இறுதியாக ஆனந்திக்கும், அவருக்கும் விவாகரத்து வாங்கி, எல்லா வழியிலும் அவரை ஓரங்கட்டியிருந்தான். சுந்தரம் பணத்தை சேர்த்தளவு அன்பையும், விசுவாசத்தையும் சேர்க்காமல் விட்டார். விளைவு அவருடன் யாரும் இல்லை. மகன் உட்பட!

மகன் அம்மா பின் தான் அலைகிறான்.  ஆனந்திக்கும் அவனை விட முடியாதளவு போராட்டம். பாசப்போராட்டம்.

“திருந்திட்டேன், கையில் பணம் இல்லாம வேலைக்கு போய் தான் சாப்பிடுறேன். எனக்கு சொத்து எல்லாம் வேணாம். உங்க கூட மட்டும் இருக்க விடுங்கம்மா” என்று அம்மாவிடம்  தினம், தினம் கெஞ்சல்.

இதில் வழக்கு நிரூபிக்கப்பட்டு தண்டனையும் கிடைத்துவிடும் எனும் நிலையில் அம்மாவின் காலையே பிடித்திருந்தான்.

ஆனந்தி மனது சஞ்சலத்துடன் தான் துளசியிடம் வாபஸ் வாங்க முடியுமா என்று கேட்டார்.

துளசி நொடியும் இல்லாமல், “மாட்டேன்” என்றாள்.

“துளசி எடுக்கும் முடிவு தான் என்னோட முடிவும்” என்று தேவா விலகிவிட,

“நான் கேஸ் வாபஸ் வாங்க நினைச்சாலும் கோர்ட் விடாது அத்தை” என்றாள்.

“சுவாதி வாபஸ் வாங்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க” என்று தேவா சொல்ல.

ஆனந்தி நிமிடம் மௌனம் காத்தவர், “அவன் தலையெழுத்துப்படி நடக்கட்டும்” என்றுவிட்டார்.

அந்த வாரத்திலே சந்தோஷ் வழக்கு முடிவுக்கு வந்து, அவனுக்கான தண்டனையும் கொடுக்கப்பட்டது.

சில ஆண்டு சிறை வாசம். “முடிச்சுட்டு வா. அம்மா உனக்காக ஏதாவது பண்றேன்” என்று ஆனந்தி மகன் கையை பற்ற,

“என்னை தொடாத” என்று அவரின் கையை உதறிவிட்ட சந்தோஷ், “நீதான் இதுக்கெல்லாம் காரணம். துளசி எனக்கு கிடைக்க போகாம நீதான் காரணம். உன்னால தான் நானும், என் அப்பாவும் கஷ்டப்படுறோம், யாரை விட்டாலும் உன்னை மட்டும் விட மாட்டோம். நாங்க வெளியே வந்ததும் முதல்ல உனக்கு தான் இருக்கு” என்று ஏகத்துக்கும் பேசி நான் திருந்தவில்லை என்று நிரூபித்தான்.

வஞ்சம் வைத்தே, இத்தனை நாட்களாக என்னிடம் நடித்திருக்கிறான். ஆனந்திக்கு அதிர்ச்சி மட்டுமில்லை மனதும் முழுவதுமாக விட்டு போனது.

“நம்பிக்கை துரோகம் இப்படி தான் இருக்குமா?” அவரின் கண்கள் துளசியை தொட்டது.

“நான் ஜெயிச்சிருக்கேன். இனியும் ஜெயிச்சுட்டே தான் இருப்பேன்! வழக்கில் மட்டுமில்லை வாழ்க்கையிலும்” என்பதாய் அவள் நிமிர்ந்து நிற்க, ஆனந்தி முகமும் கசங்கி பின் தெளிந்தது.

“உன்னை கேட்டிருக்க கூடாது துளசி. என்னை மன்னிச்சிரு” என்று அண்ணன் மகளிடம் மனதார மன்னிப்பை வேண்டினார்.

