இரவில் கூட இன்னொரு முறை மகனிடம் சொல்லி பார்த்தார் வள்ளி. காது கொடுக்காமல் மாடிக்கு சென்று விட்டான் அவன்.
சிவா சோகமாக இருந்தாளே ஒழிய, அவனிடம் வாய் விட்டு ஏதும் கேட்டுக் கொள்ளவில்லை.
அவனுக்குத்தான் பொறுக்காமல், “என்னத்துக்குடி இப்படி இருக்க? வாயை தொறந்து பேசு” என அதட்டினான்.
“ம்ஹூம், மாட்டேன், எவ்ளோதான் உங்களை எனக்காக இறங்கி வர சொல்லிட்டே இருக்கிறது, உங்க மனசு ஆற இன்னும் நேரம் தேவை படுது, நானும் புரிஞ்சுக்கலைனா எப்படி? நாளைக்கு நீங்க வெளில புறப்பட்டதும்தான் அம்மாப்பா வர்றாங்க, அவங்க போனதும் கால் பண்றேன் உங்களுக்கு, நீங்க அதை பத்தி ரொம்ப யோசிக்க வேணாம்” என்றாள்.
“ம்ம்… அதான் எல்லாத்தையும் முடிவு பண்ணி நீயே சொல்லிட்டியே, பொறவு ஏன் மூஞ்ச இப்படி வச்சிருக்க?” எனக் கேட்டான்.
“உங்களை சங்கட படுத்தற மாதிரியே ஏதாவது விஷயம் வருதே, எனக்கு ஒரு மாதிரி இருக்கு” என்றாள்.
அவளை ஊன்றி பார்த்தவன், ஒன்றும் சொல்லாமல் படுக்க சென்று விட்டான். அவன் பக்கத்தில் படுத்தவள், “நான் வேணும்னா வர வேணாம்னு சொல்லிடட்டா?” எனக் கேட்டாள்.
அவளது பக்கமாக திரும்பி படுத்து அவளை முறைத்தவன், “நான் சொல்லியா வர சொல்லிருக்க, பொறவு எதுக்கு என்கிட்ட கேட்டுகிட்டு இருக்க?” எனக் கேட்டான்.
ஒருக்கலித்து படுத்திருந்தவன் தோளில் தலை வைத்துக் கொண்டவள், “ நீங்க இப்படி இருக்காதீங்களேன்” என்றாள்.
“எப்படி?”
“ஒரு மாதிரி என்னைய விட்டு தள்ளி நிக்கிற மாதிரி, வர வர புத்தி யோசிக்க மாட்டேங்குது எனக்கு, எல்லாரை மாதிரியும் பொறந்த வூட்டு சீருக்கு போய் வீங்கி கெடக்கேன், நீங்க இருக்கையில எந்த சீர் வந்து என்னைய தாங்கி புடிக்க போவுது? இப்பவே வரவேணாம்னு சொல்ல போறேன்” என கூறி எழப் போனாள்.
அவளை விடாமல் தன் மேல் போட்டுக் கொண்டவன், “சும்மா மாத்தி மாத்தி பேசாத, அம்மாவே அவுகள வர சொல்லிட்டுதானே? விடு” என சொல்லி ஆதரவாக அவளை அணைத்துக் கொண்டான்.
“எம்மேல கோவம் இல்லையே?” எனக் கேட்டாள்.
“கோவத்துல இருக்கவன்தான் இப்படி நெஞ்ச மெத்தையாக்கி கொடுப்பேனா?”
“முன்ன கோவம்தான், இப்பதான் செத்த ராசியா பேசுறீங்க. எம்மேல ரொம்ப நேரம் எல்லாம் கோவ பட்டுக்க முடியாது உங்களால” என பெருமையாக சொல்லிக் கொண்டாள்.
அவன் ம் போட்டுக்கொள்ள, “ஆனா இந்த விஷயத்துல எம்மேல கோவ படுறதும் சரி கிடையாது” என்றாள்.
அதற்கும் அவன் ம் போட்டுக் கொள்ள, “என் அப்பாம்மா சந்தோஷ படுவாங்க, நானும்தான்” என்றாள்.
