தேன் சாரல் நீ 9

  மிரட்ட வந்த இருவரையும் பார்த்தால் போலீஸ்காரர்கள் போல இருக்க சுஜா தன் அண்ணன் ஈஸ்வரை பார்க்க, அவன் ஆம் என்பதை போல தலையாட்டினான்.

    மாலினி இனி பிரச்சனை பண்ணமாட்டா என ராசப்பனும், சரசும் உறுதியளிக்க, இப்போது வந்தவர்கள் யாரென முழிபிதுங்கினர்.

    வந்தவர்களை விசாரிக்க சக்திவேலும் சுஜாவின் அப்பாக்களும் செல்ல, அதற்குள் வளர் தன் வார்த்தைகளுக்கு வடிவம் கொடுக்கலானார்.

    சுஜாவை பார்த்து, “இதெல்லாம் உன்னாலதான். நீமட்டும் எம்மகனை கட்டிக்க சம்மதம் சொல்லியிருந்தா இந்நேரம் திருவிழா மாதிரி ஊரையே கூட்டி கல்யாணம் பண்ணியிருக்கலாம்.”

     “அவனும் மாமன் பொண்ணுன்னு உம்மேல உசுரையே வச்சிருக்கான். அத புரிஞ்சிக்காம நீ பண்ணின வேலையால கண்ட பண்ணாட பரதேசியெல்லாம் இப்ப கல்யாணத்தை நிறுத்தப்பாக்குது.”

     “அப்படி என்னடி உனக்கு திமிரு? தாத்தன், அப்பன், பெரியப்பன் சொல்லறத கேக்க முடியாம அப்படி என்ன நெஞ்சழுத்தம் ஒரு பொட்டபுள்ளைக்கு?” என வளர் கத்தலானார்.

    சுஜா சுபாசையும், சக்திவேலையும் ஒரு முறை பார்த்தவள், தன் தாத்தாவை முறைத்தாள்.

     “வளரு! இதென்ன சிறுபுள்ளைத்தனமா பேசற? பாப்பா பேரனுங்க மூனுபேரையும் ஒரே மாதிரிதான் பாக்கறேன்னு சொல்லிடுச்சி. இதுக்கு மேல இதபத்தி எதுவும் பேசாத.” என தாத்தா தர்மசங்கடத்துடன் சொன்னார்.

    “அதெப்படி அத்தைமகன அண்ணனா பாக்க முடியும். அவ ஒழுங்க இருந்திருந்தா எனக்கு இப்படி ஒரு சங்கடம் வந்திருக்குமா?” என வேகமாக வளர் முன்னால் வர

    “என்னோட தங்கச்சி ஒழுங்குக்கு என்ன வந்துச்சி? இப்பவும் எங்க பாப்பா இல்லன்னா உங்க பொழப்பே நாறி போயிருக்கும். உங்களால அதெல்லாத்தையும் கண்டுபிடிக்க முடியல. வந்துட்டிங்க இங்க வக்கணையா வாய் பேசிக்கிட்டு,” என ஈஸ்வர் எகிறிக்கொண்டு வர

    “ஈஸ்வர், அமைதியா இரு” என சுஜா அப்பா சொல்ல

    “இத அங்க உங்க உடன்பொறப்புகிட்ட சொல்லுங்க சித்தப்பா. இங்க என்ன நடக்குது, எப்படி நடக்குதுன்னு தெரியாம நாட்டாமை பண்ண வந்துட்டாங்க உங்க தங்கச்சி.” என கொந்தளிக்க

    “வளரு இது உன் பையன் நிச்சயம் அது உனக்கு ஞாபகமிருக்கா? இல்லையா?” என சுஜாவின் அப்பா கேக்க

    “மேடையில ஒரு பொண்ண நிச்சயம் பண்ணிட்டு சுஜாவை திட்டிக்கிட்டிருக்க. உனக்கு எப்பதான் நிதானம் வரும்? எங்க எத பேசறதுன்னு எப்பதான் உனக்கு புரியும்?” என சக்திவேல் அதட்ட

   வளர் சூழ்நிலை புரிந்து, கூட்டத்தைகண்டு வெட்கி தலைகுனிந்தார். தன் வீட்டில், பிறந்த வீட்டில் இருக்கும்போது பேசுவது போல பேசிவிட்டார்.

