உமாவின் குரலில் நடுக்கமும் கலக்கமும் இருந்தது.சுந்தரி பாட்டியைச் சந்தித்த பின் ஏற்பட்ட பயத்தினால், வீட்டிற்குத் திரும்பியவுடனேயே உமேஷை அழைத்து விட்டாள்.அவனிடம் உதவி கேட்ட பின் தான் அதிலிருந்த சிக்கல்களை உணர்ந்தாள். அதனால், உமேஷ் பதில் சொல்லுமுன்,
”பாட்டி எந்தத் தப்பும் செய்யலை..பணம் இல்லாம என்னை எப்படிச் சித்தி வீட்லே வளர்த்திருக்க முடியும்?..எனக்காக தான் உங்க வீட்டு ஆளுங்கிட்டே பணம் வாங்கினாங்க..’கை நீட்டி பணம் வாங்கின பிறகு எந்த முகத்தோட ப்ரீத்தியை பார்க்க வருவேன்னு’ உங்களோட பாட்டிகிட்டே வருத்தப்பட்டாங்க..சித்தப்பாக்கு உடம்பு சரியில்லாத போது எனக்குக் கிடைச்ச பணத்தை அவரோட டிரீட்மெண்ட்டுக்கு கொடுத்தேன்..அதை இப்போவரை மனசுலே வைச்சுக்கிட்டு, எனக்காக, ப்ரீத்தி கல்யாணத்தை நடத்தி வைக்க அவங்க ஒப்புக்கலை…
அவர் இந்த மாதிரி என்னைப் பற்றி உயர்வா, பெருமையா நினைக்கணும்னு நினைச்சு நான் அந்தப் பணத்தை அவருக்குக் கொடுக்கலை..எனக்குப் பணம் முக்கியமாத் தெரியலை..சித்தப்பா தான் முக்கியமாத் தெரிஞ்சார்..அவரோட கஷ்டத்தை அந்தப் பணத்தை வைச்சு தீர்க்க முடிஞ்சது..அப்போ கிடைச்ச பணத்தை விட இப்போ என்கிட்டே நிறைய பணம் இருக்கு..ஆனா இதை வைச்சு பாட்டியோட ஏக்கத்தை என்னாலே போக்க முடியாது..இந்த விஷயத்திலே நீங்க தான் ஏதாவது செய்ய முடியும்னு தோணிச்சு..உங்க வீட்டைப் பற்றி, சூழ்நிலை பற்றியோசிக்காம உங்களுக்கு ஃபோன் செய்திட்டேன்..ஸாரி.” என்று மன்னிப்பு கேட்டுவிட்டு அழைப்பைத் துண்டித்து விட்டாள்.
அவனில்லை ‘பசுபதி’ அவள் தான் உண்மையான ‘பசுபதி’ என்று உமேஷிற்கு உணர்த்தியிருந்தாள் உமா.பதினெட்டு வயதில் அவளுக்குக் கிடைத்த பணத்தை அவளுடையது, அவளுக்கு உரியது என்று எண்ணாமல்,ராம நாதனிற்குக் கொடுத்து விட்டாள்.இன்றுவரை அவருடைய குடும்பத்திற்குப் பண உதவி செய்து வருகிறாள்.சுந்தரி பாட்டியின் சொந்த பேத்தி, ராம நாதனின் மகள் கவிதா அதே சென்னையில் தான் இருக்கிறாள்.ஆனால், உமா தான் சுந்தரி பாட்டியை அவளுடைய வீட்டிற்கு அழைத்து வந்து,அவளுடைய நேரத்தை, பணத்தை செலவழித்து அவருடைய உடல் நிலையைத் தேற்றினாள். இப்போது, அவரது மன நிலையைத் தேற்ற அவனிடம் உதவி கேட்கிறாள்.
கடலைப் போன்ற அவளின் கருணையும் காருண்யமும் அவள் மீது தீராக் காதலை உண்டாக்கியது.அது அவனுக்குப் புரிந்த நொடியில் அழைப்பைத் துண்டித்திருந்தாள் உமா. உடனே வண்டியைத் திருப்பிக் கொண்டு சென்னைக்குச் செல்ல விழைந்த மனத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, அடுத்து செய்ய வேண்டியவைகளை எப்படி, எப்போது என்று திட்டமிட ஆரம்பித்தான் உமேஷ். அதில் முக்கியமாக, உமாவை நேரில் சந்திக்க திட்டமிட்டு இருந்ததால், சென்னைக்குத் திரும்பிய பின்னரும் அவளைக் கைப்பேசியில் அழைக்கவில்லை.
