அத்தியாயம் 01

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சிக்கு அருகேயுள்ள செங்குளம் என்னும் கிராமம் திருவிழா கோலம் பூண்டு நின்றது‌.

ஊர் முழுவதும் ஆங்காங்கே மரங்களின் உச்சியிலும், வீட்டு மொட்டைமாடிகளிலும், எலக்ட்ரிக் கம்பங்களிலும் கட்டிவைத்திருந்த ஒலிப்பெருக்கிகள்,

‘முத்துமாரி அம்மனுக்கு திருநாளாம்,

அவள் முகத்தழகை காணவரும் ஒருநாளாம்,

சித்திரைப்பூ மாலையிலே தோரணமாம்,

அவள் சிங்கார தேரில் வர ஊர்வலமாம்…’

 என்று, எல்ஆர் ஈஸ்வரியின் தெய்வீகக் குரலில் பாடலை உச்சஸ்தாயியில் ஒலிபரப்பிக் கொண்டிருந்தன.

ஆமாம்… செங்குளம் கிராமத்தின் காவல் தெய்வமான அம்மனுக்கு, அன்று திருவிழா. அதை முன்னிட்டே அந்த கிராமம் கோலாகலமாக தன்னை அலங்கரித்துக் கொண்டு நின்றது.

ஊரின் எல்லா தெருக்களிலும் சீரான இடைவெளியில் கட்டப்பட்டிருந்த ட்யூப் லைட்டுகளும், சீரியல் பல்ப் அலங்காரங்களும், மின்விளக்கு அலங்கார கோபுரங்களும், மாலை மயங்கி இரவு தடம் பதிக்கும் நேரத்திற்காக காத்துக் கிடந்தன.

அந்த பொன்மாலைப் பொழுதில் வாடாமல்லிக் கலரில் சட்டையும், அதற்கு இணையான வேஷ்டியும் உடுத்திக் கொண்டு, மைனர் போல தெருவில் கையை வீசியபடி நடைபோட்டுக் கொண்டிருந்த இளவட்டம் ஒன்று,

“லேய்… அந்த பிகே குரூப்ஸ் பயலுவ கமுக்கமா ஊர் என்ட்ரன்ஸ்ல ஆர்ச் போட்டுட்டானுவ பாத்தியா?” என்று கைபேசியில் அங்கலாய்த்தது.

அதற்கு, மறுமுனையில் இருந்தவன் என்ன சொன்னானோ, “மண்ணாங்கட்டி.. இதுக்கு மேல நாமளும் ஆர்ச் போட்டா, அவனுங்களைப் பார்த்து நாம காப்பி அடிச்சிட்டோம்னு சொல்லுவானுங்க லேய்” என்று எரிச்சல் குரலில் சொன்ன இளவட்டம்,

 “இருக்கட்டும்… இருக்கட்டும்… அந்த குரூப்ல உள்ள எவனாவது எங்கிட்ட சலம்பல கூட்டட்டும், இன்னைக்கு அவனுங்களுக்கு தான்டியேய் திருவிழா” என்று மீசையை முறுக்கி விட்டபடியே வீரவசனம் பேசினான்.

கிராமங்களில் திருவிழா என்றாலே இளைஞர்கள் தங்கள் நண்பர்கள் குழுவோடு இணைந்து விதவிதமான போஸ்களில் நின்று கொண்டு, திருவிழாவிற்கு வரும் பக்தர்களை வரவேற்பது போன்ற வாசகங்களை தாங்கிய ப்ளக்ஸ் பேனர்களை அமைப்பது பிரபலமாகிவிட்ட காலகட்டம் இது.

இந்த இளைஞனோடு சேர்ந்த நண்பர்கள் பட்டாளம் எப்போதும் போல ப்ளக்ஸ் பேனரில் தங்கள் கவனத்தை செலுத்த, இன்னொரு நண்பர்கள் கூட்டணியோ, ஊரின் நுழைவாயிலில் ‘செங்கை நகர் அம்மன் கோயில் திருவிழாவிற்கு வருகை தரும் பக்தகோடிகளை வருக… வருக… என்று வரவேற்கும் பிகே குரூப்ஸ்’ என்ற வாசகத்தை தாங்கிய நாலைந்து அலங்கார வளைவுகளை அமைத்து விட்டார்கள். அதனாலேயே ஆற்றாமையில் இந்த இளங்காளை துள்ளுகிறது.

இத்தனை பரபரப்புக்கும் காரணமான அம்மன் கோயில், ஊருக்கு மத்தியில், வாழைமரத் தோரணங்களாலும், மாவிலைகளாலும் அலங்கரிக்கப்பட்டு திருவிழா காணும் கோவிலுக்கான அத்தனை அம்சங்களோடும் கலகலப்பாக நின்றிருந்தது.

