அத்தியாயம் 07

‘ராஜம் பெண்கள் விடுதி’ என்ற பெயர்ப்பலகை மின்னிய அந்த நான்கு மாடி கட்டிடம், காலையிலேயே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

அது ஒரு அப்பார்ட்மெண்ட் ஸ்டைல் பெண்கள் விடுதி. அங்கே தனி நபர் தங்கும் அறையிலிருந்து, நால்வர் பகிர்ந்து கொள்ளும் அறைகள் வரை இருந்தன.

அதில் மூன்றாவது தளத்தில், மூவர் தங்கும் வசதியுடைய அறையில் இருந்த மலர்விழி, தன் படுக்கைக்கு அருகே வைத்திருந்த தாயின் புகைப்படத்தை வணங்கிவிட்டு, கல்லூரி செல்வதற்காக பரபரப்பாக புறப்பட்டு கொண்டிருந்தாள்.

மலர்விழியின் பரபரப்பை அந்த அறையில் அவளோடு தங்கியிருந்த இரு இளம்பெண்கள் புன்னகை முகமாக பார்த்துக் கொண்டே, தாங்களும் வேலைக்கு செல்வதற்காக தயாராகிக் கொண்டிருந்தார்கள்.

 மலர்விழி கல்லூரியில் சேர்ந்து இன்றோடு ஐந்து நாட்கள் ஆகின்றது. ஆனால், இன்றுதான் அவளுக்கு முதல்நாள் வகுப்பு ஆரம்பம். அதனால் ஒரு மெல்லிய பதட்டத்தோடே கல்லூரிக்கு புறப்பட்டுக் கொண்டிருக்கிறாள்.

அதிகாலை ஐந்து மணிக்கே எழும்பி தலைக்கு எண்ணெய் வைத்து, ஷாம்பு குளியலை முடித்திருந்தாள் மலர்விழி. இடைதாண்டி நீண்டு வளர்ந்திருந்த அவளுடைய அடர்ந்த கேசம், எண்ணெய் குளியலின் உபயத்தால் கருகருவென்று பளபளத்தது.

முடியை ஃபேன் காற்றில் நன்றாக உலர வைத்திருந்தவள், மேலிருந்து கீழே வரை இறுக்கமாக பின்னலிட முயல, உடனிருந்த பெண்களில் ஒருத்தி, “நேனு தல துவேதா நீகு” என்று கேட்டுக் கொண்டு மலர்விழியின் அருகில் வந்து நின்றாள்.

அவள் பேசிய தெலுங்கு புரியாமல், “ஹாங்…” என்றபடி, அங்கிருந்த மற்றொரு பெண்ணைப் பார்த்தாள் மலர்விழி.

 “நான் உனக்கு தலை பின்னி விடட்டுமான்னு கேக்குறா.” உடனடி மொழிப்பெயர்ப்பாளர் ஆனாள் அந்த பெண்.

மலர்விழியின் உடனிருக்கும் பெண்களில் ஒருத்திக்கு சொந்த ஊர் ஆந்திரா பக்கம். இன்னொரு பெண்ணுக்கு கோயம்புத்தூர். இருவரின் தலைமுடியும் இன்றைய நாகரீகத்திற்கேற்ப அவர்களின் தோள்வரையே கிடந்தது.

அதுவும் தெலுங்குகார பெண்ணின் முடி, வளர்வேனா பார் என்று சுருள் சுருளாக இருக்க, மலர்விழியின் நீண்ட வாளிப்பான கூந்தலைக் கண்டதும் தொட்டுப் பார்க்கும் ஆசை வந்துவிட்டது அந்த பெண்ணுக்கு.

“ம்ம்… தாராளமா” என்றபடியே அவள் கூந்தலை அந்த பெண்ணின் கைகளில் மலர்விழி ஒப்படைக்க, ரசனையோடு பின்னல் போட்டு முடித்தாள் அந்த பெண்.

“வாவ்… சூப்பரா இருக்குற மலர். கொஞ்சமா மேக்கப் போட்டுக்கோ, இன்னும் சூப்பராயிடுவ.” கோவையை சேர்ந்த பெண், தன் மேக்கப் கிட்டோடு மலர்விழியை நெருங்க, “வேண்டாம்” என்று மறுத்தாள் மலர்விழி.

