அத்தியாயம் – 14

சுந்தரி பாட்டிக்கும் உமேஷிற்கும் இடையே இருந்த நெருக்கத்தை மனத்தில் வைத்துக் கொண்டு தான், அவரின் இப்போதைய மனநிலையை அவனுடன் பகிர்ந்து கொண்டாள் உமா.  அவளின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாவிட்டாலும், கண்டிப்பாக, அவனால் முடிந்ததைப் பாட்டிக்காக செய்வான் என்று திண்ணமாக நம்பினாள்.  அந்த நம்பிக்கை பொய்க்கவில்லை என்பதை கவிதாவின் ஸ்டேட்டஸ்ஸைப் பார்த்துத் தெரிந்து கொண்டாள்.

‘என்னுடைய தங்கை’ என்று ப்ரீத்தியுடன் எடுத்துக் கொண்ட படத்தை, அவளுடைய ஸ்டேட்டஸ்ஸில்  கவிதா போட்ட போது தான் ப்ரீத்தி சென்னையில் இருப்பது  உமாவிற்குத் தெரிய வந்தது. அடுத்து, சுந்தரி பாட்டியுடன் இரண்டு பேத்திகள், அதற்கு அடுத்து, மூன்று தலைமுறை என்ற தலைப்பில், கவிதாவின் மகள் ஹரிணியோடு சுந்தரி பாட்டி, அவருடைய பேத்திகள். கடைசியாக, குடும்பப் படம், கவிதாவின் கணவன் உள்பட. சுந்தரி பாட்டியின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியைப் பார்த்து மன நிம்மதி அடைந்தாள் உமா.  அவளுடைய வேண்டுகோளை ஏற்று, அவனுடைய வீட்டினரை ஒப்புக் கொள்ள வைத்து, சுந்தரி பாட்டியின் ஏக்கத்தை தீர்த்த உமேஷ் பசுபதி மீது தீராக் காதல் உண்டானது உமா பார்வதிக்கு.

ப்ரீத்தியுடன் சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்த இந்துமதி மீது அவருக்கு இருந்த வெறுப்பை மறைத்துக் கொள்ள கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார் பார்வதி. மதுரையிலிருந்து சென்னை வந்து சேர்ந்த அந்த இரவு முழுவதும், அவருக்குத் தெரிந்தது, உமேஷிற்குத் தெரிந்தது என்று அவர்கள் இருவரிடமிருந்தும் அவளுடையை அப்பாவின் குடும்பத்தைப் பற்றி தெரிந்து கொண்டாள் ப்ரீத்தி.  ஆஸ்பத்திரியில் சுந்தரி பாட்டி சொன்னதையும் அவளுடன் பகிர்ந்து கொண்டார் பார்வதி.  சுந்தரி பாட்டியுடன் நடந்த சந்திப்புகளில், அவளுடைய பெற்றோர் பற்றி அவனிடம் அவர் சொன்னதைப் ப்ரீத்தியிடம் பகிர்ந்து கொண்டான் உமேஷ்.  அதன் பின், அவளுடைய ஐந்து வயதிற்குப் போய், அவளுடைய நினைவலைகளில் நீந்த முயன்றவளுக்கு எந்தப் பிடிமானமும் கிடைக்கவில்லை.

“ஏன் பாட்டி எனக்கு யாரையுமே ஞாபகமில்லை?” என்று கேட்டாள், பார்வதியின் மடியில் தலை வைத்துப் படுத்திருந்த ப்ரீத்தி.

“ஏன் நியாபகமில்லாம? ஜெயந்தியை உமான்னு நினைச்சுக்கிட்டு, நம்ம வீட்டுக்கு வந்த புதுசுலே அவளை உமான்னு தான் கூப்பிடுவ..அவளைக் கட்டிக்கிட்டு தான் தூங்குவ..இப்போ அவப புருஷன் வந்த பிறகு தான் அதை மாத்திக்கிட்ட..என்னைச் சுந்தரி பாட்டின்னு நினைச்சுக்கிட்டு என் கையாலே தான் எப்போதும் சாப்பிடுவ..உன்னோட அப்பா, அம்மாவைப் பற்றி நம்ம வீட்லே பேசிட்டு இருந்திருந்தா உனக்கும் எல்லாம் அப்படியே நினைவுலே இருந்திருக்கும்.” என்று வருத்தப்பட்டார் பார்வதி.

