புரண்டு கொண்டிருந்தவளைப் பார்த்து சிரித்தவன்,

“கதையில இன்னும் ஒன்னே ஒன்னு பாக்கி இருக்கு” என்றான் ஆழ்ந்த குரலில்.

“என்ன?” என்றாள் எரிச்சல் கலந்த குரலில்.

“அது” என்று நிறுத்தியவன், அவள் இடையில் கையிட்டு, தன்னோடு இழுத்து அணைத்தவன்,

“என் லவ்வர் எவ்வளவு டென்ஷனா இருந்தாலும், இப்படி இழுத்து அணைச்சுகிட்டா அப்படியே அவ டென்ஷன் எல்லாம் மறந்து, என்னையே முட்டைக் கண்ணை முழிச்சு பார்த்துட்டு இருப்பா” என்று அவள் காதோரத்தில் கிசுகிசுக்க, அவன் அணைப்பிலும், ஸ்பரிசத்திலும் கிறங்கியவள்,

“என்ன பண்றிங்க சத்யா விடுங்க” என்றாள் திக்கித் திணறிய குரலில்.

“மேரேஜ் லைப்பை இந்த பிசிக்கல் இன்டிமசி கூட இல்லாம எப்படி ரன் பண்ண முடியும்” என்றவன் அவன் அணைப்பை இறுக்க,

“விடுங்க பிளீஸ்” என்றாள்.

“ஆரா ப்ளீஸ்டி” என்று கரகரப்பாய் ஒலித்த அவன் குரல் அவளை மேற்கொண்டு எதுவும் பேசவிடவில்லை. அணைத்தவன் ஐந்து நிமிடங்களில் உறங்கிப் போனான். அணைப்பில் அகப்பட்டிருந்தவளுக்கோ உறக்கம் எட்டாக்கனியாகி இருந்தது. படபடப்பையும் மீறி ஒரு பாதுகாப்பையும், நீண்ட நாட்களுக்குப் பிறகு அமைதியடைந்த மனதையும் ஏன் என்று அவள் ஆராயவில்லை. அப்படி ஆராய்ச்சி செய்திருந்தால் உண்மை விளங்கியிருக்குமோ என்னமோ?

காலையில் கண் விழித்த தேவ் கண்டது, குளித்து முடித்து ஊதா நிற சங்குப் பூ நிறத்தில் லினன் காட்டன் புடவை அணிந்து, தலையில் கட்டிய டவலுடன் வந்தவளைத் தான். பார்க்க பார்க்க தெவிட்டவில்லை அவனுக்கு.

“இவ்வளவு சீக்கிரம் எழுந்து எங்க கிளம்பிட்டிங்க ஆரண்யா மேடம்?” என்றான்.

“கீழ ஏதோ பூஜை இருக்குன்னு ஆன்ட்டி வர சொன்னாங்க, உங்களையும் தான்” என்றாள் பட்டும் படாமல்.

“மறுபடியும் முதல்ல இருந்தா?” என்று சலித்தவன்,

ஆமா, இந்த முந்தானையை மடிப்பு வச்சு கட்ற பழக்கம் எல்லாம் இல்லையா?” என்றான் கடுப்புடன்.

“ஏன்?” என்றாள் முறைத்தபடி.

“வேற எந்த மடிப்பும் தெரிய மாட்டேங்குது” என்று அவள் இடுப்புப் பகுதியைப் பார்த்து அவன் குறைபட்டுக் கொள்ள,

பிளவர் வாசை கையில் எடுத்தவள்,

“அன்னைக்கு மிஸ் ஆகிடுச்சு. இன்னைக்கு கண்டிப்பா மண்டையை உடைச்சுடுவேன்” என்றாள் முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு.

“ஹோல்ட் ஆன்..! நோ வயலன்ஸ்”  என்றவன் குளிக்க செல்ல,

“ஒரு நிமிஷம்” என்றாள். அவன் என்ன என்பதைப் போல் பார்க்க,

“மித்ரா இன்னைக்கு இங்க வர்றா” என்றாள்.

“சோ”

“இல்ல, நீங்க அக்சஸ் குடுத்தாத்தான் கேட்ல வாட்ச்மேன் விடுவாரு. அதான் சொன்னேன்” என்றாள்.

“நான் இன்பார்ம் பண்ணிடுறேன்” என்றவன் குளிக்க செல்ல,

“தீவு மாதிரி இருக்குற இந்த வீட்ல வந்து மாட்டிகிட்டேன். எல்லாம் என் தலையெழுத்து” என்று நொந்தபடி கீழே சென்றாள். அவளைப் பார்த்த சிவகாமிக்கு மனம் குளிர்ந்தது.

“அழகா இருக்கம்மா ஆரா” என்றார்.

“தேங்க்ஸ் ஆன்ட்டி” என்றவள்,

“என்ன பூஜை ஆன்ட்டி?” என்றாள் புரியாமல்.

“இன்னைக்கு சஷ்டிமா ஆரா. ஓவ்வொரு சஷ்ட்டிக்கும் நான் தான் பூஜை பண்ணுவேன். அந்த முருகனே எனக்கு பேரனா வந்து பிறக்கணும்னு தான். இன்னைக்கு நீ பண்ணுமா” என்றார்.

‘பேரன் பிறக்கனுமா? கல்யாணம் ஆகி மூணு நாள் தான் முழுசா முடிஞ்சிருக்கு. அதுக்குள்ளவா?’ என்று நினைத்தவள் வெளியே கட்டிக் கொள்ளவில்லை.

