அத்தியாயம் – 7

ராம நாதனின் முடிவிற்குப் பின்னால் இருந்த காரணத்தைக் கேட்டு ஊமையாகிப் போனார் நாகேஸ்வரன். நேற்று மாலை, இவரையா இரக்கமில்லாதவர் என்று வாய்க்கு வந்தபடி பேசினோமென்று வேதனைபட்டுக் கொண்டிருந்தான் உமேஷ்.  அவளுடைய முழுப் பெயரை அறிந்த பின், கடந்த சில நிமிடங்களாக, ஏன்? எப்படி? யார்? என்று அவனுள் எழுந்த கேள்விகளுக்கு, எதிர்பாராமல் ராம நாதனிடமிருந்தே அதற்கான விடைகள் கிடைத்தன. அப்பா, மகன் இருவரும் பேசா மடந்தையானதைப் பொருட்படுத்தாமல், அவர் பேச்சைத் தொடர்ந்தார் ராம நாதன்.

“உமாக்கு ஏதாவது நல்லது செய்ய முடியுமான்னு எனக்குத் தெரியலை..கொஞ்ச நாள் முன்னாடி அவககூட வேலை பார்க்கறவர் அவளைக் கல்யாணம் செய்துக்க விரும்பறேன்னு வீடு தேடி வந்து பொண்ணு கேட்டார்..சமீபத்திலே தான் அவங்க கம்பெனிலே வேலைக்குச் சேர்ந்திருக்கார்..அந்தப் பையனோட வீடு உமா வீட்டுக்கு எதிர் வீடு..அம்மாவும் பையனும் தான் அந்த வீட்டிலே இருக்காங்க..மற்றக் குடும்ப விவரங்கள் எனக்குத் தெரியாது…

ஒருமுறை நாங்கெல்லாம் உமாவோட தங்கி இருந்த போது, அந்தம்மாவும் அவங்க பையனும் உமாவைப் பொண்ணு கேட்டு வந்தாங்க…அந்தம்மா கல்யாணத்தைப் பற்றி பேச ஆரம்பிச்சவுடனேயே,’இப்போவே வேணும்னாலும் அவளை உங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிடுங்க..எங்களுக்கும் இங்கே வர்ற வேலை மிச்சமாகும்னு’ என்னோட மனைவி சொன்ன பிறகு தான் உமாவைப் பற்றி எதுவும் தெரியாமப் பொண்ணு கேட்க வந்திட்டோம்னு உணர்ந்தாங்க…

அவளைப் பற்றி என்னோட மனைவிகிட்டேயிருந்து தெரிஞ்சுகிட்ட பிறகு,’நீங்க தான் அவளை வளர்த்திருக்கீங்க..அவளும் உங்களைக் குடும்பமா நினைச்சுக்கிட்டு இருக்கா..அதனாலே அவளுக்கும் உங்களோட மகளுக்கு செய்த மாதிரி கல்யாணம் செய்து கொடுங்கண்ணு’அந்த அம்மா சொன்னதுக்கு,’எல்லாரையும் போல உங்களோட பையனுக்குக் கல்யாணம் செய்யணும்னு கனவு இருந்தா அதுக்கு வேற பொண்ணு தான் நீங்க தேடணும்..இவளை அழைச்சிட்டு வந்ததுக்கு பார்த்துக்கிட்டோம், படிக்க வைச்சோம், பதினெட்டு வயசான பிறகும் ஒதுங்கிப் போகாம இன்னைவரை இங்கே வந்து போய்கிட்டு உறவு வைச்சிருக்கோம்..அதுவும் என்னோட மாமியார் இருக்கறவரை தான்..அதுக்கு அப்புறம் அவளும் எங்களை எதிர்பார்க்க மாட்டான்னு.’ திட்டவட்டமாச் சொல்லிட்டா..உடனே அந்தம்மா கிளம்பிப் போயிட்டாங்க..அந்தப் பையனும் எதுவும் பேசாம அவங்க அம்மாவோட போயிட்டான்…

