திருச்சியில் இருந்த அந்த புகழ் பெற்ற செவன் ஸ்டார் ஹோட்டலின் அறையில் இருந்தான் சத்ய தேவ். அவனின் முன்பு அமைதியாக அமர்ந்திருந்த ரவிக்குமாருக்கு எதுவும் புரியவில்லை. தேவ் காலையில் திடுதிப்பென்று போன் செய்து தன்னை இந்த ஹோட்டலுக்கு வருமாறு சொல்லவும், பதட்டத்துடன் தான் கிளம்பி வந்திருந்தார்.
‘ஏன் அமைதியா இருக்கார்? நேத்து தான சென்னையில இருந்து வந்தோம்? பின்னாடியே இவ்வளவு அவசரமா இவர் வர காரணம் என்ன? ஆரா எதுவும் பிரச்சனை பண்ணிட்டாளோ?’ என்று அவரின் சிந்தனை பலவாறு ஓடிக் கொண்டிருந்தது.
“நீங்க நினைக்குற அளவுக்கு பெரிய விஷயம் எல்லாம் இல்ல அங்கிள். எனக்கு நிஜமாவே இங்க ஒரு வேலை இருந்தது. அதான் அப்படியே உங்களையும் பார்த்துட்டு போகலாம்னு வர சொன்னேன்.” என்றான் தேவ்.
“வீட்டுக்கு வந்திருக்கலாமே மாப்பிள்ளை” என்றார்.
“ஆப்டர் மேரேஜ் ஆரா இல்லாம நான் மட்டும் வந்தா நல்லா இருக்காது அங்கிள். அது மட்டுமில்லாம எனக்கு உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும். அதான் இங்க வர சொன்னேன். நீங்க எதுவும் தப்பா எடுத்துக்காதிங்க” என்றான் தன்மையாய்.
“அய்யோ! என்ன மாப்பிள்ளை, பெரிய வார்த்தையெல்லாம் பேசுறிங்க? நான் தப்பா எதுக்கு எடுத்துக்க போறேன்” என்றார் பதட்டத்தை மறைத்து.
அவரை ஒரு நிமிடம் அமைதியாகப் பார்த்தவன்,
“அங்கிள், இப் யு டோன்ட் மைன்ட், ஆராவோட பர்ஸ்ட் மேரேஜ் எப்படி நடந்ததுன்னு சொல்ல முடியுமா?” என்றான் நிதானமாய்.
அவனின் கேள்வியில் அவர் திகைத்து விழிக்க, அவரின் திகைப்பையே யோசனையுடன் பார்த்திருந்தான்.
“என்ன மாப்பிள்ளை திடீர்ன்னு? ஆரா எதுவும் பிரச்சனை பண்றாளா? இல்லை ஆராக்கு எதுவும்” என்று அவர் பேசி கொண்டே செல்ல,
“அங்கிள் பதட்டப்படாதிங்க. நான் நார்மலா தெரிஞ்சுக்கத் தான் கேட்டேன். உங்களுக்கே தெரியும், நான் என்னோட பிடிவாதத்துல தான் அவளை இந்த மேரேஜ்க்கு சம்மதிக்க வச்சேன். அது தப்போன்னு தோணுது. அவளோட பர்ஸ்ட் லைப்ல இருந்து அவ வெளிய வரலையோன்னு தோணுது. அதான் உங்ககிட்ட கேட்டா ஏதாவது விஷயம் தெரியுமேன்னு கேட்கிறேன். என்னால ஆராகிட்ட கேட்க முடியாது.” என்றான் அவரின் முகத்தைப் பார்த்துக் கொண்டே.
ரவி தயங்கியபடி அமர்ந்திருக்க, அவரின் தயக்கத்தைப் பார்த்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை. ஏதோ தவறாய் பட்டது அவனுக்கு.
“என்னாச்சு அங்கிள்?” என்றான்.
“அது வந்து மாப்பிள்ளை” என்று அவர் மீண்டும் தயங்க,
“இங்க பாருங்க அங்கிள். ஆரா என்னோட வொயிப். அது எப்பவும் மாறாது. இன்பேக்ட் எங்க லைப் நல்லா இருக்கணும்னு நினைச்சா நீங்க உண்மையை சொல்லுங்க. ஆராவோட ஹஸ்பண்ட் எப்படி இறந்தார்? அப்படி அவ லைப்ல என்ன தான் நடந்தது?” என்றான் மீண்டும் தெளிவாய்.