அதுவும், இரவு அன்னதானம் என்ற நிலையில், அங்கே சமையல் வேலைகள் மும்முரமாக நடைபெற்று கொண்டிருந்தது. அதை மேற்பார்வை செய்தபடியே, அங்குமிங்கும் நடைபோட்டுக் கொண்டிருந்தார் கோவில் தர்மகர்த்தாவும், ஊர் நாட்டாமையுமான குமாரசாமி.

நல்ல வளர்ந்த ஆகிருதியான தோற்றம், முற்றும் நரை காணாத அடர்ந்த கேசம், முகத்துக்கு பொருத்தமான பெரிய மீசை என்று கம்பீரமாக இருந்தார் குமாரசாமி.

அவர் அணிந்திருந்த மினிஸ்டர் வொயிட் வேஷ்டியும் சட்டையும் அவருக்கு கூடுதல் கம்பீரத்தைக் கொடுத்தாலும், மனிதர் கொஞ்சம் சிரித்த முகமாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் வருவதை தவிர்க்க முடியவில்லை.

“இப்போ மணி ஐந்தரை ஆச்சு. ஏழரை மணிக்கு பூசையை ஆரம்பிச்சு, எட்டு மணிக்காவது பந்தி பரிமாற ஆரம்பிச்சிடணும். அதுக்குள்ள சமையலை முடிச்சிடுவீங்களா தவசிப்பிள்ளை?” கையில் கட்டியிருந்த டைட்டன் வாட்ச்சை பார்த்தபடியே, தலைமை சமையல்காரரிடம் கேட்டார் குமாரசாமி.

“அதெல்லாம் முடிச்சிடலாம் ஐயா.” பவ்யமாக பதில் வந்தது சமையல்காரரிடமிருந்து. ‘தவசிபிள்ளை’ என்பது அந்த பகுதியில் சமையல்காரரை குறிக்கும் வட்டார வார்த்தை.

“கடைசி இலை வரைக்கும் அப்பளம் வைக்கணும். அப்பளக்கட்டு போதாதுன்னா இப்பவே கூடுதலா வாங்கிக்கோங்க. கடைசி நேரத்துல வந்து தலையை சொறிஞ்சிகிட்டு நின்னா எனக்கு பிடிக்காது.” நாட்டாமை குமாரசாமியிடமிருந்து வார்த்தைகள் கறாராகவே வந்து விழுந்தது.

குமாரசாமியின் கோபமும், கறாரான பேச்சும் அந்த ஊரே அறிந்தது‌. அப்படியிருக்கையில் வருடந்தோறும் கோவிலுக்கு சமையல் செய்ய வரும் அந்த மனிதருக்கு தெரியாதா என்ன? எனவே பவ்யமாக தலையை மட்டும் ஆட்டிக்கொண்டார்.

குமாரசாமி கறார் பேர்வழியே தவிர, உழைத்தவர்களின் வியர்வை காயும் முன், அவர்களுக்குரிய ஊதியத்தை எண்ணி கையில் கொடுத்து விடும் நல்ல முதலாளி. ஆனால் பேசிய தொகையிலிருந்து ஒற்றை ரூபாயைக் கூட அதிகமாக அவர் கையிலிருந்து வாங்கிவிட முடியாது.

குமாரசாமியிடம் இருக்கும் ஒரே பலவீனம் அவருடைய கோபம் தான். மற்றபடி அப்பழுக்கில்லாத குணநலன்களை உடைய நல்ல மனிதர்.

“எலேய் மாரியப்பா… பந்தி செயர் எல்லாம் வந்திடிச்சா?” என்று கேட்டபடியே குமாரசாமி அங்கிருந்து நகர்ந்தார்.

 அவர் வீட்டிலோ பள்ளியிலிருந்து திரும்பி வந்திருந்த அவரின் கடைக்குட்டி மகள் ஜெயந்தி, “ம்மா… எனக்கு சாயங்காலம் வைக்கிறதுக்கு பிச்சிப்பூ பிடிக்கும்னு உங்களுக்கு தெரியும் தானே? அப்புறம் ஏன் மல்லிப்பூ மட்டும் வாங்கி வச்சிருக்கீங்க?” என்று, சமையலறையில் நின்று கொண்டிருந்த தாயிடம் மல்லுக்கு நின்றாள்.