அன்னைலேர்ந்து எங்கம்மா மனசுலே எப்படியாவது உமாவை அந்தப் பையனுக்குக் கல்யாணம் செய்து வைக்கணும்னு எண்ணம் வந்திடுச்சு..எனக்கும் முதல்லே விருப்பம் இருந்திச்சு..வீடு தேடி வந்து பொண்ணு கேட்டாங்க..இரண்டு பேருக்கும் ஒரே படிப்பு..ஒரே கம்பெனிலே வேலை..இந்துவை எப்படியாவது சம்மதிக்க வைச்சிருலாம்னு நானும் நினைச்சிட்டு இருந்தேன்..அந்த நினைப்பை, அந்தப் பையன் என்கிட்டே பேசின பிறகு நான் கைவிட்டிட்டேன்…

எதுவுமே பேசாம அவங்க அம்மா பின்னாடி போனவர், ஒரு நாள் என்னைத் தனியாச் சந்திச்சு, ‘எனக்கு உமாவை ரொம்ப பிடிச்சிருக்கு..ஆனா என்னாலே என் அம்மாவை மீறி  இப்போ எதுவும் செய்ய முடியாது..அவ வெளிநாட்டுக்குப் போயிட்டு வரட்டும் அதுக்குள்ளே எங்கம்மாவை நான் சரி கட்டிடுவேன்..எப்படியாவது அவளைக் கல்யாணம் செய்துக்குவேன்னு’ சொன்னார்..அவங்க அம்மாவைச் சம்மதிக்க வைக்க எதுக்கு உமா வெளிநாட்டுக்குப் போயிட்டு திரும்பி வரும்வரை காத்திருக்கணும்னு கேட்டேன்..அதுக்கு அவர் சரியாப் பதில் சொல்லலை..அப்புறம் தான் எனக்குத் தோணிச்சு உமாவை இல்லை அவளோட வருமானத்தை விரும்பறார்னு..அன்னைலேர்ந்து உமாவை நினைச்சு எனக்குக் கொஞ்சம் பயமா இருக்கு..” என்று பேசிக் கொண்டிருந்த ராம நாதனை,

“உமா அவங்களை விரும்பறாளா?” என்று இடைமறித்தான் உமேஷ். ஒரே அலுவலகத்தில், ஒரே துறையில், ஒரே பிரிவில் வேலை பார்க்கும் கணவன், மனைவி நடுவே இருக்கும் பிரச்சனைகள் அவன் அறியாதது இல்லை.  அதிலிருக்கும் லாபங்கள் தான் வெளியாட்கள் கண்களுக்குப் புலப்படும்.  அதில் ஏற்படும் நஷ்டங்கள் அந்தக் கணவன், மனைவி இருவருக்கும் மட்டும் தான் தெரியும்.  பரஸ்பர விருப்பம் என்று ஒன்று இருந்தால் தான் மகிழ்ச்சியாக இருக்க முடியும் இல்லையென்றால் அது போன்ற மண வாழ்க்கை நரகம் தான்.

அந்தக் கேள்வியில் உடனே உமேஷின் புறம் திரும்பினார்கள் ராம நாதனும் நாகேஸ்வரனும். இத்தனை நேரம் ராம நாதனின் பேச்சை அவருடைய மகனும் கேட்டுக் கொண்டிருந்தான் என்பதை அந்தக் கணம் தான் உணர்ந்தார் நாகேஸ்வரன். 

உமேஷின் கேள்விக்குப் பதில் அளிக்காமல் மௌனமாக இருந்தார் ராம நாதன். அதற்குப் பதில் தெரியாமல் அவரை விடப் போவதில்லை என்று பிடிவாதத்துடன் ராம நாதனைப் பார்த்துக் கொண்டிருந்தான் உமேஷ். சில நிமிடங்கள் யோசனைக்கு பின்,

“அவங்களோட பையன் உமாவை விரும்பறதாலே தான் வந்தேன்னு அந்த அம்மா சொன்னாங்க…அன்னைக்கு அவங்க இரண்டு பேரும் வீட்டுக்கு வந்த போது உமாவும் வீட்லே தான் இருந்தா..அவங்க பேசினதை அமைதியாக் கேட்டிட்டு இருந்தா..அவளுக்குத் தெரியாம, சொல்லாம அவங்க நம்ம வீட்டுக்கு வந்திருக்க மாட்டாங்கன்னு என் மனைவி சொல்றா..இப்போவும் அந்தப் பையனோட சேர்ந்து ஒரே வண்டிலே வேலைக்குப் போகறா…ஆனா இதுவரை அவளோட எண்ணம் என்னென்னு யார்கிட்டேயும் உமா சொன்னதில்லை..அவளோட விருப்பம்  என்னென்னு அவளுக்கு மட்டும் தான் தெரியும்.” என்றார் ராம நாதன்.

