தன்னுடைய கையை உமா பற்றிக் கொண்டவுடன் அவர் என்ன உணர்ந்தார் என்று பார்வதி உணரும் முன் மின்தூக்கியின் கதவு திறக்க, முதலில் உள்ளே நுழைந்த நாகேஸ்வரன், “உள்ளே வாங்க ம்மா.” என்று அவருடைய கையை நீட்ட, உமாவிடமிருந்து கையை விடுவித்துக் கொண்டு மகனின் கையைப் பற்றிக் கொண்டு உள்ளே சென்றார் பார்வதி. அடுத்து உள்ளே வந்த உமா, இரண்டாவது தளத்திற்குச் செல்ல பொத்தானை அழுத்திவிட்டு, பார்வதியின் அருகில் நின்று கொண்டாள்.
பார்வதியின் பார்வை அவளை விட்டு விலகவே இல்லை.அவளோ பார்வதியின் புறம் திரும்பவே இல்லை.சில நொடிகளில் இரண்டாம் தளம் சென்றடைந்தனர்.சுந்தரி பாட்டி இருந்த அறையின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள் உமா.மிகச் சிறிய அறை.கட்டிலில் படுத்திருந்த சுந்தரி விழித்திருந்தார். கட்டில் அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தார் ராம நாதன். நேற்று பார்த்ததை விட களைப்பாக, சோர்வாக தெரிந்தார் சுந்தரி.கவலையாக தெரிந்தார் ராம நாதன்.
அறையின் உள்ளே நுழையும் போதே,”ப்ரீத்தியோடு பாட்டியும் மாமாவும் வந்திருக்காங்க.” என்று அறிவித்தாள் உமா.அதைக் கேட்டு அம்மா, மகன் ஜோடிக்கு சுருக்கென்று வலி ஏற்பட்டது. அவர் உட்கார்ந்திருந்த நாற்காலியிலிருந்து எழுந்து கொண்ட ராம நாதன்,”நீங்க உட்காருங்க.” என்று பார்வதியை அதில் அமர வைத்தார்.பார்வதி அமர்ந்தவுடன், சுந்தரியிடம்,
”உங்களை ஆஸ்பத்திரிலே சேர்த்திருக்குண்ணுஉமா சொன்னா..அதான் பார்க்க வந்தோம்.” என்றார் நாகேஸ்வரன்.
அதற்குப் பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்தார் சுந்தரி பாட்டி. ராம நாதன் தான்,
“இரத்தக் கொதிப்பு அதிகமாகி, வாந்தி எடுத்தாங்க..அங்கே, உமாவோட வீட்டுப் பக்கத்திலே ஆஸ்பத்திரி வசதி இல்லை..அதான் இராத்திரியே இங்கே அழைச்சிட்டு வந்து சேர்த்திட்டோம்..அம்மாவைப் பார்க்கற டாக்டர் இந்த ஆஸ்பதிரிலே தான் இருக்கார்..என் வீடும் இங்கே பக்கத்திலே தான் இருக்கு.” என்றார்.
அவர் பகிர்ந்து கொண்ட தகவலிருந்து நேற்று நாகேஸ்வரன் மனத்தில் உமாவைப் பற்றி எழுந்த கேள்விகளுக்கு விடை கிடைத்தது.நேற்று அவர்கள் சந்திப்பு நிகழ்ந்த இடம் உமாவின் வீடு.ராம நாதனின் வீடு போரூரில் இருக்கிறது.அவருடைய மகள் கவிதா கே கே நகரில் இருக்கிறாள். உமா மட்டும் தனியாக அவளுடைய வீட்டில் இருக்கிறாள் என்று உறுதியானது.
அதன் பின் ராம நாதனும் மௌனமானார்.
சுந்தரி பாட்டிக்கும் பார்வதியுடன் பேச வேண்டியிருந்தது.ஆனால், எப்படி என்று தான் தெரியவில்லை.அப்போது,
”மருந்து எங்கே உமா?” என்று விசாரித்தார் ராம நாதன்.