“உனக்கு மேக்கப் ரொம்ப நல்லா சூட் ஆகும் மலர், வெக்கப்படாமப் போட்டுக்கோ.” கிராமத்துப் பெண், மேக்கப் போட்டுக்கொள்ள வெட்கப்படுகிறாள் என்று எண்ணிச் சொன்னாள் அந்த பெண்.

மேக்கப் பற்றி அறியாதவளல்ல மலர்விழி. அதை வேண்டாம் என்று விலக்கி வைத்திருக்கிறாள் என்ற உண்மையை அந்தப் பெண் அறிந்திருக்க வாய்ப்பில்லையே.

“இல்ல… வேணாம்.” அழுத்தமாக மலர்விழி மறுக்கவும், சிரித்தாள் அந்த பெண். ‘இன்னும் எத்தனை நாட்களுக்கோ?’ என்ற கேலி இருந்தது அந்த சிரிப்பில்.

அதன்பிறகு தனக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த கபோர்டை திறந்து பார்த்த மலர்விழியின் பார்வை, அங்கிருந்த புத்தம் புது லெமன் யெல்லோ கலர் சுடிதாரின் மீது ஆவலாக விழ,

 “லெமன் யெல்லோ எனக்கு பிடிச்ச கலர், இந்த ட்ரெஸ்ஸை எடுத்துக்கிறியா மலர்?” என்று ராகவன் கேட்டது ஞாபகத்துக்கு வந்தது. கூடவே, அதை அவன் வாங்கித்தந்த பொழுதும் ஞாபகத்துக்கு வந்து, மலரின் இதழ்களில் இளநகை பூக்கச் செய்தது.

ஆமாம்… மலர்விழியை விடுதியில் விட்டுச் சென்ற ராகவன், மறுநாள் காலையிலேயே நண்பன் செந்திலோடு விடுதியில் வந்து நின்றான்.

 அறிமுகம் இல்லாத புது இடத்தில், புது நபர்களோடு ஒருநாள் இரவைக் கழித்திருந்த மலர்விழி, மறுநாள் காலையில் எதிர்பாராமல் அவர்களைக் காணவும் உணர்ச்சிவசப்பட்டுப் போனாள். பெண்ணவளின் கண்களோ அவள் கட்டுப்பாட்டையும் மீறி கசிந்து விட்டன.

அவ்வளவு தான், “என்னாச்சு மலர்? உனக்கு இந்த இடம் பிடிச்சிருக்கு தானே?” என்று கேட்டுக் கேட்டு மாய்ந்து போனான் ராகவன்.

“ஃபர்ஸ்ட் டைம் இப்படி தனியா தங்கியிருக்கேன்ல… அதான் உங்களைப் பார்த்ததும் கொஞ்சம் ஃபீலாகிடிச்சி.” சிறு வெட்கத்தோடு கண்களைத் துடைத்தபடிச் சொன்ன மலர்விழியின் வார்த்தைகளில், ஒருவாறு சமாதானம் ஆனான் ராகவன்.

அதன்பிறகு மலரை கிளம்பி வரச்சொல்லி, விடுதியிலிருந்து கல்லூரி வரை நடத்தியே அழைத்துச் சென்றான் ராகவன். விடுதியிலிருந்து ஒரு பத்து நிமிட நடையில் கல்லூரி வந்துவிட்டது‌. அந்த பத்து நிமிடங்களில், எப்படி கவனமாக நடந்துகொள்ள வேண்டும் என்று மூச்சு விடாமல் மலர்விழிக்கு பாடம் நடத்தி விட்டான் ராகவன்.

‘திருநெல்வேலியில் பிறந்து வளர்ந்த மலர்விழியால், இங்கே சென்னையில் சமாளித்துவிட முடியுமா?’ என்ற கவலை இருந்தது ராகவனுக்கு. அதைக் கொண்டே அத்தனை அறிவுறுத்தல்கள்.

அது செந்திலுக்கும், மலருக்குமே புரிந்தது. புரிந்த விஷயத்தில் வழக்கம் போல மலர்விழியின் மனம் ராகவனின் மீது மையல் கொண்டது.

