இளம் தலைமுறையைச் சேர்ந்த பெண், அதுவும் ஒரு காவல் அதிகாரி, தங்களோடு சகஜமாக அமர்ந்து எந்தவித அலட்டலும் இல்லாமல் பேசிக்கொண்டிருப்பதை பிரம்மிப்போடு பார்த்துக்கொண்டிருந்த தீபாவின் மாமியார்,

 “ம்ஹூம்… இவ்வளவு அருமையான பிள்ளைகள் கூட வாழுற குடுப்பினை இல்லாம போச்சே அந்த மனுஷனுக்கு.” என்று அங்கலாய்த்தார். அவருக்கும் மருமகள் மூலமாக திலகத்தின் வாழ்க்கை கதை தெரியவந்திருந்தது.

அந்த பெண்மணி யாரைச் சொல்கிறார் என்று புரிந்ததால் எல்லோரும் பதிலேதும் சொல்லாமல் மௌனமாகவே இருந்தார்கள்.

“இந்த சின்ன வயசுலயே பேச்சுலயும் செயல்லயும் எவ்வளவு தெளிவு உங்க பொண்ணுக்கு. எல்லாத்துக்கும் காரணம் உங்க வளர்ப்பு தான் திலகம். உண்மையிலேயே நீங்க கிரேட் தான் ம்மா. நீ இல்லைன்னா என்ன டா, நான் என் பிள்ளைங்களை வளத்து ஆளாக்கி காட்டுறேன் பாருன்னு தைரியமா நின்னு, இன்னைக்கு ஜெயிச்சும் காட்டியிருக்கீங்க. உங்களை எங்க சொந்தம்னு சொல்லிக்கவே பெருமையா இருக்கு.” தீபாவின் மாமியார் திலகத்திற்கு புகழாரம் சூட்டிக்கொண்டே செல்ல, நந்தினியின் இதழ்களில் இப்போது மெல்லிய கீற்றாக புன்னகை.

“நான் ஒன்னுமே இல்லை ம்மா. என் பிள்ளைங்க சூழ்நிலையைப் புரிஞ்சு எங்கூட நின்னாங்க.” பதிலுக்கு பிள்ளைகளை முன்னிலைப்படுத்தியே பேசினார் திலகம்.

“எல்லாத்துக்கும் சேர்த்துவைச்சு இப்போ அனுபவிக்கிறார் இல்ல, சொந்த வீட்டை ஏமாந்து நிக்குறது ங்குறது சும்மாவா? செய்த தப்புக்கு தண்டனை கிடைக்கணும் இல்ல.” தொடர்ந்து பேசிக்கொண்டே சென்றார் தீபாவின் மாமியார்.

கண்ணன் சொன்னது போல ஒரு நல்ல வழக்கறிஞர் மூலமாக வழக்கை நீதிமன்றத்தில் பதிவு செய்திருக்கிறார் ராஜவேலு. வீடு சம்மந்தமாக மகளிடம் உதவி கேட்போமா என்று கூட யோசித்திருக்கிறார். ஆனால் மருமகனை எளிதாக உதவிக்கு அழைத்தது போல, மகளிடம் சென்று நிற்க முடியவில்லை அவரால். வேறு என்ன? பெண்பிள்ளைகள், என்னுடைய உதவி இல்லாமல் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று ஜம்பமாக சொல்லிவிட்டு, இப்போது மகளிடம் உதவிக்கு என்று போய் நிற்பதற்கு தன்மானம் இடம் தரவில்லை அந்த மனிதருக்கு.

அதுவும் இல்லாமல் மூத்தமகள் தன்னை அருகில் நெருங்ககூட விடமாட்டாள் என்ற யூகமும் இருந்தது அவருக்கு. எனவே நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்து விட்டார்.

ஆனால் வழக்கில் சம்மந்தப்பட்ட தாமோதரனை கண்டுபிடிக்கவே முடியவில்லை. திட்டமிட்டு உடன் பிறந்தவனை ஏமாற்றியிருந்த அந்த நபர், யாருக்கும் தெரியாமல் காதும் காதும் வைத்தாற்போல தன்னுடைய சொந்தவீட்டையும் வைரவமூர்த்தியிடம் விற்று பணத்தை கையோடு எடுத்துக்கொண்டு தான் மாயமாக மறைந்திருந்தார்.