அவளுக்கும் கடவுள் நம்பிக்கை அதிகம் தான். வாரிசுக்காக இல்லையென்றாலும், முருகனுக்காக பூஜை செய்தாள். ஹாலில் இருந்த அந்த மிகப் பெரிய பூஜை அறை அவளை ஏற்கனவே கவர்ந்திருந்தது. முதல் நாள் ஏனோ தானோவென்று பார்த்திருந்த அறையை இன்று நிதானமாக, மனம் முழுவதும் பக்தியுடன் பார்க்க, ஏனோ ஆழ்ந்த அமைதி அவளுக்குள்.

கீழே வந்த யாதவன் பூஜை அறை மணி சத்தத்தில் திரும்பிப் பார்க்க, அதிகாலை தேவதையாய் ஜொலித்துக் கொண்டிருந்தவளைப் பார்த்து, பார்வையை எடுக்க முடியாமல் திண்டாடினான்.

“வா யாதவா?” என்ற சிவகாமியின் குரலில் கலைந்தவன், அவ்வப்போது ஆராவை திருட்டுப் பார்வை பார்க்கவும் தவறவில்லை. ஆரத்தி தட்டை சிவகாமியிடம் காட்ட.. கும்பிட்ட அவர்,

“யாதவனுக்கும் காட்டுமா?” என்றார்.

ஆராவும் அவன் முன் ஆரத்தி தட்டை காட்ட, அவனோ சூட ஜோதியின் ஒளியில் மின்னிக் கொண்டிருந்த அவளைத்தான்  பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்ன யோசிக்கிற யாதவ்? தொட்டுக் கும்பிட்டுக்கோ” என்றார் சிவகாமி.

“ஆங்..! சரிம்மா” என்றவன் அவளைப் பார்த்துக் கொண்டே தொட்டுக் கும்பிட, எறிந்து கொண்டிருந்த சூடத்தின் அருகில் கை சென்று விட, நெருப்பு சுட்டு விட்டது.

“ஸ்ஆ” என்றவனுக்கு அப்போது தான் சுரணை வந்தது.

“என்னாச்சு யாதவா? பார்த்து கும்பிக் கூடாதா?” என்றார் சிவகாமி.

“பார்த்துட்டே தான்மா கும்பிட்டேன்” என்றான் இரட்டை அர்த்தத்துடன்.

“தேவ் எங்கம்மா?” என்றார் சிவகாமி.

“குளிக்கிறார் ஆன்ட்டி”

“சரிம்மா, நான் போய் காபி எடுத்துட்டு வரேன்” என்று அவர் நகரப் போக,

“அம்மா எப்பவும் நீங்கதான காபி போடுறிங்க? அதான் ஒன்னுக்கு ரெண்டு மருமகள் இருக்காங்களே அவங்களை போட சொல்லுங்க” என்றான் யாதவ்.

“எது? உன் பொண்டாட்டி காபி போட்டு நாம குடிக்கனும்னா நாலு நாள் ஆகும் பரவாயில்லையா?” என்றார் சிவகாமி.

“அவ போடாட்டி என்ன? அதான் ஆரண்யா இருக்காளே, அவளைப் போட சொல்லுங்கம்மா” என்றான் யாதவ். அவனின் பேச்சில் எரிச்சல் அடைந்த ஆரா,

“மரியாதையா பேசுங்க? அவ இவன்னு சொல்ற வேலையெல்லாம் வேண்டாம். எனக்குப் பிடிக்காது” என்றாள் பட்டென்று.

“தேவ் சொல்றான், நான் சொல்லக் கூடாதா? நீ சின்ன பொண்ணு தானம்மா?” என்றான் வேண்டுமென்றே.

“தேவும் நீங்களும் ஒன்னு கிடையாது. அவர் என் புருஷன். நீங்க அவரோட அண்ணன். அந்த எல்லையோட நில்லுங்க” என்றாள் பட்டென்று.

“ஆரா சொல்றது சரிதான யாதவா? அதென்ன தம்பி பொண்டாட்டியை அவ இவன்னு சொல்றது? இனிமேல் அப்படி சொல்லாத!” என்று அதட்டினார் சிவகாமி.

‘ரொம்பத் துள்றாலே? இண்டஸ்ட்ரில நான் பார்க்காத பொண்ணுங்களா?’ என்று நினைக்க,

“அவ தேவ் பொண்டாட்டி யாதவா. நீ அவளை இப்படி பார்க்குறன்னு தெரிஞ்சாலே உன்னைத் தொலைச்சு கட்டிடுவான் தேவ்” என்று அவன் மனசாட்சி அவனுக்கு ஞாபகப் படுத்தியது.

அதற்குள் காபி போட்டுக் கொண்டு வந்த ஆரா, அவனிடம் வேண்டா வெறுப்பாய் நீட்ட, அவனோ ஏதோ பொக்கிஷத்தை வாங்குவதைப் போல் வாங்கிக் கொண்டான்.

“ரொம்ப அருமையா இருக்குமா ஆரா” என்றார் சிவகாமி.

“தேங்க்ஸ் ஆன்ட்டி” என்றாள்.

“உனக்கு சமைக்கத் தெரியுமா ஆரா” என்றார்.

“சமைப்பேன் ஆன்ட்டி” என்றாள்.