“ஏட்டி…” என ருத்ரன் கோவமாக வாய் திறக்கவுமே வேகமாக வந்து அவனை அணைத்துக் கொண்டாள் சிவரஞ்சனி. எதிர்பார்த்திருக்காத காரணத்தால் அவன் திகைக்க, அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“உன்கிட்ட…” என அவன் ஏதோ பேச ஆரம்பிக்க, அவன் இதழ்களில் ஒரு விரலை வைத்து அழுத்தி, “இன்னிக்கு நெறைய பேசிட்டோம், கொஞ்ச நேரமாச்சும் வாய்க்கும் காதுக்கும் ரெஸ்ட் கொடுப்போம்” என்றாள்.
அவன் முறைப்பாக பார்க்க, கண்டு கொள்ளாமல் மீண்டும் அவன் மார்பில் தலை வைத்துக் கொண்டாள்.
அவன் அணைக்காமலே இருக்க, அவளே அவன் கைகளை தன்னை சுற்றிக் கொள்ளும் படி செய்து, “பொண்டாட்டி தானா வந்து கட்டிக்கும் போது கை கீழ தொங்கினா தெய்வ குத்தம் ஆகிப் போகும் வெள்ளை வேட்டி மைனரே!” என்றாள்.
“சரியான அராத்து புள்ள நீயி!” என்றவனும் புன்னகை பூக்க அவளை அணைத்துக் கொண்டான்.
சற்று நேரத்துக்கு பின் அவர்கள் விலகிய போது, அவனிடமிருந்து கோவமும் விலகியிருந்தது. நிதானமாக காணப் பட்டான்.
“ம்ம்… ரெடி ஸ்டார்ட், இப்ப கோவப்படுங்க” என அவள் சொல்ல, அவனுக்கு நன்றாக சிரிப்பு வந்தது. அவளும் மெல்ல சிரித்தாள்.
பால்கனி வழியே பிறை அவள் பெற்றோருடன் கிளம்பிச் செல்வதை பார்த்திருந்தாள் சிவா. ஆகவே அதிர்ச்சி கொள்ளாமல், “போகட்டும், அப்புறம் நீங்க செஞ்சது சரிதான்னு உங்க தம்பி காலடியிலேயே விழுந்து கெடப்பாளா என்ன?” எனக் கேட்டாள்.
“போவான்னு தெரிஞ்சுக்கிட்டேதான் சொன்னியா?”
“எந்த பொண்டாட்டியா இருந்தாலும் புருஷன் இப்படின்னு தெரிஞ்சா போவதான் செய்வா. உங்க தம்பி பத்தி பிறைக்கு மட்டுமில்ல எல்லாருக்கும் தெரிஞ்சதுதான் சரிங்க, அவருக்கும் நெஞ்சுல பயம் வரும், பிறையும் அது குணத்தை கொஞ்சம் மாத்திக்கும். அந்த பொண்ணு பேரு வெளில வரலைதானே?” என்றாள்.
நடந்து முடிந்து விட்டது. அதைப் பற்றி என்ன ஆராய்வது என நினைத்த ருத்ரன், “என்னமோ போ, வர வர என் சொல் பேச்சு கேப்பேனான்னு நிக்கிற” என அலுத்துக் கொண்டான்.
“உங்க மேல என்ன வாடை வருது?” என அவனை மோப்பம் பிடித்துக்கொண்டே கேட்டாள்.
“அட இது ஏதோ குட்நைட் லிக்விட் ஸ்மெல் மாதிரி இருக்குங்க” என்றாள்.
கொசு விரட்டி திரவத்தை கலை குடிக்க போன போது தட்டி விட்டதை சொன்னவன், “எம்மேலயும் சிந்திடுச்சு போல” என்றாள்.
“உங்க தம்பிக்கு எப்படிங்க இப்படிலாம் வில்லங்கமா யோசனை வருது?” எனக் கேட்டுக் கொண்டே அவன் கையில் துண்டை கொடுத்தவள், குளியலறையை கண்களால் காண்பித்தாள்.
துண்டை வாங்கி தோளில் போட்டுக் கொண்டவன், நினைவு வந்தவனாக அந்தக் கைப்பேசியை எடுத்து கலை அனுப்பியிருந்த செய்திகள், அழைப்பு விவரங்கள் என அனைத்தையும் நீக்க ஆரம்பித்தான்.
“நான் செய்றேன் நீங்க போங்க” என சொல்லி கை நீட்டினாள். தராமல் அவனேதான் செய்தான்.
“ஹப்பா ரொம்பத்தான்!” என சொல்லி கீழே சென்று விட்டாள்.
சிம் கார்டை மட்டுமில்லாமல் கைப்பேசியையும் சேர்த்து உரு தெரியாமல் உடைத்துப் போட்டு விட்டுத்தான் குளிக்க சென்றான்.
வள்ளியை தவிர மற்ற அனைவரும் அவரவர் அறைகளில் முடங்கிப் போயிருந்தனர். இரவு சாப்பாட்டுக்கு பார்க்கலாம் என்றாள் சிவா.
