அத்தியாயம் 1

மதுரை புறநகர் பகுதியில் அமைந்துள்ளது  அந்த அழகிய  வீடு. இந்த வீட்டு மனிதர்கள் ரசனைமிக்கவர்கள் என்பதைப் பறைசாற்றுவது போல் அமைந்திருந்தது அந்த வீடு . வீட்டைச் சுற்றி நன்றாக இடம் விட்டுக் கட்டி அதில் அழகிய தோட்டமும் அமைத்திருந்தனர் .

அதை நன்றாகப் பராமரித்தனர் .

அந்த எண்ணத்தை மெய்ப்பிப்பது போல் , அதிகாலை மார்கழிக்காற்று ரஞ்சனியை வருட , அந்தக் குளிரை அனுபவித்தபடி , 

அவள் தெரு முனையில் இருக்கும் சித்தி விநாயகர் கோவிலில் ஒலித்த , “விநாயகனே வினைகள் தீர்ப்பவனே” என்ற பாடலை முணுமுணுத்தபடி , வாசல் அடைக்க அழகாக கோலமிட்டாள் . அவளுக்குத் துணையாக அவள் தந்தை ராமநாதன் , வாசலில்  அமர்ந்து , தன் மகள் கோலமிடுவதை ரசித்துக் கொண்டிருந்தார் .

“ஏன் அப்பா? இப்படிக் குளிரில் உட்கார்ந்து இருக்கிறீர்கள்?  உள்ளே போங்கள்….” 

“ஒன்றும் பிரச்சனை இல்லை ரஞ்சிம்மா , மார்கழிக் குளிர் உடம்பிற்கு நல்லது டா , அதை உன் புண்ணியத்தில் அனுபவிக்கிறேன்டா…” என்று மகளுக்குத் துணையாக அமர்ந்திருந்தார் . 

ரஞ்சனியும்  சிரித்துக் கொண்டே , “அப்படியே உங்கள் மகளுக்கு உதவுங்கள்… “ என்று கலர் பொடியை எடுத்துக் கொடுக்கும்படி பணிக்க  , 

அவரும் ஆசையோடு செய்தார் .

மகள் கோலத்தை முடிக்க , “சூப்பராக இருக்குடா…” என்று பாராட்ட,  அப்போது சரியாகப் பக்கத்து தெருவில் இருக்கும் நண்பர் ரத்னம் வர , 

“குட்மார்னிங் அங்கிள்…”

“குட் மார்னிங் ரஞ்சனி…” என்றவாறே கோலத்தைக் கவனித்தவர் , “வாவ்! சூப்பர் ரஞ்சனி…” என்று பாராட்டினார் . 

பின், “நீ கொடுத்து வைத்தவன்டா , இரண்டும் நல்ல பொறுப்பான பிள்ளைகள்…” என்று மனமாறச் சொல்ல ,

 ராமநாதன் சின்னப் புன்னகையோடு அதை அங்கிகரித்து விட்டு,  “போகலாமா ரத்னம்?”

“சரி..” என்று அவரும் நடக்கத் துவங்க,

”அம்மாக்கிட்ட சொல்லிவிடு ரஞ்சனி….” என்று நண்பனுடன் இணைந்து நடந்தார் .

ரஞ்சனியும் உள்ளே வர , அம்மா கோகிலா காபியை அவள் முன் நீட்டியபடி , “அப்பா நடைபயிற்சிக்குப் போய்விட்டாரா?”   

“ஆமாம்….” என்று தலையாட்டியபடி , வாசம் பிடித்தாள் , பின், சப்புக் கொட்டிக் காபியை அருந்தினாள் .

“பேஷ்… பேஷ்…  காபி என்றால் அது கோகிலா காபி தான்…” என்று சொல்லி அருகே வர  ,

“பெருமாள் கோவிலுக்குப் போகிறேன்…” என்று ஒரு அடி நகர , “ரொம்பப் பண்ணாதே அம்மா…” என்று  கட்டிப் பிடித்து ஒரு இச் வைத்து விட்டே விலகினாள் .

