அவளை இறுக்கமாக அணைத்து பின் விலகியவன், “வயலுக்கு போய்ட்டு வந்ததோட இருக்கேன் புள்ள, குளிச்சிட்டு வர்றேன்” என்றான்.

“ரொம்ப சுத்தம்தான்!” என்றவள் மீண்டும் அவனை அணைத்துக் கொண்டாள்.

அவளாக விலகும் வரை அமைதியாகவே இருந்தான். கணவனின் மார்பில் முகம் புரட்டி, அவனது இடுப்பின் சுற்றளவை அளந்து, இதயத் துடிப்பை எண்ணி முடித்து சாவகாசமாகத்தான் விலகினாள்.

 ஸ்பரிசம் மூலமாக அவன் மீது கொண்ட நேசத்தை உணர்த்தியிருந்தாள்.

ஒரு வார காலமாக தனித் தனி உறக்கம் அல்லவா. குளித்து வந்தவன் மனைவியின் பக்கத்தில் நெருக்கமாக படுத்து அவளை கட்டியணைத்துக் கொண்டான். அவளுக்கும் அவனது அந்த அருகாமை இதமாக இருக்க, அவனுக்குள் அடங்கிக் கொண்டாள்.

அடுத்த நாளிலிருந்து அஞ்சலகம் விட்டு வந்த பிறகு, கணவனும் வீட்டில் இல்லாத நேரத்தில் அம்மாவை பார்க்க சென்றாள் சிவா. அவனுக்கு தெரியாமல் எதுவும் செய்யவில்லை, அவனிடம் முன்னரே சொல்லி விட்டாள். அவனும் தடை சொல்லாமல் தலையை மட்டும் ஆட்டி சம்மதம் சொல்லியிருந்தான்.

அம்மாவை பார்க்க செல்லும் போது கௌரியுடனும் கைப்பேசியில் பேசுவாள். நன்றாக இருப்பதாகவே சொன்னாள் அவள்.

கௌரியுடன் தொடர்பில் இருப்பது மட்டும் போதாது, உனக்கு நன்றான பிறகு அவளை நேரில் போய் பார்த்து வா என அம்மாவிடம் சொன்னாள் சிவா.

மகளை நினைத்து சுடருக்கு கவலைதான். ஆனால் சின்ன மகள் சொல்வதை ஏற்றுக் கொள்ளவில்லை.

“உன்னை என்கூட பழக விடுற மாதிரி கௌரி கூடவும் விடுவாருன்னு நினைக்காதடி. நாம ஒரே ஊருக்குள்ள இருக்கோம், அவளை சேர்த்துகிட்டா நம்ம பகையாளி ஆகிடுவோம், அதான் நல்லாருக்கேன்னு சொல்றாளே, அவ தலையெழுத்து அப்படி தனியா கிடக்கணும்னு எழுதியிருக்கு, அப்படியே வுட்ரு” என சொல்லி விட்டார் சுடர்.

மகள்களின் மீது உயிரையே வைத்திருக்கும் தன் அப்பாவை பார்த்தாள் சிவா.

“உன் அம்மா சொல்றதுதான் சரி ஆயி, கொஞ்ச மாசம் போவட்டும், நான் வேணுமின்னா யாருக்கும் எவருக்கும் தெரியாம அவளை பார்த்திட்டு வாரேன், ஆனா இப்போ சரி வராது” என அப்பாவும் சொல்லி விட, அக்காவை குறித்த கவலையை மனதிலேயே வைத்துக்கொண்டு விட்டாள் சிவா.

பிறையின் வீட்டுக்கு மகன் மனைவியோடு போய் சமாதானம் செய்தார் தனராஜன். மச்சானின் கையை பிடித்துக்கொண்டு மன்னிப்பு கேட்டு கொண்டான் கலையரசன். அனைவரின் முன்பும் தன் தாயின் தலையில் கை வைத்து இனி குடிக்க மாட்டேன் என சத்தியம் செய்தான்.

மாமனாரிடம் “இனி பிறையை நல்லா வச்சுப்பேன் மாமா, என்னோட அனுப்பி விடுங்க மாமா” என  உருக உருக பேசினான்.

சொல்லிக் கொடுத்த படியே எல்லாம் செய்து விட்டான் என திருப்தி பட்டுக் கொண்ட தனராஜனும், “இப்ப கலைதான் நம்ம நிலம் தோப்பு எல்லாத்தையும் பார்க்கிறான், பொறுப்பா இருக்கான். பிறை வுட்டுட்டு போனதும் வழிக்கு வந்திட்டான், பொண்டாட்டி மேல அம்புட்டு உசுரு, இனியும் சின்னதுகளை பிரிச்சு வச்சா யாருக்கு பிரயோசனம்?” என பெரிய மனித தோரணையில் பேசினார்.

பிறைக்கும் அவளது அண்ணிக்கும் வேறு ஒத்து வரவில்லை, சகுந்தலையோ மகள், மருமகள் இடையில் நியாயம் சொல்லி மாளாமல் திண்டாடிக் கொண்டிருந்தார்.

