“இம்புட்டு நேரம் அமைதியா வேலை நடந்திட்டு இருந்துச்சு, திரும்பவும் சத்தம் போட வந்து நின்னுட்டீயளே” என்றான் நடுத்தர வயதுடைய ஆள்.

“என்ன சத்தம் போட்டேண்ணா நான்? வேலைய பாருங்க” என சாந்தமாக சொன்னான் ருத்ரன்.

சிவாவை நோக்கி கை காட்டி, “ஆயி இங்குட்டு வருவீயளாம்” என்றான் அந்த வேலையாள்.

சிவாவும் அங்கு வர, “உறுமுற புலி உன்னை கண்டுல்ல ஆயி பதிவுசு ஆவுது. அடிக்கடி வா ஆயி, எங்க பொழப்பு நல்லா ஓடும்” என்றான்.

“ஆமாமாம், எட்டுக் கட்டைல சத்தம் போடுற அண்ணன் குரலு மேல எழும்பலையே!” என கிண்டல் செய்தான் இள வயது பையன் ஒருவன்.

“வேலைய பாருடா” என்ற ருத்ரன் மனைவியை அங்கிருந்து போகும் படி கண் சாடை காட்டினான்.

‘ஏனாம்?’ எனக் கேட்டு அவள் அங்கேயே நிற்க, “நையாண்டி அதிகம் ஆச்சுன்னா அண்ணன் வெட்க படுவாக, நாங்க சிரிப்போம் அதுக்கு பயந்து போவ சொல்றாக” என்றான் ஒருவன்.

சின்ன சிரிப்புடன் சிவாவும் அகன்று விட்டாள். நிஜமாகவே ருத்ரனின் வேகம் கொஞ்சம் குறைந்துதான் போயிருந்தது. எக்கு தப்பாக ஏதாவது வேலை செய்பவர்களை பார்த்து அவன் போட்ட அதட்டல் கூட சுருதி இறங்கியே இருந்தது. வேலை செய்பவர்கள்  கண்களால் சாடை பேசிக் கொண்டு சத்தமில்லாமல் சிரித்தார்கள்.

மனைவியிடம் வந்தவன், “வேலைய கெடுக்குற புள்ள நீ, கெளம்பு வீட்டுக்கு” என்றான்.

“நான் என்ன செஞ்சேன்? வந்தது வந்திட்டேன் மதியான சாப்பாட்டுக்கு நீங்க கிளம்பறப்ப வர்றேன்” என்றாள். அவனால் மறுத்து சொல்ல முடியவில்லை.

காய் ஒன்று சற்று தள்ளி விழுந்தது. மரத்தில் இருந்தவனை திட்டினான் ருத்ரன்.

“அட அதென்ன அப்படியா ஆயி பக்கத்துல வந்துப்புடும், சாக்கிரதையாதான் பறிச்சு போடுறேன். கட்டில்ல உட்கார்ந்து கெடக்கிறது தம்பி உசுருன்னு தெரியாமலா இங்குட்டு வேலை பாக்குறோம்?” என மரத்தில் இருந்த படியே சத்தம் போட்டான் காய் பறித்தவன்.

பக்கத்து மரத்தில் இருந்தவன், “அட ஆயி மருண்டு போச்சுல்லடா, அப்புறம் தம்பி கோவிக்காம என்ன செய்வாவோ?” என சொல்லி, “தம்பி நாங்க வேணும்னா ஒவ்வொரு காயா பறிச்சு கீழ கொண்டாந்து வச்சிட்டு போறோம்” என்றான்.

“அதுவும் சரிதான், ஆனா ஒவ்வோரு முறைக்கும் மரம் ஏறுற கூலிய கணக்கு பண்ணி சரியா கொடுத்துப்புடனும் தம்பி” என்றான் இன்னொருவன்.

