கலையரசனுக்கு குளிர் ஜுரம் பிறந்திருந்தது. திருடனுக்கு தேள் கொட்டியது போல தவித்தான். அண்ணன் எப்படியும் அனைவரின் முன்பும் சொல்லி விட மாட்டான் என நம்பி உயிரை கையில் பிடித்துக்கொண்டு படுத்திருந்தான்.
“போயேண்ணா” என சேகரும் தன் அண்ணனிடம் சொன்னார்.
‘அப்படி என்ன சேதியோ?’ என தாத்தாவும் பாட்டியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
ஏதும் ஏடா கூடமோ என பயந்த தனராஜனும் எழுவதற்காக நாற்காலியின் கைப்பிடியில் கைகளை ஊன்ற, பிறையின் பிறந்த வீட்டினர் வந்து விட்டனர்.
தன் பெற்றோரை காணவும் அவர்களிடம் ஓடிச் சென்றாள் பிறை.
அம்மாவை கட்டிக் கொண்ட பிறை, “அவரை வந்து பாரும்மா, காட்டான் கணக்கா எப்படி போட்டு அடிச்சிருக்காகன்னு, கேட்க நாதியில்லாம கெடக்கோம் மா” என அழுது கொண்டே சொன்னாள்.
பிறையை ஏளனமாக பார்த்து முகத்தை திருப்பிக் கொண்டான் ருத்ரன். சிவா பற்களை கடிக்க, வள்ளியோ, “பார்த்து பேசுடி, மூஞ்ச திருப்பி விட்ருவேன் ஆமாம்!”என்றார்.
மகளை விலக்கி நிறுத்திய சகுந்தலை, “ஹ்ஹ்ஹான் திருப்புவீங்க திருப்புவீங்க, வாங்க வந்து எம் பொண்ணு மேல கையை வச்சு பாருங்க” என்றார்.
“அத்தாச்சி! நிதானமா பேசுங்களேன், அவ மட்டும் ருத்ரனை அப்படி சொல்லலாமா? பொண்ணை கண்டிங்க மொத” என்றார் கோதை.
கோதையின் குரல் வந்த திசையை பார்த்த சகுந்தலை பக்கத்தில் இருந்த கலையை கண்டு விட்டு ஓடினார். அடி வாங்கி நேரமாகி விட்டதால் அவன் முகத்தில் வீக்கம் புடைப்பு எல்லாம் நன்றாக தெரிந்தது.
நெஞ்சில் டமார் டமார் என அடித்துக் கொண்ட சகுந்தலை, “என்ன பெத்த அய்யா… நீ இருந்த அழகென்ன… நீ நடந்த நடையென்ன… இப்படி மூலையிலே மொடங்கி கெடக்கியே… என் மனசு ஆறலையே…” பெருங்குரல் எடுத்து ஒப்பாரி வைத்தார்.
“உன்னை அடிச்சவன் கைல கட்டை முளைக்க… அவன் கண்ணு அவிஞ்சு போவ…” என கரித்துக் கொட்டினார்.
“ஐயோ அத்தை! செத்த சும்மான்னு இரு” என கெஞ்சினான் கலை.
அங்கு வந்து விட்ட சிவா, “எம்புருஷன் மேல எந்த தப்பும் இருந்தாதானே உங்க சாபம் கேட்கும் அவரை? அநியாயமா சத்தம் போடுற உங்களைதான் எல்லாம் திரும்ப கேக்க போவுது, அதனால வாயை மூடுங்க” என சத்தம் போட்டாள்.
“எந்த நேரத்துலடி நீ கால் எடுத்து வச்ச… வீட்டுல ஒன்னும் விளங்கல” என சிவாவையே சாடினார் சகுந்தலை.
“நாங்க எல்லாம் நல்லாத்தான் விளங்கி இருக்கோம் , உங்க மக மருமகன் வாழ்க்கை அவங்க செய்கால்(செயல்கள்) பொறுத்தது, கண்டதையும் பேசினா பார்த்திட்டு இருக்க மாட்டேன்” என்றாள் சிவா.
அக்காவை தம்பிகளால் அடக்க முடியாது, சிவாவைத்தான் அமைதியாக இருக்கும் படி சொன்னார்கள்.
பிறையின் அப்பாவும் அண்ணனும் ருத்ரன் மேல் மரியாதை உள்ளவர்கள், நீ இப்படி செய்வாய் என எதிர்பார்க்கவில்லை என ருத்ரனிடம் வருத்தமாக பேசிக் கொண்டிருந்தனர். இவர்களுடன் பேசுவதால் அத்தைக்கும் மனைவிக்கும் நடக்கும் தகராறை ருத்ரனால் கவனிக்க முடியவில்லை.
மகன் பக்கத்தில் நிற்பதா மருமகளின் பக்கத்தில் நிற்பதா என வள்ளி பார்த்துக் கொண்டிருக்க, சதாசிவம் பசியின் காரணமாக இருக்கையில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டார். பாட்டியும் தரையில் படுத்து விட்டார். அதைப் பார்த்து கவலையானார் வள்ளி.
ஒரு கட்டத்தில் சகுந்தலையின் ஒப்பாரி அனைவரின் கவனத்தையும் அவரிடமே கொண்டு சென்றது. எல்லாம் ருத்ரனை மோசமாக சாபமிட்டு வந்த வார்த்தைகள். வள்ளிக்கே அழுகை வந்து விட்டது.
“வாயை மூடுறீங்களா இல்லையா இப்போ?” வீடு அதிர கத்தினாள் சிவா.
