மொட்டவிழ்ந்த தேனரும்பே -20(pre final)

அத்தியாயம் -20

சொக்கனும் கௌரியும் ஊர் வந்து சேர்ந்த சிறிது நேரத்துக்குள் எல்லாம் அந்த செய்தி ஊருக்குள் தீயாக பரவியது.

கைப்பேசி வழியாக சிவாவுக்கு தகவல் தந்த சுடர், “அங்குட்டு வாழ நாதியில்லாம இங்குட்டே வந்து சேர்ந்திட்டாடி உன் அக்கா, அவ புருஷனோட குடிசைலதான் இருக்காக ரெண்டு பேரும். இப்படி வாழ்க்கைய வீணாக்கிக்கிட்டியேன்னு அவளை கன்னம் கன்னமா அடிக்கத்தான் நினைக்கிறேன், எங்குட்டு? அவுகள திரும்ப போவ சொல்லணுமா? உன் ஆம்படையான் கோச்சுப்பாகளே, இப்ப என்னத்தடி பண்றது?” என அழுதார்.

அவர்கள் இங்கு வந்ததில் சிவாவுக்கும் அதிர்ச்சி, ஆனால்  வாழ வழியின்றி நிர்கதியாக இங்கு திரும்பியிருப்பவர்களை அப்படி அனுப்புவது சரியில்லை என்றே நினைத்தாள். அதையே அம்மாவிடம் சொல்லி, பின்னர் பேசுவதாக கைப்பேசியை வைத்து விட்டாள்.

அஞ்சலகம் செல்ல தயாராகி இருந்தவளுக்கு கீழே செல்லவே யோசனை. வெளியில் சென்றிருக்கும் தன் கணவனுக்கும் இந்நேரம் இந்த செய்தி தெரிந்திருக்குமே என நினைத்தவள் அவனது வருகையை எதிர்பார்த்து அறையிலேயே இருந்தாள்.

வழக்கமான நேரத்துக்கு வீடு வந்த ருத்ரனின் முகம் சற்று இறுகி காணப் பட்டது.

“இன்னும் சாப்பிட போகலையா புள்ள?” எனக் கேட்டவன் அவளின் பதிலுக்கு நிற்காமல் குளிக்க சென்று விட்டான்.

எதையும் காட்டிக் கொள்ளாமல் இயல்பாக இருக்கவே முயல்கிறார் என கணவனை புரிந்த சிவாவும் சாப்பிட கீழே சென்றாள்.

பாட்டி சத்தம் போட்டு புலம்பினார் என்றும் அவரை கொட்டகை பக்கமாக அப்புற படுத்தியதாகவும் விவரம் சொன்னார் வள்ளி.

“கௌரி இங்க வர்றது எனக்கு தெரியாது அத்தை?” என்றாள் சிவா.

“உன்னை என்ன சொன்னேன் நான்? குடி கெடுத்தவக எதுக்கு வந்து சேர்ந்திருக்காகன்னு தெரியலை. இவன் ஏதும் சொன்னானா?” என மகனை பற்றி விசாரித்தார்.

சிவா மறுப்பாக தலையாட்ட, “வுடு,  நீ சாப்பிட்டு கெளம்பு” என்றார்.

அமைதியாக சாப்பிட்டு முடித்தாள் சிவா. கீழே வந்த ருத்ரன் மனைவியை ஒரு பார்வை பார்த்து விட்டு வெளியே சென்றான். அவளும் வெளியில் வந்த போது புல்லட்டை எடுத்துக் கொண்டு தயாராக நின்றான். அவள் அமரவும் வண்டி புறப்பட்டது.

வழியில் அவன் அமைதி காக்க, அவளும் வாயை திறக்கவில்லை. அஞ்சலகத்தில் அவளை இறக்கி விட்டவன் அவளிடம் தலையசைத்து விட்டு வண்டியை திருப்ப, “என்னங்க?” என அழைத்தாள்.