அவனுடைய குடும்பத்தினர் யாருமே, எதுவுமே பேசாததால் தான் இத்தனை வருடங்களாக உமா பார்வதியைப் பற்றி அவனுக்கும் தெரியாமல் போனது என்று பார்வதியைப் போலவே வருத்தப்பட்டுக் கொண்டிருந்தாலும் அதை வெளிப்படுத்தவில்லை உமேஷ்.  

”அப்பா, அம்மா இல்லைன்னாலும் எனக்கு நீங்கெல்லாம் இருந்தீங்க,  திடீர்னு அம்மா, அப்பா, நான், மூணு பேரும் இல்லாம அக்கா எப்படி இருந்திருப்பாங்க பாட்டி?” என்ற கேள்வியின் மூலம் சிவரஞ்சனியின் மகள் என்று நிரூபித்தாள் ப்ரீத்தி. அந்தக் கேள்விக்குப் பார்வதியிடம் விடை இல்லை.  

அப்போது, உமேஷினுடைய கைப்பேசி ஒலித்தது.  அழைத்தது விஜய். அழைப்பை ஏற்காமல், யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் உமேஷ்.  

“யாரு டா?” என்று கேட்டார் பார்வதி.

“விஜய்” என்று பதில் கொடுத்தவன், ப்ரீத்தியிடம் அவனுடைய கைப்பேசியைக் கொடுத்தான்.  அதை வாங்கிக் கொள்ளாமல்,”அவங்களோட பேச வேணாம்னு தான் என்னோட கைப்பேசியை அணைச்சு வைச்சிருக்கேன்.” என்றாள்.

அதற்கு மேல் தாமதம் செய்யாமல், அழைப்பை ஏற்று,”சொல்லுங்க விஜய்.” என்றான் உமேஷ். அதன்பின்அந்தப் புறம் சொன்ன அனைத்திற்கும் வெறும் ‘உம்’ கொட்டினான் உமேஷ்.  அதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தனர் பாட்டியும் பேத்தியும்.

அழைப்பைத் துண்டித்த பின்,”என்ன டா சொல்றார் மாப்பிள்ளை?” என்று உமேஷிடம் கேட்டார் பார்வதி.  ப்ரீத்தியிடமிருந்து எந்தக் கேள்வியும் வரவில்லை.  

“ப்ரீத்தி, உனக்குப் பேச வேணாம்னா..அதை அவங்கிட்டே சொல்லணும்..இப்படி ஃபோனை அணைச்சு வைக்கறது மரியாதை இல்லை.” என்று அவளைக் கடிந்து கொண்டான் உமேஷ்.

உடனே, அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.  அதைப் பார்த்துப் பதற்றமடைந்த பார்வதி,”என்ன ம்மா?” என்று விசாரிக்க, அவளிடமிருந்து பதில் வரவில்லை. அவளுடைய மன வேதனை புரிந்ததால், அவர்கள் அருகே அமர்ந்த உமேஷ், ப்ரீத்தியின் கையைப் பிடித்து,

”நீ எந்த முடிவெடுத்தாலும் நான் உனக்குத் துணையா இருப்பேன்.” என்றான். 

அவனுக்கும் விஜய்யின் போக்குப் பிடிக்கவில்லை.  ஜெயந்தியின் கணவன், ராஜசேகரின் குடும்பமும் விஜய்யின் குடும்பம் போல் தான்.  பெரிய குடும்பம் என்றாலும் சுயமாக சிந்தித்து செயல்படக் கூடியவன் ராஜசேகர். அவனை முதலில் சந்தித்து, சென்னையில் நடந்ததை, நடப்பதைத் தெரியப்படுத்தியவுடனேயே ஜெயந்தியையும் விக்ரமையும் அவனுடன் மதுரைக்கு அனுப்பி வைத்து விட்டான்.  விஜய்யும் அவனை போல் தான் என்று எண்ணி தப்புக் கணக்குப் போட்டு விட்டோமோ என்று தோன்றியது உமேஷிற்கு.