“அடி பட்டு கெடக்குறவன் என் மருமவன் டி, ஏதும் ஆகியிருந்தா எம்பொண்ணு கதி என்னாகியிருக்கும்?” என சிவாவிடம் சீறினார் சகுந்தலை.
கோவமாக கணவனுக்கு முன் போய் நின்ற சிவா, “மாமாகிட்ட தனியா போய் பேசணும்ன்னு சொன்னீங்கல்ல? அதுக்கெல்லாம் அவசியம் இல்லை, ஒழுங்கா இப்பவே இங்கேயே என்ன காரணத்துக்காக அவரை அடிச்சீங்கன்னு சொல்றீங்க!” என்றாள்.
“ உன்னை மேல போக சொல்லி முன்னாடியே சொன்னேன்!” என மனைவியிடம் அழுத்தமாக சொன்னான் ருத்ரன்.
“போக முடியாதுங்க” என அவள் சீற, கோவமாக எழுந்தவன் அவளை இழுத்துக் கொண்டு சென்றான். படிகளில் ஏறும் போது கம்பிகளை பிடித்துக் கொண்டவள் வர முடியாது என முரண்டு பிடித்தாள்.
“சொன்னா கேளு புள்ள, இங்குட்டு நான் பேசிக்குவேன், உன்னைய யாரும் ஏதும் சொல்லிப்புட்டா தாங்க மாட்ட” என்றான் ருத்ரன்.
“எப்படி சாபம் கொடுக்கிறாங்க உங்க அத்தை, நமக்கு பொறக்காத பசங்களுக்கு எல்லாம் சாபம் விடுறாங்க” கண்கள் கலங்க சொன்னவள், “மனுஷியா அவங்க? யாரும் அவங்கள கண்டிக்கல, இவங்க மத்தியில உங்களை விட்டுட்டு போவ மாட்டேன் நான்” என்றாள்.
“எனக்கு நீ காவலாடி? சொல் பேச்சு கேளு, தலையிட்டுக்காம மேல போ, இல்லைன்னா என்ன பண்ற… உன் அப்பாரை ஒரு எட்டு பார்த்திட்டு வா” என்றான்.
அவர்களிடம் வந்த வள்ளி, “அவளை விடுறா, பெரியவக ரெண்டு பெரும் பசியில கெண்டை பெரட்டி போய் கெடக்காக, மொத சாப்பாட்டுக்கு வழி பண்ணு” என்றார்.
அவனிடமிருந்து கையை உதறிக் கொண்ட சிவா, “அப்பாக்கு சொல்லட்டுமா அத்தை?” எனக் கேட்டாள்.
ஆமாம் அப்படியே செய் என வள்ளி சொல்ல, வேகமாக அப்பாவுக்கு அழைத்த சிவா, பத்து பேருக்கு சாப்பாடு வேண்டும் என்றாள்.
நல்ல வேளையாக சாப்பாடு முடிந்திருக்கவில்லை, ஆனால் சாம்பார் ரசம் எல்லாம் முடிந்து விட்டது, ஐந்து பேர் சாப்பிட கூடிய அளவில் மட்டுமே சாதம், காரக் குழம்பு இருப்பதாக சொன்னார். இருப்பதை உடனே எடுத்து வரும்படி சொன்னாள் சிவா.
இந்த நேரம் மாமனார் இங்கு வருவதை விரும்பாத ருத்ரன், தானே போய் வாங்கி வருவதாக சொல்லி புறப்பட்டான். நானும் உடன் வருகிறேன் என சிவாவும் அவனுடன் கிளம்பினாள்.
தனியாக மாமனார் வீடு செல்ல ருத்ரனுக்கு சங்கடமாக இருந்ததால் மனைவி வருவதை தடுக்கவில்லை.
“சத்தம் போட்டு உங்களுக்கு முடியாம போனா எங்குட்டு தூக்கிட்டு ஓடுறது, செத்த அமைதியா இருந்த அத்தாச்சி!” என தாஜாவாக சொல்லி சகுந்தலையை சற்று நேரம் வாயை மூட வைத்தார் கோதை.
உத்தமனுக்கும் சுடருக்கும் எதற்கு சாப்பாடு எடுக்கிறார்கள் என பெரும் குழப்பம். புல்லட்டில் மகளும் மருமகனும் இறங்க, வாங்க என சொல்லி, “இதோ ஆயிட்டே இருக்கு தம்பி” என்றார் உத்தமன்.
சுடரோ, “என்னடி விஷயம்?” என மகளிடம் கேட்டே விட்டார்.
ருத்ரன் மனைவியை ஒரு பார்வை பார்த்து வைத்தான். அனைவரும் விஷேஷ வீட்டுக்கு சென்று விட்டதால் வீட்டில் சமைக்கவில்லை, விஷேஷ வீட்டிலும் யாரும் சரியாக சாப்பிடவில்லையாம் என சமாளித்தாள் சிவா.
நம்பாத பார்வை பார்த்தார் சுடர். ருத்ரன் இருக்க, அதற்கு மேல் அவரால் விசாரிக்க முடியவில்லை.
ஓய்வறை உபயோகிக்க என பின்னால் சென்றாள் சிவா. சமைக்கும் பெண் முன்னரே சென்று விட்டதால், பொரியல் குறைவாக இருப்பதாக சொல்லி, சுடரே அப்பளம் பொரித்தார். வேண்டாம் என ருத்ரன் மறுத்தாலும் அவர் கேட்கவில்லை.
இவள் எங்கு சென்றாள் என நினைத்துக்கொண்டே மனைவி சென்ற திசை பக்கம் ருத்ரனும் சென்றான். ஓய்வறை விட்டு வெளி வந்த சிவா, அங்கே வைத்து கணவனை பிடித்துக் கொண்டாள்.