ராகினி நிச்சயம் மாலினி புண்ணியத்தால் வெகு விரைவாக செம பாதுகாப்பாக, மாலினி கண்முன்னாலே நடந்து கொண்டிருந்தது.
அவள் செய்த, செய்யவிருந்த குளறுபடிகளை ராஜனும், மற்றவர்களும் கவனித்து சரி செய்தபடி இருந்தனர்.
திடீரென இருவர் வந்து “இந்த நிச்சயத்தை நிறுத்துங்க”ன்னு மிரட்ட
ராஜன் மாலினிய அறைந்து “இவனுங்க யாருடி? இன்னும் யாருகூடவெல்லாம் பழகி இருக்க சொல்லித் தொலைடி?” கோபத்தில் கத்த
“மாமா இந்த நிச்சயம் நின்னுடுச்சா? ஐய்யா ஜாலி” என்று குதிக்க
“இங்க வந்திருக்க மாமனுங்க யாருடி?” அவளின் அம்மா அவளை உலுக்க
“ அம்மா, இவனுங்கள எனக்கு தெரியாது. நான் செய்ய ஆசைப்பட்டது இப்போதான் நடக்குது. என்னை அதை அனுபவிக்க விடேன்” என சிரிக்க
“ஏய் சதிகாரி, என்னைய மிரட்டி, கல்யாணம் பண்ண. சுபாஷை காதலிக்கறதை போல போனுல பேசின. இது யாரு? இவனுங்ககூட என்ன பண்ணின சொல்லு” என ராஜன் கோபமாக வார்த்தைகளை விட
“அதேபோல அவன பிடிச்சி, அவன கட்டிக்கனுமுன்னு நான் போன் பண்ணல.”
“அந்த ராகினிக்கு கல்யாணமே நடக்க கூடாது. அதுமட்டுமே என்னோட எண்ணம். அதநான் எப்படியோ சாதிச்சிட்டேன்” என மாலினி பெருமை பேச
“ஏன் இந்த எண்ணம் உனக்கு? அவளும் என்னைபோல உனக்கு ஒரு அக்கா தானே? ஏன் இந்த பொறாமை?” புவனா அழுதபடி கேக்க
“நம்ம சொத்துல இருந்துகிட்டு நம்மளையே அதிகாரம் பண்றவங்கள வேற என்னக்கா பண்றது?”
“உங்கப்பாவும், எங்கப்பாவும் சம்பாதிக்க அவங்க ஒண்டியிருக்க வந்துட்டு, என்னமோ எல்லாமே அவங்களதுபோல நடந்தா உடமைக்காரி எனக்கு கோபம் வராதா?” என கொதிக்க
“என்னது? சொத்து உங்களுதா? எவன் சொன்னான்? உங்கப்பன் சொன்னானா? யாரு சொத்த யாரு உரிமை கொண்டாடறது?” என புவனாவின் அப்பாயி பொன்னுத்தாயி கொந்தளிக்க
“ஏய் யாருடி சொன்னா சொத்து நம்மளதுன்னு? நாமதான்டி ஒண்ட வந்தவங்க.”
“ உங்கப்பனும், உன்னப்போல பந்தாபண்ணியே சொத்த ஒழிச்சான். புது வண்டி வந்தா வாங்கிடனும். யாராவது ஆகா, ஓகோன்னு சொல்லிட்டாபோதும் பணத்தை தண்ணிபோல செலவு பண்ணுவான். நீயும் அவனபோலதான இருப்ப?”
“ உன்னய அவங்க பொண்ணுபோல வளர்த்தாங்க. இப்ப அவங்களையே நீ பதம் பாக்கற?” என மாலினி அம்மா சரசு கதற
“நம்ம ஊரு இதுதான? அப்ப இது நம்ம சொத்துதான? இந்த தோப்புதுரவு எல்லாம் யாரு பாத்துக்கிறா எங்கப்பா? அவங்க தோப்புன்னா அவங்களே பாத்துக்கனும். அவங்க தோப்ப பாத்துக்க எங்கப்பா என்ன வேலைக்காரனா?” என வாதிட
“ஆமான்டி கூறுகெட்ட குப்பை. உங்கப்பன் இங்க வேலைக்காரன்தான். ஆனா அவங்க நமக்கு மரியாதை கொடுத்து சொந்தக்காரங்க மாதிரி நடத்துனாங்க. நீயும் உங்கப்பனும் இப்ப அவங்க முதுகுல குத்திட்டிங்க” என சரசு சப்தமிட்டார்.
ராசப்பன் தன் மனைவி கலையரசியின் தங்கை கணவன் ஆனதும் நடராஜன் நட்புடன் பழகினார்.
