இன்றில் இருந்து புது மணமக்கள் விருந்துக்கு செல்ல ஆரம்பித்தனர். முதலில் வீட்டின் பெரியவர்கள் வீட்டிற்கு எல்லாம் ஒரு, ஒரு நாளாக சென்று வந்தவர்கள், அக்காக்கள் வீட்டில் மட்டும் தங்கும்படி பார்த்து கொண்டார்கள்.
பெரிய அக்கா செல்வி வீட்டு விருந்துக்கு குடும்பமாக போக, “உங்களுக்கு மட்டும் தாண்டா விருந்து. எங்களை ஏன் வம்படியா இழுத்துட்டு போற?” என்று வைரவேல் கேட்க,
“நீங்களும் புது மாப்பிள்ளை தான்” என்றான் மகன்,
“திரும்ப, திரும்ப அதையே சொல்லாத தேவா” அவருக்கு எக்கச்சக்க சங்கடம்.
“இருக்கிறதை தான் சொல்றான் வேலு. செல்வி உங்களை கண்டிப்பா கூட்டிட்டு வரணும்ன்னு சொல்லிட்டா” என்று பசுபதி சொல்ல,
“மகள் வீட்டுக்கு போறதுக்கு என்ன தம்பி? சொந்தக்காரங்க வீட்டுக்கு தான் போகலை” என்றார் ஜெயலட்சுமி.
செல்வி வீட்டில் இவர்களை நல்ல முறையில் வரவேற்று, விருந்து வைத்தனர்.
தேவா தம்பதி மட்டும் இரவு அங்கு தங்க, மற்றவர்கள் வீடு திரும்பும் நேரம், வைரவேல் தம்பதிக்கு உடை, இனிப்பு, பழத்துடன் பரிசுகளையும் கொடுத்தாள் மகள்.
சித்தப்பாவை சங்கடம் கொள்ள வைக்காமல், இயல்பாக கொடுத்தனுப்ப, “என்ன இருந்தாலும் பொண்ணுங்க, பொண்ணுங்க தான்” என்று வைரவேல் மகள் அன்பில் பெருமை கொண்டார்.
“இதை மட்டும் உங்க மகன் கேட்கணும்” என்று ஜெயலட்சுமி சொல்ல.
“உடனே பாய்ஞ்சிருப்பான்” என்றார் வைரவேல்.
தேவா அடிக்கடி எல்லாம் அக்கா வீட்டுக்கு செல்லும் பழக்கம் இல்லாதவன். அக்கா பிள்ளைகளுக்கு எதாவது வாங்கி தருவது, அவர்களை படத்துக்கு அழைத்து செல்வது என்று இருப்பான். அவ்வளவு தான். ஆனாலும் அங்குள்ளவர்களோடு நல்ல பழக்கம்.
அக்கா வீடு கூட்டு குடும்பம். அக்காவின் மாமனார், மாமியார், உடன் பிறந்தவர்கள் என்று எல்லோரும் ஒன்றாகவே இருக்க, நேரம் வேகமாக சென்றது.
படம் பார்ப்பது, விளையாடுவது, பக்கத்தில் உள்ள அருவிக்கு செல்வது என்று மகிழ்ச்சியாகவே விருந்து முடிந்து போனது.
துளசியுடன் வீட்டு பெண்கள் இயல்பாக பழக, “பரவாயில்லை இப்படியெல்லாம் இருக்காங்களா?” என்று வீடு திரும்பும் போது கணவனிடம் கேட்டாள் துளசி.
“கூட்டு தொழில்டி. அதுக்காகவே அட்ஜஸ்ட் பண்ணிப்பாங்க. பணம் பிரிக்கவும் செய்யும், சேர்த்தும் வைக்கும்” என்றான் கணவன் கண்ணடித்து.
அடுத்து அகல்யா வீடு சென்னைக்கு செல்ல வேண்டும். பெரியவர்கள் அவ்வளவு தூரம் வர முடியாது என்று மறுக்க, சண்டைக்கு வந்துவிட்டாள் சின்னவள்.
“அதென்ன அக்கா வீட்டுக்கு மட்டும் எல்லாம் போயிருக்கீங்க. எங்க வீட்டுக்கு வர மாட்டேங்கிறீங்க” என்று நிற்க,
“இவ ஆட ஆரம்பிச்சுட்டா இவளை நிறுத்த முடியாது. போய்ட்டு வந்திடுவோம்” என்றார் பசுபதி.
“ஏங்க நியாயமா பேசுங்க. நாம கடைசியா எப்போ அவ வீட்டுக்கு போனோம் சொல்லுங்க பார்ப்போம். லீவுக்கு நம்ம வீட்டுக்கு வந்து போறதோடு சரி” என்று அன்னை சொல்ல,
“பத்திரிக்கை வைக்க போய் நைட் தங்கிட்டு வந்தோம் இல்லை லட்சுமி. பொண்ணு வீட்ல அவ்வளவு தான் தங்க முடியும்” என்றார் பசுபதி.
