விஸ்வாவின் போன் ஒலிக்க , “ஷிட்…” என்றவன் , “ஸாரி.. ஸாரி… ரஞ்சனி , இங்கே அம்மாவிற்கு ஒரு எமர்ஜென்சி அதான் வர முடியவில்லை…” என்று படபடத்தான் .
“ஓ…..! இப்போது அம்மா எப்படி இருக்காங்க? எந்த மருத்துவமனையில் இருக்கிறார்கள்? எல்லாம் ஓ.கே. தானே?”
“இப்போது பயப்படும்படி ஒன்றுமில்லை ரஞ்சனி , மருத்துவமனையெல்லாம் இல்லை… இங்கே வீட்டில் தான் சர்க்கரை குறைந்து மயங்கி விட்டார்கள் .”
“ஓ…! “ என்று ரஞ்சனி குரல் இறங்கியது ,
அப்போது பின்னணியில், “நேரமாச்சு ரஞ்சனி , கிளம்பு…” என்று ரஞ்சனியின் பெரியம்மா குரல் கேட்க ,
“இன்னும் ஸ்டேஷன் போகவில்லையா ரஞ்சனி?”
“நீங்கள் வந்து விடுவீர்கள் என நினைத்தேன் . மேலும் எனக்கு இங்கு இருக்கும் டிராபிக் பற்றிய விவரமெல்லாம் தெரியாது. இப்போதுதான் பெரியம்மா , “நேரமாச்சு…” என்று அவசரப்படுத்தினார்கள், அதான் அழைத்தேன்…” என்று சொல்லும் போதே, ‘ஒரு மெஸேஜாவது போட்டிருக்கலாம்” என்று ரஞ்சனியால் நினைக்காமல் இருக்க முடியவில்லை
“ஸாரி ரஞ்சனி , அம்மா பற்றிய யோசனையில் சுத்தமாக மறந்து விட்டேன் . வெரி ஸாரி , உடனே கிளம்பு , ரயிலை பிடிக்கச் சரியாக இருக்கும்…” என்று அவனும் அவசரப்படுத்தினான்.
விஸ்வா தர்மசங்கடமாக உணர்ந்தான் . ‘ஃபர்ஸட் இம்ப்ரஷன் இஸ் தி பெஸ்ட் இம்ப்ரஷன் என்பார்கள் , ஆனால் நான் இப்படி சொதப்பி விட்டேனே….’ என்று வருந்தினான் .
சங்கரன் விவரம் கேட்க ,
“என்னப்பா நீ ? நிலைமை இப்படி என்று போனில் ரஞ்சனிக்குச் சொல்லியிருக்கலாமில்லையா? அவள் கிளம்பிப் போயிருப்பாள் . இந்தக் கடைசி நேர பதட்டத்தைத் தவிர்த்திருக்கலாம்….” என்று குறைபட,
“இல்லை அப்பா… , அம்மாவிற்கு என்றவுடன் கொஞ்சம் பதட்டப்பட்டு விட்டேன் , சுதா வேறு வீட்டில் இல்லையா?” என்று சங்கடமாகச் சொல்ல ,
“தொழில் நடத்துபவன் இப்படிச் சொதப்பலாமா? எல்லா பக்கமும் யோசிக்க வேண்டாமா?” என்று கண்டிக்க ,
உள்ளே புகுந்த ராஜி , “இந்தப் பதட்டத்திலும் வாட்ச்மேனிடம் பேசி , ஜூஸ் வாங்கி என்று எல்லாம் யோசனையாகத்தான் செய்துள்ளான்…” என்று மகனுக்குப் பரிந்து கொண்டு வந்தார் .
விஸ்வா சங்கடத்துடன் பார்க்க ,
“இல்லை ராஜி , இப்போது ரஞ்சனிக்குச் சங்கடமாகிவிட்டது பார்…”
“எது முக்கியமோ? அதற்குத் தான் முன்னுரிமை கொடுத்துள்ளான். மேலும் அந்தப் பெண் முன்யோசனையாக நடந்திருக்க வேண்டாமா ?” என்றார் ராஜி வேகமாக.