அவள் பதில் அளிக்குமுன்,”அந்த மருந்து இங்கே கிடைக்கலை..அந்தச் சீட்டை என் பையன்கிட்டே கொடுத்து வாங்கிட்டு வரச் சொல்லியிருக்கேன்.” என்றார் நாகேஸ்வரன்.
அப்போது, உமாவிடமிருந்த ராம நாதனின் கைப்பேசி ஒலி எழுப்பிய சில நொடிகளில் நின்று போனது.இரண்டு, மூன்று முறை விட்டு விட்டு கைப்பேசி அழைக்க, அதை எடுத்துப் பார்த்தவள்,”சித்தி ஃபோன் செய்யறாங்க.” என்றாள்.
உமாவிடமிருந்து அவருடைய கைப்பேசியை வாங்கிக் கொண்டு,”இங்கே ஃபோன் பேச முடியாது..நான் வெளியே போய்ப் பேசிட்டு வரேன்.” என்று அறையை விட்டு வெளியேறினார் ராம நாதன். உடனே,
“அம்மா, நீங்க பேசுங்க..நான் வெளியே இருக்கேன்.” என்று நாகேஸ்வரனும் அறையிலிருந்து வெளியேறினார்.
பெரியவர்கள் இருவரும் தனிமையில் பேசிக் கொள்ளட்டும் என்று நினைத்து நாகேஸ்வரனைத் தொடர்ந்து அறையிலிருந்து வெளியேற நினைத்த உமாவிடம்,
“நீ இங்கேயே இரு உமா.” என்று கட்டளையிட்டார் சுந்தரி.அதற்கு அடிப்பணிந்து, அறையின் சுவரில் சாய்ந்து நின்று கொண்டாள் உமா.
எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது என்று பார்வதி யோசித்துக் கொண்டிருந்த போது, அவர் முற்றிலும் எதிர்பார்க்காத விஷயத்தைப் பகிர்ந்து கொண்டு உரையாடலை ஆரம்பித்தார் சுந்தரி.
“அது ஒரு ஞாயிற்றுக் கிழமை..இவளையும் சின்னவளையும் எண்ணெய் தேய்ச்சுக் குளிக்க வைச்சிட்டு, என்கிட்டே பேத்திங்க இரண்டு பேருக்கும் டிஃபன் கொடுக்க சொல்லிட்டு, அடுத்த வாரத்திற்குக் காய்கறி வாங்கிட்டு வர உங்க பொண்ணும் என் பையனும் கிளம்பிப் போனாங்க..” என்று சொல்லி விட்டு, அதற்கு மேல் சொல்ல முடியாமல், இத்தனை வருடங்கள் கழித்தும் அதே வலி அவரைத் தாக்க, சில நொடிகள் கழித்து,”திரும்பி வரவேயில்லை.. நான் அவனோட வீட்டுக்கு வந்தா, ப்ரீத்திக்கு தான் எல்லாம் செய்யறேன்..உமாவைப் புறக்கணிக்கறேன்னு என்னை நிறைய நாள் இருக்க விட மாட்டான் சுந்தர்.. நான் வேலூர்லே அவங்களோடவே இருக்கறது இந்துமதிக்குப் பிடிக்கலைன்னாலும், என் செலவுக்கு மாசம் தவறாம சுந்தர்கிட்டேயிருந்து பணம் வந்ததாலே, ராமோட வீட்லே தான் நான் முக்கால்வாசி இருந்தேன்.” என்று முக்கியமான நிகழ்வை விவரிக்க ஆரம்பித்த சுந்தரி, சுவரில் சாய்ந்திருந்த உமாவைச் சுட்டிக் காட்டி,
“இவளுக்கு இரண்டு மாசமா இருக்கும் போது உங்களோட பொண்ணு இவளை முதல் முதலாப் பார்த்திருக்கா..இவ பெயர் உமான்னு தெரிஞ்சவுடனே இவளைத் தான் தத்து எடுத்துக்கணும்னு முடிவு செய்திட்டா..இவளை வீட்டுக்கு அழைச்சிட்டு வந்த போது இவளுக்கு நாலு மாசம் இருக்கும்..தலை இன்னும் நிக்கலை..அத்தனை சின்ன குழந்தையை எப்படி வளர்க்கறதுன்னு இரண்டு பேருக்கும் பயம்..உதவிக்கு என்னைக் கூப்பிட்டுக்கிட்டாங்க..கவிதாக்கு ஒரு வயசு மேலே ஆகிட்டதாலே ராமும் என்னை பெங்களூர் அனுப்பி வைச்சான்..