“உங்க நியாயம் உங்களோட. இப்போ போய் அவளுக்கு எடுத்துட்டு போக இதெல்லாம் வாங்கிட்டு வாங்க” என்று பெரிய லிஸ்ட் கொடுத்தார்.
“மகனே நீ விருந்துக்கு போக அப்பா ஆயிரம், ஆயிரமா செலவு பண்றேன்டா” என்று மகனிடம் தந்தை சொல்ல,
“நல்லா யோசிச்சு பேசுங்கப்பா. என் விருந்துக்கு பண்ணலை. உங்க பொண்ணுங்களுக்காக நீங்க பண்றீங்க. வெறுங்கை வீசிட்டு போக கௌரவம் குறைச்சல்”
“பொண்ணுங்க வீட்டுக்கு முறையா போகணும் தேவா”
“இப்போ எல்லாம் யார் முறை பார்க்கிறா?”
“லட்சுமி உன் மகன் பேச்சே சரியில்லை. இப்போவே இப்படி பேசுறவன் நாளைக்கு என் பொண்ணுங்களுக்கு சீர் செய்வானா?” என்று தந்தை கோவமாக கேட்க,
“நீங்க முதல்ல அழுகாம செய்ங்க. என் முறையில நான் பார்த்துகிறேன்” என்று சென்றான் மகன்.
“எதுக்கும் பொண்ணுங்க கையில பணத்தை கொடுத்திடலாம். இவன் தேறமாட்டான். நானே ஏன் செய்யணும்? நீங்களும் எனக்கு சீர் செய்ங்கன்னு கேட்டாலும் கேட்டு வைப்பான்” என்றார் தந்தை.
“கேட்க கூடிய ஆளு தாங்க. என் பொண்ணுங்க பாவம்” என்று அன்னைக்கு கவலை.
துளசிக்கு தலையில் அடித்து கொள்ளலாம் போலானது. சாதாரண பேச்சை எப்படி மாத்தி விட்டுட்டார், இவரோட!
அடுத்து மகனுக்கு தப்பாமல் சின்ன தந்தை நின்றார். “நான் வரலை. நீங்க போய்ட்டு வாங்க” என்று சொல்ல, தேவா சின்ன அக்காவிற்கு போன் போட்டு கொடுத்துவிட்டான்.
“சித்தப்பா” என்று அகல்யா ஆரம்பித்தவள்,
“வரேன். வரேன். உங்க சித்தியோட இப்போவே கார் ஏறிட்டேன்” என்று சொன்ன பிறகே போன் வைத்தாள்.
மாலதிக்கு சங்கடம் என்று அவர் தவிர்க்க பார்க்க, எனக்கு அப்படி எல்லாம் ஒன்றுமில்லை என்பதாய் அகல்யா வீட்டில் நடமாடினார் மாலதி.
அகல்யா தனி குடித்தனம். சமைப்பதில் ஆரம்பித்து எல்லாம் ஜெயலட்சுமி, மாலதியே பார்த்து கொள்ள, “என் அக்கா கையால சாப்பிட ஆசைப்பட்டேன். இங்க வந்தும் நீங்கதான் சமைக்கணுமா?” என்று தம்பிக்காரன் முகம் சுருக்கினான்.
“அக்கா. இங்க மாமா என்னமோ சொல்றார்” என்று அவளை அழைத்துவிட,
“உன் பாயசம் சூப்பரா இருக்கும். தம்பிக்கு வைச்சு கொடுன்னு சொன்னேன்” என்றார் அவர் வேகமாக.
“ஏன்டா இப்படி. உன் அக்கா நம்ம சமையலை செய்யாம ஏதேதோ ஊர் சமையலை செய்வா. பாவமேன்னு உனக்கு நாங்க சமைச்சு போட்டா, நடிப்பா நடிக்கிற” என்று ஜெயலட்சுமி மகன் கன்னத்தில் இடித்துவிட்டு சென்றார்.
“அக்காவாச்சே. கொஞ்சம் பாசமா பர்பார்ம் பண்ணலாம்ன்னா விட மாட்டீங்களே” தேவா அம்மா, சித்தி சமையலை நன்றாகவே சாப்பிட்டான்.
“தேவா. நைட்டுக்கு நான் உனக்கு சமைச்சு தரேன்” என்ற அகல்யா, அன்றிரவு பாஸ்தா, ரொட்டி என்று செய்து வைக்க,
“அனுபவிடா” என்று அவர்கள் நன்றாக இட்லி, சிக்கன் குழம்பு என்று சாப்பிட்டு கொண்டிருந்தனர்.