“எனக்கு ஓர் அக்கா இருக்கா..ஆனா சொந்த அக்கா இல்லை..அப்பாவோட அம்மா, பாட்டி உயிரோட இருக்காங்க..ஆனா என்னை இதுவரை பார்க்க வரலை..என்னோட சித்தப்பா என் கல்யாணத்தை நடத்த முடியாதுன்னு சொல்லிட்டாங்க..இதெல்லாம் எனக்கே குழப்பமா இருக்கும் போது அவங்களுக்கு எப்படிப் புரிய வைக்க முடியும் அண்ணா..அதான் அணைச்சு வைச்சிருக்கேன்.” என்றாள்.

“முதல்லே அவருக்கு ஃபோன் செய்து சென்னை வந்திருக்கேன்னு சொல்லு..உங்களோட கல்யாணம் விஷயம்னு அவரே புரிஞ்சுப்பார்.” என்றான் உமேஷ்.  

“சரி அண்ணா.” என்று சொன்னவள், உடனே விஜய்யை அழைத்து, அவள் சென்னையில் இருப்பதைத் தெரியப்படுத்தினாள்.  அதற்கு மேல் அவன் என்ன கேட்டானென்று தெரியவில்லை, ‘பிறகு பேசுவதாக சொல்லி’ அழைப்பைத் துண்டித்தாள். அந்தப் ‘பிறகு’, அவள் சென்னையை விட்டுப் புறப்பட்ட பிறகு தான் வந்தது.

உமேஷும் பார்வதியும் அவர்களுக்குத் தெரிந்த விவரங்களைப் பகிர்ந்து கொண்டதால், அடுத்த நாளே அவளுடைய அப்பாவின் குடும்பத்தினரைச் சந்திக்க மனதளவில் தயாராகி இருந்தாள் ப்ரீத்தி.  ராம நாதனைக் கைப்பேசியில் அழைத்து, சுந்தரி பாட்டியைச் சந்திக்க ப்ரீத்தியை மதுரையிலிருந்து அழைத்து வந்திருப்பதைத் தெரிவித்தான் உமேஷ்.  அன்று மதியத்திற்கு மேல், சந்தரி பாட்டி, ராம நாதன், இந்துமதி மூவரையும் அவனுடைய வண்டியில், அவனுடைய வீட்டிற்கு அழைத்து வந்தான்.  

வீட்டுக் கதவைத் திறந்த ப்ரீத்தியை விழி அகற்றாமல் பார்த்தார் சுந்தரி பாட்டி.  வீட்டினுள்ளே ப்ரீத்திக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த பார்வதி, “வாங்க..உள்ளே வாங்க.” என்று அழைத்த பின் தான் சுய உணர்வைத் திரும்பப் பெற்றார் சுந்தரி.

அவர்கள் மூவரும் சோபாவில் அமர்ந்தவுடன், “பாட்டி பக்கத்திலே போய் உட்கார்ந்துக்கோ.” என்று ப்ரீத்தியை அனுப்பி வைத்தார் பார்வதி.  அவரருகே ப்ரீத்தி அமர்ந்தவுடன், அவளுடைய முகத்தை, கைகளை, தோள்களை என்று ப்ரீத்தியைத் தொட்டுப் பார்த்து, அவள் நிஜம் தான் என்று உணர்ந்த நொடியில், அழ ஆரம்பித்தார் சுந்தரி பாட்டி.  அதற்கு பின் அவரைச் சமாதானம் செய்ய பெரும் முயற்சி செய்ய வேண்டியிருந்தது.  ஒரு கட்டத்தில், அந்த முயற்சி தோல்வியைத் தழுவ,

“அழகு சுந்தரி..நோ அழுகை.” என்று சுந்தரி பாட்டியின் காதில் கிசுகிசுத்தான் உமேஷ்.  அடுத்த நொடி, அழுகையுடன் சிரித்த சுந்தரி பாட்டி, அதற்கு பின் அழுதது, உமேஷ், உமாவின் கல்யாணத்தில் தான்.