கோகிலா முறைக்க , ரஞ்சனி கண் சிமிட்டினாள் . 

பின், “நீ தான் உன் இளவயதிலேயே திருப்பாவை பாடிப்பாடி , நல்ல கணவனாக என் அப்பா கிடைத்து விட்டாரே , இப்பொழுது ஏன் மீண்டும் பெருமாளைத் தொந்தரவு செய்கிறாய்… “ என்று வம்பு செய்ய ,

“எல்லாம் உனக்காகத்தான் , உன்னிடம் சொன்னால் ஆயிரம் வியாக்கியானம் பேசுவாய் , எனக்கு அதற்கு நேரமும் இல்லை பொறுமையும் இல்லை , அது தான் உனக்குப் பதிலாக நான் அப்ளிகேஷன் போட போகிறேன்…” என்று நொடிக்க ,

“எனக்கு வேண்டுவது இருக்கட்டும் முதலில் உங்கள் சீமந்தப் புத்திரனுக்கு நல்ல மனைவி வர வேண்டும் என்று கும்பிடுங்கள்..” 

“இரண்டு பேருக்கும் தான் ,  நேரமாச்சு , நான் கிளம்புகிறேன்…” என்று வாசலை நோக்கி நகர்ந்தவர் , 

“ ம்ம்…” என்று ஞாபகம் வந்தவராய்த் திரும்பி , “ டிக்காஷன் போட்டு வைத்து உள்ளேன் . அப்பா வந்தால் காபி கலந்து கொடு.”

“சரிம்மா , அப்புறம் உங்கள் பெண் இந்த வருடம் , முதல் முயற்சியிலே சி.ஏ. முடித்து விட வேண்டும் என்று சேர்த்து வேண்டுங்கள்…” எனக் கோரிக்கை வைக்க , 

“அதெல்லாம் பாஸாகிவிடுவாய்…” என்று நம்பிக்கையாகச் சொன்னபடி செருப்பைப் போட்டார்.

ரஞ்சனியும் சிரித்தபடி வழி அனுப்பி வைத்துவிட்டு , அன்று வந்த செய்தித்தாளை மேய , நாமும் அவர்களைப் பற்றிப் பார்த்து விடுவோம்.

ராமநாதனும்  கோகிலாவும்  மனமொத்தத் தம்பதியினர் . பரஸ்பர புரிதலும் மரியாதையும் உள்ளவர்கள் . இவர்களுக்கு ரஞ்சனி மற்றும் ராகவ் என்ற சீமந்தப் புத்திரனும் உண்டு . இருவருக்கும் நான்கு வருட இடைவெளி மட்டுமே .  ராகவ்விற்கு இருபத்தியெழு வயதாகிறது ,  M.B.A.  முடித்து விட்டு , அவர்களுக்கு மதுரையில் இருக்கும் மிகப் பெரிய ஜவுளிக்கடையை… இல்லை… கடலை….  அப்பாவுடன் இணைந்து பார்த்து வருகிறான் . 

ரஞ்சனி பி.காம் முடித்துவிட்டு பிரபல ஆடிட்டரிடம் (அர்ட்டிகள்சிப்) இரண்டு வருடங்ளாகப் பயிற்சி பெற்று வருகிறாள் . காலையில் ஆடிட்டர் அலுவலகம் மாலையில் சி.ஏ வகுப்பு என்று பிஸியாகச் சுற்றிக் கொண்டு இருக்கிறாள் . ஆடிட்டர் ஆக வேண்டும் என்பது அவளது கனவு.

நடையை முடித்து விட்டு  ராமநாதன் வர , அதே நேரம் ராகவ்வும் எழுந்து தன்னைச் சுத்தப்படுத்தி விட்டு , “அம்மா, காபி…” என்றபடி கீழே வந்தான்.

