மொட்டவிழ்ந்த தேனரும்பே -18

அத்தியாயம் -18

கலையரசனை ருத்ரன் அடித்ததை  நியாய படுத்த முடியாதே என பிறையின் அப்பா கேட்கவும் உண்மையை சொல்ல கணவன்  அனுமதிக்காத காரணத்தால் மௌனமாகவே நின்றாள் சிவா.

 “மூச்சு விடாம பேசினவளுக்கு என்னாச்சாம் இப்போ? சத்தமா பேசினா அவ சொல்றது சரின்னு ஏத்துக்கிட்டு வேடிக்கை பார்ப்பீயளா? மத்த விஷயம் பத்தியெல்லாம் எனக்கு தெரியாது, ஆனா எம்புருஷனை மாடு மாதிரி போட்டு அடிச்சதுல உள்நோக்கம் இருக்கு, நாங்க வாழறத அவரால சகிச்சுக்க முடியல,  அவருக்கு கீழதான் இவரு இருக்கணும்னு அடிமை கணக்கா வச்சிருந்தாரு, இப்ப மாமா எல்லாத்தையும் என் புருஷனையே பார்க்க சொல்லிடவும் என்ன செய்யன்னு தெரியாம இப்படி அடிச்சிட்டாரு” என்றாள் பிறை.

“உன் புருஷன் யோக்கியதை தெரியாம சும்மா சும்மா என்ன நீ என் புருஷனையே ஏதாவது சொல்லிட்டு இருக்க? நீ பேசுறதுல ஏதாவது அர்த்தம் இருக்குதா? அறிவை அடகு கிடகு  வச்சுத் தொலைச்சிட்டியா? பார்க்கிறவங்க பொறாமை பட அப்படியென்ன நீயும் உன் வீட்டுக்காரரும் ஊர் மெச்ச வாழுறீங்க?” கோவமாக கேட்டாள் சிவா.

“எங்களுக்குக்குள்ள என்னன்னு உனக்கெதுக்கு சொல்லணும் நான்? நாங்க லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க, உங்கள மாதிரி வேற வழியில்லாம வாழ்ந்துகிட்டு இல்லை” என்றாள் பிறை.

“இவ்ளோ வாய் கிழிய பேசுற உனக்கு உன் புருஷனுக்கு வேறொரு பொண்ணு கூட பழக்கம் இருக்கிறது மட்டும் தெரியாம போயிடுச்சா? ஐயோ பாவம்!” என கேலியாக சொன்னாள் சிவா.

கலைக்கு இரத்த அழுத்தம் சட்டென இறங்கி மயக்கம் வருவது போலானது.

ருத்ரன் மனைவி மீதான கோவத்தோடு எழுந்து நிற்க, மற்றவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

அவசர பட்டு எல்லாம் இதை சொல்லியிருக்கவில்லை சிவா, சொல்ல வேண்டும் என தீர்மானித்துதான் சொல்லியிருந்தாள்.

“சிவரஞ்சனி!” குரலில் கடுமை கூட்டி அழைத்தான் ருத்ரன். அவளோ கணவனின் பக்கம் திரும்பவே இல்லை.

“என்ன சிவா சொல்லுற?” என பதற்றமாக கேட்டார் கோதை.

எந்தப் பெண் என்ற விவரத்தை சொல்லாமல் இன்னொரு முறை கலையின் நடத்தையை சொன்னாள் சிவா.

“அவுக பொய் சொல்றாக, எங்க… அண்ணனை சொல்ல சொல்லுங்க பார்ப்போம்” என பதறினான் கலை. அண்ணன் தன்னை காப்பாற்றி விடுவான் என அவனுக்கு அத்தனை நம்பிக்கை.

“அவரு சொல்ல மாட்டாரு, ஏன்னா உண்மை வெளில தெரிஞ்சா உங்க பொண்டாட்டி உங்களை விட்டு நிரந்தரமா போயிடும்னு நினைக்கிறாரு. இத சொல்லாம விட்டா நீங்க ஆட்டம் போட இன்னும் வசதியா இருக்கும்னு பாவம் அவருக்கு தெரியலை” என்றாள் சிவா.

மனைவியின் பக்கம் சென்று அவளின் கையை பிடித்து இழுத்தான் ருத்ரன்.

“மத்தவங்க பேசும் போது வேடிக்கை பார்த்தீங்கதானே? இப்பவும் வேடிக்கை பாருங்க!” என சின்னக் குரலில் கணவனை அதட்டினாள் சிவா.

“பொல்லாதவன் ஆக்காதடி என்னைய” என அடித் தொண்டையில் சீறினான் ருத்ரன்.

கணவனிடமிருந்து முகம் விலக்கி அனைவரையும் பொதுவாக பார்த்த சிவா, “அந்த பொண்ண இன்னிக்கு நைட்டு கூட தங்க கூப்பிடிருக்காரு பிறையோட வீட்டுக்காரர், அதை அந்த பொண்ணோட அம்மா என் புருஷன்கிட்ட சொல்லி அழுதிருக்காங்க, அதனாலதான் இவரை இப்படி போட்டு அடிச்சிருக்காரு என் புருஷன்” என தெளிவாக சொல்லி விட்டாள்.

