புதுப் புது அர்த்தங்கள்….. நாள்-2

அத்தியாயம் 4

விஸ்வநாதன் திருமணம் குறித்துப் பேச சங்கரன் அதிர்ந்தார். “என்னை நம்பித் தான் என் குடும்பம் இருக்கிறது. இப்போது எனக்குத் திருமணம் என்ற எண்ணமே இல்லை…” என்று மறுத்தார் .

அதற்கு விஸ்வநாதன் , “என் வீட்டு மாப்பிள்ளையானால் , இதையெல்லாம்  எளிதாக முடித்து விடலாம்…”

“இல்லை ஸார் , அவர்கள் வாழ்க்கை என் பொறுப்பு , அதை உங்கள் உழைப்பை வைத்து நிறைவேற்ற நினைப்பது மிகவும் தவறு…” என்று விடாப்படியாக மறுக்க ,

இந்த வார்த்தைகளுக்குப் பிறகு, விஸ்வநாதன் தீர்மானமாக சங்கரன் தான் மாப்பிள்ளை என்று முடிவு செய்தார் . 

“நல்ல வருங்காலத்தை வேண்டாம் என்று சொல்லாதே சங்கரா, நன்றாக யோசி. நாளை பேசலாம்..” என்று ஆறப்போட்டு நகர்ந்தார்.

“மறுநாள் வீட்டில் பேசினாயா சங்கரா? என்ன முடிவு செய்திருக்கிறாய்?” என்று விசாரிக்க , 

“இல்லை ஸார். வேண்டாம் , சரியாக வராது…” என்று சங்கரன் மறுக்க ,

விஸ்வநாதன்  சங்கரனை அருகில் அமர்த்திக் கொண்டு , “இப்போது போல் நீ கடையைப் பொறுப்பாக நடத்து , அதற்கு சம்பளமும் பெற்றுக் கொள் . அதை வைத்து உன் குடும்பத்தைப்  பார்த்துக் கொள் . இதனால் பணத்தால் நமக்குள் எந்தப் பிரச்சனையும் வராமல் பார்த்துக் கொள்ளலாம்  .”

“பணம் மட்டுமல்ல பிரச்சனை….” என்று இழுக்க ,

 “என் பெண்ணுக்கும் இதில் முழுச் சம்மதம்.  நம் வீட்டில் நாம் மூன்று பேர் தான் , அதனால்  உன் கௌரவத்திற்கு  எந்தப் பங்கமும் வராது…” என்று நம்பிக்கை தந்தார் . 

“கரைப்பார் கரைக்கக் கல்லும் கரைந்தது , சங்கரனுக்கும்  ஒரளவிற்குத் தயக்கங்கள்  தீர , “என் பெற்றோரிடம் பேசி விட்டு சொல்கிறேன் ஸார்..” என்று சற்றுத் தள்ளிப் போட ,

‘நான் பேசுகிறேன் சங்கரா..” என்று விஸ்வநாதன் சொல்ல ,

“இல்லை நான் முதலில் பேசுகிறேன் , அப்புறம் நீங்கள் பேசுங்கள் ஸார் . அப்புறம் நான் உங்கள் பெண்ணிடமும் பேச வேண்டும்…” என்று தயக்கத்துடன் சொல்ல ,

“சரிப்பா , முதலில் உன் பெற்றோரிடம் பேசி விட்டு , விவரத்தைச் சொல் . அதற்கடுத்து என் பெண்ணிடம் பேசலாம்.”

சங்கரனுக்கும் அவர் சொல்வது சரியென்று பட , “அப்படியே செய்யலாம்  ஸார்…”

சங்கரன் இரண்டு நாள் விடுப்பு வாங்கிக் கொண்டு ஊருக்கு சென்றார் .

பெற்றோர்களிடம் இதைப்பற்றி  பேச , “அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர் . பின், “நீ என்ன சங்கரா நினைக்கிறாய்?” என்று திருப்பிக் கேட்க , 

“நம் குடும்ப நிலைமையைச் சொல்லி ஸாரிடம் மறுத்துப்  பார்த்து விட்டேன் . அதற்கு அவர் தீர்வையும் சொல்லி , விடாப்பிடியாக நிற்கிறார் . மேலும், உங்களிடம் பேசுகிறேன் என்று நின்றார் . அதான் நான்  முதலில் உங்களிடம் பேசி  விட்டு வருகிறேன் என்று வந்து விட்டேன்…” என்று எல்லா விவரங்களையும் தெரிவித்தார் .  