 செந்திலோ, “யாரோ, திருநெல்வேலியை விட கொஞ்சமேக் கொஞ்சம் பெரிய ஊருன்னு சென்னையைச் சொன்னாங்களே? அவங்களை நீ பாத்தியா ம்மா?” என்று மலரிடம் கேட்டு கிண்டலில் இறங்கினான்.

“அது, மலர் பயந்துடக் கூடாதுன்னு சொன்னது. அதுக்காக, எதுவும் சொல்லிக் குடுக்காம சும்மா விட்டுட்டு போக முடியுமா?” என்று செந்திலிடம் பாய்ந்தான் ராகவன்.

“டேய் நல்லவனே… இப்போ நீ தான் டா மலரை பயமுறுத்துற. அவளை ஃபீரியா விடு. ரெண்டே நாள்ல எல்லாம் பழகிக்குவா” என்றான் செந்தில்.

நண்பனின் பேச்சில் உள்ள உண்மை புரிய, அதன் பிறகு அமைதியாகிப் போன ராகவன், அடுத்ததாக மலரை அழைத்து சென்ற இடமோ ஒரு ஜவுளிக்கடை.

மலர்விழியின் சிறிய பயணப் பையை பார்த்த நொடியே, அவளுக்கு புதிய உடைகள் எடுத்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வந்திருந்தது ராகவனுக்கு.

அதே எண்ணம் அவன் சித்தப்பாவுக்கும் தோன்றியிருக்கவே, கணிசமான தொகையை மகன் கையில் கொடுத்து, “அந்த பிள்ளைக்கு ட்ரெஸ் வாங்கி குடுடா மகனே. ஆனா, நான் பணம் தந்தேன்னு தெரியவேண்டாம். அப்புறம், என்னைப் பாக்கும் போதெல்லாம் அந்த பொண்ணுக்கு ஒருமாதிரியா இருக்கும்” என்றும் சொல்லியிருந்தார்.

எனவே எதுவும் சொல்லாமல் அழைத்து வந்திருந்த ராகவன், ‘இங்கே எதற்காக?’ என்று யோசனையாக பார்த்த மலர்விழியிடம், “உனக்கு காலேஜுக்கு போட்டுட்டு போற மாதிரி ட்ரெஸ் எடுத்துக்கோ மலர்” என்று சொல்ல, பதறிப்போனாள் மலர்விழி.

 சென்னைக்கு வந்ததிலிருந்து ராகவன் தனக்காக செலவழிக்கும் பணத்தை, அவளும் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறாள். ‘வசதிபடைத்தவனாகவே இருந்தாலும், படிப்பை முடித்து இன்னமும் வேலைக்கு செல்லாத இளைஞனால் எப்படி தனக்காக இவ்வளவு செலவழிக்க முடிகிறது?’ என்ற கேள்வி அவளுக்குள் எழும்பிக் கொண்டே தான் இருக்கிறது.

ஆனாலும், அவனிடம் கேட்க முடியாமல் ஒரு தயக்கம் வந்து தடைபோட, அந்த தயக்கத்தை இப்போது தாண்டிவிடும் முடிவோடு, கேட்டே விட்டாள்.

 அவனோ, “நான் செலவு பண்ணுறேன்னு யார் சொன்னா மலர்? எல்லா செலவையும் எங்க ஹெச்ஓடி தான் பண்ணுறார். எங்க சித்தப்பா கிட்ட சொல்லி காலேஜ்ல சீட் அரேன்ஜ் பண்ணுனது மட்டும் தான் நான்” என்றவன்,

“இடிச்சபுளி மாதிரி சும்மாவே நிக்குற, சொல்லேன் டா” என்று அருகில் நின்றிருந்த நண்பன் செந்திலை இடித்தான்.