“மகன் பாசம். இப்படி தான் இருக்கும். நீங்க என்னையும் வற்புறுத்தலை, கோவப்பட்டு பேசலை தானே. விடுங்க அத்தை.” என்றாள் துளசி.

ஆனந்தி இனி சந்தோஷ் வந்தாலும் சமாளித்து கொள்வார். எத்தனை முறைதான் அவரும் ஏமாறுவார்!

துளசி எப்போதும் போல் தந்தையின் அறைக்கு சென்றாள். சரவணன் பிறந்து, வளர்ந்த வீடு. எங்கெங்கு எல்லாம் சரவணனை உணர முடியுமோ அங்கெல்லாம் அம்மாவும், மகளும் இருப்பார்கள்.

இப்போதும் சரவணன் அறையில் தான் துளசி அம்மா மடி மீது படுத்திருந்தவள், “நான் முதல்லே உங்க மருமகனுக்கு சம்மதம் சொல்லியிருக்கணும்மா” என்றாள்.

“துளசி” என்று அம்மா மகளின் முகம் பார்க்க,

“முன்னமே தோணினது தான். இப்போ உங்ககிட்ட சொல்லணும்ன்னு தோணிச்சு” என்று துளசி எழுந்தமர்ந்தாள்.

வளர்மதிக்கு மகளின் புன்னகை முகம் மகிழ்ச்சியை கொடுத்தது. “உங்க ஸ்டூடண்ட்டை நல்லாத்தான் அடி கொடுத்திருக்கீங்க” என்றும் மகள் சொல்ல,

“துளசி” என்ற வளர்மதி, “தேவா மட்டுமில்லை என் ஸ்டூடன்ட் எல்லாரும் இப்போ நல்லமாதிரியா தான் இருக்காங்க” என்றார் பெருமையாக.

சென்ற வாரம் தான் தேவா தலைமையில் ஓர் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்திருந்தது.

அதில் கிட்டத்தட்ட எல்லாரும் கலந்து கொண்டதுடன், வளர்மதியிடமும் தங்கள் அன்பை பகிர்ந்து கொண்டனர்.

“உங்க மேல இருக்க பயத்துல படிச்சு பாஸ் பண்ணேன் மேம். அதுதான் என்னை இப்போ வாழ வைக்குது” என்று எல்லாம் பல பல வார்த்தைகளில் இதைத்தான் எல்லா ஆசிரியர்களிடமும் பகிர்ந்தனர்.

“இருந்தாலும் உங்க மருமகனுக்காக நான் நன்றி சொல்லிக்கிறேன் டீச்சரம்மா” என்று துளசி அம்மாவை கட்டிபிடித்து முத்தம் கொடுத்தாள்.

“உன் மாமனார், மாமியாருக்கு நன்றி சொல்லு போ. அவங்க தான் பாவம்” என்று வளர்மதி சொல்ல,

“ம்மா” என்று கோபம்கொண்ட மகள், பின், “அதென்னமோ உண்மை தான். அவங்க இப்போவும் பாவம் தான்” என்றாள்.

தினம், தினம் வீட்டில் எதாவது ஒரு ரகளை. இப்போதும் எதாவது நடந்து கொண்டிருக்கும். எல்லாம் தான் வீட்டில் உள்ளனரே!

“சரி. நான் கிளம்பறேன்மா” என்று துளசி அம்மாவிற்கு திரும்ப முத்தம் கொடுத்து ஆனந்திக்கு சொல்லி கொண்டு வர, தேவா சின்ன மகனுடன் மனைவியை அழைக்க வந்துவிட்டான்.

வளர்மதி பேரனை தூக்கி கொண்டவர், “காபியா, டீயா தேவா?” என்று மருமகனை கேட்க,

“இரண்டையும் உங்க பொண்ணுக்கே கொடுங்க” என்றான் மருமகன்.

“இப்போ என்னாச்சு?”

“நீங்க ஓரவஞ்சனை. என்னை மட்டும் அடி கொடுத்து அடக்கிட்டு, உங்க மகளை அப்படியே விட்டுட்டிங்க” என்று பஞ்சாயத்து வைத்தான்.

