அத்தியாயம் – 11

வெகு திருப்தியாக சாப்பிட்ட பின் அந்தக் காரக் குழம்பை ஒரு டிஃபன் பாக்ஸில் பேக் செய்யச் சொன்னான் உமேஷ்.  சாதாரணச் சுவையுடன் இருந்த குழம்பை ‘ஓஹோ’ என்று உமேஷ் புகழ்ந்தவுடன் குழம்பிப் போனாள் உமா பார்வதி.  ‘நிஜமாவே சுவையா இருந்திச்சா..நமக்குத் தான் தெரியலையா?’என்று ஒரு சொட்டு குழம்பை உள்ளங்கையில் விட்டு, நாவால் சுவைத்துப் பார்த்துக் கொண்டிருந்த போது, சமையலறைக்குள் நுழைந்த உமேஷ்,

“பேக் செய்திட்டேயா?” என்று கேட்டான்.

திடீரென்று, அவனுடைய குரல் கேட்டவுடன், தடுமாற்றம் ஏற்பட, அதை மறைத்துக் கொண்டு,”அதை மட்டும் எப்படிச் சாப்பிடுவீங்க? நீங்களே சாதம் வைச்சுப்பீங்களா?” என்று கேட்டாள்.

மேஜை மீதிருந்த தண்ணீர் பாட்டிலிருந்து ஒரு கிளாஸில் தண்ணீரை ஊற்றியபடி,”என் வீட்டுக் கிட்சன்லே இன்ஸ்டன்ட் டீ, காபி தான் கிடைக்கும்..மற்றதெல்லாம் வெளியேயிருந்து தான் வரும்..ரொம்ப நாளா வீட்டோட ஆள் வைச்சுக்கோன்னு அம்மா சொல்றாங்க..எனக்குத் தேவைப்படலை..என் கம்பெனிலே கேண்டீன் இருக்கு..அங்கே இருந்தா அங்கே, இல்லை எங்கே  இருக்கேனோ அங்கே..இன்னைக்கு இங்கே.” என்று சொல்லிச் சிரித்தான்.

அதில் பட்டாம்பூச்சி போல் படபடத்தது அவளது மனது.  அது அவளுடைய கை நடுக்கத்தில் வெளிப்பட, அவளை நிதானப்படுத்திக் கொண்டு, ஒரு டப்பர்வேர் டப்பாவில் குழம்பை பேக் செய்தாள்.  தண்ணீர் கிளாஸுடன் வெளியேறு முன்,”பாட்டியோட மாத்திரை எடுத்திட்டு வந்திடு..அவங்களுக்குத் தூக்கம் வருது..நானும் கிளம்பறேன்.” என்றான்.

நேரே பாட்டியின் அறைக்குச் சென்றவள், மாத்திரையை அவரிடம் கொடுத்து விட்டு, காரக்குழம்பு டப்பாவை உமேஷிடம் கொடுத்தாள். அதை வாங்கிக் கொண்டு,”பாட்டி, உங்களோட காரக் குழம்பு சூப்பர்..அதான் பேக் செய்து எடுத்திட்டு போறேன்.” என்றான்.

அதைக் கேட்டு அகமகிழ்ந்த சுந்தரி பாட்டி,”அடுத்த முறை” என்று ஆரம்பித்தவுடன்,”அவங்க அனுப்பின லிஸ்ட்லேர்ந்து எது செய்யணும்னு அவங்கிட்டே கேட்டுக்கறேன்..அது எப்படிச் செய்யணும்னு உங்ககிட்டே கேட்டுக்கறேன்..நீ தூங்குங்க..மாத்திரை போட்டாச்சு.” என்று சொன்னவளின் குரலில் கொஞ்சம் போல் பொறாமையோ என்று உமேஷிற்குச் சந்தேகம் வந்தது. 

அடுத்து வந்த நாள்களில் அந்தச் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள உமேஷிற்கு வாய்ப்பு அமையவில்லை. சுந்தரி பாட்டியைச் சந்திக்க சென்றாலும், அவர்களுடன் சேர்ந்து உணவு அருந்துவதற்கு நேரம் கிடைக்கவில்லை.  ஒரு நாள், காலை ஏழு மணிக்கு, ‘அரைமணி,’ என்று உமேஷிடமிருந்து மெஸேஜ் வர, அப்போது தான் உறக்கத்திலிருந்து விழித்திருந்தாள் உமா.  உடனே எதுவும் சமைக்க முடியாது, அவன் வந்த பின், அவனிடமே கேட்டுக் கொள்ளலாமென்று, காலை காப்பியுடன் வரவேற்பறையில் அமர்ந்து கொண்டாள். சில நிமிடங்கள் கழித்து எழுந்து வந்த சுந்தரி பாட்டியிடம் சற்று நேரத்தில் உமேஷ் வரப் போவதை தெரிவித்தாள்.

