அன்று கல்லூரியில் இருந்து திரும்பி வரும் போதும் ஜெய் அவளை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. அவனுடன் பேச வேண்டும் என்பதற்காகவே பின்னால் ஏறியிருந்தாள். அவன் வீம்புடன் முன்னால் சென்று நின்று கொண்டான். கணேஷ் இவர்களின் நாடகத்தை பார்த்துக் கொண்டு தான் இருந்தான்.
ஆராவால் அவனின் பாராமுகத்தை தாங்கவே முடியவில்லை. பேருந்து என்றும் பார்க்காமல் அழுது விட்டாள். அவள் அழுவதைப் பார்த்த மித்ராவிற்கு எரிச்சலாய் வந்தது.
“அழாதே ஆரா. எனக்கு ஆத்திரமா வருது. இதுக்குத்தான் நான் அப்பவே சொன்னேன். இந்த லவ் எல்லாம் வேண்டாம். நமக்கு இதெல்லாம் செட் ஆகாது. நாம மட்டும் இருக்குறப்போ சந்தோஷமா இருந்தோம். என்னைக்கு இந்த ஜெய் அண்ணா இந்த பஸ்ல வந்தாரோ அன்னைக்குப் பிடிச்சது அனர்த்தம்” என்று கறுவிக் கொண்டிருந்தாள் மித்ரா.
கணேஷ் மித்ராவையே யோசனையுடன் பார்த்துக் கொண்டு வந்தான்.
“அப்படித்தான் பேசுவேன். தனியா ஹோட்டலுக்கு கூப்பிட்டவன் தான? வேற எப்படி பேச முடியும்? பெரிய இவன்? ஒரு கண்டக்டருக்கு இவ்வளவு திமிரு ஆகாது” என்றாள் மித்ரா.
“வாயை மூடு மித்ரா. அவர்கிட்ட அப்படி என்ன திமிரை கண்ட? அவர் ஒன்னும் ஹோட்டலுக்கு அவரா வர சொல்லலை. நான் பார்க்கனும்னு சொன்னதால தான் அப்படி சொன்னார். நீயா கற்பனை பண்ணிட்டு பேசுறதை நிறுத்து” என்ற ஆரா, ஜன்னல் புறம் திரும்பிக் கொண்டாள்.
“ஹேய் சாரி ஆரா. நான் அந்த அர்த்ததுல சொல்லலை” என்று உடனே தணிந்தாள் மித்ரா.
ஆரா அவனின் நம்பருக்கு அழைப்பெடுக்க, அதை உடனே கட் செய்து விட்டான் ஜெய்.
“என்ன பிரச்சனை ஆரா?” என்றான் கணேஷ் புரியாமல்.
“அதைத் தெரிஞ்சு நீ என்ன பண்ண போற?” என்றாள் மித்ரா.
“நான் உன்கிட்ட கேட்கலை மித்ரா. இது நீ சம்பந்தப்பட்ட பிரச்சனையும் இல்லை. நான் ஆராகிட்ட தான் கேட்டேன்” என்றான் கணேஷ் முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு.
நடந்ததைக் கூறிய ஆரா,”எனக்கு அவரை மீட் பண்ணனும் கணேஷ். அவர்கிட்ட எல்லாத்தையும் தெளிவா பேசணும். மித்ரா என்னை ஏதேதோ சொல்லி குழப்புறா. அவளும் என்னோட நல்லதுக்குத்தான் சொல்றா. எனக்கு யாரை நம்புறது என்ன பண்றதுன்னே புரியலை” என்றாள் அமைதியான குரலில்.
“எல்லாத்தையும் விடு. உன்னோட உள்ளுணர்வு ஒன்னு சொல்லும்ல, இது சரி,இது தப்புன்னு. இப்போ அது என்னன்னு சொல்லுது?” என்றான் கணேஷ்.
