அத்தியாயம் 08
கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்திருந்த இந்த ஒருவாரத்தில், மலர்விழி எப்போதும் போல எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியேதான் இருக்கிறாள். ஆனால், அவள் மீதான வகுப்பு மாணவர்களின் பார்வை மாறியிருக்கிறது.
முன்பு, நடை, உடை, பாவனைகளால் வகுப்பில் அத்தனை பேருக்கும் நடுவே தனியாகத் தெரிந்த மலர்விழி, இப்போது அவளுடைய தனித்திறமையால் அத்தனை பேருக்கும் நடுவே தனியாகத் தெரிய ஆரம்பித்திருந்தாள்.
வானத்தில் மின்னும் நட்சத்திரங்களுக்கு நடுவே பிரகாசமாக ஜொலிக்கும் முழுநிலவினைப் போல, தனித்து தெரிந்த மலர்விழியின் திறமையை புரிந்து கொண்ட பேராசிரியர்களுமே, அவளிடம் தனி கவனம் செலுத்த ஆரம்பித்திருந்தார்கள்.
அவள் அருகில் அமர்ந்திருந்த பெண்களைத் தவிர, இன்னும் பலரும் மலர்விழியிடம் நட்புக்கரம் நீட்ட முயற்சிக்க, நீண்ட கரங்களை ஆவலோடு பற்றிக்கொள்ளவே செய்தாள் மலர்விழி.
இத்தனை நாட்களில் ராகிங் என்ற பெயரில் யாரும் அவளை பயமுறுத்தாமல் போகவே, பயம் விலகி கல்லூரியில் சாதாரணமாக நடமாடவும் ஆரம்பித்திருந்தாள்.
அன்று காலையில் கல்லூரிக்குள் நுழைந்து, உற்சாகமாக தனது வகுப்பறையை நோக்கி நடைபோட்டுக் கொண்டிருந்தாள் மலர்விழி.
ஒரு பெரிய மரத்திற்கு கீழ் ஆணும் பெண்ணுமாக நின்றிருந்த ஐந்தாறு பேரைக் கடந்து செல்லும் போது, “ஏய்… இங்க வா” என்ற அழைப்பு, அவள் நடையைத் தடைசெய்ய முயன்றது.
என்றாலும், ‘நம்மை இல்லை, யாரையோ’ என்ற எண்ணத்தில் நிற்காமல் நடந்து கொண்டிருந்தாள்.
“ஏய், பட்டிக்காடு… உன்னத்தான், இங்க வா.” அழுத்தமாக ஒரு ஆண்குரல் அழைக்கவும், சட்டென்று திரும்பி பார்த்த மலரை, ஒற்றை விரலை அசைத்து, “இங்கே வா” என்பது போல அழைத்தான் அந்த இளைஞன்.
‘ஐயையோ… மாட்டிக்கிட்டேனா?’ உள்ளுக்குள் பதறினாலும், முகத்தில் எதையுமே காட்டிக்கொள்ளாமல்,
“கூப்பிட்டீங்களா ண்ணா?” என்றபடி பதவிசாக அவர்கள் முன் வந்து நின்றாள் மலர்விழி.
அவளது ‘அண்ணா’ என்ற அழைப்பில் அங்கு நின்றிருந்தவர்கள் வாய்விட்டு சிரிக்க, “வாலு கொஞ்சம் நீளம் தான்” என்று அவளின் நீண்ட ஜடையைப் பற்றி லேசாக இழுத்தாள் அந்த கூட்டணியில் இருந்த பெண்.
“எந்த ஊர்ல இருந்து வர்ற?” விரைப்பாகவே கேட்டான் இவள் அண்ணா என்றழைத்தவன்.
“திருநெல்வேலி ண்ணா.” பழக்க தோஷத்தில் அந்த அண்ணாவும் சேர்ந்தே வந்துவிட, “ம்ம்… கிராமத்து குசும்பு” என்று முறைத்தவன், சட்டென்று கையிலிருந்த இரண்டு நோட்டு புத்தகங்களை மலர்விழியின் தலையில் வைத்து,
“உங்க ஊர்ல எல்லாம் கோவில்ல, இந்த கரகாட்டம் எல்லாம் ஆடுவாங்களே, நீயும் பாத்துருப்பியே, அதைத்தான் நீ இப்ப ஆடப்போற. உன் தலைல இருக்குற நோட்டு தான் கரகமாம்… அது கீழவிழாம ஆடுவியாம். எங்க, ஆடு பாப்போம்…” என்றான்.