“இப்போ என்ன பண்றது உமா? இன்னும் டிஃபன் எதுவும் செய்யலையே…தம்பிக்கு மட்டும் கொஞ்சம் போல சேமியா உப்புமா செய்திடறேயா?”

“அவங்க சாப்பிட வரலை..உங்களைப் பார்த்திட்டுப் போக தான் வராங்க பாட்டி..நான் சமையல் செய்ய இரண்டு மணி நேரம் தேவைப்படும்னு அவங்களுக்குத் தெரியும்..டென்ஷனாகாதீங்க.” என்றாள்.

அதே போல், காஞ்சிபுரத்திற்குப் போகும் வழியில், காப்பி கூட வேண்டாமென்று மறுத்து விட்டு, கால் மணி நேரம் போல் சுந்தரி பாட்டியுடன் பேசி விட்டுச் சென்றான் உமேஷ்.

அதற்கு பின், காலம் நேரம் பார்க்காமல், இருபது நிமிடம், பத்து நிமிடம் என்று நினைத்த போதெல்லாம், அவனுக்கு வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம், பாட்டியுடன் நேரத்தைச் செலவழித்தான்.  அவர்கள் இருவரும் என்ன பேசினார்களென்ற விவரம் உமாவிற்குத் தெரியவில்லை.  அவன் வரும்போதெல்லாம் அவள் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள் இல்லை வீட்டு வேலை, சமையல் வேலை என்று பிஸியாக இருந்தாள்.  அவளைத் தொந்தரவு செய்யாமல், பல சமயம் வரவேற்பறை வரை, சில சமயம் பாட்டியின் படுக்கையறை வந்து சென்றான்.  

உமேஷின் கார் இருபத்தி நாலு மணி நேரமும் உமாவின் வீட்டு வாசலில் நிற்பது போல் ஈஷ்வருக்குப் பிரமை உண்டானது.  ஒரு நாள், காலை வேளையில், வாசல் வராண்டாவில் அமர்ந்தபடி அவன் காப்பி அருந்தி கொண்டிருந்த போது, உமேஷ் வந்து இறங்கினான்.  அதே போல், முற்பகல் வேளை, பிற்பகல் வேளை, மாலை வேளை என்று அவன் எந்த ஷிஃப்ட்டில் வேலைக்குச் சென்றாலும், ஷாப்பிங் சென்றாலும், வீட்டிற்கு வரும் போது இல்லை வீட்டிலிருந்து கிளம்பும் போது உமேஷின் கார்  உமாவின் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தது. யார் இவன்? என்ற கேள்வி பூதாகரமாக வளர்ந்து கொண்டு வர, அதன் வளர்ச்சியைத் தடை செய்யும் வழியைத் தேடி அலைந்து கொண்டிருந்தான் ஈஷ்வர். 

உமாவின் வீட்டிற்கு உமேஷ் அடிக்கடி வந்து போனது சுந்தரி பாட்டியின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. மகிழ்ச்சியாகக் காணப்பட்டார்.  அவன் வந்த தினங்களில், அவனிடமிருந்து ஆரம்பித்த பாட்டியின் பேச்சு, அவனுடைய அத்தைக்கு சென்று அப்படியே ப்ரீத்தியில் போய் முடிந்தது.  அதன் விளைவாக, பாட்டியுடன் ப்ரீத்தியைப் பற்றி தான் பேசுகிறான் என்று நினைத்துக் கொண்டாள் உமா.  சுந்தரி பாட்டியிடம் தெரிந்த மன மாற்றம் நல்லதா? கெட்டதா? என்று அவளுக்குத் தெரியவில்லை.  முன்பை விட சந்தோஷமாக தான் தெரிந்தார்.  ஆனால், அந்த சந்தோஷத்திற்குக் காரணம் ப்ரீத்தியாக இருந்தால் அது பிரச்சனையில் போய் முடியும் என்பதை யார் அவருக்குக் விளக்குவது? என்று யோசனையானாள்.  