“மச்சான். அக்கா சமையல். ம்ம். ஆரம்பிங்க” என்று மாமா வேறு கிண்டல்.
உணவு விருப்பம் அவரவர் சம்மந்தப்பட்டது. அகல்யாவின் விருப்பம் மற்றவருக்கு சரிப்பட்டு வராது. அவ்வளவு தான்.
தேவா கொஞ்சம் மட்டும் அக்காவின் திருப்திக்காக சாப்பிட்டவன் கண்கள் இட்லி மேல் சென்றது.
“என் சித்தப்பாக்கு இதெல்லாம் ரொம்ப பிடிக்கும். அவர் சாப்பிடட்டும்” என்று வேகமாக அவருக்கு நகர்த்தி வைத்து, அவருக்கு பரிமாறிய இட்லியை தான் எடுத்து கொண்டான் தேவா.
“டேய். என்னடா பண்ற? இட்லி கொடுடா” என்று வைரவேல் கேட்க,
“முடியாது. பாஸ்தா எல்லாம் சாப்பிட்டு, புஷ்டியாக்குங்க” என்றான் மகன்.
“நான் ஏண்டா புஷ்டியாகணும். இப்போவே வரியா உன்னை ஒத்தை கையால் தூக்கி காட்டுறேன்” என்று நிற்க,
“அதான் சித்தியை கல்யாணம் பண்ணி கொடுத்துட்டோம் இல்லை. அவங்களையே தூக்குங்க போங்க” மகன் இட்லி எனக்குத்தான் என்று நிற்க, வைரவேல் தட்டை இழுக்க, குழந்தைகள் கைதட்டி உற்சாகம் மூட்ட என்று டேபிள் அதிர ஆரம்பிக்கவே,
“வேணாம். வேணாம், யாரும் பாஸ்தா சாப்பிட வேணாம். தேவா நீ இட்லியே சாப்பிடு போ” என்று அகல்யா இட்லி வைத்தவள், “உன் சேட்டையை காமிச்சுட்ட இல்லை” என்று தம்பி தலையில் கொட்டி சென்றாள்.
“நாங்க டேஸ்ட் பண்றோம் அண்ணி” என்று துளசி கேட்க, மற்ற எல்லோரும் கூட சுவைத்து பாராட்ட, அகல்யாவிற்கு திருப்தி.
மறுநாள் அங்கிருந்து அப்படியே புது தம்பதிகள் அவரவர் தேனிலவு கிளம்ப, ஜெயலட்சுமி தம்பதி ஊர் திரும்பினர்.
தேவா, துளசி தேனிலவுக்கு டார்ஜிலிங் தான் வந்திருந்தனர்.
வைரவேல், மாலதி தம்பதி மணாலி சென்றதை உறுதி படுத்தி கொண்டான் தேவா.
“காசை வீணாக்க கூடாதுன்னே கிளம்பி போயிருக்கான்” என்று பசுபதி சொல்ல,
“நீங்க இந்தளவு விவரம் இல்லாதவர்ன்னு எனக்கு இப்போதான் தெரியும்ப்பா” என்று வைத்தான் மகன்.
“என் விவரத்தை பேசுற அளவு உன் மகன் வந்துட்டானா? வரட்டும் அவனுக்கு இருக்கு” என்று பசுபதி அங்கு மனைவியிடம் எகிறி கொண்டிருந்தார்.
“ஏன் மாமாகிட்ட அப்படி சொன்னீங்க?” துளசி கேட்க,
“கட்டின காசை திருப்பி வாங்க வழியில்லாமலா அவர் தம்பி மணாலி போயிருக்கார். அவ்வளவும் பிராடு. பாரு எனக்கு அனுப்பியிருக்க போட்டோவை” என்று காட்ட,
“என்னங்க” என்று வாய் பிளந்தாள் துளசி.
“சித்தியை தூக்குங்கன்னு நான் சொன்னதுக்கு இந்த போட்டோ” என்ற தேவா,
“என்னமோ இப்போதான் முப்பது வயசு மாதிரி சித்தியை கையில் தூக்கி போட்டோ எடுத்திருக்கார்” என,
“அவர் எனெர்ஜிட்டிக்கா இருக்கார். உங்களுக்கென்ன?” என்றாள் துளசி அந்த புகைப்படத்தை ரசித்தபடி.
வைரவேல் மலர்ந்த புன்னகையுடன், மாலதி வெட்கத்துடன் என்று இருவரும் மிகவும் அழகாக இருந்தனர்
“இடுப்பு சுளுக்கினா தெரியும்டி” என்ற தேவாவிற்கும் ரசனையான புன்னகை.
“வாய் வைக்காதீங்க”
“வைச்சாங்க. தூரத்துல இருக்கும் போது சேட்டை பண்ணாம சமத்தா இருந்துட்டு வரணும்”