அனைவரும் ஸ்தம்பிக்க, பிறையை முறைத்த ருத்ரன்,  “அன்னம் சாமிக்கு சமம், ஒரு பருக்கை விளைவிக்க எம்புட்டு உழைப்பு போடணும்னு தெரியுமா? கூறு கெட்டு போச்சா உனக்கு?” என திட்டி விட்டான்.

இந்த வீட்டிற்கு மருமகளாக அவள் வந்ததிலிருந்து ஒரு வார்த்தை பேசியிராதவனுக்கு சாப்பாட்டை வீண் செய்யவும் கோவம் வந்து பேசி விட்டான்.

“ரொம்ப நல்லவரு மாதிரி பேசாதீய, நானும் கவனிச்சுட்டுத்தான் இருக்கேன், என் புருஷன்னா உங்களுக்கு ரொம்பத்தான் எளக்காரம். நான் உங்களை கட்டிக்காம அவரை கட்டிக்கிட்டேன்னுதானே அவரை நாய் நடத்துற மாதிரி நடத்துறீங்க?” எனக் கேட்டு விட்டாள் பிறை.

இதென்ன பேச்சு என்பது போல பெரியவர்கள் முகம் சுளிக்க, ருத்ரனோ திகைத்துப் போய் விட்டான்.

“ஆசை பட்டது கெடைக்கலைங்கவும் இம்புட்டு கீழ இறங்கி போயிட்டீயளே! நீங்கல்லாம் ஒரு மனுஷன் ச்சீ!” என்றாள் பிறை.

“இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினீயோ கன்னம் பழுத்து போயிடும் ஜாக்கிரதை!” என சொல்லிக் கொண்டு கணவனுக்கும் பிறைக்கும் இடையில் போய் நின்றாள் சிவா.

பிறையின் குற்றச்சாட்டு ருத்ரனை நொறுக்கி விட்டது. உடலும் மனமும்  இறுக, தள்ளிப் போய் அமர்ந்து விட்டான்.  நெஞ்சில் கை வைத்து தளர்ந்து போனவராக தரையில் அமர்ந்து விட்டார் வள்ளி.

“இந்தாடி எம் பொண்ணை அடிப்பேன் கிடிப்பேன்ன பல்ல தட்டிப்புடுவேன் தட்டி!” என்றார் சகுந்தலை.

“உங்க  மரியாதையை கெடுத்துக்கணும்னு ஆசை படாதீங்க!” என அவரையும் எச்சரித்தாள் சிவா.

“ஆயி நீ வாயி கொடுக்காத, பேச்சு எப்டி எப்டியோ போவுது. அவனை அழைச்சுக்கிட்டு மேல போ” என சிவாவிடம் சொன்னார் சேகர்.

“எப்பவும் இப்படி இவங்களுக்கு பயந்திட்டே போகணுமா மாமா? எவ்ளோ பெரிய பழிய போட்டுபுட்டா இவ? பதினஞ்சு வயசிலிருந்து குடும்பம் சொந்தம்னு பார்த்து பார்த்து  என்ன கிடைச்சுது இவருக்கு? படிக்கிற வயசுல உழைச்சி கொட்டினாரு, கல்யாண வயசுல பெரியவங்க ஆசைக்காக அவசியமே இல்லாம காத்து கெடந்தாரு.

 அவமான பட்டு நின்னப்போ எல்லாருமா சேர்ந்துகிட்டு அவரைதான பொறுத்து போவ சொன்னீங்க? அவருக்கு துரோகம் செஞ்சவங்கள இதே வீட்ல அவரு கண்ணு முன்னாடியே வாழ வச்சீங்க, அவரை பத்தி யாராவது கவலை பட்டீங்களா? இப்ப இந்த பேச்சு பேசுறா, எதிர்த்து கேட்க திராணி இல்லாம அவரை கூட்டிகிட்டு போவ சொல்றீங்க?” எனக் கேட்டாள் சிவா.

சேகர் பாவமாக தன் மனைவியை பார்க்க, ‘ நல்லா வேணும் உங்களுக்கு, என்னைய ஏன் பார்க்குறீங்க? பதில் சொல்லுங்க’ என கோதையும் கணவரை பார்த்தார்.

