நெஞ்சம் 40

விசில் அடித்தபடி அந்த பொதுக்கழிவறைக்குள் நுழைந்தவன் அவன் வந்த வேலையைப் பார்க்க தொடங்க, அப்போது அவன் இரு பக்கமும் இரு ஆட்கள் வந்து நின்றனர்.

“என்ன அவ்வளவு இடம் இருக்கும் போது இங்க என் பக்கத்துல வந்து நிற்கிறாங்க ஏதோ சரியில்லயே “ என்று யோசித்தான் விக்ரமன்.

பின் அங்கிருந்து கிளம்பி வெளியே செல்லும் முன் யாரோ ஒருவன் வந்து அவன் மூக்கில் ஏதோ துணியை வைத்து அழுத்த இவன் சுதாரிக்கும் முன் இருவர் இவன் கையைப் பிடித்து தடுக்க அப்படியே மயங்கி விழுந்தான் விக்ரமன்.

இங்கு சாப்பிட அமர்ந்த மாறன் அருகில் ஒரு இடத்தை பிடித்து வைத்து விக்ரமனுக்காக பார்க்க அவன் வந்த பாட்டைக் காணவில்லை.

இவ்வளவு நேரம் ஆகியும் விக்ரமன் வராமல் போக ஏதோ தோன்ற மாறன் இடத்தை விட்டு எழுந்தான் . அப்போது அவன் அருகே வந்து அமர்ந்த தங்கம் அவன் கையைப் பிடித்து அமர வைத்து

“என்ன மாறா சாப்பிடாம எழுந்திருச்சி போற. உன் அக்கா புருஷன் என்னென்று உன்னையே பாக்குறாரு பாரு “  என்று அவர் நக்கலாக பேசியதை கேட்டு ஆர்யனை திரும்பி பார்த்தான்,

அவனும் சாப்பிடாமல் இவனை தான் பார்த்துக்கொண்டிருந்தான் அதில் அமைதியாக அமர்ந்து “ சாப்பிடுங்க மாமா” என்று சிரித்தவன் இந்த புறம் திரும்பி

“எங்க மாமா சாப்பிடாம இருக்கிறது  இருக்கட்டு “ என்று அந்த மாமாவில் அழுத்தம் கொடுத்து சொன்னவன்.

“எங்க உங்க பையன் ? வருவான்னு சொன்னீங்க இன்னும் ஆளைக் காணோம் என்ன எப்பவும் போல பசங்களுக்கு லீவ் இல்லை ன்னு சொல்லிட்டாரா “ என்று பதிலுக்கு சிரித்தவன்

“ஆமாலா… இப்போ எல்லோருக்கும் ஸ்கூல் லீவ் தான அந்த சாக்கை சொல்ல முடியாதே….கரெக்ட் வேற என்ன முக்கியமான மீட்டிங்னு சொல்லிடாரோ “ என்று சிரித்தவன் மீது கோபம் வந்தாலும் அவன் சொன்னது பாதி உண்மை தான்.

எப்போது ஊருக்கு கூப்பிட்டாலும் தங்க பாண்டியின் மகன் மகேந்திர பாண்டி ஏதாவது சாக்கு சொல்லி தவிர்க்க தான் பார்ப்பான்.

திருமணத்திற்கு முன் வரை அடிக்கடி வந்து சென்று கொண்டிருந்தவன் திருமணத்திற்குப் பின் அங்கேயே சொந்த வீடு வாங்கி செட்டில் ஆகி விட்டான்.

அதன் பின் திருவிழாவிற்கு மட்டும் வருவான். அதுவும் வருடம் செல்ல செல்ல இப்போது இரண்டு வருடம் ஆகிறது அவனை பார்த்து என்ற நிலையில் தான் இருக்கிறது.