“ஹ்ம்ம்… ஆமா ம்மா, ஏதாவது ட்ரஸ்ட் மூலமா, உன் படிப்பை கன்டினியூ பண்ண வைக்கலாம்னு தான் மொதல்ல நினைச்சோம். ஆனா, அதுக்கு நாம குடுக்கிற தகவல்களோட உண்மைத் தன்மையை தெரிஞ்சிக்க வீட்டுக்கு வருவாங்களாம். அது உனக்கு செட் ஆகாதுன்னு தெரிஞ்சதும், விஷயத்தை எங்க ஹெச்ஓடி கிட்ட கொண்டு போனோம். அவர் ஏற்கனவே இரண்டு மூனு பசங்க படிக்க ஹெல்ப் பண்ணுறார். இப்போ அவர் தான் உனக்கான எல்லா செலவையும் செய்யுறார்.” தன் வேலையை மிகச் சிறப்பாகவே செய்து முடித்தான் செந்தில்.

அதன்பிறகும் மலர்விழி தயங்க, “தீச்சர்… நீங்க வேலைக்கு போனதும், எங்க ஹெச்ஓடி க்கு ட்ரெஸ் எடுத்து குடுங்க. கொசுறா, எங்களுக்கு வேணும்னாலும் எடுத்து குடுங்க, வாங்கிக்கிறோம்.”

கிண்டலாக சொல்லிவிட்டு ஆடைத்தேர்வில் இறங்கி விட்ட ராகவன், அவனுக்கு பிடித்ததாக அந்த லெமன் யெல்லோ சுடிதாரைச் சொல்ல, உடனே அதை வாங்கிவிட்டாள் மலர்விழி.

 அதன்பிறகு, மலர்விழி மறுக்க மறுக்க ஒரு மொபைல் ஃபோனை அவளுக்கு கொடுத்து, அவளுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் அத்தனையையும் வாங்கிக் கொடுத்து, அவசரத் தேவைக்கு என்று கையில் பணமும் கொடுத்து, ஆயிரத்தெட்டு பத்திரங்கள் சொல்லியே மறுபடியும் விடுதியில் விட்டுச் சென்றிருந்தான் ராகவன்.

மொத்தத்தில் தன்னந்தனியாக சென்னையில் மலர்விழி எதிர்கொள்ளப் போகும் நாட்களைக் குறித்த அச்சம், அவளைவிட ராகவனைத் தான் அதிகம் ஆட்டி வைத்தது என்று சொல்ல வேண்டும்.

அந்த லெமன் யெல்லோ சுடிதாரை அணிந்து, நெற்றிக்கு பொட்டிட்டு, அதற்கு மேல் கீற்றாக திருநீறு அணிந்து கொண்ட மலர்விழியின் பார்வையோ அடிக்கடி கைபேசியை தொட்டு மீண்டது. மனமோ, “என்ன, இன்னும் தலைவர் ஃபோன் பண்ணக் காணோம்?” என்று முணுமுணுத்துக் கொண்டது.

ராகவனை எந்த அடைமொழிக்குள்ளும் இதுவரை அடக்காத மலர்விழி, இப்போது இரண்டு நாட்களாக அவனை ‘தலைவர்’ ஆக்கியிருந்தாள்.

 சென்னையில் இருந்து ஊருக்கு போய் சேர்ந்திருந்த ராகவன், தினமும் மலர்விழியோடு பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

 இன்று தனக்கு முதல்நாள் கல்லூரி என்பதால் காலையிலேயே தலைவனின் அழைப்புக்காக ஆவலாக அவள் காத்திருக்க, அழைப்புத்தான் இன்னமும் வந்து சேரவில்லை.

பெண்கள் மூவரும் தயாராகி முடிக்கவும், அனைவருக்கும் பொதுவாக இரண்டாவது தளத்தில் இருந்த மெஸ்ஸில் சென்று உணவருந்திக் கொண்டார்கள்.

இன்னமும் ராகவன் அவளுக்கு அழைக்கவில்லை. சோர்ந்து போனவளாக அடிக்கடி கைபேசியை மலர்விழி பார்த்ததிலேயே, “யார்கிட்ட இருந்தும் ஃபோன் எதிர்பாக்குறியா மலர்?” என்று கேட்டாள் கோவை பெண்.

“ஆமாம்” என்று தலையாட்டிய மலர்விழி, இதுவரை யாரிடமும் தன் கதையை பகிர்ந்து கொள்ளவில்லை.

