்படைந்து இருந்தனர்.
“அவளுக்கு என்னைத் தவிர யாருமில்லை..அதான் உங்ககிட்டே அவளுக்கு ஒரு நல்லது செய்யச் சொல்லி கேட்டேன்..பசுபதி தம்பிகிட்டேயும் அதையே தான் சொன்னேன்..இப்படி உங்க வீட்டுக்கு, உங்க பேரனோட மனைவியா அழைச்சிட்டுப் போவீங்கன்னு எதிர்பார்க்கவேயில்லை.” என்று பேசி முடிக்கும் முன், அழுகை சுந்தரியின் வார்த்தைகளை விழுங்கியது.
அவர் சொல்ல வந்ததை புரிந்து கொண்ட பார்வதி,”நானும் அவன்கிட்டே நீங்க சொன்னதை தான் சொன்னேன்..அந்த நல்ல வாழ்க்கை, வாழ்க்கைத் துணை அவன் தான்னு சொல்லிட்டான்..அவனுக்கு உமாவைப் பிடிச்சிருக்குன்னு என் பையன்கிட்டே நேரடியா சொல்லிட்டான்.” என்றார்.
அதைக் கேட்டு சில நிமிடங்கள் அமைதியாக இருந்த சுந்தரி,”நீங்கெல்லாம் உமாவை வேணாம்னு சொல்லியிருக்கீங்க..அதனாலே அவ மனசுலே உங்க எல்லாரைப் பற்றியும் என்ன அபிப்பிராயம் இருக்குன்னு எனக்குத் தெரியலை..அவளுக்குப் பசுபதி தம்பியைப் பிடிக்கணும்.” என்றார் திட்டவட்டமாக.
“அவன்கிட்டே உமாவைப் பற்றி நாங்க சொல்லவே இல்லை..அவனுக்கு அவளைப் பற்றிஎதுவும் தெரியாது…ப்ரீத்தி கல்யாணம் விஷயத்திலே தான் அவளுக்கு சித்தப்பா இருக்கறதே அவனுக்குத் தெரிய வந்தது.. உங்களைப் பார்க்க ஆஸ்பத்திரி வந்த அன்னைக்குத் தான் உமாவைப் பற்றி உங்க மகன் மூலம் தெரிஞ்சுக்கிட்டான்.” என்றார் பார்வதி.
“உமாவிற்குப் பிடிக்கலைன்னு தான் வீடு தேடி வந்து பெண் கேட்ட எதிர் வீட்டுப் பையனை வேணாம்னு சொன்னேன்..அவளுக்குப் பிடிக்கணும்..அது எனக்கு ரொம்ப முக்கியம்.” என்றார் சுந்தரி பாட்டி.
அதன் பின், இருவரும் அவரவர் சிந்தனையில் அமைதியாக அமர்ந்திருக்க, திடீரென்று,”அவளுக்குஇஷ்டம் தான்..பசுபதி தம்பி மேலே உமாக்கு இஷ்டம் தான்” என்றார் சுந்தரி பாட்டி.
“இப்போ தான் அவக்கிட்டே பேசணும்னு சொன்னீங்க..எப்படிக் கண்டு பிடிச்சீங்க?” என்று கேட்டார் பார்வதி.
அடுப்பில் காரக் குழம்பு கொதித்து கொண்டிருந்தது.சமையல் அறை ஜன்னல் வழியாக தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் உமா.
அன்று காலையில், பத்து நிமிடம் என்ற குறுஞ்செய்தி வந்தவுடன், பரபரப்பாக, மாடியிலிருந்து கீழே வந்தவள், கதவைத் திறந்து வைத்துக் காத்திருக்க, சுந்தரி பாட்டியுடன் உள்ளே நுழைந்தான் உமேஷ்.
“காலைலே ஆறு மணிக்கு வீட்டுக்கு வந்து, உடனே கிளம்புங்க..இரண்டு பேத்தியும் காத்திட்டு இருக்காங்கன்னு சொல்லி இங்கே அழைச்சிட்டு வந்திட்டார் பசுபதி தம்பி.” என்றார் சுந்தரி. அதைக் காதில் கூட போட்டுக் கொள்ளாமல் உடனே பறந்து சென்று விட்டான் உமேஷ்.
சில நிமிடங்கள் கழித்து, மாடியிலிருந்து இறங்கி வந்த ப்ரீத்தி, வரவேற்பறையில் சுந்தரி பாட்டியைப்பார்த்தவுடன், ஓடி வந்து அணைத்துக் கொண்டாள்.
உடனே, அன்றைக்கு விடுமுறை கோரி அலுவலகத்திற்கு மெயில் அனுப்பினாள் உமா. அதற்கு பின், இரண்டு பாட்டிகளுக்கும் அவர்களுடைய பேத்திகளுடன் நேரம் இனிமையாக கழிந்தது.இதுபோல் சந்தோஷமான தினத்தை கொடுத்தவன் மீது மீளாக் காதல் உண்டானது உமா பார்வதிக்கு.
