ஆரவாரமில்லாமல் அமைதியாகப் புயல் அடித்துக் கொண்டிருந்தது. அதற்கு முதலில் பலியானது சுந்தரி பாட்டி தான்.அதன் விளைவாக, பல வருடங்கள் மௌனத்திற்கு பிறகு, தன்னுடைய மூத்த மகன், மருமகள், ப்ரீத்தி மூவரைப் பற்றியும் திடீர் திடீரென்று ஏதாவதுயொரு நிகழ்வை நினைவுப்படுத்தி, அதை நிகழ்விற்கு அழைத்து வந்தார்.அதற்குப் பின்னால் இருப்பது ப்ரீத்தியின் கல்யாணம் என்று நினைத்துக் கொண்டு, ராம நாதனின் முடிவினால் வந்த வினை என்று அவரைச் சாடிக் கொண்டிருந்தார் இந்து.பாட்டியின் ப்ரீத்தி புராணத்தைக் கேட்டு பொங்கினாள் கவிதா.உமாவும் ப்ரீத்தியும் தான் முக்கியமாகிப் போகிறார்களென்று ராம நாதனுடன் அவள் சண்டை போட, அவருடைய அம்மாவின் புராணத்தை நிறுத்த முடியாமல், மகளிடம் அவருடைய பாசத்தை ப்ரூவ் செய்ய முடியாமல், வீட்டில் அமைதி குலைந்து கொண்டிருந்தது.
பழையபடி அலுவலகத்திற்கு செல்ல ஆரம்பித்திருந்ததால், அந்த நேரத்தில் உமேஷின் நினைவுகளை ஒதுக்கி வைத்த உமாவிடம்,அவள் வீட்டிற்கு வந்தவுடன், பழிவெறியுடன், அவை ஒட்டிக் கொண்டன.இதென்ன, அவனுடன் அதிகம் பேசியதில்லை, பழகியதில்லை, சில நாள்களாக தான் அவனைத் தெரியும். எப்படி இது சாத்தியம்? வீடு தேடி வந்து அவளைப் பெண் கேட்டவனிடம் ஏற்பாடத ஈடுபாடு, வீடு தேடி பாட்டியைச் சந்திக்க வந்தவனிடம் ஏன் ஏற்பட்டது? என்று தெரியவில்லை.காரணமில்லாமல் ஏற்படும் பிரியம் தான் காதல் என்று அவளுக்குப் புரியவில்லை. கீழே பாட்டியுடன் பேசிக் கொண்டிருந்தவன், மாடியேறி, அவளுடைய மனத்தில் புகுந்து கொண்டது புதிராக இருந்தது.
இரவு நேர ஃஷிப்ட்டில் அவள் வேலை செய்ய ஆரம்பித்த போது, பகல் வேளையில், தூங்க முடியாமல் மனத்தில் தவிப்பு ஏற்பட்டது.அதைப் போக்க வீட்டிலிருந்த சாமான்களைப் பேக் செய்ய ஆரம்பித்தாள்.இனியும் சென்னையில் இருப்பது நல்லதில்லை என்ற எண்ணம் வேரூன்ற, வெளிநாட்டிற்குப் போகும் தினத்தைப் பற்றி எண்ணிய போது, ஆவலிற்குப் பதிலாக அவஸ்தையாக உணர்ந்தாள். அந்த மனக்குழப்பதிலிருந்து விடுபட, சுந்தரி பாட்டியைச் சந்திக்கச் சென்றாள்.
சித்தப்பாவின் வீட்டிற்கு அவள் சென்ற போது பிற்பகல் மூன்று மணி.பாட்டிக்காக பழமுதிர்ச் சோலையிருந்து பழங்கள் வாங்கிக் கொண்டு சென்றாள்.சித்தப்பாவின் வீடு இரண்டு படுக்கையறைகள் கொண்ட கீழ் போர்ஷன்.மாடியில் வீட்டுச் சொந்தக்காரர்கள் குடியிருந்தார்கள்.எப்போதும் போல் அந்த நேரத்தில் உறங்கிக் கொண்டிருந்தார் சுந்தரி.சமையலறையில் இருந்தார் இந்துமதி.ஹாலில் அமர்ந்திருந்தார் ராம நாதன்.
“வா ம்மா.” என்று வரவேற்றார் சித்தப்பா.சித்தி வெளியே வரவில்லை.பாட்டிக்காக வாங்கி வந்திருந்ததை மடியில் வைத்துக் கொண்டு, சித்தப்பாவிற்கு எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தாள் உமா.
