கைபேசியில் வந்த செய்தி கேட்டு வெண்ணிலா மயங்கி சரிய அந்த நேரத்தில் வந்த பவேஷ் “அத்தை”என்று ஓடிவந்து பிடித்துக் கொண்டான்.
“அத்தை என்னாச்சு?”என்று அவன் கத்த நல்ல வேளையாக மேகன் அதற்கு முன்பே இணைப்பைத் துண்டித்து இருந்தான்.
மயக்கம் தெளிந்தவளுக்கு பதட்டம் தீரவே இல்லை.
“மா..மாமா.. அத்தை எங்க…மா..மாமா”என்று உளறியவளுக்கு தண்ணீரைக் கொடுத்தவன் “அத்தை என்னாச்சு அத்தை இருங்க நான் பெரியத்தையை கூப்பிடுறேன்”என்று வெளியே ஓடியவன் வரலக்ஷ்மியின் பெயரைச் சொல்லி கத்தினான்.
வரலக்ஷ்மி கோவிலுக்கு சென்று விட்டு அப்போது தான் வந்தவர் அவன் கத்தியதும் என்னவோ என்று பதறி ஓடி வர பவேஷ் வெண்ணிலா மயங்கி விழுந்ததைக் கூற உள்ளே ஓடினார் வரலக்ஷ்மி.
வரலக்ஷ்மியைக் கண்டதும் கதறியவள்”வாங்க அத்த போகலாம்”என்று இழுத்த நிமிடத்தில் இருந்து அடுத்தடுத்து என்ன நடந்தது என்று கூட உணர முடியவில்லை வரலக்ஷ்மியால்.
மருத்துவ மனைக்குள் நுழைந்த நிமிடம் தகவல்களை கூறவும் வரவேற்பறையில் இருந்த பெண் ஐசியூவை காட்டினாள்.
வேலவன் அந்த அறையினுள் குத்துயிரும் குலையுயிருமாய் கிடக்க மங்கை கைகால் சிராய்ப்புகளுடன் ஒரு கை உடைந்த நிலையில் மயங்கி கிடந்தார்.
மருத்துவர்களும் செவிலியர்களும் துரிதமாக செயல்பட்டு கொண்டிருக்க ரத்தம் கேட்டு வரவும் வெண்ணிலா தான் ரத்தம் கொடுத்தாள்.
வரலக்ஷ்மி நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அழ பவேஷ் பரிதாபமாக விழித்தான். அவனுக்கு என்ன செய்வது என்று புரியாமல் தவித்தான்.
ரத்தம் கொடுத்து விட்டு வந்த வெண்ணிலா வெளியே வரவும் தர்மதுரை வந்து சேரவும் சரியாக இருந்தது.
“அம்மாடி என்னம்மா இப்படி”என்று கலங்கி நின்றவர் “வேதாவுக்கு சொல்லணுமே”என்று வேதாவை அழைத்தார்.
தகவல் சொல்லி அன்று மாலையே வந்து விட்டாள் வேதா. அதுவரைக்குமே வேலவன் கண் விழிக்கவில்லை. மங்கை மட்டும் அவ்வப்போது கண் விழிப்பதும் அழுது புலம்புவதுமாக இருக்க என்ன நடந்தது எங்கே சென்றார்கள் என்று ஒன்றும் புரியாமல் தவித்து நின்றனர் வேலவன் குடும்பத்தினர்.
வால்பாறைக்குமே தகவல் சொல்லி விட சஞ்சய் அனைவரையும் அழைத்துக் கொண்டு வந்தான்.
வரலக்ஷ்மிக்கு மனது கிடந்து அடித்துக் கொண்டது.
மருத்துவர்கள் ஏதாவது சொல்ல மாட்டார்களா… என்று தவிப்பாய் ஒவ்வொருவரையும் பார்த்தார். வெண்ணிலா அவர் அருகில் இருந்து அங்குமிங்கும் நகரவே இல்லை. இரண்டு நாட்கள் போன வேகம் தெரியவில்லை. மேகனுக்கு தகவல் சொல்ல வேண்டாம் வந்ததும் பார்த்துக் கொள்வோம் என்று தர்மதுரை சொல்லி இருக்க வீணாக அவனையும் கவலைப்பட வைக்க வேண்டாம் என்று யாரும் எதுவும் கூறவில்லை.