“ஆடும்போது நோட்டு கீழ விழுந்திடிச்சின்னா, கீழ விழாம ஆடி ப்ராக்டீஸ் செய்துட்டு, மறுபடியும் எங்க முன்ன வந்து ஆடணும்.” கூடுதல் நிபந்தனை போட்டாள் அவர்கள் கூட்டணியில் இருந்த மற்றொரு பெண்.
“ஒருவேளை, மொத தடவையே நோட்டு கீழ விழாம ஆடிட்டேன்னா?” கொஞ்சம் சவாலாகத் தான் கேட்டாள் மலர்விழி.
“நடக்குறதை பேசு த்தா.” ஊர் பாஷையில் பேசி கலாய்த்தான் ஒருவன்.
“ஓகே… அப்பிடி மட்டும் நடந்துட்டா, நீ என்ன சொல்லுறியோ, அதை நாங்க செய்யுறோம்.” வீராப்பாக சொன்னான் மலர்விழியை ஆடச் சொன்னவன்.
அவனுடைய பதிலில், உடனிருந்தவர்கள் பதற, “அடச்சீ… அந்த பொண்ணு தான் ஸீனப் போடுதுன்னா, நீங்களும்… ஏன் டா டேய்…” என்று அலட்சியமாக பேசியவன், கைபேசியை எடுத்து,
‘முந்தி முந்தி விநாயகனே
முப்பத்து முக்கோடி தேவர்களே
வந்து வந்தெம்மை காரும்மைய்யா
வந்தனம் வந்தனம் தந்தோமைய்யா…’
கரகாட்டக்காரன் என்ற படத்திலிருந்து பாடலை ஒலிக்க விட்டான்.
மீன்குஞ்சுக்கு நீந்தவா சொல்லிக் கொடுக்க வேண்டும்? ஒரு வினாடி அவர்களை அழுத்தமாக பார்த்த மலர்விழி, மறுவினாடியே தாளம் தப்பாமல் ஆடத் தொடங்கினாள்.
அவள் எத்தனை சுழன்றாடியும், தலையில் இருந்த நோட்டுப்புத்தகம் மட்டும் அசைவேனா என்பது போல உக்கார்ந்த இடத்திலேயே சமத்துக் குழந்தையாக உட்கார்ந்திருந்தது.
இப்படியொரு ஆட்டத்தை அவளிடமிருந்து எதிர்பாராத அந்த நண்பர்கள் கூட்டணியோ, பாடல் முடிந்தது கூட தெரியாமல், திறந்த வாய் மூடாமல் மலர்விழியைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
“அண்ணா… நோட்டை இப்போ எடுத்துடலாங்களா?” என்று கேட்டு, அவர்களின் மோனநிலையை மலர்விழி தான் கலைக்க வேண்டியதாக இருந்தது.
“தெய்வமே… அதை கேக்கணுமா? நீ எடு தெய்வமே…” பாய்ந்து வந்து, மலர்விழியின் தலையில் வைத்தவனே நோட்டை கையிலெடுத்தான்.
“டேய்… ஸ்கூல் ஆனுவல் டே க்கு ப்ராக்டீஸ் பண்ணுன கையோடு காலேஜ் க்கு வந்த பிள்ளைகிட்ட, கரகாட்டம் ஆடச்சொல்லி மண்ணைக் கவ்விட்டியே டா” என்று சொல்லி, வழியாத கண்ணீரைத் துடைத்தான் ஒருவன்.
“சொல்லுங்க தல… இப்போ நாங்க என்ன செய்யணும்?” தாங்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்காமல் ஜென்டில்மேனாக அந்த மாணவன் கேட்க,
“பெருசா ஒண்ணும் இல்ல ண்ணா, இந்த வருஷம் முழுக்க நீங்க ராகிங் பண்ணக்கூடாது, அவ்வளவு தான்.” சிரித்தபடி சொன்னாள் மலர்விழி.