அந்தப் பதில் உமேஷைச் சஞ்சலப்படுத்தியது.  அவன் அதே யோசனையில் இருக்க, உமாவைப் பற்றி அவனுடைய கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறோம்? அவனுக்கு எப்படிப் புரிய வைக்கப் போகிறோமென்று யோசனையில் ஆழ்ந்தார் நாகேஸ்வரன். அவர் அறிந்திருக்கவில்லை, இத்தனை வருடங்களாக உமாவைப் பற்றி வாயே திறக்காமல் இருந்த அவனுடைய குடும்பத்தினரிடம், இனி, விளக்கம் கேட்டு அவனுடைய நேரத்தை அவருடைய மகன் வீண்டிக்க போவதில்லையென்று.

நேற்று வீட்டில் நடந்தை வெளிப்படுத்தாமல், அவருடைய எண்ணத்தை மட்டும் வெளிப்படுத்தியதில் நிம்மதியாக உணர்ந்தார் ராம நாதன். ப்ரீத்தி கல்யாணத்தை அவர் நடத்தி வைக்க வேண்டுமென்றால், பசுபதி குடும்பத்தினர் உமாவின் கல்யாணத்தை நடத்தி வைக்க வேண்டுமென்று அவருடைய அம்மா சொன்னதைச் சொல்லாமல், முடியாதென்று தன்னுடைய மறுப்பை மட்டும் ராம நாதன் தெரியப்படுத்தியிருந்தார். ப்ரீத்திக்குத் திருமணத்தை நடத்தி வைக்க ஒப்புக் கொண்டிருந்தால் ப்ரீத்திக்கும் கவிதாவிற்கும் இடையே உறவு வளர்க்கலாம் என்று எண்ணியிருந்த இந்துமதியின் ஆசை நிராசையானது. அதனால், நேற்றிரவு, உமாவை வைத்து எப்போதும் போல் சண்டை போட்டார் இந்துமதி. இன்று, இவர்களுடன் இங்கே நிகழ்ந்த இந்தச் சந்திப்பு, இந்துவின் முன்னிலையில் நிகழ்ந்திருந்தால், என்ன ஆகியிருக்கோமோ? என்ற எண்ணமே அவரைக் கலங்கடித்தது. இதைப் பற்றி மனைவியிடம் தெரிவிப்பதா? வேண்டாமா? என்று சிந்திக்கலானார் ராம நாதன்.

ஏற்கனவே சோர்வாக இருந்த சுந்தரி பாட்டிக்குத் தலை சுத்துவது போல் இருக்க, அவருடைய கையைப் பிடித்துக் கொண்டிருந்த பார்வதி, அந்த வித்தியாசத்தை உணர்ந்து,”என்ன பண்ணுது உங்களுக்கு?” என்று கேட்டார். உடனே, அவளுடைய கையைப் பார்வதி பாட்டியிடமிருந்து விடுவித்துக் கொண்ட உமா,

“எதுக்கு இப்போ எழுந்து உட்கார்ந்தீங்க? படுத்துக்கோங்க..ப்ளீஸ்” என்று மறுபடியும் சுந்தரி பாட்டியைப் படுக்க வைத்தாள். 

“இப்படித் தான் திடீர்னு தலை ஒரு மாதிரியா இருக்கு..மாத்திரை, மருந்தெல்லாம் இப்போ வேலை பார்க்கறதில்லை..அதான் புதுசா ஒரு மருந்து எழுதி கொடுத்திருக்கார் டாக்டர்..அதெல்லாம் எதுவும் வேணாம்..காலன் காத்திட்டு இருக்கான்..என்னை இப்படியே விட்டிடுன்னு சொன்னா இவக கேட்க மாட்டேங்கறா..என் மேலே பணத்தை செலவழிச்சிட்டு இருக்கா..என்னவோ எனக்கு எல்லாம் சரியாகி, உடனே, இவ கல்யாணத்தைப் பார்க்கத் தயாராகி போகப் போற மாதிரி.” என்று சொன்ன சுந்தரி பாட்டி அறியவில்லை, உமாவின் கல்யாணத்தை பார்த்துவிட்டு தான் அவர் காலனைச் சந்திக்கப் போகிறாறென்று.

