“ஆமாம் உன் பொண்ணு வாழற வீட்டுக்கு போயிருந்தோம், வான்னு கூப்பிட கூட வெளில வரலை. உன் பொண்ண விட தரம் தெரிஞ்சவதான் சிவா, என்னவோ உடம்புக்கு முடியாம போயிருக்கும், போயிருப்பா, வர்ற எடம் எல்லாம் இப்படி ஏதாவது பேசணுமா உனக்கு? அதான் உன் மருமவளும் உன்கிட்ட வடிக்க மாட்டேன்னு தனியா போயிட்டா” என சகுந்தலையை அடக்கினார் அவரின் தங்கை.
ஆமாம் சகுந்தலையின் மகன் மனைவியோடு தனியாக சென்று விட்டான். அவருக்கு இது மனதளவில் பெரிய பாதிப்புதான், ஆனால் வெளியில் காட்டிக் கொள்ளாமல் எனக்கென்ன குறை என்பது போலவே ஜம்பமாக பேசி திரிவார்.
தன் சகோதரிகள் யாரும் சரிப்பட்டு வர மாட்டார்கள் என அம்மாவின் பக்கம் நகர்ந்தார் சகுந்தலை.
“அவளை பத்தி ஏதாவது பேசின வாய்ல வசம்ப வச்சு தேச்சிப்புடுவேன் ஆமாம்! போடி அங்குட்டு” என சொல்லி விட்டார் பாட்டி.
பின்னே தள்ளாத காலத்தில் ருத்ரன்தான் தன்னை பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை நன்கு உணர்ந்து விட்ட பாட்டிக்கு அவன் மனைவியை ஏதும் சொன்னால் சும்மா இருக்க மாட்டான் என்பதும் தெரிந்திருந்தது.
கூட்டம் குறைந்து விட்டது, சாப்பிட வாருங்கள் என அம்மாவுக்கு அழைத்து சொன்னான் ருத்ரன். சிவாவை அழைக்க மாடிக்கு சென்ற வைதேகி, அண்ணி என்னவோ உறங்கி விட்டார் என தகவல் சொன்னாள்.
“எழுப்பாம ஏன் டி வந்த?” என மகளை கடிந்தார் வள்ளி.
“எப்பவும் இப்படி தூங்குறவக இல்லையேம்மா, உடம்புக்கு ஏதும் நோவோ என்னவோ?” என்றாள் வைதேகி. சரி அனைவரும் சென்று சாப்பிடுவோம், ருத்ரன் பிறகு மனைவியை அழைத்து செல்வான் என வள்ளியும் விட்டு விட்டார்.
சாப்பிட வந்தவர்களில் தன் மனைவியை காணாமல் தங்கையை பார்த்தான் ருத்ரன். அவன் காதில் விஷயத்தை சொன்னாள் வைதேகி.
“நல்லாத்தானே ஆயி இருந்தா, என்னவாம்?” எனக் கேட்டவன் உடனே மனைவிக்கு அழைத்தான். அழைப்பு ஏற்க படாமல் போகவும் வீட்டுக்கு புறப்பட்டு விட்டான்.
அசந்து உறங்கிக் கொண்டிருந்தாள் சிவா. நேற்று கோயிலில் யாகம் முடிய நேரமாகியிருக்க, ருத்ரன் வீடு வரவும் நள்ளிரவை தாண்டியிருந்தது. இடையில் எழுந்து கதவு திறந்து விட்டதில் அவளின் உறக்கமும் கெட்டிருந்தது.
நேரத்தை பார்த்தவன் தானாக விழிக்கட்டும் என அங்கேயே அமர்ந்து விட்டான். அவனுக்கும் நல்ல அலட்டல். இந்த ஓய்வு அவனுக்குமே அவசியம்தான்.
சாப்பிட போனவர்கள் வீடு திரும்பவும்தான் இதற்கு மேல் சரி வராது என மனைவியை எழுப்பி விட்டான்.
விழித்தவள், “ரொம்ப தூக்கமா வருதுங்க” என்றாள்.
“கோயிலடில வீட்ட வச்சிட்டு நாமளே குப்புற படுத்து தூங்கறதா புள்ள? வா வா, சாப்பிட்டு தூங்கு” என அவளின் கை பிடித்தான். அவளுக்கும் தெரிகிறது, உடம்புதான் ஒத்துழைப்பு நல்க மறுக்கிறது.