சித்தப்பாவுடன் ஓரிரு வார்த்தைகள் பேசினாள் ப்ரீத்தி.  அவளுடன் ஒட்டிக் கொள்ள நினைத்த இந்துமதி, வாயை மூடாமல் ஏதேதோ பேசிக் கொண்டிருக்க, அவரிடம் ஒதுக்கம் காட்டாமல் ஒரளவு சகஜமாக பேசினாள்.  அன்றைய சந்திப்பு முடிந்து போவதற்கு முன்பு, மறுநாள் காலையில் கவிதாவையும் அவருடைய பேத்தி ஹரிணியையும் அவர்களுடன் அழைத்து வருவதாகச் சொன்னார் இந்துமதி.  உமாவைப் பற்றி அவர்களும் பேசவில்லை.  இவர்களும் கேட்கவில்லை.

அடுத்த நாள் காலையில் குடும்பத்துடன் வந்த ராம நாதன் அந்தத் தினத்தை ப்ரீதியுடன் தான் கழித்தார். மாலையில், உமேஷ் அலுவலகத்திலிருந்து திரும்பிய பின், அவருடைய மாப்பிள்ளை, சுதாகரை அவனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். சுதாகருடன் பேசிக் கொண்டிருந்தவனிடம்,

“எப்போ தம்பி மதுரைக்குத் திரும்பறீங்க?” என்று விசாரித்தார் இந்துமதி.

“இன்னும் முடிவு செய்யலை.” என்றான் உமேஷ்.

“அப்போ நாளைக்கு ப்ரீத்தி எங்க வீட்டுக்கு வரட்டும்..கவிதாவை அனுப்பறேன்.. அவ ப்ரீத்தியை எங்க வீட்டுக்கு அழைச்சிட்டு வந்திடுவா..தினமும் வயசானவங்களை அலைய வைக்க முடியாது.” என்று அவருடை மாமியார் மீது அவருக்கு இருந்த அக்கறையை வெளிப்படுத்தினார் இந்து.

அதைப் பற்றி யோசித்து ஏற்கனவே ஒரு முடிவிற்கு வந்திருந்த உமேஷ்,”ஆமாம்..நீங்க சொல்றது சரி..ப்ரீத்தி அவளோட பாட்டியோட இருக்க வேற ஏதாவது ஏற்பாடு தான் செய்யணும்..இங்கே சாப்பாடு வசதி இல்லை..வெளியே இருந்து தான் வருது..இல்லைன்னா சுந்தரி பாட்டியை எங்களோடவே இங்கே தங்க வைச்சிருப்பேன்.” என்று அவனது விருப்பமின்மையை நாசுக்காக வெளியிட்டான்.

 அதில் இந்துமதிக்குப் பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டது.  அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல்,

“பரவாயில்லை தம்பி..பாட்டியை அழைச்சிட்டு வர முடியலைன்னாலும் கவிதாவும் நானும் தினமும் வந்திட்டுப் போறோம்.” என்றார்.

“நேத்து இன்னைக்குப் போல தினமும் முடியாது….எப்போ வரலாம்னு அங்கிள்க்கு ஃபோன் செய்து சொல்றேன்.” என்றான் உமேஷ்.   

அவர்களுக்கு ஆதரவாக ப்ரீத்தி பேசுவாள் என்று இந்துமதி எதிர்பார்க்க, அவளோ அமைதியாக உமேஷ் சொன்னதை ஆதரித்தாள். பார்வதியும் பேரன் சொன்னதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.  அடுத்த சந்திப்பை பற்றி அவர்கள் மூவரிடமிருந்தும் எந்த வாக்குறுதியும் பெற முடியாமல் வீட்டிற்குத் திரும்பிச் சென்றார் இந்துமதி.