“ஆயி முன்னாடி காச கணக்கு பண்ணுவாகளா? ஆயிக்கு இளநி பறிச்சு போட்டவனுக்கே இன்னிக்கு ரெட்டை சம்பளம் கெடைச்சாலும் கெடைக்கும்” என ஒருவன் சொல்ல, அந்த இடமே சிரிப்பலைதான்.

இடுப்பில் கை வைத்துக்கொண்டு செல்லமான ஆயாசத்தோடு அவர்களை பார்த்தான் ருத்ரன்.

வாயில் கை வைத்து சிரித்தவள், “இனிமே வரலை, இன்னிக்கு ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க” என்றாள்.

நன்றாக பொழுது ஓடியது சிவாவுக்கு மட்டுமில்லை, ருத்ரனை ஓட்டி ஓட்டி வேலை செய்தவர்களுக்குமே அன்று அலுப்பு தெரியவில்லை. ருத்ரன் முகத்தில் கூட அவ்வப்போது முறுவல் அரும்பியது.

மதிய உணவு நேரம் வந்தது. சிலர் வீடு சென்று வருவார்கள், சிலர் காலையே சாப்பாடு எடுத்து வந்திருப்பார்கள். சிலருக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு யாராவது வருவார்கள். அப்படி ஒருத்தி கைக்குழந்தையோடு தன் கணவனுக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு வந்தாள்.

வெயிலில் குழந்தையையும் சுமந்து கொண்டு நடந்தே வந்ததில் அலுத்து தெரிந்த அவளிடமிருந்து குழந்தையை வாங்கிக் கொண்டாள் சிவா.

“ஏட்டி வீட்டுக்கு போய்ட்டு திரும்பனும் நான். வர்றியா என்ன நீ, புள்ளைய கைல வச்சுக்கிட்டு சாவகாசமா நிக்கிற?” எனக் கேட்டான் ருத்ரன்.

“அட இருங்க, பாவம் அந்தக்கா, செத்த புருஷனுக்கு பரிமாறிட்டு வரட்டுமே” என்றவள் குழந்தையோடு ஒரு பக்கமாக நடக்க, தலையை மறுப்பாக ஆட்டிக் கொண்டே அவனும் அவளை தொடர்ந்தான்.

போர் செட் அருகில் சென்று நீரை காட்டி விளையாட்டு காட்டினாள் சிவா. குழந்தையும் நன்றாக சிரித்து மகிழ்ந்தது.

“போதும் போதும் நேரமாச்சு, வா புள்ள” என்றான்.

“குழந்தை என்ஜாய் பண்றான் பாருங்க, இருங்க” என்றவள் அவன் பொறுமையை நன்றாக சோதித்து விட்டு ஒரு வழியாக கிளம்பும் முடிவுக்கு வந்தாள்.

தண்ணீரில் முகம் கழுவ நினைத்தவள், “செத்த புடிங்க புள்ளைய” என்றாள்.

“ஏட்டி சின்ன புள்ளடி, எனக்கு தூக்க வராது” என்றான்.

ஒரு வயதுக்கு மேல் உள்ள பிள்ளைகளையே தூக்க பயப்படுவான், கொஞ்சம் பெரிய பிள்ளைகளைத்தான் அவனுக்கு தூக்க வரும் என வள்ளி கூட சொல்லியிருக்கிறார்.

இப்போது அஞ்சி நிற்கும் கணவனை பார்த்தவள், “நமக்கு புள்ள வந்தா எப்படி தூக்குவீங்களாம்?” எனக் கேட்டு அவன் கையில் குழந்தையை கொடுத்து விட்டாள்.

அந்த எட்டு மாதக் குழந்தையை பயந்து பயந்துதான் கையில் வைத்திருந்தான். முழுதாக ஒரு நிமிடம் கூட இல்லை, பெருங்குரல் எடுத்து அழ ஆரம்பித்து விட்டது குழந்தை.

