சங்கரன் இதைக் கவனித்து , ‘நாளை பிரச்சினைகள் வந்தால் மகன் கஷ்டப்படுவான்’ என்பதை உணர்ந்தார் .
தான் நேரிடையாக தலையிட்டால் பிடிக்காது , ஏற்றுக் கொள்ள மாட்டாள் என்பதை உணர்ந்து , ராஜியிடமே தன்மையாகப் பேசி , அவரை யோசிக்க வைத்து, செயல்படுத்த முயன்றார்.
பெரும்பாலும் தோல்வியையே தழுவினார் . மகன் மீதான கண்மூடித்தனமான பாசம் , ராஜியை செயல்படுத்தவிடவில்லை .
மகனின் நல்வாழ்விற்காக விடாமல் முயன்று கொண்டே தான் இருந்தார் சங்கரன் . அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் தான், “அவன் விழட்டும் ராஜி , அப்போது தான் கற்றுக் கொள்வான்…” என்று சொல்லிப் பார்த்தார் .
ராஜி அதை ஏற்றுக் கொள்ளாமல் , “என் மகன் கஷ்டப்பட வேண்டுமா?” என்று வாதம் செய்தார் .
“வாழ்க்கை ஒரே மாதிரி இருக்காது ராஜி , எதையும் சமாளிக்கும் தைரியமும் வல்லமையும் வரவேண்டும்…” என்று எடுத்துரைக்க முயல,
“விஸ்வநாதனின் மகள் கஷ்டப்படாமல் வளர்த்தாள் , அப்படித்தான் இன்றும் இருக்கிறாள் . அதே போல் ராஜியின் மகனும் நன்றாகத்தான் இருப்பான். நான் நன்றாக அமைப்பேன்…” என்றார் அகம்பாவமாய் .
‘உனக்குச் சங்கரன் அமைந்தது போல் அவனுக்கும் வாழ்க்கைத் துணை அமைய வேண்டுமே’ என்று அவரால் மனதில் மட்டுமே நினைக்க முடிந்தது .
‘இனி பேசிப் பயனில்லை’ என்பதைப் புரிந்து கொண்ட சங்கரன் , கடவுள் மேல் பாரத்தைப் போட்டு விட்டு , கடையை முன்னேற்றுவதில் முனைப்பானார் .
படிப்பு முடிந்து அப்பாவுடன் கடையில் இணைந்து கொண்டான் .
இயல்பாகவே விஸ்வாவிற்கு வியாபாரம் மீது நாட்டமும் திறமையும் இருந்தது. ஆர்வமுடன் கற்றுக் கொண்டான் .
ஏற்கனவே பல வருடங்களாக இருக்கும் ஸ்தாபனம் என்பதால் எல்லாம் சக்கரம் போல் சரியாகச் சுழன்றது. விஸ்வா, தன் திறமையைக் காட்டவோ , மாற்றம் கொண்டு வரவோ எதுவும் இல்லை . இயல்பு போல் நடந்தது .
உனக்கு என்று ஒரு அடையாளம் வேண்டுமென்ற சங்கரனின் உந்துதலால், இப்போது சென்னைப் புறநகர் பகுதியான போரூரில் மற்றொரு கிளைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது . இன்னும் ஒரு வருடத்தில் அந்தக் கடையும் தொடங்கப்பட்டு விடும் .
ராஜி கூட, “எதற்கு இன்னொரு கடை?” என்று கேட்க ,
“இரண்டு பேருக்கு இந்தக் கடையில் வேலை இல்லை ராஜி. நான் வயதாகி ஓய்வு எடுக்கும் போது இவன் இந்தப் பொறுப்பை எடுத்து கொண்டால் போதும். மேலும் அவனே அஸ்திவாரத்தில் இருந்து எல்லாம் செய்யும் போது தான் கஷ்ட நஷ்டங்கள் தெரியும் . நிறைய கற்றுக் கொள்ள முடியும் . அப்போது தான் நாளை வரும் தொழில் எதிரிகளை எதிர்த்து நிலைத்து நிற்க முடியும்.”
