பல நாட்கள் கழித்து வீடு வந்த இளைய மகனைப் பார்த்த சிவகாமியின் மனம் வெம்பிப் போனது. யுவன் கையில் இருந்த விருதுகளைப் பார்த்த சிவகாமிக்கு மனமே ஆறவில்லை.

“என்னாச்சு தேவ்? ரொம்ப அசதியா தெரியறப்பா? பெத்தவ ஒருத்தி இருக்கான்னு உனக்கு ஞாபகம் இருக்கா?” என்றார் கலங்கிய கண்களுடன். அவருக்கு அந்த வீடு தான் எல்லாமே. அதிகம் படிக்காதவர். வெளி உலகம் அறியாதவர்.

“அம்மா பிளீஸ்.! நான் ஏற்கனவே டயர்டா இருக்கேன். நான் போய் தூங்குறேன். யாரும் என்னை தொந்தரவு பண்ணாதிங்க” என்றவன் அறையை நோக்கி செல்ல,

“சார் இது” என்று யுவன் முழித்துக் கொண்டு நிற்க,

“என்கிட்டே குடுப்பா” என்றவரின் முகம் பெருமையில் மின்னியது. சில வருடங்களுக்குப் பிறகு அந்த வீட்டிற்கு வெற்றியும், பெருமையும் தேடி வருகிறது.

யாதவன்,  சத்யதேவின் தந்தையும் ஒரு தயாரிப்பாளர் தான். அதில் வரும் வருமானத்தை பல தொழிகளில் முதலீடு செய்திருந்தார்.சில வருடங்களுக்கு முன்பு, தொழில் நஷ்டம் காரணமாக ஐநூறு கோடி ரூபாய் கடனால்  தற்கொலை செய்து கொண்டார். அதில் பாதி கடனுக்கு காரணம் யாதவன் என்றால் மிகையில்லை. எடுத்த படங்கள் வரிசையாக தோல்வியை தழுவியிருக்க, மகனை நம்பி பணம் போட்ட தகப்பனாருக்கு விழி பிதுங்கும் நிலை. சமாளிக்க முடியாத ஒரு நிலையில் தன் உயிரை மாய்த்துக் கொண்டார்.

அன்றிலிருந்து இன்று வரை தொய்ந்து போன குடும்பத்தை தூக்கி நிறுத்தியது சத்ய தேவ்  தான். இரவு பகல் பாராமல் உழைத்தான். இயக்கமும், நடிப்பும் அவன் துடிப்பாகி போக, அடுத்தடுத்த வெற்றிகள், அவனை அடுத்த நிலைக்கு எடுத்து சென்றது. அந்த வெற்றியின் ருசி தன்னை பாதிக்காதவாறு பார்த்துக் கொண்டான்.

“யுவன் அடுத்த பட ஷூட்டிங்க்கு இன்னும் எத்தனை நாள்ல கிளம்பனும்?” என்றார் சிவகாமி.

“அது இன்னமும் முடிவு பண்ணலைம்மா. சார் இப்ப வரைக்கும் வேற எந்த படத்துக்கும் கால்ஷீட் குடுக்கலை” என்றான் யுவன்.

“அதுவும் சரிதான். கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுக்கட்டும். அவனும் எவ்வளவு நாள் தான் ஓடுவான்?” என்றவருக்கு புதிதாய் கவலை முளைத்தது. அவனுக்கும் காலகாலத்தில் கல்யாணத்தை பண்ணி வைக்க வேண்டிய கவலை தான் அது.

“என்னங்கம்மா? மறுபடியும் பொண்ணு தேடுற படலமா?” என்றான் யுவன் சிரிப்புடன்.

“அந்த கொடுமையை ஏன் யுவா கேட்குற? இவனுக்கு பொண்ணு கிடைக்குறதுக்குள்ள எனக்கு இன்னும் வயசாகிடும் போல” என்றார் சலிப்பாய்.