வீட்டிலிருந்து அவர்கள் வெளியேறும் வரை காத்திருந்த ப்ரீத்தி,”இந்தப் பாட்டி ரொம்ப மோசம் அண்ணா..அக்காவை அக்கான்னு சொல்லக்கூடாதுன்னு அவங்க சொன்னதை வாயை மூடிட்டு கேட்டிட்டு இருந்தாங்க..உமா அக்காக்கு இன்னைக்கு ஆஃப் டே..ஆனாலும் கொஞ்சம் நேரம் கூட என்னோட இருக்காம உடனே புறப்பட்டுப் போயிட்டாங்க..” என்றாள்.

‘அவனுடைய வீட்டிற்கு உமா வந்திருந்தாளா?’ என்ற அவனுடைய அதிர்ச்சியை மறைத்துக் கொண்டு,“எப்போ ப்ரீத்தி?” என்று விசாரித்தான் உமேஷ்.

விடுமுறை தினத்தில் செய்யும் வேலைகளைச் செய்து முடித்து, மதியச் சாப்பாட்டையும் முடித்துக் கொண்டு, மீராவுடன் சேட் செய்து கொண்டிருந்தாள் உமா. உமாவின் வெளிநாட்டுப் பயணம் தள்ளிப் போவது, அவள் வேறு பிராஜெக்ட்டிற்கு மாறப் போவது, இரண்டு நிகழ்வுகளுக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்கோமோ என்று இருவரும் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தனர். அப்போது, இந்து சித்தியிடமிருந்து அவளது கைப்பேசிக்கு அழைப்பு வந்தது. மீராவிடம் விடைபெற்றுக் கொண்டு, சித்தியின் அழைப்பை ஏற்றாள் உமா. உடனே,

“எங்கே இருக்க? என்ன டியுட்டி?” என்று விசாரித்தார்.

“வீட்லே தான் இருக்கேன்..இன்னைக்கு ஆஃப் டே.” என்றாள் உமா.

“நல்லதாப் போச்சு..உன்கிட்டே வைச்சுக்க சொல்லிக் கொடுத்தேனே..பழைய ஃபோட்டோ ஆல்பம்..அதையெல்லாம் எடுத்திட்டு இப்போவே உமேஷ் தம்பி வீட்டுக்கு வா..ப்ரீத்தி பார்க்கணும்னு பிரியப்படறா.கவிதாகிட்டே தம்பி வீட்டு அட்ரெஸ் அனுப்பச் சொல்றேன்.” என்றார்.

“சரி.” என்று அவள் சொன்னவுடன், அழைப்பைத் துண்டித்தார் இந்து.

ஏற்கனவே, வீட்டிலிருந்த சாமான்களைப் பேக் செய்து வைத்திருந்ததால், சித்தி சொன்ன அந்த ஆல்பத்தைச் சுலபமாகக் கண்டெடுக்க முடிந்தது.  ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு அவள் மாற்றலாகி வந்தவுடன், ‘இதெல்லாம் இனி என் வீட்லே வைச்சுக்க முடியாது..வாடகை வீட்லே இருக்கேன்..எத்தனை முறை..எத்தனை இடத்துக்கு தூக்கிட்டு அலைய முடியும்..இனி உன் பொறுப்பு..என்ன செய்யணுமோ செய்திக்கோ.’ என்று அவளுடைய முதல் பத்து வருட வாழ்க்கையைப் படமாக பிடித்து, பாதுகாப்பாக வைத்திருந்த ஆல்பத்தை அவளிடம் ஒப்படைத்து விட்டார்.

அந்த ஆல்பத்திலிருந்து, ப்ரீத்தி, அவளுடைய பெற்றோர், அவர்கள் மூவரும் இருந்த புகைப்படங்களை மட்டும் வெளியே எடுத்து, ஒரு கவரில் போட்டுக் கொண்டாள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு உமேஷை நேரில் சந்திக்க எழுந்த ஆவலில், சித்தி ஏற்படுத்திக் கொடுத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, கவிதா அனுப்பிய விலாசத்திற்குச் சென்றாள். 

