“நீயும் உமான்னே கூப்பிடு..சின்ன வயசுலே அப்படி தானே கூப்பிட்டிருக்க..அதனால் தான் பாட்டி வாயை மூடிட்டு இருந்திருக்காங்க.” என்று அப்போதைக்கு அந்த விவாததிற்கு முடிவு கட்டினான் உமேஷ்.
காரினுள்ளே அமர்ந்தபடி, உமாவின் கைப்பேசிக்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருந்த உமேஷ், நடு நடுவே, ப்ரீத்தியிடம், “இன்னைக்கு ஆஃப் டேன்னு சொன்னாளா? இல்லை வேலை இருக்குன்னு சொன்னாளா?” என்று ஒரே கேள்வியைப் பலவிதமாக கேட்டு அவனுடைய சந்தேகத்தை களைந்து கொள்ள முற்பட்டான். எத்தனை முறை அழைத்தும் அவனுடைய அழைப்பு ஒன்று கூட ஏற்கபடவில்லை. வேறு என்ன செய்யலாம்?அவள் வீட்டில் இருப்பது போல் தெரியவில்லையே? இங்கே வராமல் வேறு எங்கேயாவது சென்று விட்டாளா? என்று யோசித்தபடி அக்கம்பக்கத்தை நோட்டம் விட, எதிர் வீட்டில், கீழே இருந்த அறையொன்றில் மெலிதான வெளிச்சம் தெரிந்தது.எதிர் வீட்டு ஒற்றனிடம்போய்க் கேட்கலாமா? என்று எண்ணியவன், அந்த எண்ணத்தை உடனே உதறிவிட்டு, லேசாக ஆக்கிரமிக்க ஆரம்பித்திருந்த பயத்தைப் புறம் தள்ள முடியாமல்,
“வாங்க பாட்டி..வீட்டிலே தான் இருக்காளான்னு பார்த்திடலாம்.” என்று கார் கதவைத் திறந்தான்.
அவர்கள் மூவரும் காரிலிருந்து இறங்கி, கேட்டைத் திறந்து கொண்டு வீட்டை நோக்கிச் சென்றனர்.இரண்டு கைகளில், இரண்டு பைகளைத் தூக்கிக் கொண்டு, பாட்டியையும் உமேஷையும் பின் தொடர்ந்தாள் ப்ரீத்தி. அடுத்த சில நொடிகள், உமேஷின் தாக்குதலில், விடாமல் அலறியது அழைப்பு மணி.
அந்த அலறலில் விழிப்பு நிலைக்கு வந்த உமா, கண்களைத் திறக்க, அறையின் இருட்டு, இரவாகிவிட்டது என்று அவளுக்கு உணர்த்தியது.யார் இது? இந்த நேரத்தில்? என்ற யோசித்தபடி கைப்பேசியை உயிர்ப்பிக்க, மணி ஒன்பதை நெருங்கிக் கொண்டிருந்தது.‘எதிர்வீட்டுக்காரனா மணி அடிக்கிறான்? இன்னைக்கு இருக்கு அவனுக்கு’ என்று வேகத்துடன் எழுந்தவள், அனைத்து விளக்குகளையும் உயிர்ப்பித்து, கையில் கைப்பேசியுடன்,மாடிப்படிகளில் தடதடவென்று இறங்கி வந்து, கதவைத் திறந்தாள்.
அவள் திறந்தவுடன், உள்ளே நுழைந்த உமேஷிற்கு அனிச்சையாக ஒதுங்கி அவள் வழி விட, அவனுக்குப் பின்னால் பார்வதி, கடைசியாக ப்ரீத்தி என்று அவர்கள் மூவரும் வீட்டிற்குள் வந்தவுடன் கதவைச் சாத்தினாள் உமா. டீ ஷர்ட், பாவாடையில், உறக்கம் கலையாத கண்களுடன், கையில் ஃபோனுடன் நின்று கொண்டிருந்தவளைப் பார்த்தவுடன், ஆசை, கோபம் இரண்டும் ஒரே நேரத்தில் உமேஷைத் தாக்கியது. முதல் உணர்வை இப்போது வெளியிட முடியாதென்று உணர்ந்தவன், இரண்டாவதை வெளியேற்றினான்.