“நமக்கு இருக்கும் சொத்தே மூன்று தலைமுறைக்குப் போதும் , எதற்கு அவனைக் கஷ்டப்படுத்துகிறீர்கள்?” என்று ராஜி கோபப்பட ,
“வியாபாரத்தில் தலையிடாதே ராஜி , எல்லாம் காரணமாகத் தான் சொல்கிறேன் . நீ சொல்கிற மூன்று தலைமுறை சொத்தைப் பாதுகாக்க அவனுக்கு தெரிய வேண்டாமா?”
“என் பிள்ளைக்கு எந்தக் கெட்டப் பழக்கமும் கிடையாது..” என்றார் வேகமாக .
“அது எனக்குத் தெரியாதா ? காலம் வேகமாக மாறுகிறது… வருங்காலத்தில் தொழிலில் வரும் பிரச்சினைகளைச் சமாளிக்க அவனுக்குத் தெரிய வேண்டாமா? நாம் இருக்கும் போதே முடிந்த வரை அடித்தளம் போட்டு விட வேண்டும் , கற்றுக் கொடுத்து விட வேண்டும் என்று நினைக்கிறேன்…” என்று ராஜியைத் தீர்க்கமாகப் பார்த்தார்.
“இந்த நான்கு வருடத்தில் நிறைய கற்று உள்ளான் . அதை வைத்துப் புது கிளையைப் பிள்ளையார் சுழியில் இருந்து ஆரம்பித்து நடத்தட்டும் . நாம் கூட இருந்து வழி நடத்துவோம் . இது அவன் நன்மைக்காக நான் செய்வது , இதற்கு மேல் இதைப் பற்றிய பேச்சு வேண்டாம்..” என்று முடித்தார் .
தொழில் பற்றிய முடிவு மற்றும் விஸ்வாவின் ஆர்வம் ராஜியை அமைதியாக்கியது .
விஸ்வாவும் கிளை வேலையை ஆரம்பித்திருக்க , சங்கரனும் தள்ளி நின்று கண்காணித்தார் . உதவி தேவைப்படும் இடங்களில் போய் நின்றார் . இப்பொழுது தான் அப்பாவும் மகனும் நெருங்க ஆரம்பித்துள்ளனர் .
விஸ்வா இருபத்தியெழு வயதைத் தொட… , ராஜி மகனுக்குத் திருமணம் செய்ய முடிவு செய்து, சிறந்த பெண்ணைத் தேடிக் கொண்டிருக்கிறார் .
அத்தியாயம் 8
கோகிலாவின் பெரியம்மா பேத்தி வித்யா திருமணத்திற்கு, ராமநாதன் குடும்பத்தினர் அனைவரும் சென்னை வந்திருந்தனர்.
சாந்தியின் கணவர் ராமலிங்கம் சென்னையில் பல கிளைகள் உள்ள புகழ் பெற்ற உணவகத்தை நடத்தி வருகிறார் . ரஞ்சனியும் வித்யாவும் சிறுவயதில் இருந்தே நல்ல நெருக்கம் .
ஆகையால் ரஞ்சனி மணமகள் கூடவே இருந்தாள் .
ராமலிங்கம், ராஜேஸ்வரிக்கு ஒன்று விட்ட அண்ணன் முறை , அதுமட்டுமின்றி தொழில் முறையிலும் நல்ல பழக்கம் . ஆகையால் ராஜேஸ்வரியின் குடும்பமும் மாப்பிள்ளை அழைப்பிற்கு வந்திருந்தனர் .
முதலிலே ராஜேஸ்வரியும் சங்கரனும் வந்து விட , விஸ்வா பின்னர் இணைந்து கொண்டான் .
அங்கு ரஞ்சனி அழகிய நீல நிற லெகங்காவில் , அதற்கேற்ப அணிகலன்கள் அணிந்து , அழகாகச் சுற்றிக் கொண்டிருந்தாள் .
அனைவரிடமும் கலகலத்தபடி , நொடிக்கொருமுறை கன்னக்குழி விழச் சிரித்தபடி , வலம் வந்து கொண்டிருந்தாள் .
ராஜேஸ்வரியின் கண்ணில் ரஞ்சனி பட , ஆர்வமானார் . அருகில் இருந்த சொந்தத்திடம் ரஞ்சனியைப் பற்றி விசாரித்தார்.
விஸ்வா வர , மூவரும் மேடைக்குச் சென்று தம்பதிகளை வாழ்த்திவிட்டு வந்தனர் .
வித்யா அருகில் ரஞ்சனி இருக்க , விஸ்வா ரஞ்சனியை ஆர்வமாகப் பார்த்தான் .