“அது தான் வைப்பேன், இதுதான் வைப்பேன்னு பொட்டப்பிள்ளைக்கு என்னடி பிடிவாதம் வேண்டி கிடக்கு? குடுக்கிறதை வச்சிட்டு தூரப்போவியா?” பொங்கி வந்த பாலில் டீத்தூளை போட்டபடியே சிடுசிடுத்தார், நாட்டாமை குமாரசாமியின் மனைவியும் ஜெயந்தியின் அம்மாவுமான தெய்வானை.

மெல்லிய பார்டர் வைத்த புடவை கட்டி, தாலிச்சரடோடு கூடுதலாக ஒரு செயின், கழுத்தை ஒட்டி சிறு அட்டியல், கைக்கு நான்கு வளையல்கள் என்று திருவிழாவிற்கான அலங்காரம் தெய்வானையிடமும் தெரிந்தது.

குமாரசாமி, தெய்வானை தம்பதிகளுக்கு இரண்டு ஆண்பிள்ளைகள், இரண்டு பெண்பிள்ளைகள் என்று மொத்தம் நான்கு புத்திரச் செல்வங்கள்.

மூத்தவள் ஆனந்தி. இருபத்தி நான்கு வயது. கடந்த வருடம் தான் திருமணம் முடிந்திருந்தது. அடுத்தது ராகவன். தென்காசியில் ஒரு கல்லூரியில் எம் எஸ்சி கணிதம் இரண்டாம் வருடம் படிக்கிறான். மூன்றாவதாக கதிரேசன். திருநெல்வேலி அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் வருடம் பயில்கிறான். கடைக்குட்டி தான் இந்த ஜெயந்தி, பதினொன்றாம் வகுப்பு படிக்கிறாள்.

“ஏன்? பொண்ணுங்கன்னா அவ்வளவு இளக்காரமா? ஒரு பொண்ணா இருந்துட்டு நீங்களே இப்பிடி பேசலாமா ம்மா?” தாயின் வார்த்தைகளை பிடித்துக் கொண்டு ஜெயந்தி சண்டைக்கு செல்ல,

“என்ன இங்க சத்தம்? என்ன இங்க சத்தம்?” நாடக பாணியில் கேட்டபடியே கிச்சனுக்குள் நுழைந்த கதிரேசன், ஷோல்டரில் கிடந்த கல்லூரி பேக்கை அங்கிருந்த நாற்காலியில் கழற்றி போட்டான்.

  இரவு தான் கோயிலில் விஷேசம் என்பதால் மூன்று பிள்ளைகளுமே பள்ளி, கல்லூரி என்று சென்றிருந்தார்கள்.

“ஜெயந்திக்கு பிச்சிப்பூ தான் வேணுமாம். பூக்காரர்கிட்ட வாங்க மறந்துட்டேன். நீ கொஞ்சம் வாங்கி குடுத்துடேன் கதிர்.” இளையமகனிடம் நயமாக சொன்னார் தெய்வானை.

“யாருக்கு? இந்த குரங்குக்கா? நோ சான்ஸ்” என்றபடியே, டீ இருந்த பாத்திரத்தை திறந்து பார்த்த கதிரேசன், “பசித்து கிடக்கும் வயிற்றுக்கு, கொஞ்சம் டீயை ஊற்றுங்கள் தாயே” என்று தம்ளரை எடுத்து நீட்டினான்.

“ம்மா… நான் உங்ககிட்ட தான் பூ கேட்டேன். இவங்கிட்ட இல்ல.” சிலிர்த்துக் கொண்டாள் ஜெயந்தி.

“நீ கேட்டாலும் நான் வாங்கித் தரமாட்டேன் டி” என்று தங்கையின் இரட்டை ஜடையை கதிர் இழுக்க முயன்றான்.

 அவன் கைகளில் வேகமாக அடித்த ஜெயந்தி, “சீ… ப்பே… நான் போய் உங்கிட்ட கேட்பனா?” என்றவள், சட்டென்று கதிரேசனின் சட்டை பாக்கெட்டில் இருந்த செல்ஃபோனை எடுத்து,

 “எங்க அண்ணன், எங்க அண்ணன், அன்பை அள்ளி தெளிக்கிறதில் மன்னன், தங்கை பாசத்தில் அவனைத்தான் அடிச்சிக்க ஊருல ஆளே கிடையாதே” என்று பாடியபடியே ஒரு அழைப்பு விடுக்க முயன்றாள்.

 அந்த பாட்டும், அழைப்பும் தங்களது அண்ணன் ராகவனுக்கு தான் என்று தெரியாத அளவிற்கு கதிரேசன் ஒன்றும் முட்டாள் இல்லையே.

“அதுக்கு கூட எம்ஃபோனு தான் உனக்கு தேவப்படுது” என்றபடியே வேகமாக தங்கையின் கையிலிருந்த ஃபோனை கதிர் பிடுங்க முயன்ற நேரம், வீட்டு வாசலில் பைக் நிற்கும் சத்தம் கேட்க, எல்லோருடைய கவனமும் அங்கே திரும்பியது.