    “சுபாஷ் அண்ணா ராகினி அக்காக்காக சப்போர்ட் பண்ண இப்போ அவங்க குடும்பத்தோட சுஜா குடும்பமும் இருக்கு ஞாபகம் வச்சிக்கிங்க.”  என்ற சுஜா, மேலும்

     “எங்கம்மா, பெரியம்மாவை உங்கம்மா பேசறப்போ நீங்க யாரும் பேசாம இருப்பிங்களே அதுபோல இப்பவும் எல்லாரும் அமைதியா இருப்பாங்கன்னு தப்பு கணக்கு போட்டுடாதிங்க.”

    “ராகினி அக்கா, புவனாக்கா குடும்பத்துக்காரங்க உங்ககிட்ட முகதாட்சண்யம் பாப்பாங்க. மாப்பிள்ளை மண்ணாங்கட்டின்னு.. நான் அதெல்லாம் பாக்கமாட்டேன், இப்பவே சொல்லிட்டேன்.”

    “தாத்தா உங்க மககிட்ட சொல்லி வைங்க. எங்கக்காகிட்ட ஏதாவது ஏடாகூடமா பேசிட்டு இருந்துச்சி, அத்தை சொத்தன்னும் பாக்கமாட்டேன், ஐபிஎஸ் அம்மான்னும் பாக்கமாட்டேன் வகுந்துடுவேன்.” என்றாள் வேகமாக சுஜா.

      “பாப்பா மலையிறங்கு,போதும். இனியாவது வளரு வளருதான்னு பாக்கலாம். ஆளுதான் வளந்துகிட்டே போகுது. அறிவு…எங்க வளருது அதுக்கு?” என சுகன் மெதுவாக சுஜாவிடம் பேச

    “அதவிடுங்க. இவங்க யாரு? எதுக்கு நிச்சயத்தை நிறுத்த சொன்னாங்க? இத பாப்போம் முதல்ல.” என சுஜாவிடம் சக்திவேல் வெள்ளைகொடி பறக்கவிட

     “மாமா நிஜமாகவே உங்களால கண்டுபிடிக்க முடியலயா?” சுஜா கேக்க

    “ஆமாம் பாப்பா. எனக்கு இவங்கள பார்த்த ஞாபகம் இல்லை. நீ இவங்கள முன்னபின்ன பார்த்திருக்கியா?” என சக்திவேல் கேக்க

   “ஏய் சுஜா இது உன் வேலைதானா? அங்க வீட்டுல வேணாமுன்னு சொல்லிட்டு இப்படி ஆள வச்சி நிச்சயத்தை நிறுத்தி எங்கள அவமானபடுத்த பாக்கிறியா நீ?” வளர் தவ்விக்கொண்டு வர

    “மாமா இந்த கொசு தொல்லை தாங்கல. இவங்க ஹைட், வெயிட், ஹேர்ஸ்டைல் பார்த்தா தெரியலயா உங்களுக்கு? இவங்க உங்க மகனோட ப்ரெண்ட்ஸா இருப்பாங்க” என சுஜா சொல்ல

     “ நாங்க சுபாஷின் ட்ரெய்னிங் மேட்ஸ். சென்னை எங்க சொந்த ஊரு.” என்றனர் இருவரும்.

    “ப்ரெண்ட்ஸ் ஓகே. ஆனா நீங்க ஏன் பங்ஷன நிறுத்த சொன்னிங்க?” கார்த்தி கேட்க

     “மாமா நாங்கதான் இவங்கள கூட்டிட்டு வந்தோம். வரும்போது இங்க நடக்கிற கூத்தைபத்தி பேசிக்கிட்டே வந்தோம்.”

     “இந்த மாலினி ஏன் இப்படி பண்றான்னு தெரிஞ்சிக்க நாங்க ஒரு டிராமா பண்ணோம். இப்போ அவ செஞ்சதுக்கு காரணமும் தெரிஞ்சிடுச்சி. எல்லாம், எல்லாருக்கும் தெரிந்ததால அவளும் வால சுருட்டி வச்சிட்டு அமைதியா இருப்பா.” என்றான் புவனாவின் அண்ணன் ரமேஷ்.

  விருந்தினர்கள் சலசலவென பேசியபடி விருந்துண்ண சென்றனர். சுபாஷின் நண்பர்கள் சுகன், ஈஸ்வர், சுபாஷிடம் பேசியபடி பந்தி நடக்குமிடம்  சென்றனர்.