ஏழு மணி போல் மதுரை வந்து சேர்ந்தான் உமேஷ். திடீரென்று அவனை வீட்டு வாசலில் பார்த்தவுடன், வீட்டிலிருந்த பெண்கள் மூவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.மாடியிலிருந்த அவனுடைய அறைக்குச் சென்று, குளித்து விட்டு, இரவு சாப்பாட்டிற்காக கீழே வந்தான். இரவு உணவை, அம்மாவும் பாட்டியும் பார்த்து பார்த்து பரிமாற, அமைதியாக, ப்ரீத்தியுடன் சேர்ந்து உண்டான்.அவனுடைய அம்மா மட்டும் விடாமல் பேசிக் கொண்டிருக்க, பாட்டியும், ப்ரீத்தியும் அவனின் அமைதியில் அமைதியாக இருந்தனர். அதன் பின் மாடிக்குச் சென்றவன், அடுத்த நாள் காலை, டிஃபன் சாப்பிட தான் கீழே வந்தான்.
வீட்டிற்கு வந்ததிலிருந்து யாருடனும் உமேஷ் சகஜமாக பேசவில்லை, பேச முடியவில்லை.அவருடைய மகனின் நடவடிக்கை வித்தியாசமாக இருந்தாலும், இப்போதாவது வீட்டிற்கு வந்தானே என்ற நிம்மதியில் இருந்தார் மீனா. உமேஷுடன் தனிமையில் பேசக் காத்திருந்தனர் பார்வதியும் ப்ரீத்தியும்.வீட்டினருடன் பேச வேண்டுமென்று அவன் திட்டமிட்டு இருந்ததை அவர்கள் யாருக்கும் தெரியப்படுத்தவில்லை.
முதல் ஆளாக டிஃபன் முடித்துக் கொண்டு வெளியே செல்லயிருந்த மகனிடம்,”டேய்..காலைலே வீட்டிலே இருக்க மாட்டேயா? நேத்து நைட்டு நான் வர்றத்துக்குள்ளே மாடிக்குப் போயிட்ட..வண்டி ஓட்டிட்டு வந்த களைப்புன்னு நினைச்சுக்கிட்டேன்..உன்கிட்டே முக்கியமான விஷயம் பேசணும் டா.” என்றார் நாகேஸ்வரன்.
“எனக்கும் உங்களோட முக்கியமான விஷயம் பேசணும்..மதியச் சாப்பாட்டுக்கு வந்திடுவேன்.” என்றான் உமேஷ்
அப்போது, குளித்து முடித்து, நெற்றி நிறைய பசுமத்துடன், சமையலறை அருகே இருந்த மர அலமாரியில் வீற்றிருந்த கடவுள்களுக்குக் காலை வணக்கத்தை தெரிவித்து முடித்த ஏகாம்பரம், பக்தி பழமாகக் காட்சியளித்தார். அவரைக் கண்டு கொள்ளாமல் வெளியே செல்லயிருந்த பேரனை அழைத்து, அவனுக்கும் திருநீறு பூசி விட்டு,”கடைக்கு வரலையா?” என்று கேட்டார்.
“இல்லை..வெளியே வேலை இருக்கு.” என்று பதில் சொல்லி விட்டு, மெயின் ரோட்டில் நிறுத்தி வைத்திருந்த அவனுடைய வண்டியை அணுகுவதற்குள், அவர்களுடைய வீட்டு வாசலிருந்து வண்டியைச் சென்றடையும் வரை, பாதையில் சந்தித்த அனைவரும், வார்த்தை, செய்கை மூலம் அவனுக்கு மரியாதை தெரிவித்தனர். அது அவன் பெயரில் இருக்கும் பசுபதிக்கு என்பதால் அவனும் அதை ஏற்றுக் கொண்டான்.
இரண்டு மணி நேரத்தில், ராஜபாளையத்தில், ஜெயந்தியின் வீட்டில் இருந்தான் உமேஷ். அவன் இங்கு வரப் போவதை அவனுடைய வீட்டினர்க்கும் ஜெயந்தியின் வீட்டினர்க்கும் தெரியபடுத்தவில்லை.அவனைப் பார்த்து ஆனந்த அதிர்ச்சியடைந்தாள் ஜெயந்தி.அவளுடைய கணவன் ராஜசேகர் வீட்டை விட்டுப் புறப்படுமுன், அவனைச் சந்தித்து, அவன் வந்த வேலையை முடிக்க தான் அத்தனை காலை வேளையில், மதுரையிலிருந்து புறப்பட்டு வந்திருந்தான்.