திரும்பியவன் என்னவென பார்வையால் கேட்க, அவனை ஊன்றிப் பார்த்தவள் ஒன்றுமில்லை என சொல்லி உள்ளே சென்று விட்டாள்.

ருத்ரனுக்கு மனம் என்னவோ போலிருந்தது. அக்காவிற்காக சிவா என்னவெல்லாம் செய்தாள் என்பதை அவன் அறிவானே. வீட்டுக்கு தெரியாமல் அக்காவுக்கு என்றே சேமித்து வைத்ததும் அவன் அம்மாவிடம் வட்டிக்கு விட சொல்லி பணம் கொடுத்ததும் அக்காவின் திருமணம், பிள்ளைப்பேறு என எல்லாம் பார்த்த பிறகுதான் தனக்கு திருமணம் என சொன்னதும் என்று அனைத்தும் அவனுக்கு நினைவில் இருக்கிறது.

அக்காவுடன் உறவாட சம்மதம் கேட்பாளோ என நினைத்துதான் அவளிடம் இப்படி இறுக்கமாக இருக்கிறான். சொக்கன் மற்றும் கௌரி மீது அவனுக்கு துவேஷம் ஏதுமில்லை, ஆனால் அவர்களை அவனால் சாதாரணமாக ஏற்றுக்கொள்வதென்பது இயலாத காரியம்.

சொக்கனுக்கும் கௌரிக்கும் தனி நபராக யாரை வேண்டுமென்றாலும் காதலிக்க உரிமை உள்ளது. அவர்கள் அவனை கோமாளியாக்கி இறுதி நேரத்தில் அவச் சொல்லை அள்ளி கொடுத்து விட்டு அல்லவா ஓடிப் போனார்கள்.

‘ருத்ரன் கட்டிக்க இருந்த பொண்ணு அவன் வேலையாள் கூடவே போயிடுச்சாம்’ என சொல்லி ஏளனமாக சிரிக்காதவர்கள் குறைவாகத்தான் இருப்பார்கள்.அந்த அவமானத்திலிருந்து மீண்டு விட்டவனுக்கு அதை மறப்பது என்பது இயலாத காரியம். மன்னிப்பது என்பதும் அப்படியே.

ஆனால் என் மனைவி அவர்களை ஆதரித்தால்? என்ற பயம் அவனை பீடித்திருக்கிறது. அதை அவனால் தாங்கிக் கொள்ளவே முடியாது. அவனை மீறிக் கொண்டு அவள் செய்யும் எந்த செயலுக்கும் அவனால் மறுப்பு சொல்லவும் முடியாது. வேறு யாரை பற்றியும் அவனுக்கு கவலையில்லை, ஆனால் சிவா அவர்களை ஏற்றுக்கொண்டால் அவனது சுய கவுரவம் வீழ்ந்துதான் போகும்.

நன்றாகவே குழம்பிப் போயிருந்தான் ருத்ரன்.

இரவில் தாமதமாக வீடு வருவதும் அவளுடன் இருக்கும் நேரங்களில் அவள் ஏதாவது பேச வந்தாலும் சோர்வாக இருப்பதாக சொல்லி படுத்து விடுவதுமாக இருந்தான். கணவனை அறியாதவளா என்ன சிவா? கொஞ்சம் விட்டுப் பிடிப்போம் என அவளும் அவன் போக்கில் விட்டாள்.

சமீபமாகத்தான் சின்ன மருமகனுடன் சுமூக நிலை ஏற்பட்டிருக்க, பெரிய மகளை பார்த்து பேசினால் ருத்ரனுடனான உறவில் ஏதாவது விரிசல் வருமோ என பயந்து கௌரியை பார்க்க செல்லாமலே இருந்தனர் அவளின் பெற்றோர். ஆனால் அவளை நினைத்து மனதில் ஒரே தவிப்பு.

அவர்களை ஊரை விட்டு விரட்டி விடலாமா? எனக் கேட்டு ருத்ரனிடம் வந்தனர் சேகர் மற்றும் இன்னும் சில ஊர் முக்கியஸ்தர்கள். அதற்கெல்லாம் அவசியமில்லை என சொல்லி விட்டான் ருத்ரன்.