உமாவின் வீட்டிற்கு உமேஷ் வந்து போவது ராம நாதனுக்கும் தெரியும்.  அவனுடைய வருகை அவருடைய அம்மாவிற்குச் சந்தோஷதைக் கொடுத்ததால் அவரும் அந்த விஷயத்தில் தலையிடவில்லை.  வீட்டிலிருந்தபடி உமா வேலை பார்த்ததால் அவளே அனைத்தையும் சமாளிக்கட்டுமென்று மாமியாரை எட்டிக்கூட பார்க்கவில்லை இந்துமதி. அவரால் முடிந்த போது, மாலை ஏழு மணி போல் வந்து, அந்த இரவை அவருடைய அம்மாவுடன் கழித்து விட்டு, மறு நாள் காலை ஏழு மணிக்கு அவருடைய வீட்டிற்குக் கிளம்பிச் சென்றார் ராம நாதன். அதனால், உமேஷிற்கும் அவருக்கும் சந்திப்பு நிகழவில்லை.

மருத்துவமனையில் அவருடைய அம்மாவிற்கும் பார்வதி அம்மாவிற்கும் நடந்த சந்திப்பைப் பற்றி அவருடைய மனைவி இந்துவிற்குத் தெரியப்படுத்தவில்லை ராம நாதன்.  எனவே, ப்ரீத்தியின் குடும்பத்தினருடன் தொடர்பு வைத்துக் கொள்ள கிடைத்த அருமையான வாய்ப்பை இழந்ததை எண்ணி அவருடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தார் இந்து. உமாவின் வீட்டிற்கு உமேஷ் வந்து போவது அவருக்குத் தெரிய வந்தால் என்ன ஆகுமோ என்ற பயத்தில், அது இந்துவிற்குத் தெரிய வரும் போது தெரியாதது போல் நடந்து கொள்ள முடிவு செய்தார் ராம நாதன். இத்தனை கவலைகளுக்கு நடுவே, ப்ரீத்தியின் கல்யாணம் நல்லபடியாக நடக்க வேண்டுமென்றும் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்திருந்தார்.

அவரைப் போலவே ப்ரீத்தியும் அவளுடைய கல்யாணம் நல்லபடியாக நடக்க வேண்டுமென்று கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தாள். அவளுடைய கல்யாணத்தில் என்ன பிரச்சனை? தேதி குறிக்க ஏன் தாமதமாகிறது? என்று தெரியாமல், ஜெயந்தியிடம் அவளுடைய பயத்தைப் பகிர்ந்து கொண்டாள் ப்ரீத்தி. சென்னையிலிருந்து திரும்பிய பின், எல்லாம் தானாக நடக்குமென்று அவள் அமைதியாக இருக்க, அவளுடைய வருங்கால கணவன் விஜய்க்கு அத்தனை பொறுமை இல்லை. ‘ஏன் எதுவும் நடக்கலை?’ என்று தினமும் கேட்டு கேட்டு அவளைத் தொல்லை செய்து கொண்டிருந்தான்.  அந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று அவளுக்குத் தெரியவில்லை.  ‘தெரியலை’ என்று ஒருமுறை உண்மை பேசிய போது,’ஏன்? உனக்கு கல்யாணத்திலே இஷ்டமில்லையா? அதான் தெரிஞ்சுக்கலையா?” என்று கேட்டு அவளை அழ வைத்து விட்டான்.

வீட்டுப் பெரியவர்களிடம் இதைப் பற்றி நேரடியாக பேச முடியாமல், உமேஷின் வருகைக்காக காத்திருந்து காத்திருந்து ஏமாந்து போனவள், கடைசியாக, ஜெயந்தியைக் கைப்பேசியில் அழைத்து அவளுடைய மனத்தில் இருந்ததைக் கொட்டினாள். ப்ரீத்தியைச் சமாதானம் செய்து விட்டு, உடனே, அவளுடைய அம்மாவை அழைத்தாள் ஜெயந்தி.  அழைப்பை ஏற்ற மீனாவிடம்,

“என்ன ம்மா நடக்குது வீட்லே? நிச்சயம் செய்திட்டு, கல்யாணத்தை நடத்தாம..ஏன்னு காரணம் சொல்லாம..ப்ரீத்தி பாவம் ம்மா..விஜய் அவக்கிட்டே கோபப்படுறான்.” என்றாள்.