“அவர் எப்படி இறந்தார்ன்னு எங்களுக்குத் தெரியாது மாப்பிள்ளை” என்றார் ரவிக்குமார் கலங்கிய முகத்துடன்.
“வாட்!!!” என்ற சத்ய தேவ்விற்கு அப்படி ஒரு அதிர்ச்சி.
“உங்களுக்குத் தெரியாம எப்படி?” என்றான் புரியாமல். அவனுக்கே தன்னை நிலைப்படுத்திக் கொள்ள சில நிமிட அவகாசம் தேவைப்பட்டது.
“இதை எப்படி எடுத்துப்பிங்கன்னு தெரியலை மாப்பிள்ளை” என்று தயங்கினார்.
“ஆராவோட மேரேஜ் எப்போ நடந்தது?” என்றான் யோசனையாய்.
“நாங்க தான் அவளுக்கு கல்யாணமே பண்ணி வைக்கலையே. அவ வாழ்க்கையையை அவளே முடிவு பண்ணி, அவளா எதுவோ பண்ணி, அவ தலையில அவளே மண்ணை அள்ளி போட்டுகிட்டா மாப்பிள்ளை” என்றவருக்கு கண்கள் கலங்கிப் போக, அதிர்ச்சியில் எழுந்து விட்டான் தேவ். அவருக்கு முதுகு காட்டி நின்றவன், தன்னை நிலைப்படுத்திக் கொண்டு, தண்ணீரை எடுத்துக் கொடுத்தான்.
“இது தேவைப் படாது மாப்பிள்ளை” என்றவருக்கு குரல் என்னவோ உள்ளே சென்றிருந்தது.
“அங்கிள் கொஞ்சம் புரியிற மாதிரி சொல்றிங்களா?” என்றான் கண்களை மூடிக் கொண்டு.
“எப்படி சொல்றது தம்பி..! ஆரண்யா எங்களுக்கு பிறந்த பிறகு தான், என்னோட வளர்ச்சியே ஆரம்பிச்சது. அதுல எங்கம்மாவுக்கு அப்படி ஒரு பெருமை. ஆரா மேல வீட்ல எல்லாருக்கும் ப்ரியம் அதிகம். அம்மாவுக்கு ஆரான்னா உசுரு. அவளை கைக்குள்ள வச்சு பொத்தி பொத்தி வளர்த்தாங்க. காயத்ரிகிட்ட கூட அவளை அதிகம் நெருங்க விட்டதில்லை. ஆராவும் வீட்ல யார் எது சொன்னாலும் சரின்னு சொல்ற பொண்ணு. எதிர்த்து பேசினது இல்லை, சத்தமா பேசினது இல்லை. வெளி உலகமே தெரியாம வளர்ந்துட்டு இருந்தவளைப் பார்த்து காயத்ரிக்கு பயம் வர ஆரம்பிச்சது. என்கிட்டே சொல்லி புலம்ப ஆரம்பிச்சா.
எனக்கும் உலகமே என் ரெண்டு பொண்ணுங்களும், என் குடும்பமும் தான். ஆரா மேல இருந்த என் அம்மாவோட இந்த பாசம் ஆதிரா மனசுல அழியாம பதிஞ்சிடுச்சு. ஆராவை விரோதியாவே பார்க்க ஆரம்பிச்சா. நாங்களும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம். ஆதிராவை மாத்த முடியலை. தப்பு முழுக்க முழுக்க எங்க பேர்ல தான். ஆதிரா விலகிப் போக, ஆரா அவ பிரண்ட்ஸ் மித்ரா, கணேஷ் கூட நெருக்கம் ஆக ஆரம்பிச்சா. இது அம்மாவுக்கு சுத்தமா பிடிக்கலை.
ஆரா அவளுக்குன்னு பெருசா விருப்பட்டு எதுவும் கேட்டதில்லை. என்கிட்ட முதல் முறையா பிரண்ட்ஸ் ஓட அவுட் பஸ்ல காலேஜ் போறேன்னு சொன்னா. அம்மா முடியவே முடியாதுன்னு சொல்ல, நான்தான் அப்படியாவது அவ கொஞ்சம் வெளிய போயிட்டு வரட்டுமேன்னு சரின்னு சொன்னேன். ஆனா, அப்படி சொல்லியிருக்கக் கூடாதுன்னு காலம் கடந்து தான் உணர்ந்தேன் மாப்பிள்ளை.” என்றவருக்கு நடந்த நிகழ்வுகளில் கண்ணீர் வர,
“என்னாச்சு அங்கிள்” என்றான் கமரிய குரலில்.