இப்போதும் வர சொன்னதுக்கு முதலில் மறுத்தவன் பின் மயூரி வருகை சொன்ன பிறகே வருவதாக சொல்லியிருந்தான். ஆனால் இன்னும் அவனை காணவில்லை. இவற்றை யோசித்தபடி தங்கம் அமைதியாக இருக்க , மாறன் தொண்டையை சிறுமிய படி

“ என்ன பெரியப்பா ட்ரீம்ஸா….” என்று சிரிக்க, அதில் அவர் எதுவும் பேசாமல் திரும்பி கொண்டார்.

அதன் பின் அனைவருமாக சேர்ந்து மயூரியை அழைத்து கொண்டு பெரிய வீட்டுக்கு செல்ல வெள்ளையம்மா பெரிய பூசணி வைத்து ஆர்யன் மற்றும் மயூரிக்கு திருஷ்டி எடுத்து உள்ளே அழைத்து சென்றார்.

வீட்டுக்கு நடுவில் ஷோபாவில் மீசையை முறுக்கிய படி தங்கம் “ எப்படி வீடு …” என்று சொல்வது போல அமர்ந்து இருக்க அதை எதையும் கண்டு கொள்ளாமல் மயூரி அவளுக்கு என்று ஒதுக்கப்பட்ட அறையில் சென்று படுத்து விட்டாள்.

மாணிக்கம் லட்சுமி தினக்கரன் என்று மூவரும் மண்டபத்தில் இருந்தே கிளம்பி விட்டனர். அங்கு ப்ரியா குழந்தை வைத்து தனியே இருப்பாள் என்று சொல்லி சென்றனர்.

சொந்தங்கள் அனைவரும் மயூரியைப் பார்த்து பேச நினைக்க அவர்களை தடுக்கவே மாறனுக்கு போதும் போதும் என்று ஆகிவிட்டது.

இதில் அனைவரும் விக்ரமன் என்ற ஒருவனை மறந்து தான் போனார்கள்.

இங்கு விக்ரமனோ கைகள் கால்கள் நாற்காலி யோடு சேர்த்து  கட்டப்பட்ட நிலையில்

“ அம்மா பசிக்குது இங்க கப்பு அடிக்குது…. அம்மா பசிக்குது இங்க கப்பு அடிக்குது….” என்று இத்தோடு இருபதாவது முறை இதே இரண்டு வரிகளை பாடியிருப்பான்.

கடத்தி வந்தவர்கள் அனைவரும் காதை மூடியபடி தான் அவனை சுற்றி அமர்ந்திருந்தனர்.

இவன் சத்தம் தாங்காது ஒருவன் “  அஞ்சு நிமிஷம் பொருடா சாப்பாடு வந்துட்டே இருக்கு “ என்று அழுது விடுவேன் என்ற குரலில் பேச

“ அஞ்சு நிமிஷம் ன்னு ஈசியா சொல்ற. ஒரு நிமிஷத்துல அறுபது நொடி அஞ்சு நிமிஷத்துல முந்நூறு நொடி எப்படி பசிக்கும் தெரியுமா. நான் வேற இன்னைக்கு வெயிட்டா நான் வெஜ் சாப்பிடலாம்னு நேத்துல இருந்து சரியா சாப்பிடல.

இப்படி என் ஆசையில் மண் அள்ளி போட்டிங்களே டா நீங்க சாப்பிட்டதுலாம் பேதியா போக…” என்று சாபம் விட்டவன் மீண்டும் பாட தொடங்க அங்கிருந்த ஒருவன் அதை கேட்க முடியாது வெளியே சென்று நின்று கொண்டான்.

இத்தனை வாட்டி அந்த இருவரியையே திருப்பி திருப்பி கேட்டதில் காதில் இருந்து ரத்தம் வரும் போல் ஆகிவிட்டது அவனுக்கு.