அது மூன்று தலைமுறை கண்ட அந்தகால வீடு. தலைவாசலில் இருந்து பார்த்தால் வீட்டின் பின்வாசல் வரை தெரியும்படி தான் வீட்டின் அமைப்பு இருந்தது. வீட்டின் கடைசியாக சமையலறை இருக்க, அங்கிருந்தே தலைவாசலைப் பார்த்தார்கள்.

ராகவனோடு, அந்த வீட்டின் மூத்த பெண்ணரசி ஆனந்தியும் பைக்கிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தாள்.

“ஹைய்ய்… அக்கா” என்றபடியே துள்ளிக்குதித்து கொண்டு ஓடினாள் ஜெயந்தி. அவள் பின்னோடு தெய்வானையும், கதிரேசனும் சென்றார்கள்.

“பாத்து க்கா… மெதுவாப் போ.” ஐந்து மாத கர்ப்பிணியான தமக்கைக்கு பத்திரம் சொல்லிய ராகவன், அவள் துணிமணிகள் அடங்கிய பையை தன் கையில் தூக்கிக் கொண்டான்.

ராகவன், நெடுநெடுவென்று நல்ல வளத்தியாகவும், இருபத்தியிரண்டு வயதுக்கே உரிய ஆரோக்கியமான உடற்கட்டோடும் இருந்தான். அந்த முகத்தில் சதா துலங்கிய புன்னகை அவனை பேரழகனாக காட்டியது.

மொத்தத்தில், தகப்பன், “புன்னகையா? அது எந்த கடையில் கிடைக்கும்?” என்று கேட்கும் ரகம் என்றால், இவன் புன்னகை மன்னன்.

ஆனந்தியை வரவேற்பதில் சிறிது நேரம் அங்கே கலகலப்பாக கழிந்தது.

 “மாப்பிள்ளை வரலையா ஆனந்தி?” என்று கேட்டபடியே தெய்வானை வீட்டுக்குள் செல்ல, “கடையிலிருந்து வர ரொம்ப லேட்டாகும், உன்தம்பியை வரச்சொல்லி போ. நைட்டுக்கு நான் வந்துடுவேன்னு சொன்னாங்க ம்மா. அதான் காலேஜ் விட்டு வரும்போது என்னையும் கூட்டிட்டு போன்னு ராகவனுக்கு ஃபோன் செய்து சொன்னேன்” என்றபடியே உடன் நடந்தாள் ஆனந்தி.

ஆனந்தியும் இயற்பியலில் தன் பட்டமேற்படிப்பை முடித்திருந்தாள். படிப்பு முடியவும், மத்தளம் பாறையைப் சேர்ந்த இவர்களைப் போலவே பாரம்பரியம் மிகுந்த குடும்பத்து பையனான மாதவனுக்கு ஆனந்தியை பெண் கேட்டார்கள். இவர்களுக்கும் பிடித்துப் போனதில், ஆனந்தி, மாதவன் திருமணம் இனிதே நடைபெற்றிருந்தது.

ஆனந்தியின் கணவன் மாதவன் வீட்டில் வியாபாரம் தான். இரசாயன உரம் விற்பனை. தென்காசியிலே இரண்டு பெரிய கடைகள் இருக்கிறது. இப்போது இரண்டையுமே பொறுப்பெடுத்து பார்த்துக் கொள்வது மாதவன் தான்.

தெய்வானையோடு நடந்த அவருடைய மக்கள் நால்வரும் சாப்பாட்டு அறையில், தேக்காலான சாப்பாட்டு மேஜையை சுற்றிக்கிடந்த நாற்காலிகளில் அமர்ந்து கொண்டார்கள். அவர்களுக்கு டீ கொண்டு வருவதற்காக கிச்சனுக்கு சென்றார் தெய்வானை.

“என்ன ம்மா செய்யணும்? சொல்லுங்க, நான் செய்யிறேன்” என்று அவர் பின்னோடு சென்றான் ராகவன். இது அவ்வப்போது அங்கே நடப்பது தான். அவ்வளவு ஏன்? இத்தனை வாய்பேசும் கதிரேசன் கூட சமையலறையில் அன்னைக்கு உதவிகள் செய்து கொடுப்பது உண்டு.

“அப்புறம், இன்னைக்கு நைட் கோவில்ல என்ன ப்ரோக்ராம்?” தன்னோடு இருந்த தம்பியையும் தங்கையையும் பார்த்து ஆனந்தி கேட்டாள்.