“இதுக்கு மேல எங்களுக்கு ராகிங் பண்ணுற தைரியம் வரும்னு சொல்லுற?” கூட்டத்தில் இருந்த ஒருவன் பாவனையாகச் சொல்ல, மலர்விழி உட்பட எல்லோருமே கலகலத்து சிரித்தார்கள்.
“தலைவரே… இன்னைக்கு என்ன நடந்திச்சி தெரியுமா?” கல்லூரி விட்டு வந்ததும் சாப்பிட்டு முடித்து, முதல் வேலையாக ராகவனுக்கு அழைத்த மலர்விழி, வாய்கொள்ளாச் சிரிப்போடு கேட்டாள்.
இப்போதெல்லாம், ராகவனோடு பேசும் போது அவ்வப்போது தலைவரே என்ற அழைப்பு மலர்விழியிடமிருந்து வந்துவிடுகிறது.
“அது என்ன, கொள்ளைக்கூட்டத் தலைவனை கூப்பிட்ட மாதிரியே கூப்பிடுற?” என்று ராகவன் கேட்டாலும், அவன் மனமும் அந்த அழைப்பை விரும்பத்தான் செய்தது.
அவள் சிரிப்பிலேயே ஏதோ பெரியதாக நடந்திருக்கிறது என்று கண்டுகொண்ட ராகவன், “சொல்லு மலர், தெரிஞ்சிக்கிறேன்” என்றான்.
கல்லூரியில் நடந்த அத்தனையையும் சொன்ன மலர்விழி,
“கரகாட்டம் வேணாம்னு நான் விட்டுட்டு ஓடினாலும், அது என்னை விடுவேனான்னு துரத்துது பாருங்களேன்” என்று சிரித்தாள்.
அவள் சிரிப்பில் என்ன இருக்கிறது என்பதை இப்போது கண்டுகொள்ள முடியாமல், “மனசுக்கு கஷ்டமா இருக்கா மலர்?” என்றான் ராகவன்.
“சேச்சே… எனக்கு எப்பவுமே அந்த கலை மேல வெறுப்பு எல்லாம் கிடையாது. அதோட, மாற்றம் தான் பிடிக்கல” என்றவள், “இந்த வருஷம் காலேஜ் கல்சுரல்ஸ்ல நான் தான் ஃபோக் டான்ஸ் ஆடணும்னு இப்பவே சொல்லிட்டாங்க தெரியுமா?” என்றாள் உற்சாகமாக.
“அப்புறம் என்னப்பா? காலேஜ் ஸ்டார் ஆகப்போறாங்க மலர்விழி மேடம்.” கிண்டலாக சொன்னவனின் குரலில் உற்சாகத்தின் சதவீதம் குறைந்தது போலிருக்க, “என்னாச்சு? தலைவரோட எனர்ஜி குறைஞ்சது போல இருக்கு?” என்று கேட்டுவிட்டாள் மலர்விழி.
கேட்ட பிறகு தான் ‘அதிகப்படியாக பேசுகிறோம் என்று நினைத்து விடுவானோ?’ என்று தோன்றியது மலர்விழிக்கு.
காலையில் வீட்டில் நடந்தவற்றின் பாதிப்பை அதுவரையிலும் சுமந்து கொண்டிருந்த ராகவனுக்கோ, தன் குரல் மாறுபாட்டைக் கொண்டே மலர்விழி விசாரித்ததில், ‘தன்னை இத்தனை கூர்ந்து கவனிக்கிறாளா?’ என்ற உற்சாகமே.
அகமும் முகமும் ஒருசேர மலர்ந்து போன மலரின் நாயகன், “ஒண்ணுமில்ல மலர், கொஞ்சம் ஜலதோஷம் பிடிச்சது போல இருக்கு. அதான்…” என்றான்.