“அவளும் யோசித்திருக்கலாம் தான்..” என்று விஸ்வா இழுக்க ,
கடுப்பான சங்கரன் , “ரஞ்சனியின் நிலையில் இருந்து யோசி . அவளுக்குச் சென்னை புதிது . மேலும் நீ வருவாய் என நம்பியிருந்திருப்பாள்…” என்று குத்திக் காட்ட ,
விஸ்வாவின் முகம் வாட , அதைப் பொறுக்க முடியாத ராஜி , “இதென்ன பெரிய விசயமா? இந்த ரயிலை விட்டால் , அடுத்ததில் போய்க் கொள்ளலாம்…” என்றார் சமாதானமாக .
“நீங்கள் சொல்வது சரிதான் அம்மா, அநேகமாக ரயிலைப் பிடித்து விடுவாள் என்று தான் நினைக்கிறேன்…” என்று அவன் அறையை நோக்கி நடக்க ,
“ ரயில் புறப்படும் நேரம் பார்த்துக் கூப்பிடு விஸ்வா , அப்போது தான் ஏதாவது உதவி தேவைப்படுமா என்று தெரியும்?” என்றார் சங்கரன் .
“சரி அப்பா…” என்று அறைக்குள் நுழைந்தான்.
ராஜி சங்கரனை முறைக்க , அவர் நகர்ந்தார் .
அத்தியாயம் 17
ரஞ்சனி கடைசி நேரம் இரயில் நிலையத்திற்கு வர , ஆட்டோவில் இருந்து இறங்கியவள், அவசரமாகச் சாலையைக் கடக்க முயன்றாள் .
ரஞ்சனி கைகளில் பையோடு ரோட்டுப் பக்கம் திரும்ப , அப்போது அவளைக் கடந்த பைக் , அவள் பையைத் தட்டி விட , அதில் தடுமாறி ரோட்டில் விழுந்தாள் .
ரஞ்சனி சுதாரித்து எழுவதற்குள்… , பின்னாடி வந்த பேருந்து ஓட்டுனருக்கு இவள் கீழே விழுந்து கிடந்தது , கண்பார்வையில் படாமல் போக ,
அவர் வண்டியை நிறுத்தாமல் செலுத்த , ரஞ்சனியின் வலது கால் முட்டிக்குக் கீழ் பேருந்தின் இரு சக்கரங்களும் ஏறி இறங்கின.
கண் இமைக்கும் நேரத்தில் , சுற்றியிருப்பவர்கள் சுதாரிப்பதற்குள் அனைத்தும் நடந்து முடிந்தது . ரஞ்சனி ரத்த வெள்ளத்தில் மயங்கினாள்.
பின் அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸை அழைக்க , ரஞ்சனி கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்லப்பட்டாள்.
‘அழைப்போமா? வேண்டாமா?’ என்ற தடுமாற்றத்தில் இருந்தான் .
பின் ஒருவழியாக , ‘தவறு செய்தது நாம் தான் , அவளுடைய கோபம் நியாயமானது தான்’ என்று முடிவு செய்து அழைக்க , நாலைந்து முறை அழைத்தும் போன் எடுக்கப்படாமலே இருக்க , குழம்பிப் போனான் .
மீண்டும் அரைமணி நேரம் கழித்து அழைக்க , ஒரு ஆண் குரல், “ஹலோ..” என ,
இவனும் புரியாமல் இரண்டு மூன்று முறை இடைவிடாது “ஹலோ… ஹலோ ரஞ்சனி….” என்று பதற ,
எதிர்புறம் இருந்து , “ஒரு நிமிடம்…. நான் கீழ்ப்பாக்கம் உதவி ஆய்வாளர் பேசுகிறேன்…”
மேலும் விஸ்வா பதறி , “என்ன ஸார்? என்ன ஆச்சு? ஏதாவது பிரச்சனையா? ரஞ்சனி போன் உங்கக்கிட்ட எப்படி ?”என்று வரிசையாகக் கேள்விகளைத் தொடுக்க ,
“கூல் ஸார் , இந்தப் பெண் பெயர் ரஞ்சனியா ? நீங்கள் யார்? இந்தப் பெண்ணிற்கு நீங்கள் என்ன வேண்டும்?”
