அவளைக் கண்டதும் வளைத்து வளைத்து கேள்விகளைக் கேட்டார்கள் பத்திரிக்கையாளர்கள். எல்லாவற்றுக்கும் பொறுமையாக பதில் சொன்னவள், “அவ்வளவு தானே, வேற ஏதாவது கேள்வி இருக்கா?” என்று கேட்க,
“மேடம், நீங்க நெல்லை எஸ்பியா இருக்கும் போது, உங்களுக்காக உங்க கணவர் லஞ்சம் வாங்குனதா ஒரு குற்றச்சாட்டு இருந்ததே, அதைப்பற்றி சொல்லுங்க.” வம்பு பிடித்த நிருபர் ஒருவர் வேண்டுமென்றே கேட்டார். அவர் கேள்வி கேட்டு முடிக்கும் வரை குறுக்கிடாமல் அமைதியாக இருந்த நந்தினி,
“குற்றச்சாட்டா? அப்பிடி யாரும் எம்மேல சாட்சிகளோடு கோர்ட்ல கேஸ் ஃபைல் பண்ணியிருந்தாங்களா என்ன?” குரலில் எந்தவிதமான மாறுதலும் இல்லாமல் சாதாரணமாகவே கேட்டாள்.
அவளிடமிருந்து இத்தனை பொறுமையை எதிர்பார்க்காத அந்த நிருபர், “இல்ல… யூடியூப்ல வீடியோஸ் வைரலா போச்சு, அதை வச்சு தான்…” இழுத்தார்.
“உங்களுக்கு கல்யாணம் ஆகிடிச்சா?” நந்தினியிடமிருந்து சம்மந்தம் இல்லாமல் வந்தது கேள்வி.
“ம்ம்… ஆச்சு மேடம், ஒரு குழந்தை கூட இருக்கு.”
“தன்னோட முகவரியை தெரியப்படுத்தாம, அதாவது ஒரு மொட்டக்கடிதாசி உங்க கேரக்டரைப் பத்தி மோசமா உங்க மனைவிக்கு யாரோ எழுதிப் போட்டா, நீங்க கெட்டவராகிடுவீங்களா? உங்க மனைவி அந்த கடிதத்துக்கு எப்பிடி ரீஆக்ட் பண்ணனும்னு நினைப்பீங்க நீங்க?”
“மேடம்…”
“ம்ம்… என்னைப் பொறுத்தவரை நீங்க சொன்ன அந்த விஷயத்துக்கான மதிப்பு அவ்வளவு தான்.” திமிராகவே சொன்னாள் நந்தினி. அது நேர்மையானவர்களுக்கு மட்டுமே வரும் திமிர். அதை ஒன்றும் சொல்லுவதற்கில்லை.
“எனி குவஸ்டின்ஸ்…” தனது பதிலில் அமைதியாகிப்போன பத்திரிக்கையாளர்களைப் பார்த்து நிமிர்வாகவே நந்தினி கேட்க,
“நோ மோர் குவஸ்டின்ஸ் மேடம்” என்று பத்திரிக்கையாளர்கள் கலைந்து சென்றார்கள்.
“உங்களை மாதிரி துணிச்சலான, நேர்மையான அதிகாரிகள் தான் இப்போ நம்ம நாட்டுக்கு தேவை. கீப் கோயிங் மேடம்.” நந்தினியோடு சேனாதிபதி கைகுலுக்க, விறைப்பாக தன்னுடைய மேலதிகாரிக்கு சல்யூட் வைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினாள் நந்தினி.
“கிளம்பியாச்சா நந்து?” போலீஸ் குடியிருப்பில் இருக்கும் தன்னுடைய வீட்டில் நுழைந்திருந்த நந்தினியிடம் அலைபேசியில் கேட்டான் கண்ணன்.
“இதோ த்தான், பேக் பண்ணிட்டு கிளம்பிட வேண்டியது தான்.”
“ட்ரெயினுக்கு இன்னும் ஒருமணி நேரம் தான் இருக்கு, நீ இன்னும் பேக் பண்ணவே இல்லையா? நீ என்னை ரொம்பவே டென்ஷன் பண்ணுற டி.” எதிர்முனையில் இருந்தவன் கோபத்தில் பல்லைக் கடித்தான்.
“நீங்க தான் என்னை இப்போ டென்ஷன் பண்ணுறீங்க த்தான், போனைக் கட் பண்ணுங்க, உங்ககூட பேசுற நேரத்துக்கு நான் கிளம்பிடுவேன்.” கணவனின் பதிலை எதிர்பார்க்காமல் அழைப்பை துண்டித்திருந்தவள், சரியாக ட்ரெயின் கிளம்புவதற்கு இரண்டு நிமிடங்களுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்டிருந்த தன்னுடைய சீட்டில் அமர்ந்தும் விட்டாள்.
