மொட்டவிழ்ந்த தேனரும்பே -16

அத்தியாயம் -16

கலையரசன் வீட்டில்தான் இருக்கிறான் என தெரிந்து கொண்டு கோவமாக வீடு வந்து சேர்ந்தான் ருத்ரன்.  

நேரம் நண்பகல் பனிரெண்டு, சிவரஞ்சனி வேலைக்கு சென்றிருக்க, பாட்டி அவரது அறையில் உறங்கியிருந்தார். தாத்தா மாட்டுக் கொட்டகையில்  இருந்தார்.  சொந்தத்தில் பக்கத்து ஊரில் விஷேஷம் ஒன்று, அதில் பங்கேற்க என மற்றவர்கள் சென்றிருந்தனர். 

கலையரசன் டிவியில் ஏதோ நிகழ்ச்சி பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான். உள்ளே வந்த ருத்ரன் அவன் கையிலிருந்த ரிமோட்டை பறித்து தூர விட்டெறிந்தான். ருத்ரனின் உடல் மொழியும் கண்களும் கலையை பதற்றம் கொள்ள செய்ய,  பயத்தோடு எழுந்து நின்றான். 

“இந்த வூட்டுல பொறந்திட்டு  எங்கேருந்துடா உனக்கு இப்படி கெட்ட புத்தி வந்து சேர்ந்துச்சு?” எனக் கோவப்பட்டான் ருத்ரன். 

“என்ன அண்ணா?” எச்சில் கூட்டி விழுங்கினான் கலை. 

அவன் செய்த செயலை வாய் விட்டு கேட்கவே ருத்ரனுக்கு கூசியது. அவனது வயலில் வேலைக்கு வரும் வயதுப் பெண் ஒருத்தியிடம் அதிகப் படியாக பேசி பழகியிருக்கிறான். அந்த பெண்ணின் ஏழ்மையை  பயன்படுத்திக் கொண்டு, உன்னை உன் வீட்டை கவனித்துக் கொள்கிறேன் என ஆசை வார்த்தைகள் சொல்லியிருக்கிறான். அந்தப் பெண்ணுக்கு பத்தொன்பது வயதுதான் இருக்கும், இவனுடன் அவளும் பேசிக் கொண்டிருக்கிறாள். 

நன்றாக பேசி பழகியவன் நேற்றைய தினம் ‘நாளை இரவு தோப்பு வீட்டிற்கு வா’ என அவளை அழைத்திருக்கிறான். அந்தப் பெண்ணும் வர தயாராக இருந்திருக்கிறாள். 

நேற்று இரவு அவள் இவனுடன் கைப்பேசியில் பேசிக் கொண்டிருக்கும் நேரம் அவளது தாய் பார்த்து விட்டார். ஏது இந்தக் கைப்பேசி எனக் கேட்டவருக்கு, பதில் சொல்ல தெரியாமல் விழித்திருக்கிறாள். 

சந்தேகம் கொண்ட அவளின் அம்மா குடைந்து குடைந்து கேட்கவும் ‘வசதி இல்லாமல் என்னை யாருக்கு கல்யாணம் செய்து கொடுப்பாய், இவர் நம் வறுமையை போக்கி விடுவார், என்னை அப்படியே விடு’ என அழுது கொண்டே சொல்லியிருக்கிறாள். 

தகப்பன் இல்லாத பெண், படிப்பும் இல்லை, அம்மாவுக்கும் உடல்நல சீர்கேடு, அனுபவ அறிவு இல்லாமல், எடுத்து சொல்ல ஆளும் இல்லாமல் வாழும் வகை தெரியாது தவறான பாதையில் செல்ல இருந்திருக்கிறாள். 

ஒரே மகளை எப்படியாவது கரை சேர்த்து விட வேண்டும் என்பதற்காக மட்டுமே உயிரை இழுத்து பிடித்துக்கொண்டு வாழும் அந்த தாய்க்கு மனம் ஆறவே இல்லை.  அவளின் செயல் தீராத அவமானத்தையும் அவச் சொல்லையும்  மட்டுமே தேடி தருமே தவிர, நிம்மதியாக வாழ விடாது என்பதை எடுத்து சொல்லியிருக்கிறார். என் வார்த்தையை மீறி அவனோடு பழகினால், நானே உன்னை குழியில் புதைத்து விடுவேன் என மிரட்டியிருக்கிறார். 

அந்தப் பெண்ணும் புரிந்து கொண்டாள். ஆனால் கலையரசன் மீண்டும் பழக தன்னை கட்டாயப் படுத்துவானோ, கைப்பேசியில் அவனுடன் பேசியதை வைத்து மிரட்டுவானோ என்றெல்லாம் பயந்திருக்கிறாள்.  மீண்டும் மகளின் மனதை கலை மாற்றுவனோ என அந்த அம்மாவுக்கும் பயம். அவரது அக்காவின் மகனை துணைக்கு அழைத்துக் கொண்டு வந்து ருத்ரனை பார்த்து விஷயத்தை சொல்லி அழுது விட்டார். 

