அத்தியாயம் – 6

சுந்தரியின் வேண்டுகோளைக் கேட்டு பார்வதியின் உள்ளம் அதிர்ந்து போகாமல் உடைந்து போனது.  அவர் கேட்பதை  நிறைவேற்ற முடியாத நிலையில் அவர் இருக்கிறார்.  இன்றைக்கும் அவருடைய கணவரின் கட்டுப்பாட்டில், கணவரின் எண்ணங்களைச் செயல்படுத்தும் கருவியாக தான் வாழ்ந்து வருகிறார்.  அதனால் எந்த வாக்குறுதியும் கொடுக்கமுடியாமல், இயலாமையில், அமைதியாக அழுது கொண்டிருந்தார். அதை உணரும் நிலையில் சுந்தரி இல்லை.  அவர் செய்த பாவங்களுக்குப் பார்வதியிடம் பிராயச்சித்தம் வேண்டிக் கொண்டிருந்தார்.

“நீங்க ப்ரீத்தியை அழைச்சிட்டுப் போன பிறகு, நானும், இவளும் ராமோட வேலூருக்குப் போயிட்டோம்..நீங்க கொடுத்த பணத்தை வைச்சு தான் கவிதா படிச்ச ஸ்கூல்லே இவளைச் சேர்த்து விட்டான் ராம்..அந்தப் பணம் இருந்ததாலே தான் இந்துமதி இவளை வீட்டை விட்டு விரட்டலை..வேலூருக்குப் போய் ஒரு வருஷம் வரை இவ என்ன சாப்பிட்டா? எப்போ சாப்பிட்டா? எப்படி ஸ்கூல் போனா? எப்படி வளர்ந்தான்னு? எந்த விவரமும் எனக்குத் தெரியாது..என்னோட பையன் போயிட்டாங்கற துக்கத்திலே என்னைச் சுற்றி நடக்கறதிலே எனக்கு ஈடுபாடு இல்லை…

காலைலே வேலைக்குப் போனா இராத்திரி தான் வீட்டுக்கு வருவான் ராம்..நான் எதிலேயும் தலையிடாம என்னோட கூட்டிலே இருந்தேன்..பகல் வேளைலே கூட படுக்கையறை விட்டு வெளியே வர மாட்டேன்..இந்துமதிக்கு எந்த உதவியும் செய்ய மாட்டேன்..என்னையும் பார்த்துக்கிட்டு, இரண்டு குழந்தைங்களைச் சமாளிச்சுக்கிட்டு, வீட்டு வேலை செய்திட்டு..இந்துமதினாலே முடியலை..அதனாலே எப்போதும் எரிச்சலும் கோபமுமா தான் இருப்பா இந்து…

அப்போ இவளுக்கு பதினொரு வயசு..நாங்க வேலூருக்கு வந்து ஒரு வருஷம் மேலே ஆயிடுச்சு..எப்போதும் போல என்னோட அறைலே படுத்திட்டு இருந்தேன்..இவ பள்ளிக்கூடத்திலிருந்து வந்தவுடனே, பாத்ரூம்க்கு போயிட்டு வெளியே வந்து,”ஐயோ பாட்டி, ஐயோ பாட்டின்னு” கத்தினா.  படுக்கைலே படுத்திட்டு இருந்த எனக்குத் தூக்கிப் போட்டிச்சு..என்ன ஆயிடுச்சுன்னு எழுந்து போனேன்..பாவாடையைக் காட்டினா….அப்போ, இவ கத்தினைதைக் கேட்டு அறைக்குள்ளே வந்த இந்துக்கு அதைப் பார்த்து ஒரே கோபம்…

இவளை விட ஒரு வயசு பெரியவ கவிதா, அவளுக்கு முன்னே இவன்னு, ‘அதுக்குள்ளேயேவா..என்ன இரத்தமோன்னு?’ இவளைப் பிடிச்சு உலுக்கி, கத்திட்டுப் போயிட்டா..பதினொரு வயசு குழந்தைக்கு என்ன தெரியும்? இவளுக்குச் சொல்லிக் கொடுன்னு என்னாலே இந்துகிட்டே சொல்ல முடியலை.. எனக்குத் தெரிஞ்சதை இவளுக்குச் சொல்லிக் கொடுத்தேன்..இந்துவுக்குப் பயந்துகிட்டு ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் போட்டு இவ தலைக்குத் தண்ணீர் கூட ஊத்தலை..அந்த நல்லது கூட இவளுக்குக்காக நான் செய்யலை..ஆனா இவ எனக்கு பெரிய நல்லது செய்திருக்கா..இவளுக்கு நடந்தது எனக்கு நடக்காமப் பார்த்துக்கிட்டா..கட்டின புருஷனும் பெற்ற பிள்ளைங்களும் போன பிறகு நானும் ஓர் அனாதை தானே.” என்று சொல்லி விட்டு அழ ஆரம்பித்தார் சுந்தரி.

