“எள்ளு வயல்ல பூச்சி மருந்து அதிகமா அடிச்சதுல எல்லாம் பாழா போச்சு, அண்ணன் முன்னாடியே அளவெல்லாம் சொல்லுச்சு, அது பேச்சை கேட்காத நான்தான் என் இஷ்டத்துக்கு பண்ணிப்புட்டேன், அதான் அடிச்சிட்டாரு” என வேகமாக யோசித்து பொய் ஒன்றை அவிழ்த்து விட்டான் கலை.
கலையை ஏளனமாக பார்த்தான் ருத்ரன். மறுத்து சொல்லி விடாதே என அவனிடம் கண்களால் கெஞ்சினான் கலை.
மகன் சொன்ன செய்தி நேற்றே தனராஜனுக்கு தெரியும், அவர் கூட என்னிடம் ஆலோசிக்காமல் ஏன் செய்தாய்? என மகனை கண்டித்தார்தான். நட்டம் என்றால் கூட என் வயல் அது, இவனுக்கு என்ன வந்தது என ருத்ரனை இன்னும் ஆத்திரத்தோடு பார்த்தார் தனராஜன்.
“ஏன்டா ஏன்? அதுக்கா இப்படி போட்டு அடிப்ப அவனை?” மகனிடம் சின்ன குரலில் கேட்டார் வள்ளி.
அம்மாவிடமும் ருத்ரன் அமைதி காக்க, ஆவேசத்தோடு ஹாலுக்கு வந்து விட்டாள் பிறை.
அதெப்படி என் கணவனை அடிப்பீர்கள்? அவர் என்ன சின்ன குழந்தையா, இப்போது அவர் குடும்பஸ்தன், எதையோ மனதில் வைத்துக்கொண்டு இப்படி அடித்து பழி வாங்கி விட்டீர்கள் என்றெல்லாம் பேசி விட்டாள் பிறை.
“போதும் நிறுத்துடி, நாலு வருஷத்துக்கு முன்ன ஸ்கூல் போயிட்டிருந்தவ எம் பையனை கேள்வி கேப்பியா டி?” என ஆதங்கத்தோடு பிறையை கேட்டார் வள்ளி.
“அவ புருஷன் அடி வாங்கி கெடக்கும் போது கேட்கத்தான் செய்வா” என அண்ணியிடம் சீறினார் தனராஜன்.
“சித்தப்பா!” தன் அம்மாவை அவர் கடிவது பொறுக்காமல் அழைத்தான் ருத்ரன்.
“அப்படி கூப்பிடாத டா, அண்ணன் மவனா இருந்தாலும் உன்னை அப்படியா பார்த்தேன்? என் தம்பி தனியா போனப்போ உங்களை விடாம கூடவே நின்னவன் நானு, அதுக்கு நீ செய்ற கைமாறா இது?” என குமுறினார் தனராஜன்.
தனிமையில் இவரிடம் மட்டும் உண்மையை சொல்லத்தான் வேண்டும், இல்லையென்றால் கலை நாசமாகி போவான் என்பதெல்லாம் ருத்ரனுக்கு தெரியும். ஆனால் இப்போது அவனுக்கு அதை சொல்ல இயலா நிலையே.
பாட்டிக்கு ஏதும் சரிவர விளங்கவில்லை. வேகமாக சென்று கணவரை அழைத்து வந்து விட்டார்.
பிறையும் தனராஜனும் மாற்றி மாற்றி ருத்ரனை கேள்வி கேட்டு திணறடித்துக் கொண்டிருந்தனர். பெரியவரால் கூட அவர்களை அடக்க முடியவில்லை. செங்கமலத்துக்கு கூட வளர்ந்த பிள்ளையை இப்படி அடித்து விட்டானே என ஆதங்கம்.
மற்றவர்கள் ருத்ரனை பேச பேச எங்கே உண்மையை சொல்லி விடுவானோ என கலங்கிப் போன கலை மெல்ல எழுந்து ஹால் வந்தான். அண்ணன் மீது தவறில்லை, அண்ணன் கண்டிக்கத்தான் செய்தார், நான்தான் அலட்சியமாக பேசி விட்டேன், அதுதான் கோவப்பட்டு அடித்து விட்டார் என அண்னனுக்காக பரிந்து பேசினான்.
ருத்ரன் தன் கைகளின் முஷ்டியை மடக்கி, இன்னும் அவனை அடித்து விடாமல் தன் பொறுமையை இழுத்துப் பிடித்தான்.
நீங்கள் உங்கள் அண்ணனை பார்க்கலாம், ஆனால் என் கணவனுக்கு என மரியாதை உள்ளது, நான் கேட்பேன் என நின்றாள் பிறை.
“அண்ணனை யாரும் பேசாதீய, இத்தோட விடுங்க” என கையெடுத்து கும்பிட்டான் கலை.