கூடவே நல்லபிள்ளையாக ‘கிளம்பியாச்சு’ என்று கணவனுக்கு வாஸ்ட்ஸ்அப் மெசேஜ் வேறு.
அதிகாலை நான்கு மணிக்கு திருநெல்வேலி ‘சந்திப்பு’ ரெயில் நிலையத்தில் நின்றது அந்த தொடர்வண்டி. அடித்துப் பிடித்து இறங்காமல் எப்போதும் போல நிதானமாகவே இறங்கினாள் நந்தினி.
ஷோல்டர் பேக்கும், கையில் பயணப் பையோடும் நடைபாதையில் நின்றிருந்தவளின் பார்வை தன்னியல்பாக சுற்றுப்புறத்தை ஆராய, ஆறுவருடங்களுக்கு முன்னர் இதே போல இறங்கி நின்ற நாள் ஞாபகத்திற்கு வந்தது.
முகத்தில் புன்முறுவலோடு நடந்த நந்தினி இரண்டு பிள்ளைப்பேறுக்குப் பிறகும் அதேபோன்ற தோற்றப் பொலிவில் தான் இருந்தாள். காரணம், அவளுடைய தொடர் உடற்பயிற்சி. கடந்திருந்த ஆறு வருடங்கள் அவள் முகத்தில் கூடுதலாக கம்பீரத்தைக் கொண்டுவந்திருந்தது.
ஆமாம்… நந்தினி, கமலகண்ணன் தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் இருந்தார்கள். முதலில் ஆண் குழந்தை தான் பிறந்திருந்தது. அபராஜிதன் என்று மகனுக்கு நந்தினி தான் பெயர் வைத்தது. இரண்டு வருட இடைவெளியில் அடுத்த குழந்தை. இப்போது பெண்குழந்தை. ஆதீரா. இப்போதும் பெயர்த் தேர்வு நந்தினி தான்.
குழந்தைகள் ஈரோட்டில் அவளோடு தான் இருக்கிறார்கள். லீலாவதியும், திலகமும் மாற்றி மாற்றி பிள்ளை வளர்ப்பில் நந்தினிக்கு உதவியாக இருக்கிறார்கள். கண்ணன் தான் அங்கும் இங்கும் அலைகிறான்.
இப்போது கோடை விடுமுறையாதலால் நாலைந்து நாட்களுக்கு முன்னதாகவே பிள்ளைகளை தன்னோடு ஊருக்கு அழைத்துச் சென்று விட்டார் லீலாவதி.
அணிந்திருந்த டிசர்ட்டின் முழுநீளக்கையை இழுத்துவிட்டபடியே நடந்த நந்தினி, எதிரே வேகநடையோடு வந்து கொண்டிருந்த கணவனைப் பார்த்து சிரித்தபடியே கையசைத்தாள்.
“என்னை அவசரப்படுத்திட்டு, நீங்க கடைசி நேரத்துல வந்து நிக்குறீங்க இல்ல.” கையிலிருந்த பயணப்பையை கணவனிடம் நீட்டியபடியே கேலி செய்தாள்.
“எப்பிடியோ கரெக்டா வந்திட்டேன்ல” என்றவன்,
“விழுப்புண் எல்லாம் பயங்கரமா இருக்கும் போலயே.” என்றான் மனைவியின் நெற்றிக் காயத்தை லேசாக வருடியடி. ஆனால் செய்கைக்கு நேர்மாறாக குரலில் கேலி இருந்தது.
மென்முறுவலோடு கணவனின் கையை விலக்கி விட்டவளின் விழிகளில் இதற்குமேல் இங்கே வைத்து என்வாயைப் பிடுங்காதே என்ற எச்சரிக்கை இருந்தது. கண்ணனுக்குமே அது தெரியும் என்பதால் அதற்கு மேல் அதைப்பற்றி பேசவில்லை.
பிள்ளைகளைப் பற்றி பேசியபடியே இருவரும் நுழைவாயிலுக்கு வந்திருந்தனர்.
“கொஞ்சம் வெயிட் பண்ணு நந்து, வண்டியை எடுத்துட்டு வந்துடுறேன்.” என்றபடி கண்ணன் பார்க்கிங் ஏரியாவுக்கு விரைந்தான். வண்டியை வெளியே எடுத்துக்கொண்டு வந்தவனின் தலையில் ஹெல்மெட் இருக்க, நந்தினியின் இதழ்களில் புன்னகைப் பூக்கள்.