“நான் உன்னை அடக்கிட்டேன். நீயும் அடங்கிட்ட இல்லை” என்று வளர்மதி கேட்டுவைக்க, ஆனந்திக்கு புன்னகை.

“அத்தை” மருமகன் கடுப்பாக,

“என் பொண்ணா இருந்தவரை நல்லாத்தான் இருந்தா. உனக்கு பொண்டாட்டியா ஆனதுக்கு அப்புறம் எனக்கு தெரியாது” என்றார் வளர்மதி.

“ம்மா. நான் இப்போவும் நல்லபிள்ளை தான்” என்றாள் மகள்.

“அவ்வளவு வேஷம். நீங்க தேவா’வா இருந்தா உங்களுக்கு தெரியும்” என்றவன், சிறிது நேரம் அங்கிருந்துவிட்டு  மனைவியை உர்ரென்ற முகத்துடனே வீட்டுக்கு அழைத்து வந்தான்.

தேவா கட்டிய புது வீட்டில் தான் இப்போது எல்லாம் இருக்கின்றனர். பரம்பரை வீட்டை புதுப்பிக்க வேண்டிய கட்டாயம். எங்கு செல்வது என்ற கவலையே இல்லாமல் இங்கு வந்தாயிற்று.

“என் மகன் வீடு கட்டுனது கூட நல்லதா போச்சு” என்று ஜெயலட்சுமி அடிக்கடி சொல்லி கொள்கிறார்.

தேவா வீட்டில் இரவு உணவுக்கான வேலை நடந்து கொண்டிருக்க, ஹாலில் சத்தம்.

“ஆரம்பிச்சுட்டாங்க. இப்போ என்னவாம்?” என்று பெண்கள் ஹாலுக்கு வர,

“எனக்கு அந்த கார்ட்டூன் வேணும்” என்று சித்தார்த் கேட்டு கொண்டிருக்க,

“ராகவ் தம்பி கேட்கிறான் இல்லை. அவனுக்கு வை” என்று வைரவேல் மகனை அதட்டி கொண்டிருந்தார்.

உடனே தேவா, “அதென்ன அவன் கேட்டதும் வைச்சிடணுமா என்ன? ராகவ் நீ பாரு” என,

“டேய். சித்தார்த் தான் முதல்ல டிவி போட்டான்” என்று வைரவேல் சொல்ல,

“ரிமோட் ராகவ் தான் முதல்ல எடுத்தான்” என்றான் தேவா.

“ப்பா. டிவி தான் மெயின். ரிமோட் இல்லை” என்று சித்தார்த் சொல்ல,

“ரிமோட் இல்லைனா டிவி பார்க்க முடியுமா?” என்று ராகவ் கேட்டான்.

“ஏன் பார்க்க முடியாம டிவியிலே நாங்க சேனல் வைச்சுகிறோம் போடா” என்று வைரவேல் டிவிக்கு போக,

“அதெப்படி? முடியாது. ரிமோட்ல தான் வைக்கணும்” என்று தேவா டிவிக்கு முன் நின்றான்.

“அப்போ ரிமோட் கொடுங்க”

“முடியாது. நீங்க சேனல் மாத்துவீங்க”

“தேவா. சித்தார்த் தான் முதல்ல கேட்டான்”

“அவன் கேட்டா? ராகவ் தான் பெரியவன்”

“அடேங்கப்பா. பெரியவன் பேச்சை அப்படியே கேட்கிற ஆளா நீ?”

“ஓஹோ. உங்க பேச்சை கேட்டு அடிமை மாதிரி இருக்கணுமா?”

“அப்புறம் எதுக்குடா பெரியவன், சின்னவன் பேச்சை பேசுற”

“ராகவ் பெரியவன்னு உங்களுக்கும், இந்த வணங்கா முடிக்கும் ஞாபகப்படுத்துறேன்” என்று மகன் தலையில் தட்ட போக, அங்கு சித்தார்த் இல்லை.