“அதெப்படி விட முடியும், ஒன்னா ஒரே வீட்ல இருக்கிறதால இவருக்கு எல்லாரும் அடிமைன்னு நெனச்சிட்டார் போல. இந்த வூடும் இவருக்கு சேர போறதுதானே, என்னத்துக்கு இனியும் நாம இங்குட்டு இருக்கணும், இன்னிக்கே முடிவு தெரிஞ்சாகனும், தப்பு பண்ணிட்டு எப்படி திண்ணக்கமா உட்கார்ந்திருக்காரு பாருங்க, உங்களை அடிச்சதுக்கு இவரு மன்னிப்பு கேட்கணும்” என்றாள் பிறை.
கலை தன் மனைவியிடம் ஏதேதோ சொல்லி சமாதானம் செய்ய, அவளோ கணவனின் அடிபட்ட இடங்களை சுட்டிக் காட்டி கண்ணீர் விட்டாள்.
மருமகள் பேசிய எதையும் தடுத்து நிறுத்தாமல் பேசவிட்டிருந்த தனராஜனிடம், “என்னடா பார்த்திட்டு நிக்கிற? நீ இருக்க அவ பேசலாமா?” என ஆதங்கப் பட்டார் தாத்தா.
கணவரின் பக்கத்தில் நின்றிருந்ததால் பாட்டிக்கு இது காதில் கேட்டு விட்டது.
“புருஷனுக்கு ஒன்னுன்னா ஒரு பொண்டாட்டி எப்படி வேடிக்கை பார்ப்பாங்கிறேன்?” என்றார் பாட்டி.
“கலை அவனோடத அவனே பார்க்க ஆரம்பிக்கவும் உங்க பெரிய பேரனால தாங்கிக்க முடியலை போல” என அப்பாவிடம் சொன்னார் தனராஜன்.
“அடேய் என்னத்தடா பேசுற?” என பெரியவர் தன் மகனை அதட்டினார். ஆனால் அவருக்கும் கலையை ருத்ரன் அடித்து விட்டதில் ஏற்பு இல்லை.
பிறை தன் அப்பாவுக்கு அழைத்து விவரம் பகிர்ந்து, “இங்க யாரும் அடிச்சி பேச மாட்டேங்குறாவோ ப்பா, வந்து என்னன்னு கேளுங்க ப்பா, உடனே வாங்க, அம்மா அண்ணன் ரெண்டு பேரையும் அழைச்சிட்டு வாங்க” என சொல்லிக் கொண்டிருந்தாள்.
யாரும் எதிர்பார்க்காத வண்ணம் கோதைக்கு அழைத்து விட்டார் செங்கமலம். விவரம் சொல்லி அவரது கணவரோடு வீட்டுக்கு வரும்படி கேட்டுக் கொண்டார். வள்ளிக்கு மனம் விட்டு போனது போலாகிற்று.
எப்போது ருத்ரன் வெடித்து எழுவானோ என நினைத்து கலையரசனுக்கு வயிற்றை கலக்குவது போலிருந்தது. நடுங்கம் உள்ளத்தோடு அடிக்கடி ருத்ரனையே பார்த்த படி இருந்தான்.
“அண்ணனை யாராச்சும் ஏதாவது பேசினா பால்டாயில குடிச்சிட்டு படுத்திடுவேன்” என சத்தமிட்டான் கலை.
“இப்ப உனக்கு நான் போடுவேன் டா ரெண்டு, போடா உள்ளுக்கு” என மகனை சினந்தார் தனராஜன்.
இடுக்கு கிடைத்தால் போதும் தப்பித்து எங்கேயாவது ஓடிச் சென்றிடுவான் கலை. அவனது அப்பாவும் மனைவியுமே அதற்கு வாய்ப்பளிக்காமல் அவனை நிறுத்தி வைத்திருந்தனர்.
நேரம் இரண்டை தாண்டி விட்ட பிறகும் கணவன் தன்னை அழைக்க வராத காரணத்தால் அவனுக்கு அழைத்து விட்டாள் சிவா. கைப்பேசியை எடுத்து பார்த்த ருத்ரன் தன் அம்மாவிடம் கொடுத்து, “அவளை பஸ்ல வர சொல்லுமா” என்றான்.
இந்த நேரம் மருமகள் இங்கு இருந்தால் தேவலாம் எனதான் வள்ளிக்கு தோன்றியது. கைப்பேசியை எடுத்துக் கொண்டு தள்ளி சென்றவர், மருமகளிடம் சுருக்கமாக விவரத்தை சொன்னார்.