 நோட்டுப் புத்தகம், பேனாக்கள் அடங்கிய பௌவுச், வாட்டர் பாட்டில், இவை அடங்கிய கல்லூரி பேக்கை , ஷோல்டரில் மலர்விழி மாட்டிய நேரம், சரியாக கைபேசி அழைத்தது.

கண்டிப்பாக ராகவன் அழைப்பான் என்ற நம்பிக்கையில், கையிலேயே வைத்திருந்த அலைபேசியை உயிர்ப்பித்தாள் மலர்விழி.

அந்த பெண்கள் இருவருக்கும் அலுவலக கேப் வரும் நேரமாகிவிட்டதால், மலர்விழிக்கு வாழ்த்துகள் சொல்லி விடைபெற்றுக் கொண்டார்கள்.

“ஹலோ மலர்… காலேஜுக்கு கிளம்பியாச்சா?” அழைப்பை ஏற்று கைபேசியை காதுக்கு கொடுக்கவும், காதில் விழுந்தது ராகவனின் குரல்.

 காலையிலிருந்தே கேட்பதற்காக அலைபாய்ந்த குரல். இப்போது அலைபேசி வழியாக காதோரமாக கேட்க, கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டவளாக, “ம்ம்…” என்றாள் மலர்விழி‌.

அவனால், அவன் முயற்சியால் அல்லவா, அவள் இன்று கல்லூரிக்கு செல்வது. அந்த எண்ணம் அவளை, அவள் குரலை தடுமாற வைத்தது.

அவளின் சின்னச்சின்ன அசைவுகளையும் துல்லியமாக கணக்கிடும் வல்லமை மிகுந்தவனுக்கோ, அலைபேசி வழியாகவே அவள் அலைப்புறுதலை கண்டு கொள்ள முடிந்தது. அதை மாற்றும் விதமாக,

“ஆஹா… மலர்விழி காலேஜுக்கு கிளம்பியாச்சு… எங்க, காலேஜுக்கு போற பொண்ணு எப்பிடி இருக்கான்னு நாங்களும் பாக்குறோம், ஒரு செல்ஃபி எடுத்து அனுப்புங்க பாப்போம்” என்றான் உற்சாகமாக.

இதுவரை அப்படி ஒன்றை தன் கைபேசியில் முயற்சித்து பார்க்காத மலர்விழி, “செல்ஃபியா? எனக்கு எடுக்க வராதே” என்றாள் சிணுங்கலாக.

“வெளிய சொல்லிடாத மலர், செவ்வாய் கிரகத்தில இருந்து வந்திருக்கன்னு நினைச்சி தூக்கிடப் போறாங்க” என்று கிண்டலடித்த ராகவன்,

“அதெல்லாம் பெரிய கம்பசூத்திரம் ஒண்ணும் கிடையாது. முன் கேமராவை ஆன் செய்து முகத்துக்கு நேரா வச்சி, தலையை அப்பிடியும் இப்பிடியுமா சாச்சி, முகத்தை அந்த பக்கமும் இந்த பக்கமுமா சுழிச்சி எடுக்கணும். அவ்வளவு தான்… சிம்பிள்” என்றான் சிரிக்காமல்.

சிரித்த மலர்விழியோ, “செல்ஃபி வேண்டாமே” என்று அதிலேயே வந்து நின்றாள்.

“அனுப்புங்க மலர்.” வேண்டுமென்றே பிடிவாதம் பிடித்தான் ராகவன்.

வேறுவழியில்லாமல் அழைப்பை துண்டித்து விட்டு செல்ஃபி எடுக்க முயற்சித்தவளுக்கோ, அதை ராகவனுக்காக எடுக்கிறோம் என்ற எண்ணமே, கையில் இருக்கும் கைபேசியை நேரடியாக பார்க்க விடாமல் செய்தது.

 கண்களில் வெட்கமும், கன்னத்தில் குழைவும் அழையா விருந்தாளியாக வந்து சேர்ந்து கொள்ள, ஒருவழியாக தன்னை செல்போனில் செல்ஃபியாக சிறைபிடித்தவள், அதை ராகவனுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பிவிட்டு, அவனை மறுபடியும் ஃபோனில் தொடர்புகொள்ள முயலாமலேயே பறந்து விட்டாள்.