கலையின் எண்ணிலிருந்து அவளுக்கு அழைப்புகள் வந்திருப்பதும் மணிக் கணக்காக அவளுடன் பேசியதற்குமான ஆதாரத்தை அந்தப் பெண்ணின் கைப்பேசி வாயிலாக காண்பித்தான் உடன் வந்திருந்த பையன். 

வாட்ஸ் ஆப்’பில் கூட  வாய்ஸ் நோட் வழியாக நிறைய செய்திகள் அனுப்பி வைத்திருக்கிறான். அந்த கைப்பேசியே கலை முன்னர் உபயோகித்து வந்ததுதான்.

ருத்ரனால் ஜீரணிக்கவே முடியவில்லை, இனி உங்கள் மகளை கலையிடம் வேலைக்கு அனுப்ப வேண்டாம், நான் சொல்லும் வரை எங்கேயுமே வேலைக்கு அனுப்ப வேண்டாம், ஏதாவது உதவி செய்ய பார்க்கிறேன் என சமாதானம் சொல்லி,  இனி கலையரசனால் எந்த தொல்லையும் வராது என்று உறுதியும் சொன்னான். 

அந்த கைப்பேசி அவர்களிடத்தில் இருப்பது ஆபத்து என்றே ருத்ரனுக்கு தோன்றியது. அம்மாவும் பெண்ணும் விவரம் இல்லாதவர்கள்,  உடன் வந்த பையன் எப்படி என ருத்ரனுக்கு தெரியாது. ஆகவே கைப்பேசியை தன்னிடம் தர சொல்லி கேட்டான். அந்த பையன் முடியாது என மறுக்க, அந்த அம்மாவும்  தயங்கினார். 

“கூட பொறந்தவ ஒருத்தி, கூட பொறக்காதவக மூனுன்னு மொத்தம் நாலு தங்கச்சிங்கம்மா எனக்கு, எந்த காலத்திலேயும் உங்க பொண்ணோட வாழ்க்கைக்கு இடையூறு வர நான் காரணமா இருக்க மாட்டேன்” என உறுதி சொல்லித்தான் கைப்பேசியை கைப்பற்றினான். 

 அந்தக் கைப்பேசியை கலையிடம் எடுத்து காட்டிய ருத்ரன், “இப்ப தெரியுதாடா என்னன்னு?” என இரைந்தான். 

வெட்கியவனாக ருத்ரனை பாராமல் குனிந்து கொண்டான் கலை. இது பொய்யாக இருக்க ஒரு சதவீத வாய்ப்பு இருக்குமோ என ருத்ரனின் மனதில் நப்பாசை இருந்தது, உண்மை என்பதை ஊர்ஜிதம் செய்து விட்டான் கலை. 

கலையின் கன்னத்தில் விட்டான் ஒரு அறை.  சம்மட்டியால் தாக்கப் பட்டது போல உணர்ந்த கலை எரிந்த கன்னத்தை பிடித்துக் கொண்டான்,  கண்களும் கலங்கி விட்டன. 

“ஈனப் பிறவி செய்ற வேலைடா இது” என அருவருப்பாக சொன்னான் ருத்ரன். 

“தெரியாம பண்ணிட்டேன் ண்ணா, அப்பா பிறைக்கெல்லாம் தெரிஞ்சா அவ்ளோதான், யாருகிட்டேயும் சொல்லிப்புடாத ண்ணா” என கெஞ்சினான் கலை. 

இப்போதும் செய்த தவறை உணராமல் யாருக்கும் தெரிந்து விடக்கூடாது என்பதில் நிற்கிறானே என ருத்ரனுக்கு நல்ல ஆத்திரம். அதை தூண்டி விடுவது போல, கலையும் “நான் கட்டாய படுத்தவெல்லாம் இல்லை, அவளுக்கும் இஷ்டம்தான்” என்றானே பார்க்கலாம். 

ருத்ரன் கண் மண் தெரியாமல் கலையை போட்டு விளாசி  எடுக்க, விஷேஷத்திற்கு போயிருந்தவர்கள் வந்து விட்டனர். எழுந்து வந்த மங்களத்தம்மாளுக்கும் ஒன்றும் புரியவில்லை. 

 சில நிமிடங்கள் அங்கே பரபரப்பு. வள்ளிதான் தன் மகனை விலக்கி விட்டார். 

கலையை அவனது அம்மாவும் மனைவியும் அறைக்குள் அழைத்து சென்றனர். ஒழுக்கம் தவறிய தம்பியை நையப் புடைத்திருந்தான் ருத்ரன்.  