“என்ன நடந்ததுன்னு எனக்கு சரியா இப்ப வரைக்கும் தெரியாது மாப்பிள்ளை. ஆனா, ஒரு நாள் திடீர்ன்னு என்கிட்டே வந்து, அவ பிரண்ட் பஸ்ல கண்டக்டரா வர ஒரு பையனை விரும்புறதாவும், அவங்க வீட்ல பேசப் போறதாவும் சொன்னா. எனக்கு அப்பவே சந்தேகம் வந்தது. நம்ம பொண்ணு அப்படி பண்ண மாட்டான்ற நம்பிக்கை, அப்ப என்னை வேற மாதிரி யோசிக்க விடலை.
அப்பவும் இதெல்லாம் சரியா வராதுன்னு சொன்னேன். கண்டிப்பா அவங்க வீட்ல சம்மதிக்க மாட்டாங்க, நானா இருந்தாலும் சம்மதிக்க மட்டேன்ற மாதிரி அவகிட்ட சொல்லிட்டேன். அப்பவே அவ முகம் சுண்டிப் போச்சு. அப்ப கூட எனக்கு என் பொண்ணை சந்தேகப்படத் தோணலை.
அதுக்கப்பறம் என்ன நடந்துன்னு தெரியலை. ஒரு நாள் புடவையெல்லாம் கட்டி சந்தோஷமா கோவிலுக்கு போன பொண்ணு. அதுக்கப்பறம் அவ முகத்துல நாங்க சந்தோஷத்தையே பார்க்கலை மாப்பிள்ளை. காலேஜ் முடிச்சா. நாங்களும் எவ்வளவோ முயற்சி பண்ணி பார்த்தோம், ஆரா வாயைத் திறக்கவேயில்லை.
திருச்சியில ஷாப் வச்சு கொடுத்தேன். அவளோட கவனம் முழுக்க வேலையில திரும்புச்சு. ஹார்ட் வொர்க் பண்ணி, தனக்கான ஒரு பேரைத் தேடிகிட்டா. நம்ம பொண்ணு பழைய படி நமக்குக் கிடைச்சுட்டான்னு நாங்க சந்தோஷப்பட்டோம்.
நெருங்கின சொந்தத்துல ஆராவை பெண் கேட்டாங்க. அம்மாவும் வர சொல்லிட்டாங்க. ஆரா இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம்னு சொல்ல, நாங்க தான் கட்டாயப்படுத்தினோம்.
பிடிவாதம்னா என்னன்னே தெரியாத பொண்ணு, இந்த விஷயத்துல அவ்வளவு பிடிவாதம் பிடிச்சா மாப்பிள்ளை. அம்மா பக்கமும் பேச முடியலை, பொண்ணு பக்கமும் பேச முடியலை.” என்றவருக்கு நினைவுகள் அந்த நாளுக்கே சென்றது.
அன்று ஆராவை பெண் பார்க்க, அவர்கள் வரும் முன்பே வீடு வந்து சேர்ந்திருந்தாள் ஆரா. மித்ராவும் உடன் வந்திருந்தாள். வந்தவள் நேராக தந்தையிடம் சென்று நிற்க,
“சீக்கிரமே வந்துட்டியாடா?” என்றார் ரவி.
“எனக்கு உங்ககிட்ட பேசணும்ப்பா” என்றாள் அமைதியாய்.
“சொல்லுடா” என்றார்.
“எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம். அவங்களை வர வேண்டாம்னு சொல்லிடுங்க”என்றாள்.
“காரணம்?” என்றபடி வந்தார் சுலோச்சனா. அவரை ஒரு நிமிடம் பார்த்தவள்,
“நான் ஒருத்தரை விரும்புறேன். அதான் காரணம் பாட்டி” என்றாள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு.
“என்னடி சொல்ற?” என்ற சுலோச்சனாவிற்கு அதிர்ச்சி என்றால், காயத்ரிக்கு மயக்கமே வந்துட்டது.
“அப்பா கிட்ட முன்னாடியே சொல்லி இருக்கலாமே ஆரா” என்றார் ரவி வரவழைத்துக் கொண்ட பொறுமையுடன்.