அத்தியாயம் 19

தன்னுடைய வார்த்தையை மதிக்காமல் கணவன் சென்றதும் மனமெல்லாம் ஏமாற்றம் சூழ அப்படியே அமர்ந்துவிட்டாள் நந்தினி. எல்லாம் சிறிது நேரம் தான். நடந்ததை நினைத்து அதற்கு மேலும் கழிவிரக்கத்தில் தன்னை கரைத்துக்கொள்ள விரும்பாதவளாக அலுவலக வாகனத்தை அழைத்தவள், புடவையிலிருந்து வெள்ளை டிசர்ட், காக்கி பேண்டுக்கு மாறிக்கொண்டு வெளியே கிளம்பிவிட்டாள்.

அப்படியே நகரைச் சுற்றி ரோந்துப் பணியில் ஈடுபட்டவளுக்கு மற்றவை எல்லாம் மறந்தே போயிற்று. இனி வீட்டுக்கு திரும்பலாம் என்ற எண்ணம் வரும் போது அம்மாவின் ஞாபகம் வந்தது, கூடவே அவரை உடனே பார்க்க வேண்டும் என்றும் தோன்றியது.

அந்நேரத்தில் கடையை பூட்டிக்கொண்டு அம்மா வீட்டுக்கு கிளம்பியிருப்பார் என்பது தெரிந்திருந்தபடியால் வீட்டுக்கே வந்துவிட்டாள்.

கண்ணனுக்கும் நந்தினிக்குமிடையே ராஜவேலுவைக் கொண்டு ஏதோ பிரச்சினை என்ற அளவில் புரிந்து கொண்டிருந்த அந்த வீட்டு பெரியவர்களோ, அலுவலக வாகனத்திலிருந்து இறங்கிய நந்தினியை யோசனையாகத் தான் பார்த்தார்கள்.

எல்லாம் சிறிது நேரம் தான். தங்களுடைய யோசனையை சற்றே தள்ளி வைத்துவிட்டு, வீட்டுக்கு வந்த பெண்ணை வரவேற்கும் விதமாக எல்லோரும் வாசலுக்கு வேகமாக விரைய, அவர்களோடு கண்ணனும் இணைந்து கொண்டான்.

“வா ம்மா நந்தினி.” ஆளுக்கு முதலாக லீலாவதி வரவேற்பில் இறங்க, புன்னகையை பதிலாக்கியவள், கணவனை அங்கே எதிர்பார்த்திருக்கவில்லை.

அவளுக்கு தான் கணவன் எங்கே சென்றான் என்று தெரியுமே. இப்போது இங்கே இருக்கிறான் என்றால், அதுவும் இலகு உடையில் இருக்கிறான் என்றால், போக வேண்டிய இடத்துக்கு போய் விட்டு திரும்பி விட்டவனுக்கு தங்களுடைய வீட்டுக்கு வர மனமில்லை என்று தானே அர்த்தம். அந்த அளவுக்கா என் மீது வெறுப்பு? நொடியில் மனம் கசங்கி போய் விட்டது நந்தினிக்கு.

அடுத்ததாக ஒரு பெருங்குழப்பம் பெண்ணுக்கு. ‘அந்த ஆளுக்கு நடந்ததைப் பற்றி அத்தான் இங்கே சொல்லியிருப்பாரா? மாட்டாரா? சொல்லியிருந்தால் எந்த அளவிற்கு சொல்லியிருப்பார்?’ இதுதான் குழப்பத்திற்கான காரணம்.

எல்லோருடைய முகங்களையும் நோட்டமிட்டவளுக்கு பெரிதாக வித்தியாசம் எதுவும் தோன்றவில்லை. அப்படியென்றால் இதுவரையிலும் எதுவும் சொல்லியிருக்கவில்லை போலும். தானாகவே முடிவெடுத்து கொண்டவளுக்கும் தங்களுக்குள் நடந்ததவற்றை அங்கே அப்போது கடைபரப்பி ஒரு பஞ்சாயத்து நடத்துவதில் விருப்பம் இருக்கவில்லை.

எனவே, “நீங்களும் இங்கதான் இருக்கீங்களா த்தான்?” என்று கணவனைப் பார்த்து அழகாக ஆச்சர்யப்பட்டாள்.

