“நாளைக்கு நீ சொன்ன டெம்பில் ரொம்ப ரஷ்ஷா இருக்கும். என்னால அங்க மாஸ்க் இல்லாம வர முடியாது. உனக்கு என்னைத் தான பார்க்கணும். இங்கயே பாரு.ஆனா அதுக்கப்பறம் எதுவா இருந்தாலும் பேசி முடிவு பண்ணிக்கலாம். கோபப் படக்கூடாது” என்று அவன் மாஸ்க்கை கழட்ட போக,
“என்ன பண்றிங்க ஜெய் அண்ணா?” என்ற மித்ராவின் குரலில் அவளை யோசனையுடன் பார்த்தான் ஜெய்.
“மித்ரா பேசாம வந்து உட்காரு” என்று கணேஷ் பல்லைக் கடிக்க,
“எழுந்திருங்க பிளீஸ்” என்றாள் மித்ரா.
“என்னாச்சு?” என்றான்.
“அடுத்த ஸ்டாப் வரப்போகுது. எங்களுக்கு தெரிஞ்சவங்களா ஏறுவாங்க. யாராவது பார்த்தா அவளோட சேர்த்து எங்களுக்கும் தான் பிரச்சனை. நீங்க எதுவா இருந்தாலும், நாளைக்கு கோவில்ல வச்சு பேசிக்கங்க” என்றாள்.
அவளை முறைத்த ஜெய்,
“எங்க விஷயத்துல தலையிடுறது இதுவே லாஸ்ட்டா இருக்கணும் மித்ரா.” என்றவனை ஆராவை முறைத்தபடி எழுந்து சென்று விட்டான்.
“எருமை, அங்க பாரு. நம்ம பக்கத்து வீட்டு ஆன்ட்டி. அப்ப இருந்து உன்னைத்தான் திரும்பி திரும்பி பார்த்துட்டு இருக்காங்க” என்றாள் மித்ரா.
“எங்க?” என்ற ஆரா பயத்துடன் தேட,
“முன்னாடி சீட்ல தாண்டி இருக்காங்க. பேசாம வா” என்றாள்.
“நிஜமாவே பார்த்துட்டாங்களா?” என்றாள் மீண்டும்.
“அப்படித்தான் நினைக்கிறேன்.” என்ற மித்ரா அதற்கடுத்து எதுவும் பேசவில்லை.
அவர்கள் நிறுத்தத்தில் அவர்கள் இறங்கிவிட, என்றுமில்லாமல் ஜெய் இன்று அவளைத்தான் ஏக்கமாய் பார்த்திருந்தான். அவள் கண்களால் விடைபெற, அவனுக்கோ அவளை அங்கு விட்டு செல்ல மனமேயில்லை.
“ஆரா நீ வீட்டுக்குப் போ. எனக்கு மித்ரா கூட கொஞ்சம் பேசணும்” என்றான் கணேஷ்.
“எனக்கு உன்கிட்ட பேச ஒண்ணுமில்லை கணேஷ்” என்றாள் எரிச்சலுடன்.
ஆரா இவர்களை கவனிக்கும் மனநிலையில் எல்லாம் இல்லை. அவள் அவளுக்கான உலகத்தில் ஜெய்யின் நினைவுகளோடு வீட்டை நோக்கிச் சென்றாள்.
“என்ன ட்ரை பண்ற மித்ரா? இத்தனை நாள் அவளுக்கு எதுவும் நடந்துடக் கூடாதுன்னு அவளுக்கு அட்வைஸ் பண்றன்னு நினைச்சேன். ஆனா, அப்படி இல்லை போல தெரியுதே?” என்றான்.
“வேற எப்படி தெரியுது?” என்றாள் கோபமாய்.
“ஆமா, நீ சொன்ன நம்ம பக்கத்து வீட்டு ஆன்ட்டியும் நம்ம கூடத்தான இறங்கியிருக்கணும்? எங்க அவங்களை ஆளைக் காணோம்?” என்றான் நக்கலாய்.
“அது.. வந்து அவங்க தஞ்சாவூர் கூட போகலாம்.” என்றாள்.
“பொய் சொல்லாத மித்ரா. எனக்கென்னாவோ அவங்க ரெண்டு பேரையும் நீ பிரிக்க ட்ரைப் பண்றியோன்னு தோணுது” என்றான் அவள் முகத்தையே பார்த்தபடி.
“பார்த்து பேசு கணேஷ். அவங்க லவ்வை பிரிச்சு நான் என்ன பண்ண போறேன். ஆரா என்னோட பெஸ்ட் பிரண்ட். அவளுக்கு இப்படி ஒரு விஷயத்தை நான் எப்படி செய்வேன். உனக்கு என்னமோ ஆகிடுச்சு” என்றாள் மித்ரா வேகமாய்.