பிடித்துக் கொண்டது ஜலதோஷம் அல்ல, அவனுடைய அப்பா குமாரசாமி என்பது தெரியாமல், “உங்க அம்மாகிட்ட சொல்லி கஷாயம் வச்சி குடிங்க, ஆவி பிடிங்க” என்று, தனக்குத் தெரிந்ததை சொல்லிய மலர்விழி, கணிதத்தில் தனக்கிருந்த சில சந்தேகங்களையும் ராகவனிடம் கேட்டுவிட்டே அழைப்பைத் துண்டித்தாள்.
போட்டித் தேர்வுக்கு தயாராவதில் மும்முரமாக இறங்கியிருந்த ராகவன், மாடியில் அவனது அறையில் தான் இருந்தான்.
தன்முன்னே மேஜையில் இருந்த மடிக்கணினிக்கு ஓய்வு கொடுத்து அதை மூடி வைத்தவன், நாற்காலியில் சாய்ந்தமர்ந்து கண்களை மூடினான். மூடிய கண்களுக்குள் காலையில் நடந்தவை எல்லாம் காட்சிகளாக ஊர்வலம் போகத் தொடங்கியது.
அதிகாலையில் எழும்பி படித்துவிட்டு அறையில் இருந்த குளியலறையிலேயே குளித்திருந்த ராகவன், ஈரத்தலையை டவலால் துடைத்துக் கொண்டிருந்தபோது,
“ராகவா… ராகவா…” என்று, அவனை ஏலம் போடாத குறையாக கீழிருந்து அழைத்துக் கொண்டிருந்தார் குமாரசாமி.
அவரது ஹைடெசிபல் குரலில், அவசர அவசரமாக, “என்ன ப்பா?” என்று கேட்டுக்கொண்டு, துண்டால் தலையை துவட்டியபடியே மாடியிலிருந்து இறங்கி வந்திருந்தான் ராகவன்.
“போனவாரம் ரெஜிஸ்டர் பண்ணுன நிலத்தோட டாக்குமெண்டை, பத்திர ஆஃபீஸ்லயிருந்து வாங்கிட்டு வரச் சொன்னனே, வாங்கிட்டு வந்துட்டியா?” என்று கேட்டார் குமாரசாமி.
“ம்ம்…நேத்து போனேன் ப்பா. இன்னைக்கு வரச்சொல்லிட்டாங்க, அப்புறமா போய் வாங்கிட்டு வந்துடுறேன்” என்றவனுக்கு, அப்போதுதான் சட்டை போடாமல் வந்து நிற்பது மூளையில் உறைத்தது. கையிலிருந்த டவலை, கழுத்தின் இருபக்கமுமாக வழியவிட்டவன், வேகமாக அங்கிருந்து நழுவப் பார்த்தான்.
“டேய் ராகவா… நில்லு, உங்கழுத்துல கிடந்த செயினை எங்க காணோம்?” சட்டென்று மகனை நிறுத்திய குமாரசாமி அதட்டல் குரலில் கேட்டார்.
“குத்துதுன்னு கழத்தி வச்சிருக்கேன் ப்பா.” வாயில் வந்ததை சொன்னான் ராகவன்.
“குத்துதுன்னா கழத்தி எதுக்கு வைக்கணும்? எங்கழுத்துல போட்டுவிட்டா, அதுபாட்டுக்கு கிடக்குமே.” ராகவனுக்கு அருகே நின்றிருந்த கதிரேசன் மெல்லிய குரலில் முணுமுணுக்க, அவனை முறைத்துப் பார்த்த ராகவன், அடுத்து என்ன வரப்போகிறதோ என்ற பதட்டத்தில் நின்றான்.
“இது என்ன புது பழக்கம்? போ… போய் எடுத்து போட்டுட்டு வா.” முகத்தை சுழித்தபடி சொன்னார் குமாரசாமி.
இருந்தால் தானே போட்டுக் கொண்டு வரமுடியும்? எனவே, அந்தப்பொழுதை கடந்துவிட எண்ணி, “காஃபி குடிச்சிட்டு போய் போட்டுக்கறேன்” என்றான் ராகவன்.
“பரவாயில்லை, போய் போட்டுட்டு வந்தே காஃபியைக் குடி.” மகனுடைய தடுமாற்றம் சந்தேகத்தை எழுப்ப, பிடிவாதம் பிடித்தார் மனிதர்.