அவளுடைய அழைப்பு மணி ஓசையில் விழித்துக் கொண்ட சுந்தரி,’யார் ராமு?” என்று விசாரித்தபடி வெளியே வந்தார்.சுந்தரி பாட்டியின் தோற்றத்தைப் பார்த்து அதிர்ந்தாள் உமா.சில நாள்களுக்குள் ஒருவரின் தோற்றத்தில் இத்தனை பெரிய மாற்றம், சரிவு எப்படி ஏற்படக்கூடும்? என்னவாயிற்று பாட்டிக்கு? வேறு ஏதாவது பிரச்சனையா? ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லவில்லையா?” என்று பல கேள்விகள் உமாவினுள் எழுந்தன.
சிறிது தள்ளாடியபடி, உமா அருகே வந்து, அவளுடைய கையில் இருந்த பையைப் பார்த்து,”பசுபதி தம்பி கொடுத்து விட்டாரா?” என்று கேட்டார் சுந்தரி.
அதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.அவரை ஏமாற்ற விரும்பாமல், ‘ஆமாம்’ என்று பொய் சொல்ல விழைந்தது மனது.அப்போது, அவளருகே இருந்த நாற்காலியில் உட்கார முயன்று, தடுமாறியவரைப் பிடித்து, அவள் அமர்ந்திருந்த நாற்காலியில் உட்கார்த்தி வைத்தாள் உமா.அவளுடைய கையில் இன்னும் அந்தப் பழப் பைஇருந்தது.
உமேஷைப் பற்றி பாட்டி விசாரிக்க, அவன் இந்த உலகத்தில் தான் இருக்கிறானாயென்று அவளுக்குத் தெரியவில்லை.அவளைவிட அமைதியாக இருந்தான்.ஒரு சின்ன செய்தி கூட அவனிடமிருந்து இல்லை. அவளுடைய வீட்டிற்கு அவன் அடிக்கடி வந்து போனது கனவு தானோ என்ற சந்தேகம் எழுந்த போதெல்லாம், அவனுடைய குறுஞ்செய்திகளை வாசித்துக் கொண்டிருப்பாள்.பத்து நிமிடம், இருபது நிமிடம், கால் மணி நேரம், அரைமணி நேரம் என்று இரண்டு வார்த்தைகள் கொண்ட செய்திகளை மணிகணக்காகப் படித்துக் கொண்டிருந்தாள்.அது ‘அன்பு’ என்ற வார்த்தை செய்த மாயம் என்று புரிந்த போது, அந்த இடத்தைப் ‘அச்சம்’ என்ற வார்த்தை கைப்பற்றிக் கொண்டது.அதிலிருந்து விடுதலை பெற, எத்தனை சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரம் வெளிநாடு இல்லை வெளியூருக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு போக முடிவு எடுத்திருந்தாள்.
அவருடைய கேள்விக்கு உமாவின் பதிலை எதிர்பார்க்காமல்,”சுந்தரும் இப்படித் தான் நிறைய பழம் வாங்கிட்டு வருவான்..ப்ரீத்திக்கு ஆரன்ஜ் பழம் ரொம்ப பிடிக்கும்..அவளுக்கு ரோஸ் கலரும் பிடிக்கும்..அந்தக் கலர் டிரெஸ் தான் போட்டுவிடுவேன்.” என்றார் சுந்தரி பாட்டி.
அப்போது, அங்கே வந்த இந்துமதி,”இப்படித் தான் நாள் பூரா ப்ரீத்தியைப் பற்றி பேசிட்டு இருக்காங்க..ஒழுங்காச் சாப்பாடு சாப்பிடறதில்லை..மாத்திரை போட்டுக்கறதில்லை..இந்தாங்க..மதியம் சாப்பிட மறந்திட்டீங்க.” என்று மாத்திரையைச் சுந்தரியின் கையில் கொடுத்தார்.
தண்ணீருக்காக, மாத்திரையுடன் அவரது அறைக்கு மெதுவாக நடந்து சென்றார் சுந்தரி.
“அப்படியே படுத்துக்கோங்க..இவளைப் பார்க்க வரேன்னு திரும்ப நடந்து வந்து, விழுந்து வைக்கப் போறீங்க.” என்றார் இந்துமதி. அதற்கு பின், அந்த வீட்டிலிருந்து வெளியேறும் வரை சுந்தரி பாட்டியைச் சந்திக்கவில்லை உமா.
