வாலு பையன் “ஒன்னு ரெண்டு…” என எண்ண ஆரம்பிக்கவுமே மனைவியை பார்த்தான் ருத்ரன். ஹோ என ஒரே சத்தம். ருத்ரனுக்கு சரியாக ஏதும் புரியா விட்டாலும் தன்னை கோமாளி ஆக்கி சிரிக்கிறார்களோ என்ற எண்ணம். எதற்கு வம்பு என திரும்பி விட்டான். அதன் பின் மனைவியின் பக்கம் பார்க்கவே இல்லை அவன். எண்ணிக் கொண்டிருந்தவன் நாற்பது சொல்லி விட்டான்.

“நான்தான் சொன்னேன்ல?” என கடைக்குட்டி மாமியாரிடம் சொன்ன சிவாவுக்கு மனதில் நிம்மதி. பின்னே அந்தக் கல்லை தூக்குவது எல்லாம் சாத்தியமா?

“அண்ணன் பாரு அண்ணன் அண்ணன் அண்ணன் இங்குட்டு திரும்பு!” என முணு முணுப்பாக மந்திரம் போட்டுக் கொண்டிருந்தாள் வைதேகி.

“சும்மான்னு இருங்க அத்தாச்சி!” என சிணுங்கினாள் சிவா.

“நீங்க சும்மான்னு இருங்க அண்ணி, எங்கண்ணன் லவ்ல ஸ்டராங்னு ஊரே தெரிஞ்சுக்கிட வேணாம்?” எனக் கேட்ட வைதேகி, மும்முரமாக மந்திரம் போட்டாள்.

மேசையை தட்டிக் கொண்டே லேசாக மனைவியின் பக்கம் திரும்பினான் ருத்ரன். சாதாரணமாக இருந்திருந்தால் யாருக்கும் கவனத்தில் பட்டிருக்காது. இங்கோ கழுகு கொத்தி பாம்பாக ருத்ரனையே அல்லவா பார்த்திருந்தனர். ஹோ என அடுத்த ஆர்ப்பரிப்பு எழவும் என்னவென அங்கே இன்னும் கூட்டம் கூடியது, ருத்ரனோ இன்னும் குழம்பிப் போனான்.

“அங்குட்டு என்னப்பா நடக்குது?” மேடையில் இருந்த ஒருவர் கேட்டார்.

“இருங்க என்னான்னு சாரிச்சிட்டு (விசாரித்து விட்டு) வாறேன்” என இறங்கி சென்றார் ஒருவர்.

என்னவோ என ருத்ரனும் அங்கேயே பார்க்க, “அத்தாச்சி இதென்ன மூனாம் தரம் இங்குட்டு பார்த்தவரு இங்குட்டே பார்த்து கெடக்காரு, பத்து செகண்ட் டைம், இல்லாட்டா அடுத்த கவுண்ட் ஆகிடும்” என்றான்.

“மூனு தடவ பாத்திட்டாரு, இனி எத்தன கவுண்ட் போனாலும்தான் என்ன, போகாட்டாலும்தான் என்ன?” என்றான் ஒருவன்.

சிவா முறைப்பதும் அந்த பையன் தோரணையாக பேசுவதும் என பார்த்த ருத்ரனுக்கு அதற்கு மேல் பொறுமையில்லை, அங்கேயே சென்றான்.

ருத்ரன் ஐந்து முறை மனைவியை பார்த்து விட்டதாக சொல்லி, சிவா கல்லை தூக்கினால்தான் ஆகிற்று என வம்பு செய்தது வாலிபர்களின் கூட்டம்.

எல்லாரும் கோயிலுக்காக நிதி திரட்டும் சமயங்களில் ருத்ரனுடன் பேசி பழகி இருந்தனர். ஆகவே முன் போலெல்லாம் யாரும் ருத்ரனை கண்டு அஞ்சவில்லை, விஷயத்தை சொல்லி அவனையும் வம்பிழுத்தனர்.

ருத்ரனோ மனைவியை கண்டனமாக பார்த்து வைத்தான். அவள் அவனிடம் கண்களால் கல்லை காட்டி  பாவமாக பார்த்தாள்.