பின், “நீங்கள் என்ன சொல்கிறீர்கள் அப்பா ? .”

ஒரு நிமிடம் தயங்கியவர் , “நாங்கள் யோசித்து , கலந்து பேசி சொல்கிறோம் சங்கரா.”

“சரி அப்பா , நான் என் நண்பர்களைப் பார்த்து விட்டு வருகிறேன்..” என்று கிளம்ப , 

“உன் முடிவு என்ன சங்கரா?” என்று அம்மா கேட்க ,

“இதென்ன கேள்வி அம்மா , உங்கள் முடிவு தான் என்னுடைய முடிவும்….” என்றார் ஆணித்தரமாக .

தங்கள் மகன் தங்கள் முடிவுக்காகக் காத்திருப்பதை நினைத்து மகிழ்ந்தார்கள். சம்பாதிக்கும் மகன், ‘இது தான் என் முடிவு’ என்று அறிவிக்காமல் , தங்களுடைய  முடிவிற்காகக் காத்திருக்கிறான் என்பதே பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. இச்செயல் அவன் மீது நம்பிக்கையையும் விதைத்தது . 

‘நிச்சயமாகத் தன் மகன் தன் வீட்டை விட்டுக் கொடுக்கமாட்டான்’ என்ற உறுதியையும் தர , தங்கள் மகனின் நல்வாழ்விற்காக ஒத்துக்கொள்ள முடிவு செய்தார்கள் .

மகன் வீடு வர , இவர்கள் சம்மதத்தைத் தெரிவிக்க ,

 சங்கரன் அதிர்ந்தார் . 

“அப்பா நன்றாக யோசித்துக் கொண்டீர்களா? இதனால் பல அசௌகரியங்களும் சங்கடங்களும் வரும், ஏற்ற தாழ்வுகள் வரும் . எவ்வளவு தூரம் நம் குடும்பத்தோடு இசைந்து இருப்பாள் என்று தெரியாது…” என்று அவர் வரிசையாக அடுக்க , 

கிராமத்து மனிதர்களாக இருந்தாலும் எதார்த்ததைப் புரிந்தவர்களாக , “எப்படியும் உன் வாழ்வு  நகரத்தில் தான் . நாங்கள் அங்கே வரப்போவதில்லை . அப்புறம் என்னப்பா ? உன் கடமைகளில் இருந்து தவறமாட்டாய் என்ற நம்பிக்கை எங்களுக்கு உன் மீது  இருக்கிறது  சங்கரா . சந்தோஷமாக உன் வாழ்வைத் தொடங்கு…” என்று சம்மதம் தெரிவித்தனர் .

அத்தியாயம் 5

விஸ்வநாதனிடம் தகவலைத் தெரிவிக்க , அவர், “உடனே புறப்பட்டு வருகிறேன்…” என்றார்

“இல்லை சார் , உங்கள் பெண்ணிடம் பேச விட்டு முடிவு செய்யலாம்.”

அவன் தெளிவு பெற  விரும்புகிறான் என்பதை உணர்ந்து , “நாளை காலை வீட்டுக்கு வாப்பா….”

மறுநாள் சங்கரன், ராஜியைப் பார்க்க வர , விஸ்வநாதன் அவனை வரவேற்று உட்கார வைத்தார் . சிறிது நேரத்தில் ராஜி வர , இருவரும் பார்த்து  பரஸ்பரம் புன்னகைத்துக் கொண்டனர் . 

விஸ்வநாதன் எழுந்து போக முயல, “உட்காருங்கள் ஸார் , உங்களுக்குத் தெரியாதது எதுவும் இல்லை” 

ராஜியைப் பார்த்து , “நான் சங்கரன் . ஸார் என்னைப் பற்றி எல்லாம் சொல்லி இருப்பார் . ஆனாலும் நான் உங்களிடம் தெளிவாகப் பேசி விடவேண்டும் என்று நினைத்தேன்…” என்று ஆரம்பித்து , 

“தன் குடும்ப நிலைமை , தன் பெற்றோர் , தன் தங்கைகள் , தன்  பொறுப்புகள் ,  அதில் தன் மனைவியின் பங்கு…” என்று அனைத்தையும் தெளிவுபடுத்தினார்.

விஸ்வநாதனும் தானும் பணம் விசயமாக முடிவு செய்ததைப் பற்றியும் , இந்தத் திருமணத்தைப்  பணத்திற்காக நிச்சயமாகச் செய்யவில்லை , விஸ்வநாதன் ஸாருக்கு தரும் மரியாதையையே இந்தத் திருமணம்…” என்று விளக்கினார் . 