ஆதலால் விருப்பம் இல்லா விட்டாலும் மீண்டும் புகுந்த வீட்டுக்கு வாழ வந்து விட்டாள் பிறை. அதில் அகமகிழ்ந்து போனது மங்களத்தம்மாள்தான்.

தனராஜன் தன் மகனுக்கு நிறைய மூளை சலவை செய்திருந்தார். நீ மாறா விட்டால் கொஞ்சம் வருடங்கள் கழித்து, உன் பெயரை சொன்னால் யாரென ஊரார் கேட்கும் நிலைக்கு வந்து விடுவாய், பிறை நிரந்தரமாக உன்னை விட்டு சென்றால் குடும்பம் என்ற ஒன்றே உனக்கு இருக்காது, ஒழுங்காக பிழைக்க வழி பார் என பயமுறுத்தி மிரட்டி எச்சரித்து என நிறைய பேசியிருந்தார். கலையரசனுக்கும் இப்போதைக்கு அது கொஞ்சம் வேலை செய்தது.

கணவனிடம் பொறுப்புகள் வந்து விட்டதால் பிறையும் சற்று அமைதியாக இருந்தாள். கணவன் மனைவிக்குள் இன்னும் எல்லாம் சரியாகவில்லை, ஆனால் அமைதியாக இருந்தனர்.

அறுவடை நடந்து முடிந்தது. ருத்ரனின் உழைப்பிலும் மேற்பார்வையிலும் சித்தப்பாவின் வயலிலும் நல்ல விளைச்சல். அவன் முன் நின்று பயிர் செய்ததை எல்லாம் உரு தேற்றி விட்டான். இனி தனக்கு உள்ளதை மட்டும் பார்க்க போகிறேன் என தனக்குள்ளேயே தீர்மானமும் செய்து விட்டான்.

பொங்கல் வரவிருந்ததால் ருத்ரனும் சிவரஞ்சனியும் ஒன்றாக சேர்ந்து போய் வைதேகிக்கு பொங்கல் வரிசை வைத்து விட்டு வந்தனர். பிறைக்கும் அவளது வீட்டிலிருந்து சீரும் சிறப்புமாக எல்லாம் செய்து விட்டு சென்றனர்.

அந்த ஊர்ப் பக்கங்களில் பெண் வீட்டிலிருந்து வரும் பொங்கல் பானைகளில் அவர்கள் தரும் பொருட்கள் வைத்துதான் கணவன் மனைவி இருவருமாக வீட்டு வாசலில் பொங்கல் வைப்பார்கள்.

தன் பிறந்த வீட்டிலிருந்து தனக்கென கொண்டு வந்து வைக்க கொடுப்பினை இல்லையே என்ற ஏக்கம் சிவாவுக்கு உள்ளுக்குள் இருந்ததே தவிர வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.

 ஆனால் அவளின் பெற்றோர் அவளை விட்டுக் கொடுத்து விட தயாராக இல்லை.  வரிசை வைக்க வருவது பற்றி மனைவி சொன்னபடி வள்ளியிடம் கேட்டார் உத்தமன்.  நாள் பார்த்து விட்டு சொல்வதாக சொன்னவர் அன்றே  மகனிடம் பேச, அதெல்லாம் வேண்டாம் எனதான் மறுத்தான் ருத்ரன்.

இது உனக்கு புரியாது, பெண்களுக்கு பிறந்த வீட்டிலிருந்து கிடைக்கும் உரிமை, பிறைக்கு அவள் பெற்றோர் வந்து செய்யவில்லையா, வைதேகிக்கு நாம் செய்கிறோமே, சிவா மட்டும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்பாளா? என எடுத்து சொன்னார் வள்ளி.

“மத்தவங்க கதை வேறம்மா, எங்க கதை வேற, எனக்கு இஷ்டம் இல்லைனா விடணும், என்னை விட  பொறந்த வூட்டு உரிமைதான் முக்கியம், என் பேச்சை மீறி வரிசை வந்துதான் ஆகணும்னு அவளுக்கு தோணினா அவளையே வாங்கிக்க சொல்லு,  என் கையால நான் வாங்க மாட்டேன், அவுக வாறப்ப இங்குட்டு இருக்கவும் மாட்டேன்” என மனைவியை பார்த்து கோவமாக சொல்லி சென்று விட்டான் ருத்ரன்.

தான் பேசினால் சண்டையாகுமோ என நினைத்துதான் மாமியாரை பேச விட்டு ஓரமாக நின்றிருந்தாள் சிவா. அப்போதும் அவள் மீதே கோவம் கொண்டு அவன் பேசியிருக்க அவளுக்கு மிகவும் வருத்தமாகி விட்டது.

“இருக்கட்டும் அத்தை, அடுத்த வருஷம் பார்த்துக்கலாம்” என்றாள் சிவா.

“அவன் கெடக்குறான், நாளைக்கே அவங்கள வர சொல்லிடுறேன் நான், இவன் இல்லாட்டா போறான், எம்புட்டுத்தான்  இவனையே பார்க்கிறது நாம, அடுத்த வருஷம் அவனும் இருந்து வாங்குவான், இந்த முறை நீ வாங்கிக்க” என சொல்லி விட்டார் வள்ளி.