தன் தங்கையைக் கண்டவன் , “குட் மார்னிங் ரஞ்சு… “ என்று புன்னகைக்க , இவளும் பதில் வணக்கம் வைக்க , 

இவன் குரல் கேட்டு கோகிலா வராததைக் கண்டு , “அம்மா இல்லையா ரஞ்சு ? “

“கோவில் ….. “ என்று கைகளைத் தலைக்கு மேல் குவித்துக் காட்டினாள் .

“ஓ…! காப்பி ரஞ்சு …” எனக் கெஞ்சல் பார்வை வீச  ,  

“ம்ம்…” என்றபடி சமையலறைக்குள் சென்றாள் . 

அப்பாவும் மகனும் வியாபாரத்தைப் பற்றிப் பேசத் தொடங்கினர் .

சிறிது நேரத்தில் ரஞ்சனியும், இருவருக்குமான காப்பியுடன் வந்து இவர்கள் பேச்சில் இணைந்தாள் . இவர்கள் பேசுவதை ஆர்வமுடன் கேட்டாள் , புரியாததைக் கேட்டுத் தெளிவு பெற்றாள். 

அப்பாவும் , அண்ணனும் அவளை வியாபாரத்தில் ஈடுபட ஊக்குவித்தனர் . பண்டிகை மாதங்களில், கூட்ட நேரங்களில் , யாராவது வெளியூர் செல்லும் போது , ரஞ்சனியும் உதவிக்குக் கடைக்குச் செல்வாள் . அதனால்  ரஞ்சனிக்கு ஓரளவிற்கு வியாபாரத்திலும் தேர்ச்சி இருந்தது .

சிறிது நேரத்தில் கோகிலாவும் தரிசனத்தை முடித்து விட்டு வர , அனைவரும் அமர்ந்து சிறிது நேரம் கதை பேசிவிட்டு , அவர்கள் வேலைகளைப் பார்க்கக் கலைந்தனர் . 

மொத்தத்தில்…  அடுத்தவர் எண்ணங்களை , விருப்பத்தை மதித்து , உரிய மரியாதையுடன் , நிறைய அன்புடன் ,  நல்ல புரிதலுடன்  இருக்கும் அழகிய அன்பான குடும்பம் .

அத்தியாயம் 2

சென்னையின் வியாபார மையமான தியாகராய நகரில் ,  செல்வச் செழிப்பைப் பறைசாற்றும் வகையில் அமைந்திருந்தது  அந்தப்  பிரமாண்டமான தனி வீடு . அதன் அமைப்பே பரம்பரைப் பெருமையை எடுத்துக் காட்டும் விதத்தில் இருந்தது . 

அந்த வீட்டுப் பூஜை அறையில் சுப்ரபாதம் ஒலிக்க , தன் மனைவி ராஜராஜேஸ்வரி  எழுந்து விட்டாள் என்பதைப் புரிந்து கொண்டார் சங்கரன் .

பூஜையை முடித்து வெளியே வந்த ராஜி , “சுதா….” என்று அழைக்க , 

சுதா காபியுடன் வேகமாக வந்தாள்  .

ராஜி தனக்கான காப்பியை எடுத்தபடி,  ”உங்களுக்கு…?” என்று கேட்க , 

“ஆச்சு ராஜி … ‘என்று சிரித்தார் சங்கரன் .

பின்,  “ விஸ்வா எழுந்து விட்டானா?”

‘ம்ம்…  எழுந்து விட்டான் ராஜி .‌ உடற்பயிற்சி செய்கிறான் .” 

*சரிங்க…” என்றவர் , காபியை அருந்த , 

சரியாக அவர் குடித்து முடிக்கும் நேரம் சுதா காலி டம்பளரை வாங்க வர , அதைக் கொடுத்து விட்டு , அன்றைய சமையல் மெனுவைச் சொன்னார் .

சுதா உள்ளே செல்ல முயல ,  உடற்பயிற்சி முடித்து வந்த விஸ்வா , “சுதா, காபி…. “ என்றான்.