சுந்தரி பாட்டி விவரித்துக் கொண்டிருந்த அந்தத் தினம் இன்றும் உமாவின் மனத்தில் பசுமையாக இருந்தது.  ‘என்ன இரத்தமோ?’ என்று கத்தி, சித்தி அவளை உலுக்கியவுடன், ஏற்கனவே பயந்து போயிருந்தவளுக்கு கை, காலெல்லாம் நடுங்க ஆரம்பித்தது.  எங்கேயிருந்து, எப்படி? என்று ஒன்றும் புரியவில்லை. அன்று பாட்டிதான் அவளுக்கு உதவி செய்தார். என்ன செய்ய வேண்டுமென்று கற்றும் கொடுத்தார்.  அவர் கற்றுக் கொடுத்ததை தான் கல்லூரியில் சேர்ந்த பின்னும் பின்பற்றி வந்தாள். அதற்கு பிறகு அந்த நாள்களில் பாதுகாப்பாக இருக்க வேறு வழிகளைக் கற்றுத் தந்தது மீரா தான். 

ஒவ்வொரு முறையும், அவளுடைய அந்த நாள்களில், அவளுடைய துணிகளை அவளே துவைத்து, தனியாக உலர்த்தி, தலைக்குக் குளித்து என்று அனைத்தையும் சரியாகச் செய்ய முடியாமல் தடுமாறிய போது,”எந்த இரத்தமோ..இப்போவே உட்கார்ந்திட்டு..என் உயிரை வாங்குது.’ என்று சித்தி சிடுசிடுத்தது, கவிதாவிற்குச் சடங்கு செய்யும் வரை அவளுக்குப் புரியவில்லை.  இரண்டு வருடங்கள் கழித்து, ஊரை அழைத்துக் கவிதா வயதுக்கு வந்ததைக் கொண்டாடிய போது தான், தான் அவர்களுடை இரத்தமில்லை என்ற உண்மையைப் பாட்டியின் மூலம் தெரிந்து கொண்டாள். 

அதனால் தான், அவளை மட்டும் அவர்களோடு விட்டு விட்டு அவளுடைய தங்கை ப்ரீத்தியை அவளுடை இரத்த சொந்தங்கள் அழைத்துச் சென்று விட்டார்கள் என்ற தகவலைப் பகிர்ந்து கொண்டார் சுந்தரி. அன்று தான், இந்த உலகத்தில் அவளுக்குச் சொந்தமானது எதுவுமில்லை, சொந்தமென்று யாருமில்லை என்ற உண்மையைப் புரிந்து கொண்டாள் உமா.

அதற்கு பின், கல்லூரி ஹாஸ்டலில் சேரும் வரை, அந்த வீட்டில் ஒரு விருந்தாளி போல் தான் இருந்தாள்.  அப்படி இருப்பது அவளுக்குக் கடினமாக இருக்கவில்லை. ஆரம்பத்திலிருந்து அனைவரும் அவளிடமிருந்து விலகி தான் இருந்தார்கள்.  அவளுடைய பதினெட்டாம் வயதில், அவருடைய இருதய சிகிச்சைக்காகப் பணம் புரட்டக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த சித்தப்பாவிடம், அவளுக்குக் கிடைத்த பணத்திலிருந்து பெரும் பங்கைக் கொடுத்த போது, பாட்டியும் சித்தப்பாவும் அவளுடைய கருணைக்கு நன்றி தெரிவித்தார்கள். ஆனால், இன்று வரை, சித்தியும் கவிதாவும் அதை அவளுடைய கருணை, கரிசனமாகப் பார்க்கவில்லை, கடமையாக தான் பார்க்கிறார்கள்.  அவளிடம் இப்போதும் அதே போல் தான் நடந்து கொள்கிறார்கள். 

அறையினுள்ளே இருந்த மூவரும் உணர்ச்சி சுழலில் சிக்கிப் பேச முடியாமல் தவித்துக் கொண்டிருந்தனர்.