“ஜெய் நல்லவர்ன்னு சொல்லுது. அவர் எனக்கானவர்ன்னு சொல்லுது. இதோ அவர் என்கூட பேசலைன்னா, எனக்கு ஏதோ பாரமா இருக்கு. அவர் என்னை அவாய்ட் பண்றதை என்னால தாங்கவே முடியலை” என்றவளுக்கு கண்ணீர் வர,
“கண்ணைத் துடை ஆரா. இதென்ன புதுப் பழக்கம் பஸ்ல உட்கார்ந்து அழறது? யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க?” என்றான் கணேஷ்.
அதுவரை கணேஷ் போனில் லைனில் இருந்த ஜெய் காலை கட் செய்துவிட்டு ஆராவிற்கு அழைத்தான்.
“கணேஷ் ஜெய் தான் கால் பண்றார்” என்றாள் வேகமாய்.
அவளுக்கு அருகில் இருந்த மித்ராவைப் பார்த்தவன்,
“கொஞ்ச நேரம் எழுந்திரு மித்ரா” என்று எழுப்பிவிட்டு ஆராவின் அருகில் அமர்ந்து கொண்டான் கணேஷ்.
மித்ரா பல்லைக் கடிக்க,
“என்ன முறைப்பு? அவ எனக்கும் குளோஸ் பிரண்ட் தான். நானும் உட்காரலாம் தப்பில்லை. இன்னைக்கு ஒரு நாள் நீ அடுத்த சீட்ல உட்காரு. இல்லைன்னா நின்னுட்டே வா” என்றான் எரிச்சலுடன்.
போனை எடுத்த ஆரா,
“ஜெய்” என்றாள் கமறிய குரலுடன்.
“இப்போ எதுக்குடி பஸ்ல உட்கார்ந்து ஒப்பாரி வச்சுட்டு இருக்க? இன்னொரு தடவை நீ அழறதைப் பார்த்தேன், நான் மனுஷனாவே இருக்க மாட்டேன். நீ என்ன குழந்தையா? ஒவ்வொருத்தரும் உன்னைத் தாங்கிட்டே இருக்கணும்னு நினைக்கறியா? சொந்த புத்தி இருக்குல்ல. அதை வச்சு மட்டும் யோசி, புரியுதா? என்னைப் பார்த்தா ஒருத்திய லவ் பண்ணி ஏமாத்தி விட்டுட்டு போற தேர்ட்ரேட் பொறுக்கி மாதிரியா இருக்கு?” என்றான் அடக்கப்பட்ட கோபத்துடன்.
“நான் தான் உங்களைப் பார்க்கவே இல்லையே?” என்று முனுமுனுப்புடன் வெளிவந்தவளின் குரலில் தன்னை மீறி புன்னகைத்திருந்தான் ஜெய்.
“ஹலோ” என்றாள்.
“இருக்கேன் சொல்லுடி” என்றான்.
“நான் வீட்டுக்கு போயிட்டு கால் பண்றேன்” என்றாள்.
“யாரு நீதான?” என்றான் நக்கலாய்.
“நாளைக்கு வருவீங்க தான?” என்றாள்.
“உண்மையா லவ் பண்ணாத்தான வர சொன்ன? நான் தான் பொய் ஆச்சே. மேடம் அப்படித்தான இப்போ நினைச்சுட்டு இருக்கீங்க? அப்பறம் என்னை எதுக்கு எதிர்பார்க்குற?” என்றான் நக்கலாய்.
“யாரும் வர வேண்டாம். நான் யாரையும் பார்க்க வேண்டாம்” என்று கோபத்துடன் சொன்னவள் போனை கட் செய்துவிட்டு, கலங்கிய கண்களை மறைக்க, வேடிக்கைப் பார்ப்பதைப் போல் திரும்பிக் கொண்டாள்.
‘அரைவேக்காடு அரைவேக்காடு. என்ன சொல்ல வர்றேன்னு புரிஞ்சுக்காம அது இஷ்ட்டத்துக்கு ஒன்னு பண்ணுது’ என்று தலையை கோதியவனுக்கு, அந்த உணர்வு கூட அழகாய் இருந்தது.