மனைவி வந்து இறங்கிய நேரத்திலிருந்து அவளையே கூர்ந்து பார்த்தபடி இருந்தவனுக்கு அவளுடைய மனதின் ஓசை கேட்டதோ என்னவோ, “ம்ம்… போன வேலை சீக்கிரம் முடிஞ்சிடிச்சி, அதான் வண்டியை அப்பிடியே இந்த பக்கமா விட்டுட்டேன்.” அவளுடைய நாடகத்தில் பாந்தமாகவே இணைந்து கொண்டான் கண்ணன்.

கணவன் மனைவி இருவரும் பேசுவதை பார்த்துக் கொண்டிருந்த மற்றவர்களுக்கு தான் விழிகள் பிதுங்கிப் போனது.

‘கண்ணனுடைய வாயிலிருந்து தங்களுக்குள் மனக்கசப்பு என்று இப்போது வரைக்கும் வார்த்தைகள் எதுவும் வரவே இல்லை. இவ்வளவு ஏன், திலகம் மகளுக்கு அழைத்து கண்டிக்கிறேன் என்று சொன்னபோது கூட, அப்பிடி எல்லாம் எதுவும் இல்லை, வேண்டாம் என்று தான் மறுத்தான்.

அப்படியானால் நான்தான் தவறுதலாக யூகம் செய்து விட்டேனா? செய்ததும் இல்லாமல் மற்ற இருவரிடமும் அப்படித்தான் என்று சொல்லி விட்டேனே.’ குழம்பியேப் போனார் லீலாவதி.

 ஒருவேளை இருவருக்கிடையே பிரச்சனை இருந்தாலும் கூட தங்கள் முன்னர் அதைக் காட்டிக்கொள்ள முயலாததில் பெற்றவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியே.

அதிலும் மகளின் குணத்திற்கு அவளுடைய திருமண வாழ்வை நினைத்து அவ்வப்போது அச்சம் கொள்ளும் திலகத்திற்கு, மகள் சம்சார சாகரத்தில் நீந்துவதற்கான முழுத்தகுதியினையும் பெற்றுவிட்டாள் என்றே தோன்றியது.

ஆக, தங்கள் பிள்ளைகளுக்கிடையே என்ன ஓடுகிறது என்று பெரியவர்கள் யாருமே அதற்குமேல் ஆராய முற்படவில்லை.

“அப்புறம், எஸ்பி மேடத்தோட காத்து என்ன இந்த பக்கமா வீசுது?” கேலியாகவே பேச்சைத் தொடங்கினார் லீலாவதி.

“ஒரு நிமிஷம் இருங்க த்த, ட்ரைவரை வீட்டுக்கு போகச் சொல்லிட்டு வந்துடுறேன்.” என்றவள், தன்னுடைய வாகன ஓட்டுனரிடம், “சார்கூட நான் வீட்டுக்கு போயிடுவேன், நீங்க கிளம்புங்க.” என்று சொல்லி அனுப்பி வைக்க,

‘என்ன… என்ன… சார் கூட வீட்டுக்கு போவீங்களா?! உங்க சார் அங்க வர விருப்பம் இல்லாம தான் இங்க டெண்ட் போட்டுருக்கார் மேடம். அப்புறம் என்ன தைரியத்துல இப்பிடி சொல்லுறீங்க?’ அவள் மனமே அவளைக் கேலி செய்தது.

அதை புறங்கையால் ஒதுக்கியவள், “வேற ஒன்னும் இல்ல த்த, அம்மாவைப் பாக்கணும் போல இருந்தது. அதான் வீட்டுக்கு போற வழியில பாத்துட்டு போகலாம்னு வந்தேன்.” என்ன நினைத்து அங்கே வந்தாளோ அதையே அத்தையின் கேள்விக்கும் பதிலாக்கினாள்.

“அப்போ உங்க அம்மாவை மட்டும் தான் பாக்க வந்த? எங்களை எல்லாம் பாக்க வரல?” கோபம் போல லீலாவதி கண்களை உருட்ட, வினாடி நேரம் என்றாலும் லேசான பதட்டம் நந்தினிக்கு வந்ததென்னவோ நிஜம்.