“என்னம்மா இப்படி சொல்றிங்க? சார் தலையை மட்டும் ஆட்டுனா போதும். அவரை கட்டிக்க க்யூல  நிப்பாங்க” என்றான் யுவன் பெருமையாக.

“அது தான் இங்க பிரச்சனையே? யாதவன் தான் அவன் இஷ்ட்டப்படி கட்டிகிட்டான். ஆனா, தேவ்க்கு நான் பார்க்குற பொண்ணு தான். எங்க சொந்த பந்ததுக்குள்ள பார்த்தாதான சரியா வரும். ஒரு இடம் அமைஞ்சி வர்ற மாதிரி இருக்கு. இவன் சரின்னு சொல்லணுமே. இப்பவே வயசு முப்பத்தி ஒன்னு ஆகிடுச்சு” என்று புலம்பினார்.

“எப்படியோ சாருக்கு சீக்கிரம் மேரேஜ் நடந்துட்டா சரி தான்” என்றான் யுவன். செல்லும் இடங்களில் எல்லாம் இளம் யுவதிகளிடமிருந்து சத்யதேவ்வை  காக்கும் பாடு அவனுக்குத் தானே தெரியும்.

திருச்சியிலிருந்து இருபத்தி ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருந்தது அந்த ஊர். கிராமமும் அல்லாது, நகரமும் அல்லாத ஒரு  டவுன் பகுதி. வற்றாத காவிரி நதி அந்த ஊரை செல்வ செழிப்பாக வைத்திருந்தது.

தன் வீட்டில், தன் அறையில் கண்ணாடி முன் அமர்ந்திருந்த ஆதிராவுக்கு முகம் முழுவதும் அப்படி ஒரு சந்தோசம். காயத்ரி- ரவிக்குமார் தம்பதியின் இரண்டாவது மகள். படித்து  முடித்து சென்னையில் ஒரு பெரிய ஐ.டி. கம்பெனியில் பணிபுரிகிறாள். அவளால் இன்னமும் நடப்பதை நம்ப முடியவில்லை.

“அம்மா நிஜமாத்தான் சொல்றிங்களா?” என்று ஒரு நூறு முறையாவது கேட்டிருப்பாள் காயத்ரியிடம்.

“இப்ப என்ன பிரச்சனை ஆதிரா உனக்கு?” என்று காயத்ரி சலித்துக் கொண்டார்.

“இல்லம்மா..! தஞ்சாவூர்ல அவங்க பெரிய குடும்பம். அது மட்டுமில்லாம சத்ய தேவ்  இப்ப பெரிய பேமசான ஆக்ட்டர் வேற. அவங்க எப்படி நம்ம வீட்டுக்கு பொண்ணு கேட்டு வருவாங்க?” அதான் கேட்டேன் என்றாள்.

“அது தாண்டி எனக்கும் புரியலை. உங்க அப்பாவுக்கு ஒரு வகையில தூரத்து சொந்தம். அவங்க பூர்விகம் தஞ்சாவூர்ல தான் பொண்ணு எடுக்கனும்னு சிவகாமியம்மா விருப்பப் படுறாங்களாம்.விஷயம் உங்கப்பா காதுக்கு வர, மனுஷன் அதுக்கு மேல சும்மா இருப்பாரா? எங்க வீட்ல பொண்ணு இருக்குன்னு சொல்ல, இதோ இன்னைக்கு வரேன்னு சொல்லியிருக்காங்க.” என்றார் காயத்ரி.

“சத்ய தேவ்  சரின்னு சொன்னா, பெரிய நடிகைங்களே கிடைப்பாங்களே. இல்லண்ணா, பெரிய பிஸ்னஸ் பீப்பிள் நிறைய பேர் பொண்ணு குடுக்க தயாரா இருப்பாங்களே. அதெல்லாம் விட்டுட்டு இப்படி சிம்பிளா தேடுறாங்கன்னா எதோ தப்பா இருக்கே” என்றாள் ஆதிரா.