“சரிங்க அண்ணா…” என்று உள்ளே திரும்ப, 

“ஒரு நிமிஷம் சுதா…” என்று நிறுத்தி ,  “சத்துமாவுக் கஞ்சி குடிப்பா , அது தான் உடம்பிற்கு நல்லது….” என்று சொன்னார் ராஜி .

பின், விஸ்வாவிடமிருந்து பதில் வரும் முன் , “சத்துமாவுக் கஞ்சி எடுத்துக் கொண்டு வா சுதா…” என்று பணிக்க ,

சுதா குழப்பத்துடன் இருவரையும் பார்க்க , “நான் சொன்னதைச் செய்…”என்றார் ராஜேஸ்வரி .

சுதா உள்ளே செல்ல , சங்கரன் மெதுவாக , “அவனுக்குப் பிடித்ததைக் குடிக்கட்டுமே…” என்று சிபாரிசுக்கு வர ,

“இப்பொழுதுதான் உடற்பயிற்சி முடித்து வருகிறான் , சத்துள்ள உணவாக உட்கொள்ள வேண்டாமா? காபியைக் காலை உணவிற்குப் பின் குடிக்கட்டுமே…. , அம்மா உன் நல்லதற்காகத் தானே கண்ணா  சொல்கிறேன்….” என்று சங்கரனில் ஆரம்பித்து விஸ்வாவிடம் முடித்தார் . 

“சரிம்மா , நீங்கள் சொன்னால் சரிதான்….”  என்று முடித்தான் விஸ்வா .

சங்கரன், அவனை ஒரு பார்வைப் பார்த்து விட்டு , செய்தித்தாளிற்குள்  தலையை நுழைத்துக் கொண்டார் .

 அதற்குள் கஞ்சி வர , விஸ்வா அதைக் குடிக்க ஆரம்பிக்க , ராஜேஸ்வரி சமையலை மேற்பார்வையிட உள்ளே சென்றார் .

“ஏன்டா விஸ்வா , அம்மாவிடம் காபி தான் வேண்டும் என்று சொல்ல வேண்டியது தானே?” என்று சங்கரன் கேட்க ,

“என் நன்மைக்குத்தானே  அம்மா  சொல்கிறார்…” என்று புன்னகைக்க ,

“சரியான அம்மா பிள்ளை …” என்று அலுத்தவர் , வியாபாரத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தார் .

விஸ்வா என்ற விஸ்வநாதன் வீட்டில்  அம்மாவிற்கு அடங்கிய பிள்ளை . அம்மா கிழித்தக் கோட்டைத் தாண்ட மாட்டான் . 

இப்போது தான் அப்பாவுடன் இணைந்து  ,  அவர்களுடைய  ஐந்து மாடிப் பல்பொருள் அங்காடியான ‘விஸ்வா ஸ்டோர்ஸ்”யைப் பார்த்துக் கொள்கிறான் .  இங்கே கிடைக்காதப் பொருட்களே இல்லை என்று சொல்லும்படியாக,  அனைத்துப் பொருட்களும் கிடைக்கும் . 

தாத்தா விஸ்வநாதன் ஆரம்பித்தது , மருமகன் சங்கரனால் மேலும் வளர , இன்று விஸ்வாவும் இணைந்து பார்த்துக் கொள்கிறான் . 

அத்தியாயம் 3

விஸ்வநாதனுக்கு ஒரே மகள் ராஜராஜேஸ்வரி , சிறுவயதிலே ராஜியின் அம்மா இறந்து விட , அவரை வளர்த்தது எல்லாம் தூரத்துச் சொந்தமான விஸ்வநாதனுக்கு அக்கா முறையான கோமதி அம்மாள் தான் . இவர் சிறுவயதிலே கணவனை இழந்த விட, ராஜியை வளர்ப்பதற்காக இங்கேயே வந்து விட்டார் .   