“அத்தாச்சி… என்னதான் அண்ணனை துணைக்கு கூப்பிட்டாலும் உங்களை விடுறதா இல்லை, வாங்க வாங்க… எங்க அத்தாச்சி கல்ல தூக்க போறத வந்து பாருங்க பாருங்க” துண்டு ஒன்றை எடுத்து தலைக்கு மேலே சுற்றிக் காட்டி இன்னும் கூட்டத்தை கூட்டினான் ஒரு வாலிபன்.

அந்த துண்டை பிடுங்கி, அவனது காலிலேயே அடி வைத்த ருத்ரன், “எலேய், பொம்பள தூக்கவா அந்த கல்லு, போங்கடா… வேற வேலை வெட்டி இருந்தா போய் பாருங்க” என  துரத்தி விடப் பார்த்தான்.

உற்சாகத்தின் உச்சத்தில் இருந்த இளசுகளை யாரால் அடக்க முடியும்? அவர்கள் செய்த வம்பில் கல்லை தூக்குவதாக ஒத்துக் கொண்டு விட்டாள் சிவா.

கோவமடைந்த ருத்ரன் கொஞ்சம் கராறாக பேசி, மனைவியின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு இரண்டு அடிகள் வைத்தான்.

“அத்தாச்சி உங்களுக்கு எங்க அண்ணன் மேல அம்புட்டுத்தான் லவ்வா? போங்க போங்க… இந்த பொம்பளைங்களே இப்படித்தானப்பா?” என்றான் ஒருவன்.

சிவாவுக்கு என்னவோ போலாகி விட்டது. விளையாட்டு பேச்சு என்பது உடனே உரைக்கவில்லை,  உணர்ச்சி வசப் பட்டு விட்டாள். கணவனின் கையை உதறி விட்டவள் கல்லை தூக்க சென்று விட்டாள்.

ருத்ரன் மனைவியை தடுக்க போக, “அட இரப்பா, ஆயி தூக்கட்டும், அப்படியா கொடும படுத்திட போறோம்?” என சொல்லி அவனை பிடித்துக்கொண்டார் பொக்கை வாய் கிழவர் ஒருவர்.

கணவனை பார்த்தாள் சிவா, அவனோ தவிப்பாக மனைவியை பார்த்திருந்தான். புடவையை அள்ளி சொருகிக் கொண்டவள் கைகள் இரண்டையும் தட்டி தேய்த்து விட்டுக் கொண்டாள்.

விசில் அடித்தும் கரகோஷம் எழுப்பியும் அவளை உற்சாக படுத்தியது வாலிப வானரப் படை.

வைதேகி, கோதை எல்லாம் நகத்தை கடித்துக் கொண்டு பார்த்தனர். விஷயம் கேள்விப்பட்டு வள்ளியும் செங்கமலமும் வேக நடை போட்டு இங்கு வந்து கொண்டிருந்தனர்.

சிவாவுக்குள் ஏதோ வெறி, கணவன் மீது தான் அளவிட முடியாத காதல் கொண்டிருப்பதை ஊருக்கே அம்பல படுத்தி விட வேண்டும் என வீம்பாக நினைத்துக் கொண்டே கல்லை அசைத்து தூக்கினாள்.

இப்போது அந்த இடமே அமைதியாகி விட்டது. ருத்ரனுக்கு இதயம் எம்பி தொண்டையில் வந்து நின்றது போலொரு நிலை.

கல்லை தன் இடை வரை தூக்கி விட்டவளுக்கு அதற்கு மேல் முடியவில்லை, கண்கள் கலங்க, மூச்சு வாங்க, உதடுகளை அழுந்த கடித்துக் கொண்டே மீண்டும் தம் கட்டி கல்லை உயர்த்தினாள்.

வள்ளியும் செங்கமலமும் வாயில் கை வைத்து அதிசயித்து பார்த்தனர்.

தன் கையை பிடித்திருந்த பெரியவரின் கையை உதறி விட்ட ருத்ரன் வேகமாக மனைவியிடம் சென்று, அந்தக் கல்லை வாங்கி, அவளை விட்டு தள்ளி தரையில் போட்டான்.

ஆசுவாசமாக வாயை குவித்து மூச்சை வெளியேற்றிய சிவா, “ஏங்க இப்படி செஞ்சீங்க? நான் தூக்கிருப்பேன்” என்றாள்.