“சென்னைக்குப் போயிட்டு வந்த பிறகு வீட்லே அவ கல்யாணத்தைப் பற்றி பேச்சே இல்லை..அவளோட சித்தப்பா உடம்பு சரியில்லாதவர்..வேற ஏற்பாடு செய்துக்கோங்கன்னு சொல்லிட்டார்..உன் அப்பாவும் தாத்தாவும் தான் என்னென்னு முடிவு செய்யணும்..இதிலே நான் என்ன செய்ய முடியும்?”

“அதை அவக்கிட்டே சொல்லியிருக்கலாமே..ஏன் எந்த விவரமும் சொல்லலை?” என்று ஜெயந்தி கோபப்பட, மீனாவிற்கும் கோபம் வந்தது.

“எனக்கும் யாரும் எதையும் விவரமாச் சொல்லலை..அவ சித்தப்பாவைப் பார்த்திட்டு வந்தனைக்கு நைட்டு அவளோட அந்தப் பாட்டிக்கு உடம்பு சரியில்லாம போயிடுச்சு..” என்று அவர் பேச்சைத் தொடருமுன்,

“என்ன ம்மா சொல்ற?ப்ரீத்திக்குப் பாட்டி இருக்காங்களா? என்று அதிர்ச்சியடைந்தாள் ஜெயந்தி.

“ம்ம்..இங்கே நம்பர் கொடுத்தவங்க குடும்ப விவரம் சொல்லலை..சித்தப்பா மட்டும் இருக்கார்ன்னு நினைச்சோம்..எங்களுக்கும் இப்போ தானே தெரிஞ்சுது..அந்தம்மாவை  ஆஸ்பத்திரிலே சேர்த்திருந்தாங்க..உமேஷ் தான் உன்னோட அப்பாவையும் பாட்டியையும் கூட்டிட்டுப் போனான்..அங்கே என்ன நடந்திச்சுன்னு தெரியலை..அன்னைலேர்ந்து உன்னோட பாட்டி வேற உலகத்திலே இருக்காங்க..வேற ஏற்பாடு செய்யாலாம்னு சொன்ன உன்னோட அப்பாவும் அதுக்கு பிறகு அதைப் பற்றி பேசவே இல்லை..அவங்களே இந்த விஷயத்திலே ஈடுபாடு இல்லாம இருக்கும் போது  நான் என்னத்தைச் செய்ய முடியும்? உமேஷ் தான் ஏதாவது செய்யணும்..அவனை வீட்டுக்கு கூப்பிட்டு கூப்பிட்டு அலுத்துப் போயிட்டேன்..வரேன்..வரேன்னு சொல்லி ஏமாத்திட்டு இருக்கான்..கல்யாணத்தை நல்லபடியா முடிக்கணும்னு நானும் கவலைலே இருக்கேன்.” என்று கோபத்தில் ஆரம்பித்து வேதனையில் முடித்த மீனா, உமாவைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லவில்லை.

சில நொடிகள் அமைதியாக இருந்த ஜெயந்தி,”அம்மா, அவளோட அந்தப் பாட்டியைப் பற்றி ப்ரீத்திகிட்டே ஏன் இன்னும் சொல்லலை?” என்று கேட்டாள்.

“என்னை ஏன் கேட்கற? உன் பாட்டியைக் கேளு.” என்று சொல்லி விட்டு அழைப்பைத் துண்டித்தார் மீனா.

“என்னை ஏன் காரணம் கேட்கறீங்க விஜய்?” என்று ப்ரீத்தியின் வருங்கால கணவனிடம் கோபமாகப் பேசிக் கொண்டிருந்தான் உமேஷ்.

“ப்ரீத்திக்கு எந்த விவரமும் தெரியலை..உங்க வீட்டு ஆளுங்க சென்னைலேர்ந்து திரும்பி வந்து நிறைய நாளாயிடுச்சு..ஆனா இன்னும் கல்யாண தேதி குறிக்கறதைப் பற்றி பேசவேயில்லை..அதான் இன்னைக்கு உங்ககிட்டே கேட்டேன்..அவளோட சித்தப்பாக்குக் கல்யாணத்தை நடத்தி வைக்க முடியாதுன்னு சொல்றீங்க..ஏன்னு காரணம்  கேட்டேன்.” என்றான்.