“எல்லாம் சாப்பிட வந்துட்டீங்களே? எங்களை கூப்பிடலை” என்று வைரவேல் கடுப்பாக மகனுடன் வர,

“பிசியா இருந்தீங்கன்னு தான் கூப்பிடல” என்றார் பசுபதி.

அவர் பேச்சை விட கோவம் வந்தது சித்தார்த், ராகவ் செயலில் தான்.

“ண்ணா. அம்மாகிட்ட தோசை கேளு. நான் கேட்டா வராது” என்று சித்தார்த் சொல்ல,

“அண்ணி. முட்ட தோசை” என்று குரல் கொடுத்தான் ராகவ்.

“உங்களை விட இவங்க பரவாயில்லை. சண்டை போட்டாலும் நல்லபிள்ளைங்க. நீங்க தான் இப்போவரை எங்களை படுத்தி எடுக்கிறீங்க? சின்ன பிள்ளைகளை பார்த்தாவது திருந்துங்க இரண்டு பேரும்” என்று பசுபதி சத்தம் போட்டார்.

“இனி இவனுங்களுக்கு சப்போர்ட் பண்ண கூடாது தேவா” என்றார் சித்தப்பா.

“க்கும். நடக்கிறதை சொல்லுங்க தம்பி” என்று கிண்டலடித்து சென்றார் ஜெயலட்சுமி.

“எனக்கும் தோசை வேணும்” என்று துளசி தோசையுடன் வரவும் கேட்டான் தேவா.

வேணும்ன்னே வேலை வைக்கிறார்! துளசி கணவனை அடிக்கண்ணால் முறைத்து செல்ல,

“சீக்கிரம் எனக்கு பசிக்குது” என்று குரல் கொடுத்தான்.

“தோசை சுட வேணாமா? பொறுடா” என்று ஜெயலட்சுமி சொல்ல,

“உங்க பேரனுக்கு மட்டும் உடனே வந்துச்சு” என்றான் தேவா.

“எப்படியும் அவன் கேட்பான்னு துளசிக்கு தெரியும்” மாலதி புன்னகையுடன் சொல்ல,

“அப்போ புருஷன் மேல மட்டும் தான் அக்கறை இல்லை” என்றான் தேவா.

“தோசைக்கு இந்த அக்கப்போறா? இந்தா பிடி” என்று ஜெயலட்சுமி எடுத்து வர,

“வெறும் தோசையா? முட்டை தோசை எங்க?” என்று கேட்டான் தேவா.

“நீ சாதா தோசை தான் கேட்ட? அதையே தின்னு” என்று ஜெயலட்சுமி மகன் வாயில் திணித்து சென்றார்.

“ம்மா” என்று தேவா விக்க,

“அண்ணி. என்ன இது? அவன் கேட்கிறதை கொடுத்தா தான் என்ன? துளசி நீ ஊத்துறியா? நானே ஊத்திக்கவா?” என்று வைரவேல் கேட்டபடி மகனுக்கு தண்ணீர் எடுத்து கொடுத்தார்.

“இனி இவனுங்களுக்கு நீங்க எதுவும் செய்ய வேணாம். நீங்களே செஞ்சு சாப்பிடுங்க” குடும்ப தலைவராக பசுபதி தீர்ப்பை சொல்ல,

“நாங்க தனி குடித்தனம் போயிக்கிறோம். எதுக்கு தொல்லை” என்றான் தேவா.

“முதல்ல போங்க. நாங்க கூட பேக் பண்ணி கொடுக்கிறோம். அப்படியே போகும் போது இந்த பெருசு இரண்டையும் கூட ஓட்டிட்டு போங்க” என்று பசுபதி சொல்ல,

“ஓஹோ எங்களை அனுப்பிட்டு நீங்க எல்லாம் ஜாலியா இருக்க பார்க்கிறீங்க. இதுக்காகவே போக மாட்டோம்” என்றான் தேவா.

“ஆசை காட்டி மோசம் பண்றதையே வேலையா வைச்சிருக்கானுங்க” என்று பசுபதி திட்டி செல்ல, பெண்களுக்கு புன்னகை.