“ம்மா… மத்தியானம் வரைக்கும் எம்பொண்டாட்டி உங்ககூட கல்யாண வீட்டுல தான் இருந்தா, மறந்து போச்சா?” முதல் ஆளாக மனைவிக்கு பரிந்துகொண்டு வந்தான் கண்ணன்.

“இருந்தா என்னடா? மாமியார் கேக்கும் போது உங்களைத் தான் பாக்க வந்தேன் அத்தைன்னு சொல்லி ஐஸ் வைக்கத் தெரியுதா பாரு உம்பொண்டாட்டிக்கு?” லீலாவதி கேலி செய்ய,

 “என்ன செய்யுறது அத்த, மேனுஃபாக்சரிங் டீஃபால்ட். இந்த ஐஸ் வைக்குறது, காக்கா புடிக்கிறது, ஜால்ரா அடிக்குறது எல்லாம் சுட்டுப் போட்டாலும் எனக்கு வரமாட்டேங்குதே. இனிமேலாவது இதையெல்லாம் கத்துக்க முயற்சி செய்யணும் போல.” சிரித்தபடியே சொன்னாள் நந்தினி.

“வேண்டாம், வேண்டாம். நீ நீயாவே இரு.” வேறு யார்? பேசத்தெரியாமல் பேசி மனிதனை வெறுப்பேற்றுவதையே வேலையாக வைத்திருக்கிறாள் என்று மாலையிலிருந்து மனதிற்குள் மனைவியை அர்ச்சனை செய்து கொண்டிருக்கும் கண்ணன் தான் சொல்லியது.

அவனை ஒரு தினுசாக நந்தினி பார்த்து வைக்க,

“ஆமா செல்லம், மிளகாய்க்கு எப்படி காரம் அழகோ, அப்பிடித்தான் நந்தினிக்கு அவளோட குணம் அழகு. அதை யாருக்காகவும் நீ மாத்திக்க வேண்டாம், அத்தை சும்மாதான் உன்னை கலாய்ச்சேன்.” மருமகளின் கன்னத்தை ஆதுரமாக தடவியபடி சொன்னார் லீலாவதி.

“அப்போ என்னைக் காரமிளகான்னு சொல்லுறீங்க? ம்ம்…” இப்போது கண்களை உருட்டுவது நந்தினியின் முறையாகிப் போனது.

“அவ்வளவு காரம் எல்லாம் இல்ல, சீனிமிளகாய் தான், போதுமா?” சொல்லிவிட்டு சிரித்தார் லீலாவதி.

“இந்த சிரிச்சு மயக்குற வேலை எல்லாம் எங்கிட்ட வேண்டாம் அத்த. என்ன இருந்தாலும் ஒரே செகண்ட்ல மாமியாரா என்னை நடுங்க வச்சீங்க தானே, உங்க பேச்சு கா.” சலுகையான குரலில் சொன்ன நந்தினி,

“எப்பிடி இருக்கீங்க ம்மா?” என்று தாயின் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.

மாமியாரும் மருமகளும் பேசுவதை அமைதியாக பார்த்து ரசித்தபடி நின்றிருந்த திலகம், “எனக்கென்ன நந்து, நான் நல்லா இருக்கேன்.” என்றார் சந்தோஷமாக.

“நல்லா இருக்கணும். இருப்பீங்க.” இந்த வார்த்தைகளைச் சொல்லும் போது நந்தினியின் குரல் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு தடுமாறியது.

அவளுடைய குரல் மாற்றத்தில், என்ன இது என்பதுபோல எல்லோரும் பார்க்க, அதற்குள் தன்னை மீட்டுக் கொண்டவள்,

“இப்பிடி என்னை வேடிக்கை பாத்துட்டே இருக்கப்போறீங்களா அத்த? எனக்கு சாப்பிட எதுவும் தர்ற ஐடியா இல்லையா?” மாமியாரை வம்புக்கு இழுத்தாள்.

“உம்பொண்ணுக்கு உன்னைக் கண்டதும் கொம்பு முளைச்சிடிச்சி திலகம். மாமியார் கிட்ட எப்பிடி பதவிசா நடக்கணும்னு க்ளாஸ் எடுத்து விடு.” மருமகளிடம் வம்பு வளர்ப்பது போதாமல் திலகத்தின் கையையும் பிடித்திழுத்தார் லீலாவதி.