“ஏன்னு உங்க வீட்லே கேளுங்க..ப்ரீத்தியைப் பற்றி எல்லாம் தெரிஞ்ச பிறகு, அவ பசுபதி வீட்டுப் பொண்ணுன்னு தானே கல்யாணம் செய்துக்க ஒத்துக்கிட்டீங்க..திடீர்னு உங்க வீட்டு ஆளுங்க அவளோட அப்பா ஸைட்லேர்ந்து கன்னிகாதானம் செய்யணும்னு சொன்னாங்க..உடனே அவளோட அப்பா குடும்பத்தைத் தேடிக் கண்டு பிடிச்சு, நீங்க சொன்னதைச் சொன்னோம்..அவர் முடியாதுன்னு சொல்லிட்டார்..இந்த மாதிரி கண்டிஷன் ஏன் போட்டாங்கன்னு உங்க வீட்டு ஆளுங்களை நீங்க தான் கேட்கணும்.” என்றான்.

அதைக் கேட்டு மௌனமானான் விஜய்.  அதோடு அழைப்பைத் துண்டிக்க நினைத்த உமேஷ்,”ப்ரீத்தி உண்மை தான் சொல்லியிருக்கா..அவளுக்கு ஏன்னு காரணம் தெரியாது..அவளோட சித்தப்பா மறுத்தது அவளுக்குத் தெரியாது..இனி நீங்க இதைப் பற்றி அவகிட்டே பேசாதீங்க.”  சொல்லி விட்டு அழைப்பைத் துண்டித்தான்.

விஜய் பேசிய வார்த்தைகள், தொனி உமேஷிற்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. ப்ரீத்திக்கு அவளுடைய அப்பா வழி உறவுகளைப் பற்றி ஒன்றுமே தெரியாது.  அவனுக்கே இப்போது தான் தெரிய வந்திருக்கிறது.  அவர்களைப் பற்றி முழுமையாக தெரிய வந்தால், உமாவைப் பற்றி தெரிய வந்தால், ராம நாதன், இலகுவாக, அவர் இறந்து விட்டாரென்று பொய்ச் சொல்ல சொன்னதைச் சொன்னால், அவள் எப்படி உணருவாள் என்று தெரியவில்லை. இத்தனை ஆண்டுகள், இருளில் இருந்தது போல், எதையுமே ப்ரீத்திக்குத் தெரியப்படுத்தாமல், அவளுடைய திருமணத்தை நடத்த அவனுக்கு மனம் வரவில்லை.  அப்படிச் செய்தால் அவனிற்கும் அவனது குடும்பத்தினருக்கும் வித்தியாசமில்லாமல் போய்விடும். எனவே, அவனுக்குத் தெரிந்ததை ப்ரீத்தியிடம் பகிர்ந்து கொள்ள முடிவு செய்தான் உமேஷ்.

வீட்டிலிருந்து வேலை செய்யும் ஆப்ஷன் முடிவிற்கு வந்ததால், அடுத்த நாள், சுந்தரி பாட்டியைச் சித்தப்பாவின் வீட்டில் கொண்டு விட திட்டமிட்டிருந்தாள் உமா. 

“நாளைக்கு ராம் வீட்டுக்குப் போறேன்னு பசுபதி தம்பிகிட்டே சொல்லிடு..நான் போன பிறகு அந்தத் தம்பி என்னைத் தேடி இங்கே வரப் போகுது.” என்றார் சுந்தரி.

இதுவரை ஒரேயொருமுறை தான் அவனை அழைத்துப் பேசியிருக்கிறாள்.  வீட்டிற்கு வரும் எண்ணமிருந்தால், அவன் தான், குறுஞ்செய்தி மூலம் அவளைத் தொடர்பு கொள்வான்.

பாட்டி சொன்னதை அப்படியே அவனுக்குச் செய்தியாக அனுப்பி வைக்க, அரைமணி என்று அவனிடமிருந்து பதில் வந்தது. இத்தனை தாமதமாக அவர்களைச் சந்திக்க வந்ததேயில்லை.  

“வராங்க..நீங்க பேசிட்டு இருங்க..எனக்கு வேலை இருக்கு.” என்று அவள் சொன்ன போது மணி ஏழரை.  எட்டு போல் வந்தான் உமேஷ்.  எப்போதும் போல், சுந்தரி பாட்டியுடன் சில நிமிடங்கள் பேசி விட்டு, அவன் புறப்பட, மாடியிலிருந்து இறங்கி வந்தாள் உமா. 

“கிளம்பறேன்..அடுத்தமுறை பாட்டி இங்கே வரும் போது எனக்குத் தகவல் கொடு.” என்றான்.

உடனே,“எனக்கு அங்கே போக வேணாம்னு இருக்கு.” என்றார் சுந்தரி பாட்டி.