தகப்பனின் பிடிவாதத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் ராகவன் தயங்கியபடி நிற்க, “என்னடா?” என்று உறுமினார் குமாரசாமி.
“கழட்டி வச்சிருக்குறதை போட்டுட்டு வர, எதுக்கு இத்தனை தயக்கம்? போட்டுட்டு வா ராகவா.” வீணாக எதற்கு கணவனின் கோபத்திற்கு ஆளாக வேண்டும் என்ற எண்ணத்தில் இடைபுகுந்தார் தெய்வானை.
செயினை வங்கியில் அடகு வைத்திருக்கும் விஷயத்தைச் சொன்னால், இன்றே வீட்டுக்கு வந்துவிடும். ஆனால், செயின் வங்கிக்குப் போன காரணம் தெரிந்தால், மலர்விழிக்கு உதவி செய்வதை மறந்துவிட வேண்டியது தான்.
எனவே வேறுவழியில்லாமல், “செயின் தொலைஞ்சிடிச்சி ம்மா” என்றான் ராகவன் மெல்லிய குரலில்.
“ராஸ்கல்… செயினை தொலைச்சதும் இல்லாம, எங்கிட்ட பொய் வேற சொல்லுறியா?” சட்டென்று ராகவனின் கன்னத்தில் தனது வலதுகையை இறக்கியிருந்தார் குமாரசாமி.
குமாரசாமி எத்தனை தான் கோபக்காரராக இருந்தாலும் மனைவி, மக்கள் மீது இதுவரை கை நீட்டியதில்லை. இப்போது முதன்முறையாக அது நடந்திருக்க, வீடு நிசப்தத்தின் பிடியில் சிக்கிக்கொண்டது.
ராகவனுக்குமே இத்தனை வயதுக்கு மேல் தந்தையிடம் அடிவாங்கியது அவமானமாக இருந்தது. அவன் தான் இந்த பிரச்சினைக்கு காரணம் என்பதால் பொறுமையை இழுத்து பிடித்தபடி அமைதியாக நின்றான்.
“உடம்புல எவ்வளவு திமிர் இருந்தா, தொலைஞ்சிடிச்சின்னு ஈசியா சொல்லுவ? ஐந்து பவுனுடா. என் அப்பாவோடது. யார்கிட்டயும் குடுக்காம உன்னை நம்பி குடுத்தேன் பாரு, என்னை ஜோட்டால அடிக்கணும். எங்க தொலைச்ச டா எரும மாடே.” கோபத்தில் கண்கள் இரண்டும் சிவக்க, மூச்சு விடாமல் கத்தினார் குமாரசாமி.
‘தகப்பனை பதட்டத்தில் தள்ளிவிட்டோமோ?’ என்ற சுயபட்சாதாபத்தில் வீழ்ந்தான் ராகவன். அதே நேரம், ஒரு ஐந்து பவுன் நகைக்காக தன்னை அடித்ததும் அல்லாமல், மட்டமாக பேசும் தந்தையின் செயலில் கோபமும் வந்தது.
“சென்னைக்கு போன இடத்துல எப்படியோ தவறிடிச்சி. ஆனா, அதுவும் நல்லதுக்கு தான். ஒரு ஐந்து பவுனுக்கு கூட நான் பெறுமானம் இல்லாதவன்னு நீங்க நிரூபிச்சிட்டீங்கல்ல, ரொம்ப நன்றி.” ராகவனின் இளரத்தம் முறுக்கிக் கொண்டு தகப்பனின் கேள்விக்கு பதில் சொல்லியது.
“ஒரு செயினையே பாதுகாக்க துப்பில்ல, நீ எல்லாம் எப்படி இந்த குடும்பத்தோட மானம், மரியாதையைக் காப்பாத்த போறியோ? இதுல, வக்கணையான பேச்சுக்கு மட்டும் குறையில்ல.” மறுபடியும் ராகவனை அடிக்க கைகளை ஓங்கிக்கொண்டு குமாரசாமி வர, இருவருக்கும் இடையில் வந்து மகனுக்கு அடிவிழாமல் தடுத்தார் தெய்வானை.