“அந்த கண்ராவி கரகாட்டம் தான்.” கோபமாக பதில் வந்ததோ தெய்வானையிடமிருந்து.

“ம்மா… அது ஒருத்தங்களோட தொழில். அதைப்பத்தி நீங்க இப்பிடி பேசக்கூடாது.” கண்டிப்பாக சொன்னான் ராகவன்.

“பொல்லாத தொழில்… இத்துணூண்டு ட்ரெஸ்ஸை போட்டுக்கிட்டு இந்த தொழிலை செய்கிறதுக்கு நாலு வீட்டுல பாத்திரம் கழுவி பொழச்சிட்டு போகலாம்” என்றார் தெய்வானை முகத்தை சுழித்து.

“ஹ்ம்ம்… முன்னெல்லாம் கரகாட்டம் ஆடுறவங்க அவ்வளவு நீட்டா ட்ரெஸ் பண்ணியிருக்காங்க. அந்த கால கரகாட்ட கலைஞர்கள் கூட நம்ம தாத்தா எடுத்த ஃபோட்டோ ஒண்ணு நம்ம வீட்டு மச்சியில இருக்கு. நீ பாத்துருக்கியா ராகவா? அந்த லேடீஸ் முழுக்கை டாப்ஸ், பட்டியாலா பேண்ட் மாதிரி தான் ட்ரெஸ் போட்டுருந்தாங்க. ஆனா இப்போ எவ்வளவு மோசமா இருக்கு அவங்க ட்ரெஸ். போதாததுக்கு டபுள் மீனிங் டயலாக்ஸ், டான்ஸுன்னு, ஒரு கிராமியக் கலையை முகம் சுழிக்கிற ஸ்டேஜ்ல கொண்டுவந்து நிறுத்தியாச்சு.” அங்கலாய்த்தாள் ஆனந்தி.

“இதுக்கெல்லாம் காரணம் எது க்கா? மக்களோட ரசனை மாறிப்போனது தானே? அப்போ கொற சொல்லணும்னா நாம இந்த மக்களத்தானே சொல்லணும். பாவம், அவங்களச் சொல்லக் கூடாதில்லையா?” என்றான் ராகவன்.

“யார் வேணும்னாலும் எப்பிடி வேணும்னாலும் ஆடிட்டு போறாங்க. ஆனா, அந்த நிகழ்ச்சியை கொண்டு வந்து கோவில்ல வைக்குறது தான் எனக்கு பிடிக்கல. அதுலயும், அவங்க நம்ம வீட்டுல வந்து உக்கார்ந்து ட்ரெஸ் மாத்திட்டு போறது, எனக்கு சுத்தமா பிடிக்கல.” ஒவ்வாமை போல முகத்தை சுளித்தார் தெய்வானை.

ஆமாம்… கோவில் தர்மகர்த்தா, நாட்டாமை பதவிகள் குமாரசாமியின் தாத்தா, அப்பா இப்போது இவர் என்று வழிவழியாக வந்து கொண்டிருப்பது. அதுவும் கோயிலுக்கு வரும் மேளக்கலைஞர்கள், நாதஸ்வர வித்துவான்கள், கரகாட்ட கலைஞர்கள் எல்லோரும் வந்து இறங்கும் இடம் நாட்டாமையின் வீடு தான்.

நல்ல விஸ்தாரமான ஹால், நான்கு படுக்கை அறைகள், சாப்பாட்டு அறை, பூஜை அறை, சமையலறை, மாடியில் மூன்று அறைகள் என்று பெரிய வீடாக இருக்கும் அவர்கள் வீட்டின், முன் ஹாலில் தான் இந்த கலைஞர்கள் எல்லோரும் தங்கிக் கொள்வது. கரகாட்ட கலைஞர்கள், உடையை மாற்றி, நடனத்திற்கு தயாராவதும் இங்கே தான். அதைத்தான் பிடிக்கவில்லை என்று சொல்கிறார் தெய்வானை.

“அப்போ உங்க வீட்டுக்காரரை நாட்டாமை பதவியை ராஜினாமா பண்ணச் சொல்லுங்க ம்மா. உங்க வீட்டுக்கு அவங்க எல்லாம் வர்றது தானாவே நின்னுடும்” என்றான் கதிர்.

“அதெப்பிடி டா? காலங்காலமா நம்ம குடும்பத்துக்கு கிடைக்கிற மரியாதை அது. அதை எப்படி விட்டுக் குடுக்க முடியும்?” என்றார் தெய்வானை.

“முடியாதுல்ல… அப்போ இதையும் நீங்க அனுமதிச்சு தான் ஆகணும்” என்றான் கதிர்.