வாசல் கேட்டருகில் உமேஷின் வண்டி வந்து நின்றவுடன், அடுப்பை அணைத்து விட்டு, வாசல் கதவைத் திறக்கச் சென்றாள்.வாசல் கதவைத் திறந்தவுடன்,”வாங்க” என்று அவனை வரவேற்றாள்.அவளின் முகத்தைக் கூர்ந்து நோக்கியவனுக்கு அதில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை.அதனால், இன்னும் அவளுக்குத் தகவல் போகவில்லை என்று தெரிந்து கொண்டான்.‘கொடுத்த வேலையைச் சரியாச் செய்யாம இந்தப் பாட்டி என்ன செய்திட்டு இருக்காங்க?’ என்று மனத்தில் நினைத்தபடி, பார்வையால் அவனுடைய பாட்டியைத் தேடினான் உமேஷ்.அதைப் புரிந்து கொண்டு,
“ப்ரீத்தி மாடிலே ரெஸ்ட் எடுத்திட்டு இருக்கா..இவங்க இரண்டு பேரும் இந்த ரூம்லே இருக்காங்க.” என்று சுந்தரி பாட்டியின் அறையைச் சுட்டிக் காட்டினாள்.
“ஓ.” என்றான் உமேஷ்.
“நீங்க சாப்பிட வாங்க.” என்று அவனை அழைத்தாள்.உமா கிட்சனுக்குச் செல்ல, இன்னொரு படுக்கையறையில் இருந்த வாஷ் ரூமை உபயோகித்து விட்டு சமையலறைக்கு வந்தான் உமேஷ்.சமைலறையில் நுழைந்தவுடன், அவனுக்குப் பிரியமான காரக் குழம்பின் வாசனை அவனை மயக்கியது. உணவு மேஜை மீது அவனுக்குத் தட்டு வைத்து, அதில், ஏற்கனவே பொரியலும், சாதமும் பரிமாறியிருந்தாள் உமா.
அவன் அமர்ந்ததும், அவன் புறம் திரும்பி, “ஒரு நிமிஷம்” என்று சொல்லி விட்டு, அடுப்பில் ஏதோ செய்து கொண்டிருந்தாள்.
அது என்னயென்று உணர்ந்த நொடியில், அவளருகே இருந்தான் உமேஷ்.இடதுக் கையில், அவள் பிடித்திருந்த கரண்டியிலிருந்து ஒரு சொட்டு காரக் குழம்பை அவளுடைய வலதுக் கையில் விட்டு, அதை சுவைத்துப் பார்க்க இருந்தவளின் கையைப் பிடித்து, மெதுவாக அவன் முகத்தருகே கொண்டு போய், அவனுடைய நாவால் அதைச் சுவைத்து, உமா பார்வதியின் கண்களுடன் அவனுடைய கண்களைக் கலந்து,”எனக்குப் பிடிச்சிருக்கு.” என்றான் உமேஷ் பசுபதி.
அதைக் கேட்ட நொடியில், கரண்டி கீழே விழுந்து, “நங்” கென்று ஓசை எழுப்ப, அதற்குப் போட்டியாக,”ஐயோ பாட்டி.” என்று உமாவும் பலத்த ஓசை எழுப்ப, அடுத்த நொடி, “என்ன ஆச்சு?” என்று சமைலறைக்கு வந்த பார்வதியின் கண்களுக்கு, உணவு மேஜையில் அமர்ந்திருந்த பேரனும், அடுப்பருகே, பீதியிடன், அவளுடைய உள்ளங்கையைப் பார்த்துக் கொண்டிருந்த பேத்தியும் தென்பட்டனர்.
உமேஷின் மீது சந்தேகப் பார்வையை வீசி, “என்ன டா? எதுக்கு டா கத்தினா?” என்று கேட்டார்.
“என்னை ஏன் கேட்கற..கத்தினவங்களைக் கேளு.” என்ற பதிலில்,இவன் தான் ஏதோ செய்திருக்கான் என்று ஊர்ஜிதமானது பார்வதிக்கு.
உமாவின் அருகே சென்று,”எதுக்கு கையைப் பார்த்திட்டு இருக்க..ஏன் அப்படிக் கத்தின?” என்று கேட்டார்.
உமாவிடமிருந்து பதில் வரவில்லை.அவள் மீதிருந்த காதலை அவன் தெரியப்படுத்திய விதத்தில்,திக்பிரமை அடைந்து இருந்தாள். அவளிடமிருந்து பதில் வரப் போவதில்லையென்று உணர்ந்த பார்வதி, கீழே விழுந்து கிடந்த கரண்டியை மேடையில் வைத்து விட்டு, பேரனின் புறம் திரும்பி,
“எதுக்கு டா அப்படிக் கத்தினா? சொல்லுடா.” என்றார்.
“எப்படிக் கத்தினா?”
“ஐயோ பாட்டின்னு.”
“இல்லையே..அப்படிக் கத்தலையே.” என்றான் உமேஷ்.அந்தப் பதிலில் அவளுடைய சுய உணர்வைத் திரும்பப் பெற்றிருந்த உமாவும் அவன் புறம் திரும்ப,
அதற்காகவே காத்திருந்த உமேஷிடம்,“வேற எப்படி டா கத்தினா?” என்று பார்வதி மிரட்டலாக கேட்க,
“ஐயயோ பிடிச்சிருக்குனு.” என்றான், ஒரு நொடியில், ஒரு சொட்டில், உமா பார்வதியின் உள்ளங்கை வழியாக அவளின் உள்ளத்தை அடைந்து, அவளின் உயிரோடு கலந்த போன உமேஷ் பசுபதி.