“இல்லையே..! நான் பார்க்கும் சும்மா வெள்ளை வெளேர்ன்னு வெள்ளைப் பன்னி மாதிரி இருந்தான்” என்றாள் அவள்.
அவள் சொன்ன விதத்தில் ஆரா பட்டென்று சிரித்துவிட்டாள்.
“கொழுப்பை பார்த்தியா ஆரா இவளுக்கு. உவமைக்கு கூட நல்ல வார்த்தை வருதான்னு பாரு. வெள்ளைப் பன்னியாம்? அவன் காதுல மட்டும் விழுந்துச்சு உனக்கு சங்குதாண்டி” என்றாள் சிரிப்புடன்.
சிரித்துக் கொண்டிருந்த ஆரா அவனைத் திரும்பிப் பார்க்க, அவர்களுக்கு அருகில் வந்திருந்தான் அவன்.
“காலேஜ் ஸ்டாப் ரெண்டு” என்று மித்ரா பணத்தை நீட்ட, அவன் டிக்கெட்டை நீட்டினான்.
“ஏன் இன்னைக்கு பஸ்ல பாட்டு போடலை. இதுல போடுற பாட்டுக்காகத் தான் இந்த பஸ்ல வர்றதே. அதையும் போடாம வச்சிருக்கிங்க இன்னைக்கு?” என்றாள் மித்ரா.
“கொஞ்ச நேரம் வாயை வச்சுகிட்டு சும்மா இருடி” என்று ஆரா மெதுவான குரலில் அதட்டினாள்.
“நான் என்ன எனக்காகவா கேட்டேன். நீதானடி எப்பவும் சொல்லுவ, ஜன்னலோர சீட்டு, இளையராஜா பாட்டு, அது தான் சொர்க்கம்னு. அதான் சொல்லிட்டு இருக்கேன்” என்றாள் மித்ரா.
“ஒன்னும் வேணாம். அமைதியா இரு” என்று முனுமுனுத்தாள் ஆரா.
ஆராவை ஆராய்ச்சியுடன் பார்த்தவன், அங்கிருந்து நகர்ந்து செல்ல,
“நிஜமாவே வாட்ட சாட்டமா ஆள் சூப்பரா இருக்கான் ஆரா. நல்ல பவர்புல் ஐஸ். தலைமுடிக்கு என்ன ஷாம்பூ போடுறான்னு கேட்கணும். என்னைய விட அதிகமா வளர்த்து வச்சிருக்கான். உச்சிக் குடுமி போட்டா அழகா நிக்கும் போல” என்றாள் சிரிக்காமல்.
மித்ராவின் கற்பனையில் ஆரா சட்டென்று சிரிக்க, இவர்களைப் பார்த்திருந்தவனின் கண்களில் ஒரு சுவாரஸ்யம் வந்து போனது.
“ஹேய் சாங் பிளே பண்ண போறான்னு நினைக்கிறேன்டி” என்று அவனைப் பார்த்த மித்ரா சொல்ல, அவளை முறைத்தாள் ஆரா. சிறிது நேரத்தில்,
‘என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான்..
கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீதான்..
என்ற பாடல் வரிகள் ஒலிக்க, வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்த ஆரா, சட்டென்று முன்னால் பார்த்தாள். அவளை பார்த்துக் கொண்டே வந்தவன்,பேருந்தின் முன் படிக்கட்டில் அவர்களுக்கு முதுகு காட்டி நின்று கொண்டான். அவனின் பார்வை ஆராவிற்குள் ஒரு குறுகுறுப்பை ஏற்படுத்த,பார்வையை வெளிப்பக்கம் திருப்பிக் கொண்டாள்.
“ஹேய் ஆரா, இவனுக்கு இளையராஜா பிடிக்காது போல. தேவா பாட்டு போட்ருக்கான்” என்றாள் மித்ரா மெதுவாக. அவர்கள் எவ்வளவு அமைதியாக பேசினாலும், அவன் காதில் அச்சுப் பிசகாமல் விழும் தூரத்தில் தான் இருந்தான்.
“என்னவோ போ..! நீ இன்னைக்கு ஒன்னும் சரியில்லை” என்றாள்.
வெளிக்காற்று அவன் முன் சிகையை கலைத்து விளையாடிக் கொண்டிருக்க, அலை அலையாய் பறந்த சிகையை சரிசெய்யாமல், வேறு சிந்தனையுடன் பார்வையை வெளியே பதித்திருந்தான்.
காலேஜ் ஸ்டாப் வந்தும் அவன் விசில் ஊதாமல் இருக்க,
“ஹெலோ..! விசில் அடிங்க. ஸ்டாப் வந்திடுச்சு” என்றாள் மித்ரா. அவன் விசில் ஊதுவதற்குள் வழக்கம் போல் நிறுத்துமிடத்தில் டிரைவர் நிறுத்தியிருந்தார்.