“கிளம்புறேன் வெண்ணிலா. பேச டைம் இருக்காது நேர்ல வந்து பார்த்துக்கிறேன் உன்னை”என்று அவன் பேசியது மனதை இதமாக்குவதற்கு பதிலாக பயத்தை கொடுத்தது.
‘ஏன் சொல்லவில்லை என்று சண்டை பிடிப்பானே… எப்படி சொல்வேன்?, என்ன சொல்வேன்?’ என்று பரிதவித்தாள்.
மொத்த பேரும் இருக்க முடியாது என்பதால் வெண்ணிலா, வரலக்ஷ்மி, விஷ்ணு மூவர் மட்டுமே அங்கிருந்தனர்.
ஏர்போர்ட் வந்து சேர்ந்த மேகனோ தன்னை அழைக்க யாரும் வராததில் கோபம் கொண்டு வீடு வந்து சேர அவன் வந்த நொடி வேதா அத்தனை கதறி அழுது இருந்தாள்.
“அக்கா என்னக்கா ஏன் அழற…சஞ்சு நீ எப்படா வந்த அம்மா எங்கே வெண்ணிலா வெண்ணிலா எங்க… அப்பா… அக்கா ஏன் அழற?”என்று அடுக்கடுக்காய் கேட்டவனுக்கு யாருக்கு என்னவோ என்று பதற்றமாய் இருந்தது.
“அப்பா…”என்று ஏங்கி அழுத வேதாவிற்கு தம்பியிடம் சொல்லவே அத்தனை வேதனை.
“அப்பாக்கு என்ன… அம்மா எங்கே”என்றவனுக்கு யாருக்கும் எதுவும் இருக்க கூடாது என்ற வேண்டுதல்.
முகமெல்லாம் வியர்த்து வடிய “சஞ்சு நீயாவது சொல்லேன் டா”என்று தவித்ததில் வேலவனுக்கு விபத்து நடந்து ஆபத்தான நிலையில் இருப்பதை கூறி விட்டான் சஞ்சய்.
நிலை குலைந்து போனவனோ தடுமாறி கீழே விழப் போக சஞ்சய் தான் தாங்கிப் பிடித்து நிறுத்தினான்.
“எந்த ஹாஸ்பிடல்”என்றவனை சடுதியில் கிளப்பிச் செல்ல அங்கே வரலக்ஷ்மியை தோள் சாய்த்தபடி அமர்ந்திருந்தாள் வெண்ணிலா.
“ம்மா”என்றவாறு ஓடி வந்தவனைக் கண்டு வாயைப் பொத்திக் கதறியவள் வரலக்ஷ்மியை உலுக்கினாள்.
வரலக்ஷ்மிக்கு மகனைக் கண்டதும் அழுகை பொங்கிக் கொண்டு வர ஓஓஓவெனக் கதறி கத்தினார். செவிலியர் வேறு சத்தமிடாதீர்கள் ஐசியூ என்று எச்சரித்து விட்டுப் போனார்.
சரி ஆகிடுவார் மா… ஒண்ணும் ஆகாது எப்படியும் காப்பாத்திடலாம் என்று தன் வேதனையை அடக்கிக் கொண்டு அன்னையை சமாதானம் செய்ய வெண்ணிலா விசும்பியபடியே நின்றிருந்தாள்.
வேலவன் எங்கே சென்றார் எதற்காக யாருடன் சென்றார் என்பதை வெண்ணிலா மூலம் அறிந்து கொண்டவன் “கார் கூட அரேஞ்ச் பண்ணி போயிருக்கலாம் தானே ஏன் அப்பா ட்ரைவ் பண்ணாங்க”என்று கடிந்து கொண்டபடி மருத்துவரிடம் வேலவனின் உடல் நிலை பற்றி விசாரித்தான்.
“இன்னும் ஒரு நாள் அப்சர்வேஷன்ல வச்சு பார்க்கிறோம். முடியாட்டி நீங்க ஜிப்மர் மாத்திடுங்க அங்கே இன்னும் ட்ரெய்ன்ட் டாக்டர்ஸ் இருக்காங்க. ஸ்பெஷல் டாக்டர்ஸும் வருவாங்க. இப்பவே மாத்த சொல்லிடுவேன் பட் நியூராலஜிஸ்ட் செக் பண்ண வர்றேன் னு சொல்லி இருக்காங்க எங்க பெஸ்ட் நாங்க தருவோம் சார்”என்று மருத்துவர் சொல்லவும் உள்ளடங்கிய குரலில் “அப்பாவுக்கு நிஜமாவே எதுவும் இல்லை தானே”என்று வினவ மருத்துவருக்கு இன்னும் வருத்தம் ஆகிப் போனது.