“பெத்தபிள்ளை இத்தனை நாளு கழுத்துல செயின் இல்லாம அலைஞ்சிருக்கான், அதை கண்டுபிடிக்க கூட முடியல. நீ எல்லாம் ஒரு பொம்பளைன்னு எதுக்கு வீட்டுல இருக்க?” என்று மனைவியிடம் சாடிய குமாரசாமி,
“மொதல்ல உனக்கு கூறு இருந்தா தானே, நீ பெத்த பிள்ளைக்கும் இருக்கும். எனக்குன்னு வந்து வாச்சிருக்கீங்க பாரு, சரியான தண்டச்சோறுங்க.” என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப்போய் நின்றிருந்த மனைவி மீது, தன் கோபத்தை இறக்கிவிட்டு வெளியே சென்று விட்டார்.
புயலடித்து ஓய்ந்தது போல இருந்தது வீடு.
“நீ எப்படி ண்ணா செயினை மிஸ் பண்ணுன?” தான் சூராதி சூரனாக நினைக்கும் அண்ணன், செயினைத் தொலைத்து விட்டான் என்பதை நம்பமுடியாமல் கேள்வி கேட்டாள் அவன் தங்கை.
“எனக்கென்னவோ கில்லி பட, வெள்ளி மொய் குடம் தான் ஞாபகத்துக்கு வருது. செயின், எந்த சேட்டு கடையில இருக்கு? சும்மா சொல்லு ப்ரோ.” கண்களால் தமையனை மேலும் கீழுமாக ஆலவட்டம் இட்டான் கதிரேசன்.
“என்னடா ராகவா, இப்பிடி பண்ணிட்ட?” கணவன் அடித்ததால் சிவந்து போயிருந்த மகனின் கன்னத்தை தடவியபடியே கேட்ட தெய்வானையின் குரலிலும் அதிருப்தியே. பொறுப்பானவன் என்று எண்ணியிருந்த மகனின் பொறுப்பற்ற செயலை அவராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
“தொலைஞ்சிடிச்சி, இப்போ என்ன பண்ணமுடியும் ம்மா? நாளைக்கே இதைவிட பலமடங்கு சம்பாதிப்பேன், அப்போ வேண்டாம்னு சொல்லிடுவீங்களா?” எப்போதும் போல இல்லாமல் அதிகபட்ச கோபத்தில் தாயிடம் கேட்டான் ராகவன்.
“நீ எவ்வளவு தான் சம்பாதிச்சாலும், அந்த நகைக்கு ஈடாகுமா ராகவா? அந்த செயின் வெறும் பொருள் மட்டும் இல்ல, தாத்தாவோட நினைவுகள். அதைப் போய் தொலைச்சிட்டு வந்து நிக்குறியே?” சோர்ந்து போனக்குரலில் சொன்னார் தெய்வானை.
தாயின் வார்த்தைகளில் மனம் குற்ற உணர்வு கொள்ள, “கவலப்படாதீங்க ம்மா, செயின் கண்டிப்பா கிடைச்சிடும்.” அவர் கைகளை பிடித்துக் கொண்டு சொன்னான் ராகவன்.
“அதெப்படி ராகவா, கைவிட்டுப் போன பொருள் கிடைக்கும்?” நம்பிக்கை இல்லாமல் கேட்டார் தெய்வானை.
“நம்புங்க ம்மா. கண்டிப்பா கிடைக்கும்.” அழுத்தமாக சொன்னான் ராகவன்.
நடந்தவற்றை நினைத்து பார்க்கும்போதே தலை விண்ணென்று வலிக்க, விரல்களால் நெற்றியை நீவி விட்டவனின் மனம் சிந்தனையில் ஆழ்ந்தது.
‘கையில் இருக்கும் பணம், மலர்விழிக்கு அடுத்த செமஸ்டர் ஃபீஸ் கட்டவும், இந்த வருடம் முழுமைக்கும் ஹாஸ்டல் ஃபீஸ் கட்டவும் தாராளமாக வரும். மலர்விழியின் அடுத்த வருட படிப்பு செலவுக்கு பணம் வேண்டும். நகையை மீட்க வேண்டும். என்ன செய்யலாம்?’