மேடையில் இருந்து இறங்கியவுடன், அவர்கள் ஆடிட்டர் சுவாமிநாதன் , அவரது மகன் ரகுநந்தனுடன் வர , அமர்ந்து பேசத் துவங்கினர் .
சுவாமிநாதன் இரு குடும்ப நிறுவனங்களுக்கும் ஆடிட்டராக இருக்கிறார் . சுவாமிநாதனின் மனைவி சுந்தரி , பெயருக்கேற்ப சுந்தரமானவர் .
ஆனால் பிறவியிலேயே வாய் பேச முடியாதவர். மகள் சௌமியா திருமணமாகி அமெரிக்காவில் இருக்கிறாள் . மகன் ரகு முதல் முயற்சியிலே சி.ஏ முடித்து , இரண்டு வருடமாக , மும்பையில் உள்ள பெரிய ஆடிட்டர் .ஃப்ர்மில் பணியாற்றுகிறான் .
இதில் ரகுவும் விஸ்வாவும் ஒரே கல்லூரி , ஆனால் ரகுநந்தன் விஸ்வாவை விட இரண்டு வருடம் ஜுனியர். அதனால் இருவருக்கும் நல்ல பழக்கம் இருந்தது. இருவரும் சகஜமாகப் பேசத் துவங்கினர் .
சுவாமிநாதன் மகனைத் தன் தொழில் வட்டத்தில் அறிமுகப்படுத்த , பழக்கப்படுத்தவே இத்திருமணத்திற்கு அழைத்து வந்திருந்தார் .
“ஏன் ரகு? அப்பா ஃபர்மில் சேராமல் வெளியே வேலை பார்க்கிறாய் ?”என்று சங்கரன் கேட்க,
“இரண்டு மூன்று வருடம் வெளியே வேலை பார்த்து வந்தால் நிறைய அனுபவம் கிடைக்கும் என்று பார்க்கிறேன் அங்கிள் . அதன் மூலம் , எங்கள் நிறுவனத்தை அடுத்து கட்டத்திற்கு எடுத்துச் செல்லாம் என்று யோசித்திருக்கிறேன்…” என்று தன் கருத்தைச் சொல்ல ,
“வெரி குட் ரகு , சரியான முடிவு , இப்படித்தான் தெளிவாக இருக்க வேண்டும்…” என்று பாராட்டும் போதே சங்கரன் குரலில் ஒரு ஏக்கம் இளையோடியது .
“சாப்பிடப் போகலாமா? “என்று ராஜி கேட்க ,
சங்கரன் இவர்களையும் அழைக்க , “இல்லை சிறிது நேரம் ஆகட்டும் , நீங்கள் போங்கள் . நாங்கள் பின்னர் சாப்பிடுகிறோம்…” என்றார் சுவாமிநாதன் .
இவர்கள் நகர, மற்றொரு தொழில்துறை நபர் வர , சுவாமிநாதன் மகனை அறிமுகப்படுத்தினார்.
மேலும் சில நண்பர்கள் வர, சுவாமிநாதன் பேசத் துவங்க , ரகுநந்தன் மேடையை வேடிக்கைப் பார்க்க ,
துறுதுறுவெனச் சுற்றிக் கொண்டிருந்த ரஞ்சனி கண்ணில் பட , ரசனையோடு அவளைப் பார்க்க ஆரம்பித்தான் .
கூட்டம் குறைய , ரஞ்சனியை அழைத்துக் கொண்டு வந்து சுவாமிநாதனிடம் அறிமுகப்படுத்தினார் ராமலிங்கம் .
ரஞ்சனி, தான் இன்டர் தேர்ச்சி பெற்றுவிட்டதையும் , முதல் முயற்சியிலே சி.ஏ. பாஸ் செய்ய விரும்புவதையும் பற்றிக் கூற ,
“சந்தோஷம் . முடித்துவிட்டு வாம்மா , நம் ஃபர்மிலே வேலை உண்டு…” என்றார் சுவாமிநாதன் .
“நன்றி அங்கிள்..”