ராகவனும் அதற்கு மேல் அவளை அழைத்து சோதிக்கவில்லை. “காலேஜுக்கு போய் சேர்ந்ததும் ஒரு மெசேஜ் வை” என்ற மெசேஜை அனுப்பி விட்டு, ஆவலோடு மலர்விழியின் புகைப்படத்தை பார்வையிட்டவனின் விழிகளில் மின்னல் தெறித்தது.

அத்தனை புது உடையிருந்தும், தான் பிடித்திருப்பதாக சொன்ன மஞ்சள் சுடிதாரை முதல்நாள் கல்லூரிக்கு செல்ல அணிந்து நின்றிருந்தவளின் முகத்தில், இதுவரைக் காணாத வெட்கத்தை கண்டவனின் உதடுகளோ உற்சாகமாக சீட்டி அடித்தது.

முகமெல்லாம் புன்னகையை பூசிக்கொண்டு தரைத்தளத்திற்கு வந்த மலர்விழி, பள்ளிச் சீருடை அணிந்து அங்கே நின்றிருந்த விடுதியின் உரிமையாளரின் பிள்ளைகளிடம், “ஸ்கூலுக்கு கிளம்பியாச்சா?” என்றாள் புன்னகை முகமாக.

நான்கு மாடிகளாக இருந்த அந்த கட்டிடத்தின் தரைத்தளத்தில் அதன் உரிமையாளர் தீனதயாளன், தன் குடும்பத்தோடு குடியிருக்கிறார்‌.

அவர் மனைவி பெயர், ராஜம். அந்த பெயரில் தான் விடுதி இயங்குகிறது. பெயரில் மட்டுமல்லாது விடுதி நிர்வாகத்தில் பெரும்பங்கு வகிப்பது ராஜம் தான். தீனதயாளன் நகரின் பிரபலமான கன்ஸ்ட்டிரக்ஷன் கம்பெனியின் முதலாளி‌. அவர்களுக்கு ஆண் ஒன்று, பெண் ஒன்று, என்று இரண்டு பிள்ளைகள்.

மூத்தது பெண், பத்தாவது படிக்கிறாள். அடுத்தது பையன், எட்டாவது படிக்கிறான். அவர்களிடம் தான் மலர்விழி பேசியது.

“ம்ம்… அவங்க கிளம்பியாச்சு, நீ காலேஜ் வரைக்கும் நடந்து போய்டுவியா? துணைக்கு யாரையாவது வரச்சொல்லணுமா?” கைகளில் பிள்ளைகளின் லஞ்ச் பேக்கோடு வந்த ராஜம் தான், மலர்விழியிடம் கேட்டது.

எல்லாம் ராகவனின் கைங்கர்யம் தான். “கிராமத்தில் வளர்ந்த பெண், கொஞ்சம் அக்கறை எடுத்து பார்த்துக் கொள்ளுங்கள்” என்று தனியாக ராஜத்திடம் சொல்லிவிட்டே சென்றிருந்தான்.

அதுவுமில்லாமல், மலர்விழியைப் பற்றி அளித்திருந்த தகவல்களில் கார்டியன் என்று ராகவனின் பெயர் இருக்க, பெற்றவர்கள் இல்லாத பெண் என்ற எண்ணம் ராஜத்துக்கு அவள் மீது கொஞ்சம் கரிசனையை அளித்திருந்தது.

எல்லாவற்றையும் விட, கல்லூரிக்கு செல்லாத நாட்களில் நேரம் போகாமல் மேலும் கீழுமாக மலர் நடைபயின்ற நேரத்தில், “அக்கா” என்று தன்னை அழைத்து, இயல்பாக பழகிய பெண்ணை அவருக்குமே பிடித்துப் போனது.

“ஐயையோ… வேண்டாம் க்கா. நானே போய்டுவேன்.” வெட்கத்தோடு ராஜத்துக்கு பதில் சொன்ன மலர்விழி, சாலையில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள்.

அது கல்லூரியை ஒட்டிய சாலை என்பதால் மாணவ, மாணவியரின் நடமாட்டம் அதிகமாகவே இருந்தது. எனவே எந்த பயமும் இன்றி நடந்தாள் மலர்விழி.