அறையின் வெளியே, வராண்டாவில் நின்று கொண்டு, “இல்லை..டாக்டர் வந்தா தான் தெரியும்..மருந்து எழுதிக் கொடுத்திருக்கார்..சாயங்காலம் அவ வேலைக்குப் போகணும்..இல்லை அவகிட்டே தான் ஃபோன் இருந்திச்சு..ரூம்லே சிக்னல் சரியா இல்லை அதான் அவ பேசலை..இப்போ என்கிட்டே இருக்கு..சரி..சரி..அணைச்சிடறேன்.” என்று அவருடைய மனைவியுடன் கைப்பேசியில் பேசி முடித்த பின், அதை அணைத்து பேண்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டார் ராம நாதன்.  அங்கே நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்த நாகேஸ்வரன் அருகே அமர்ந்தவர், சில நிமிடங்கள் கழித்து,

“நானும் இந்த ஆஸ்பத்திரிலே தான் என்னைக் காட்டறேன்..எனக்கு பேஸ்மேக்கர் (pacemaker) வைச்சு கொஞ்சம் வருஷங்களாயிடுச்சு..கவிதாவோட பட்டப்படிப்பு முடியற வரை எப்படியோ கஷ்டப்பட்டு வேலைக்குப் போயிட்டு இருந்தேன்..அவ படிப்பை முடிச்சவுடனே வேலையை விட்டிட்டேன்..அவளை மேலே படிக்க வைக்கலை..என் மனைவியோட சொந்தத்திலே மாப்பிள்ளை பார்த்து அவளுக்குக் கல்யாணம் செய்து வைச்சிட்டேன்..அவளுக்கு ஒரு மகள் இருக்கா..மாப்பிள்ளை மத்திய அரசுலே வேலை செய்யறார்..இங்கே கே கே நகர்லே இருக்கற அரசு குடியிருப்புலே தான் இருக்கா…

என்னோட கம்பெனிலே கிடைச்ச ஸெட்டில்மெண்ட்லே அவ கல்யாணத்தை முடிச்சிட்டு, மீதியை பேங்க்லே போட்டு வைச்சிருக்கேன்..பொண்ணு மாப்பிள்ளை பக்கத்திலே இருக்கணும்னு வேலூரைக் காலி செய்திட்டு நானும் இங்கேயே வந்திட்டேன்.. நாங்க இங்கே வந்தவுடனே உமாவும் ஹைதராபத்திலேர்ந்து மாற்றல் வாங்கிட்டு வந்திட்டா..அவ இங்கே வந்த புதுசுலே அவளுக்குத் துணையா அவளோட வீட்டிலே எங்கம்மா கொஞ்ச நாள் இருந்தாங்க..திடீர்னு அவங்களுக்கு மயக்கம், தலை சுத்தல் வர ஆரம்பிச்சுது..தனியாப் பகல் வேளைலே இருக்கறது கூட அவங்களுக்குக் கஷ்டமாயிடுச்சு..அதுக்கு அப்புறம் எங்களோட போரூர்லே தான் இருக்காங்க..அவங்களுக்கு உமாவைத் தனியா விட மனசில்லை..அதான் அப்பப்போ அங்கே போய் தங்குவாங்க..நானும் என் மனைவியும் துணைக்குப் போவோம்..நாங்க மூணு பேரும் அவளோட இரண்டு மூணு நாள் இருந்திட்டு வருவோம்…

என்னோட உடல் நிலைலே அதுதான் நான் செய்யற ஒரே பயணம்..வேற எங்கேயும் போகறதில்லை….கடைசியா வெளியூர் போனது..மதுரை வீட்டை விற்க தான்..பேஸ்மேக்கர்னாலே என்னோட கைப்பேசியை நிறைய உபயோகிக்கறதில்லை…என்கூடவே அதை வைச்சுக்கிட்டா.. அணைச்சு தான் வைச்சுக்கணும்..ஆன்லே வைச்சுக்கிட்டா எனக்கு நல்லதில்லை..யாராவது முக்கியமாப் பேசணும்னு சொன்னா, அவங்களை நேர்லே வரச் சொல்லிடுவேன்..நேத்து உங்களை உமா வீட்டுக்குக் கூப்பிட்டதற்கு அதுவும் ஒரு காரணம்..இன்னொரு காரணம் உங்களுக்கு உமாவை அறிமுகப்படுத்தி வைக்கணும்னு நினைச்சேன்..பத்து வயசுலே அவளைப் பார்த்ததற்கும் இப்போ பார்க்கறத்துக்கும் நிறைய மாற்றங்கள் இருக்கும் தானே.” என்றார் ராம நாதன்.

அப்போது மின்தூக்கியின் கதவு திறக்க அதிலிருந்து வெளியே வந்தான் உமேஷ். அவர்கள் அருகில் வந்தவுடன்,”மருந்து வாங்கிட்டு வந்திட்டேன்..யார்கிட்டே கொடுக்கணும்?” என்று ராம நாதனிடம் விசாரித்தான்.