“நீங்க பேசிட்டு இருங்க..நான் கிளம்பறேன்.” என்று புறப்பட்ட ராஜசேகரை நிறுத்தி வைத்து, சென்னையில் நடந்த அனைத்தையும் அவர்களுடன் பகிர்ந்து கொண்டான் உமேஷ்.அவன் சொன்னதைக் கேட்டு விட்டு சிறிது நேரம் அமைதியாக இருந்த ராஜசேகர்,”ஜெயந்தியையும் விக்ரமையும் இப்போ உங்களோட அழைச்சிட்டுப் போங்க..ப்ரீத்தி சென்னைலேர்ந்து திரும்பி வரும் வரை ஜெயந்தி உங்க வீட்லேயே இருக்கட்டும்” என்றான்.
“தாங்க்ஸ்..இதைப் பற்றி இன்னும் வீட்லே பேசலை..நேத்து நைட் தான் சென்னைலேர்ந்து வந்தேன்..காலைலே நேரே இங்கே வந்திட்டேன்.” என்றான் உமேஷ்.
அதைக் கேட்டு அண்ணன், தங்கை இருவர் முகத்திலும் புன்னகை பூத்தது. அதன் பின், விக்ரமுடன் சிறிது நேரம் விளையாடினான் உமேஷ்.ஜெயந்தி வீட்டினருடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தான்.சரியாக மதியச் சாப்பாட்டு நேரத்திற்கு வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.
மகள் ஜெயந்தி, பேரன் விக்ரமோடு வீட்டிற்கு வந்த மகனிடம்,”என்ன டா..இவ வீட்டுக்குத் தான் போறேன்னு சொல்லியிருந்தா மாப்பிள்ளைக்கு ஏதாவது கொடுத்து விட்டிருப்பேனே.”என்றார் மீனா.
அதற்குப் பதில் சொல்லாமல்,”ப்ரீத்தி எங்கே ம்மா?” என்று விசாரித்தான் உமேஷ்.
“மாடிலே, மாப்பிளையோட சேட் செய்திட்டு இருப்பா இல்லை சினிமா பார்த்திட்டு இருப்பா.” என்றார் மீனா.
மாடியில், ஒருபுறம், இரண்டு படுக்கையறைகளும், மறுப்புறம் ஜிம், ஹோம் தியேட்டர், ஸிட்டிங் ரூம் இருந்தது.
“நான் போய் அழைச்சிட்டு வரேன் அண்ணா.” என்று விக்ரமை அழைத்துக் கொண்டு மாடிக்குச் சென்றாள் ஜெயந்தி.
மதியச் சாப்பாட்டிற்கு வீட்டிற்கு வந்த ஏகாம்பரமும் நாகேஸ்வரனும், ஜெயந்தியையும் விக்ரமையும் கண்டு திகைப்படைந்தார்.அனைவரும் சாப்பிட்டு முடித்த பின், வேலை ஆள்களைக் கடைக்கு அனுப்பி வைத்தான் உமேஷ். ஏதோ பெரிய விஷயம் அதான் அவர்களை வீட்டிலிருந்து அகற்றுகிறான் என்று புரிந்தது அனைவர்க்கும்.
அடுத்த ஒரு மணி நேரம், மூன்று தலைமுறை பசுபதிகளுக்கு இடையே பயங்கரமான வாக்கு வாதம் ஏற்பட்டது.மகனிற்கும் தந்தைக்கும் இடையே பந்தாடப்பட்ட நாகேஸ்வரன், ஒரு கட்டத்திற்கு மேல் அதில் பங்கேற்க முடியாமல், ஒதுங்கிக் கொண்டார்.ப்ரீத்தியைச் சென்னைக்கு அனுப்ப மறுத்தார் ஏகாம்பரம்.அழைத்துக் கொண்டு போவேன் என்று அடம் பிடித்தான் உமேஷ். ‘அவள் வரமாட்டாள்’ என்று உறுதியாகச் சொன்னார் ஏகாம்பரம்.அவளை வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்வேன் என்று மிரட்டினான் உமேஷ்.