“ஹைய்யோ… நாட்டாமை தீர்ப்பு சொல்லிட்டாரு, எல்லாரும் கேட்டுக்கோங்க ப்பா.” கிண்டலடித்தாள் ஜெயந்தி.

“எப்பிடியும் நான் நாட்டாமை ஆகமுடியாது, உங்க அண்ணன் தான் வருங்கால நாட்டாமை” என்றான் சோகம் போல கதிர்.

“ஐய்ய… எனக்கெல்லாம் இதுல சுத்தமா இன்ட்ரெஸ்ட் கிடையாது.” அசுவாரஸ்யமாக சொன்னான் ராகவன்.

“உனக்கு வேண்டாம்னா, அடுத்த நாட்டாமை நான் ஆகிக்கவா?” உற்சாகமாக கேட்டான் கதிர்.

“என்னவோ ஜனாதிபதி பதவி மாதிரி, எவ்ளோ ஆர்வம் டா உனக்கு.” தம்பியின் முதுகில் தட்டினான் ராகவன்.

“கேட்டுக்கோங்க தாய்குலங்களே, நீங்க எல்லாம் தான் இன்னைக்கு நடந்ததுக்கு சாட்சி. இல்ல, நான்தான் நாட்டாமை ஆவேன்னு வருங்காலத்துல ராகவன் சொன்னா, இப்போ நடந்ததைச் சொல்லி என்னை நாட்டாமை ஆக்க வேண்டியது உங்க பொறுப்பு” என்றான் கதிர்.

“ஐயோடா… தங்கச்சிக்கு பூ கூட வாங்கித் தராத ஆளெல்லாம் நாட்டாமை ஆனா, வெளங்கிடும் ஊரு.” நொடித்துக் கொண்டாள் ஜெயந்தி.

“ஏற்கனவே இங்க ஒரு பஞ்சாயத்து போயிருக்கும் போலவே, என்ன ஆச்சு?” உடன்பிறப்புகளுக்கு டீயை கொண்டு வந்து கொடுத்தபடியே தங்கையிடம் கேட்டான் ராகவன்.

அவள் பூ கதையைச் சொல்ல, “பிச்சிப்பூ தானே, நான் உனக்கு வாங்கித் தரேன்” என்றவன், “க்கா… உனக்கு எதுவும் வேணுமா?” என்றான் அக்கறையாக.

ராகவன் என்ற பெயருக்கு, அன்பும், அக்கறையும், பாசமும், பரிவும் நிறைந்தவன் என்று அகராதியில் பதிவே செய்து விடலாம். அந்த அளவிற்கு பாசக்காரன் தான் இந்த ராகவன். அதனால் தகப்பன்சாமியாக அவனை கொண்டாடினார்கள் அவன் உடன்பிறப்புகள்.

தம்பியின் பாசத்தில் எப்போதும் போல நெகிழ்ந்து போன ஆனந்தி, “ஆழ்வார்குறிச்சிக்கா போற ராகவா? அப்பிடின்னா எனக்கு பட்டர்பன் வாங்கிட்டு வர்றியா? என்றாள் ஆவலாக.

 கிராமம், நகரம் இந்த இரண்டு பெயருக்குள்ளும் அடக்க முடியாத ஊர் தான் ஆழ்வார்குறிச்சி. பள்ளி, கல்லூரி, மருத்துவமனைவசதி, வங்கி என்று எல்லா அடிப்படைத் தேவைகளும் ஒருங்கே அமைந்த ஊர். செங்குளத்திலிருந்து பத்து நிமிட பயணம் தான் ஆழ்வார்குறிச்சிக்கு.

தனது டீயை குடித்து முடித்த ராகவன், “போய்ட்டு வந்துடுறேன்” என்று கிளம்ப, “ஹலோ ப்ரோ… எல்லார்கிட்டயும் என்ன வேணும்னு கேட்ட, எங்கிட்ட கேக்கலையே?” என்று தமையனை நிறுத்தினான் கதிர்.

“தப்பு தான்… என்ன வேணும்னு சொல்லுங்க சார்” போலியாக பணிவு காட்டினான் ராகவன்.

“ஆழ்வார்குறிச்சி ஐயர் ஹோட்டல்ல பஜ்ஜியும், கேசரியும் வாங்கிட்டு வா.” கெத்தாக சொன்னான் கதிரேசன்.

“தங்கள் சித்தம், என் பாக்கியம் ப்ரபோ” என்று ராகவன் பதிலுக்கு சொல்ல, பிள்ளைகளுக்கிடையே சிரிப்பு அலை எழுந்தது.