கல்லூரிக்கு அருகில் வரவர, அட்மிஷனுக்கு வந்த அன்று போலவே இன்றும் அதன் பிரம்மாண்டத்தில் வியந்து போனாள். அதேநேரம், அது இருபாலரும் சேர்ந்து படிக்கும் கல்லூரி என்பதால் ராகிங் பயமும் அவளுக்கு இருந்தது.

ஆனால், அப்படி எதுவும் நடக்காமல் வகுப்பறைக்கு வந்துவிட்டாள் மலர்விழி. அங்கே, அத்தனை கண்களும் தன்னை வித்தியாசமாக பார்ப்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது மலர்விழியால்.

‘ஆடை இல்லாதவன் ஊரில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன் தானே.’

நாகரீகம் என்ற பெயரில் ஆணும் பெண்ணும் கோமாளியாக உருமாறியிருக்க, கிராமத்து சாயல் அப்பட்டமாக தெரிந்த மலர்விழியை அனைவரும் கேலியாகவே பார்த்தார்கள்.

அது அத்தனையையும் அசட்டையாக புறந்தள்ளிய மலர்விழிக்கு ஆங்கிலத்திலேயே பேராசிரியர்கள் பேசியது மட்டும் தான் கொஞ்சம் கடினமாக தெரிந்தது.

இதுகாறும் படித்தது தமிழ்வழிக் கல்வி. இப்போது ஆங்கிலம் என்னும் போது தடுமாற்றம் வருவது இயல்பு தானே.

ஆனால், அதையும் முயன்று ஒருகை பார்த்துவிடலாம் என்று நம்பிக்கையோடு இருந்தவளிடம், அன்றைய வகுப்புகள் முடிவடையும் வரைக்கும் கூட யாரும் நட்புக்கரம் நீட்ட முன்வரவேயில்லை. அதைப்பற்றி அவள் கவலைப்படவும் இல்லை.

காலை எட்டரை மணியிலிருந்து மத்தியானம் ஒரு மணி வரைக்கும் மலர்விழியின் கல்லூரி நேரம். அன்றைய கல்லூரி நேரம் முடிவடையவும், கல்லூரியை விட்டு வெளியேறும் வரைக்குமே கொஞ்சம் திக்திக்கென்றே இருந்தது மலர்விழிக்கு.

 யாரும் ராகிங் என்று அப்போதும் அவளை தொந்தரவு செய்யவில்லை என்றதும் நிம்மதி பெருமூச்சு விட்டவள், கல்லூரி வளாகத்தை தாண்டி வெளியே வந்ததும் ஃபோனை உயிர்ப்பித்து ராகவனுக்கு அழைத்து விட்டாள்.

ஃபோன் கைக்கு கிடைத்த இத்தனை நாட்களில், அவளாக ஒருமுறை கூட ராகவனுக்கு அழைத்ததில்லை. இன்றோ ராகிங் கும்பல் யாரிடமும் மாட்டிக்கொள்ளவில்லை என்ற அதீத சந்தோஷத்தில் தானாகவே அழைத்து விட்டாள்.

உடனேயே அழைப்பை ஏற்றுவிட்ட ராகவனிடம், “தலைவரே… என்னை யாரும் ராகிங் பண்ணல தெரியுமா?” உற்சாகமாக பேசத் தொடங்கினாள் மலர்விழி.

அதீத உற்சாகத்தில் அவளுக்கு ராகவனை தலைவரே என்று அழைத்தது கூட தெரியவில்லை. ராகவனுக்கோ அவளின் அழைப்பில் சிரிப்பு வந்தாலும், “ஹாஸ்டலுக்கு வந்துட்டியா மலர்?” என்றான் அமைதியாக.

அப்போதுதான் தன் தவறு புரிய, “இல்ல…” என்றாள் காற்றுபோன பலூனாக.

“வழியில நடந்து போகும் போது தேவையில்லாம ஃபோன் பேசக்கூடாதுன்னு தெரியாதா மலர்? ஹாஸ்டலுக்கு போய், சாப்டுட்டு அப்புறமா பேசு.” கண்டிப்பாக பேசிய ராகவன் அழைப்பைத் துண்டித்தும் கொண்டான்.