ஜெயந்தியின் தோளில் சாய்ந்து அழுது கொண்டிருந்த ப்ரீத்தி, ஓயாமல் போய்க் கொண்டிருந்த சண்டையை ஒரு முடிவிற்குக் கொண்டு வந்தாள்.அவளுடைய அப்பாவின் குடும்பத்தினரைச் சந்திக்க விரும்புவதாக, சின்ன குரலில், அவளுடைய விருப்பத்தைத் தெரிவித்தாள்.
அவளுடைய விருப்பத்திற்காகக் காத்திருந்த பார்வதி, அவளைப் போலவே சின்ன குரலில், அவளுடன் அவரும் சென்னைக்குப் போகப் போவதாக கணவருக்குத் தெரியப்படுத்தினார். ‘ப்ரீத்தியைச் சந்திக்க அவங்க தான் உன்னோட வீட்டுக்கு வரணும், அவங்களோட வீட்டுக்கு அவ போகக் கூடாது.’ என்று கண்டிஷன் போட்டு விட்டு, அதற்கு பின், ஒரு நொடி கூட வீட்டில் நிற்காமல், உடனே கடைக்குப் புறப்பட்டுச் சென்று விட்டார் ஏகாம்பரம்.
வீட்டில் நடந்தவைகளை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த ஜெயந்தியிடம்,”உனக்கு முன்னாடியே உமேஷ் சொல்லிட்டானா? அதான் அமைதியாப் பார்த்திட்டு இருக்கேயா?” என்று கேட்டார் மீனா.
“ம்ம்..காலைலே வீட்டுக்கு வந்து உங்க மாப்பிள்ளையை வைச்சுக்கிட்டு எல்லாத்தையும் சொல்லிட்டான் அண்ணன்..ப்ரீத்தி திரும்பி வர்ற வரை நானும் விக்ரமும் இங்கே தான் இருப்போம்.” என்று சொன்னவள் அறியவில்லை, அவளுடயை அண்ணி உமா பார்வதியைப் பற்றி அவளுடைய அண்ணன் வாயைத் திறக்கவில்லையென்று.
“நாளைக்குக் காலைலே புறப்படலாம்..கொஞ்ச நாள் தங்கற மாதிரி பேக் செய்துக்கோ.” என்று ப்ரீத்தியிடம் சொன்னான் உமேஷ். அமைதியாக தலையசைத்து சம்மதம் தெரிவித்து விட்டு அவளுடைய படுக்கையறைக்குச் சென்று விட்டாள் ப்ரீத்தி.ஜெயந்திக்குக் கல்யாணம் ஆகும் வரை இருவரும் ஒரே படுக்கையறை தான்.அவளுடைய கணவனுடன் வரும் போது, மாடியில் இருக்கும் படுக்கையறையைப் பயன்படுத்திக் கொண்டாள் ஜெயந்தி. அமைதியாக சென்ற ப்ரீத்தியுடன் செல்லுமாறு கண்களால் ஜெயந்திக்குக் கட்டளையிட்டான் உமேஷ்.
மாடியிலிருந்த அவனுடைய அறைக்குச் செல்லயிருந்தவனை,”உன்னோட பேசணும் டா.” என்று தடுத்தார் நாகேஸ்வரன்.
“சொல்லுங்க ப்பா.” என்ற மகனை, அவருடைய அம்மாவின் அறைக்கு அழைத்துச் சென்ற நாகேஸ்வரன்,”அம்மா, நீங்க வாங்க.” என்று பார்வதியை மட்டும் அழைத்தார். ‘இதென்ன விஷயம்? மகன், மாமியார், கணவர் மூவர் மட்டும் சம்மந்தப்பட்டது?’ என்று, அடுத்த ஒரு மணி நேரம், சாத்தியிருந்த அறை கதவை யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தார் மீனா.
அறையினுள்ளே, உமாவிற்கு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க அவன் உதவ வேண்டுமென்ற அவருடைய விருப்பத்தை உமேஷிடம் தெரியப்படுத்தினார் நாகேஸ்வரன்.
“திடீர்னு எப்படி உங்களுக்கு அவ வாழ்க்கையைப் பற்றிய யோசனை?” என்று கேட்டான்.
“எனக்கு மட்டுமில்லை..அம்மாக்கும் தான்.” என்று பார்வதியையும் சேர்த்துக் கொண்டார் நாகேஸ்வரன்.