அவன் இன்னொரு ம் போட, தலை உயர்த்தி பார்த்து அவனை முறைத்தாள்.
“என்னடி?”
“ஒன்னுமில்ல…” என எரிச்சலாக சொன்னாள். அவளை படுக்கையில் விட்டு அணைத்துக் கொண்டு உறங்க முற்பட்டான். அவளும் அந்தப் பேச்சை விட்டு விட்டாள்.
அடுத்த நாள் ருத்ரன் வீட்டில் இல்லாத நேரம் பார்த்துதான் சிவாவின் பெற்றோர் இங்கு வந்தனர். சுடர் இன்னும் வேலையெல்லாம் செய்யும் அளவுக்கு தேறியிருக்கவில்லை. ஓட்டலில் சமையலுக்கு சம்பளத்துக்கு ஆள் போட்டுத்தான் நடத்திக் கொண்டிருக்கிறார் உத்தமன். சிவாவும் தன் சம்பளத்தில் பாதியை அவர்களுக்கு கொடுக்கிறாள்.
திருமண சமயத்தில் மகளிர் குழுவில் வாங்கிய கடன், மருந்து மாத்திரை செலவு என வருவாய் எல்லாம் சரியாக இருந்தது. ஆனாலும் வெளியில் கடன் பெற்று மகள் மருமகனுக்கு புத்தாடைகள், வெண்கல பானைகள், பதினோரு வரிசைத் தட்டுக்களில் இதர வரிசைப் பொருட்கள் என எல்லாம் நிறைவாக வாங்கி வந்திருந்தனர்.
இவர்களின் சக்திக்கு மீறியது என புரிந்து தன் பெற்றோரை முறைத்தாள் சிவா. அவர்கள் மகளை அன்பாக பார்க்க, அவளின் கண்ணோரம் கசிந்து விட்டது.
இத்தனை இவர்கள் செய்ய, கணவன் உடன் இல்லையே என அவளுக்கு வருத்தம் எழாமல் இல்லை.
சம்பந்திகளுக்கு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார் வள்ளி. வாங்க என அழைக்க கூட வெளிவரவில்லை பிறை. கடமைக்கு அழைத்து விட்டு வெளியில் கிளம்பி விட்டார் தனராஜன்.
வரிசை பற்றி குறை சொல்ல மங்களத்தம்மாளுக்கு எந்த விஷயமும் கிடைக்காத காரணத்தால் நன்றாக பேச ஆரம்பித்தார். இடையிடையே கௌரியை வைத்து ஏதாவது இடித்துக் காட்டி சொன்ன வண்ணமும் இருந்தார். முந்தாநாள் பிறைக்கு வந்த வரிசை பற்றி பீற்றிக் கொண்டார்.
மாமியாரை கடிய முடியாமல் சம்பந்திகளை தர்ம சங்கடமாக பார்த்த வள்ளி, “நல்ல நேரம் வந்ததும் கீழ அழைச்சிட்டு வரலாம், மேல கூட்டிகிட்டு போ ஆயி” என மருமகளிடம் சொன்னார்.
மாடியேற சற்று சிரமம் என்பதால் பரவாயில்லை என சொல்லி விட்டார் சுடர். தொழுவத்திலிருந்து வந்து விட்ட சதாசிவம் அவர்களை வரவேற்று உத்தமனிடம் ஊர்க் காரியங்கள் குறித்து பேச ஆரம்பிக்கவும், பாட்டிக்கு பேச வாய்ப்பு கிட்டாமல் போய் விட்டது.
சிவரஞ்சனி அன்று விடுப்பு எடுத்திருந்தாள். புடவை கட்டி மங்களகரமாக நின்றிருந்தாள். கணவன் மனைவியாக வரிசை வாங்குவதுதான் முறை என்பதால் பெரியவர்களின் கையில் கொடுத்து விடுவது, சிவா உடன் நிற்கட்டும் என சொல்லி விட்டார் வள்ளி.
சிவா விளக்கேற்றி விட்டு வர, ருத்ரனின் புல்லட் சத்தம் கேட்டது. இவர்கள் சென்று விட்டதாக நினைத்து வந்து விட்டாரோ என பதட்ட பட்டுக் கொண்டே வாசலுக்கு ஓடினாள் சிவா.