“நான் விஸ்வா… . விஸ்வா ஸ்டோர்ஸ் ஓனர் . ரஞ்சனி என் வருங்கால மனைவி. இப்பொழுதாவது சொல்லுங்கள் , ரஞ்சனிக்கு என்னாச்சு ஸார் ?”
“பதறாதீர்கள் , ரஞ்சனிக்குச் சின்ன விபத்து நடந்துள்ளது….”
“விபத்தா? எங்கே? எப்படி ஸார் ? நல்லா இருக்கிறாள் தானே?” என்று உயிரை கையில் பிடித்துக்கொண்டு கேட்டான் .
“பயப்படாதீர்கள் ஸார் , உயிருக்கு ஒன்றும் அபாயமில்லை . காலில் தான் பலத்த அடி . நிறைய ரத்தம் போய் இருக்கிறது , ஐ.சி.யு வில் இருக்கிறார்கள் . உடனே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வாருங்கள் . அவசரம்…”
“இதோ… ஒரு அரைமணி நேரத்தில் வந்து விடுகிறேன்..” என்றவன் உடை மாற்றி விட்டுத் தடதடவென படிகளில் இறங்க,
கடைக்குக் கிளம்பிக் கொண்டிருந்த சங்கரன் , “என்ன விஸ்வா?”
“ரஞ்சனிக்கு விபத்து அப்பா…” என்று அனைத்துத் தகவல்களையும் குரல் நடுங்கத் தெரிவித்தான்.
விஸ்வாவின் படபடப்பைப் பார்த்தவர் , “பயப்படாதே ஒன்றும் இருக்காது விஸ்வா . ஒரு நிமிடம் உட்கார்…” என்றவர். சுதாவைத் தண்ணீர் கொண்டு வரச் சொல்லி, கையில் கொடுத்து , “குடி…” என்றார் .
“அப்பா…” என்று தயங்க ,
“முதலில் குடி…” என்று அவன் குடிக்கும் வரை பொறுமையாக இருந்தார்.
பின், “என்ன செய்யப் போகிறாய் விஸ்வா? “
“ஒன்றும் புரியவில்லை அப்பா… ஒன்றுமே ஒடவில்லை …” என்று பதைபதைக்க ,
“உயிருக்கு ஆபத்து இல்லை என்று சொல்லி விட்டார்கள் அல்லவா? அதனால் பதறாதே…” என்று ஆசுவாசப்படுத்தினார் .
அப்புறம், “ நீ இப்பொழுது காரை ஓட்ட வேண்டாம் , டிரைவரைக் கூட்டிக் கொண்டு போ , அங்கே எதுவும் தேவையென்றால் உதவியாக இருக்கும் . அதே போல் , அங்கே இருக்கும் சூழ்நிலை பொறுத்து , நம் அழகப்பன் டாக்டரை அழைத்துப் பேசு…” என்று அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை அறிவுறுத்தினார் .
“சரி அப்பா , அம்மா…” என்று இழுக்க ,
“இப்போது வேண்டாம் , ஏற்கனவே உடம்பு முடியவில்லை . நீ அங்கே போய் விட்டு , நிலவரத்தைப் பார்த்து விட்டுச் சொல். அப்புறம் பக்குவமாய் நான் அம்மாவிடம் சொல்கிறேன்.”
“சரிப்பா…” என்று கிளம்ப ,
“அப்புறம் விஸ்வா…” என்று அருகில் வந்தவர் , சற்றுத் தயங்கி , “அங்கே நிலைமையைப் பார்த்து விட்டு , ராமநாதனுக்கு இல்லை வேண்டாம்…. ராகவ்வை அழைத்துத் தகவல் சொல் , தேவையென்றால் உடனே கிளம்பி வரச் சொல்…” என்று விஸ்வாவின் தோளை ஆதரவாகத் தட்டினார் .