“என்ன புதுசா பழமெல்லாம் வாங்கிட்டு வந்திருக்க?” என்று உமாவை விசாரித்தார் இந்து.
உமேஷிடமிருந்து தான் இதைக் கற்றுக் கொண்டாள். சாப்பாடு மட்டும் போதாது இதுபோன்று சத்தான பொருள்களும் பாட்டிக்கு வாங்கிக் கொடுக்க வேண்டுமென்று அவளுக்குத் தெரியவில்லை.சித்தப்பாவின் வீட்டில் இந்த வழக்கமெல்லாம் இல்லை.அவளும் இது போன்று வாங்கி உண்டதில்லை.கல்லூரிப் படிப்பு முடிந்து ஹைதராபாத்தில் வேலைக்குச் சேர்ந்த போது பெயிங் கெஸ்ட்டாக தங்கியிருந்தாள்.ஒரு வேளை சாப்பாடு அலுவலக கேண்டினிலும், மற்ற வேளைகளில் அவள் தங்கியிருந்த இடத்தில் அவர்கள் கொடுத்த உணவை தான் உண்டாள்.
வெளியே போய்ச் சாப்பிடும் பழக்கத்தைச் சாதனா தான் அறிமுகப்படுத்தி வைத்தாள்.இங்கே வந்த பின், ஓரிருமுறை மீராவுடன் வெளியே போயிருக்கிறாள்.மற்றபடி, ஒரு வேளைக்கு, ஓர் ஆளுக்கு மட்டும் சமைப்பதால், சிம்பிலாக செய்து கொள்வாள்.திடீர் பசிக்கு சில ஸ்னாக்ஸ் வகைகள் வாங்கி வைத்திருக்கிறாள்.பழமெல்லாம் ஜூஸாகதான் அவளுடைய வீட்டில் கிடைக்கும்.பாட்டிக்குப் பழம் சாப்பிட பிடிக்கும் என்று, உமேஷ் வாங்கி வந்ததை விரும்பிச் சாப்பிட்ட போது தான் அவளுக்குத் தெரிய வந்தது.அதனால் தான் அவளும் இன்று பழங்கள் வாங்கி வந்திருந்தாள்.
“இந்த வயசுலேயும் வேளா வேளைக்குச் சமைச்சுப் போட்டு அவங்களைக் கவனமாப் பார்த்துக்கறேன்..நீ இப்படி வாங்கிட்டு வந்திருக்கறதை யாராவது பார்த்தா, நான் அவங்களைப் பட்டினி போடற மாதிரி நினைச்சுக்குவாங்க..ஏக்கத்திலே இளைச்சுப் போறாங்கன்னு பார்க்கறவங்க கிட்டேயெல்லாம் சொல்லிட்டு இருக்க முடியுமா?..இருக்கறது இரண்டு பேத்தி தான்..ஒரு பேத்தியோட கல்யாணத்தைப் பார்த்தாங்க.. இன்னொரு பேத்தியோடதை பார்க்காம போய்ச் சேரப் போறாங்க..
எத்தனை வருஷமானாலும், எத்தனை தொலைவுலே இருந்தாலும் இரத்தப் பந்தம் விட்டுப் போகுமா?அதுக்கு தான் ப்ரீத்தி கல்யாணத்தை நடத்திக் கொடுத்திடுங்க, கவிதாக்கும் ப்ரீத்திக்கும் இரத்தம் சம்மந்தம் இருக்கு..ஒருத்தருக்கொருத்தர் துணையா இருப்பாங்கன்னு இவர்கிட்டே சொன்னேன்..எங்கே கேட்டார்” என்று கவிதாவையும் ப்ரீத்தியையும் மட்டும் பேத்திகளாக இந்து பேசியது ராம நாதனை வேதனைப்படுத்தியது. அதை வெளிப்படுத்தினால் இல்லை கண்டித்தால், உமாவிற்கு தான் பிரச்சனையாகும் என்பதால் அமைதியாக அமர்ந்திருந்தார்.