தாமோதரன் இல்லாத காரணத்தால் வழக்கில் ஒரு தேக்க நிலை தானாகவே உண்டாகிவிட்டது. அதில் பொறுமையிழந்திருந்த வைரவமூர்த்தி தரப்பு ராஜவேலுவை வீட்டை விட்டு வெளியேற வற்புறுத்த, முடியாது என்று ராஜவேலு பிடிவாதம் பிடிக்க, நடந்த அடிதடியில் வீட்டைப் பூட்டி சீல் வைத்து விட்டது நீதிமன்றம். இனி வழக்கு முடிவடையும் வரை அந்த வீடு யாருக்கும் சொந்தமில்லை. எனவே வாடகை வீட்டில் தான் கல்பனாவோடு வசிக்கிறார் ராஜவேலு.

மேலும் சிறிதுநேரம் இருந்துவிட்டு தீபாவின் வீட்டிலிருந்து எல்லோரும் கிளம்பினார்கள். அன்று உள்ளூர் விடுமுறை என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை. ஆதலால் அங்கிருந்து அம்மா வீட்டுக்கே சென்றாள் அனிதா. தன் குடும்ப உறுப்பினர்களையும் அழைத்துக்கொண்டு தான்.

“அப்புறம் அக்கா, சம்பளத்தோட அரசாங்கம் லீவ் தந்துருக்கு போல.” எல்லோரும் திலகத்தின் வீட்டுக்குள் வந்து அமர, கேலியாக பேச்சைத் தொடங்கினாள் அனிதா.

“ப்ச்ச்… போடீ, தப்பே செய்யாம சஸ்பென்ஷன் ஆர்டர், எனக்கு கோபமா வருது.”

“உன் கோபத்தை எல்லாம் மூட்டைக்கட்டி தூர போட்டுட்டு கிடைச்ச சந்தர்ப்பத்தை யூஸ் பண்ணிக்கோ க்கா.”

“என்ன சொல்ல வர்ற அனி?”

“பேசாம ஒரு ட்ரிப் போயிட்டு வருவோம் க்கா, உனக்கும் கொஞ்சம் மைண்ட் ரிலாக்ஸ்ஸா இருக்கும்.”

“நல்ல ஐடியா தான். ஆனா சஸ்பென்ஷன் ஆர்டரை எதிர்த்து புகார் செய்திருக்கேன். விசாரிக்க கூப்பிடுவாங்க.”

“ஹஹ… இவ்வளவு நாளாகியும் உன் டிப்பார்ட்மெண்ட் பத்தி உனக்கே தெரியல பாத்தியா க்கா? இன்னைக்கு இவ்வளவு நேரம் ஆகியும் எதுவும் தகவல் இல்ல, இதுக்குமேல வரும்னும் தோனலை. நாளைக்கு சனிக்கிழமை, அடுத்து ஞாயிற்றுக்கிழமை. கண்டிப்பா கூப்பிட மாட்டாங்க. இதுக்குமேல எதுன்னாலும் திங்கள் கிழமை தான். நாம அதுக்குள்ள வந்திடலாம்.” அக்காவை சம்மதிக்க வைக்கும் முயற்சியில் இறங்கினாள் அனிதா.

“ஆமா நந்து, போய்ட்டு வரலாம்.” தன் பங்குக்கு கண்ணனும் சொல்ல,

“ஹலோ… ஹலோ, போயிட்டு வரலாமா? நீங்க எங்க வர்றீங்க த்தான்? நாங்க லேடீஸ் மட்டும் தான் போறோம்.” கேலி துள்ளி விளையாடியது அனிதாவின் குரலில்.

“லேடீஸ் மட்டும்னு சொல்லியாச்சு, அதனால நாங்க இடத்தை காலி செய்யுறோம்.” கேலியாகவே தங்கள் பணியிடங்களுக்கு கிளம்பி சென்றார்கள் நாதனும் அவருடைய இளைய மகனும்.