‘அவசரமாக வந்த போதும் கூட வண்டியை முறையான இடத்தில் நிறுத்தியிருக்கிறான், ஹெல்மெட் வேறு.’
அவன் தோள்களைப் பிடித்தபடி ஏறி பின்னால் அமர்ந்தவள், “லாயர் சர் ரொம்ப பொறுப்பா மாறிட்டீங்க போலயே!” கணவனை நெருங்கி அமர்ந்தபடி கேலி செய்தாள்.
“ம்ஹும்… எஸ்பி மேடத்தோட புருஷன், கூடுதல் கவனமா இருக்க வேண்டி இருக்குல்ல.” ஹெல்மெட்டை லேசாக அட்ஜஸ்ட் செய்தபடியே சொன்னான்.
“என்ன சர், ரொம்ப சலிப்பா சொன்ன மாதிரி இருக்கு? எஸ்பியோட புருஷனா இருக்கிறது அவ்வளவு கஷ்டமாவா இருக்கு?” வேண்டுமென்றே வம்பு வளர்த்தாள்.
“ப்ச்ச்… காலையிலேயே ஏழரையைக் கூட்டாத, உனக்காகத் தான் எல்லோரும் வெயிட்டிங்.” என்றவன் அடுத்த பத்தாவது நிமிடத்தில் தங்களுடைய வீட்டுக்கு முன்னால் வண்டியைக் கொண்டுவந்து நிறுத்தியிருந்தான்.
வண்டியிலிருந்து இறங்கி நின்ற நந்தினி தங்களுடைய வீட்டை நிமிர்ந்து பார்த்தாள். ‘திலகம் இல்லம்.’ கொட்டை எழுத்தில் பெயர்ப்பலகை மின்சார விளக்கொளியில் மின்ன, வீடு முழுவதும் சீரியல் பல்ப்பால் அழகாக அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
தொழிலை விரிவுபடுத்த வேண்டி நாதனின் அண்ணன் வீட்டை விற்கப் போவதாக சொல்ல, இவர்களே வாங்கிக் கொண்டார்கள். திலகத்தின் பெண் பிள்ளைகள் அத்தனை பேருக்கும் தங்களுடைய அம்மாவுக்கென்று வீடு கட்டிக்கொடுக்க வேண்டுமென்ற ஆசை இருக்க, கிடைத்த வாய்ப்பை பிடித்துக் கொண்டார்கள்.
தன்னுடைய பங்களிப்பாக தன்னுடைய சேமிப்பை திலகம் கொடுத்தபோது கூட பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டார்கள். இது எங்க அம்மாவுக்காக நாங்க செய்யுறது. அந்த பணம் உங்ககிட்டயே இருக்கட்டும் ம்மா. இப்படிச் சொல்லி மறுத்திருந்தார்கள்.
ஏற்கனவே அவர்கள் வசித்துவரும் வீடு. சமீபத்தில் புதுப்பித்து கூட கட்டட்பட்டிருந்தது. இதுவே போதும் என்று திலகம் சொன்ன போதும், “உங்க பிள்ளைங்க எல்லாரும் சேர்ந்து குடும்பத்தோட வந்தா தங்க இடம் வேண்டாமா?” என்று கேட்டு, மூன்று படுக்கை அறைகள், ஹால் என்று மாடியில் புதிதாக கட்டி முடித்திருந்தார்கள்.
இளைய மருமகன் அருளிடம் தான் வீடு கட்டும் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டிருந்தது. ஆமாம்… கண்ணனின் தம்பி அருள் தான், நந்தினியின் கடைக்குட்டி தங்கை கௌரியின் ஜோடி.
இருவரின் படிப்பும் ஒரேத் துறையில் இருக்க, இருவரும் சேர்ந்து தற்போது தொழிலின் வளர்ச்சி படிக்கட்டில் கால் வைத்திருக்கிறார்கள்.
ஏற்கனவே முடிவு செய்தபடி இந்துவுக்கும் ரஞ்சனுக்கும் திருமணம் முடிந்திருந்தது. இந்து இப்போது சப் கலெக்டராக வடமாநிலத்தில் பணியிலிருக்கிறாள். தமிழ்நாட்டில் பணியிலிருக்கிறான் ரஞ்சன்.