அவளுடைய பதினெட்டு வயதிலிருந்து இப்படித் தான் வெளிப்படையாக பேசி வருகிறார் சித்தி. இன்று, சிறிது மாற்றத்துடன், அவர்களுடைய உதிரமான கவிதா, ப்ரீத்தி இருவருக்கும் தான் இனி உறவு. எந்த உதிரமென்று தெரியாமல் உலா வரும் அவளுடன் அவர்களுக்கு எந்தக் காலத்திலும் உறவு ஏற்பட போவதில்லை என்று தெளிவுப்படுத்துகிறார். எத்றகாக இவருடைய பேச்சைக் கேட்டுக் கொண்டு இங்கே இன்னும் உட்கார்ந்திருக்கோம் என்று தோன்றியது. அப்போது,
“நானும் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கறேன்.” என்று அதற்கு மேல் உமாவைப் புண்படுத்தாமல்,இன்னொரு படுக்கையறைக்குச் சென்றார் இந்து.அவர் அங்கிருந்து அகன்றவுடன்,
“ஏன் சித்தப்பா பாட்டி இப்படி இருக்காங்க?” என்று ராம நாதனை விசாரித்தாள் உமா.
“தெரியலை ம்மா..எனக்கும் கவலையா இருக்கு..இரண்டு நாள் முன்னாடி ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டுப் போய்க் காட்டினேன்..எல்லாம் சரியா இருக்குன்னு சொல்றாங்க..உன் வீட்டிலேர்ந்து வந்ததுலேர்ந்து அண்ணன், அண்ணி, ப்ரீத்தி பற்றி தான் ஓயாம பேசிட்டு இருக்காங்க..இவ்வளவு வருஷமா அவங்களைப் பற்றி பேசாம திடீர்னு எப்படி இந்த மாதிரி பேசறாங்கன்னு தெரியலை..எப்போவோ நடந்ததையெல்லாம் இப்போ நடந்த மாதிரி சொல்லிட்டு இருக்காங்க.” என்றார் ராம நாதன்.
“அங்கேயும் கொஞ்ச நாளா ப்ரீத்தி பற்றி பேசிட்டு இருந்தாங்க..நான் நினைச்சேன் பாட்டியைப் பார்க்க அவங்க வந்திட்டு இருந்தாங்க..அதனாலே தான்னு.” என்று உமேஷின் வருகை தான் காரணமோ என்றாள் உமா.
“அம்மாவைப் பார்க்க உமேஷ் தம்பி உன்னோட வீட்டுக்கு வந்து போனது இந்துவுக்குத் தெரியாது..ஆஸ்பத்திரிலே இருந்த அம்மாவைப் பார்க்க அவங்க வீட்லேர்ந்து வந்ததும் அவளுக்குத் தெரியாது.. அன்னைக்குப் ப்ரீத்தியோட மாமாகிட்டே, உனக்கு நல்லது செய்யாம ப்ரீத்தி கல்யாணத்தை நடத்தி வைக்க முடியாது..அதனாலே நான் உயிரோட இல்லைன்னு சம்மந்தி வீட்லே சொல்லிடுங்கன்னு சொல்லிட்டேன்..அப்படிச் சொன்ன பிறகு அவளோட கல்யாணத்துக்கு நம்மளை எப்படி அழைப்பாங்க? இந்து நினைக்கறது நடக்கப் போகறதில்லை.” என்றார் ராம நாதன்.
தன்னைக் காரணம் காட்டி, ப்ரீத்தியின் கல்யாணத்தை நடத்திக் கொடுக்க சித்தப்பாவும் மறுத்திருப்பார் என்று அவள் நினைக்கவேயில்லை. அவர் சொல்வது போல் ப்ரீத்தியின் கல்யாணத்திற்கு அவருக்கு அழைப்பு வருவது சந்தேகம் தான்.இந்தச் சூழ்நிலையில் எப்படி ப்ரீத்தியையும் சுந்தரி பாட்டியையும் சந்திக்க வைப்பது என்று யோசிக்கலானாள் உமா.
என்ன பேசுவது? எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது என்ற யோசனையிலேயே உமாவுடன் பேசாமல் நாள்களை நகர்த்திக் கொண்டு இருந்தான் உமேஷ்.அத்தனை முறை அவளுடைய வீட்டிற்குச் சென்றிருக்கிறான், ஆனால், ஒருமுறை கூட அவளுடன் பேச முயற்சி செய்யவில்லை, அவளைப் பற்றி தெரிந்து கொள்ள முயலவில்லை.அவளைப் பற்றி அவளுடைய சித்தப்பா ராம நாதனின் மூலம் தெரிந்து கொண்டது தான்.சுந்தரி பாட்டியுடன் நிகழ்ந்த சந்திப்புக்களில் எல்லாம், அவனுடைய அத்தை, மாமாவைப் பற்றி தான் அவர் அதிகமாகப் பேசினார்.