அவள் அழைப்பு மணியை அழுத்துமுன் வாசல் கதவைத் திறந்தாள் ப்ரீத்தி.  எப்படி? என்று யோசித்துக் கொண்டிருந்த உமாவின் கையைப் பற்றி, அன்புடன்,”வாங்க அக்கா” என்று அவளை வீட்டிற்குள் அழைத்துச் சென்றாள். ‘நம்மளை எப்படி இவளுக்குத் தெரியுது?’ என்ற யோசனையோடு உள்ளே சென்றாள் உமா.

“வாம்மா.” என்று அழைத்தார் டிவியில் கிரிகெட் மேட்ச் பார்த்துக் கொண்டிருந்த ராம நாதன்.

வரவேற்பறையில் சித்தப்பாவின் குடும்பம் இருந்தது.  நீள சோபாவில் உறங்கிக் கொண்டிருந்தார் சுந்தரி பாட்டி. இன்னொரு சோபாவில் அமர்ந்திருந்த பார்வதியுடன் விளையாடிக் கொண்டிருந்தாள் கவிதாவின் மகள் ஹரிணி. உணவு மேஜையில் அமர்ந்து, பழங்களை நறுக்கிக் கொண்டிருந்தார் இந்து சித்தி. பால்கனியில் நின்றபடி அவளுடைய கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தாள் கவிதா.  அவள் தேடிய முகம் அந்தக் கும்பலில் தென்படவில்லை.  அந்தச் சூழ் நிலையே, உமேஷின் வீட்டில் அவர்களுக்கு இருந்த உரிமையையும், ப்ரீத்தியுடன் இருந்த இணக்கத்தையும் வெளிப்படுத்தியது.  அந்த நொடியில், அந்த இடத்தில், அவள் வெளியாள் என்ற உண்மை உமாவைத் தாக்கியது.  அந்தத் தாக்குதல் ஏற்படுத்திய காயத்தை ஆழமாக்கியது சித்தியிடமிருந்து வந்த வார்த்தைகள்.

“எதுக்கு அவளை அக்கான்னு கூப்பிடற..கவிதாவை அவளோட பெயரை வைச்சு தான் இவ கூப்பிடுவா..நீயும் அப்படியே கூப்பிடு.” என்றார்.

உடனே பார்வதி பாட்டியிடம் கண்களால் முறையிட்டாள் ப்ரீத்தி.  அதைக் கண்டு கொள்ளாமல் ஹரிணியுடன் விளையாடிக் கொண்டிருந்தார் பார்வதி. 

அந்தக் காயம் ஏற்படுத்திய வலியை மறைத்துக் கொண்டு,“ஆல்பத்திலே இருந்த ஃபோட்டோஸ்.” என்று அவள் கொண்டு வந்திருந்த கவரை ப்ரீத்தியிடம் கொடுத்தாள் உமா.  அதைப் ப்ரீத்தி வாங்கிக் கொள்ளும் வரை கூட காத்திருக்காமல்,”நான் கிளம்பறேன்…எனக்கு வேலை இருக்கு” என்றாள் விடுமுறையில் இருந்தவள்.

“கொஞ்ச நேரம் இருந்திட்டு போங்க க்கா.” என்றாள் ப்ரீத்தி.

“அவளுக்கு ஏதாவது வேலை இருக்கும் ப்ரீத்தி..போகட்டும்..விடு.” என்று ப்ரீத்தியிடம் சொன்ன கவிதா,”நீ வந்த கால் டாக்ஸி இன்னும் கீழே தான் நின்னுட்டு இருக்கு.” என்றாள் உமாவிடம். ஒ அப்படித் தான் அழைப்பு மணியை ஒலிப்பதற்கு முன் கதவைத் திறந்திருக்கிறாள் ப்ரீத்தி. அவள் வந்த வேலை முடிந்து விட்டது என்று உமாவும் புறப்பட,

“தண்ணீராவது குடிச்சிட்டுப் போ..ப்ரீத்தி கொண்டு வந்து கொடு.” என்றார் பார்வதி.