     “ மச்சி உனக்கு உண்மையாலுமே லக் கம்மிதாண்டா. இல்லன்னா இப்படி ஒரு பியூட்டிய மிஸ் பண்ணுவியா?” என சுபாஷின் நண்பன் ஒருவன் சொல்ல

    “எங்க அத்தைக்கு லக்கும் அதிகம், ஆயுசும் கெட்டி அதனாலதான் இப்ப இந்த நிச்சயம் நடக்குது, இல்லையா மாமஸ்?” என சுகன் கலாய்க்க, நண்பர்கள் ஆவென பார்த்தனர்.

    “என்ன சுகா சொல்ற? எங்கம்மாவுக்கு ஆயுசு கெட்டியா? ஏன் இப்படி சொல்ற புரியல?” சுபாஷ் நின்று கேட்க

    “ஐய்யய்யோ இத இந்த அண்ணன் உங்ககிட்ட சொல்லலியா? நான்தான் உளறிட்டனா…” என்ற சுகன் சிரித்துக்கொண்டே

    “முதல் முதல்ல உங்க கல்யாணப் பேச்சை எடுத்துக்கிட்டு அத்தை எங்க வீட்டுக்கு வந்தாங்க இல்ல? அப்பவே பாப்பா முடியாதுன்னு சொல்லிடுச்சி.”

    “தாத்தாவும், பாட்டியும் சுஜா  முடியாதுன்னு சொல்லவும் மனசொடஞ்சி போயிட்டாங்க. சொந்தம் விட்டுப் போயிடுமுன்னு”

     “நாங்க ரெண்டு பேரும் தாத்தா, பாட்டியும் வருத்தப்படறாங்க. போனா போவுது சுபாஷ் அத்தானுக்கு வாழ்க்கை கொடுத்துடு பாப்பான்னு அட்வைஸ் பண்ணினோம்.”

    “பட்டுனு எல்லார் முன்னாடியும் சுஜா ‘தாத்தா இப்போ அத்தை இங்க வந்து பேசறதுக்கு நீங்க மௌனமா போறதுபோல என்னால போக முடியாது. ஏதாச்சும் பேசினா பொட்டுனு போட்டுத் தள்ளிடுவேன். உங்க மக வாழ்ந்தது போதும்னு நினைச்சிங்கன்னா சொல்லுங்க. அதுக்கு மேல யோசிக்கிறேன்’ அப்படின்னு சொல்லுச்சி” என்றவன்

    “பாட்டிய பாத்துக்கிட்டே ‘மத்தவங்க மாதிரி நானில்லை. சொன்னா சொன்னத செஞ்சிடுவேன். இதுக்கு மேலயும் சொந்தம் விட்டுப்போககூடாதுன்னு நினைச்சி கல்யாணம் பேசுனா, முகுர்த்த புடவை வாங்கும்போது வளர்மதிக்கு பொறந்தவூட்டு கோடித்துணியும் வாங்கிடுங்க. ஏன்னா அது வாயிக்கும், என் கோவத்துக்கும் அது மறுவீடு வரைக்கும்கூட தாங்காது’ன்னு சொல்லவும் பாட்டி, தாத்தாவும் ஆப் ஆயிட்டாங்க” என்றான்.

      நண்பர்கள் சிரித்தபடி நடந்தனர். ஏதோ பேசியபடி வந்த சக்திவேலும், அவரின் அண்ணனும் இதை கேட்டதும், நின்று

     “சுகா நில்லு. இதனாலதான் உங்க வீட்டுல அமைதியா இருந்தாங்களா? அதுசரி நேத்து யாரு போன் பண்ணிங்க? நீயா, ஈஸ்வரா? அதையும் சொல்லிடு. யாரு கண்டுபிடிச்சிங்க? எப்படி கண்டுபிடிச்சிங்க?” என கேட்டார் சக்திவேல்.

     “மாமா கம்பெனி ரகசியத்தை வெளியில சொல்ல முடியாது . தெரியலன்னா தலை வெடிச்சிடுமுன்னு நினைச்சிங்கன்னா எங்க சங்க தலைவிய புடிங்க போங்க. நான்லாம் எடுபிடிதான். போங்க…போயி கல்யாண வேலையை பாருங்க” சிரித்தபடி சொல்லிச் சென்றான்.