“கைலேயே ஃபோனை வைச்சுக்கிட்டு நான் அனுப்பின மெஸெஜைப் பார்க்காம, செய்த கால் எதையும் எடுக்காம, வீட்டு உள்ளே, இருட்டிலே என்ன செய்திட்டு இருந்த?” என்று அவனுடையபயம் மறைந்து,மூழு வீச்சுடன் கோபம் வெளியே வந்தது.பாதி உறக்கத்தில், கோபத்தில் கதவைத் திறந்தவள் மீது பசுபதி புலி பாய, பெண்ணவளின் கோபமானது பயமாக மாறிப் போனது.
இருளில் இருந்த வீடும் அதன் அமைதியும் பார்வதியையும் பயமுறுத்தியிருந்தது.அவர்கள் வீட்டிலிருந்து கிளம்பிய உமாவைத் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டுமோ என்று யோசிக்க வைத்திருந்தது. கண்ணெதிரே அவளைப் பார்த்ததும் நிம்மதி அடைந்தவர்,“என்ன கேள்வி டா கேட்கற? இருட்டிலே தாயமா ஆடிட்டு இருந்திருப்பா..தூங்கிட்டு இருந்திருப்பா..அவளைப் பார்த்தாலே தெரியுது.” என்று உமாவிற்கு ஆதரவாகப் பேசினார்.
உடனே, பயத்தில் இருந்தவள்,”பாட்டி.” என்று பார்வதியை இறுக அணைத்துக் கொண்டாள்.
”கைப்பேசியை சைலெண்ட்லே வைச்சிருக்கீங்களா உமா?” என்று கேட்டாள் ப்ரீத்தி.
அவளை உமா என்று அழைத்துப் பேசியது சங்கடத்தைக் கொடுத்தாலும் அவளும் பாட்டியும் அவளுடைய வீட்டிற்கு வந்ததில் சந்தோஷமடைந்தவள், அவளைச் சுதாரித்துக் கொண்டு, பேக்கோடு வந்திருப்பதை உணர்ந்து,
”ஆமாம் ப்ரீத்தி..உள்ளே வாங்க பாட்டி..வா ப்ரீத்தி.” என்று அவர்கள் இருவரை மட்டும் வரவேற்று, உமேஷை முற்றிலுமாகப் புறக்கணித்தாள்.
‘வாங்கன்னு ஒரு வார்த்தை சொல்லமா முறைக்கறா..இதெல்லாம் நாளை வரைக்கும் தான்.” என்று எண்ணிக் கொண்டான் உமேஷ்.
“பாட்டியோட பேக்கைக் கொடு ப்ரீத்தி.” என்று கேட்க, அவளும் கொடுக்க, “வாங்க பாட்டி.” என்று அந்த பேக்கோடு சுந்தரி பாட்டியின் அறைக்கு அவரை அழைத்துச் சென்றாள் உமா.அங்கே இருந்த அலமாரியில் பார்வதியின் பையை வைத்து விட்டு அந்த அறையின் பாத்ரூமிற்கு அழைத்துச் சென்று, மின்விசைகள், கீஸர் பற்றி விளக்கினாள்.
உடனே,”நீங்க இரண்டு பேரும் போங்க..நான் வரேன்.” என்று பாத்ரூம் கதவைச் சாத்திக் கொண்டார் பார்வதி.
அந்த அறையிலிருந்து வெளியே வந்தவள், இன்னொரு படுக்கையறையைச் சுட்டிக் காட்டி,”அந்த அறைலே நீ படுத்துக்கோ ப்ரீத்தி.” என்றாள்.
வரவேற்பறை சோஃபாவில் கால் நீட்டி அமர்ந்திருந்த உமேஷ், அனைத்தையும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
“உங்களோட ரூம் எது உமா?” என்று விசாரித்தாள் ப்ரீத்தி.
“மாடிலே இருக்கு.”
“நான் உங்களோட ஷேர் செய்துக்கறேன்.” என்று அவள் சொன்னவுடன் திகைப்படைந்தாள் உமா. அப்போது, அவர்கள் இருவரையும் தாண்டி, சுவாதீனமாக படுக்கைறைக்குள் சென்றான் உமேஷ்.
அப்போது, அவரறையிலிருந்து வெளியே வந்த பார்வதி, வரவேற்பறை காலியாக இருப்பதைப் பார்த்து,”உமேஷ் எங்கே?” என்று விசாரித்தார்.