இதுபோல் ஒரு நாளும் பேசியதில்லை.  உமேஷைச் சந்திக்க முடியாது என்ற ஆதங்கத்தில் பேசுகிறாரென்று புரிந்து கொண்டு, அமைதியாக இருந்தாள் உமா.

அதைப் புரிந்து கொண்ட உமேஷும், “சரி..போக வேணாம்..என்னோட என் வீட்டுக்கு வந்திடுங்க.” என்றான்.

உடனே,“அதெல்லாம் வேணாம் தம்பி..ஏதோ தோணிச்சு..சொன்னேன்.” என்றார்.

“ராம் அங்கிள்கிட்டே என்னோட நம்பர் இருக்கு…எனக்கு மிஸ்ட் கால் கொடுக்கச் சொல்லுங்க..நான் ஃபோன் செய்து உங்களோட பேசறேன்.” என்றான் உமேஷ்.

அதற்கு சுந்தரி பாட்டியிடமிருந்து பதிலில்லை.  உமேஷை மறுபடியும் எப்போது சந்திப்போமென்ற எண்ணத்தில் அவர் முகம் என்னவோ போலானது. அதே எண்ணம் தான் உமாவிற்கும். ஆனால், அவளுடைய முகத்தில் அது தெரியவில்லை.

சுந்தரி பாட்டியின் அருகில் அமர்ந்த உமேஷ்,”இப்படி சோகமா இருந்தா நல்லா இல்லை..கொஞ்சம் சிரிங்க மை சுந்தரி.” என்றவுடன், உரக்கச் சிரித்தார் சுந்தரி பாட்டி.

உமேஷுடன் பாட்டிக்கு இத்தனை நெருக்கமா? என்று வியப்புடன் அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தாள் உமா.

“குட்..உடம்பைப் பார்த்துக்கோங்க..நான் கிளம்பறேன்.” என்று விடைபெற்றுக் கொண்டான் உமேஷ்.  அவனை வழியனுப்ப கேட் வரை வந்தாள் உமா.  எதிர்வீட்டில், இருட்டில் அமர்ந்தபடி, அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த ஈஷ்வரை இருவரும் கண்டு கொண்டனர்.

காரில் ஏறி அமர்ந்த உமேஷ் அதை உயிர்ப்பிக்காமல், அமைதியாக, அவளுடைய கேள்விக்காக காத்திருந்தான். ஏன் அமைதியாக அமர்ந்திருக்கான்? என்று அவனைப் புதிராக உமா பார்க்க, “என்ன சொன்னான்னு தெரிஞ்சுக்கணுமா?” என்று ஈஷ்வரை பார்வையில் சுட்டிக் காட்டி கேட்டான். 

“வேணாம்.” என்று தெளிவாகப் பதில் கொடுத்தாள் உமா.

“ஏன்?”

“பதில் தெரியும்.” என்றாள்.

அதைக் கேட்டு அவளை ஆச்சரியமாகப் பார்த்தவன்,”அவன்கிட்டேயே கேட்டிட்டேயா?” என்று கேட்க,

‘இல்லை’ என்று தலையசைத்தவளின் உதடுகளில் மர்மப் புன்னகை.

அவன் உனக்கு முக்கியமில்லை என்கிற போது, அவன் என்னுடன் பேசியதும் முக்கியமில்லை என்பதை அவளுக்குப் புரிய வைப்பதற்காக தான், சம்மந்தமேயில்லாத பதிலைக் கொடுத்தான்.  ஆனால், அவள் மீண்டும் அதே கேள்வியுடன் வர, இரண்டாவது முறை, சிறிது நேர யோசனைக்குப் பின், உபயோகிமில்லாத பேச்சு, வானிலையைப் பற்றியது என்றான்.  ஈஷ்வர் அற்பமானவன், அவனுக்கும் எனக்கும் இடையே நடந்த உரையாடல் அற்பமானதுயென்று அவள் புரிந்து கொண்டு விட்டாள் என்று அவனுக்குப் புரிந்தது.  அதை சோதனை செய்ய,

அவனிடம் அவள் கேட்டதைப் போல்,“அவன் என்ன சொன்னான்?” என்று உமாவிடம் கேட்டான் உமேஷ்.

“வெத்தலை பாக்குக் கடைக்கு வழி கேட்டான்.” என்ற உமா பார்வதியின் பதிலில், இவள் அற்புதமானவள் என்று உணர்ந்தான் உமேஷ் பசுபதி.