சொக்கனின் குடிசையில் எப்போதோ மாற்றிய கீற்று ஓலைகள் ஒரு மழையை தாங்குமா என தெரியாது. கோடை என்பதால் பயமின்றி அங்கேயே வசித்தார்கள். வந்த முதல் மூன்று நாட்கள் கையில் இருந்ததை கொண்டு கஞ்சி வைத்து குடித்தாயிற்று. அடுத்தடுத்த நாட்களுக்கு வாழ்க்கையை ஓட்ட வேண்டுமே.

உள்ளூரில் உள்ள நிலத்துக்காரர்கள் யாரும் சொக்கனுக்கு வேலை தர மறுத்து விட்டனர், ஆகவே பட்டுக்கோட்டையில் யாரிடமோ பேசி கட்டிட வேலை நடக்கும் இடத்துக்கு சித்தாள் வேலைக்கு சென்றான்.

வீட்டில் ஏன் சும்மா இருக்க வேண்டும் என நினைத்த கௌரியும் நூறு நாள் வேலைக்கு செல்ல யோசித்தாள். அதற்கு அவளுடைய அடையாள அட்டை தேவைப்பட, துணிந்து தன் பெற்றோரிடம் போய் நின்றாள்.

மகளை நேரில் பார்க்கும் வரைதான் அந்த பெற்றோரால் தள்ளி நிற்க முடிந்தது. இப்படி ஆள் இளைத்து பொலிவு குன்றி வெளுத்த ஆடையுடன் வந்து நிற்பவளை கண்டு அவர்களால் பொறுக்க முடியவில்லை.

உத்தமனுக்கு மகள்கள் என்றால் கொள்ளை பிரியம். ஒருத்திக்காக இன்னொருத்தியை தள்ளி வைப்பதாவது என உள்ளுக்குள் புளுங்கினார். சுடருக்கும் அப்படித்தான், சின்னவள் நன்றாக இருக்க, சிரமத்தில் இருக்கும் பெரியவளை ஆதரிக்க வேண்டும் என நினைத்தார். ஆனால் செயல்படுத்த பயம்.

ஆபத்து நேரத்தில் கோவத்தை தள்ளி வைத்து உதவிய சின்ன மருமகனின் அனுமதி இல்லாமல் பெரிய மகளை சேர்த்துக்கொள்ள முடியாதே. பலவித யோசனைகளுடன் மகளுக்கு சாப்பாடு போட்டு வீட்டிலேயே இளைப்பாற வைத்தனர்.

எந்த வேலைக்கும் செல்ல வேண்டாம் என அப்பா எடுத்து கூறியதை மறுத்து, அடையாள அட்டையை பெற்றுக் கொண்டுதான் கிளம்பினாள் கௌரி.

கௌரி வீட்டுக்கு வந்ததை பற்றி சிவாவிடம் சொல்லிக் கொள்ளவில்லை அவளின் பெற்றோர். ருத்ரனுக்கு தெரிந்து போனாலும் மனைவியிடம் ஏதும் கேட்காமலே இருந்தான்.

சிவாவின் பெற்றோரை நினைத்து வள்ளிக்கும் மனத்தாங்கல். மகளிடம் சொல்லி புலம்பினார்.

இப்போது அண்ணன் நன்றாக வாழும் போது பழைய விஷயத்தை ஏன் யோசிக்க வேண்டும், கௌரியின் இடத்தில் நான் இருந்தால் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பாயா நீ? அதை விட அண்ணிக்கு அக்கா என்றால் எவ்வளவு பிரியம் என்பதை அறிவாய்தானே? நீ ஏதாவது சொல்லப் போய் அண்ணிக்கு வருத்தமாகி விடப் போகிறது என்றெல்லாம் அம்மாவுக்கு சொல்லியிருந்தாள் வைதேகி.

ஆகவே வள்ளி தற்காலிகமாக கௌரி விவகாரத்தில் எதையும் செய்யாமல் இருந்தார்.