“ஆனது எனக்கா இல்லை உனக்கான்னு போகப் போகத் தெரியும். ஆனா ஒன்னு, நீ பண்ற எதுவும் சரியில்லை. நாளைக்கு அவங்க ரெண்டு பேர் மட்டும் மீட் பண்ணட்டும். நீ போக வேண்டாம்.” என்றான்.
“ஆரா என்னையும் தான் வர சொல்லியிருக்கா. தனியா போனா அவ பயப்படுவா. நான் இருந்தா தான் சரியா வரும்” என்றாள் மித்ரா.
“போக வேண்டாம். அப்படி போற மாதிரி இருந்தா நானும் கூட வருவேன்.” என்றவன் அவளை யோசனையுடன் பார்த்துவிட்டு சென்றான். செல்லும் அவனையே பார்த்திருந்தவளுக்கு மனதில் வெறுமையான உணர்வுகள்.
மறுநாள் அவனுக்காகவே பார்த்து பார்த்து அலங்காரம் செய்து கொண்டாள் ஆரண்யா. மனம் முழுவதும் ஏதோ அவனை அன்று தான் முதன் முதலில் பார்க்கப் போவதைப் போன்ற இனிமையான படபடப்பு. அது தான் உண்மையும் கூட. அன்று அவளுக்கு அனைத்தும் அழகாய் தெரிந்தது. அவளைப் பார்த்த ஆதிரா கூட அதிசயித்தாள்.
“இந்த ட்ரெஸ்ல ரொம்ப அழகா இருக்க ஆரா” என்று அவள் தன்னை மறந்து கூறியிருந்தாள்.
“தேங்க்ஸ் ஆதிரா” என்ற ஆரா, அவளைக் கட்டிக் கொள்ள, அவளின் செய்கைகள் அனைத்தையும் வித்யாசமாய் பார்த்திருந்தாள்.
“சரித்தான் காதல் கத்தரிக்காய் முத்திடுச்சு போல. என்னைக்கா இருந்தாலும் கடைவீதிக்கு வந்து தான ஆகணும். அன்னைக்கு இருக்கு இவளுக்கு. எப்படியோ வீட்ல இவளால ஒரு பெரிய பிரச்சனை இருக்கு.” என்று மனதிற்குள் குதூகலித்துக் கொண்டாள் ஆதிரா.
மித்ரா அவளுக்காக காத்திருக்க, கிளம்பி வந்த ஆராவைப் பார்த்தவள் வாய் பிளந்து நின்றாள்.
“என்னடி அப்படி பார்க்குற?” என்றாள் சிரிப்புடன்.
“செம்மையா இருக்க ஆரா” என்ற மித்ரா அவளுக்கு கன்னத்தில் முத்தம் வைக்க, அதைப் பார்த்து முகத்தை சுளித்தாள் ஆதிரா.
“என்ன ஸ்பெஷல் இன்னைக்கு. என் பொண்ணு இவ்வளவு அழகா இருக்கா” என்றார் காயத்ரி.
“இன்னைக்கு வெள்ளிக் கிழமை கோவிலுக்கு போகலாம்னு” என்று இழுத்தாள் ஆரா.
“சரி சரி பார்த்து போயிட்டு வாங்க. நானும் வரட்டுமா?” என்றார்.
“இல்லம்மா..! நாங்க அப்படியே காலேஜ் கிளம்பிடுவோம்” என்றாள் ஆரா.
மனம் முழுவதும் மகிழ்ச்சியுடன் சென்றாள் ஆரா. கண்டிப்பாய் வருவதாய் கூறியிருந்தான் ஜெய். அவர்களுடன் கணேஷும் இணைந்து கொண்டான்.
“நீயேன்டா வர்ற?” என்றாள் ஆரா.
“ஏன் நானெல்லாம் சாமி கும்பிடக் கூடாதா?” என்றான்.
“சரிசரி கோவிச்சுக்காத” என்ற ஆராவைப் பார்த்தவனின் முகம் மென்மையாய் மாறியது. அமைதியே உருவாய் இருந்தவளை, எதற்கெடுத்தாலும் பயம் கொள்ளுபவளை காதல் எப்படி மாற்றி இருக்கிறது என்ற எண்ணம் தான் அவனுக்கு.
கோவிலில் சென்று ஆசையுடன் ஆரா காத்திருக்க, நேரம் ஆனதே தவிர ஜெய் வரவில்லை.