இறுதியாக ராஜியை நேராகப் பார்த்து, “ உங்களுக்கு இதில் முழு சம்மதமா? இல்லை யோசிக்க நேரம் வேண்டுமா?” 

ராஜிக்கு அப்பா மீது நம்பிக்கை இருந்தாலும்,  ‘பணத்திற்காகத் தானே’ என்ற  நெருடல் இருந்து கொண்டே இருந்தது . 

 இப்போது சங்கரன் பேசிய பிறகு , “பெரிய இடம்… அடித்தது டா லக்கி பிரைஸ்” என்று நினைக்காமல் , நேர்மையாக நிறை குறைகளைப் பேசியது ராஜியை மிகவும் கவர்ந்தது. உடனே மனநிறைவுடன், “சம்மதம்…” என்றாள் .

சங்கரன் சற்றுத் தயங்கி , “யோசிக்க நேரம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் . எதிர்காலத்தைப் பற்றி நன்றாகச் சிந்தித்து முடிவு செய்யுங்கள்…” எனத் தூண்ட ,

“தேவையில்லை. எனக்குச் சம்மதம்”

பின் தந்தையிடம் திரும்பி, “திருமணத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள் அப்பா…” 

“உங்களுக்கு விருப்பமா?” என்ற கேள்வியை ராஜியிடமிருந்து சங்கரன் எதிர்பார்த்திருக்க , அது வராமல் போக , சற்று யோசித்தவர் , “அதான் நாம் முதலிலே தெளிவுபடுத்தி விட்டோமே…” என்று கடந்தார் .

சங்கரனின் பெற்றோர்களிடம் விஸ்வநாதன் பேச , 

கல்யாண வேலைகள் தொடங்கி , ஒரு சுபயோக சுபதினத்தில் திருமணம் முடிந்தது .

அத்தியாயம் 6

இவர்கள் திருமண வாழ்வு இனிதே சென்றது . சங்கரன் மீது அன்பாக , பிரியமாகவே நடந்து கொண்டார் ராஜி  .

 திருமணமான கொஞ்ச நாட்களிலே ராஜியின் குணத்தைச் சங்கரன் நன்றாகப் புரிந்து கொண்டார் . அதன்பின் சங்கரன் கடைப் பொறுப்போடு ஒதுங்கிக் கொண்டார் .  குடும்பப் பொறுப்புகளை எப்போதும் போல் ராஜி கையிலே இருக்க , அவர்களுக்குள் எந்தக் குழப்பமும் வராமல் வாழ்க்கைச் சக்கரம் சீராக ஓடியது .

சங்கரனின்  பெற்றோரும் ‘பெரிய வீட்டு மருமகள்’ என்று அளவோடு இருந்து கொண்டார்கள் . தங்கைகள் அண்ணியைப் பிரமிப்போடு பார்த்தார்கள் . அதனால் தள்ளியே நின்றார்கள் . 

அவர்களுடன் ராஜியால்  நெருக்கமாக இணைந்து போக முடியவில்லை என்றாலும் எந்த வம்புதும்பும் இல்லாமல் உறவைச் சீராக வைத்துக் கொண்டார் . அதனால் பெரிய பிரச்சனையின்றி ஓடியது . 

சங்கரனும் கொடுத்த வாக்குறுதிப்படி அவர் குடும்பத் தேவைகளை அவரே பார்த்துக் கொண்டார்.

‘தானே முதன்மையானவளாக இருக்கவே வேண்டும்’ என்ற ராஜியின் குணத்தால் நாத்தனார்களுக்கு நன்றாகவே செய்து திருமணத்தை முடித்து வைத்தார் . 

அதன்பின்  நாத்தனார்கள் அண்ணி சொல்லே மந்திரமென்றானார்கள் . எல்லோரும் ஊருக்கே அருகேயே திருமணம் முடித்திருக்க , பெற்றோர்களை அவர்களே  பார்த்துக் கொண்டார்கள்.

ராஜி கல்யாணம் காட்சி என்றால் மட்டும் ஊருக்கு வருவார் . மற்றபடி சங்கரன் தான் அடிக்கடி வந்து தன் பெற்றோரையும்  தங்கைகளையும் பார்த்து விட்டு , செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து விட்டு வருவார் .