“அவனுக்கு என்ன ஆயி? ஊருல அவனும் பெரிய மனுஷன், சீறி வர்ற  காளைய ஒத்த ஆளா அடக்கிப்புடுவான், அவனை யாரு என்ன பார்க்கணும் யோசிக்கணும்? அவன்தான் எல்லாரையும் பாக்கிறான்” சமாதானமாக சொல்வோம் என பேசி வைத்தார் சேகர்.

“உடம்பு வலுவ பத்தி பேசலை மாமா. அவருக்கும் மனசுன்னு ஒன்னு இருக்கு. உடம்புல பட்ட காயம் கண்ணுக்கு தெரியும், மருந்து மாத்திரை போட்டு சரி செஞ்சிடலாம்.  கண்ணால காண முடியாத மனப்புண்ணு அவருக்குள்ள புரையோடி கெடக்கு, அக்கறை உள்ளவங்கதான் கண்டுபிடிச்சி ஆறுதலா நடந்துக்கணும்.

 சின்ன அத்தை சொல்வாங்க என் புருஷன் சிரிக்கிறத  வுட்டுட்டாருன்னு. ஆனா எல்லாரும் சேர்ந்துதான் அவரை அப்படி மாத்தி வுட்ருக்கீங்க. அப்பா கடனை சேர்த்து வச்சிட்டு போயிட்டாருன்னு ஏச்சும்  பேச்சும் கேட்டு கேட்டு அவர் மனசை மறத்து போக வுட்ருக்கீங்க.

 புருஷன் இல்லாம ரெண்டு புள்ளைங்களோட நிக்கிற அம்மா முன்னாடி தளர்ந்து போயிடாம நிக்கணும். பேய் மாதிரி உழைச்சு பழைய நிலைமைய மீட்டாகணும். தலையெடுத்த பின்னாடியும் தனியா போயிடாம பெரியவங்க ஆசைக்காக, பொறுப்பில்லாத ஆளுங்க வேலையையும் சேர்த்து செஞ்சுக்கிட்டு அனுசரிச்சு இங்கேயே வாழ்ந்தாகணும்.

 ஊருக்குள்ள நாமதான் பெரிய குடும்பம், நமக்குன்னு கடமை இருக்கு பொறுப்பு கெடக்கு, நம்ம குடும்பத்து மூத்த புள்ளயா நீதான் எல்லாம் பார்க்கணும்னு ஊர் காரியத்தையும் இவரு தலையில கட்டிடுற  தாத்தாவோட பேச்சையும் மதிச்சு நடக்கணும். அவருக்கு ஆசுவாசமா மூச்சு விட இடமும் நேரமும் கொடுக்காம ஓட விட்ருக்கீங்க!

ஊருக்குள்ள அந்தஸ்தான ஆளு… அதனால எதையும் காட்டிக்காம எதுவும் எனக்கு வலிக்கவே இல்லைங்கிற மாதிரியே நெஞ்ச நிமித்தி காட்டிக்கணும். மனசு விட்டு பேச நெருக்கமா ஒரு சினேகிதகாரவங்க  கூட இல்லை. இந்த ஊருல ருத்ரேஸ்வரனா  வாழறது  எவ்ளோ கஷ்டம்னு உங்களுக்கு புரியலை, அவருக்கென்னன்னு ஈஸியா சொல்றீங்களே?” என கேட்ட சிவாவின் கண்கள் இரண்டும் சிவந்து கலங்கி இருந்தன.

யாரும் மூச்சு விடவில்லை, ருத்ரனின் கண்கள் தரைப் பக்கமாக நிலை குத்தி போயிருந்தன. பழைய நினைவுகள் அலை மோதியதில் அவனுக்கு கண்கள்தான் கலங்க வில்லையே தவிர, நெஞ்சம் பரிதவித்து போனது.

சில நொடி அமைதிக்கு பின், “ஒத்த நாளுல வூடே ரெண்டு பட்டு நிக்குது ஆயி, தயவு பண்ணி வேற ஏதும் பேசாத” என்றார் தனராஜன்.