 தன்னை கண்டிக்கும் தொனியில் முதன்முதலாக ராகவன் பேசியதில் மலர் வாடிப்போனாலும், ‘தெரியாத ஊர், பழகாத பாதை, இதில் நடந்து கொண்டே பேசியது தன் தவறு தானே. அப்படி இருக்கும் போது கொஞ்சவா செய்வார்?’ என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொண்டாள் மலர்விழி.

 விடுதிக்கு வந்து சாப்பிட்டு முடித்த பிறகு, தானாக ராகவனுக்கு அழைக்க தயக்கம் வந்திருந்தது. அவளைக் காத்திருக்க வைக்காமல் ராகவனே அழைத்து, “ம்ம்… இப்போ சொல்லு” என்றான்.

நடந்ததைப்பற்றி பேசி நோகடிக்காமல் நேராக ராகவன் விஷயத்துக்கு வந்ததில் மகிழ்ந்து போன மலர், தனக்கு ராகிங் அனுபவம் ஏற்படாததைச் சொல்லி மகிழ்ந்தாள்.

 அவனோ, “அப்போ என்னவோ பெயர் சொல்லி என்னைக் கூப்பிட்டியே? ஹாங்… தலைவரே, இப்போ எங்க போச்சு அது?” என்றான் கிண்டலாக.

ராகவன் சொன்ன பிறகு தான் உற்சாகத்தில் தன்னை மறந்து அவனை தலைவரே என்று அழைத்திருப்பதே தெரிந்தது மலர்விழிக்கு. இல்லையென்றால், தலைவரே என்ற வார்த்தையை ராகவன் சொல்ல வாய்ப்பில்லையே.

“ஹைய்யோ…” என்று நாக்கை கடித்துக் கொண்டவள், “அது… அப்போ ஒரு ஃப்ளோல வந்திடுச்சி” என்றாள் வெட்கத்தோடு.

“பார்றா… ஒரு நாள் காலேஜ் போனதுக்கே, ஒரு ப்ளோல எங்க மலருக்கு பேச வந்துருக்கே” என்று கிண்டலடித்த ராகவன்,

“இன்னைக்கு ராகிங் இல்லைங்குறதால என்னைக்குமே இருக்காதுன்னு கிடையாது மலர். ஃப்ர்ஸ்ட் இயர் ஸ்டூடண்ட்ஸ் இன்னைக்கு வர்றதால ஆன்டிராகிங் கமிட்டி ஃபுல் ஸ்பீட்ல காலேஜ்ல சுத்திட்டு இருந்திருப்பாங்க. அதனால பசங்க பம்மியிருப்பாங்க” என்றவன்,

“ஆடு, பாடு, தரையில நீச்சலடி இப்படித்தான் பசங்க சொல்லுவாங்க. அதுக்கு எக்ஸ்ட்ரீம் லெவல்ல ரீஆக்ட் பண்ணாம, அவங்க சொன்னதை ஃபன்னா எடுத்துகிட்டு செய்துட்டோம்னா பிரச்சினையே இல்லை. அதே நேரம், செய்ய முடியாத எதையும் செய்யச் சொன்னா, ஆன்டி ராகிங் கமிட்டி கிட்ட கம்ப்ளைண்ட் பண்ணுறதுலயும் தப்பில்ல” அனுபவஸ்தனாக சொல்லிக் கொடுத்தான். தலையாட்டிக் கொண்டாள் மலர்விழி.

ராகவன் சொன்னது போலவே, ஒரு வாரத்திற்கு பிறகு கல்லூரியில் ஆணும் பெண்ணுமாக நின்றிருந்த கும்பல் ஒன்று மலர்விழியைப் பார்த்து, “ஏய்… பட்டிக்காடு, இங்க வா” என்று அதிகாரமாக அழைத்தது.

அதே நாளில், செயின் இல்லா மகனின் வெற்றுக் கழுத்தை பார்த்து விட்டு, “டேய் ராகவா… உங்கழுத்துல கிடந்த செயினை எங்கடா?” என்று அதட்டலாக கேட்டிருந்தார் குமாரசாமி…