அவளை அழைத்த சிவகாமி,

“டின்னர் மேலயே குடுத்துவிட சொன்னான் ஆரா. குடுத்து விடுறேன்” என்றார்.

“நானே வந்து எடுத்துக்கிறேன் ஆன்ட்டி” என்றாள் வேகமாய்.

“பரவாயில்லைம்மா..! சர்வெண்ட் கொண்டு வராங்க” என்று தகவலை பகிர்ந்து விட்டு வைத்து விட்டார்.

டின்னரும் வர, அவனை அழைக்க அறைக்குள் சென்றாள். அவனோ கைகளை கொண்டு கண்களை மூடியவாறு படுத்திருக்க,

“சாப்பிட வாங்க சத்யா” என்றாள் அவன் அருகில் சென்று.

“எனக்கு பசியில்லை ஆரா. நீ சாப்பிடு” என்றான்.

“இல்ல எனக்கும் பசியில்லை” என்றாள்.

பட்டென்று கண்களைத் திறந்தவன்,

“அதெப்படி பசிக்காம இருக்கும். வா சாப்பிடலாம்” என்று அவளை இழுத்துக் கொண்டு போக, அவனை விசித்திரமாய் பார்த்து வைத்தாள்.

அவளுக்கு ஒரு தட்டில் வைத்துக் கொடுத்தவன், தனக்கும் எடுத்துக் கொள்ள, அவனின் கவனிப்பில் அவள் தான் நெளிந்து கொண்டிருந்தாள்.

“என்ன இவ்வளவு கம்மியா சாப்பிடுறிங்க?” என்றாள் புரியாமல்.

“டயட்டை மெயின்டெயின் பண்ணித் தான ஆகணும்” என்றான் சாப்பிட்டுக் கொண்டே.

“இப்படி பட்டினி கிடந்தது தான் ஹீரோவா ஆகணுமா என்ன?” என்றாள்.

“இதுக்கு பேரு பட்டினி கிடையாது, புட் கண்ட்ரோல்.” என்றான்.

“இருந்தாலும் இந்த சாலட் மட்டும் எப்படி பத்தும். நான் மட்டும் டிபன் சாப்பிடுறேன். நீங்க இப்படி சாலட் மட்டும் சாப்பிட்டா எனக்கு ஒரு மாதிரி பீல் ஆகுது” என்றாள்.

“அப்படியா? டிபன் நல்லா இருக்கா?” என்றான் குறுஞ்சிரிப்புடன்.

“ம்ம் நல்லா இருக்கு” என்றாள்.

“பார்த்தா அப்படி தெரியலையே?” என்றான் தேவ்.

“பார்த்தா எப்படி தெரியும்? சாப்பிட்டு பார்த்தா தான தெரியும்” என்றாள்.

“அதுவும் சரிதான்” என்றவன், அவள் வாயருகே சென்ற அவளின் கையைப் பிடித்து தனக்கு ஊட்ட செய்ய, அவள் கையை உருவுவதற்குள் அவன் சாப்பிட்டிருக்க, அவனை முறைத்தாள் ஆரா.

“டேஸ்ட்டியா தான் இருக்கு” என்றான்.

“வேணும்னா வச்சு சாப்பிடனும். இப்படி பிடுங்கி சாப்பிடக் கூடாது” என்றாள் முறைத்தபடி.

“நான் எங்க பிடுங்கி சாப்பிட்டேன். ஊட்ட வச்சு தான் சாப்பிட்டேன்” என்றான்.

“இவனுக்கு பாவம் பார்த்து, இருக்க இடம் கொடுத்தா படுக்க பாய் கேட்பான் போலயே” என்று நினைத்தவள் எதுவும் பேசாமல் சாப்பிட்டு முடித்தாள். அவளின் முகத்தைப் பார்த்து வந்த சிரிப்பை உதட்டுக்குள் அடக்கியவன், தானும் சாப்பிட்டு முடித்தான்.

“எனக்கு நாளைக்கு வெளிய போகணும், என்னோட ஷாப்க்கு” என்றாள்.

“எங்க இருக்கு” என்றான்.

அவள் லொக்கேஷனை சொல்ல,

“அங்கையா? அங்க ரொம்ப ரஷ்ஷா இருக்குமே. இப்போதைக்கு போக முடியாது” என்றான்

“நான் உங்களைக் கூப்பிடலை. நான் தான் போகணும்னு சொன்னேன்” என்றான்.

“நானும் உனக்குத் தான் சொன்னேன்” என்றான் அவளைப் பார்த்தபடி.

“நான் பெரிய ஹீரோயின் எல்லாம் கிடையாது. நான் ஏன் கூட்டத்தைப் பார்த்து பயப்படனும்?” என்றாள்.

“மேடம், நீங்க இப்போ தி கிரேட் பேமஸ் ஆக்டர், அன்ட் டேரக்டர் சத்ய தேவ் மனைவி. அது எல்லாருக்கும் தெரியும். சோ, அவ்வளவு நார்மலா எல்லாம் வெளிய போயிட்டு வர முடியாது” என்றான்.