விஸ்வா கிட்டதட்ட காரில் பறந்தான் . ‘ரஞ்சனிக்கு எதுவும் ஆகக் கூடாது’ என்று இருக்கும் அனைத்துக் கடவுளையும் வேண்டிக் கொண்டே போனான்.
அத்தியாயம் 18
மருத்துவமனையை அடைய , அவனுக்காகக் காவலர் ஒருவர் காத்திருந்தார் .
சில விவரங்களைப் பேசி விட்டு , “அவர்கள் வீட்டில் சொல்லி விடுங்கள் . நாளை காவல் நிலையம் வர வேண்டியதிருக்கும்…” என்று விஸ்வாவின் நம்பரை வாங்கிக் கொண்டு கிளம்பினார் .
விஸ்வா ஐ.சி.யு.விற்கு ஓட , அங்கே காத்திருந்த மருத்துவர்கள் , “நீங்கள்…..?” என்று விசாரிக்க
“நான் அவளுடைய வருங்காலக் கணவர்…”
“ஓ..! அப்போது சரி , உயிருக்கு ஆபத்து இல்லை . ஆனால் அவர் வலது கால் முட்டிக்குக் கீழ் பேருந்தின் இருசக்கரங்களும் ஏறி இறங்கி இருக்கின்றன . அதனால் கால் எலும்புகள் நொறுங்கி விட்டன. தசைகள் மற்றும் நரம்புகள் பலத்த சேதமடைந்துள்ளன . இப்போதைக்குக் கட்டு போட்டு இரத்தப் போக்கைக் கட்டுப்படுத்த முயன்றுள்ளோம் . ஆனால் நிரந்தர தீர்வு காலை எடுப்பது தான் . மேலும் நமக்கு அதிக நேரம் இல்லை. உடனடியாக முடிவு எடுக்க வேண்டும்.”
“காலைக் காப்பாற்ற முடியாதா டாக்டர் ?” என்று கண்ணீருடன் கேட்க,
“புரிகிறது ஸார் , நாங்களும் சின்னப் பெண்ணின் காலை எடுக்காமல் இருக்க, அனைத்து வகையான சிகிச்சைகளையும் யோசித்துப் பார்த்து விட்டோம் . வேறுவழியில்லை . சேதம் அதிகம் .உடனடியாக இரத்தப் போக்கை நிறுத்தியாக வேண்டும் இல்லையெனில் உயிருக்கு ஆபத்தாகிவிடும்…”
“ஒரு ஐந்து நிமிடம் ஸார் . நான் அவளுடைய வீட்டில் பேசி விட்டு வருகிறேன்…” என்று போனை எடுத்தான்.
“ஓ,கே. சிக்கிரம் பேசிவிட்டு வாருங்கள் , நமக்கு நேரம் கிடையாது…” என்று மருத்துவர் நகர ,
“ஒரு நிமிடம் டாக்டர்… எங்கள் குடும்ப டாக்டர் அழகப்பன் அவரிடம் விவரத்தைச் சொல்லுங்கள் பிளீஸ்…” என்று போனைக் கொடுத்தான் .
மருத்துவர் விவரத்தைச் சொல்லி விட்டு போனைக் கொடுத்து விட்டுப் போக ,
“டாக்டர்…” என்று விஸ்வா பரபரக்க ,
“வேறு வழியில்லை விஸ்வா . காலில் எல்லா தசைகளும் அடிபட்டு விட்டன…”
“வேறு மருத்துவமனை , வேறு ஏதாவது சிகிச்சை…” என்று நிராசையுடன் கேட்க ,
“வேண்டாம் விஸ்வா , உடனடியாக அறுவை சிகிச்சை செய்வது நல்லது . தாமதிப்பது சரியில்லை. இங்கு இருக்கும் மருத்துவக் குழுவினர் அனுபவமிக்கவர்கள் . அதனால் தேவையில்லாத பயமும் குழப்பமும் வேண்டாம் . ரஞ்சனி வீட்டில் முதலில் பேசு , அவர்களுக்கு ஏதாவது சந்தேகம் என்றால் என் நம்பரைக் கொடுத்துப் பேசச் சொல்…” என்று போனை வைத்தார் .