தன்னை நிதானப்படுத்திக் கொண்ட பின்,”இவ வீட்டுக்கு எதிர்வீட்லே தான் அந்தப் பையன் இருக்கான்..இவ கூட அதே ஆபிஸ்லே தான் வேலை பார்க்கறான்..இவளைப் பற்றி தெரிஞ்ச பிறகு, இவளை வேணாம்னு சொல்லாம, ராம், இந்து முன்னே நின்னு கல்யாணத்தைச் செய்யணும்னு அவனோட அம்மா சொன்னாங்க..அதுக்கு, ‘முதல்லே கல்யாணம், அப்புறம்  வளைகாப்பு, சீமந்தம்னு எல்லாத்தையும் செய்யணும்னு எதிர்பார்ப்பீங்க..வியாதிக்காரப் புருஷன், மாமியார் இரண்டு பேரையும் சமாளிச்சுக்கிட்டு..பேத்தி, பொண்ணுக்கு உதவி செய்திட்டு ஒத்தையா அல்லாடறேன்..என்னாலே முடியாது..கல்யாணம் செய்ய விரும்பறவங்க அப்படியே கட்டிக்கிட்டுப் போகணும் இந்த மாதிரி கண்டிஷனெல்லாம் போடக் கூடாதுன்னு.’ இந்து மறுதிட்டா…

அவளைப் பலவந்தமாச் செய்ய வைக்க ராமுக்கு விருப்பமில்லை..அவளோட சண்டை போட்டா அவனுக்கு உடம்பு கெட்டுப் போகும்..என்ன செய்யறது? கொஞ்ச நாள்லே இவ வெளிநாட்டுக்குப் போறா..திரும்பி வரும்வரை நான் இருப்பேனா? அதுக்கு முன்னே யாரை வைச்சு இவ கல்யாணத்தை நடத்தறதுன்னு நான் கவலைப்பட்டுக்கிட்டு இருந்தேன்..நேத்து உங்களோட மகனும் பேரனும் இவ வீட்டுக்கு வந்தாங்க…

ப்ரீத்தி கல்யாணத்தை நீ நடத்திக் கொடுத்திடு அப்படியே அவங்களை வைச்சு உமா கல்யாணத்தை நடத்திடுன்னு ராம்கிட்டே சொன்னேன்..அந்த மாதிரி ஒப்பந்தமெல்லாம் செய்ய அவனுக்கு மனசு ஒப்பலை..அதனாலே முடியாதுன்னு மட்டும் சொல்லிட்டான்..இப்போ இவ..” என்று மேலே பேச முடியாமல் மூச்சு வாங்கியது சுந்தரி பாட்டிக்கு. 

அதுவரை அவருடைய பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த உமா,”போதும் பாட்டி..அதைப் பற்றி பேச வேணாம்..போதும்.” என்று சற்று குரலை உயர்த்தி அந்த உரையாடலுக்கு முடிவு கட்டினாள்.

அப்போது உமாவின் முகத்தைத் தான் பார்த்துக் கொண்டிருந்தார் பார்வதி.  கடந்த அரைமணி நேரமாக, அவளுடைய வாழ்க்கையின் அனைத்துப் பக்கங்களையும் திறந்து காட்டி விட்டார் சுந்தரி.  அதற்கு உமாவிடம் எந்த எதிர்வினையும் இல்லை.  எல்லாப் பக்கங்களையும் அமைதியாக உள் வாங்கிக் கொண்டிருந்தாள். அவளுடைய கையை அவர் பற்றிக் கொண்ட போதும் அமைதி, அவள் வயதுக்கு வந்ததை விவரித்த போதும் அமைதி,  அவளுடைய கருணையைப் பற்றி சொல்லி கண்ணீர் வடித்த போதும் அமைதி.  இப்போது, அவளுடைய கல்யாணத்தைப் பற்றி பேசிய போது தான் அமைதியைக் கை விட்டிருக்கிறாள்.  இதற்கு மேல் பேச வேணடாமென்று சொன்னது ஆதங்கமா? ஆத்திரமா? என்று பார்வதியால் யுகிக்க முடியவில்லை. அவள் என்ன நினைக்கிறாள்? என்று அவளுடைய முகத்தின் வழியாக அவள் மனத்துள் எட்டிக் கூட பார்க்க முடியவில்லை.  அந்த வித்தை தெரியாமல் தான் மீராவும் அப்படியொரு தவறைச் செய்தாள்.