உதவிக்குன்னு போன நான், ஒரு நாள் கூட ரஞ்சனிக்கு உதவியா இல்லை..உமாக்கு எல்லாம் உங்களோட பொண்ணு தான் செய்வா.. உங்களோட பெயரையும் சேர்த்து உமா பார்வதின்னு உங்க மக தான் இவளுக்குப் பெயர் வைச்சா..இவளுக்கு ஒரு வேளை கூட நான் சோறு ஊட்டினது இல்லை..ஆனா ப்ரீத்திக்கு நான் தான் என் கையாலே எல்லாம் வேளையும் ஊட்டுவேன்..அவளுக்கு தேவையானது எல்லாத்தையும் செய்வேன்..என்னோட பையன் உயிரோட இருந்த வரை கூட நான் இவளை முழுமையா ஏத்துக்கலை..ஏத்துக்க முடியலை…
உங்க மகஇவளைத் தன்னோட குழந்தையா தான் நினைச்சா..வளர்த்தா..நானும் கொஞ்சம் கொஞ்சமா என்னோட மனசை மாத்திக்க முயற்சி செய்ய ஆரம்பிச்ச போது, ப்ரீத்தி வந்திட்டா..ப்ரீத்தி பொண்ணா பிறந்தது எனக்கு கொஞ்சம் ஏமாற்றம்..உனக்கு இரண்டும் பொண்ணுங்கண்ணு நான் குறையாச் சொல்லும் போதெல்லாம், ‘பெரியவ மீனாக்ஷி சின்னவ காமாக்ஷின்னு’ பெருமையாச் சொல்லுவான் சுந்தர்…
உமா பெயர்லே அவளோட அஞ்சாவது வயசுலே ரொக்கப் பணம் போட்டு அவளுக்குப் பதினெட்டு வயசாகும் போது அவ கைலே கிடைக்கும்படி ஏற்பாடு செய்து வைச்சிருந்தான்..அதே போல ப்ரீத்திக்கும் செய்வேன்னு சொல்லிட்டு இருப்பான்..அவங்க பெத்த மக ப்ரீத்தியையும் இவளையும் என்னோட மகனும் மருமகளும் வேறுபடுத்தி பார்த்ததே இல்லை..நான் தான் வேறுபடுத்திப் பார்ப்பேன்..அதனால் தான் நான் அவங்களோட நிறைய நாள் இருந்தா பிரச்சனையாகுதுன்னு என்னை ராம் வீட்டுக்கு அனுப்பி வைச்சிடுவான் சுந்தர்…
அந்த வருஷம் வேலூர்லே வெய்யில் ஜாஸ்தியா இருந்திச்சு..அப்போவும் எனக்கு இதே இரத்தக் கொதிப்பு பிரச்சனை தான்..வெய்யில் குறையற வரை நான் அவன் கூட பெங்களூர்லே இருக்கட்டும்னு பெரியவன் சொன்னான்..அதனாலே அன்னைக்குக் காலைலே தான் ராம் என்னை சுந்தர் வீட்லே கொண்டு போய் விட்டான்..இராத்திரி பஸ்லே வேலூருக்குத் திரும்பிப் போக டிக்கெட் போட்டிருந்தான் ராம்…
எனக்கு இரண்டு ஊரும் பிடிக்கலை..தனியா மதுரைலேயும் இருக்க முடியலை..புருஷன் போன பிறகு ஒத்த ஆளா என்னோட இரண்டு பசங்களையும் வளர்க்க நான் ரொம்ப கஷ்டப்பட்டேன்..உங்களைப் போல ஆளுங்க தயவிலே தான் எங்களோட பொழைப்பு நடந்தது..படிப்பிற்கும் துணிக்கும், தினசரி சாப்பாட்டுக்கும் கையேந்திட்டு இருந்தோம்..சொந்தமா வீடு இருந்ததாலே ரோட்டுக்கு வரலை..அதனாலே என் மனசிலே என்னோட பசங்க இரண்டு பேரும் தலையெடுத்த பிறகு நான் கஷ்டப்பட்ட அதே ஊர்லே நல்ல மரியாதையோட வாழணும்னு கனவு கண்டேன்.. அந்தக் கனவெல்லாம் பசுபதி வீட்டுப் பொண்ணை என்னோட பையன் கட்டிக்கிட்டவுடனே கலைஞ்சிடுச்சு..