விஸ்வா அப்படியே அருகில் இருந்த சுவரில் சாய்ந்தான் , கண்ணீர் பெருகி ஓடியது .
மீண்டும் போன் ஒலிக்க, சங்கரன் தான் அழைத்திருந்தார் .
போனை எடுத்து , “அப்பா ….” என்று அழுக ,
“என்ன விஸ்வா?”
“ரஞ்சனிக்கு வலது காலை எடுக்க வேண்டும் என்கிறார்கள் அப்பா .”
சங்கரன் பேச்சற்றுப் போனார் , மூன்று தங்கைகள் , பெரிய குடும்பம் எனப் பல நல்லது கெட்டதைப் பார்த்தவர் என்பதால் உடனே சுதாரித்துக் கொண்டார் . “அழகப்பன் ஸாரிடம் பேசினாயா விஸ்வா ?”
“அவரும் இதையே தான் அப்பா சொல்கிறார்…”
“சரி , ராகவ்விடம் பேசிவிட்டாயா?”
“இல்லை அப்பா . எப்படியப்பா பேசுவது? என்ன பேசுவது? தயக்கமாக உள்ளது.”
“எதையும் யோசிக்காதே , உடனே பேசிக் கிளம்பி வரச் சொல்…”
பின், “நானே பேசி விடுவேன் விஸ்வா . மெடிக்கல் விசயம் சரியாகச் சொல்ல முடியாததால் யோசிக்கிறேன் . நீ பேசு . நான் கிளம்பி வருகிறேன்…” என்று போனை வைத்தார் .
மகன் தொழில் ஜெயித்திருந்தாலும் , ‘இதுவரை எந்தக் கடினமானச் சூழ்நிலையையும் சந்திக்காததால் , சமாளிக்க முடியாமல் தடுமாறுகிறான்’ என்ற எதார்த்தம் சங்கரனுக்குப் புரிந்தது .
விஸ்வாவிற்கு, ‘அப்பாவை வர வேண்டாம் என்று சொல்லியிருக்க வேண்டுமோ…?’ என்று தோன்றியது , ஆனாலும் ‘தன்னால் இந்தச் சூழ்நிலையைத் தனியாகச் சந்திக்க முடியாது..’ என்பதைத் தெளிவாக உணர்ந்து , அமைதியானான்.
அத்தியாயம் 19
விஸ்வா, தன்னைத் தைரியப்படுத்திக் கொண்டு , ராகவ்வை அழைக்க ,
“சொல்லுங்க விஸ்வா… . எப்படி இருக்கிறீர்கள் ?” என்று சிநேகமாகப் பேச ,
“ எப்படி ஆரம்பிப்பது?” என்று விஸ்வா தயங்க ,
“ரஞ்சனி கிளம்பி விட்டாளா?” என்று ராகவ்வே பேச்சைத் தொடங்க,
விஸ்வா கரகரக் குரலில், “ரஞ்சனிக்கு ஒரு விபத்து ராகவ் . மருத்துவமனையில் இருக்கிறாள்..” என்று எப்படியோ சொல்லி முடித்தான்.
“ரஞ்சனி நன்றாக இருக்கிறாள் தானே ? அவளுக்கு ஒன்றுமில்லையே?” என்று ராகவ் பதைபதைக்க ,
“உயிருக்கு அபாயம் இல்லை என்கிறார்கள் . ஆனால்…” என்று தயங்க ,
“சொல்லுங்க விஸ்வா…?” என்று ராகவ் படபடக்க ,
விஸ்வா அனைத்து விவரங்களையும் சொல்லி , “வலது காலை எடுக்க வேண்டும்..” என்று முடிக்க ,
“ஓ..…! உயிருக்கு ஆபத்து இல்லை என்பது தெம்பைத் தர… , ராகவ் தன்னைச் சமாளித்து கொண்டு, “டாக்டர்களிடம் பேசினீர்களா ? வேறு எதுவும் வழியிருக்கா?”