அந்நேரம், வீட்டின் தலைவர் குமாரசாமி அந்த அறையில் நுழைந்தார். அவ்வளவு தான்… சிரிப்பு சட்டென்று மறைந்து, அமைதியாகிப் போனார்கள் எல்லோரும்.

ஆமாம்… கேலி, கிண்டல் எல்லாம் அவர்களுக்குள் மட்டும் தான். தந்தைக்கும் மக்களுக்குமிடையே எப்போதும் ஒரு சிறிய இடைவெளி உண்டு. அதற்காக அவரிடம் பிள்ளைகளுக்கு பாசம் இல்லை என்று சொல்ல முடியாது. தகப்பனின் கோபமுகம் எளிதாக அவரை அணுக விடவில்லை.

“எப்போ ம்மா வந்த? நல்லாயிருக்கியா? மருமகன் எப்போ வருவாப்ல” என்று கேட்டு, ஆனந்தியிடம் பதிலையும் வாங்கிய குமாரசாமி, மனைவி தந்த டீயை பருகியபடியே,

 “ராகவா, அப்பிடியே ஊர்முழுக்க ஒரு ரௌண்ட் வந்து எல்லா ஏற்பாடும் சரியா இருக்கான்னு பாத்துட்டு, அன்னதானம் தொடங்குறதுக்கு முன்னாடி கோயிலுக்கு வந்துடு” என்றார்.

மறுபேச்சில்லாமல், “சரி ப்பா” என்றான் ராகவன்.

“அப்பா கோவில் வேலை சொன்ன உடனே சரிங்குறான். அப்போ, நீதான் நாட்டாமை ஆகணும்னு அப்பா சொன்னா, என்னை டீல்ல விட்டுருவானா?” தனக்குத்தானே முணங்கி கொண்டான் கதிரேசன். அவன் கவலை அவனுக்கு.

“அவன் வாயசைப்பது தவறாமல் தகப்பனின் கண்களில் விழ, “என்னடா வாய்க்குள்ள முணுமுணுக்குற?” என்றார் குமாரசாமி கோபமாக.

“எனக்கும் ஏதாவது வேலையிருந்தா சொல்லுங்க, செய்யுறேன்னு சொன்னேன் ப்பா” என்றான் கதிர் மிகவும் நல்லவனாக‌.

“வயக்காட்டுக்கு தண்ணி பாய்ஞ்சிட்டு இருக்கு. வாமடையை தென்னந்தோப்புக்கு திருப்பி விட்டுட்டு வா” என்றார் குமாரசாமி.

அப்பா கதிரேசனுக்கு கூறிய வேலையில் அவனோடு பிறந்த பெண்மக்கள் இருவருக்கும் சிரிப்பு அள்ளிக்கொண்டு வந்தது. அதை நாசூக்காக இதழ்களுக்குள் மறைத்துக் கொண்டார்கள். வேறுவழியில்லாமல், காதுவரை இழுத்து வைத்த புன்னகையோடு, அங்கிருந்து நகர்ந்தான் கதிர்.

தன் உடன்பிறப்புகள் கேட்டவற்றை வாங்கிக் கொடுத்து, அப்பா சொன்ன வேலையையும் செய்து முடித்து, ராகவன் வீட்டுக்கு வரும்போது மணி ஏழரை. ஊரே ஒளி வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தது.

 அந்நேரம் இரண்டு ஆட்டோக்கள் அவன் வீட்டு வாசலில் வந்து நின்றது. அதிலிருந்து கரகாட்டக் கலைஞர்கள் இறங்கிக் கொண்டிருந்தார்கள்.

அவர்களைக் கண்டதும் தெருவில் யாரோ ஒருவர், “ஆட்டக்காரி வந்தாச்சு…” என்று சொல்லியது, அசிரீரி போல கேட்டது.

நான்கு பெண்களும், இரண்டு ஆண்களுமாக இறங்கி நின்ற அவர்களது கூட்டத்தில், அவர்களோடு சற்றும் பொருந்தாதது போல நின்றிருந்தாள் ஒரு சிறு பெண்.

 ‘ஐயோ… இந்த பெண்ணுமா கரகாட்டம் ஆடப்போகுது? ஸ்கூல் போற பிள்ளை போல இருக்குதே?’ என்று தான் எண்ணத் தோன்றியது ராகவனுக்கு.

“இந்த வீடுதான். உள்ள போங்க.” அந்த கூட்டத்துக்கு தலைவன் போலிருந்த மூத்த ஆண் சொன்னதோடல்லாமல், அந்த நான்கு பெண்களில், ஒருவராக இருந்த தன் மனைவி பரமேஸ்வரியைப் பார்த்து, “பரமு, எல்லாரையும் கூட்டிட்டு உள்ள போ” என்றான்.