    ராகினி, சுபாஷ் திருமண நிச்சயம் பிரச்சனைகளுக்கு நடுவில் கோலாகலமாக நடந்தேறியது. ராகினியின் அம்மா வழி உறவுகள் எல்லாம் சுபாஷின் வீடு, தோட்டம் என பார்க்க பிரியப்பட, கார், வேன்களில் மங்கலத்திற்கு வந்தனர் அங்காளி, பங்காளிகள் மற்றும் மாமன், மச்சான் எல்லோரும்.

      சுபாஷ் வீட்டினர், ஈஸ்வர் வீட்டினரும் ஈஸ்வர், சுஜாவைத் தவிர மங்கலத்தில் அவர்களை வரவேற்றனர்.

    சுஜாவும், ஈஸ்வரும் தங்கள் வீட்டுக்கு சென்றிருந்தனர். ராகினியின் உறவினர் ஒருவர் குடும்பத்திற்கு சுஜாவை பிடித்துப்போக சக்திவேல் சகோதரர்களை கூட்டிக்கொண்டு சுஜாவின் வீட்டுக்கு வந்தனர்.

    என்ன, எதற்கென தெரிந்துகொள்ள வளரும் வந்தார். வரவேற்று உபசரிப்பு முடிந்ததும், கார்த்தியின் அப்பா, சுஜாவின் தாத்தாவிடம்

     “மாமா, இவங்க நம்ப மருமகளோட நெருங்கின சொந்தக்காரங்க. நம்ம நிச்சயத்துல சுஜா பாப்பாவை பாத்திருக்காங்க. அவங்க வீட்ல எல்லாருக்கும் பிடிச்சிருக்காம்.”

      “இந்த தம்பிதான் மாப்பிள்ளை. பெங்களூருல என்ஜினீயரா இருக்காரு. கை நிறைய சம்பளம். அங்கேயே வீடும் வாங்கிட்டாரு. நல்லா பாருங்க. பாப்பாவையும்  கேளுங்க.”

   “ பாப்பாக்கு பிடிச்சிருந்தா மேற்கொண்டு ஜாதகம் பாத்துட்டு ஆகறதை பேசலாம்”

    “இதபேசத்தான் எங்களை கூட்டிட்டு வந்தாங்க.” என அவர் சொன்னதும், வளரின் வன்மம் தலைதூக்க

     “அதெப்படி மாமா நேத்து படிச்சி முடிச்சி வேலைக்கு போனாதான் கல்யாணமுன்னு சொன்ன பொண்ணுக்கு இன்னைக்கே நீங்க மாப்பிள்ளை பாக்கறீங்க?”

    “படிக்கனும், வேலைக்கு போகனுமுன்னு சொன்னதால வேற இடத்துல பொண்ணு பாத்தோமுன்னு நம்மை கேள்வி கேட்டவங்களுக்கு பதில சொன்னோம். இப்ப உடனே அவளுக்கு கல்யாணம் வச்சா எல்லாரும் நம்மை தப்பா பேச மாட்டாங்களா?”

     “இத என்கிட்ட முன்னாடியே சொல்லி இருந்தா, வேணாம் இந்த சம்பந்தமுன்னு அங்கேயே நான் சொல்லி இருப்பேன்.” என பேச

     “தேங்க் யூ வளர். ஸம்டைம்ஸ் யு ஆர் ப்ரீல்லியன்ட்.” என்றபடி சுஜா தண்ணிர் கொடுத்தாள். இருக்கும் இடம் மறந்து வளரும் ஆத்திரத்தில்,

     “நான் புத்திசாலி தான்டி. அதனாலதான் உன்னை கெஞ்சிகிட்டிருக்காம டக்குனு வேற பொண்ணப்பாத்து எங்காரியத்தை முடிச்சிக்கிட்டேன்.”

    “ஆனா நீ என் மகனதான் கல்யாணம் பண்ணனும். வேற யார்கூடவும் உன் கல்யாணம் நடக்காது. நடக்க விடமாட்டேன்.”

     “என்னை யாருன்னு நினைச்ச? எங்கண்ணன் சொத்து முழுசையும் நாந்தான் ஆளனும். அதுக்கு என்ன வேணுமுனாலும் செய்வேன்.”