ப்ரீத்தி கொண்டு வந்த தண்ணீரைக் குடித்து விட்டு,”வரேன் பாட்டி.” என்று பார்வதியிடமும்,”வரேன் சித்தப்பா.” என்று ராம நாதனிடமும் சொல்லிக் கொண்டு மற்றவர்களின் முகத்தை கூட பார்க்காமல் வெளியேறினாள் உமா.

வீடு வந்து சேர்ந்தவள், எதைப் பற்றியும், யாரைப் பற்றியும் யோசிக்கக் கூடாது என்று மனத்திற்கு கட்டளையிட்டு விட்டு, அவளுடைய கைப்பேசியிடம் தொந்தரவு செய்யாதே என்று சொல்லி விட்டு, உறங்கச் சென்றாள்.   

”சாயங்காலம் போல வந்தாங்க..கொஞ்ச நேரம் இருக்கச் சொன்னேன்..வேலை இருக்குன்னு புறப்பட்டு போயிட்டாங்க..அஞ்சு நிமிஷம் கூட இருக்கலை.” என்றாள்.  

“எதுக்கு வந்தா?”

“என்னோட பழைய, சின்ன வயசு ஃபோட்டொஸ்யெல்லாம் அக்காகிட்டே இருந்திச்சு..அதைக் கொண்டு வரச் சொல்லி சித்தி அவங்களுக்கு ஃபோன் செய்தாங்க..அக்காவை இப்போ தான் முதல் முறையாப் பார்க்கறேன்..உள்ளே வாங்க அக்கான்னு கூப்பிட்டேன்..உடனே, ‘அவளை அக்கான்னு கூப்பிடாதே..உமான்னு கூப்பிடு..அவளும் கவிதாவைப் பெயரைச் சொல்லி தான் கூப்பிடுவான்னு’ சொல்றாங்க..இந்தப் பாட்டி அதைக் கேட்டுக்கிட்டு சும்மா இருக்காங்க..அக்காக்கு எப்படி இருந்திருக்கும்னு நினைச்சு எனக்கு மனசு கஷ்டமா இருக்கு.” என்றாள் ப்ரீத்தி.

இனியும் தாமதிக்கக் கூடாது என்று முடிவு செய்தவன்,”நான் குளிச்சிட்டு வரேன்..இரண்டு பேரும் பேக் செய்து ரெடியா இருங்க.” என்று கட்டளையிட்டான்.

முக்கால் மணி நேரம் கழித்து, அவனுடைய வண்டியை உமாவின் வீட்டு வாசலில் நிறுத்தினான் உமேஷ்.  வீட்டிலிருந்து கிளம்புவதற்கு முன், அவளுக்கு, ‘முக்கால் மணி நேரம்’ என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான்.  அவள் அதைப் பார்க்கவே இல்லை.

இருளில் மூழ்கியிருந்தது உமாவின் வீடு.  வீடே உயிர்ப்பில்லாமல் இருக்க, உள்ளே இருப்பவளும் அப்படித் தான் இருப்பாள் என்று சரியாக கணித்த உமேஷ்,

“அவங்களை ஏன் பேச விட்டீங்க? நீங்க ஏன் வாயை மூடிட்டு இருந்தீங்க?” என்று பார்வதியிடம் கோபப்பட்டான்.

உமாவின் வீட்டிற்கு வரும் வழியில், ப்ரீத்தியும் உமேஷும் மாறி மாறி அவரைத் திட்டிக் கொண்டிருக்க, அவர்களுக்குப் பதில் சொல்லாமல் அமைதியாக பயணம் செய்தார் பார்வதி.  இப்போது, அவருக்கும் பொறுமை போனது, அதனால்,

“அக்கான்னு சொல்லாதேன்னு அந்தப் பொல்லாதவ, அவளோட வாயாலேயே உமாக்கு நன்மை செய்தா..நல்லதாப் போச்சுன்னு என் வாயை மூடிட்டு இருந்தேன்.” என்று உமேஷுக்கு மட்டும் புரியும் விதத்தில் பதில் கொடுத்தார் பார்வதி. அதைப் புரிந்து கொண்டவனின் முகம், அந்த இருட்டிலும் பிரகாசமாக ஒளிர்ந்தது.