“அம்மாவைக் கண்டதும் மருமகளுக்கு கொம்பு முளைக்கல லீலா, மருமகளைக் கண்டதும் உனக்கு தான் கொம்பு முளைச்சிடிச்சி.” நாதன் மனைவியின் காலைவார,

“இந்த விளையாட்டுக்கு நான் வரல அண்ணி. நீங்களாச்சு உங்க மருமகளாச்சு, இப்போ தோசை மாவு தந்தா போனாப்போகுதுன்னு உங்க மருமகளுக்கு தோசை சுட்டுக் குடுக்குறேன்.” என்றபடியே திலகம் சமையலறைக்குள் நுழைந்தார்.

நாதன் குளித்துவிட்டு வருவதாக செல்ல, மற்றவர்கள் திலகத்திற்கு பின்னால் சமையலறைக்கு சென்றார்கள். அடுப்பில் இருந்த தோசைக்கல்லைப் பார்த்த நந்தினி,

“ஏற்கனவே சாப்பாட்டு கடையை ஓப்பன் செய்துட்டீங்க போலயே அத்த” என்றாள்.

“ம்ம்… உம் புருஷனுக்கு தான் சுட்டுக் குடுத்தேன், எம் பொண்டாட்டிக்கு சமைக்கவே தெரியலைன்னு கண்ணீர் விட்டு கதறுற பிள்ளையைப் பாக்கும்போது பகீர்னு இருந்தது. அதான் நல்லா சாப்பிடட்டும்னு முட்டை தோசை சுட்டுப் போட்டேன்.” மகனை சவாலாகப் பார்த்தபடி லீலாவதி சொல்ல,

“அம்மா… தெய்வமே, போதும்.” பதறிப் போனவனாக அலறினான் கண்ணன்.

“வீட்டுல பெரும்பாலும் சமையல் உங்க பிள்ளை தான், கண்ணீர் விடனும்னா நான் தான் விடணும்.” பதிலுக்கு நந்தினியும் சொல்ல,

“இரண்டு பேரும் சேர்ந்து என்னை பங்கம் பண்ணுனது போதும்.” அம்மா பிடுங்கி வைத்த தன்னுடைய தட்டை கையிலெடுத்தபடியே சொன்னான் கண்ணன்.

“நீ தான் சாப்பிட்டு முடிச்சாச்சே, அப்புறம் என்னடா மறுபடியும்?” லீலாவதி மகனை கேலி செய்ய,

“தனியா சாப்பிட எம்பொண்டாட்டி ஷையா ஃபீல் பண்ணிடக்கூடாதுல்ல, அதான் கம்பெனி குடுக்குறேன்.” என்றபடியே அவளுக்கு அருகே வந்து நின்று கொண்டான்.

“ஹ்ம்ம்… அந்த சாக்குல இன்னும் பத்து தோசை சாப்பிட ஐடியா போட்டுட்ட.” இப்படிச் சொன்னாலும் இன்னொரு தோசை கல்லையும் அடுத்த அடுப்பில் போட்ட லீலாவதி, திலகத்தோடு இணைந்து பிள்ளைகளின் வயிற்றை நிறைக்க ஆரம்பித்தார்.

சூழ்நிலை மிகவும் இதமானதாக இருக்க, அதைக் கெடுத்துக் கொள்ள விரும்பாமல் யாருமே ராஜவேலுவின் பேச்சை அங்கே எடுக்கவில்லை.

கேலியும் கிண்டலுமாக சாப்பிட்டு முடித்தவர்கள் கிளம்ப ஆரம்பிக்க, “இன்னைக்கு இங்க தங்கிட்டு போலாமே.” என்றார் திலகம்.

“வீட்டுக்கு போனா தான் காலையில வேலைக்கு போக ஈஸியா இருக்கும் அத்த.” பதிலுக்கு கண்ணன் சொல்ல, இப்போதும் ஒரு மார்க்கமாகத் தான் அவன் மனைவி அவனைப் பார்த்து வைத்தாள்.

அதற்கு மேல் யாரும் அவர்களைத் தடுக்கவில்லை. வழி அனுப்புவதற்காக எல்லோரும் அவர்கள் கூடவே வர, என்ன நினைத்தாளோ, அப்படியே நின்று தாயைப் திரும்பிப் பார்த்தாள் நந்தினி.