      “தப்பிச்சிட்டன்னு மட்டும் நினைக்காத. இத்தனை நாள் நான் பேசறது, செய்யறது எல்லாத்தையும் யாருக்கும் தெரியாம மறைச்ச எனக்கு அதே போல இப்ப உன்னை மடக்கறது கஷ்டமில்லை.” என்றார் வளர்.

     “ரொம்ப துள்ளற வளர். தலைகால் தெரியாம ஆடாத. விழுந்தா எழுந்துக்க முடியாது” என்ற சுஜா, சட்டென அவளின் பெரியம்மாவை அருகில் இழுத்து திருப்பி முதுகை காட்டி,

    “ வளரு இந்த காயம் எப்படி ஆச்சி? தைரியமிருந்தா சொல்லு பாக்கலாம்” என கேக்க

     “என்னடி நீதான் பேரு வச்சவளாட்டம், பேரை சொல்லி பேசற? ஒழுங்க முறை சொல்லி கூப்பிடு” என வளர் பம்ம

    சுஜா “நீ பதில சொல்லு வளரு. அப்புறம் நான் முறைய முறையா விளக்கி சொல்றேன்.” என்க

     “அது அவ சமையல்கட்டுல வேல செய்யறப்போ கனவுல மிதந்துகிட்டே இருந்திருப்பா. அதனால எங்கியாவது சுட்டுகிட்டிருப்பா” என அசால்ட்டா சொல்ல

     “அப்படியா பாட்டி? உங்களுக்கு தெரியுமே நீங்க சொல்லுங்க “ என சுஜா பாட்டியை கேக்க

    பாட்டி திருதிருத்தபடி “அது அத்தை சொன்னது போல தான் குட்டிம்மா. நாங்கதான் அப்பவே இதபத்தி பேசுனோமே உனக்கு மறந்துபோச்சா குட்டிம்மா?” என்க

     “நீங்க சொல்றது உண்மை அப்படின்னு என்னால நம்ப முடியாது. நீங்களும் உங்க பொண்ணும் கிச்சன்ல அப்போ இருந்தது எனக்கு தெரியும். உங்க நியாயம் எப்படி இருக்கும் அப்படின்னும் எனக்கு நல்லாவே தெரியும்” என்றவள்

     “ஏன்னா நான் காயம் ஆகறதையும் பாத்தேன். காயம் பண்ணவங்க ஆடின ஆட்டத்தையும் பாத்தேன். நீங்க அளந்த நியாய தர்மத்தையும் பார்த்தேன். நான் மட்டுமில்லை, போலீஸ் ஆபிசர் மிஸ்டர் சுபாஷும் அதை பாத்தார். இப்ப உண்மைய பேசலாமா மிஸ்ஸஸ். கந்தசாமி?” என நக்கலா கேக்க

    “என்ன நீயும், சுபாஷு பாத்திங்களா? இத்தனை நாளா இதை பத்தி நீங்க எதுவுமே பேசலயே ஏன்?” என பாட்டி பயந்தபடி கேக்க

    “உங்க நியாயத்தை பாத்ததுனால தான்” என்ற சுஜா

    “அண்ணா உங்கள்ல யாராவது ஒருத்தர் உள்ள போயி என் கப்போர்டுல ஒரு வைர நெக்லஸ் இருக்கும். எடுத்துட்டு வாங்க ப்ளீஸ். குவிக்” என அவசரப்படுத்தினாள்.

   ஈஸ்வர் உள்ளே சென்று நகையை கொண்டுவந்து கொடுத்ததும், வளரை ஒரு சுழட்டு சுழட்டி கழுத்துக்கடியில் ஒரு கை கொண்டு வெட்டுபோல தட்டினாள்.

   வளரின் கைகள் நடுங்க உணர்விழந்து போனது. இப்போது அந்த நகையை தூக்கி முகத்தில் அடிப்பது போல நீட்டியவள்,

       “சீக்குவன்ஸ் கரெக்டா ஐபிஎஸ் சார். ஏதாவது மிஸ் ஆயிடுச்சா? நான் தோசை திருப்பிய சூடு பண்ணி முதுகுல இழுத்திருக்கனும் இல்ல…….      ஓ மாத்தி பண்ணிட்டனா மிஸ்ஸஸ். கந்தசாமி?” என்றவள்