“எனக்கு வேலை இருக்கு. அங்க போனா தான் டிரஸ் ரெடி பண்ண முடியும். அப்பறம் என் பிரண்ட் மித்ரா ஊர்ல இருந்து வர்றா. அவளையும் பார்க்கணும்” என்றாள்.

“உன் பிரண்ட் மித்ரா ரைட்” என்றான்.

“ம்ம்”

“அவங்க என்ன பண்றாங்க?” என்றான் யோசனையாய்.

“இங்க தான், சென்னை பிரான்ச் அவ தான் பார்த்துக்கிறா. நான் மன்திலி ஒன்ஸ் வந்துட்டு போவேன். கிளாத்ஸ் அன்ட் மெஷின்ஸ் சம்மந்தமா நான் தான் அவளை வெளிய அனுப்பியிருந்தேன். நாளைக்கு வந்துடுவா” என்றாள்.

“நம்ம மேரேஜ்க்கு வரலையா?” என்றான்.

“அவளுக்கு அந்த டைம்ல பிளைட் கிடைக்கலை. அதான்” என்றாள்.

“நீ போகணும்னு அவசியமில்லை ஆரா. உனக்கு என்னென்ன தேவைன்னு சொல்லு. நாளைக்கு மார்னிங் இங்க இருக்கும். அந்த பெரிய ரூம் புல்லா உன்னோட யூஸ்க்கு எடுத்துக்கலாம். வேற மாதிரி செட் பண்ணணும்னாலும் சொல்லு பண்ணிடலாம்” என்றான்.

“சோ என்னோட வேலையையும் நான் இங்க இருந்து தான் பண்ணனுமா?” என்றாள் கோபமாய்.

“நான் அப்படி சொல்ல வரலை ஆரா. இப்போதைக்கு தான் நான் சொல்யூஷன்  சொல்லியிருக்கேன். கண்டிப்பா என்ன பண்றதுன்னு யோசிக்கலாம்” என்றான்.

“ம்ம் ஓகே” என்றாள் அரைமனதாய்.

“நான் ஒன்னு கேட்கலாமா?” என்றான் யோசனையுடன்.

“என்ன கேட்கணும்?” என்றாள்.

“உன்னோட ஹஸ்பண்ட் பேரு என்ன?” என்றான் அவள் கண்களைப் பார்த்துக் கொண்டே.

‘நீயென்ன லூசா?’ என்பதைப் போல் பார்த்து வைத்தாள் ஆரா.

“என்ன? பேர் தான கேட்டேன்?” என்றான்.

“உங்க பேர் உங்களுக்கே மறந்துடுச்சா என்ன?” என்றாள் நக்கலாய்.

“சாரி, நான் அதை மீன் பண்ணலை. உன்னோட இறந்து போன அந்த ஜென்டில்மேன் பேரை கேட்டேன்” என்றான்.

கண்கள் சட்டென்று குளமாக அவனை முறைத்தாள் ஆரா.

“சொல்ல இஷ்ட்டம் இல்லைன்னா சொல்ல வேண்டாம்” என்றான்.

“அவர் பேர் ஜெய்” என்றாள்.

“எப்படி இறந்தார்?” என்றான் மீண்டும் ஆழம் பார்க்கும் பொருட்டு.

“ஆக்சிடென்ட்” என்றாள் பால்கனியில் நின்று தூரத்து நிலவை வெறித்தபடி.

“எங்க நடந்தது?” என்றான் அவனும் விடாமல். இப்போதைக்கு அவனுக்குள் ஓடிக் கொண்டிருக்கும் மீதிக் கேள்விகளுக்கு பதில் அவளால் மட்டுமே தர முடியும்.

“இப்போ எதுக்கு இந்த ஆராய்ச்சி உங்களுக்கு? அதெல்லாம் தெரிஞ்சு தான மேரேஜ் பண்ணிங்க? இப்ப என்ன புதுசா விசாரிக்கிறிங்க?” என்றாள் கோபத்தில் முகம் சிவக்க.

அவளின் பின்னால் நின்று, அவளின் இடையில் கை கொடுத்து தன்னை நோக்கி அவளை பின்னால் இழுத்தவன், அவள் கழுத்தோரத்தில் முகம் புதைக்க, அவன் அருகாமையும், தொடுதலும் கொடுத்த உணர்வுகளை தாங்க முடியாதவள், சட்டென்று அவனை உதறினாள்.

“உங்களுக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா சத்யா. ஏன் என் பக்கத்துல வந்து என்னை டார்ச்சர் பண்றிங்க? உங்க பேச்சு,உங்க பார்வை, நீங்க நடந்துக்கிற விதம் இப்படி எல்லாமே எனக்கு ஜெய்யை மட்டும் தான் ஞாபகப் படுத்துது. ஏன்னு எனக்குப் புரியலை? எனக்கு தலையே வெடிக்கிற போல இருக்கு. நீங்க வேற உங்க பங்குக்கு என்னை படுத்துறிங்க?” என்று கத்தினாள் ஆரா.