இப்பொழுதெல்லாம், அவனுடைய வீடு, சிறைச்சாலை போன்ற உணர்வை அவனுக்கு கொடுத்தது. சென்னைக்கு வந்ததிலிருந்து இந்த வீட்டில் தான் வசித்து வருகிறான். இதுவரை, ஒரு நொடியும் இது போன்ற எண்ணம் வந்ததில்லை.பாதி உறக்கத்தில், நடு இரவில் விழித்ததில்லை.என்னவாயிற்று அவனுக்கு? என்று யோசனை செய்ய, விழிப்பு நிலை, உறக்க நிலை, ஆழ் நிலை என்று அனைத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்த, சொப்பனசுந்தரி, உமா பார்வதி தான் அதற்குக் காரண்மென்று என்று புரிந்தது.அவனுடைய உணர்வுகளைக் கட்டுக்குள் வைக்க முடியாமல், அவனை அறியாமல் அவள் வீட்டிற்குப் போய் விடுவோமோ என்ற பயத்தில், அந்த உணர்விலிருந்து தப்பிக்க, வெகு நாள்களாக தள்ளிப் போட்டதை, செயல்படுத்த முடிவு செய்தான்.
திருச்சியைத் தாண்டி நிதானமான வேகத்தில் வண்டியைச் செலுத்திக் கொண்டிருந்தான் உமேஷ்.அவனுடைய கவனம் மதுரைக்குச் செல்லும் சாலையில் இருந்தாலும், மனம் மட்டும் ‘வெத்தலை பாக்குக் கடைக்குக் வழி கேட்டான்’ என்றவளின் வசமாகியிருந்தது.அவளின் நினைவிலேயே வண்டியைச் செலுத்திக் கொண்டிருக்க, அது அவளைப் போய்ச் சேர்ந்ததோ என்னவோ, அவளே அவனை அழைத்தாள். அவளுடைய அழைப்பை அவனால் உடனே ஏற்க முடியவில்லை.சிறிது நேரத்திற்குப் பிறகு, வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு, அவளை அழைத்தான்.
சில நொடிகளுக்கு, அழைத்தவனும், அழைப்பை ஏற்றவளும் பேசவேயில்லை.அந்தத் தயக்கம், அவர்களின் மனச்சலனம், உறவு நிலை மாற்றத்தைப் பறைசாற்றியது.அதிலிருந்து முதலில் மீண்ட உமேஷ்,”சொல்லு.” என்றான்.
அந்த ஒரு வார்த்தையில் தன்னை மீட்டுக் கொண்ட உமா,”பிஸியா நீங்க?” என்று விசாரித்தாள்.
“மதுரைக்குப் போயிட்டு இருக்கேன்..அதான் உடனே உன் அழைப்பை ஏற்க முடியலை..வண்டியை நிறுத்திட்டு ஃபோன் செய்யறேன்.” என்றான்.
மதுரைக்குப் போய்க் கொண்டிருக்கிறான் என்று தெரிந்தவுடன்,”இப்போ தான் சித்தப்பா வீட்டுக்குப் போயிட்டு வரேன்..பாட்டி நல்லா இல்லை..ப்ரீத்தி நினைவா இருக்காங்க..அவளுக்கு ஆரன்ஜ் பழம் பிடிக்கும்..ரோஸ் கலர் டிரெஸ் பிடிக்கும்னு சொல்றாங்க..அவங்க மனசு ப்ரீத்திக்காக ஏங்குது…
எந்த சம்மந்தமுமில்லாத எனக்காக இரத்த சம்மந்தம் இருக்கற ப்ரீத்தியை விட்டுக் கொடுத்தாங்க..இத்தனை வருஷமா அவளைப் பார்க்கமா இருந்திட்டாங்க..இப்போ அவளைப் பார்க்காமலேயே போயிடுவாங்களோன்னு எனக்குப் பயமாயிருக்கு..ப்ளீஸ்..எனக்காக ப்ரீத்தியை அழைச்சிட்டு வந்து பாட்டிகிட்டே காட்டறீங்களா?” என்று கேட்டாள் உமா பார்வதி.
உள் நோக்கம், உதிரம், உறவு அடிப்படையில் உயிர்களுக்கு உதவி செய்யும் இந்த உலகத்தில், சுந்தரி பாட்டிக்காக உதவி கோரிய, உன்னதமான உள்ளம் கொண்ட உமா பார்வதி, ‘பசுபதியாக’ உமேஷ் பசுபதியை ஆட்கொண்டாள்.