அதற்கு நேர்மாறாக உற்சாகமாக அனிதாவின் பேச்சை கவனிக்க ஆரம்பித்தார்கள் மூத்த பெண்கள் நால்வரும்.

“ட்ரிப் ஐடியா நல்லாயிருக்கு அனி, ஆனா நம்ம வீட்டு ஜென்ட்ஸையும் கூட்டிட்டு போவோமே.” மெதுவாகச் சொன்னாள் பூங்கோதை.

“அதெல்லாம் கிடையாது அண்ணி. நாம மட்டும் தான் போறோம், நீங்களும் வர்றீங்க.” கண்டிப்பான குரலில் சொன்னதுபோல கண்களை உருட்டி பேசிய அனிதா,

“என்ன லேடீஸ், நாம போறோம் தானே?” என்று மூத்தவர்களைப் பார்த்து கேட்டாள்.

“கண்டிப்பா.” முதல் ஆளாக சொல்லியிருந்தார் ஞானவல்லி பாட்டி.

“எங்க போகலாம்?” அனிதா சத்தமாக யோசிக்க,

“ஊட்டி.” என்றார் லீலாவதி.

“ரெண்டு பேருக்கும் இடையில ஏதாவது பிரச்சினையா சகல? உங்களை கழட்டி விட்டுட்டு போறதுலயே குறியா இருக்குறா அனிதா.” மனைவியின் வேகமான திட்டமிடலை அதிர்ச்சியாக பார்த்துக்கொண்டிருந்த ஜெகத்ரட்சகனிடம் கேட்டான் கண்ணன்.

“நீங்க வேற புரளியைக் கிளப்பாதீங்க அண்ணா” என்ற ஜெகன்,

“எல்லாரும் சேர்ந்தே போலாம் அனி.” என்றான்.

‘நோ, நாங்க மட்டும் தான் போறோம்.” பிடிவாதமாக சொன்னாள் அனிதா. பாதுகாப்பு கருதி எங்கே சென்றாலும் கணவன் தன்னோடே அழைத்துச் சென்று, கூட்டி வந்ததில் லேசான சலிப்பு வந்திருந்தது அனிதாவுக்கு. எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் சுதந்திர வானில் பறக்க அவளது மனம் ஏங்கியது. அதனால் தான் தனியாக செல்ல வேண்டும் என்கிறாள்.

“சரி, ஊட்டிக்கே போகலாம். கௌரியும், இந்துவும் வர்றாங்களான்னு கேளு.” நந்தினி தங்கையின் திட்டத்துக்கு சம்மதிக்க, இந்துவை அழைத்து விஷயத்தை சொன்னாள் அனிதா.

“நல்ல ஐடியா அனி. நானும் கௌரியும், வீட்டுக்கு கிளம்பலாம்னு இப்பதான் ப்ளான் பண்ணுனோம். இனிமே இப்பிடியே ஊட்டிக்கு வந்துடுறோம்.” என்ற இந்து,

“என் ஃப்ரெண்டோட ஹோட்டல் ஊட்டில இருக்கு. ரூம்ஸ் அங்கயே போட்டுருவோம், நான் ஏற்பாடு பண்ணிடுறேன்” என்றாள்.

இன்று பிற்பகலே நல்ல சொகுசு வாகனத்தில் பயணம். இரவு கோவையில் தங்கல். மறுநாள் காலையில் ஊட்டிக்கு பயணம். கௌரியும் இந்துவும் இன்று மாலை ட்ரெயின் மூலம் கிளம்பி, அதிகாலையில் கோவையில் இவர்களோடு சேர்ந்து கொள்ள வேண்டும். இதுதான் அவர்களுடைய பயணத்திட்டம்.

திடீர் பயணம் அந்த பெண்களுக்கிடையே உற்சாகத்தை கொண்டுவந்திருக்க எல்லாவற்றையும் திட்டமிட்டுவிட்டு கலைந்து சென்றிருந்தார்கள்.

“இரண்டு முழுநாள், உன்னைப் பிரிஞ்சு என்னால இருக்க முடியாது நந்து, நானும் வரேன்.” மனைவி பிரயாணத்துக்கான உடைகளை அடுக்கிக் கொண்டிருக்க, தன்னுடையதையும் அதோடு எடுத்து வைத்தபடியே சொன்னான் கண்ணன்.