“நம்பிக்கை வைங்க சார். கடவுள் கிட்ட ப்ரே பண்ணுங்க இப்போதைக்கு அதுதான் சொல்ல முடியும்”என்றார்.
“ஹ்ம்ம்”என்றவனுக்கு அவர் பேச்சில் நம்பிக்கையே இல்லை. எப்படியாவது தந்தை பிழைத்துக் கொள்ள வேண்டும் என்று மட்டும் வேண்டிக் கொண்டான். உள்ளூர இருக்கும் வேதனைக்கு உடைந்து கதறி விடுவோமோ மேலும் அம்மாவை பலவீனப்படுத்தி விடுவோமோ என்ற அச்சத்தில் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முயன்றான்.
தன் அன்னையின் முன் திடமானவனாய் காட்டிக் கொண்டவனால் தன் துணையிடம் அப்படி இருக்க இயலவில்லை.
வரலக்ஷ்மியை அகிலாவுடன் விட்டு வந்தவள் மேகனைக் கண்டு அவன் தோள் தொட்டு திருப்பியதும் அவளது கையைப் பிடித்துக் கொண்டு அத்தனை அழுகை அழுதான்.
“ரொம்ப பயமா இருக்கு வெண்ணிலா…அப்பா”என்றதும் துடித்துப் போனாள் அவள்.
“எதுவும் ஆகாது மேகன். மாமா சரி ஆகிடுவாங்க”என்றவளுக்குமே அதில் நம்பிக்கை இல்லை தான். ஆனால் வேண்டுதல் இருந்தது.
****
மங்கை முற்று முழுதாக மயக்கம் தெளிந்து எழுந்து அமர்ந்திருந்தார்.
தர்மதுரையின் மூலம் விஷயம் கேள்விப்பட்ட தீபாவின் பெற்றோர் தயக்கமாக தான் அவரைப் பார்க்க வந்தனர். தர்மதுரைக்கு மனைவி இப்படி இருக்கும் போது தன் குடும்பத்தில் யாராவது தன்னோடு இருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்ற தம்பிக்கு அழைத்து விட்டார் அவர். எதையும் யோசிக்காமல் கிளம்பி வந்து விட்டனர் தீபாவின் பெற்றோரும். விஷ்ணு வேதா என்று உடன் இருந்தாலும் தன் குடும்பம் இருப்பது ஒரு மாதிரி தானே…
“அண்ணிக்கு எதுவும் ஆகாது ண்ணா”என்ற தம்பியிடம் தான் தன் கண்ணீரை காட்டவே செய்தார் தர்மதுரை.
“சரியாப் போகும் மாமா ஏன் கவலைப் படுறீங்க”என்ற தீபாவின் அம்மா மிகவும் தயங்கி தான் வரலக்ஷ்மியை காண சென்றார்.
மகள் செய்த காரியத்தால் வரலக்ஷ்மியை நேருக்கு நேர் பார்க்கவே அவருக்கு சங்கடம். இருப்பினும் உயிருக்கு ஒருவர் போராடிக் கொண்டிருக்கும் போது தயக்கம் காட்டினால் சரி வராது அதுவும் இவ்வளவு தூரம் வந்து விட்டு எதையும் கேட்காமல் போனால் நாகரீகம் இல்லை என்று நினைத்தவர் அவர்கள் என்ன பேசினாலும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் பார்த்து விட்டு வர வேண்டும் என்று எண்ணியே அங்கே சென்றார்.
ஆனால் வரலக்ஷ்மியோ தன் கோபத்தை காட்டும் நிலையில் எல்லாம் இல்லை. யாரைப் பார்த்தாலும் அழுதார். ஏதாவது தன் கணவர் உயிரை காப்பாற்றி விடாதா என்ற எண்ணம் தான் அவருக்கு. மற்றவர்களும் அவர் வருகையில் ஏதும் சொல்லாதிருக்க தாமரை தைரியத்தை வரவழைத்து கொண்டு தான் வரலக்ஷ்மியிடம் பேசினார்.
“அழாதீங்க அண்ணி அண்ணன் சரி ஆகிடுவார்”என்று சமாதானம் தான் செய்தார் தாமரை.