நடராஜனின் குடும்பம் உழைப்பையும், சேமிப்பையும் முதன்மையாய் கொண்டது. அறுவடையின்போது வரும் பணத்தை தங்கம், நிலம், வங்கியில் டெபாசிட் என முதலீடு செய்து வந்தனர்.
நடராஜனும், கனகராஜனும் உழைப்பை உயிராய் நினைத்து நேரங்காலம் பார்க்காமல் காய்கறி, தென்னை, வாழை நெல் என அவர்களே வயலில் இறங்கி வேலை செய்வர். நிறைய வேலை இருந்தால் மட்டுமே ஆள்விட்டு வேலை செய்வர்.
பணத்தின் அருமை தெரிந்ததால் தேவை இருந்தால் மட்டுமே, அதுவும் அவசியப்படின் ஆடம்பர செலவுகள் செய்வர்.
நடராஜன் அளவு ராசப்பனுக்கு பணவசதி இல்லை. அதனால் நடராஜன் தன் சகலைக்காய் தன் பணப்பெருமையை காட்டாமல், ஒவ்வொரு விசயத்திலும் அளவாய், அடக்கமாய் செயல்பட்டார்.
ராசப்பனோ பந்தாவாய் மாமனார் வீட்டில் தான் மதிப்பாய் இருக்கவேண்டி அடிக்கடி தன் இருசக்கர வண்டியை மாற்றுதல், ஒவ்வொரு பண்டிகைக்கும் பட்டில் துணிமணிகள், யார் வீட்டு விஷேசத்திற்கு போனாலும் புதுத்துணி வாங்குதல், தன் வீட்டினர் பிறந்தநாள், திருமணநாள், நண்பர்களின் பிறந்தநாள் அனைத்தையும் வெகு விமர்சையாக கொண்டாடுதல், என வரவுக்கு மீறி செலவு செய்து கடனாளியாய் ஆனார்.
கடனுக்காய் தன்னிடமிருந்த சொத்துக்களை விற்றார் ராசப்பன். வட்டியில்லாமல் வெறும் அசலை மட்டும் கொடுக்கும்படியான மஞ்சள் நோட்டீஸ் கொடுத்துவிட்டார். அதனால் விகிதாச்சார முறைபடி பணத்தை கொடுத்து கடன்களில் இருந்து வெளிவந்தார்.
அந்த ஊரில் அவரை நம்பி வேலையோ, குத்தகைக்கு நிலமோ யாரும் தராத நிலையில் நடராஜனும், அவரின் பெற்றோரும், கனகராஜனும் உதவிக்கு வந்தனர். ராசப்பன் குடும்பத்தை தங்களுடைய வீட்டுக்கு அழைத்து வந்தனர். அங்கேயே தங்களுடன் இன்னுமொரு சகோதரனாக கூட்டுக்குடும்பமாக தங்க வைத்தனர் ராஜன் சகோதரர்கள். அவர்களின் ஒரு நான்கு ஏக்கர் நிலத்தை பயிர் செய்து கொள்ளும்படி குத்தகைபோல சிறு தொகையை வாங்கிக்கொண்டு ராசப்பனுக்கு கொடுத்தனர்.
கொஞ்சம் பணம் சேர்ந்தால் பக்கத்துல எங்காவது நிலம் விற்பனைக்கு வந்தால் ராசப்பனுக்கு வாங்கி வைக்கலாம் என நினைத்தனர் நடராஜனும், கனகராஜனும்.
ஆனால் அந்த நிலத்தில் வந்த வருமானம் ராசப்பனுக்கு போதவில்லை. பல சமயம் கலையரசியும், ராகினியின் தாயான ஜெயமணியும் தங்கள் சேமிப்புகளை கொடுத்து சரசுக்கு உதவுவர்.
எப்போதுமே பற்றாக்குறை தான். அதனால் கணக்குவழக்கு, தோட்ட மேற்பார்வை பார்த்தல் போன்ற வேலைகளையும் தானே பார்ப்பதாக சொல்லி அதற்கான பணத்தை தனியே வாங்கி கொண்டார் ராசப்பன்.
மேல் வேலைகளில் கொஞ்சம் பணம் பார்க்கவும், எல்லா வேலையையும் இழுத்துப்போட்டுக் கொண்டு செய்ய ஆரம்பித்தார்.
தானின்றி எதுவும் இல்லை என்பதைபோல ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி வைத்திருந்தார்.