‘உன்னைப் பிரிந்து என்னால் இருக்க முடியாது.’ கணவனின் இந்த வார்த்தைகளில் மனதில் இனம்புரியாத இதம் பரவியது நந்தினிக்கு. என்றாலும் அதை வார்த்தைகளில் காட்டிவிடாமல்,

“என்னோட டாமினேஷன் இல்லாம இரண்டு நாள் சந்தோஷமா இருங்க த்தான்.” என்றாள் வேண்டுமென்றே. சொன்னதோடு நில்லாமல் கணவன் எடுத்து வைத்திருந்த அவனுடைய உடைகளை கபோர்டில் திரும்பவும் அடுக்க ஆரம்பித்தாள்.

அவளை சரேலென்று நிமிர்ந்து பார்த்தவனோ, “நீ கேட்டதாலத்தான் நான் சொன்னேன் நந்து.” என்றான் பாவம் போல முகத்தை வைத்துக்கொண்டு.

“நான் கேட்டா… உடனே சொல்லிடுவீங்களா நீங்க? ஹாங்…” பதிலுக்கு இடுப்பில் கையை வைத்துக்கொண்டு முறைத்தாள் அவன் மனைவி.

“அம்மாடியோவ்… இது அராஜகமா இல்ல இருக்கு.” நிஜமாகவே பதறிப் போனான் கண்ணன்.

“கொஞ்ச முன்னாடி தான் சுவாரஸ்யமா இருக்குன்னு சொன்னீங்க, அதுக்குள்ள இப்பிடி மாத்திப்பேசுனா எப்பிடி அத்தான்?” கணவனின் பதட்டம் உள்ளுக்குள் உற்சாகத்தை உண்டுபண்ண, கண்களை உருட்டி அதட்டலாக கேட்க முயன்றாலும், உதடுகள் கேலிப்புன்னகையில் துடித்ததை மறைக்க முடியவில்லை நந்தினியால். அதைக் கண்டுகொண்டான் கண்ணன்.

 “ஷ்ஷ்… அப்போ சும்மாதான் சொல்லுறியா? பயந்தே போயிட்டேன் நான்.” என்றபடி நிம்மதி பெருமூச்சை விட்டவன்,

“லாயரா இருந்தாலும் மனைவிகிட்ட பேசி எந்த ஆணாலும் ஜெயிக்க முடியாதுன்னு ப்ரூஃப் பண்ணிட்ட. என்னை ஆளைவிடு.” என்றான்.

“ரொம்ப நாள் எல்லாம் விடுற ஐடியா இல்ல த்தான் எனக்கு. போனாப் போகுதுன்னு இரண்டே இரண்டு நாள் விடுறேன். என் பொண்டாட்டி ஊருக்கு போயாச்சுன்னு என்ஜாய் பண்ணுங்க.” கணவனின் தாடையைப் பிடித்து கொஞ்சியபடி சொன்னாள்.

“அப்பிடி எதுவும் செய்ய மாட்டேங்குற தைரியத்துல தானே நீ சொல்லுற?” மனைவியின் இடுப்போடு கைகளை கோர்த்துக்கொண்டு சலுகையான குரலில் கண்ணன் கேட்க,

“அஃப்கோர்ஸ், இதுல என்ன உங்களுக்கு சந்தேகம் யுவர் ஆனர்.” கணவனின் தலைமுடியை கலைத்து விட்டபடிச்சொன்ன நந்தினியின் குரலில் அளவுக்கு அதிகமான நம்பிக்கை இருந்தது.

“உங்கள் நம்பிக்கைக்கு பங்கம் வராத மாதிரி எப்போதும் இந்த கண்ணன் நடந்து கொள்வான். இப்போது என்னையும் தங்களோடு அழைத்துச் செல்லுங்கள் தேவி.” நாடக பாணியில் கண்ணன் கேட்க,

“நோ சான்ஸ் மிஸ்டர் லோட்டஸ்.” மலர்ந்து சிரித்தாள் நந்தினி…