வெளியில் இருந்த தண்ணீர் குழாயை திறந்து விட்டு கை கால்கள் கழுவிக் கொண்டே மனைவியை பார்த்தவன், “என்னடி இந்த முழி முழிக்கிற?” எனக் கேட்டான்.
“அது அப்பாம்மா இன்னும் இருக்காங்க, நீங்க…” என அதற்கு மேல் பேசாமல் அவனை பார்த்தாள்.
அவளிடம் வந்தவன், “ம்ம்… வா” என சொல்லி உள்ளே அழைத்து சென்றான். குழப்பம் நீங்காமலே அவனுடன் நடந்தாள் அவள்.
மாமனார் மாமியாரை பொதுவாக “வாங்க” என்றான்.
சிவா தன் கணவனை திகைப்பாக பார்க்க, மற்றவர்களும் அப்படித்தான் அவனை பார்த்தனர்.
“சோலி கெடக்கு எனக்கு, போவணும், சீக்கிரம்” என மனைவியை பார்த்து சொன்னான்.
எல்லாம் தயாராக இருக்க, பர பரப்பாக பூ பழம் இருந்த தட்டை கையில் எடுத்த உத்தமன் மனைவியிடம் கொடுத்து வரிசை பணமாக பத்தாயிரத்து ஒரு ரூபாயை எடுத்து வைத்தார்.
“அட உத்தமா! சக்திக்கு மீறி பொண்ணுக்கு நெறக்க செய்றியே!” என அசந்து போனார் பாட்டி.
ருத்ரன் ஏதும் சொல்லவில்லை. அவனும் அவனது மனைவியும் தாத்தா பாட்டியோடு சேர்ந்து நின்று கணவன் மனைவியாக வரிசையை ஏற்றுக்கொண்டனர்.
அதிக நேரமெல்லாம் ருத்ரன் இருக்கவில்லை. “இருந்து சாப்பிட்டு போங்க” என மாமனாரை பார்த்து சொன்னவன், வெளியே செல்ல அவன் பின்னால் ஓடிச் சென்றாள் சிவா.
வெளியில் வந்த பின், என்னவென மனைவியை பார்த்தான்.
முகமெல்லாம் மலர்ந்திருக்க, “நைட்டே ஒரு வார்த்தை சொல்லியிருந்தா, எவ்ளோ சந்தோஷ பட்டிருப்பேன்? போங்க நீங்க” என்றாள்.
இரவு எடுத்த முடிவில்லையே, காலையில் தோப்புக்கு சென்றதிலிருந்து மனைவியின் வாடிய முகம்தான் வதை செய்தது, அங்கு வேலையே ஓடவில்லை.
சட்டென முடிவு செய்து புறப்பட்டு வந்திருந்தான்.
“அது கெடக்கட்டும், அவுக கொடுத்ததுல நூத்தியோரு ரூபா எடுத்து வச்சுக்கிட்டு மிச்சத்தை திருப்பி கொடுத்திடு, இப்ப வேணாம், நாளைக்கு வீட்ல கொண்டு போய் கொடு” என்றான்.
“ஹையோ அதெல்லாம் திரும்ப வாங்க மாட்டாங்க” என்றாள் சிவா.
“அப்ப அதை எடுத்து வை, நம்ம பணத்திலிருந்து எடுத்து கொடு புள்ள, வாங்க மாட்டாங்கன்னா நீ பேசு, எப்படி பேசி சரி கட்டுறதுன்னு உனக்கா தெரியாது?” எனக் கேட்டான்.
கணவனை கண்களால் விழுங்கிக் கொண்டிருந்தாள் சிவா.
“ஏட்டி, போடி உள்ளுக்கு” என்றவன் முகத்தில் மனைவியின் பார்வையால் ஏற்பட்ட வெட்கம் படர்ந்திருந்தது.
“வீடு வந்து சேருய்யா, பேசிக்கிறேன்” என அவள் சொன்ன விதத்தில், தடுமாறியவன் பின்னந்தலையை தடவிக் கொண்டே, வண்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.