விஸ்வநாதனுக்கு மகள் என்றால் உயிர் . மகளை யோசித்து, மறுமணம் கூடச் செய்து கொள்ளவில்லை . அவளுக்காக அனைத்தையும் பார்த்துச் பார்த்துச் செய்வார் . எப்போதும் எதற்கும் கடித்து கொள்ள மாட்டார் . கோபம் , திட்டு என்று எதையும் ராஜி அனுபவித்ததே இல்லை .

மொத்தத்தில் விஸ்வநாதனின் செல்ல மகள் ராஜி , அந்த வீட்டு மகாராணியாக வலம் வந்தார் , அவள் வைத்ததே சட்டம் . அவள் சொல்லே இறுதிச் சொல்  என்ற பிடிவாதத்துடன் வளர்ந்தார். தான் சொல்வதே சரி என்ற நிலைப்பாட்டிலே வளர்ந்தார்.

விஸ்வநாதனுக்கு மகளின் குணம் நன்றாகவே புரிந்திருந்தது. அதே நேரம்,  தன் வீட்டு  மகாராணி அப்படி நடந்து கொள்வதில்  தப்பில்லை என்றும் நினைத்தார் . 

விஸ்வநாதனும் , கோமதியும் அவர்கள் வாழ்க்கையை  ராஜியை மையமாக வைத்தே வாழ்ந்ததாலும் , அதிகப் பணம் அவள் தோழிகளையும் இவரைச் சார்ந்திருக்கச் செய்ய , எங்கேயும் முதன்மையானவராக இருந்தார் . அதையே  விரும்பினார் . 

சங்கரன், விஸ்வநாதனின் தூரத்து உறவு . சங்கரனின் பெற்றோர் கிராமத்தில் விவசாயம் பார்த்துக் கஷ்டப்பட்டு , மகனை எம்.ஏ வரை படிக்க வைத்தனர் .

 சங்கரனுக்குப் பின்னால் மூன்று தங்கைகள் இருக்க ,  தன் பொறுப்பை உணர்ந்து , வேலை தேடிச் சென்னை வந்தார் . 

வேலை கிடைக்கும் வரை அன்றாட வாழ்க்கைப் பாட்டைப் பார்ப்பதற்காக , விஸ்வநாதன் கடையில் வேலைக்குச் சேர்ந்தார் .  இங்கே வேலையில் இருந்தபடி , தன் வேலைக்கான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தார் . 

விஸ்வநாதன் கொடுக்கும் சம்பளத்தில் சிக்கனமாக இருந்து ,  மிச்சம் பிடித்து ஊருக்கும் அனுப்பி வைத்தார் . 

சங்கரன் பொய் புரட்டு இல்லாமல் நேர்மையாக  ஒழுங்காக வேலை செய்ய, 

 விஸ்வநாதனுக்குச் சங்கரனைப் பிடித்துப் போக , கடையின் பலப் பொறுப்புகளை அவரிடம் கொடுத்தார் .   

சங்கரனும் அதைத் திறம்பட நடத்த , சங்கரன் விஸ்வநாதனின் நம்பிக்கைக்குரியவரானார் 

சங்கரன் பொறுப்பையும் திறமையையும் பொறுமையையும் கண்டு , “ஒரு கட்டத்திற்கு மேல்  வெளியே  வேலை தேட வேண்டாம்…” என்று சொல்லி ,

தன் கடையின் மேலாளராக நல்ல சம்பளம் கொடுத்து தன் அருகிலே வைத்துக் கொண்டார் . சங்கரனும் பொறுப்பை உணர்ந்து நடந்து கொண்டார் .. 

ராஜியும் பி.ஏ முடிக்க இருக்க , அவருக்கு வரன் பார்க்க ஆரம்பித்தார் . 

மகளைப் பிரிய முடியாது என்பதாலும் , அவருக்கு பின் தொழிலை மருமகன்  பார்க்க வேண்டும் என்பதாலும் வீட்டோடு மாப்பிள்ளையைத் தேடினார் . 