“இப்பதான் புயல் அடிச்சு ஓஞ்சது போல இருக்கு, செத்த பொறு ஆயி” என்றார் வள்ளி.
இன்னும் கணவன் சாப்பிட்டிருக்காத காரணத்தால் மாமியாரிடம் வேறு பேச்சு கொடுத்துக் கொண்டே சமையலை ஆரம்பித்து விட்டாள்.
அவள் மாடிக்கு சென்ற பிறகு இங்கு நடந்த அனைத்தையும் அவளிடம் விளக்கமாக சொன்னார் வள்ளி.
“உங்க பையன் இப்படி முடிவு செஞ்சதுல உங்களுக்கு ஏதும் வருத்தமா அத்தை?” என விசாரித்தாள்.
“எனக்கென்ன வருத்தம் ஆயி? ருத்ரனுக்கு பார்த்த பொண்ணை கட்டிக்கிட்டு வந்தானே பாவி மவன் கலையரசன். அவுகள ஏத்துக்குறது கூட சரி, இப்படி ருத்ரன் கண்ணு முன்னாடியே வாழ வச்சாகளே? என் புள்ள மனசை பத்தி யோசிச்சு தனியா வச்சிருக்கலாம்தானே? ம்ஹூம் இவுக யாரை பத்தியும் எனக்கு கவலை இல்லை.
ஏன் ரோட்டுலயா விட்டுப்புட்டான் என் புள்ள, அவ்வோ அவ்வோ பங்க உடந்தை காரங்களே பார்த்துகிடட்டும்னு சரியாதான் சொல்லிருக்கான். நான் ஒரு பாவி சிறுக்கி முன்னாடியே அப்படி செஞ்சு வுட்ருந்தா இம்புட்டு தூரம் வந்திருக்காது. எதுக்கு உண்மையை சொன்னேன்னு உன்னைய திட்ட கிட்ட செஞ்சானா என்ன? அதெல்லாம் கண்டுக்கிடாத, அப்படி சொல்லப் போயிதான் விடிவு வந்திருக்கு” என சொன்னார் வள்ளி.
ம்ம் போட்டுக் கொண்டே சட்னி அரைத்து விட்டவள், தயார் செய்திருந்த மாவில் தோசை வார்த்தாள்.
“மாவு புளிச்சு போயிருந்துச்சுதே ஆயி, அவன் சாப்பிட மாட்டான்டி, மதியானம் கூட ஏதும் சாப்பிடல அவன், பேச்சு மும்முரத்துல நானும் கவனிக்கல பாரு, செவனேன்னு உங்க அப்பாரு கடையிலேயே வாங்கிப்புடலாம். எந்நேரம் போனா கிடைக்கும், மாரிய அனுப்புறேன் நான்” என சொல்லி எழுந்தார் வள்ளி.
“ஓட்டல் திறக்க இன்னும் நேரம் ஆவல அத்தை, அதுவரை சாப்பிடாம இருப்பாங்களா அவங்க? நான் புளிச்ச மாவை எடுக்கல, தக்காளி ரவா தோசை செஞ்சிருக்கேன்” என்றாள்.
மருமகள் ஊற்றி எடுத்திருந்த தோசையில் ஒரு வில்லை பிய்த்து சட்னி வைத்து சாப்பிட்டவர், “நல்லாருக்கு ஆயி, நீ தள்ளு நான் சுடுறேன், எம்புட்டு நேரம் அடுப்புல நின்னுட்டு இருக்க?” என்றார்.
“நாலு தோசை ஊத்திக்க மாட்டேனா அத்தை?” எனக் கேட்டு நகர மறுத்து விட்டாள் அவள்.
“உனக்கும் சேர்த்து எடுத்திட்டு போயேன்டி, சும்மா சும்மா கீழ வருவியா, கால் நோவாது?” எனக் கேட்டார்.
“சுத்தி போட்டுகிட்டா ஆச்சு, அவனை பாரு ஆயி நீ” என்றவர் வம்படியாக இருவருக்கும் சேர்த்து அவரே தோசை ஊற்றி மருமகளிடம் கொடுத்தனுப்பினார்.
சிவா வந்த போது குளித்து முடித்து பணத்தை எண்ணி தனித் தனியாக எடுத்து வைத்துக் கொண்டிருந்தான் ருத்ரன்.
“சாப்பிட்டிட்டு அதை பாருங்க” என்றாள்.
“இத முடிச்சிட்டா இன்னிக்கு வேலை ஆச்சு, செத்த நேரம் தொந்தரவு செய்யாம இரு” என்றவன் அவளிடம் பேசியதில் எண்ணுவதில் கணக்கை விட்டு விட்டான். மீண்டும் முதலிலிருந்து எண்ண ஆரம்பித்தான்.
“சம்பாதிக்க தெரிஞ்சா போதுமா, இப்படியா பணத்தை கவுண்ட் பண்ணுவாங்க?” எனக் கேட்டவள் எப்படி லாவகமாக பணத்தை பிடித்துக்கொண்டு எண்ணுவது என சொல்லிக் கொடுத்தாள்.