அத்யாயம் 5:

நினைவு:

“ஹேப்பி பர்த்டே ஆராம்மா” என்ற காயத்ரியின் குரலில் கண் விழித்தாள் ஆரண்யா.

“குட் மார்னிங்ம்மா” என்று புன்னகையுடன் கூறியவளை ரசித்த காயத்ரி,

“குளிச்சிட்டு இந்த சுடியை போட்டுட்டு வாடா. கோவிலுக்கு போயிட்டு வந்துடலாம்” என்றார்.

“ஓகேம்மா” என்றவள் குளிக்க செல்ல,

“வாவ்..! இந்த கலர் ரொம்ப அழகா இருக்கும்மா. இந்த சுடியை நான் வச்சுக்கிறேன். நீங்க அவளுக்கு வேற எடுத்துக் குடுங்க” என்றாள் ஆதிரா.

“ஆதிரா இன்னைக்கு ஆராவுக்கு தான் பர்த்டே. உனக்கு இல்லை. உன்னோட பர்த்டேக்கு அதே மாதிரி எடுத்துக்கலாம்” என்று காயத்ரி கூற,

“எனக்கு இது தான் வேணும்” என்று அடம் பிடித்தாள் ஆதிரா.

“விடுங்கம்மா! அவளுக்கு பிடிச்சிருந்தா அவளே போட்டுக்கட்டும். அப்பா ஏற்கனவே வாங்கிக் குடுத்த நிறைய டிரஸ் போடாமத்தான் இருக்கு. அதுல எதையாவது ஒன்னைப் போட்டுக்கிறேன்” என்றாள் ஆரா.

“அதான் அவளே சொல்லிட்டாளே..! குடுங்க” என்று ஆதிரா அந்த சுடியை பிடுங்க,

“சொன்னா கேளு ஆதிரா” என்று அவளை அதட்டிய காயத்ரி,

“நீ இதை போட்டுட்டு வா ஆரா” என்று அவளை அனுப்பினார்.

“ஏன்மா இப்படி பண்றிங்க? எனக்கு அந்த கலர் ரொம்ப பிடிச்சிருக்கு” என்றாள் மீண்டும் விடாப்பிடியாய்.

“அவளுக்கு எடுத்தது அவளுக்குத் தான். உனக்கு வேணும்னா எடுத்துக்கலாம். முதல்ல இந்த பழக்கத்தை விடு ஆதிரா. எப்ப பார்த்தாலும் அவ பொருள் மேல தான் உனக்கு கண்ணு. உனக்கு எடுத்துக் குடுக்குறது நல்லதாவே இருந்தாலும் உனக்கு அதுல திருப்தியே வர மாட்டேங்குது. இந்த குணம் உன்னை எங்க கொண்டு போய் நிறுத்த போகுதோ தெரியலை” என்று கூறியவர், புலம்பியபடி சென்றார்.

குளித்து முடித்து, எம்ராய்டரி போடப்பட்ட மயில் கழுத்து வண்ண சுடிதாரில் அம்சமாய் வந்து நின்றவளைப் பார்த்த சுலோச்சனா பாட்டிக்கு முகம் முழுவதும் பெருமிதத்தில்  மின்னியது. ஆரா அப்படியே அவள் பாட்டியை உரித்து வைத்துப் பிறந்திருந்தாள். தன்னைப் போல் தன் பேத்தி இருப்பதில் அவள் மீது அலாதிப் பிரியம் அவருக்கு.

“பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆரா. அழகா இருக்கடா, என் கண்ணே பட்டுரும் போல இருக்கு” என்றார் சுலோச்சனா.

“தேங்க் யு பாட்டி” என்று அவரை அணைத்துக் கொண்டாள் ஆரா.

“சுலோ கொஞ்சம் சுலோவா பேசுங்க. மூச்சு வாங்குதா இல்லையா” என்றாள் ஆதிரா கிண்டலுடன்.

“உனக்கு வாய் கூடிப்போச்சு ஆதிரா” என்ற ரவி,

“ஹாப்பி பர்த்டே செல்லம்” என்று அவர் பங்குக்கு வாழ்த்து சொல்ல, ஏனோ அன்றைய நாள் மிக  மகிழ்ச்சியாக உணர்ந்தாள் ஆரா.

 “சரி சரி..நானும் ஹேப்பி பர்த்டே” என்றாள் ஆதிரா.

“தேங்க்ஸ் ஆதிரா” என்று புன்னகையுடன் கூறியவளைப் பார்த்து கடமைக்கு சிரித்து வைத்தாள் ஆதிரா.

குடும்பமாய் கிளம்பி அருகில் இருந்த கோவிலுக்கு சென்று வந்த பின்னர், கல்லூரிக்கு என்றுமில்லாத மகிழ்ச்சியுடன் கிளம்பினாள் ஆரா.