உங்க கண்ணெதிரே இருந்திட்டு, உங்களைப் பார்க்க முடியாம இருந்தா ரஞ்சனிக்குக் கஷ்டமா இருக்கும்னு மதுரைலே செய்திட்டு இருந்த வேலையை விட்டிட்டு பெங்களூருக்கு போயிட்டான் சுந்தர்..சின்னவனும் வேலூர்லே வேற வேலை தேடிக்கிட்டான்..நான் மட்டும் தனியா மதுரைலே இருக்க முடியாம, வீட்டை வாடகைக்கு விட்டிட்டு பெங்களூர் போயிட்டேன்…
ரஞ்சனிக்குக் கல்யாணமான புதுசு..எதுவும் செய்யத் தெரியாது..அதனாலே அவளை ஏதாவது குறை சொல்லிட்டே இருப்பேன்..ஆனா அவ கோபப்பட மாட்டா..என்னோட பொறுமையா தான் போவா..நானே தேடியிருந்தாக்கூட சுந்தருக்கு உங்க பொண்ணு மாதிரி ஒருத்தி கிடைச்சிருக்க மாட்டா..ரஞ்சனி ரொம்ப குணமான பொண்ணு…
கல்யாணாமாகி ஒரு வருஷம் ஆனவுடனே ஏன் இன்னும் குழந்தை இல்லைன்னு அவளைத் துளைச்சுக்கிட்டு இருந்தேன்….இரண்டு மாசம், மூணு மாசத்துக்கு ஒருமுறை தான் அவ வீட்டிலிருந்து விலகி இருப்பா..ஒவ்வொருமுறையும் நல்ல விஷயம்னு நினைச்சு ஏமாந்து போவான் சுந்தர்..அவளுக்கு முதலேர்ந்து அப்படித் தான்னு தெரிஞ்சவுடனே அவளுக்கு தான் குறை இருக்கணும்னு அவளை டாக்டர்கிட்டே அழைச்சிட்டுப் போனேன்…
உங்களைப் பற்றி, அவகூட பிறந்தவங்களைப் பற்றி விசாரிச்ச டாக்டர், உங்க மகனுக்கும் மகளுக்கும் இடையே பத்து வருஷம் இடைவெளி இருக்கு அதனாலே உங்களைப் போல தான் உங்க பொண்ணும் இருப்பா..தாமதமாக் குழந்தை பிறக்கலாம்ன்னு சொல்லி மருந்து எழுதிக் கொடுத்தாங்க..அதெல்லாம் சரியாச் சாப்பிட்ட பிறகும் ரஞ்சனிக்குக் குழந்தை பிறக்கலை..அதுக்குள்ளே சின்னவனுக்கு சொந்தத்திலே கல்யாணம் செய்தேன்..அவனுக்கு உடனே கவிதா பிறந்திட்டா..அவனோட குழந்தையைப் பார்த்துக்க நான் வேலூர் போயிட்டேன்..அந்த நாள்லே சிவரஞ்சனிக்கு என்ன தோணிச்சின்னு எனக்குத் தெரியலை.. திடீர்னு ஒரு நாள் சுந்தரும் ரஞ்சனியும் வேலூருக்கு வந்தாங்க..ஒரு பெண் குழந்தையைத் தத்து எடுத்துக்க நினைக்கறோம்.. அதுக்கு ராமோட உதவி தேவைன்னு சொன்னான் சுந்தர்..