அவன் விரட்டியதில் முகம் மட்டும் கழுவிக் கொண்டு அவனோடு கிளம்பினாள். மெதுவாக நடந்தவளை புருவம் சுருக்கி பார்த்தவன், “என்னாச்சு புள்ள உனக்கு?” எனக் கேட்டான்.
“தூங்கி எந்திரிச்சா சரியாகிடுவேன்” என்றாள்.
ருத்ரனை கண்ட கோதையின் மகன் ஓடி வந்தான். “எங்குட்டு போயிட்டீய ண்ணன்? நாமதான் பாக்கி வாங்க” என்றான்.
“வந்த வேகத்துக்கு ஏதோ சண்டை சச்சரவுன்னு நெனச்சிப்புட்டேன் டா, பீதிய கெளப்புறத நிறுத்திக்கடா” என்றான் ருத்ரன்.
“பந்தியில சோறு இல்லைனா அதான் ண்ணே கலவரத்துக்கு கைநாட்டு” என்ற தம்பியின் தோளில் ஒன்று வைத்து அவன் வாயை அடக்கிய ருத்ரன், மனைவியுடன் சேர்ந்து சாப்பிட அமர்ந்தான்.
வெறும் ரசம் போதும் என சிவா சொல்ல, “அதெல்லாம் நாங்க பரிமாறினா எல்லாம்தான் வைப்போம், எங்க முரட்டு காளையோட சம்சாரம் நீங்க, அதுக்கு தக்க சாப்பிட வேணாமா அத்தாச்சி?” என வம்பு செய்தான் ஒருவன்.
“எலேய், அவளுக்கு ஏதோ மேலுக்கு முடியலை, வாயை போட்டு அலம்பாம கேட்கிறத வை!” என அதட்டினான் ருத்ரன்.
அவள் இடுப்பில் கை வைத்து முறைக்க, “ஒன்னும் இல்லாம சோர்ந்து போவ மாட்ட, ரத்தம் கித்தம் கம்மியா இருக்கும், பார்த்து டானிக் வாங்கிட்டு போலாம்” என சொல்லி அவளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்று விட்டான்.
மருத்துவரை பார்த்த போது எல்லா விவரமும் ருத்ரன்தான் சொன்னான்.
“எவ்ளோ நாளா இப்படி டயர்டா இருக்காங்க?” என மருத்துவர் கேட்க, “அது… இன்னிக்கு காலைல கூட தேவலாம் டாக்டர், மத்தியானத்லேருந்துதான் இப்படி இருக்கா, நல்லா பாருங்க” என்றானே பார்க்கலாம்.
நெற்றிப் பொட்டை அழுத்திக் கொடுத்து தன்னை நிதானப்படுத்திக் கொண்ட மருத்துவர் சிவாவை பார்த்து, “வேற என்னம்மா தொந்தரவு?” எனக் கேட்டார்.
“நான் நல்லாத்தான் இருக்கேன் மேடம், நைட் சரியா தூக்கம் இல்லாம இன்னிக்குத்தான் இப்படி இருக்கு” என்றாள்.
“ஏட்டி வருஷ கணக்கா படிச்சு வைத்தியம் பார்க்கிறவக சொல்லட்டும் அதை!” என மனைவியை கடிந்தவன், “நீங்க எல்லா டெஸ்ட்டும் பண்ணிட்டு என்ன ஏதுன்னு சொல்லுங்க டாக்டர்” என்றான்.
சிவாவை பரிசோதித்த மருத்துவருக்கு அவளிடம் குறைபாடுகள் இருக்கும் என தோன்றவில்லை. அரை நாள் உடல் சோர்வுக்கு என்ன பரிசோதனை செய்வது என நினைத்துக் கொண்டே, “பீரியட்ஸ் எல்லாம் சரியா வருதாம்மா?” எனக் கேட்டார்.
“எப்பவும் ரெண்டு மூனு நாள் தள்ளி வரும் மேடம், இந்த மாசத்துக்கு நாளைக்கு இல்லை அடுத்த நாள் வரும்” என்றாள்.
அவளது நாடித் துடிப்பை பார்த்தவர் பரிசோதனைகளுக்கு எழுதி அனுப்பி வைத்தார்.
சற்று நேரம் கழித்து அவர்களை அழைத்த மருத்துவர், “உண்மையா உங்க ஹஸ்பண்ட் சொன்னதுல இரிடேட் ஆகியிருந்தேன். உங்கள்ட்ட ஏதோ சேஞ்ச் இருக்குன்னு அவருக்கு தெரிஞ்சிருக்கு” என புன்னகையுடன் சொன்னார்.