“ஹேப்பி பர்த்டே ஆரா” என்று கத்தியபடி உள்ளே ஓடி வந்த மித்ராவையும் கணேஷையும் கண்டு முறைத்தார் சுலோச்சனா.

“தேங்க்ஸ் பக்கிஸ்!” என்று சிரித்தவள் அவர்கள் இருவருக்கும் டெய்ரி மில்க் சில்க் பெரிய பேக் சாக்லேட்டை நீட்ட,

“வாவ்..! சிலுக்கு” என்றான் கணேஷ்.

“வாயை மூடுடா எருமை. அவ பாட்டி பார்வையிலேயே நமக்கு பாடை கட்டிடுவாங்க” என்று பல்லக் கடித்தாள் மித்ரா.

“கிளம்பலாமா? டைம் ஆச்சு ஆரா” என்றாள் மித்ரா.

“பாய் பாட்டி, பாய் ம்மா” என்றவள் நண்பர்களுடன் கிளம்ப, சுலோச்சனா யோசனையாய் நின்றார்.

“என்னாச்சு அத்தை? ஏன் ஆராவையே பார்த்துட்டு இருக்கீங்க?” என்றார் காயத்ரி.

“தளதளன்னு வளர்ந்து நிக்குறா காயத்ரி.காலம் கெட்டுக் கெடக்குற கெடைக்கு இப்படி அனுப்பவே பயமா இருக்கு காயத்ரி. இதுல காதல் கீதல்ன்னு வந்துடுவாளோன்னு வேற பக்கு பக்குன்னு இருக்கு” என்றார் சுலோச்சனா.

“நம்ம ஆரா அப்படியெல்லாம் பண்ண மாட்டா அத்தை. நம்மகிட்டயே அளவாத்தான் பேசுவா. வெளி ஆளுங்ககிட்ட பேசவே பயப்படுவா? அதனால தேவையில்லாம மனசை போட்டுக் குழப்பிக்காதிங்க” என்றார் காயத்ரி, மகளின் மனதில் ஏற்கனவே காதலும் அதோடு சேர்த்து கள்ளத்தனமும் வந்ததை அறியாமல்.

 “அப்பறம் ஆரா மேடம்? இன்னைக்கு ஒரே கலக்கலா இருக்கீங்க? டிரஸ் சூப்பரா இருக்குடி” என்றாள் மித்ரா.

“ஆமா ஆரா..! செம்மையா இருக்க” என்றான் கணேஷும் சேர்ந்து கொண்டு.

“உன்கிட்ட அவ கேட்டாளா?” என்றாள் மித்ரா முறைத்தபடி.

“உன்கிட்ட கூடத்தான் கேட்கலை. ஆனா, நீ சொன்ன தான. அதான் நானும் சொன்னேன்” என்றான் கணேஷ்.

“அடங்குடா டேய்” என்ற மித்ராவை அதிசயமாய் பார்த்து வைத்தாள் ஆரா.

“என்னவோ எனக்குத் தெரியாம ஓடுது. அது என்னன்னு தான் தெரியலை. சீக்கிரம் கண்டுபிடிக்கிறேன்” என்றாள் ஆரா, இருவரையும் முறைத்தபடி.

“அய்யோ ஆத்தா… அதெல்லாம் ஒரு மண்ணும் இல்லை. நீயா எதையாவது கற்பனை பண்ணிக்காத” என்றாள் மித்ரா.

“ஜெய் அண்ணாவுக்கு சாக்லேட் குடுக்கலையா ஆரா” என்றான் கணேஷ்.

“டேய்! அவ என்ன ஸ்கூல் படிக்கற பப்பாவா? எல்லாருக்கும் சாக்லேட் குடுக்க?” என்றாள் மித்ரா.

“நமக்கு சில்க்கை குடுத்தாலே” என்றான் சிரிப்புடன்.

“நீ கெட்ட கேட்டுக்கு உனக்கு சில்க்கெல்லாம் ரொம்ப ஓவர் தான். ஆனா, அது இவளுக்குத் தெரியலையே” என்று மித்ரா சிரிக்க, அவளை முறைத்து வைத்தான் கணேஷ்.

“கணேஷ் எனக்கு ஒரு ஹெல்ப்” என்றாள் ஆரா.

“என்ன செய்யணும்னு சொல்லு ஆரா”

“எனக்கு அவர்..” என்று இழுத்தவள்,

“அதான் ஜெய்.. அவரோட நம்பர் வேணும். வாங்கித்தர முடியுமா?” என்றவளை பயந்து போய் பார்த்தாள் மித்ரா.