இவர்கள் இல்லறவாழ்வு பெரிய பிரச்சனைகள் இல்லாமல் நன்றாகவே நடந்தது . ஆனால் பிள்ளைப் பேறு மட்டும் தள்ளிக் கொண்டே போனது . 

இதற்கிடையில் எதிர்பாராத விதமாக விஸ்வநாதன் மாரடைப்பால் இறந்து போனார்.

 அப்பாவின் மரணம் ராஜியைப் பெரிதும் பாதிக்க , ராஜி ஒடிந்து போனார் . சோர்ந்து போனார் .

சங்கரன் ராஜியைத் தாங்கினார் . நன்றாகக் கவனித்துக் கொண்டார் .  ராஜியை இழப்பில் இருந்து வெளியே கொண்டு வர மிகவும் பாடுபட்டார் . 

 அவ்வேளையில் இறைவன் வரம் கொடுக்க ,  திருமணமாகி ஏழு வருடங்கள் கழித்து ராஜி உண்டாக , இழப்பில் இருந்து மீளத் தொடங்கினார் . 

மகன் பிறந்தான் . விஸ்வநாதன் என்று பெயர் சூட்டினர் . கிடைப்பதற்கரிய பொக்கிஷமானான்  . 

விஸ்வா, ராஜியின் உலகமானான் .  அவனை வளர்ப்பதில் ஐக்கியமானார் . கைக்குள்ளே வைத்துக் கொண்டார் . 

அவனைப் பள்ளிக்கு அழைத்து செல்வது , கூட இருந்து படிக்க வைப்பது ,  பிற வகுப்புகளுக்கு அவரே கொண்டு விடுவது , கூட்டி வருவது என்று அனைத்துப் பொறுப்புகளையும் அவரே ஏற்று செய்தார் . மகனுக்கு அனைத்தையும் பெஸ்டாகக் கொடுக்க முயன்றார்.

சங்கரன், தானும் மகனின் வளர்ப்பில் ஈடுபட முயல , ராஜியே தடைக்கல்லாக மாறினார் . 

சங்கரனும் விஸ்வாவும் நெருங்குவதைத் தடுத்தார் . ‘மகனுக்கு  தானே  முதன்மையாக இருக்க வேண்டும்’ என்று செயல்பட்டார் .

முதலில் சங்கரன்  இதை மாற்ற முயன்றார் . ஆனால் அது வேறு பிரச்சனைகளை உண்டாக்க , 

‘வாழ்க்கைப் பயணம் சண்டை சச்சரவின்றி ஓடட்டும்’  என்று சங்கரன்  ஒதுங்கி நின்றார் . ராஜியே விஸ்வா விசயத்தை முழுவதுமாக பார்த்துக் கொண்டார் .

விஸ்வா வளர வளர, ‘அவனின் ஒவ்வொரு செயலுக்கும் பின்னாலும் நின்றார். உண்ணும் உணவு , உடுத்தும் உடை, படிக்கும் படிப்பு’ என்று அனைத்து முடிவுகளையும் ராஜியே எடுத்தார் .   

சிறு வயதில் விஸ்வா மறுத்தால் , முரண்டு பிடித்தால் , “அம்மா சொன்னால், செய்தால் சரியாகவே இருக்கும்…” என்று சொல்லிச் சொல்லி, அந்த எண்ணத்தை அவன் மனதில் ஆழப் பதித்தார் .  

“அம்மா உனக்குப் பெஸ்டாகக் கொடுப்பேன் , எல்லாம் உன் நன்மைக்குத் தான்….” என்பதைத் தாரக மந்திரமாக்கினார்.

அதேபோல், சொன்ன சொல்லைக் காப்பாற்றுவதற்காக ,  சிறந்த பள்ளி , சிறந்த கல்லூரி என்று தேடித் தேடித் தேர்ந்தெடுத்துக் கொடுக்க ,

 விஸ்வாவிற்கு அம்மா சொல்லே மந்திரமென்றானது.  அம்மா செய்தால் , சொன்னால் அப்படியே கண்மூடித்தனமாக ஒத்து கொண்டு செயல்படுத்தினான் விஸ்வா  .

ராஜியும்  அவன் மீது சிறு தூசி கூடப் படாது  பார்த்துக் கொண்டார் . அவனுக்கு எந்தக் கடினமான சூழ்நிலையும் வராமல் அரணாக நின்றார் . 

விஸ்வாவின் வாழ்க்கையும் எந்த மேடு பள்ளமில்லாமல் , அமைதியாகவே சென்றது .

தொடரும்…….