“எல்லாம் விளையாட்டா போச்சா உனக்கு? நாலு போட்டேனா தெரியும்!” என மனைவியிடம் சீறியவன், “உங்களுக்கு வம்பிழுக்க எம்பொண்டாட்டி தான் கிடைச்சாளாடா, மேல கீழ போட்டுக்கிட்டா உனக்கா நோவு? எல்லை மீறி போறீங்கடா, எம்பொறுமை போச்சு… முள்ளு மரத்துல கட்டி வச்சிப்புடுவேன், போங்கடா எங்குட்டாவது” என வாலிபர்களிடமும் சீறினான்.

அதையெல்லாம் அவர்கள் சட்டை செய்து கொள்ளவே இல்லை. கைகளை பின்னால் மடித்துக் கட்டி வேறு யாரையோ திட்டிக்கிறார் என்ற பாவத்தில் நின்றனர்.

விழா நேரத்தில் அளவுக்கு மீறி கடிய ருத்ரனாலும் முடியவில்லை.

“இள வட்டக் கல்ல தூக்கி அண்ணன் மேல உள்ள லவ்வ ஊரு உலகத்துக்கே சத்தமா சொன்ன வீரப் பொண்ணு… கோவக்கார அண்ணனோட குல விளக்கு… எங்க அத்தாச்சிக்கு பாராட்டு சொல்லுங்கடா” என சொல்லி விசில் அடித்தான் ஒருவன்.

அவனை தொடர்ந்து மற்றவர்கள் கை தட்ட, இனி இங்கு நிற்க கூடாது என கூட்டத்தை விலக்கி நடந்தான் ருத்ரன்.

“அண்ணன் இன்னும் கபிள்ஸ் கேம்ஸ் எல்லாம் இருக்கு, எங்குட்டு ஓட பார்க்குறீய? அத்தாச்சியோட சேர்ந்து நின்னு விளையாடி கப்ப வாங்கிட்டு போவீயளாம்” என சத்தம் போட்டான் ஒருவன்.

“எங்குட்டுடா கப்பு?” நிஜமாகவே சந்தேகம் கேட்டான் ஒருவன்.

“ஹேய் டீ குடிக்கிற கப்புடா, அண்ணனும் அத்தாச்சியும் ஸ்ட்ரா  போட்டு டீ காபி கஞ்சின்னு என்ன வேணா குடிச்சுக்கலாம்” என்றான் இன்னொருவன்.

“ஓவரா போறீங்கடா! உங்க வில்லங்கமான கேமை பத்தி எல்லாம் தெரியும்டா எனக்கு, யாருக்கும் நேரம் சரியில்லை,  ஓடிப் போயிடுங்க சொல்லிட்டேன்” என அவர்களை மிரட்டிய  ருத்ரன், இன்னும் அங்கேயே நின்றிருக்கும் மனைவியிடம், “வீட்டுக்கு வாடி பேசிக்கிறேன்” என்றான்.

அவள் கண்களால் அவனிடம் சண்டையிட, “உங்க மிரட்டலுக்கு அத்தாச்சி பயந்து போயிட்டாவளாம்” என இன்னும் ஓட்டினான் ஒருவன். அவனை பார்வையில் பொசுக்கி விட்டு அகன்றான்  ருத்ரன்.

“எங்க அருமை அத்தாச்சி… எப்படி சமாளிக்கிறீய இந்த முரட்டு பீஸை?” என சிவாவிடம் சந்தேகம் கேட்டான் ருத்ரனால் மிரட்ட பட்ட ஒருவன்.

“எலேய்!” என சிவாவும் அவனை கண்டித்தாள்.

“கல்ல தூக்கினதா ஆயி வீரம்? எங்க ஊரு முரட்டு காளையவே சாச்சுப்புட்டியே ஆயி! அதுக்கு இணை என்ன கெடக்கு?” என பல் போன தாத்தா சொல்லி சிரிக்க, சுற்றியுள்ள எல்லாரும் அதை ஆமோதித்து சிரித்தனர்.

வெட்கம் பிடுங்கித் தின்ன, வைதேகியின் தோளில் தலை மறைத்துக் கொண்டாள் சிவா.

இடுப்பில் கை வைத்து நின்று தூரத்திலிருந்து  பார்த்திருந்த ருத்ரன், செல்ல சலிப்போடு தலையை இட வலமாக ஆட்டிக் கொண்டான்.

ஊரே இப்படி இவர்களின் மீது கண் போட்டு விட்டதே என வள்ளிக்குத்தான் நெஞ்சம் பதை பதைத்தது.