“ஆரா ரிலாக்ஸ். இப்போ ஏன் இவ்வளவு டென்ஷன்” என்று அவளை அமைதிப்படுத்த முயல,

“பக்கத்துல வராதிங்கன்னு சொன்னேன்” என்றாள் மீண்டும்.

“சரி நான் வரலை. ஆனா எனக்கு ஒன்னு புரியலை. அப்படி என்ன அந்த ஜெய் உனக்கு உசத்தியா போய்ட்டான்?” என்றான்.

“அது உனக்குத் தேவையில்லாதது”

“எதுடி எனக்குத் தேவை இல்லாதது. செத்துப் போன ஒருத்தனுக்காக உயிரோட இருக்குறவனை அதுவும் தாலி கட்டுன புருஷனை இப்படி பேசுறியே நியாயமா?. உங்க வீட்ல சொன்னாங்க, உன்னோட கதையை” என்றான்.

அவனின் பேச்சில் அவள் அதிர்ந்து நிற்க,

“ஏமாத்திட்டு போன ஒருத்தனுக்காக, நீதான் வேணும்னு வந்த என்னை தூக்கி எரிஞ்சு பேசுற ஆரா நீ” என்றான் தேவ்.

“ஜெய் பத்தி தப்பா பேசாதிங்க சத்யா. அவர் என்னை ஏமாத்தணும்னு நினைக்கிற ஆள் கிடையாது. அவர் உயிரோட இருந்திருந்தா கண்டிப்பா என்னை தேடி வந்திருப்பார்.” என்றாள்.

“சூப்பர்!  அப்ப உயிரோட இருந்த வரைக்கும் ஏன் வரலை. அவன் ஒரு செல்பிஷ் ஆரா. அந்த டைம்க்கு உன்னை யூஸ் பண்ணியிருக்கான்” என்றான் தேவ் மீண்டும் பிடிவாதமாய்.

“சத்யா பிளீஸ்..! போதும், அவரை பத்தி இப்படி பேசாதிங்க” என்றவள் முகத்தை கைகளால் மூடிக் கொண்டு அழ, அவளையே பார்த்திருந்தவன் எப்படி உணர்ந்தான் என்றே தெரியவில்லை. சட்டென்று அவளை இழுத்து அணைத்துக் கொண்டான் தேவ். அவளும் தன்னை மறந்து அவனிடமே அவனுக்காக ஆறுதல் தேடிக் கொண்டிருந்தாள்.

தன்னைத் திட்ட வேண்டாம் என்று தன்னிடமே சொல்லி அழுது கொண்டிருப்பவளைப் பார்த்து சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை அவனுக்கு.

அவளின் முகத்தை நிமிர்த்தி கண்ணீரைத் துடைத்தவன், அவள் கண்களில் இதழ் பதிக்க, விரிந்த அவள் விழிகளின் வியப்பில் தன்னைத் தொலைத்து முகம் முழுவதும் முத்தமிட்டு, தன் அத்தனை மன சஞ்சலங்களுக்கும், உணர்வுகளுக்கும் முற்று கொடுத்திருந்தான். இறுதியில் அவள் இதழ்களில் இளைப்பாறி, அவளின் போராட்டங்களுக்கும் முக்தி கொடுத்திருந்தான்.

தன்னைக் கரைத்து, தன்னுள் கரைந்து கொண்டிருந்தவளை, சில நிமிடங்களுக்குப் பிறகு விடுவித்தவன்,

“உன்னோட வாழ்க்கையில ஜெய் நிழல் மட்டும் தான். இந்த சத்ய தேவ் தான் நிஜம், புரியுதா. இதை உன் மனசுல பதிய வச்சுக்க ஆரா. உன்னை யாருக்காகவும், எதுக்காகவும் என்னால விட்டுக் குடுக்க முடியாது. எல்லாமே கூடிய சீக்கிரம் உனக்குத் தெரிய வரும்” என்று அவன் தீர்க்கமாய் சொல்லிக் கொண்டிருக்க, அவளோ பேந்த பேந்த விழித்துக் கொண்டிருந்தாள்.

“என்னடி முழிக்கிற? வேணும்னா ஒன்ஸ்மோர் போகலாமா?” என்றான் சிரிப்புடன்.

சட்டென்று அவனைத் தள்ளி விட்டவள் அறைக்குள் சென்று மறைய, தேவ்வின் முகத்தில் தீவிரம் குடியேறியது.

‘யாரந்த கருப்பு ஆடு. எங்களைப் பிரிக்கிறதுல அந்த ஆட்டுக்கு என்ன பலன்?’ என்று யோசித்தவன்,

‘எல்லா சந்தேகத்தையும் தெளிய வச்சுட்டு தான் உன்கிட்ட உண்மையை சொல்லுவேன் ஆரா’ என்று நினைத்துக் கொண்டவன், சற்றுமுன் அவள் இதழ்களில் இளைப்பாறிய நிமிடங்களை எண்ணி தனக்குள் சிரித்துக் கொண்டான்.