தத்து எடுத்துக்கப் போற குழந்தைக்கு ராமைப் பாதுகாவலரா நியமிக்க நாங்க யாரும் ஒத்துக்கலை.தத்து எடுக்கறதிலே எனக்கு விருப்பமிருக்கலை.அப்படி அவங்க இரண்டு பேருக்கும் குழந்தையே பிறக்காம போனாக் கூட கவிதா இருப்பான்னு இந்துவும் ஒத்துக்கலை. சுந்தரைப் போல ராமுக்கு பெரிய வேலை, சம்பாத்தியம் இல்லை.ஆத்திர அவசரத்திற்கு சுந்தர் தான் அவனுக்குப் பண உதவி செய்திட்டு இருந்தான். முடியாதுன்னு சொன்னா அண்ணனோட உதவி நின்னுப் போயிடும்..அப்புறம் தனியா எப்படி எல்லாத்தையும் சமாளிக்க முடியும்னு ராமுக்குப் பயம்..திடீர்னு அண்ணனுக்கு ஏதாவது ஆகிட்டா அவனாலே இரண்டு குடும்பத்தையும் சமாளிக்க முடியாதுங்கறதுனாலே நியமனப் படிவத்திலே கையெழுத்துப் போட மாட்டேன்னு மறுத்திட்டான்…
‘அந்த மாதிரி எதுவும் நடக்க வாய்ப்பில்லை. அப்படியே நடந்தாலும் எங்க இரண்டு பேருக்கும் சேர்ந்து ஒண்ணும் ஆகாது.நாங்க ஒருத்தராவது உயிரோடு இருப்போம், கவிதாவும் என் பொண்ணு போலன்னு சொல்ற, அப்போ, உனக்கு ஏதாவது ஆச்சுன்னா உன்னோட இடத்திலே இருந்து நான் அவளைப் பார்த்துப்பேனில்லே..அது போல தான் இதுவும்னு’ சொல்லி ராமைச் சம்மதிக்க வைச்சான் சுந்தர்.ஆனா, கடைசிலே, ரஞ்சனி, சுந்தர் இரண்டு பேரும் ஒரே நேரத்திலே போயிட்டாங்க.” என்று பல வருடங்களாக அவருடைய மனத்தில் இருந்ததையெல்லாம், சில நிமிடங்களில் கொட்டி விட்டுக் கண்களை மூடிக் கொண்டார் சுந்தரி.
அமைதியாக அமர்ந்திருந்த பார்வதியின் கண்களிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.அவருடைய மகளின் மண வாழ்க்கையின் சுக துக்கங்களை இப்படித் தெரிந்து கொள்ள நேரிடுமென்று அவர் நினைக்கவேயில்லை.ஒரு தாயாக அவளுக்கு உறுதுணையாக இருக்க முடியவில்லையே என்று மனம் வருந்தி கொண்டிருந்தார்.திருமணம் முடித்த மகளை ஏன் ஒருமுறை கூட சந்திக்கவில்லை?யாருக்காக? எதற்காக பெற்ற மகளை விட்டுக் கொடுத்தோம்? என்ற கேள்விக்கு, அவருடைய மகள் மறைந்து போது தேடாமல், பேத்தியின் கல்யாண நேரத்தில் விடையைத் தேடிக் கொண்டிருந்தார் பார்வதி பாட்டி.
சுவரில் சாய்ந்து நின்று கொண்டிருந்த உமாவின் முகம் உணர்ச்சியற்று இருந்தது. அவளுடைய வாழ்க்கை சரித்திரத்தை சித்தி, கவிதா வாயிலாகப் பலமுறை கேட்டு இருக்கிறாள்.ஆனால், முதல்முறை கேட்டது சுந்தரி பாட்டியின் மூலம் தான்.அதன்பின், இப்போது, மறுபடியும், அவரிடமிருந்து கேட்கிறாள்.இந்த முறை ஒரு விஷயம் புதிது.அவளுடைய வளர்ப்புப் பெற்றோரின் பின்னணி.