“பழைய டிரைவருங்க போய் நிறுத்திட்டார். ஸ்டாப் தெரியாம ஏன் வேலைக்கு வரீங்க?” என்ற மித்ரா கடுப்புடன் இறங்க, ஆராவோ அமைதியாய் அவள் பின்னே இறங்கினாள்.
அவர்கள் இறங்கிய பின், மீண்டும் அவன் படியில் ஏறி நிற்க, பஸ் கிளம்பியது. ஆரா திரும்பி அவனைப் பார்க்க, அவனும் ஏனோ அவளைத் தான் பார்த்திருந்தான்.
“என்னாச்சு ஆரா?” என்றாள் மித்ரா.
“ஒன்னுமில்லையே?”
“இல்லையே? சம்திங் ராங். நீ எதுக்கு அவனைப் பார்க்குற? எப்பவும் இப்படி இருக்க மாட்டியே” என்றாள் சந்தேகமாய்.
“உனக்குத் தான் இன்னைக்கு என்னவோ ஆகிடுச்சு. வந்தப்ப இருந்து பேசிட்டே இருக்கடி” என்ற ஆரா, படபடப்பை உள்ளுக்குள் மறைத்துக் கொண்டாள்.
“அதுவும் சரிதான். எப்பவும் உனக்கும் சேர்த்து நான் தான பேசுறேன்” என்றாள் சலிப்பாய்.
அன்று மாலையும் அந்த பேருந்தில் அவளையறியாமல் அவனைத் தேடியது அவள் கண்கள். அந்த தேடலின் நோக்கம் அவளறியாள். நொடிக்கொரு முறை பார்வை பேருந்தினுள் வலம் வந்து கொண்டிருந்தது.
இப்பொழுது எப்போதும் வரும் நடத்துனரும் இருக்க, அவன் பின்னாலேயே இருந்து கொண்டான்.
“ரிட்டர்ன் ட்ரிப்ல வந்துட்டேன்மா. புதுப்பையன், வேலை கத்துக்க வந்திருக்காப்ல..” என்றார் அவர்.
“அப்ப ஏற்கனவே இருந்தவனைக் காணோம்?” என்றாள் மீண்டும்.
“அவன் வேற லைனுக்கு போய்ட்டான்மா. அப்பப்ப வருவான். என்ன விஷயம் அவனைப் பத்தி விசாரிக்கிற?” என்றார்.
“வேற என்னண்ணா? அந்த பய இருந்தவரைக்கும் ஒரு லவ் ட்ராக் ஓட்டிட்டு இருந்தாப்ல. திடீர்ன்னு ஆளைக் காணோம். என்டர்டேயின்மென்ட் மிஸ்சாகுதா இல்லையா?” என்றாள் சிரிப்புடன்.
“அட ஏம்மா நீ வேற? அவனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு. பஸ்ல சும்மா பாட்டைப் போட்டு கவர் பண்ணிட்டு இருந்தான். அது தெரியாம இந்த புள்ளைங்களும் அவனைப் பார்த்து வைக்குதுங்க. என்னத்த சொல்ல?” என்றார்.
“அப்ப புதுசா வந்திருக்குற பையன் எப்படிண்ணா? பேர் என்ன? கல்யாணம் ஆகிடுச்சா?” என்றாள்.
“அது எதுக்குமா உனக்கு?” என்றார்.
“இல்லை, இந்த பையன் போடுற பாட்டுல நாங்க மயங்கிடக் கூடாதுல்ல. அதான் முன்னாடியே கேட்டு வச்சிக்கிறேன்” என்றாள். கேட்டது என்னவோ மித்ரா தான். ஆனால் பதிலை எதிர்நோக்கியிருந்தது என்னவோ ஆராவின் மனம் தான்.
“பேர் ஜெய்.பய சொக்கத் தங்கம்மா.! நல்லா படிச்ச பையன். ஏன் இந்த வேலைக்கு வந்திருக்கான்னு தெரியலை” என்றார் சிரிப்புடன்.
அதைக் கேட்ட ஆராவின் முகம் லேசாக மலர, எதார்த்தமாய் பார்ப்பதைப் போல் பின்னால் பார்த்தாள். அதுவரை அவளைப் பார்த்திருந்தவன், சட்டென்று பார்வையை மாற்றிக் கொண்டான்.
“ஆரா ஏன் உன் கை இப்படி சில்லுன்னு ஆகுது?” என்றாள் மித்ரா புரியாமல்.
“நாளையில இருந்து நான் வேற சீட்ல உட்கார்ந்துக்குறேன்” என்றாள் மித்ரா.
“ஏன்டி?”
“அங்க பாரு, இருக்குறவன் கண்ணு பூராம் உன்மேல தான் இருக்கு. நான் ஏற்கனவே சுமார் பிகர் தான். உன் பக்கத்துல வந்தா ரொம்ப சுமாரா தெரியறேன் போல.” என்ற மித்ரா லட்சணமாய் அழகாய் இருந்தாள்.