ஈஷ்வர் அவளைப் பெண் கேட்டு வந்த பின் தான் அவனுடைய மனத்தில் அப்படியொரு எண்ணம் இருந்தது உமாவுக்குத் தெரிய வந்தது.  எப்படிச் சித்தப்பா, சித்தி வந்த அந்தத் தினத்தில் சரியாக அவள் வீட்டிற்கு வந்தான்? யார் அவளைப் பற்றிய விவரங்களை அவனுடன் பகிர்ந்து கொண்டிருப்பார்கள்? என்ற கேள்விக்கு, ஒரே ஒரு பதில் தான் கிடைத்தது, மீரா.

அவள் முன்னே போய் நின்று,’சித்தப்பா, சித்தி வர்றதைத் தெரிஞ்சுகிட்டு வீட்லே வந்து பொண்ணு கேட்கறான்..நான் தான் வரவழைச்சிருப்பேன்னு சித்தி சொல்றாங்க..உன்னாலே வீட்லே சண்டை..எதுக்கு இந்த வேலை செய்த? ” என்று அத்தனை வருடங்களில், முதல் முறையாக சினேகிதியைக் கடிந்து கொண்டாள் உமா.

“நீ ஸெட்டிலாக வேணாமா? அப்பா, அம்மா இல்லைன்னா என்ன? அந்த இடத்திலிருந்து அவங்களோட கடமையை இவங்க செய்ய வேணாமா? எத்தனை வருஷம் நீயே அவங்களுக்கு செய்திட்டு இருப்ப?” என்று உலக நியதியை எடுத்துரைத்தாள் மீரா.

“மீரா, நீ நினைக்கற மாதிரி இல்லை என்னோட குடும்பம்..உனக்கு என்னைப் பற்றி முழுசாத் தெரியாது..இப்போ உன்னாலே ஆபிஸ்லேயும் எனக்குப் பிரச்சனை வரப் போகுது.” என்றாள் உமா.

“உன்னைப் பற்றி முழுசாத் தெரியாதுன்னு சொல்லி தான் எனக்குத் தெரிஞ்சதை அவன்கிட்டே சொன்னேன்..ஆபிஸ்லே ஒரு பிரச்சனையும் வராது..ஒரே இடத்திலே வேலை பார்க்கற இரண்டு பேர் கல்யாணம் செய்துகிட்டா நிறைய நன்மைகள் தான் ஏற்படும்..என்னைப் போல நீ கஷ்டப்பட வேணாம்.” என்றாள் மீரா.

“அதுக்கு நீ திவாருக்கு இங்கே வேலை வாங்கிக் கொடுக்கணும்..இந்த மாதிரி வேலை செய்யக்கூடாது.” என்று உமா பதில் கொடுத்தவுடன், அவளிடம் கோபித்துக் கொண்ட மீரா, ஒரு வாரம் போல் உமாவைப் புறக்கணித்தாள்.  அதன் பிறகு, பழையபடி, அனைத்து வீட்டு விஷயங்களையும் உமாவிடமே கொட்ட, எப்போதும் போல் அமைதியாக அதைக் கேட்டுக் கொண்டாள் உமா.

அவள் எதிர்பார்த்தது போல் ஆபிஸில் ஈஷ்வரின் தொல்லை அதிகமாகியது.  அவனுக்கும் அவளுக்கும் வேலையில் சம்மந்தம் இல்லையென்றாலும், அவள் போகுமிடத்தில் எல்லாம் தரிசனம் கொடுத்து, தேவையில்லாமல் பேசி, அவளுடைய அமைதியைக் குலைத்துக் கொண்டிருந்தான். 