அவன் சென்ற அறையைச் சுட்டிக் காட்டினாள் ப்ரீத்தி.‘அங்கே எதுக்குப் போனான்?’ என்று பார்வதியின் பார்வையில் இருந்த கேள்வியைப் புரிந்து கொண்டு,”அங்கேயும் பாத்ரூம் இருக்கு.” என்று பதில் கொடுத்தவள், “வரவேற்பறைலே உட்காரலாம் வாங்க.” என்று சற்றுமுன் வரை உமேஷ் அமர்ந்திருந்த சோஃபாவில் அவரை அமர வைக்க அவரருகே ப்ரீத்தியும் அமர்ந்து கொண்டாள்.
“பாட்டி, இராத்திரிக்கு என்ன சாப்பிடுவீங்க?” என்று விசாரித்தாள் உமா.
“இட்லி” என்றார் பார்வதி.‘ஐயோ அதுக்கு எங்கே போக?’ என்று அவள் யோசிக்க,
”என்ன சாப்பிடுவீங்கன்னு கேட்டா அவங்க சாப்பிட விரும்பறதை தான் எல்லோரும் சொல்லுவாங்க….வீட்லே என்ன இருக்குன்னு சொல்லணும்..அதிலே எது வேணும்னு கேட்கணும்” என்று விருந்தோம்பல் பற்றி பாடம் எடுத்தான் வாஷ் ரூமிலிருந்து வந்த உமேஷ்.
அப்போது தான் அவர் செய்த தவறை உணர்ந்த பார்வதி,”என்ன இருக்கோ அதைச் சாப்பிட்டுக்கலாம்..ஒண்ணுமில்லைன்னா சோறு வடிச்சிடு..தயிர், ஊறுகாய் வைச்சு சாப்பிடலாம்..நானும் ப்ரீத்தியும் கொஞ்சம் பழமெல்லாம் சாப்பிட்டோம்..இவன் தான் ஒண்ணுமே சாப்பிடலை..வீட்டுக்கு வந்தான்..குளிச்சான்..உடனே இங்கே புறப்பட்டு வந்திட்டோம்.” என்றார்.
“இந்த நேரத்துக்கு இங்கே டெலிவரி கிடையாது.” என்றாள் உமா.
“என்ன வேணும்னு சொல்லுங்க..நான் போய் வாங்கிட்டு வரேன்.ஹைவே ஹோட்டல்ஸ் திறந்திருக்கும்.” என்றான் உமேஷ்.
“அதெல்லாம் வேணாம்..தயிர் கொஞ்சமா தான் இருக்கும்..ஊறுகாய் இருக்கு..சாதம் வைச்சு..பொரியல் ஏதாவது செய்திடறேன்.” என்றாள் உமா.
“பொரியல் போர்..சிப்ஸ் வாங்கிட்டு வாங்க அண்ணா.” என்று உமேஷைக் கடைக்கு அனுப்பி வைத்தாள் ப்ரீத்தி.கடையிலிருந்து திரும்பிய போது, தயிர், இரண்டு, மூன்று தினுசு சிப்ஸ் பேக்கெட்டுடன் வந்தான் உமேஷ்.பாட்டி சொன்னது போல், குக்கரில் சாதம் வைத்து, தயிர் சாதம், ஊறுகாய், சிப்ஸ்ஸுடன் இரவு உணவை முடித்துக் கொண்டனர் நால்வரும்.
அதன்பின், உமாவும் ப்ரீத்தியும் வரவேற்பறையில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருக்க, பார்வதி பாட்டியுடன் அவரது அறைக்குச் சென்ற உமேஷ், அவருடன் உரையாடி விட்டு, அவனுடைய வீட்டிற்குக் கிளம்பியது போது பத்தரை மணி ஆகியிருந்தது. அதற்கு பின் பேத்திகள் இருவரும் பாட்டியின் அறைக்குச் சென்று அவருக்கு குட் நைட் சொல்லி விட்டு மாடிக்குச் சென்றனர்.
அவளுடைய பையைத் திறந்து வேறு உடையோடு பாத்ரூமிற்குச் சென்றாள் ப்ரீத்தி.உடை மாற்றிக் கொண்டு வெளியே வந்த போது, கட்டிலில் படுத்திருந்தாள் உமா.
அவளருகே படுத்துக் கொண்ட ப்ரீத்தி,”ஏன் நீங்க அந்த ஆல்பத்தை எடுத்திட்டு வராம, அதிலிருந்த ஃபோட்டோஸ்ஸை மட்டும் கொண்டு வந்து கொடுத்தீங்க?” என்று கேட்டாள்.