அப்போது, பார்வதி பாட்டியின் கண்கள் கலங்கியிருப்பதைக் கண்டான் உமேஷ்.அவனுடைய மனத்தை உமாவிடம் வெளிப்படுத்துவதற்கு முன் இவர்களிடம் வெளிப்படுத்த விரும்பவில்லை.அதே சமயம், உமா மீது அவனுக்கு இருக்கும் பிரியத்தை வெளிப்படுத்த இதை விட நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது என்று உணர்ந்தான்.யோசனையில் ஆழ்ந்திருந்த மகனிடம்,
“அவளைப் போல படிச்ச பையனா, நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவனா, நல்ல பையனா பாருடா..உன்னோட பிரண்டஸ்கிட்டே சொல்லி வை..அவங்க வேலை செய்யற கம்பெனிலே யாராவது இருந்தா சொல்லச் சொல்லு..எல்லாச் செலவையும் ஏத்துக்கிட்டு நல்லபடியா நாமளே அவளுக்குக் கல்யாணம் செய்து வைக்கலாம்.” என்றார் நாகேஸ்வரன்.
உடனே,“பசுபதி வழிமுறைலே.” என்றான் உமேஷ்.
“என்ன டா சொல்ற?” என்று நாகேஸ்வரன் கேட்டது தான் தாமதம்,
“நம்ம கடைலேர்ந்து பட்டு..நம்ம காசுலே தாலி..நம்ம தலைமைலே கல்யாணம்..நம்ம தயவுலே கல்யாணச் சாப்பாடு..நீங்க அவளுக்குச் செய்த அநியாயத்தை இந்த ஒரு செயல்லே சரி செய்ய பார்க்கறீங்க..கரெக்ட்டா?” என்று சீறினான் உமேஷ்.
மகனின் கோபத்தை எதிர்பார்த்தவர் போல்,“இதை விட வேற என்ன டா செய்ய முடியும்?” என்று நாகேஸ்வரன் கேட்க,
“இதைத் தான் முதல் பசுபதியும் செய்தார்.. இப்போ இருக்கற பசுபதியும் செய்யறார்..இலவசமாக் கல்யாணம் செய்து வைக்கறது..ஆயிரம் பேருக்குச் சாப்பாடு போடறது..நூறு பேருக்குத் துணி வாங்கிக் கொடுக்கறது..அம்பது பேர் வைத்தியத்துக்கு செலவு செய்யறது..பத்து, இருபது பேரைப் படிக்க வைக்கறது..லட்ச ரூபாலே ஆயிரம் ரூபா செலவு செய்யறத்துக்கு பெயர் தானம் தருமமில்லை, அதுக்கு பெயர் பிச்சை.”என்று உமேஷ் சொன்னவுடன், கோபமடைந்த நாகேஸ்வரன்,
“நிறுத்து டா..நம்மளைப் போல பரம்பரை பரம்பரையா செய்திட்டு இருந்தவங்க, வசதி இருந்தாலும் இப்போயெல்லாம் செய்யறதில்லை.” என்றார்.
“வசதி இல்லாத, மாசச் சம்பளத்துக்கு வேலை பார்த்திட்டு இருந்த உங்களோட தங்கை கணவர், சுந்தரேசன், பல குழந்தைங்களைப் படிக்க வைச்சிருக்கார், பல பேருக்கு மருத்துவ உதவி செய்திருக்கார்..உங்களோட தங்கை, சிவரஞ்சனி, ஓர் அனாதைக் குழந்தையை அவங்களோட வீட்டுக்கு அழைச்சிட்டு வந்து..சோறு ஊட்டியிருக்காங்க..துணி வாங்கிக் கொடுத்திருக்காங்க..பள்ளிக்கூடம் அனுப்பி படிக்க வைச்சிருக்காங்க..முக்கியமா, அந்தக் குழந்தைக்கு அம்மாவா இருந்திருக்காங்க..பெற்ற மகளைப் போல அன்பு செய்திருக்காங்க…
அவங்க இறந்த பிறகு நீங்க என்ன செய்தீங்க? அந்தக் குழந்தையை உங்களோட உதிரமில்லைன்னு உதறிட்டு வந்திருக்கீங்க..இத்தனை வருஷமா உமாவைப் பற்றி இந்த வீட்லே யாருமே வாயே திறக்கலை..நீங்க எல்லாரும் தான் பசுபதி பரம்பரைக்கு கலங்கம்..அத்தை இல்லை..அவங்க நம்ம பரம்பரையோட கலங்கரை விளக்கம்.” என்று உமேஷ் பேசி முடிக்குமுன்அவனைக் கட்டிக் கொண்டு அழுதார் பார்வதி.