“ரொம்ப நல்லாருக்கு மாமா நீங்க சொல்றது, மோசமா பேசுன உங்க மருமகளை உங்களால அடக்க முடியலை, என் புருஷனுக்கு ஏத்துகிட்டு பேச அவரோட அப்பா இப்ப இல்லை, அப்பா ஸ்தானத்துல இருக்கிற நீங்க அவரை விட்டு கொடுத்திட்டீங்க, என்னையும் பேச வேணாம்னு சொல்றது அநியாயமா படல உங்களுக்கு?” எனக் கேட்டாள் சிவா.

தனராஜன் சங்கடமாக சிவாவை பார்க்க, “உங்க நிலம் தோப்புனு எல்லாத்தையும் பார்த்துகிட்டாரே, சல்லிகாசு அதனால பயன் அடைஞ்சாரா என் புருஷன்? ஏமாளின்னு நினைச்சிட்டீங்களோ அவரை? எல்லா விவரமும் தெரிஞ்சுதான் பார்த்துகிட்டாரு. பல வருஷம் முன்ன குடும்பத்துல நட்டம் ஏற்பட்டதுக்கு முழுக்க முழுக்க என் மாமனார் காரணம் இல்லைன்னாலும் மொத்த பழி சொல்லும்  அவர் மேலதான? பெத்த அப்பாக்கு ஏற்பட்ட அவ சொல்லை உங்களுக்கு உழைச்சு கொட்டி சரி பண்ணிக்கிட்டாரு என் புருஷன்” என்றாள்.

இது குறித்து நேரடியாக ஒரு வார்த்தை மனைவியிடம் பகிர்ந்திருக்கவில்லை ருத்ரன். அவளிடம் அவன் மனம் விட்டு பேசும் போது அவளாகவே அவனது எண்ணத்தை கணித்திருக்கிறாள். தன்னை எந்தளவுக்கு தெரிந்து வைத்திருக்கிறாள் என  மனைவியை ஏறெடுத்து பார்த்த ருத்ரனுக்கு உணர்ச்சி மிகுதியில் தொண்டை அடைத்துக் கொண்டது.

“நல்லதோ கெட்டதோ என் முன்னாடியோ மத்தவங்க முன்னாடியோ அவரு உங்களை விட்டு கொடுத்தது இல்லை, ஆனா உங்க புள்ளைன்னு வரும் போது நியாயம் இல்லாத விஷயமா இருந்தா கூட ரொம்ப சுலபமா அவர் மனசை உடைச்சு போட்ருவீங்க, அதையும் அவர் பொறுத்துக்கிட்டு இருக்காருன்னா உங்க மேல உள்ள மரியாதை, ஆனா நீங்க…” எனக் கேட்டாள்.

தனராஜனுக்கு முள் இருக்கையில் அமர்ந்திருப்பது போலிருந்தது. சங்கடப் பட்டு போனார்.

“இனி யாரும் அவரை பேசணும்னா என்னை தாண்டித்தான் பேசணும். நீ போ தள்ளுன்னு சொன்னீங்களோ…” என்ற சிவா அதற்கு மேல் சொல்லாமல் நிறுத்தினாள்.

“போதும் ஆயி, ருத்ரனை பொறந்ததிலேருந்து பார்க்கிறேன், நீ சொன்ன அம்புட்டும் சத்திய வார்த்தை, ஆனா இப்படி கலைய அடிச்சத எதை சொல்லி நியாய படுத்த போற?” எனக் கேட்டார் பிறையின் அப்பா.

சிவா தன் கணவன் பக்கம் திரும்பினாள்.

ருத்ரனோ ‘அந்த விஷயத்தை மட்டும் சொல்லக் கூடாது!’ என்ற கட்டளையை தாங்கி அவளை பார்த்தான்.

‘இனியும் என்ன உன் தம்பியை காப்பாற்றுவது?’  என நினைத்த அவளோ கணவனை  பார்வையால் சுட்டுப் பொசுக்கினாள்.