வரண்டாவின் கோடியிலிருந்த அறையைக் காட்டி,”அங்கே நர்ஸ் இருப்பாங்க..அவங்ககிட்டே கொடுக்கணும்..நீங்களே கொடுத்திடுங்க தம்பி.” என்றார்.  அவர் சொன்னபடி அந்த மருந்தை அங்கே ஒப்படைத்து விட்டு அவனுடைய அப்பாவின் அருகில் அமர்ந்து கொண்டான் உமேஷ்.  அவனுடைய முகத்தில் தீவிர சிந்தனை.  அதைக் கவனிக்கும் நிலையில் நாகேஸ்வரன் இல்லை.  ஏனென்றால் அவருடைய முகத்திலும் தீவிர சிந்தனை.  உமேஷ் இருந்ததைப் பொருட்படுத்தாமல் பேச்சைத் தொடர்ந்தார் ராம நாதன்.

“அண்ணன் பெரிய பதவிலே இருந்தாலும் கொஞ்ச வருஷமா தான் அந்தக் கம்பெனிலே வேலை பார்த்திட்டு இருந்தார்..அவங்ககிட்டேயிருந்து பெரிய தொகை எதுவும் கிடைக்கலை….அவருக்குக் கிடைச்ச கூடுதல் வருமானத்தை எல்லாம் இலவசப் பள்ளிக்கூடத்திற்கும் மருத்துவமனைக்கும் கொடுத்திட்டு வந்திருக்கார்..அதனாலே சேமிப்பும் அதிகமில்லை..அவர் போன பிறகு என்னோட வருமானத்திலே அவரோட இரண்டு பொண்ணுங்களையும் எப்படி வளர்க்கப் போறேன்னு எனக்குக் கவலையாயிடுச்சு…

என் மனைவிக்கு எப்போதும் என் பொண்ணு கவிதா தான் முக்கியம்..உமாவோட உங்களுக்கு இரத்தம் சம்மந்தமில்லைன்னு அவளை உங்களோட அழைச்சிட்டுப் போக முடியாது, ப்ரீத்தியை மட்டும் அழைச்சிட்டுப் போகப் போறீங்கன்னு சொன்னவுடனே, வேற வழியில்லாம, உமாவை நல்லபடியா, கவிதாவைப் போல வளர்க்க, எங்கம்மா உங்ககிட்டேயிருந்து பணம் வாங்கினாங்க..அந்தப் பணத்திலே தான் அவளைக் கான்வென்ட் ஸ்கூல்லே படிக்க வைச்சேன்..அவளோட கல்லூரி செலவையெல்லாம்  பார்த்துக்கிட்டேன்…

அவ பெயர்லே என்னோட அண்ணன் பணம் போட்டிருந்தார்..வட்டியெல்லாம் சேர்ந்து அவளோட பதினெட்டாவது வயசிலே அவளுக்கு அது கிடைக்கும்படி செய்திருந்தார்…

எனக்கு இருதய கோளாறு ஆன போது பொறியியல் கல்லூரிலே முதல் வருஷம் படிச்சிட்டு இருந்தா உமா.  சிகிச்சைக்குப் பணமில்லாம கஷ்டப்பட்டேன்..மருந்து, மாத்திரை செலவைச் சமாளிக்க முடியலை..அப்போ என்னோட அண்ணன் போட்டு வைச்சிருந்த பணம் அவ கைக்குக் கிடைச்சது..அதிலே பெரும் பங்கு எனக்கே கொடுத்திட்டா…

அவளுக்கு அவளைப் பற்றிய உண்மை தெரியும்..எங்க குடும்பத்தோட அவளுக்கு இரத்த சம்மந்தமில்லைன்னு முன்னாடியே அவகிட்டே அம்மா சொல்லிட்டாங்க..அது தெரிஞ்சும் என்னோட சிகிச்சைக்குப் பணம் கொடுத்தா..இன்னைக்கும் எங்களோட செலவுக்குப் பணம் கொடுக்கறா..இந்த ஆஸ்பத்திரி செலவெல்லாம் அவளோடது தான்..இப்போ நான் உங்க முன்னாடி இப்படிப் பேசிட்டு இருக்கறத்துக்குக் காரணம் உமா தான்..அவ இல்லைன்னா நான் அப்போவே இந்த உலகத்தை விட்டுப் போயிருப்பேன்…

அப்படி நடந்திருந்தா நீங்க ப்ரீத்திக்கு எப்படிக் கல்யாணம் செய்திருப்பீங்களோ அந்த மாதிரியே செய்திடுங்க…உமாவுக்கு எந்த நல்லதும் செய்யாம என்னோட சொந்த அண்ணன் பொண்ணா இருந்தாலும் ப்ரீத்திக்கு நல்லது செய்ய நான் விரும்பலை..நான் உயிரோட இல்லைன்னு சம்மந்தி வீட்லே சொல்லிடுங்க.” என்றார் ராம நாதன்.