சிவாவுக்கு ஒரே குழப்பம். நேற்று இரவிலும் சரி, காலையிலும் சரி ருத்ரன் இயல்பாகத்தான் இருந்தான். எள் வயலில் நடந்த விஷயம் அவருக்கும் முன்னரே தெரிந்திருக்க கூடும், அதற்கு போயா சாவகாசமாக இப்போது அடித்து தன் கோவத்தை காட்டுகிறார்? இப்போது நடந்ததை விட அதிகப்படியாக கூட கடந்த காலத்தில் கலையால் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக அவளிடம் சொல்லியிருக்கிறான் ருத்ரன்.
“அடிச்சதுக்கு காரணம் என்னன்னு உங்க மகன் ஏதும் சொன்னாங்களா அத்தை?” என விசாரித்தாள் சிவா.
“எங்குட்டு ஆயி, உன் புருஷன் வாயே தொறக்கல, கலைதான் காரணம் சொன்னான். அண்ணனை விடுங்கன்னும் சொல்றான், அவனோட அப்பாரும் பொண்டாட்டியும்தான் பெருசாக்க பார்க்கிறாங்க, இந்த செங்கமலம் கூட சேகர் தம்பிய வர சொல்லிருக்கா. எல்லாரும் சேர்ந்து எம்புள்ளைய குத்தவாளி ஆக்க பார்க்கிறாவோ டி. எம்புள்ள கல்லு கணக்கா உட்கார்ந்து கெடக்கான். அவன் பக்கம் நியாயம்னு தெரிஞ்சா ஊர் உலகமே வந்தாலும் அஞ்ச மாட்டேன், ஒரு கை பார்த்துப்புடுவேன். இப்ப என்ன செய்யன்னே தெரியலை, பிறையோட அம்மாக்காரி ஒருத்தி போதும் என் மவன் மனசை நோகாடிக்க” என புலம்பினார் வள்ளி.
“யார் வேணும்னாலும் வரட்டும் அத்தை, நீங்க ஏன் பயப்படுறீங்க? உங்க புள்ள கோவக்காரர்தான், அதுக்காக நியாயம் தெரியாதவர் இல்லை, பிறையோட வீட்டுக்காரர் பேசுறதே எங்கேயோ இடிக்கிற மாதிரி இல்லத்தை? உங்க புள்ள யாரை காவந்து பண்ண அவப்பேர் வாங்கிட்டு உட்கார்ந்து கெடக்காங்களாம்? நீங்க வைங்க ஃபோனை, நான் வந்து பேசிக்கிறேன்” என சிவா சொல்லவும், வள்ளிக்கு யானை பலம் கிடைத்து விட்டது.
பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது என நினைத்தவள் அந்த தெரு முனை வரை நடந்தே வந்து விட்டாள். வாடகை பாத்திரங்கள் ஏற்றிக் கொண்டு ட்ரக் ஒன்று சென்றது. டிரைவர் இருக்கைக்கு பக்கத்தில் அவள் ஊர் ஆள்தான். வழி மறித்து நிறுத்தி விட்டாள்.
“அவங்க வேற வேலையா இருக்காங்க, அதான் என்னை கூப்பிட வர முடியலை, என்னைய ஊருல விட்ருங்க அண்ணன்” எனக் கேட்டுக் கொண்டாள்.
“அதுக்கென்ன ஆயி, நாளைக்கு பொண்ணுக்கு சடங்குல்ல, அதுக்கு சமைக்க பாத்திரம் பண்டம் எடுக்க வந்தேன், நீ முன்ன வந்து உட்காரு ஆயி, நான் பின்னால ஏறிக்கிறேன்” என்றவர் பின்னால் மாறிக் கொண்டார்.
வண்டி நகரும் வேகம் சிவாவின் பொறுமையை சோதித்தது, மற்றவர்கள் வந்து விடும் முன் கணவனிடம் தான் சென்று விட வேண்டும் என நினைத்தாள். ருத்ரன் பச்சை குழந்தை இல்லைதான், ஆனால் இவளுக்கு என்னவோ யாரும் தன் கணவனை ஒரு சொல் சொல்லி விடக்கூடாது, அவருடன் நான் இருக்க வேண்டும் என பரிதவிப்பு.
யார் வரப் போவதை நினைத்தும் ருத்ரனுக்கு கவலை இல்லை. அனைவரின் ஆழ் மனதிலும் என்னென்ன எண்ணங்கள் இருக்கின்றன என தெரிய வந்ததில் மனதில் விரக்தி பரவியிருந்தது.
யார் என்ன கேட்டாலும் கலை பற்றிய உண்மையை அனைவர் மத்தியிலும் அம்பல படுத்த போவதில்லை என தீர்மானித்து விட்டான்.
யாரால் என்னை என்ன செய்ய முடியும், உங்கள் கேள்விகளும் விசாரணைகளும் உங்களோடு, என் மனதிற்கு நான் நியாயமானவன், வாருங்கள் பார்த்து விடுகிறேன் என வீம்போடு நடு வீட்டிலேயே சட்டமாக அமர்ந்து விட்டான்.