இந்தக் கேள்வியை ப்ரீத்தியிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.என்ன பதில் சொல்வதென்று யோசித்துக் கொண்டிருந்தவளின் புறம் திரும்பி, உமாவை நேருக்கு நேராகப் பார்த்து,”அதிலே அப்பா, அம்மா, நீங்க..மூணு பேரும் சேர்ந்து இருக்கற ஃப்போட்டோஸ் இருக்கில்லே?” என்று கேட்டாள்.
உமாவிற்கு வார்த்தை வரவில்லை. தலையசைவில்‘ஆமாம்’ என்றாள்.
“எனக்கு அதைப் பார்க்கணும் உமா.” என்றாள் ப்ரீத்தி.இதுபோல் நடக்கக்கூடுமென்று உமா நினைக்கவேயில்லை.அவளுடைய சிறு வயது புகைப்படங்களைப் பார்க்க விரும்புகிறாள் ப்ரீத்தி என்று சித்தி சொன்னவுடன், அதை மட்டும் கொண்டு போய் கொடுத்தாள்.இவளுடையதையும் பார்க்க விரும்புவாள் ப்ரீத்தி என்று தோன்றவில்லை.அவளுடைய அப்பா, அம்மாவுடன் இவள் இருக்கும் புகைப்படங்களைக் காட்டினால், எப்படி உணருவாளோ? அது விஷப்பரீட்சை என்று தோன்றியது.எனவே,
“வேணாம்.” என்று மறுத்தாள் உமா.
“ஏன்?”
உமாவிடமிருந்து அதற்கு பதில் வரவில்லை. சில நிமிடங்கள் காத்திருந்த பின்னும் அதற்குப் பதில் கிடைக்கவில்லை என்றவுடன்,”வேற ஆல்பம் ஏதாவதுஇருக்கா?” என்று கேட்டாள் ப்ரீத்தி.
“இல்லை..நான் ஹைதராபாத்லே வேலை பார்த்திட்டு இருந்த போது வேலூரைக் காலி செய்திட்டு சென்னை வந்திட்டாங்க சித்தி..நானும் இங்கே வந்த பிறகு அவங்க வீட்லே இருந்த என்னோட சாமனெல்லாம் எடுத்திட்டுப் போகச் சொல்லிட்டாங்க..நிறைய சாமான் இல்லை..என்னோட புக்ஸ், துணிமணி, அப்புறம் இந்த ஆல்பம்..அவ்வளவு தான்.” என்றாள்.
“அந்த ஆல்பத்தை நான் பார்க்கணும்..ப்ளீஸ்” என்றாள் ப்ரீத்தி.
அதற்கு மேல் மறுக்க முடியாமல். கட்டிலிருந்து எழுந்து சென்று, அந்த அறையில், ஓரமாக அடுக்கி வைத்திருந்த அட்டைப்பெட்டிகளில் ஒன்றைத் திறந்து, அதனுள்ளே இருந்த ஆல்பத்தை வெளியே எடுத்தாள் உமா.
“எதுக்கு எல்லாத்தையும் பேக் செய்து வைச்சிருக்கீங்க?”
“வேலை விஷயமா வெளிநாடு போறேன்..இன்னும் கொஞ்ச நாள் தான் இந்த வீட்லே இருப்பேன்.” என்றாள் உமா.
“எப்போ போறீங்க?” என்று கலக்கத்துடன் கேட்டாள் ப்ரீத்தி.
“போயிருக்கணும்..ஏன்னு தெரியலை..தாமதமாகுது.” என்று பதில் சொல்லியபடி ப்ரீத்தியிடம் அந்த ஆல்பத்தை கொடுத்தாள்.ப்ரீத்தி வரும்வரை சிவரஞ்சனி, சந்தரேசனோடு உமா எடுத்துக் கொண்ட புகைப்படங்கள்.ப்ரீத்தி வந்த பின், அவளுடன் சேர்ந்து, நால்வராக, குடும்பமாக, அக்கா, தங்கை இருவர் மட்டும் என்று நிறைய புகைப்படங்கள். அதை அமைதியாகப் பார்த்து முடித்த ப்ரீத்தி,
“இதை உங்களோட வெளிநாட்டுக்கு எடுத்திட்டுப் போக தான் பேக் செய்து வைச்சிருந்தீங்களா?”என்று கேட்டாள்.