‘என்னமோ பண்ணிட்டா என்னை இந்த அரைவேக்காட்டுக்காரி’ என்று நினைத்தவன் தன்னை நினைத்து தானே சிரித்துக் கொண்டான். பார்க்காததைப் போல் அவளைப் பார்த்தான். அவளோ ஜன்னல் பக்கம் தீவிரமாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, ஜன்னல் காற்றில் ஏற்கனவே கலைந்திருந்த முடிக்கற்றைகள் அவள் முகத்தில் விழுந்து விளையாடிக் கொண்டிருக்க, அவனுக்கு அவள் ஓவியமாய் தெரிந்தாள். அவளோ வீம்புடன் முகத்தைத் திருப்பவே இல்லை.
“அழகான இம்சைடி நீ.” என்று நினைத்தவனுக்கு இப்போதே அவள் அருகில் செல்ல வேண்டும் என்று தோன்ற, பேருந்தின் உள்ளே ஒரு நிமிடம் நோட்டம் விட்டான். அன்று கூட்டம் அதிகம் இல்லை. அதிலும் பின்னாடி சீட்டில் ஆட்கள் இல்லாமல் இருக்க அதுவே வசதியாகிப் போனது.
தங்கள் அருகில் வந்தவனைப் பார்த்த கணேஷ் எழுந்து கொள்ள, அவளை உரசிக் கொண்டே அமர்ந்தான் ஜெய்.
அவளுக்கு உள்ளே உடல் வெடவெடக்க, பயத்தில் சுற்றும் முற்றும் பார்த்தாள்.
“யாரும் இல்ல. பயப்படதா” என்றான் ஜெய்.
“இங்க எதுக்கு வந்திங்க? எழுந்து போங்க முதல்ல” என்றவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
“ஆரா..!” என்றான் கமரிய குரலில். அவள் திரும்பாமல் போக்குக் காட்ட, அவளின் கையை பிடித்தவன், தன் கரங்களுக்குள் அடக்கி, அவள் கையில் முத்தமிட, அவன் இப்படி முத்தமிடுவான் என்று எதிர்பார்க்காத ஆராவிற்கு பதட்டம் தொற்றிக் கொள்ள, சட்டென்று கைகளை உருவிக் கொண்டாள். இவர்களையே பார்த்துக் கொண்டிருந்த மித்ராவிற்கு பற்றிக் கொண்டு வந்தது.
“என்ன பண்ணிட்டு இருக்கான் இவன்?” என்ற ரீதியில் அவள் கணேஷை முறைக்க, அவனோ மித்ராவின் நடவடிக்கைகளை கண்காணித்துக் கொண்டிருந்தான்.
“என்ன பண்றிங்க ஜெய்?” என்ற ஆராவிற்கு வாயில் இருந்து காத்து தான் வந்தது. அவனின் நெருக்கம் அவளுக்குள் புது விதமான ரசாயன மாற்றங்களை நிகழ்த்த, நெருங்கவும் முடியாமல், தவிர்க்கவும் முடியாமல் தவித்துப் போனாள்.
“என்னை நம்புடி. என்னை நம்பாம நீ பேசுறது எனக்கு ரொம்ப பெயின் புல்லா இருக்கு. எனக்கு உன்னோட சிச்சுவேஷன் புரியுது. என்னை எனக்காகவே நேசிச்ச ஆராவை நான் மிஸ் பண்றேன்டி” என்றான் ஆழ்ந்த குரலில்.
“அப்படி இல்ல ஜெய்” என்றவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
“நான் அந்த செயினை கழட்டக் கூடாதுன்னு சொல்லியிருந்தேன். அதையும் கழட்டி வச்சிருக்க. கையில நான் போட்ட ரிங்கும் இல்லை. லவ் பண்ணா இப்படி ப்ராப்ளம்ஸ் எல்லாம் வரும்னு தெரிஞ்சு தான லவ் பண்ண. இப்ப மட்டும் ஏன் இவ்வளவு யோசிக்கிற?” என்றான்.