“அவங்க நடிக்கவா பொண்ணு தேடுறாங்க. குடும்பம் நடத்த தான் பொண்ணு தேடுறாங்க” என்றவர்,

“இப்ப என்ன? என் பொண்ணுக்கு இஷ்டமில்லை. வேண்டாம்னு சொல்ல சொல்லிடுவோமா?” என்றார்.

“அய்யோ! அப்படி எல்லாம் ஒன்னும் பண்ண வேண்டாம். மனசுக்குள்ள ஒரு சந்தேகம். வேற ஒண்ணுமில்லை” என்ற ஆதிரா,

‘சத்ய தேவ்வை கட்டிக்க எனக்கு கசக்கவா செய்யும்’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

“ஆபீஸ்க்கு எத்தனை நாள் லீவ் சொல்லியிருக்க?” என்றார்.

“நான் வேலையை விட்றலாம்னு இருக்கேன்ம்மா. கல்யாணத்துக்கு அப்பறம் நான் வேலை பார்க்குறது அவ்வளவு நல்லா இருக்காதுல்லம்மா” என்றாள்.

அவளின் பதிலில் அதிர்ந்தவர்,

“அவங்க பார்க்கத்தான் வராங்க ஆதிரா. இன்னும் எதுவும் முடிவாகலை. நீயா எதையாவது கற்பனை பண்ணிக்காத. வேலைக்கு போக வேண்டாம்னு சொன்னப்ப அவ்வளவு அடம் பிடிச்சு போன. அதை மறந்துடாத.” என்றார் காயத்ரி.

“அம்மா அழகுல நான் ஒரு அனுஷ்காம்மா. என்னை எப்படி பிடிக்காம போகும்?” என்று கேட்டவளின் வார்த்தைகளை மறுக்க முடியாது போனது காயத்ரியால்.

“ஆமா, எங்க உங்க செல்ல சீமந்த புத்திரியை காணோம்?” என்றாள் நக்கலாய்.

“உனக்கு கொழுப்பு கூடிப் போச்சு. ஏன் உன் அக்கான்னு சொன்னா ஆகாதா?” என்றார் காயத்ரி.

“அப்படி எல்லாம் சொல்ல முடியாதும்மா. என்னை பொண்ணு பார்க்க வராங்கன்னு தெரிஞ்சும் வெளிய போயிருக்கான்னா அவளுக்கு பொறாமைம்மா” என்றாள்.

“அவளைப் பத்தி இப்படி பேசுறதை நிப்பாட்டு ஆதிரா. அவ வாழ்க்கை தான் இப்படி ஆயிடுச்சு. உன் வாழ்க்கையாவது நல்லா இருக்கணும்னு நினைக்கிறா. அதுக்கு உன் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுவியா?” என்று அதட்டினார்.

“அவளை ஒன்னு சொல்லிடக் கூடாதே? வந்துடுவிங்களே வக்காலத்து வாங்கிட்டு. வீட்ல ஒருத்தர் சொல்றதையும் கேட்காதப்பவே நீங்க இப்படி இருக்கீங்க. இன்னும் நீங்க சொல்றதை எல்லாம் கேட்டுட்டா அவ்வளவுதான் உங்களைப் பிடிக்க முடியாது” என்றாள்.

அவளை முறைத்தவர்,” கிளம்புறதுக்கு வழியைப் பாரு” என்று சொல்லிவிட்டு செல்ல முற்பட,

“நம்ம சொந்தக்காரங்க யாரையும் காணோம். இந்நேரம் விஷயம் இப்படின்னு தெரிஞ்சிருந்தா வரிசையா படையெடுத்து வந்திருப்பாங்களே” என்றாள் ஆதிரா.

“அது யார்கிட்டயும் சொல்லலை. எல்லாம் முடிவான பிறகு சொல்லிக்கலாம்னு அப்பா சொல்லிட்டார். மாப்பிள்ளை வீட்லயும் அப்படி தான் சொல்லியிருக்காங்க” என்று தகவல் சொன்னவர், கணவரின் அழைப்பில் அவரை நோக்கி சென்றார்.