“என்ன டி, வேற எதுவும் வேணுமா?” திலகம் கேட்க, அவருடைய கைகளை பிடித்துக் கொண்டவள்,

“உங்களை ஏமாத்துன ஆளோட வீட்டை அவரோட அண்ணன் ஏமாத்தி வாங்கி வைரவமூர்த்திகிட்ட வித்துட்டாராம். உங்களுக்கு தெரியுமா ம்மா?” உற்சாகத்தை மறைக்காத குரலில் கேட்டாள்.

“ம்ம்… தெரியும்.” சாதாரணமாகவே பதில் வந்தது திலகத்திடமிருந்து.

“என்ன ம்மா…எந்த ரீஆக்ஷனுமே இல்லாம சப்புன்னு பதில் சொல்லிட்டீங்க?” மகள் அலுத்துக் கொள்ள, அவள் தலையை மென்மையாக வருடிய திலகம்,

“நாம வேண்டாம்னு ஒதுக்கி வச்சவங்களைப் பற்றிய விஷயங்கள் நமக்கு செய்தியா மட்டும் தான் இருக்கணும் நந்து. அது நம்மளை சந்தோஷமோ, துக்கமோ படவைக்கிற காரணியா இருக்கக்கூடாது. அம்மா சொல்லுறது உனக்கு புரியும்னு நினைக்கிறேன்.” என்றார் பக்குவப்பட்ட குரலில்.

“நீங்க வேணும்னா அப்படியிருங்கம்மா, என்னால அது முடியாது. நான் இன்னைக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்குறேன்.” அன்னையை லேசாக அணைத்து விடுவித்தபடி முசுட்டுக் குரலில் சொன்னவள்,

“போலாமா த்தான்.” என்று கணவனிடம் கேட்டு வைக்க, எல்லோரும் அவளைக் கவலையாகத் தான் பார்த்தார்கள்.

இத்தனை வருடங்கள் கழித்தும் கூட இப்படிப் பேசுகிறாள் என்றால் தகப்பனின் துரோகம் இந்த பெண்ணின் மனதை எந்த அளவிற்கு பாதித்திருக்கும் என்ற எண்ணம் தான் அவர்களிடம்.

அம்மா, மகள் பேச்சில் தலையிடாத கண்ணன் பைக்கை ஸ்டார்ட் செய்ய, கணவனின் தோளைப் பிடித்துக்கொண்டு இரண்டு பக்கமும் கால்களைப் போட்டுக்கொண்டு அமர்ந்தாள் நந்தினி.

இருவரும் கையசைத்து விடைபெற்றுக் கொண்டு கிளம்பி விட்டார்கள். இவ்வளவு நேரமும் பெற்றவர்கள் முன்னர் கலகலப்பாக பேசி தங்களை ஆதர்ஷ தம்பதியராக காட்டிக்கொண்டவர்கள், இப்போது பேசிக்கொள்ள முயலவில்லை. ஆனால் நந்தினியின் கை தன்னுடைய தோளில் எப்போதையும் விட உரிமையாக பதிந்திருந்ததை கண்ணனால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

 இரவுநேர சாலை போக்குவரத்து நெரிசல் இன்றி இருக்க, சீக்கிரமாகவே வீடு வந்து சேர்ந்திருந்தார்கள். இருவரும் சாப்பிட்டு விட்டதால் வேலை எதுவும் இருக்கவில்லை. எனவே கதவை தாழ் போட்டுவிட்டு தூங்குவதற்கு தயாரானார்கள்.

கண்ணன் ஏற்கனவே குளித்து இலகு உடை அணிந்திருந்ததால் நேரடியாக படுக்கைக்கு சென்றான். நந்தினி வீட்டுக்கு அணியும் உடையை எடுத்துக் கொண்டு குளிப்பதற்காக குளியலறைக்கு சென்றாள்.

நந்தினி குளியலறையிலிருந்து வெளியே வரும்போது கண்ணன் அலைபேசியில் எதுவோ பார்த்துக் கொண்டிருந்தான். அவனருகே நந்தினி வந்து நிற்க, அவளை நிமிர்ந்து பார்த்தவன் மறுபடியும் கைபேசிக்குள் தலையை நுழைத்துக் கொண்டாள்.