மற்றொரு நண்பர் வர , “இவன் என் மகன் ரகுநந்தன் , நீ ஆசைப்பட்டது போல் முதல் முயற்சியிலே வெற்றி பெற்றவன் . உனக்கு ஏதாவது விவரம் தேவையெனில் இவனைக் கேளும்மா…” என்று சுவாமிநாதன் அறிமுகப்படுத்தி விட்டு, நண்பர்களுடன் அரட்டை அடிக்கத் துவங்கினார் .
“ஹாய் ரஞ்சனி…… , நான் ரகுநந்தன்…” என்று மயக்கும் புன்னகையோடு கையை நீட்ட ,
ரஞ்சனியும் சிரித்தபடி கை குலுக்கினாள் . பின் சிறிது நேரம் படிப்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர் . அதற்குள் அவளை யாரோ அழைக்க ,
“பின்னர் பார்ப்போம்…” என்று வேகமாக விடை பெற்றாள் .
அவள் நகர்ந்த பின் தான் , அவள் மீது ஆர்வம் தோன்றியதை உணர்ந்தான் . ‘தொலைபேசி நம்பர் வாங்கவில்லையே’ என்று வருந்தினான் . பின்னர், தெரிந்த குடும்பம் தானே பார்த்துக் கொள்ளலாம் என்று நினைக்க . சுவாமிநாதன் சாப்பிட அழைக்க , நகர்ந்தான் .
ரஞ்சனி, அப்பாவைத் தேடியபடி கல்யாண மண்டபத்தின் பார்க்கிங் ஏரியாவிற்கு வர , எதிர்பாராதவிதமாக விஸ்வா மீது மோதினாள் .
அவன் தன்னைச் சமாளித்து , அவளையும் விழாதபடி பிடித்து நிறுத்தினான் .
“ஸாரி.. ஸாரி…” என்று ரஞ்சனி தடுமாற ,
“பரவாயில்லை…” என்ற போதே , அங்கே ராமநாதன் வர, “என்னாச்சும்மா?” என்று விசாரித்தார் .
“ஒன்றுமில்லை அப்பா , உங்களைத் தேடியபடி அங்குமிங்கும் பார்த்துக் கொண்டே வந்தேனா? இவர் வந்ததைக் கவனிக்காமல் மோதி விட்டேன்…” என்று அசடு வழிந்தாள் .
உடனே ராமநாதன் , “ஸாரி தம்பி…” என ,
“பரவாயில்லை அங்கிள் , நானும் போனைப் பார்த்துக் கொண்டே வந்தேன் அதான்…” என்று இழுக்க , மூவரும் சிரித்தனர் .
பின், “தம்பி நீங்கள்….?” என ராமநாதன் வினவ , அங்கே சிறிய அறிமுகப்படலம் நடந்தது .
அப்போது காரை எடுக்கச் சென்ற மகன் , வெகு நேரம் ஆகியும் வரவில்லை என்பதை உணர்ந்து ராஜி போனில் அழைக்க ,
விஸ்வா அழைப்பை எடுத்து , “வரேன் அம்மா..” என்றான் ,
பின், சின்னத் தலையசைப்போடு விடைபெற்றான் .
அத்தியாயம் 9
ஒரு மாதம் சென்றிருக்க , ராஜேஸ்வரி ராமலிங்கத்தை் போனில் அழைத்து0,
“அண்ணா , விஸ்வாவிற்கு வரன் பார்க்க ஆரம்பித்திருக்கிறேன்…”
“சந்தோஷம் ராஜி , சொல்லும்மா ….”
“நம்ம வித்யா கல்யாணத்தில் , அவளுக்குத் துணையாக ஒரு பெண் இருந்தாலே …” என்று இழுக்க ,
“யார்…?” என்று ராமலிங்கம் யோசிக்க ,
“நான் லேசாக விசாரித்தேன் , மதுரையில் இருக்கும் அண்ணியின் தங்கச்சி மகள் என்றார்கள்..” என்று எடுத்து கொடுக்க ,
“ஓ…! நீ நம்ம ரஞ்சனியைச் சொல்கிறாயா ?”
“ஆமாம் அண்ணா , ரஞ்சனி என்று தான் பெயர் சொன்ன ஞாபகம்….”
“நல்ல தேர்வு ராஜி . நல்ல குடும்பம்…” என்று அவர்களைப் பற்றிய முழு விவரங்களைத் தந்தார் .