அவர்களுடைய குடியிருப்பில் வசிப்பவர்களில், ஒரே பிராஜெக்ட்டில் வேலை செய்பவர்கள் இருவர் மட்டும் தான்.  அந்த இரண்டு பேரும் அருகருகே வசித்து வருகிறார்கள். யாருடனும் அவள் பேசியதில்லை. பழகியதில்லை. ஈஷ்வருடனும் அப்படித் தான். அவனுடன் சேர்ந்து வண்டியில் செல்லும் போது, அமைதியாக தான் பயணம் செய்வாள்.  யாரிடமும் நெருங்கிய நட்போ உறவோ வைத்துக் கொள்ள மாட்டாள்.  அவையெல்லாம், கடைசியில், வீடு, அப்பா, அம்மா, உடன்பிறப்பு என்ற இடத்தில் முடியுமென்பதால், யாராவது அவளை நெருங்க முற்பட்டால், அவர்களைத் தவிர்த்து விடுவாள்.  இதுவரை அது சுலபமாக இருந்தது.  அவளுடைய அமைதியான சுபாவமே, சில நாள்களில், அடுத்தவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்திவிடும் என்பதால் தனிப்பட்ட முயற்சி எடுக்க வேண்டிய சூழ்நிலை அவளுக்கு ஏற்பட்டதில்லை.  இப்போது அந்த நிலை மாறிவிட்டது.  ஈஷ்வரைத் தவிர்க்கும் முயற்சியில் முழு மூச்சாக ஈடுபட்டிருந்தாள் உமா.

சென்னையில் இருக்கும் வரை அவனை எப்படி தூர நிறுத்துவது? வீட்டிலிருந்து வேலை பார்க்கலாமா? இல்லை வெளிநாட்டிற்குப் போகும் வரை விடுமுறை எடுத்துக் கொள்ளலாமா?  என்று கடந்த சில நாள்களாக தீவிர சிந்தனையில் இறங்கி இருந்தவள் அறியவில்லை, அவனை நிரந்தரமாக அவளுடைய வாழ்க்கையிலிருந்து வெளியேற்ற போகிறவன் அறைக்கு வெளியே தான் அமர்ந்து இருக்கிறானென்று.

உமாவின் சிந்தனையைக் கலைத்தார், அறையின் கதவைத் திறந்து, உள்ளே வந்த நர்ஸ்.  

‘இப்போ டாக்டர் வரப் போறாங்க..எல்லாரும் வெளியே காத்திருங்க.” என்று பார்வதியையும் உமாவையும் அறையிலிருந்து வெளியேற சொன்னார்.

“மருந்து கிடைச்சிடுச்சா?” என்று உமா கேட்டவுடன்,

“ம்ம்..அப்போவே வாங்கிட்டு வந்து கொடுத்திட்டாங்க..டாக்டருக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.” என்று சுந்தரி பாட்டியின் வைட்டல்ஸை சரி பார்க்க ஆரம்பித்தார்.

விழிகளை மூடிப் படுத்திருந்தார் சுந்தரி.  அவரிடம் என்ன சொல்வது? எப்படி விடைபெறுவது? என்ற குழப்பத்தில், ஒன்றுமே சொல்லாமல், அமைதியாக வெளியேறினார் பார்வதி.  அவரைத் தொடர்ந்து, அவளுடைய கைப்பையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள் உமா.

ஆண்கள் மூவரும், இப்போது, அறையின் வாயிலில் நின்று கொண்டிருந்தனர்.  பார்வதி வெளியே வந்தவுடன்,

”நாங்க கிளம்பறோம்.” என்று ராம நாதனிடம் சொல்லிக் கொண்டார் நாகேஸ்வரன்.

“ஒரு நிமிஷம்..மருந்துக்குப் பணம் வாங்கிகோங்க.” என்று அவளுடைய கைப்பையைத் திறந்தாள் உமா.

“வேணாம்..இந்தப் புது மருந்துலே அவங்க நல்லபடியா குணமாகட்டும்..உன்னோட கல்யாணத்தைப் பார்க்கணும்னு ஆசைப்படறாங்க..அது நிறைவேறட்டும்.” என்று அவளைத் தடுத்தார் பார்வதி.

அதைக் கேட்டு அப்பா, மகன் இருவரும் அறையினுள்ளும் உமாவைப் பற்றிய பேச்சு தான் நடந்திருக்கிறது என்று புரிந்து கொண்டனர். உடனே, அவர்கள் இருவரும் உமாவைப் பார்க்க, நிர்மலமாக இருந்தது அவளது முகம்.  