அப்போது அங்கு ஒருவன் கையில் பார்சல் உடன் வேகமாக பைக்கில் இருந்து இறங்க

“ எவ்ளோ நேரம்டா வெயிட் பண்ண …” என்று கத்தியபடி அதை வாங்கி உள்ளே வந்தவன், விக்ரமன் கைக் கட்டை திறந்து அவன் கையில் பிரியாணியை திறந்து கொடுக்க , அதை பார்த்து முகத்தை சுளித்த விக்ரமன்

“ நான் எங்க எப்படி சாப்பிட்டு இருக்க வேண்டியவன். என்ன புடிச்சி வந்து இந்த பீஸ் இல்லாத பிரியாணி தந்து எமாத்த பாக்குறிங்களாடா “ என்று விக்ரமன் கத்தவும் அங்கிருந்த ஒருவன்

“ சாரி சார், ரொம்ப லேட் ஆகிடுச்சி. அதுனால சாப்பிட இது தான் கிடைச்சது  கொஞ்சம் இன்னைக்கு ஒரு நாள் மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க “ என்று பவ்வியமாக பேசவும்

“சரி பிழைச்சுப் போங்க, ஆனா நைட் இப்படிலாம் எக்ஸ்க்யூஸ் தர மாட்டேன் பாத்துக்குங்க “

“அப்படி நைட் என்ன வேணும் சார் “

“ ம்ம்ம் நைட் வந்து லைட்டா தான் சாப்பிடுவேன் நீ என்ன பண்ற இங்க இருந்து டவுன் பஸ் ஸ்டாண்டுக்கு போனினா அங்க ஒரு மார்கெட் பின்னாடி அந்தோணி போரட்டா கடைன்னு இருக்கும். அங்க போய் கொத்து பரோட்டா வித் டபுள் சால்னா வாங்கிட்டு வந்துரு சீக்கிரமா எடுத்துட்டு வா சூடா இருந்தா தான் சூப்பரா இருக்கும் “

என்று சாப்பிட தொடங்கிய விக்ரமனை பார்த்து இன்னொருவன் “ என்னடா இங்க இருந்து பத்து கிலோ மீட்டர் டிராவல் பண்ண சொல்றான் “

“அதான்டா யோசிக்கிறன் அந்த  சார் வேற இவன் மேல கை பாடாம பத்திரமா பாத்துக்க சொல்லிருக்காரு. இப்போ வாங்கி தரலனா கத்திட்டே இருப்பானே “ என்று இவர்கள் மெதுவாக பேசிக்கொண்டிருக்கும் போதே விக்ரமன்

“ அ..அப்படியே சாயங்காலம் ஸ்நாக்ஸ்க்கு கடுங்காப்பி. மிக்சர், காரசேவ், ஏணிப்படிக்கட்டு மிட்டாய் கொஞ்சம் சூடா நெய் அல்வா வாங்கிட்டு வந்துருங்க.

முக்கியமா கடுங்காப்பியை கருப்பெட்டில போட சொல்லுங்க அன்ட் அல்வா சூடா இருக்கனும் “

என்று சாப்பிடுபவனை போட்டு அடிக்கும் ஆத்திரம் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் விக்ரமன் சொன்னதை புலம்பிய படி வாங்கி வரவே சென்றனர்.

“ மச்சான் இவன நம்ம கடத்திருக்கோமா இல்ல நம்மளை இவன் கடத்திருக்கான இப்படி ஜாலியா எதோ ட்ரிப்புக்கு ஹோட்டலுக்கு வந்த மாதிரி இருக்கான் “

“அதான்டா எனக்கும் புரியல இவன பார்த்தா பயப்படுற மாதிரியே தெரியல்லையேடா “ என்று இருவரும் விக்ரமனை பார்த்தபடி புலம்பி கொண்டு இருக்கும் போது சரியாக அவர்களுக்கு கால் வர போனை எடுத்து காதில் வைத்தான்.