“ஹேய் ஆரா..! என்னடி இவ்வளவு டீப்பா இருக்க. எனக்கென்னவோ இதெல்லாம் சரியா வரும்னு தோணலை. இதென்ன காதல் கோட்டையா? முகத்தைக் கூட ஒழுங்கா பார்க்காம லவ் பண்றதுக்கு? சொன்னாக் கேளு” என்று மித்ரா ஆதங்கத்தில் பேசினாள்.

“கொஞ்ச நேரம் வாயை மூடு மித்ரா. அவ லவ் பண்ணவான்னு கேட்கலை. ஆல்ரெடி பண்ணிக்கிட்டு இருக்குற லவ்க்கு ஹெல்ப் தான் கேட்குறா. அப்பறம் அதென்ன முகத்தைக் கூட பார்க்காமன்னு சொல்ற? முகத்தை காட்டுங்கன்னா காட்டப் போறாரு. அது மட்டுமில்லாம நான் தான் பார்த்தேனே, அண்ணா சூப்பர் பிகர்” என்றவன்,

‘இவளும் லவ் பண்ண மாட்டா, லவ் பன்றவங்களையும்  பண்ண விட மாட்டா, கிராதகி’ என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டான்.

“கணேஷ்” என்று ஆரா மீண்டும் அழைக்க,

“கண்டிப்பா வாங்கித் தரேன் ஆரா.! நீயே ஸ்ட்ரெயிட்டா பேசிடு” என்றான் கணேஷ்.

“தேங்க்ஸ்டா”

“என்னவோ பண்ணித் தொலைங்க” என்று மித்ரா சொல்லிக் கொண்டிருக்கும் போதே பேருந்தும் வந்து நின்றது.

கூடு தேடும் கிளியே அவளின் வீடு எங்கே பார்த்தாயா?

உள்ளாடும் காற்றே அவளின் உள்ளம் சென்று பார்த்தாயா?

தூரல் போடும் துளியே உயிரைத் தொட்டுப் போனவள் பார்த்தாயா?

பஞ்சு போன்ற நெஞ்சை தீயில் விட்டுப் போனவள் பார்த்தாயா?

என்ற வரிகளில் அவளைத் தான் பார்த்திருந்தான் ஜெய்.

“உன் ஆளு சிம்பாலிக்கா வீடு எங்கன்னு கேட்குறார் போலடி” என்றாள் மித்ரா சிரிப்புடன். மித்ராவின் வார்த்தைகளில் அவனைப் பார்த்தவளின் விழிகள் கவிதை பேசியது.

வழக்கத்திற்கு மாறாய் அன்று அதிக பொலிவுடன் இருந்தவளைக் கண்டு புரியாது குழம்பியவன், கணேஷைப் பார்க்க.. அவன் பார்வையின் பொருள் உணர்ந்தவன்,

“இன்னைக்கு ஆராக்கு பர்த்டே அண்ணா” என்றான் சிரிப்புடன்.

“ஹோ..!” என்று நினைத்துக் கொண்டவனின் பார்வை அவளைத்தான் ரசனையுடன் தீண்டிச் சென்றது.

“அண்ணா உங்க போன் நம்பர் கிடைக்குமா?” என்றான் கணேஷ்.

“எதுக்கு?” என்றான் ஜெய், ஆராவைப் பார்த்துக் கொண்டே.

“எனக்கில்லை ஜெய் அண்ணா..! உங்களுக்கு முக்கியமானவங்க கேட்டாங்க!” என்றான் சிரிப்புடன்.

“அதை என்கிட்டையே கேட்கலாமே?” என்றவன் விழிகள் ஆராவை முறைக்க, அவன் பார்வையில் அவள் தான் குழம்பிப் போனாள்.

“பஸ்ல பேசுறதை யாராவது பார்த்தா அவளுக்குத் தான் அண்ணா பிரச்சனை. அதான் என்னை வாங்கிட்டு வர சொன்னா” என்றான் கணேஷ் புரிய வைக்கும் நோக்குடன்.

அவனைப் பார்த்து ஒரு பெருமூச்சை விட்டவன், நம்பரை எழுதிக் கொடுத்தான்.

அடுத்து வந்த நிறுத்தத்தில் அவர்கள் இறங்க, படியை ஒட்டி கீழே நின்றிருந்தான் ஜெய். துப்பட்டாவின் மறைவில் அவன் கைக்குள் டெய்ரி மில்க் சில்க்கை  போகிற போக்கில் திணித்து விட்டு சென்றிருந்தாள் ஆரா. அவள் சென்று விட்டாள். அவளின் சில நொடி தீண்டலிலும், அருகாமையிலும் சிலிர்த்தவன், அவள் பின்னையே செல்லும் மனதை கட்டுப் படுத்தும் வழி தெரியாமல் தவித்திருந்தான்.