மாலுவிடமும் தங்களால் தான் எல்லாம் நடக்கிறது என சொல்லிச் சொல்லி வளர்த்தார். அதன் விளைவுதான் இது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
“என்னப்பா சொல்லுறீங்க? ராசப்பனுக்கு பங்கில்லையா? எல்லாமே என்னோடது அப்படின்னு மஞ்சள் மண்டியில சொல்லி நாலு லட்சம் மஞ்ச காச வாங்கி வந்தாரே” என ஒருவர் சொல்ல,
“டேய் பெரியவனே, மஞ்ச காசு மூனு லட்சம்தான் குடுத்தான். கேட்டதுக்கு மஞ்சள் தரமானதா இல்லைன்னு சொன்னான்டா” என்ற பொன்னுத்தாயி
“இன்னும் எங்கெல்லாம் சொத்து என்னுடையதுன்னு கடன் வாங்கி இருக்கிறானோ தெரியலையே? “ என புலம்பினார்.
“அம்மா இப்ப அதுதான் முக்கியமா? கொஞ்சம் அமைதியா இருங்க.” என நடராஜன் சொன்னார்.
“எல்லாரும் இங்க பாருங்க! இந்த ராசப்பனுக்கும், இங்கிருக்க எங்க நிலம், வீடு, மனை எதுக்கும் சம்பந்தம் இல்லை. இதெல்லாம் எங்க பரம்பரை சொத்து. புதுசா எங்க உழைப்புல வாங்கினது.”
“அவன் செஞ்ச வேலைக்கு அதிகமாகவே பணத்த எடுத்துக்கிட்டான். அதகாட்டி கடன் வாங்கி இருந்தா அவனையே கேட்டுக்குங்க.” என்றார் பொன்னுத்தாயி.
“இவங்குடும்பம் நம்ம வீட்டுல காலடி எடுத்து வச்சாங்கன்னா, நான் என் பேத்தி, பேரன கூட்டிட்டு வெளியில போயிடுவேன். பாத்துக்குங்க” என சப்தமாக கூறினார்.
“அத்தை உங்க கோபம் சரிதான். ஆனா வீடு உடனே கிடைச்சாலும், பொருளை எல்லாம் எடுத்துட்டு போக நம்ம வீட்டுக்கு வந்துதானே ஆகனும்?” புவனாவின் அம்மா கலையரசி கதற
“ஏன்டி உன் தங்கச்சி நம்ம வீட்டுக்கு வரும்போது குபேரங்கிட்ட போயி நவநிதியையும் வாங்கி வண்டி கட்டியா எடுத்துட்டு வந்தா? கையில நயாபைசா இல்லாம மாத்திகட்டிக்க ஒரு துணிகூட இல்லாம கைய வீசிட்டுதானே வந்தா?” என முறைத்தபடி சொல்லி
“இப்போ உன்தங்கச்சி புருசன் ஏமாத்தி சம்பாரிச்ச காசிருக்கு. நீயும் மணியும் பாத்து பாத்து வாங்கிகுடுத்த நகைங்கள ஆத்தாலும் மகளும் பூட்டி இருக்காங்க. இன்னும் என்னடி என் வீட்டுல எடுக்கனும்? அதெல்லாம் இப்படியே பொட்டிய கட்டச்சொல்லு.” என கோபமாக கத்தினார் பொன்னுத்தாயி.
“அத்தை கல்யாணம் வரைக்கும் இருக்க அனுமதி குடுங்க. அதுவும் நம்மவீட்டுல நம்ம பொண்ணா வளத்துட்டு இப்போ நிச்சயத்தை பண்ணி அனுப்புனா சரியா?” ஜெயமணி கேக்க
“ரொம்ப நடிக்காதிங்க. எல்லாரும் சேந்துதான் எங்கப்பா சொத்த புடுங்கிட்டிங்க. அப்புறம் எதுக்கு இந்த பசப்பு வார்த்தை எல்லாம்?” மாலினி நொடிக்க
சரசு பட்டென தன் மகளை ஒரு அறை வைத்து, “ஏன்டி இப்படி பேசற? அவங்க காசுல அவங்க பொண்ணுக்கு எடுக்கறதுபோல உனக்கும் எடுத்து குடுக்கனுமுன்னு என்ன தலையெழுத்து அவங்களுக்கு?”