“ம்ம்ம் நான் தான் அவன் என்ன பண்ணிட்டு இருக்கான் கத்தி அடம் பிடிக்கிறானா? “

“இல்ல சார் நல்லா ஜாலியா பிரியாணி சாப்பிட்டு இருக்காரு சார் “

“ என்னடா சொல்ற “

என்று அவர் கேட்டதும் விக்ரமன் செய்த அனைத்தையும் அவர்கள் பாவம் போல சொல்லி “ எங்களால முடியல சார் ஏதாவது பேசிட்டே இருக்காரு.

பேசுனா கூட சரி பரவாலன்னு விட்டா. இவன் பயங்கரமா பாடுறேன்னு கத்துறாரு சார் கேட்க முடியல சார் “

இவர்கள் சொல்வதை கேட்டு சிறிது நேரம் யோசித்தவர்

“நான் சொல்ற வரை அவன் என்ன பண்ணாலும் நீங்க அவன பத்திரமா பாத்துக்கொங்க. முக்கியமா அவன் மேல ஒரு கீரல் கூட விழ கூடாது சரியா “ என்று போனை வைத்த தங்கம் மீசையை முறுக்கி விட்டபடி

“ கடத்தி வச்சதுக்கு கூட பயப்படாம அப்பவும் கல்யாணம் நடக்கப்போகுதுன்னு சந்தோஷத்துல இருக்கியா விக்கி.

 உன் சந்தோஷம் எத்தன நாளைக்குன்னு பார்க்கிறேன் “ என்று சுற்றி யாராவது இருக்கிறார்களா என்று பார்த்த படி மண்டபம் உள்ளே சென்று விட்டார்.

இங்கு விக்ரமனை இரவு முழுக்க மாறன் தேடி ஓய்ந்தவனாக அவனின் வீட்டுக்குச் சென்றான்.

அங்கே இவனுக்கு முன்னே இவன் பெரியப்பா ஏதோ ராஜனிடம் பேசிவிட்டு போவதை பார்த்தவன். அவர் சென்றதும் ராஜனிடம் சென்று

“எங்க பெரியப்பா ஏன் ப்பா இந்நேரம் இங்க வந்துட்டு போறாங்க ஏதாவது பிரச்சனையா “

“அட பிரச்சனைலாம் இல்ல தம்பி.. எல்லாம் இந்த விக்ரமன் பத்தி தான். அவன் சென்னைக்கு திரும்பி வேலையா போயிட்டானாம் திரும்பி கல்யாணம் காலைல தான் வருவான் நீ பயப்படாத நான் ஒரு ஆள அவன் கூட அனுப்பியிருக்கேன்னு சமாதானம் செஞ்சிட்டு போறான் தங்கம் “

“என்னது விக்கி சென்னைக்கா போயிருக்கான? “

“கூட சுத்துற உன் கிட்டவே சொல்லாம போய்டான அந்த பையன். என்னனு அவன சொல்ல “ என்று பெருமூச்சு இழுத்து விட்டபடி உள்ளே சென்றார்.

மாறனுக்கு இப்போது தான் மூச்சே வந்தது விக்கியை காணவில்லை என்று பயந்து போய் ஊரே தேடி கொண்டிருந்தவனுக்கு அவன் பத்திரமாக பெரியப்பாவிடம் தான் இருக்கிறான் என்று தெரிந்ததும் நிம்மதியாக வீடு சென்றான்.

இங்கு இளையவர்கள் செய்யும் கலகம் தெரியாமல் தங்கம் பின் லேடன் ரேஞ்சுக்கு ப்ளான் போட்டு கொண்டிருந்தார்.

இங்கு விக்ரமனோ நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் நல்லவர்கள் என்று அனைவரையும் வைத்து செய்து கொண்டிருந்தான்.

திருமணம் முடிந்து மாமியார் வீட்டுக்கு விருந்துக்கு வந்தது போல கண்ணில் வெள்ளரி முகத்தில் பேஸ் பேக் போட்டு காலில் சுடு தண்ணீரில் முக்கி என்று அமோகமாக இருந்தான் விக்ரமன்.