“என்ன கதை வுடுற? என் புருஷன் ஒன்னும் அப்படி கிடையாது” அப்படி இருந்து விடக்கூடாது என்ற பயத்தோடு சொன்னாள் பிறை.

“ஆமாம் பிறை, நான் நல்லவன் என்னை சந்தேக படாத” என தீனமான குரலில் சொன்னான் கலை.

“நான் உங்களைதான் நம்புறேன்” என்ற பிறை, தன் அப்பாவிடம், “என் வாழ்க்கைய நாசமாக்க பார்க்கிறாங்க ப்பா, என்னன்னு கேளுங்க” என்றாள்.

பிறையின் அப்பா ருத்ரனை பார்த்தார். அவன் அவரிடம் எதுவுமே சொல்ல முனையவில்லை. அவன் பொய் சொல்ல மாட்டான் என்பது அவருக்கு தெரியும். மனைவி பேசுவதை தடுக்க பார்க்கிறானே தவிர, இல்லை என அவன் மறுக்கவில்லையே.

‘உனக்காக நல்வாழ்க்கையை அமைத்து கொடுக்கத்தான் நான் நினைத்திருந்தேன், உன் தலையில் நீயே மண் அள்ளி போட்டுக் கொண்டாயே!’ என வேதனையோடு மகளை பார்த்தார் அவர்.

தனராஜனோ அவமானம், வேதனை, விரக்தி என எல்லாம் கலந்த மன நிலையில் அமர்ந்திருந்தார்.  அண்ணனின் கையை பிடித்து ஆறுதலாக தட்டிக் கொடுத்தார் சேகர்.

பாட்டியும் செங்கமலமும் ஒரே அழுகை. வள்ளி, கோதைக்கு எல்லாம் ‘இவனா இப்படி?’ என பலத்த அதிர்ச்சி.

சகுந்தலையின் முகம் இருண்டு போயிருந்தது. தன் மகள் கணவனுடன் விலகி இருப்பதை அவர் அறிவார், அது நல்லதிற்கில்லை என எத்தனையோ தடவை புத்தி சொல்லவும் செய்தார்.

நான் வீட்டை விட்டு வந்ததும் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டாரே,  இப்படி கொஞ்ச நாள் நான் தள்ளி இருந்தால் நல்ல உழைப்பாளியாகவும் மாறி விடுவார் என பிறைதான் பகல் கனவு வைத்திருந்தாள்.

 தாத்தாவோ இதெல்லாம் என் குடும்பத்திலா நடக்கிறது என கவலையாக சிந்தித்துக் கொண்டிருந்தார்.

“அவங்க சொல்றது நெசம் இல்லை, அப்படி யார் கூடவும் நான் பழகல, யாரும் என்னைய நம்பலைல…” என்றவன், கொசு விரட்டி மெஷினை எடுத்து அதைத் திறந்து அதிலிருந்த திரவத்தை குடிக்க போனான்.

வேகமாக போய் அவன் கையில் உள்ளதை தட்டி விட்டான்  ருத்ரன்.

“அண்ணன்… நீ சொல்லுண்ணா நான் அப்படியில்லைனு, இல்லனா இன்னிக்கு வுட்டா என்னிக்கா இருந்தாலும் செத்து போவேன்,  எத்தன தடவ என்னை காப்பாத்திட்டு இருப்ப?” எனக் கேட்டான் கலை.

“அடேய்! இன்னும் வாங்கி கட்டிக்காத சொல்லிப்புட்டேன்” என எச்சரித்தான் ருத்ரன்.

மாட்டிக்கொண்ட பயத்திலும் பதற்றத்திலும் தன்னை எப்படியாவது காத்துக் கொள்ள நினைத்த கலை, “உன் பொண்டாட்டி காது மூக்கு வச்சு சொல்ற கட்டுக் கதையை உண்மையாக்க என்னை கெட்டவன் ஆக்காத” என சத்தமிட்டான்.

“எலேய்!” என எச்சரிக்கையாக அழைத்தான் ருத்ரன்.

அனைவரும் தன்னை குற்றவாளியாக பார்த்து நிற்பதை கண்ட கலையால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தன்னை இந்நிலைக்கு ஆளாக்கிய சிவா மீது துவேஷம் கொண்டான்.

“வேலைக்காரனோட  ஓடிப் போன அக்காளுக்கு தங்கச்சியா பொறந்தவ இப்படித்தான் கீழ்த்தரமா யோசிச்சு பேசுவா!” என்றான் கலை. அடுத்த நொடி ருத்ரன் விட்ட அறையில்  ஹாலின் ஓரத்தில் போய் விழுந்தான்.

“என் பொண்டாட்டி சொன்ன அம்புட்டும் உண்மை! உடம்பு கொழுப்பெடுத்து அலைஞ்சிருக்கான் இந்த பய, இப்படி மேல கை வச்சாதான் அடங்குவான்னு அடிச்சேன் போதுமா?” என ருத்ரனே அனைவருக்கும் சொல்லி விட்டான்.

“இல்லைனு மட்டும் இவன் சொல்லட்டும் உண்மையா இல்லையான்னு இன்னும் தெளிவு படுத்துறேன்” என்ற ருத்ரன், கலையை பார்த்து, “சொல்லுடா, சிவரஞ்சனி சொன்னது பொய்யுன்னு  இப்போ சொல்லு” என அழுத்தமாக கேட்டான்.