“அத்தை கல்யாணம் வரை நம்மகூட…” என கலையரசியின் ஜாடையில் ஜெயமணி மறுபடியும் கேக்க
“ஐய்யோ அத்தை! இந்த கைகாரிக்கு எத்தனை முறை கல்யாணம், கச்சேரின்னு வைப்பிங்க சொல்லுங்க?” என ராஜன் கத்த
“டேய் பேசாத! உன்னாலதான் இவ்வளவு பிரச்சனையும். நீமட்டும் கொஞ்ச நேரம் அமைதியா இருந்திருந்தா இந்த நிச்சயம் நின்னுபோயி இந்நேரம் ஆளுக்கொரு மூலையில தலையில துண்டபோட்டு உட்கார்ந்து இருந்திருப்பாங்க. யாரும் என்னைய குறைசொல்லி இருக்க மாட்டாங்க.” என மாலினி எகிறிக்கொண்டு வர
“சித்தப்பா உங்க மவள வாயை மூடிக்கிட்டு நிக்க சொல்லுங்க. இதுக்குமேல குரலு வெளிய வந்துச்சி நான் ஜெயிலுக்கு போனாலும் பரவாயில்லன்னு இவள கொலை பண்ணிடுவேன்” என்று முறைத்தான் புவனாவின் அண்ணன் ரமேஷ்.
“பெரியவங்க எல்லாரும் என்னை மன்னிக்கனும், இந்த ஏழரை மாலினி கூட எனக்கு கல்யாணமாயி ஆறுமாசம் ஆயிடுச்சி. இவ டூர் போறேன்னு சொல்லி என்னோட ரெண்டு வாரம் பூனேவுல வாழ்ந்துட்டும் வந்துட்டா. அதனால எங்களுக்கு மறுபடியும் கல்யாணம் பண்ணிவைக்க முயற்சிக்காதிங்க” என்றான் ராஜன்.
இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த ராசப்பன், சட்டென ராஜனின் சட்டையை பிடித்து, “ ஒன்னும் தெரியாத எம்பிள்ளையை ஏமாத்தி கல்யாணம் பண்ணி இருக்கியே அயோக்கிய ராஸ்கல் உன்ன கொன்னாகூட எம்மனசு ஆறாது” என கொதிக்க
“நிறுத்துய்யா உன் உளறல. யாருக்கு ஒன்னும் தெரியாது? உன் மவளுக்கா? இந்தா பாத்துக்க உன்மவ லட்சணத்தை” என ஜெராக்ஸ் போட்டதை ராஜன் எல்லோருக்கும் கொடுக்க, வாங்கி படித்தவர்கள் ஸ்தம்பித்தனர் அவளின் கடித வரிகளில்.
“மிரட்டி குடும்பமே நடத்திட்டு, ஒன்னுமே தெரியாதத போல என்னமா பேசுச்சி இந்த பொண்ணு? இத நம்பி நாமளும் பேசினோம் பாரு” என குமுறினர் அந்த இருவரும்.
“அம்மா இவள நானு நாளைக்கு பூனேவுக்கு கூட்டிட்டு போறேன்.” என தன் அம்மாவுக்கு தகவல் சொன்ன ராஜன், மற்றவர்களையும் பார்த்து வைத்தான்.
“நாங்க முறைப்படி கொண்டுவந்து விட்டுட்டு வரோம்” என ராசப்பன் தடுமாற்றத்துடன் சொல்ல,
“உன் பொண்ணு எல்லாத்தையும் முறைபடி அவளே செஞ்சிகிட்டா. அதனால நீ அமைதியா இருப்பா” என பெரியவர்கள் சமாதானம் செய்தனர்.
“அப்ப இவனுங்க யாருடி? சொல்லுடி திமிரெடுத்த கழுதை. இன்னும் யார் யாரையெல்லாம் தயார் செஞ்சிருக்க? ஒரேடியா சொல்லி முடிச்சிடு”என பொன்னுத்தாயி கேட்டார்.
“சொல்லுடி, உன்ன பெத்ததுக்கு மலடியாவே நான் இருந்திருக்கலாம்” என சரசு புலம்ப
“அம்மா நான் இந்த கல்யாணத்தை நிறுத்த முயற்சி பண்ணினேன், உண்மைதான். ஆனா இவங்க ரெண்டுபேரும் யாருன்னே எனக்கு தெரியாதும்மா” என மாலினி சொல்ல யாருமே நம்ப தயாராக இல்லை.
“இதுல எவன கல்யாணம் பண்ணிக்க இருந்த? இல்ல எவனோட எங்க போக இருந்த? சொல்லுடி திமிர் புடிச்சவளே” என சரசு மறுபடியும் அழுதபடியே கேக்க,
“அம்மா எனக்கு இவங்க யாருன்னே தெரியாதும்மா. நான் இவங்க ரெண்டு பேரையும் பாத்ததே இல்லை. என்னை நம்பும்மா” என மாலினி கண்ணீருடன் கெஞ்ச, நம்பத்தான் ஆளில்லை அந்த மண்டபத்தில்.
வந்த இருவரும் யார்? எதற்காக நிச்சயத்தை நிறுத்த பார்த்தனர்? நிச்சயம் நின்றதா, நடந்ததா? தெரிந்து கொள்ள காத்திருப்போம்.