பின், “பெண் சி.ஏ. படிக்க வேண்டும் என்றாளே……?” என்று இழுக்க,
“நமக்கு ஏற்ற குடும்பம் என்கிறாய் , நல்ல பெண் என்கிறாய், படிப்பு மட்டும் தானே ஒரே தடை , கல்யாணத்திற்குப் பிறகு கூட படிக்கட்டுமே அண்ணா…”
“நல்ல செய்தியை எதிர்பார்க்கிறேன்..” என்று தன் காரியத்தில் கண்ணாக ராஜி வலியுறுத்த ,
“சரிம்மா…” என்று யோசனையோடு போனை வைத்தார் .
வீடு வந்தவர் சாந்தியிடம் இதைப்பற்றி பேச , “எல்லாம் சரிதான் , விஸ்வா , சங்கரன் அண்ணன் பற்றி ஒன்றும் பிரச்சனை இல்லை , ஆனால் உங்கள் தங்கைதான்….” என்று தயங்க,
“கொஞ்சம் “நான் தான்” என்று இருக்கிறவள் தான் . ஆனால் இன்றும் சங்கரன் குடும்பத்தோடு இணக்கமாக தானே இருக்கிறாள் . நல்லது கெட்டதைச் சரியாக எடுத்துச் செய்கிறாள். தகுதி குறைந்த இடம் என்றெல்லாம் மரியாதை இல்லாமல் நடத்தவில்லை . நம்மைச் சுற்றி எத்தனை குடும்பங்களில் மாமியார் மருமகள் போக்குவரத்தே இல்லாமல் இருப்பதைப் பார்க்கிறோம்…”என்று தங்கைக்காகப் பேச,
“ஆமாம் , அவர்கள் மாமியார் மாமனார் இருக்கும் வரை ஒரளவு நல்ல போக்குவரத்து தான்” என்று சாந்தியும் ஒத்துக் கொண்டார்.
ஆனால் சீரான உறவுக்கு இருபக்கத்தின் நிலைப்பாடும் , செயல்பாடுகளும் முக்கியம் என்பதை யோசிக்காமல் விட்டனர் .
“நாளை வெள்ளிக்கிழமை , அத்தானிடம் பேசுவோம் , அப்படியே கோகிலாவிடமும் நமக்குத் தெரிந்தவற்றையும் மறைக்காமல் சொல்லிவிடுவோம். மற்றபடி அவர்கள் தீர விசாரித்து முடிவு எடுக்கட்டும்..”
ராமலிங்கமும் ஆமோதிப்பது போல் தலையசைத்தார் .
மறுநாள் ராமநாதனை அழைத்து , ராஜேஸ்வரியின் குடும்பம், பாரம்பரியம் , தொழில் மற்றும் விஸ்வாவைப் பற்றியும் அனைத்து விவரங்களையும் கூறினார்.
வீட்டில் கலந்து பேசிச் சொல்வதாக , ராமநாதன் போனை வைத்தார் .
கோகிலாவிடம் விவரத்தைச் சொல்ல ,
“அத்தான் முன்னெடுக்கிறார் என்றால் நல்ல இடமாகத்தான் இருக்கும் . நானும் சாந்தியிடம் பேசுகிறேன். நீங்களும் உங்களுக்குத் தெரிந்த வட்டாரத்தில் கேளுங்கள். பையன் போட்டோ எதுவும் சாந்தியிடம் இருக்கா ?” என்று கேட்க வேண்டும் என்று அடுக்க,
“நான் நேரில் பார்த்தேன் கோகி , பையன் நன்றாக இருக்கிறான்…” என்று பார்க்கிங்கில் நடந்தவற்றை விளக்க ,
“ஓ…! அப்ப சரி , நாம் அடுத்து நடக்க வேண்டியவற்றைப் பார்ப்போம் .”
“இல்லை கோகி , ரஞ்சனி படிக்க வேண்டும் என்றாளே….?” என்று ராமநாதன் தயங்க ,
“அதான் முதலில் விசாரிக்கச் சொல்கிறேன் , திருப்தியாக இருந்தால் மட்டுமே பிள்ளைகளிடம் இதைப் பற்றிப் பேசுவோம் இல்லையென்றால் இப்படி ஒரு பேச்சு நடந்ததே அவர்கள் காதுக்கே போக வேண்டாம்.”
“நீ சொல்வதும் சரி தான் , விசாரிக்கிறேன்…” என்றார் ராமநாதன்.