கண்களை மூடியபடி யோசித்தவனின் மூளையில் மின்னலென ஒரு யோசனை தோன்றியது. அதோடு, ‘அவனுடைய கல்லூரி பேராசிரியர் ஏற்கனவே சொல்லியிருந்த யோசனையையும் செயல்படுத்திவிட வேண்டியது தான்’ என்று முடிவெடுத்துக் கொண்டவன், தாமதிக்காமல் அதைப் பற்றி தன் பேராசிரியரிடம் பேசிவிடலாம் என்று எண்ணி அப்போதே கிளம்பினான்.
வேறொன்றுமில்லை… பிறவிக் கலைஞர்கள் என்று சொல்லுவோமே, அப்படி ராகவன் பிறவி ஆசிரியன். அவன் கல்லூரியில் செமினார் வகுப்புகள் எடுக்கும் நேரங்களில் அதை உணர்ந்திருந்த அவனுடைய கணிதப் பேராசிரியர், இன்ஜினியரிங் நுழைவுத்தேர்வுக்கு(JEE) படிப்பவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கும்படி ராகவனிடம் பரிந்துரைத்திருந்தார்.
அது, அவன் எதிர்கொள்ள இருக்கும் போட்டித் தேர்வை எளிதாக்கும் என்றும், எதிர்காலத்தில் விரிவுரையாளராக விரும்புபவனுக்கு ஒரு பயிற்சியாக அமையும் என்பதும் அவருடைய கருத்து.
‘அதன்மூலம் தனக்கு இப்போது தேவைப்படும் பணத்தையும் பார்த்து விடலாம்’ என்ற எண்ணம் ராகவனுக்கு தோன்றவும் உற்சாகமாகவே கிளம்பினான்.
கல்லூரிக்கு வந்து பேராசிரியரை சந்தித்த ராகவன், தான் எடுத்திருக்கும் முடிவைச் சொல்ல, மகிழ்ந்து போனவர் தன்னுடைய ஆலோசனைகளை வழங்கி, வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.
‘கண்டிப்பாக நான்கைந்து மாதங்களுக்குள் வெற்றிகரமாக இந்த துறையில் கால் ஊன்றி விடலாம்’ என்ற நம்பிக்கையில் கல்லூரியில் இருந்து ராகவன் திரும்ப வந்து கொண்டிருந்த நேரம், கைபேசி அழைத்தது.
சாலையோரம் இருந்த பெரிய மரத்திற்கு கீழே வண்டியை ஒதுக்கி நிறுத்திவிட்டு ஃபோனை எடுத்து பார்த்தான் ராகவன். அழைப்பது சித்தப்பா எனவும், தாமதிக்காமல் அழைப்பை ஏற்றான்.
“டேய் மகனே… உங்க ஹெச்ஓடி எங்கப்பாவோட செயின் தானா?” சுற்றிவளைக்காமல் நேரடியாக கேட்டார் சிதம்பரம்.
“சென்னைக்கு வந்த போது, கழுத்தில் கிடந்த செயினை மகன் தொலைத்து விட்டான்” என்று, ஃபோன் செய்து அண்ணன் தன்னிடம் புலம்பும் போதே, ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று சிதம்பரம் கணக்கிட்டு விட்டார். ஆனால், அண்ணனிடம் எதையும் காட்டிக்கொள்ளாமல் மகனுக்கு அழைக்கிறார்.
சிறிய தகப்பனின் கேள்வியிலேயே விஷயத்தை அவர் யூகித்து விட்டார் என்பதை புரிந்து கொண்ட ராகவன், “ஆமா சித்தப்பூ” என்றான் உண்மையை மறைக்க முயலாமல்.
“மொத்தமா வித்துட்டியா? இல்லை பேங்ல தான் வச்சிருக்கியா?” விபரம் கேட்டார் சிதம்பரம்.
“அதெப்படி சித்தப்பூ விப்பேன்? பேங்க்ல தான் வச்சிருக்கேன்” என்றான் ராகவன்.
“ஹ்ம்ம்… செயினை அடகு வச்சி அந்த பிள்ளையை படிக்க வைக்கிற அளவுக்கு இறங்கியிருக்கன்னா… என்ன, லவ்வா?” முக்கியமான விஷயத்தை தொட்டார் சிதம்பரம்.