“இல்லை..அங்கேயெல்லாம் இதை எடுத்திட்டுப் போக முடியாது..அங்கே நிரந்தரமா இருக்கப் போகறதில்லை..இங்கே ஸ்டோரேஜ் ஸ்பேஸ் ஏற்பாடு செய்திருக்கேன்..அங்கே வைச்சிடுவேன்.” என்றாள் உமா
“அப்போ நான் இதைஎன்கூட எடுத்திட்டுப் போகட்டுமா?” என்று கேட்டாள்.
அதை உமா எதிர்பார்க்கவில்லை.
“நீங்க திரும்பி வரும் போது உங்ககிட்டே கொடுத்திடறேன்..ப்ளீஸ்” என்றாள்.
‘சரி’ என்று தலையசைத்தாள் உமா. உடனே, கட்டிலிருந்து எழுந்து சென்று, அவளுடைய பையில் இருந்த புகைப்படங்களுடன் திரும்பியவள், மறுபடியும், அதே ஆல்பத்தில், எந்த இடத்தில் வைக்க வேண்டுமென்று உமாவையும் கேட்டு, அந்ததந்த இடத்தில் அந்தப் படங்களைப் பொருத்தினாள். அதன் பின் அதைக் கொண்டு போய் அவளுடைய பையில் வைத்து விட்டு, விளக்கை அணைத்து விட்டு, உமா அருகில் படுத்துக் கொண்டவள்,
“எல்லா ஃபோட்டோஸும் அதிலேயே இருக்கட்டும்..நீங்க கொஞ்ச நாள் வைச்சுக்கோங்க..நான் கொஞ்ச நாள் வைச்சுக்கறேன்..அது நம்ம ஃபேமிலி ஆல்பம்.” என்றாள் ப்ரீத்தி.
அதற்கு உமாவிடமிருந்து பதில் வரவில்லை.அதைப் பொருட்படுத்தாமல்,”இவ்வளவு வருஷமா உங்களைப் போல ஓர் அக்கா இருக்காங்கன்னு எனக்கு தெரியவே தெரியாது..சுந்தரி பாட்டியை ஆஸ்பத்திரிலே பார்க்க வந்தபோது தான் உமேஷ் அண்ணாக்கும் தெரிய வந்திச்சு..அதனாலே அண்ணனுக்கு எல்லார் மேலேயும் கோவம்..வீட்டுக்கு வரவே இல்லை..இந்த மாதிரி அண்ணன் நடந்துகிட்டது இல்லை..சென்னைலேர்ந்து எல்லோரும் திரும்பி வந்த அப்புறம் வீடே சரியா இல்லை.. என்னோட கல்யாணப் பேச்சு அப்படியே நின்னு போயிடுச்சு..ஏன்னு யாரும் எனக்குக் காரணம் சொல்லலை…
ரொம்ப நாள் கழிச்சு வீட்டுக்கு வந்த அண்ணன், அடுத்த நாள் ஜெயந்தி அக்கா வீட்டுக்குப் போய், முதல்லே அக்கா வீட்லே எல்லா விஷயத்தை சொல்லி அவங்களை மதுரைக்கு அழைச்சிட்டு வந்தாங்க..அப்புறம், அன்னைக்கு மத்தியானம் ‘ஏன் இப்படிச் செய்தீங்கன்னு?’ எல்லோர்கிட்டேயும் பயங்கரமாச் சண்டை போட்டாங்க..அப்போ தான் எனக்கு விஷயமே தெரிய வந்திச்சு..
சுந்தரி பாட்டியைப் பார்க்க என்னைச் சென்னைக்கு கூட்டிட்டுப் போகப் போகறதா அண்ணன் சொன்னவுடனே என்னை அனுப்ப மாட்டேன்னு தாத்தா சொன்னார்..தூக்கிட்டுப் போயிடுவேன்னு அண்ணன் மிரட்டினார்..தாத்தா ஒத்துக்கவே இல்லை..அப்போ, ‘எனக்கு சென்னை போகணும், உங்களையெல்லாம் பார்க்கணும்னு’ நான் சொன்னேன்..உடனே, பாட்டியும் என் கூட வரேன்னு சொன்னாங்க..தாத்தா ஒதுக்க மாட்டார்னு தான் நினைச்சேன்..ஆனா ஒத்துக்கிட்டார் ஒரு கண்டிஷனோட..’அண்ணன் வீட்லே தான் இருக்கணும் அவங்க வீட்டுக்கெல்லாம் போகக்கூடாதுன்னு’ கண்டிஷன் போட்டார் தாத்தா..அதான் அவங்க எல்லோரையும் அங்கே வரவழைச்சோம்.” என்றாள் ப்ரீத்தி.