“விடுங்க பாட்டி..எப்படி உங்களாலே ப்ரீத்திக்கும் உமாக்கும் நடுவுலே வித்தியாசம் பார்க்க முடிஞ்சுது?” என்று அவரிடம் கோபப்பட்டான் உமேஷ்.
“நான் என்ன டா செய்வேன்? இன்னைக்கும் உன்னோட தாத்தா சொல்றபடி தான் நான் செய்தாகணும்.” என்றார்.
“அப்போ உமாக்கு நல்ல பையனாப் பார்த்துக் கல்யாணம் செய்து வைக்க சொன்னது தாத்தாவா?” என்று கேட்டான்.
“அவருக்கு இந்த விஷயமே தெரியாது..சென்னைலேர்ந்து வந்த பிறகு என்னையே எனக்குப் பிடிக்கலை டா..ப்ரீத்தி கல்யாணத்துக்கு முன்னாடி உமாக்கு ஒரு வழி காட்டணும்னு முடிவு செய்தேன்..நாகுகிட்டே சொன்னேன்..அவன் தான் உன்கிட்டே சொன்னா, அவளுக்குப் பொருத்தமான மாப்பிள்ளையா நீ பார்ப்பேன்னு சொன்னான்.” என்று அழுகையுடன் தன்னுடைய மனப் பாரத்தைப் பேரனிடம் இறக்கி வைத்தார் பார்வதி.
ஒரு நொடி கூட யோசிக்காமல்,”அவளுக்குப் பொருத்தமான மாப்பிள்ளையா நான் இருப்பேன்னு உங்களுக்குத் தோணலையா ப்பா?” என்று உமேஷ் கேட்டவுடன்,”உமேஷ்..என்ன சொல்ற?” என்று அதிர்ச்சியில் கூச்சலிட்டார் நாகேஸ்வரன்.
“பைத்தியமா டா நீ?” என்று வார்த்தையை விட்டார் நாகேஸ்வரன்.
“இவ்வளவு நாள் பைத்தியமா இருந்தேன்..இப்போ தெளிவாயிட்டேன்.”
“உன்னோட தாத்தா, ஏகாம்பரம் பசுபதி ஒத்துக்க மாட்டார் டா.” என்று சொன்ன பார்வதி, ‘பசுபதி’ என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்தார்.
“தெரியும்..பசுபதி அவருக்கு வழிமுறை..எனக்கு அது வாழ்க்கை முறை.” என்றான் உமேஷ் பசுபதி.
“உன் அம்மாவைப் பற்றி நினைச்சுப் பாருடா..அவளும் ஒத்துக்க மாட்டா டா” என்றார் நாகேஸ்வரன்.
“என் அம்மாவா இருந்தா என் மனசுக்குப் பிடிச்சவளோட நான்வாழ்க்கை அமைச்சுக்கறேன்னு அவங்க சந்தோஷப்படணும்.”
“திடீர்னு இப்படிச் சொன்ன எப்படி டா?” என்று கேட்டார் நாகேஸ்வரன்.
“உங்களுக்குத் தகவல் கொடுத்திட்டேன்..அடுத்த முறை, இங்கே என் கல்யாணத்துக்கு தான் வருவேன்..இல்லைன்னா நீங்க எல்லாரும் அதிலே கலந்துக்க சென்னை வந்திடுங்க..எங்கே நடந்தாலும், உமாவோட என் கல்யாணம் கண்டிப்பா நடக்கும்.” என்றான் உமேஷ்.
அவருடைய அப்பாவிற்கு எப்படி இதைப் புரிய வைப்பது? அவருடைய மனைவியை எப்படிச் சமாதானம் செய்வது? என்று தீவிர யோசனையில் இறங்கினார் நாகேஸ்வரன்.
“அதெல்லாம் உங்களோட மகன் பார்த்துப்பார்.. நம்ம ஒப்பந்தத்தை நீ மறந்திடாத..உமாக்கு உன்னைப் பிடிக்கணும்..இல்லைன்னா அவ வேலையையும் சேர்த்து நீ தான் செய்யணும்.” என்று செல்லமாக பாட்டி பார்வதியை மிரட்டினான் பேரன் உமேஷ்.