“திலகம் இல்லம். ஃபீலே செமையா இருக்குல்ல த்தான். பொம்பிளை பிள்ளைங்களை நம்பினா உன்னைத் தெருவுல விட்டுட்டு போயிடுவாங்கன்னு எவ்வளவு அலட்சியமா சொன்னார் அந்த ஆளு. நாங்க இன்னைக்கு எங்க அம்மாவுக்கு சொந்தமா வீடு வாங்கி குடுத்திருக்கோம். ஆனா அந்த ஆளு தான் தன்னோட அலட்சியத்தால வீடு இல்லாம தெருவுல நிக்குறார்.” ஆண்டுகள் எத்தனைப் போனால் என்ன, நெஞ்சில் விழுந்த காயத்தின் வடு என்றுமே மாறாது என்று நிரூபித்துக் கொண்டிருந்தன நந்தினியின் வார்த்தைகள்.
“விடு நந்தினி.” மனைவியின் கையைப் பிடித்து ஆறுதலாக அழுத்தினான் கண்ணன்.
“ஹேய்… அக்கா வந்தாச்சு…” உற்சாகமாக குரல்கொடுத்தபடி அவளுடைய தங்கைகள் ஒருவர் பின் ஒருவராக ஓடி வந்தார்கள். எல்லோரும் தலைக்கு குளித்து, ஒரே மாதிரியான தலை அலங்காரம் செய்து, ஓரே கலரில் பட்டுப் புடவை உடுத்தி நின்றிருந்தார்கள்.
“என்னங்கடி இது கோலம்?” பார்ப்பதற்கு அத்தனை அழகாகயிருந்தாலும் வேண்டுமென்றே உதட்டைச் சுளித்தாள் நத்தினி.
“உனக்கும் இதே ட்ரெஸ்கோட் தான் க்கா, உன் சாரி அத்தைகிட்ட இருக்கு. போய், குளிச்சிட்டு கட்டிட்டு வா.” கோரஸாக சொன்னார்கள்.
நேற்றே போதும் போதும் என்னும் அளவிற்கு ஃபோன் செய்து அக்காவின் நலனை எல்லோரும் விசாரித்திருந்தபடியால் இப்போது வந்தவுடன் எதையும் தொடங்கவில்லை.
“பால் காய்ச்ச வேண்டாம்னு சொன்னீங்களே ம்மா, உங்க பொண்ணுங்க முகத்தை பாருங்க, எவ்வளவு சந்தோஷமா இருக்காங்க.” அருகே வந்து நின்று உச்சி முதல் உள்ளங்கால் வரை தன் நலனை பார்வையாலே பரிசோதித்தபடி நின்றிருந்த தாயை லேசாக அணைத்து விடுவித்தபடி சொன்னாள் நந்தினி.
ஆமாம்… ஏற்கனவே நாம் வாழுகின்ற வீடுதானே, எதற்காக அடுத்தவர்கள் கண்களை உறுத்துகின்ற மாதிரி பால்காய்ச்ச வேண்டும் என்று தயங்கத்தான் செய்தார் திலகம்.
“நாம என்ன செய்தாலும் அடுத்தவங்க கண்ணை உறுத்த தான் செய்யும். அதுக்காக நம்ம சந்தோஷத்தை நாம கொண்டாடக் கூடாதா என்ன? கண்டிப்பா நாம பால் காய்ச்சுறோம்.” பிடிவாதமாக பிள்ளைகள் நிற்க, இதோ விழா நாளும் வந்தே விட்டது.
“போய் குளிச்சிட்டு வா நந்து, பாலைக் காய்ச்சிடலாம்.” திலகம் சொல்ல, தங்களுடைய வீட்டுக்குள் கணவனோடு நுழைந்தாள் நந்தினி.
“பிள்ளைங்க ரெண்டும் நல்ல தூக்கம், அதான் நான் வெளிய வரலை. பிரயாணம் எல்லாம் சௌகர்யமா இருந்ததா?” கேட்டபடியே படுக்கை அறையிலிருந்து வெளியே வந்தார் லீலாவதி.
இங்கேயும் மாடியில் அறைகள் எடுத்து, புழங்குவதற்கு வீடு இப்போது தாராளமாகவே இருந்தது.
“என்னோட வயசு குறையுறதெல்லாம் இருக்கட்டும், உன்னை நம்பி எம்பிள்ளையும், உன் பிள்ளைகளும் இருக்குறதை மறந்துடாத.” சத்தமாக சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்திருந்தார் லீலாவதி.