நேற்று மாலை ப்ரீத்தியின் உறவினர்கள் வந்திருந்த போது பாட்டியின் அறையில் என்ன நடந்தது? என்று அவளுக்குத்தெரியாது.விருந்தினர்கள் வீட்டை விட்டுச் சென்ற பின், சித்திக்கும் சித்தப்பாவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.அதில் அவளுடைய பெயரும் கவிதாவின் பெயரும் அடிப்பட, அவள் கண்டு கொள்ளவில்லை. இன்னும் சில நாள்கள் தான் இங்கே இருக்கப் போகிறாள்.அதன் பின் சில மாதங்கள் வெளிநாடு. அங்கேயிருந்து திரும்பிய பின், பெங்களூர் இல்லை புனே.மறுபடியும் சென்னைக்கு வரப் போவதில்லை.பாட்டிக்காக வர வேண்டுமென்று நினைத்தாலும் வேறு சில பிரச்சனைகளால் சென்னை வர விரும்பவில்லை.
பெண்கள் மூவரும் அவரவர் சிந்தனையில் இருக்க,
கண்களை மூடி படுத்திருந்த சுந்தரி, திடீரென்று எழுந்து உட்கார்ந்து கொண்டு, பார்வதியின் கையைப் பற்றி,”கை நீட்டி உங்ககிட்டே பணம் வாங்கின பிறகு எந்த முகத்தோட ப்ரீத்தியைப் பார்க்க வர்றதுன்னு தெரியலை..ப்ரீத்தி உங்களோட பேத்தி..அவளை அப்படியே அழைச்சிட்டுப் போகங்கன்னு சொல்லியிருக்கணும்..ஆனா நீங்க உமாவை வேணாம்னு சொன்னவுடனே எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியலை..மூணு பொண்ணுங்களை வளர்க்க ராம் கஷ்டப்படுவான்னு நினைச்சு தான் ப்ரீத்தியை உங்களோட அனுப்ப பணம் கேட்டேன்..நீங்க சொன்ன இடத்திலே கையொப்பம் போட்டு, எங்களோட உரிமையை விட்டுக் கொடுத்தது ப்ரீத்திக்காக செய்தது..அவ எங்களோடவே இருந்திருந்தா நிறைய கஷ்டப்பட்டிருப்பா…
உங்க வீட்லே ப்ரீத்திக்கு எந்தக் கஷ்டமும் வந்திருக்காது..அப்படியே ஏதாவது வந்திருந்தாலும்நீங்க அவளுக்குத் துணையா இருந்திருப்பீங்க.” என்று சொன்னவர்,”உமா இங்கே வா” என்று அழைக்க, கட்டிலருகே அவள் வந்தவுடன், அவளுடைய கையைப் பார்வதியின் கையில் வைத்து,
“எங்க வீட்லே இவ ரொம்ப கஷ்டப்பட்டிருக்கா..இவளுக்குத் துணையா நான் இருந்ததில்லை..இவளுக்குன்னு யாருமேயில்லை.” என்றார்.
அப்போது சுந்தரியின் கையை இறுகப் பிடித்தார் பார்வதி.அதேபோல் இன்னொரு கையால் உமாவின் கையையும் இறுகப் பற்றிக் கொண்டார்.முதியவர்கள் இருவரும் கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தனர்.அதைக் கண்டு கலவரமடைந்த உமா,”பாட்டி, ப்ளீஸ்..எதுக்கு இப்போ பழசையெல்லாம் பேசிட்டு இருக்கீங்க? இதனாலே தான் உங்களுக்கு ப்ரேஷர் ஏறிடப் போகுது..ப்ளீஸ்..கொஞ்ச நேரம் அமைதியாப் படுத்துக்கோங்க..ப்ளீஸ்.” என்று கெஞ்சினாள்.
உமாவின் கெஞ்சலைப் புறக்கணித்த சுந்தரி பாட்டி,” ப்ரீத்தியோட கல்யாணத்தை நான் நல்லபடியா நடத்திக் கொடுக்கணும்னு கேட்க தானே இங்கே வந்திருக்கீங்க? உமாவோட கல்யாணத்தை நல்லபடியா நீங்க நடத்திக் கொடுப்பீங்களா?” என்று பார்வதியிடம் கேட்டார்.