“வேறு வழியில்லை . எங்கள் குடும்ப டாக்டரையும் பேசச் சொன்னேன்..” என்று அழகப்பன் சொன்ன விவரத்தையும் சொல்ல,
“சரி , இப்போது அடுத்து என்ன செய்ய வேண்டும் விஸ்வா ? “
“உடனடியாக அறுவைச்சிகிச்சை செய்ய வேண்டும் என்கிறார்கள்…” என்று இழுக்க ,
“சரி விஸ்வா . நீங்கள் அங்கே செய்ய வேண்டியவற்றைப் பாருங்கள் . நாங்கள் கிளம்பி வருகிறோம்.”
“மாமாவிடம் கேட்க வேண்டாமா?”
“நான் பார்த்துக் கொள்கிறேன் விஸ்வா . நீங்கள் நடக்க வேண்டியதைப் பாருங்கள் . நாங்கள் வரும் வரை கொஞ்சம் அங்கே ரஞ்சனி கூட இருங்கள் . எப்படியும் இரவுக்குள்ளே சென்னை வந்து விடுவோம் . நீங்கள் அங்கு நடப்பவற்றை அப்டேட் செய்யுங்கள்…” என்று அடுத்து நடக்க வேண்டிய விசயங்களைப் பேசிவிட்டு ,
“அனைத்துக்கும் ரொம்ப நன்றி விஸ்வா…” என்று போனை வைத்தான் .
ராகவ் உடனே சமாளித்தது , அடுத்தடுத்த காரியங்களை யோசித்தது . விஸ்வாவிற்குப் பெரிய ஆச்சரியத்தைக் கொடுத்தது. ‘தன்னால் இப்படிச் சமாளிக்க முடியுமா?’ என யோசித்தான்.
இங்கே ராகவ் ,கடையில் பல வருடங்களாக வேலை பார்க்கும் நம்பிக்கைக்குரிய முத்துவிடம் விசயத்தைச் சொல்லி , கடையைப் பார்த்துக் கொள்ளப் பணித்தான்.
பின்,“அங்கே போய்விட்டு நிலவரம் பார்த்து கூப்பிடுகிறேன்…” என்று கிளம்ப,
“பயப்படாதீங்க தம்பி .பாப்பாவிற்கு ஒன்றும் ஆகாது , மீனாட்சி பார்த்துக் கொள்வாள்…” என்றார் சமாதானமாக
அப்படியே ஒரு வாரத்திற்குத் தேவையானவற்றை எடுத்துக் கொண்டு , ஒருமணி நேரத்தில் கிளம்பும்படி பார்த்துக் கொள்ளுங்கள் அப்பா.”
“சரி ராகவா…”
“நான் கடையில் இருந்து பணம் எடுத்து வந்துவிட்டேன் . நாம் கிளம்புவதற்குள் டிரைவரும் வந்துவிடுவார்.”
“சரி ராகவா…”
பின் விஸ்வாவை அழைத்து, “ரஞ்சனி எப்படி இருக்கிறாள் ? பேச முடியுமா மாப்பிள்ளை?”
“நன்றாக இருக்கிறாள் மாமா , அறுவை சிகிச்சை ஆரம்பித்து அரைமணி நேரம் ஆகிறது.”
“காலைக் காப்பாற்றி விடலாம் தானே மாப்பிள்ளை …….”
அதைக் கேட்டவுடன் விஸ்வா விசும்பினான்.
இதுவரை ஸ்பிக்கரில் விசயத்தைக் கேட்டு கொண்டிருந்த சங்கரன் ,
போனை வாங்கி , “சம்பந்தி நல்லதே நடக்கும் , எதையும் மனசில் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள் . உடனே புறப்பட்டு வாருங்கள்.”
“ நீங்களும் அங்கே தான் இருக்கிறீர்களா சம்பந்தி? இப்போதுதான் கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது . பார்த்துக் கொள்ளுங்கள் . நாங்கள் இரவுக்குள் வந்து விடுகிறோம்.”
“நாங்கள் இங்கே தான் இருப்போம். தைரியமாக இருங்கள்…” என்று போனை வைத்தார் சங்கரன் .
அதற்குள் வீடு வர , கோகிலாவிடம் தட்டுத்தடுமாறி எப்படியோ சொல்லி , விரைவில் கிளம்பினர் .