அப்போது  தான் பல எதார்த்த சிக்கல்களை எதிர் கொண்டார் . அவர்கள் ஸ்டேட்ஸில் இருப்பவர்கள் யாரும் வீட்டோட மாப்பிள்ளையாக வர முன் வரவில்லை . அப்படியே வருபவர்கள் நம்பிக்கையான ஆட்களாக இல்லை . வருடங்கள் ஓடிக் கொண்டிருந்தது.

அப்போது , சங்கரன் தன் சம்பள பணம் மற்றும் அப்பாவின் சேமிப்பை வைத்து மூத்த தங்கைக்கு , தங்கள் ஊரிலே எலக்ட்ரானிக் கடை வைத்து நடத்தும்  நடராஜனுக்கு எளிமையாக திருமணம் செய்து வைத்தார் . 

விஸ்வநாதன் திருமணத்திற்கு வந்திருக்க , சங்கரனின் பொறுப்பையும்  பக்குவத்தையும் கண்டு அசந்து போனார் .

ஊருக்கு வந்த பின்னும் , விஸ்வநாதனுக்குச் சங்கரனைப் பற்றிய எண்ணமே ஓட , 

“இத்தனை நாள் இதை யோசிக்காமல் விட்டு விட்டோமே … இதைப்பற்றி மகளிடம் பேச வேண்டும்…”என்று முடிவு செய்தார் .

சங்கரனைப்  பற்றிச் சொன்னதும் ராஜிக்குச் சுருக்கென்றது . “பெரிய வீட்டு மருமகள்…” என்று நினைத்திருக்க , அப்பாவின் முடிவு அதிர்ச்சியாக இருந்தது . 

“அப்பா….” என்று தயங்க ,

 “தகுதி குறைவான மாப்பிள்ளையைத் தேர்ந்தேடுப்பேனா….? சங்கரன் எம்.ஏ படித்திருக்கிறான் , கண்ணுக்கு நிறைவாக இருக்கிறான் . தங்கமான குணம்…”

ராஜி யோசிக்க , “இந்த நல்வாய்ப்பை விடக்கூடாது…” என்று விஸ்வநாதன் தொடர்ந்தார் .

“மேலும் பொறுப்பான , பொறுமையான , திறமையான பையன் . உன்னையும் நம்ம தொழிலையும் நன்றாகப் பார்த்துக் கொள்வான். மேலும் நாம் வீட்டோடு இருக்கும் மாப்பிள்ளையைத்தான் தேடுகிறோம் , அதனால் பணம், வசதி  பிரச்சனை இல்லை ராஜிம்மா…” என்று எடுத்துச் சொன்னார் 

 பின் ,  “என்னை நம்பு மா  , நீ என் வீட்டு ராஜகுமாரி , உனக்கு எதுவும் கஷ்டம் வர விடுவேனா?’’  

ராஜிக்குக் குழப்பமாகவே இருக்க ,

“சரி , நாளை கடைக்கு வந்து சங்கரனைப் பார் . அப்புறம் உன் முடிவைச் சொல் . உனக்குப் பிடித்திருந்தால் மட்டுமே அந்தப் பையனிடம் பேசுவோம் இல்லையென்றால் நமக்குள்ளே முடித்துவிடுவோம் . உன் சொல்லே இறுதி..”

அந்தக் காலத்து மனிதரான விஸ்வநாதன் மகளை வியாபாரத்திற்கெல்லாம் பழக்கவில்லை . ராஜிக்கும் பெரிய விருப்பமில்லை . அதனால் ராஜி அதிகமாக விஸ்வா ஸ்டோர்ஸ்க்கு சென்றதில்லை . அப்படியே போன தருணங்களிலும் சங்கரனை ஊன்றிக் கவனித்ததுவும் இல்லை .

மறுநாள் சங்கரனைக் கடையில் பார்த்தவுடனே , ராஜிக்குப் பிடித்துவிட , 

மேலும் அப்பாவின்  நம்பிக்கையும் அவரை அசைக்க , அப்பாவிடம் சம்மதத்தைத் தெரிவித்தாள்.

தொடரும்….