“நான் மலருக்கு ஹெல்ப் பண்ணணும்னு நினைக்கும் போது எதுவும் கிடையாது. ஆனா, இப்போ நீங்க சொன்னது எனக்கு இருக்கு. மலருக்கு எப்படின்னு, எனக்கு எதுவும் தெரியாது” என்றான் ராகவன்.
“அடேய்… சித்தப்பன்னு கொஞ்சம் கூட பயம் இல்லாம, பொசுக்குன்னு உண்மையை ஒத்துக்கிட்டியே? உங்கப்பாவுக்கு மட்டும் விஷயம் தெரிஞ்சா, உன்னோட சேர்த்து என் முதுகுத் தோலையையும் இல்ல உரிப்பாரு.” பதறிப்போனவராக கேட்டார் சிதம்பரம்.
“அதெல்லாம், நீங்க சொன்னா மட்டும் தான் எங்கப்பாவுக்கு இப்போதைக்கு தெரியவரும். கண்டிப்பா, நீங்க சொல்லிக்குடுக்க மாட்டீங்கன்னு எனக்கு தெரியும். அப்புறம் எதுக்கு வீணா டென்ஷன் ஆகிறீங்க சித்தப்பூ?” என்றான் ராகவன்.
“ம்ம்… இந்த காலத்து பசங்களுக்கு, எல்லாம் விளையாட்டு தான்” என்று அலுத்துக் கொண்ட சிதம்பரம், “நான் பணத்தை அனுப்பித்தரேன், செயினை பேங்க்லயிருந்து மீட்டு, ஏதாவது சாக்கு போக்கு சொல்லி எங்கண்ணன் கையில குடுத்துடு” என்றார்.
“இல்ல சித்தப்பா… இன்னும் ஒரு வருஷத்துக்குள்ள நானே திருப்பிடுவேன்” என்ற ராகவன், தான் செய்ய நினைத்திருக்கும் விஷயங்களை நம்பிக்கையோடு விலாவாரியாகச் சொன்னான்
“உம்மேல நம்பிக்கை இல்லாமச் சொல்லல மகனே… அதுவரைக்கும் வீணா எங்கண்ணன் எதுக்கு மன உளைச்சல்ல அவதிப்படணும்? பாவம்டா அவரு, எங்கிட்ட எப்பிடி புலம்பினார் தெரியுமா? பேசாம நான் சொல்லுறதை செய்திடு” என்றார் கண்டிப்பாக.
யோசித்துப் பார்க்கும்போது சித்தப்பா சொல்லுவது சரி என்றே ராகவனுக்கும் பட, “நான் உங்க பணத்தை திரும்ப தந்துடுவேன். நீங்களும் மறுக்காம வாங்கிக்கிடணும். அப்பிடின்னா நீங்க சொல்லுறதை செய்யலாம்” என்றான் ராகவன் பிடிவாதக் குரலில்.
‘மலரை, தானே படிக்க வைத்ததாக இருக்க வேண்டும்’ என்ற எண்ணத்தில் ராகவன் சொல்லுவது புரிய, “ஹ்ம்ம்… இதுல எல்லாம் இந்த காலத்துப் பசங்க விவரம் தான் டா” என்றவர், ராகவனின் வங்கி விபரங்களை தனக்கு அனுப்பச் சொன்னார்.
வீட்டுக்கு போய் செய்வதாகச் சொல்லியவன், “சித்தப்பூ… எனக்கு உங்ககிட்ட இன்னொரு உண்மையும் சொல்லணும்” என்றான் மெதுவாக.
‘தனக்காக இவ்வளவு செய்யும் சித்தப்பாவிடம், இதற்கு மேலும் மலர்விழியைப் பற்றிய உண்மையான தகவல்களை மறைப்பது தவறு’ என்று ராகவனுக்கு தோன்றவே, எல்லாம் சொல்லிவிடும் முடிவுக்கு வந்திருந்தான்.
சிதம்பரமோ, “டேய்… இன்னும் என்ன வெடிகுண்டு டா வச்சிருக்க?” என்றார் பயந்து போனவராக…