அவர்களோடு வந்த இளைஞன் பெண்களுக்குரிய ஆடை ஆபரணங்கள் இருந்த பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு முன்னே நடக்க, அவன் பின்னோடு சென்றார்கள் எல்லோரும்.

ஆனால் அந்த சிறுபெண்ணோ தயங்கித் தயங்கியே அவர்களோடு நடந்தாள். அவள் பெயர் மலர்விழி.

“என்ன அன்னநடை போடுற? சீக்கிரம் வா.” அந்த பரமேஸ்வரியிடமிருந்து பேச்சு கிடைத்தது மலர்விழிக்கு.

அவர்கள் வீட்டுக்குள் நுழையவும், “என்ன மாயன்? வர்ற நேரமா இது? எப்போ சாப்பிட்டு, எப்போ ஆட்டத்தை ஆரம்பிக்க போறீங்க?” அந்த தலைவனைப் போலிருந்தவனைப் பார்த்து அதட்டலாக கேட்டார் குமாரசாமி.

“இதோ.. இப்போ ரெடியாகிருவோம் ஐயா” என்றான் அந்த மாயன்.

“சரி… சரி, சாப்பாட்டை உங்களுக்கு இங்கயே கொண்டுவரச் சொல்லியிருக்கேன், சாப்பிட்டுட்டு, சீக்கிரம் கிளம்பி கோயிலுக்கு வாங்க” என்ற குமாரசாமி, அந்த மலர்விழியைப் பார்த்து,

“ரொம்ப சின்னப்பிள்ளையா தெரியுதே? கரகம் வச்சி ஆடத்தெரியுமா?” என்றார் சந்தேகமாக.

“அது எந்தங்கச்சி பொண்ணு தாங்க. நல்லா ஆடும். நம்ம ஊர்ல தான் மொத நிகழ்ச்சி.” வாயெல்லாம் பல்லாகச் சொன்னான் மாயன்.

“அட… காமாட்சி பொண்ணா இது? சொதப்பாம இருந்தா சரிதான்” என்ற குமாரசாமி, வீட்டுக்குள் வராமல் வெளியே நின்றிருந்த மகனிடம், “சீக்கிரம் கிளம்பி கோயிலுக்கு வா” என்றுவிட்டு சென்றார்.

அதற்கு மேலும் அங்கே நிற்காமல் வீட்டுக்குள் நுழைந்த ராகவனின் பார்வை, அந்த சிறுபெண்ணின் மீது விழுந்தது. அவள் கண்களில் தெரிந்த கலவரம், அவனை என்னவோ செய்தது.

ஹாலில் இருந்து அடுத்த ரூமுக்கு செல்லும் வாசல் கதவை ஏற்கனவே சாத்தி வைத்திருந்தார் தெய்வானை. அதை திறந்து கொண்டு, அந்த அறையிலிருந்த மரத்தாலான படி வழியே மாடியில் இருக்கும் தனது அறைக்கு சென்றான்.

 மனமெங்கும், ‘அந்த பெண்ணின் விருப்பம் இல்லாமல் இங்கே அழைத்து வந்திருப்பார்களோ?’ என்ற எண்ணம் தான்.

 அந்த சிந்தனையோடே குளித்து, கோயிலுக்கு செல்வதற்காக வேஷ்டியும் சட்டையும் அணிந்து கொண்டிருந்தவனின் பார்வை, ஜன்னல் வழியே வீட்டுக்கு அந்த பக்கமாக கிடந்த காலிமனையில் விழுந்த நொடி, பரபரப்பாகிப் போனது.

ஆமாம்… யாரைப்பற்றி சிந்தித்து கொண்டிருக்கிறானோ, அந்தப்பெண் அங்கே நின்றுகொண்டு, அங்குமிங்குமாக எதையோ தேடிக்கொண்டிருந்தாள். ‘ஒற்றை ட்யூப் லைட் மட்டுமே ஒளிர்ந்து கொண்டிருக்கும் அந்த இடத்தில், என்ன செய்து கொண்டிருக்கிறாள்?’ என்ற எண்ணத்தில், ராகவன் ஜன்னலை நெருங்கி நின்று கீழேப் பார்த்தான்.

அந்த பெண்ணோ, சட்டென்று அங்கே கிடந்த பெரிய கல்லை இரண்டு கைகளாலும் தூக்கி, நச்சென்று தன் வலது பாதத்தில் போட்டாள்.

பதறிப்போன ராகவன் தன்னை மறந்து, “ஹேய்… எ… என்ன பண்ணுற?” என்று சத்தமிட்டது காற்றோடு காற்றாக கலந்து போனது…