      “கை இனிமே வராது. நரம்ப சுண்டி விட்டுட்டேன். அதுக்கு பதிலா இந்த நெக்லஸ்ஸை வச்சிக்குங்க.”   என்க

     “கை போனா என்ன? அஞ்சு லட்ச வைர நெக்லஸ் கிடைச்சிருக்கே. அந்த இத்துப்போன கையால அவ்வளவு எப்போ சம்பாரிக்க முடியும்?  நீங்களே சொல்லுங்க மிஸ்ஸஸ். கந்தசாமி” என சொல்ல வீட்டினர் அனைவரும் மரம்போல நின்றனர். சுஜாவின் பேச்சு அவர்களுக்கு எதையோ உணர்த்துவதுபோல் இருந்தது.

     “என்னோட கைக்கு என்ன ஆச்சி? அம்மா ஏதாவது பண்ணி என்னோட கைக்கு உணர்வுவர செய்யும்மா. கையில்லாம நான் எப்படி இருக்கிறது? சுபாஷூ நீயும் இத படிச்சதான, இப்ப சரி பண்ணுடா” என வளர் கதற

    “நிறைய வருசம் ஆனதால எனக்கு இதெல்லாம் மறந்துபோச்சிம்மா. நானும் விருப்பப்பட்டு முழுமனசோட கத்துக்கிட்டிருந்தா ஞாபகத்துல இருந்திருக்குமோ என்னமோ?” என்ற சுபாஷ்

      “நான் தப்பா தட்டிட்டா, ஏடாகூடமா எங்காவது இழுத்துக்கும். நீங்க சுதி சொல்லறத செய்ங்க. பாப்பாக்கு மட்டுந்தான் இதுக்கு மாத்து தெரியும்” என  சுஜாவை கெஞ்சுவது போல பார்த்தபடி சொன்னான்.

      “குட்டிமா பாட்டி சொல்றேன்டா.  தயவுசெஞ்சி இப்ப இத சரி பண்ணுடா. அத்தைக்கு வலிக்கும்டா. அத்தை பாவம்டா குட்டிமா.” என பாட்டி கெஞ்ச

    “உங்க மகளுக்கு வலிக்கும், ஆனா மருமகளுக்கு வலிக்காது இல்லையா தாத்தா? பெரிய மனுசன் நீங்க நியாயத்தை சொல்லுங்க” என்ற சுஜா

    “அன்னைக்கு ஏதோ ரெண்டு பேரும் சொன்னிங்களே? அத இப்ப இங்க திருப்பி சொல்லுங்க பாக்கலாம்” என முறைத்தாள்.

     “இப்படியே ஒரு மாசம் இருக்கட்டும். இப்ப உங்க மக வெட்டி முறிக்கறது என்ன கெட்டுப்போச்சி? வேளாவேளைக்கு வடிச்சி கொட்ட வேற ஒரு ஆள பாத்துக்கச் சொல்லுங்க உங்க மாப்பிள்ளைய. இல்லன்னா எங்கப்பாங்கள பாத்து ஏற்பாடு செய்ய சொல்லட்டுமா?” என கோபம் கொப்பளிக்க பேச

   “சுஜா என்னம்மா இப்படி பேசற? உனக்கு இதுபோல பேச வருமா கண்ணு?” என சுஜாவின் பெரியப்பா பதற

    “அப்பா, பெரியப்பா இதெல்லாம் என்னோட பேச்சில்ல. எனக்கு வெவரம் தெரிய ஆரம்பிச்சதிலிருந்து உங்க உடன்பிறப்பு இங்க வரும்போது பேசனதுல நூத்துல ஒரு சதவீதம்.”

    “அதுமட்டுமில்ல அண்ணனுக்கு ஆளபாத்து விடறேன்னு உங்க உடன்பிறப்பே கூசாம  சொல்லறப்போ அது புருஷனுக்கு பாத்துவிடச் சொல்ல…. நல்லா கவனிங்க நான் பாக்கறேன்னு சொல்லல, ஆள பாத்துக்கச் சொல்ல நான் ஏன் வெட்கப்படனும்?” என்றவள்

   “போலீஸ்கார், நீங்க அப்பவும் அங்க மரம்போல நின்னிங்க, இப்பவும் நிக்கிறிங்களே இது சரியா?” என்க சுஜாவின் பற்றில்லா பேச்சு சுபாஷை பரிதவிக்கச்செய்தது.