அறைக்குள் நுழைந்தவள் கட்டிலில் தங்கள் இருவரையும் சேர்த்து செய்த கலவை போல தூங்கிக் கொண்டிருந்த பிள்ளைகளை புன்னகையோடு பார்த்தபடி நிற்க, பின்னோடிருந்து அணைத்திருந்தான் கண்ணன். அவளுக்குமே அந்த அணைப்பு தேவையாக இருக்க, கணவனோடு இசைந்து நின்றிருந்தவள்,
“வந்த உடனே ரொமான்ஸ் எல்லாம் தூள் பறக்குது, என்ன விஷயம் த்தான்?” என்று கேலி செய்யவும் தவறவில்லை.
“ம்ம்… என் ரௌடி பொண்டாட்டியை தனியா விட்டுட்டு நான் படுறபாடு எனக்கு மட்டும் தானே தெரியும்.” தனது மனக்கிலேசத்தை வார்த்தைகளாக்கியவனின் அணைப்பு இறுகியிருந்தது.
“அதெல்லாம் நாங்க கவனமா இருந்துப்போம், நீங்க கவலைப்பட வேணாம், இப்போ குளிச்சிட்டு ரெடியாகிப் போக லேட்டாச்சுன்னா எங்கூடப் பிறந்த வானரங்கள் ஓட்டியே தள்ளிடுவாங்க.” கணவனின் முகத்தோடு முகத்தை உரசி ஒரு முத்தத்தை பரிசாக்கியவள், அவன் அணைப்பிலிருந்து விலகி குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.
குளித்து முடித்து நந்தினி வெளியே வரும்போது தகப்பனும் மகனும் அடுத்த அறையில் குளித்து தயாராகி வந்து நின்றிருந்தனர். தூக்கம் கலையும் அறிகுறிகளோடு படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள் அவர்களது மகள்.
மகளை லேசாக தட்டிக் கொடுத்தபடியே கணவனையும் மகனையும் பார்த்தாள் நந்தினி. மெரூன் கலர் சில்க் காட்டன் சட்டை, பட்டு வேட்டி என்று இருவரும் ஒரே மாதிரியாக அணிந்திருந்தார்கள்.
ஒருவழியாக எல்லோரும் தயாராகி திலகம் இல்லத்தில் புதிதாக கட்டியிருந்த மாடி போர்ஷனில் இருந்தார்கள். ஹோமம் செய்ய ஐயர் தயாராக இருந்தார்.
“வீட்டுக்கு உரிமைப்பட்டவங்க பூஜைல உக்காருங்கோ.” ஐயர் சொல்ல, திலகத்தை உட்கார வைத்தனர் அவருடைய பிள்ளைகள்.
“அம்மாவை உட்கார வச்சிட்டேள், அப்பாவை வரச்சொல்லுங்கோ.” அவர்கள் வீட்டு விஷயம் தெரியாத ஐயர் நடைமுறையைச் சொல்ல,
“எங்களுக்கு அப்பா கிடையாது. எங்க அம்மா மட்டும் தான் பூஜைல இருப்பாங்க, நீங்க ஆரம்பிங்க.” முசுட்டுக் குரலில் சொன்னாள் நந்தினி.
“அவ்வளவு தானே, பேஷா செய்துட்டா போச்சு.” என்றவர் பூஜையை தொடங்க, தாயைச் சுற்றிலும் பிள்ளைகள் நால்வரும் தங்கள் துணைகளோடு அமர்ந்து விட்டார்கள். போதாததற்கு நண்டும் சிண்டுமாக அவர்களுடைய பிள்ளைகள்.
தன்னைச் சுற்றிலும் பார்த்த திலகத்தின் இதயம் பெருமிதத்தில் விம்மித் தணிய, விழியோரம் சந்தோஷத்தில் லேசாக கண்ணீர் துளிர்த்தது.
பூஜை முடியவும் அவருடைய பிள்ளைகள் எல்லோரும் தங்களுடைய வாழ்க்கைத் துணைகளோடு தாயிடம் ஆசீர்வாதம் வாங்கினார்கள். கடைசி ஆளாக திலகத்தின் காலைத் தொட்டு வணங்கி, “என்னையும் ஆசீர்வாதம் பண்ணுங்க பெரியம்மா.” என்று நின்றான் சுரேந்தர்.
ஆமாம்… எவ்வளவு தான் தள்ளி நிறுத்தினாலும் அந்த குடும்பத்தை விட்டு விலகிப் போகவில்லை சுரேந்தர். இந்துவிற்கும் அவனுக்குமிடையே நல்லதொரு நட்பு இருக்க, அவளிடமிருந்து தகவல் கிடைக்கவும் விடுமுறை எடுத்துக்கொண்டு வந்து இறங்கிவிட்டான். ஐபிஎஸ் பாஸ் செய்து, புனேயில் பணியில் இருக்கிறான்.