“இப்படி பேய் முழி முழிச்சா… அதான் பயந்திட்டான்” என கணவனை திட்டி, “வாடா வாடா தங்கம் செல்லம்” என சொல்லி பிள்ளையை வங்கி சமாதானம் செய்தாள்.

குழந்தையும் அவளின் தோளில் சலுகையாக சாய்ந்து கொண்டது.

பார்த்திருந்தவனுக்கு கண்கள் நிறைந்து போனது.

“புள்ள…” என வாஞ்சையான குரலில் அவளை அழைத்தான்.

“ம்…” என சொல்லி சிரித்த முகமாக கணவனை ஏறிட்டாள்.

“எனக்கும் ஒரு புள்ளையோ பொண்ணோ பெத்து தா புள்ள” என ஆசையாக கேட்டான்.

“ஹையோ மிராசு பெரிய கோரிக்கையால்ல வைக்குறீங்க?” என்றாள்.

“விளையாட்டு பேச்சில்ல புள்ள, நெசமாதான் கேட்கிறேன், நாம சரியாத்தானே இருக்கோம், ஏன் நமக்கு இன்னும் குழந்தை வரல?” எனக் கேட்ட கணவனை ஆசையாக பார்த்தாள்.

“குழந்தை பத்தின நெனப்பு இல்லாமையே என் கூட கூடினா எப்படி வருமாம்? இப்பதானே உங்களுக்கு ஆசை வந்திருக்கு, இனிமே வருமா இருக்கும்” என்றவளுக்கு என்ன முயன்றும் கடைசி வார்த்தை சொல்லும் போது அவன் கண்களை ஏறிட முடியவில்லை.

குழந்தையின் தாய் அங்கேயே வந்து விடவும் குழந்தையை ஒப்படைத்தாள் சிவா.

“அடுத்த வருஷம் இந்நேரத்துக்கு எல்லாம் உன் கையும் குழந்தையும் குட்டியுமா கனத்து கெடக்கட்டும் ஆயி” என சொல்லி விட்டு புறப்பட்டாள் அப்பெண்.

என்னவோ கணவன் மனைவி இருவருக்கும் சில நொடிகள் பேச்சு வரவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.

அவள் கை பிடித்து விரல்கள் கோர்த்துக் கொண்டவன் அவளின் நெற்றி மோதினான்.

“சொன்னது நெனப்புல வைங்க, சீக்கிரம் அப்பா ஆகிடலாம்” என்றாள்.

“எங்குட்டு புள்ள உன் பக்கத்துல நெருங்கி வரும் போது உன்னைய தவிர எந்த நெனப்பும் வர மாட்டேங்குதே, நான் என்னடி செய்வேன்?” எனக் கேட்டான்.

“ம்ம்… பரவாயில்லை, நான் நெனப்பு மூட்டுறேன்” என சின்னக் குரலில் சொன்னாள்.

“ராத்திரிக்கு இப்பவே அச்சாரம் போட்டுக்கிடவா?” எனக் கேட்டான்.

அவன் இதழ்களை தன் இதழ்களோடு உரச விட்டு, அவனிடமிருந்து விலகிக் கொண்டாள். நீர்நிலை அருகில் இருந்ததால் வெயிலின் தாக்கம் தெரியவில்லை. தனிமை அவன் சிந்தையை மயக்க, மனைவியை ஆசை பொங்க பார்த்தான்.

“என்னங்க…” என சிணுங்கியவள், “போலாம் வாங்க” என்றாள்.

“நீ முத்தம் வச்ச இடம் சிலு சிலுன்னு இருக்க, உள்ளுக்குள்ள எல்லாம் அனலா கொதிக்குது புள்ள. சரியான மாயக்காரிடி நீ!” என்றான்.

“அதுக்கு?” எனக் கேட்டாள்.

சுற்றம் பார்த்தவன், அவளை தன்னிடம் இழுத்து தீவிரமாக ஒரு முத்தம் வைத்து அந்த நேர தாபத்தை தணித்துக் கொண்டான்.