“அவங்க கிளம்பும் போது கூட கோவிலுக்கு தானே போனேன் எந்த சாமியும் அவருக்கு துணை நிற்கலையே”என்று அழ வேதா இன்னும் மனதொடிந்து போனாள்.
“அத்தை அழாதீங்களேன்”என்று வெண்ணிலா இறைஞ்ச தாமரை நிமிர்ந்து பார்த்து விட்டு எதுவும் கூறவில்லை.
சற்று நேரம் அங்கிருந்து விட்டு மங்கையைப் பார்க்கச் சென்றார் தாமரை.
மங்கை கண் விழித்து விட்டார் பேசுகிறார் என்று பவேஷ் சொல்லியதில் வேதா வரலக்ஷ்மி இருவரும் அங்கே அவரைக் காணச் செல்ல அங்கே தாமரையின் கையைப் பிடித்துக் கொண்டு அழுது கொண்டிருந்தார் மங்கை.
“அழுவாதீங்கக்கா. எல்லாம் சரியாப் போகும்”என்று சமாதானம் செய்த தாமரை “தீபா உங்களை பார்க்கணும் அழுதுகிட்டே கேட்டா… நீங்க கோவமா இருப்பீங்கனு தான் கூட்டிட்டு வரலை”என்று திணறலாய் சொல்ல
மங்கை பெருமூச்செறிந்தபடி”இனி பார்க்க வந்தா என்ன பார்க்க வராட்டி என்ன… எவ்வளவு சயோத்தியா என் தம்பிக்கு மருமகளாக்கி பார்க்க நினைச்சேன். அம்புட்டும் வீணா போச்சு. நாள் பார்த்து நட்சத்திரம் பார்த்து பொருத்தம் பார்த்து என் தம்பி குடும்பத்துக்கு அவ தான் ஏத்தவன்னு பண்ணேன். எல்லாத்திலையும் மண்ணள்ளிப் போட்டுட்டாளே”என்று அதற்கு ஒரு பாடு அழுது தீர்க்க
“முடிஞ்சு போனதை எதுக்குக்கா பேசணும். நீங்களும் உங்க தம்பியும் நல்லபடியா குணமாகி வந்துட்டா போதும் க்கா கண்டதையும் போட்டு மனசை வருத்திக்காதீங்க. உங்களுக்கு ஆட்சேபனை இல்லைனா தீபாவை கூட்டிட்டு வர்றேன் நான். உங்களை நேரில் பார்த்தா மனசு வேதனைப்படாம இருப்பா”என்றார் தாமரை.
“நான் யாரையும் கோவிக்கல தாமரை. உன் மக என்னமோ என்னை எதிரியா நினைச்சுட்டா. நான் எல்லாரும் நல்லா இருக்கணும் னு நினைச்சு தான் வளர்த்தேன் எம்மேல இம்புட்டு துவேசம் இருக்கும் னு நினைக்கலை. போகுது போ சின்ன கழுதை, வந்து பார்க்க சொல்லு”என்று சொல்லியவருக்கு பேசவும் முடியவில்லை தான். ஆனாலும் இழுத்து பிடித்து பேசிக் கொண்டிருந்தார்.
“உங்களுக்கு இருக்கிற பெரிய மனசு அவளுக்கு புரியவில்லை அண்ணி”என்று தர்மதுரையின் தம்பி கூற அதை ஆமோதித்தவராய் “என்ன செய்ய தம்பி நல்லது நினைச்சு செஞ்சேன். ஆனா என்னைய போய் எதிரியா நினைச்சுட்டாளே”என்று சொல்லி விட்டு
“அவ மட்டும் போகாம இருந்திருந்தா இந்நேரம் என் தம்பி மருமகளா இருந்திருப்பா. அவ பண்ண வேலையால பாருங்க எந்த ஜாதகமும் பொருத்தமும் பார்க்காம ஒருத்தியை கட்டி அவ நேரமா இல்லை என்ன ராசி கெட்டவளா எதுவும் தெரியாது. இந்தா இப்ப என் தம்பியை குத்துயிரா படுக்க வச்சிருச்சுல்ல”என்று தேம்பி தேம்பி அழ அதனை மிகச் சரியாக கேட்டிருந்தனர் வரலக்ஷ்மி வேதா அகிலா மூவரும்.
…… தொடரும்