“என்னாச்சு? ஏன் வரலை?” என்று தவித்தவள், அவனுக்கு கால் செய்ய முற்பட, அது நாட் ரீச்சபிள் என்று வந்தது.
வந்துவிடுவான், வந்துவிடுவான் என்று அவளும் மேலும் ஒரு மணி நேரம் காத்திருக்க, ஜெய் வரவேயில்லை.
“நான் தான் சொன்னேன்ல. நீ முகத்தை பார்க்கனும்னு சொன்னதும் பயந்திருப்பான். உன்னை பிளான் பண்ணி ஏமாத்தியிருக்கான்” என்றாள் மித்ரா.
“வாயை மூடு மித்ரா. அவ என்ன நிலமையில இருக்கா? இப்ப இப்படித்தான் பேசி வைப்பியா? அவருக்கு என்ன பிரச்சனையோ? நீயா எதையாவது கற்பனை பண்ணிட்டு பேசாத” என்றவன், தன் மொபைலில் இருந்து ஜெய்க்கு அழைக்க அப்போதும் அதே நாட் ரீச்சபிள் தான்.
“ஆரா, கண்டிப்பா ஜெய் அண்ணா வராம இருக்க மாட்டார். அப்படி வரலைன்னா அவருக்கு ஏதோ பிரச்சனைன்னு நினைக்கிறேன். இல்லைன்னா ஏதாவது முக்கியமான வேலையா கூட இருக்கலாம்” என்றான் கணேஷ்.
“சும்மா அவளை உசுப்பேத்தாத கணேஷ். என்ன அவசரம்ன்னாலும் ஒரு கால் பண்ணி சொல்லக் கூடவா முடியாது. அட்லீஸ்ட் ஓரு மெசேஜ் அனுப்பியிருக்கலாமே? ஏன் பண்ணலை? நேத்து வரைக்கும் நீ இல்லைன்னா நான் இல்லைன்னு உருகிட்டு இப்போ இப்படி அம்போன்னு விட்டுட்டு போனா என்ன அர்த்தம்?” என்றாள் மித்ரா படபடவென்று.
“ரெண்டு பேரும் கொஞ்சம் நிறுத்துறிங்களா? கொஞ்ச நேரம் அமைதியா இருங்க பிளீஸ்” என்றவளுக்கு அழுகையில் உதடுகள் துடிக்க,
“ஆரா அழாதே பிளீஸ்” என்றான் கணேஷ்.
“காலேஜ்க்கு டைம் ஆச்சு” என்றாள் மித்ரா.
“நான் காலேஜ்க்கு வரலை” என்றாள் கமரிய குரலில்.
“லூசாடி நீ. எக்ஸாம் நடக்குது. இப்ப என்ன? அவன் இப்ப வரலைன்னா ஒருவேளை பஸ்ல வரதுக்கு சான்ஸ் இருக்குல்ல. வா அங்க பார்த்துக்கலாம்” என்று மித்ரா சொல்ல, அதுவும் சரியென்று பட்டது அவளுக்கு.
ஆனால் பேருந்து மட்டும் தான் வந்தது. அவள் கண்கள் ஏக்கத்துடன் தேடிய ஜெய் வரவில்லை.
கடமைக்கு எக்ஸாம் எழுதி முடித்தவள், மாலையில் திரும்பி வரும் போதும் அவனை எதிர்பார்க்க, ஜெய் அப்போதும் வரவில்லை. அதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீர் எல்லாம் கடகடவென்று கன்னத்தில் இறங்க, துடைத்துக் கொண்டே வந்தாள்.
“ஆரா ஜெய் அண்ணா கண்டிப்பா கால் பண்ணுவார். இல்லண்ணா வந்துடுவார். நீ அதையே நினைச்சு பீல் பண்ணாத. நான் நாளையில இருந்து திருச்சியிலையே தங்கிடுவேன். ஏதவாதுன்னா கால் பண்ணு. நான் வந்துட்டு போறேன்” என்றவன்,மித்ராவைப் பார்க்க, அவளோ அவனை சட்டை செய்யாமல் நடந்து கொண்டிருந்தாள்.
“ஜெய் உனக்கு கால் பண்ணா என் கிட்ட பேச சொல்றிய கணேஷ்” என்றாள் ஆரா.
“கண்டிப்பா. ஜெய் அண்ணா உனக்குப் பண்ணாம எனக்கு பண்ண மாட்டார். எதைப் பத்தியும் யோசிக்காம மிச்சம் இருக்குற எக்ஸாமை எழுதி முடி.” என்றவன் ஒரு பெருமூச்சுடன் சென்று விட்டான்.