மின்தூக்கியில் பயணம் செய்து கீழே வந்த மூவரும் வீடு வரை அமைதியாகப் பயணம் செய்தனர்.  வீட்டிற்குள் நுழைந்தவுடன், முந்தைய தினத்தைப் போல்,

“என்ன சொன்னாங்க?” என்று கேட்டார் மீனா.  அதற்கு மூவரிடமிருந்தும் பதில் இல்லை.  ஏதோ சரியில்லை என்று உணர்ந்த மீனா, அதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை.  படுக்கையறைலிருந்து வெளியே வந்த ஏகாம்பரம்,

“என்ன டா சொன்னான் அவன்?” என்று ராம நாதனின் முடிவைப் பற்றி கேட்க,

ராம நாதன் சொன்னதை அப்படியே சொல்ல முடியாமல், அதன் தாக்கத்திலிருந்து மீண்டிராத நாகேஸ்வரன்,”நாம வேற ஏற்பாடு செய்துக்கலாம் ப்பா.” என்றார்.

உடனே,”உன்னாலே அந்த அம்மாவை நாலு வார்த்தை நாக்கைப் பிடுங்கற மாதிரி கேட்க முடியலையா? இதைககூட உன்னோட பேத்திக்காக செய்ய முடியலையா? என்று பார்வதி மீது கோபம் கொண்டார் ஏகாம்பரம்.

“என்னாலே ஏதாவது சொல்ல முடிஞ்சிருந்தா? செய்ய முடிஞ்சிருந்தா, நான் பெற்ற பொண்ணை விட்டுக் கொடுத்திருப்பேனா?” என்று, என்றுமே பதில் பேசிராத பார்வதி, அவருடையை கணவரைக் கோபத்துடன் கேட்டுவிட்டுப் படுக்கையறைக்குச் சென்று விட்டார்.

அதைக் கேட்டு அவருடைய அம்மாவின் மனவலியை உணர்ந்த நாகேஸ்வரன்,  ஆறுதல் சொல்ல, அவரைத் தொடர்ந்து படுக்கையறைக்குச் சென்றார்.

ஆஸ்பத்திரியில் என்ன நடந்தது? என்று விவரமாகச் சொல்லாமல், மாமனாரின் கோபத்திற்கு அடங்கிப் போகாமல், பதிலுக்குப் கோபத்தைக் காட்டிய மாமியரையும் அவரைப் பின் தொடர்ந்து சென்ற கணவரையும் யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தார் மீனா.  மனைவியின் கோபம் ஏகாம்பரத்தின் கோபத்தை பன்மடங்காக்கியது. அதன் விளைவாக, தங்கள் தகுதிக்குப் பொருத்தமில்லாத திருமணத்தை செய்து கொண்டதால் தான் இன்றைக்கு இத்துணை பிரச்சனைகள் என்று மறைந்து போன மகளை மனத்தில் வசைப் பாடினார் ஏகாம்பரம்.

வீட்டிற்குள் நுழைந்ததிலிருந்து வாயைத் திறக்காமல், அமைதியாக, அவனுடைய கைப்பேசியில் ஏதோ செய்து கொண்டிருந்த மகனிடம்,”என்ன டா? ஃபோன்லே ஏதோ செய்திட்டு இருக்க..புறப்பட வேணாமா..ஏற்கனவே லேட்டாயிடுச்சு.” என்றார் மீனா.

“அந்த ஏற்பாடு தான் செய்திட்டு இருக்கேன்..நீங்க எல்லாரும் ப்ளேன்லே போயிடுங்க..மத்தியானம் ஃப்ளைட்..கொஞ்ச நேரத்திலே புறப்பட்டாச் சரியா இருக்கும்.” என்றான்.

“என்ன டா, திடீர்னு இப்படிச் சொல்ற? உன்னோட பாட்டியை அலுங்காம, குலுங்காம அழைச்சிட்டுப் போகணும்னு சொல்லுவ..அவங்களுக்கு ப்ளேன் ஒத்துக்காதே டா…ஒப்புக்க மாட்டாங்க.” என்றார் மீனா.

“அவங்க வருவாங்க.” என்று பதில் சொல்லி விட்டு, உமா பார்வதிக்கு உதவியாக, ஆஸ்பத்திரியில் இருக்கும் அந்தப் பாட்டியை, அலுங்காமல் குலுங்காமல் வீட்டிற்கு அழைத்துச் செல்லத் திட்டமிட ஆரம்பித்தான் உமேஷ் பசுபதி.