மகன் ஏதாவது எடக்கு மடக்காக செய்திருக்கலாம், அதற்கென அடித்து விடுவானா என கோவத்தோடு ருத்ரனை பார்த்தார் தனராஜன். 

எதற்காக இப்படி அடித்தாய் என பாட்டிதான் பேரனிடம் கேள்வி எழுப்பினார். அனைவரும் ருத்ரனின் பதிலுக்காக காத்திருந்தனர்.

எங்கே உண்மை வெளியாகி விடுமோ என பயந்து விட்டான் கலையரசன். குடும்ப கஷ்டம் ஏதும் தெரியாமல் வளர்ந்து விட்டவனுக்கு எப்போதுமே உடம்பு வளையாது. சுகவாசி என்றுதான் சொல்ல வேண்டும். தனக்கென மட்டுமே யோசிப்பவன். அதனால்தான் அண்ணனுக்கு பார்த்த பெண் என்றும் பாராமல் பிறையை திருமணம் செய்து கொண்டான். 

அவன் ஆசையாக கட்டிக்கொண்ட மனைவி அவனை படுக்கையிலிருந்து தள்ளி வைத்து மாதங்கள் ஆகி விட்டன. அதற்கான காரணம் அவனுக்கே தெரியும், அதை சரி செய்து கொள்ள முயலாமல் தன் இளமையின் ஆசைகளுக்கு வேறு விதமாக வடிகால் தேட துணிந்து விட்டான். 

பெண்கள் என்றாலே வழிய வழிய பேசும் ரகம்தான் கலை, சம்பளம் தரும் முதலாளி கல கலத்து பேசவும் சின்ன பெண் ஆர்வமாக பார்த்திருக்க, கண்டு கொண்டவன் அவளை தன் சாதுரியமான பேச்சால் எளிதாக வளைத்து விட்டான். 

 அந்தப் பெண் தங்கள் பழக்கத்தை வெளியில் சொல்ல மாட்டாள் என மிகவும் நம்பியிருந்தான். அடிக்கடி  புடவை, கைப்பை, கொலுசு என பரிசுகளும் பணமும் கொடுத்திருந்தான். 

பேச்சளவில் இருந்ததை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தவும் துணிந்து விட்டான். கொஞ்ச காலம் போகட்டும், மெதுவாக அவளின் ஜாகையை வேறு ஊருக்கு மாற்றி விடலாம், வீட்டினருக்கு தெரியாமல்  சாமர்த்தியமாக இருந்து கொள்ளலாம் எனவும் திட்டம் போட்டிருந்தான். 

இத்தனை வேகத்தில் தன்  குட்டு வெளிப்படும் என துளியும் அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. 

அனைவரின் முன்னிலையிலும் உண்மையை போட்டு உடைக்க ருத்ரனுக்கு அரை நிமிடம் போதும். ஆனால் அதனால் அனர்த்தங்கள் அல்லவா விளையும்?

இதுவரை அந்த பெண்ணிடம் வெறும் பேச்சு வார்த்தை பழக்கம் என்ற அளவில்தான் இருக்கிறான் கலை. அந்தப் பெண்ணும் விவரம் இல்லாமல் இப்படி சிக்கி விட்டாள். இவ்விஷயம்  வெளிப்பட்டால் அந்தப் பெண்ணின் வாழ்க்கையும் பாதிக்க பட்டு விடும். பிறையும் இத்தோடு கணவனை தலை முழுகி விட்டு சென்று விடுவாள். 

தவறு கலையின் பக்கம் இருக்க, கணவன் மனைவியை பிரித்து விட்டாய் என உறவுகள் ருத்ரனையே கை காட்டி பேசினாலும் ஆச்சர்யப் படுவதற்கு இல்லை. 

இந்த விஷயத்தை வீட்டில் வைத்தே இவனிடம் விசாரித்திருக்க கூடாது என இப்போதுதான் ருத்ரனுக்கு தோன்றியது. 

“கேட்கிறேன்லடா, நீ அடிச்சதே பெரிய தப்பு, காரணம்  சொல்லக் கூட வலிக்குதா உனக்கு? அப்புடி என்னடா அவன் மேல அம்புட்டு வெஞ்சினம் உனக்கு? உன்னைய அவன் திருப்பி அடிச்சிருந்தா உன் மருவாதிதான்  கொறைஞ்சு போயிருக்கும், பாவப்பட்டவன் அடி வாங்கி கெடக்கான், நீ வாயே தொறக்க மாட்டேங்கிறியே, என்ன சங்கதிங்கிறேன்?” எனக் கேட்டார் பாட்டி. 

பாட்டியை முறைத்துப் பார்த்த ருத்ரன் ஏதும் சொல்லாமல் திரும்பிக் கொண்டான்.