“அட என் மருமவளோட அண்ணனுக்கு ஆக்சின்ட்(ஆக்ஸிடெண்ட்) ஆகிப் போச்சு, பெரியாஸ்பத்திரிய வுட்டுப்புட்டு பிரவேட்டுல வச்சு பார்த்ததுல வைத்திய செலவு கூடிப் போச்சு, அதனால நாலைஞ்சு மாசம் வட்டி கொடுக்க முடியாம போயிட்டுதுங்க” என காரணம் சொல்லிக் கொண்டிருந்தார் வந்தவர்.

“யாரு உன் பெரிய மவன் சம்சாரமா? ஒன்னும் போடாம வெறும் காதும் மொட்ட கழுத்துமா அனுப்பி வச்சிட்டு இப்ப உங்கள்ட்டேருந்தே பிடுங்கி கொட்டிக்கிறாங்களா? மருமவ குடும்பத்துக்கு நீ எதுக்குடா செய்ற? அப்படிலாம் பழக்கம் காட்டாத” என அறிவுரை சொன்னார் மங்களத்தம்மாள்.

“எங்குட்டு ஆத்தா என் சொல் பேச்சை கேட்குறான் எம்மவன்? இனிமே பார்த்து இருக்கேன்” என சொல்லி சென்று விட்டார் அவர்.

மருமகளிடம் அவள்  அம்மாவை பற்றி கேட்டறிந்து கொண்டார் வள்ளி. இப்போது அவரிடம் பணம் நகை என எது பற்றி பேசவும் சிவாவுக்கு தயக்கமாக இருக்க, சற்று ஓய்வு எடுத்து வருவதாக சொல்லி மாடிக்கு சென்று விட்டாள்.

மாமியார் உடன் இருந்ததால்தான் வள்ளியும் பண விவகாரம் குறித்து ஏதும் கேட்டுக் கொண்டிருக்கவில்லை. தங்கமான பெண்ணை கொடுத்திருக்கும் சுடருக்கு எது செய்வதும் தன் கடமை என்றே கருதியவர், பொறுமையாக மருமகளிடம் பேசலாம் என இருந்தார்.

அக்காவுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கும் போதே லோன் போட்டு பணம் எடுத்திருந்தாள், இதர சேமிப்புகளை கொண்டும் அக்காவுக்காக எல்லாம் வாங்கியிருந்தாள். அனைத்தையும் சின்ன மகளுக்கே போட்டு விட்டார் சுடர். நகைகள்  எல்லாம் வள்ளியின் பாதுகாப்பில் இருந்தன.

யாருக்கும் சங்கடம் வந்து விடாத படி எப்படி பணத்தை  தயார் செய்வது என மண்டையை உடைத்துக் கொண்டிருந்தாள் சிவா.

கணவனிடம் கேட்பதெல்லாம் அவளுக்கு  வரம்பு மீறலாகவே தோன்றியது.

வீடு வந்த ருத்ரன், “என்ன புள்ள, உன் உடம்புக்கு என்ன? ஏன் சோர்ந்து போய் கெடக்க?” என விசாரித்தான்.

பேருந்தில் வந்தது, தலை வலிக்கிறது என்றாள்.

“புறப்படும் நேரத்துக்கு கூப்பிட சொன்னேந்தானே?” என கேட்டுக் கொண்டே, பீரோவில் இருந்து பணக் கட்டுக்களை எடுத்தவன்,  அவளின் கைப்பையில் வைத்தான்.  பதறிப் போய் எழுந்தாள் சிவா.

“கூட செலவானாலும் பார்த்துக்கலாம், கலங்காம இரு புள்ள” என அவன் சொல்லவும்,  ஸ்தம்பித்து போய் அவனை பார்த்திருந்தாள்.

“உட்காரு, தலையை புடிச்சி விடுறேன்” என்றவன் அவளின் கையை பிடிக்க, அவனை கட்டிக் கொண்டவளுக்கு நெகிழ்ச்சியாக இருந்தது.

“பணம் புரட்ட போறது நெனச்சிதான் கவலை பட்டுட்டு இருந்தேன்” என கலங்கிய குரலில் சொன்னாள்.

ஆதரவாக அவளின் தோளை பிடித்து விட்டவன், “பணம் ஒரு விஷயமாடி, நம்மகிட்ட இல்லாததா? ஏன் உன்னை பணத்துக்காக தவிக்க விட்ருவேன்னு நினைச்சிபுட்டியா?” எனக் கேட்டான்.

அவனை நிமிர்ந்து பார்த்தவள், “உங்களுக்கு கோவம் போச்சா?” எனக் கேட்டாள்.

சில நொடிகள் அமைதியாக அவளை பார்த்தவன் நீண்டதாக மூச்செடுத்துவிட்டான்.  “தெரியலை புள்ள, வேற வேதனைனா தாங்கிருப்பேன், அசிங்க பட்டுல்ல நின்னேன், அதை பேச இதுவா புள்ள நேரம்?” எனக் கேட்டு அவளை விலக்கி விட்டான்.

இதெல்லாம் தனக்காக தன்னை முன்னிட்டு மட்டுமே செய்கிறான் என்பதை புரிந்து கொண்டாள்.

கணவன் பணம் கொடுத்த விஷயத்தை மாமியாரிடம் மறைக்கவில்லை சிவா. அவனே செய்து விட்டதில் அவருக்கு திருப்தியே. ருத்ரனும் அம்மாவிடம் ஒரு வார்த்தை சொல்லி விட்டான். இதெல்லாம் நம் மூவருக்குள் இருந்தால் போதுமானது என சொல்லி விட்டார் வள்ளி.

நான்கு நாட்கள் விடுப்பு சேமித்து வைத்திருந்தது சிவாவுக்கு உபயோகமாக இருந்தது. சுடருக்கு நல்ல விதமாக அறுவை சிகிச்சை முடிந்து விட்டது. அந்த நாள் மட்டும் மனைவியுடன் இருந்தான் ருத்ரன். பின்னர் எல்லாம் சிவாவே பார்த்துக் கொண்டாள்.

வள்ளி, செங்கமலம், வைதேகி மூவரும் ஒரு முறை நேரில் போய் பார்த்து வந்தனர். தினமும் வீட்டில் சமைத்து மாரியிடம் கொடுத்து விடுவார் வள்ளி.

சிவாவின் விடுப்பு முடியவும் மருத்துவமனையில் இருந்த படியே அஞ்சலகம் சென்று விட்டு மதியத்திற்கு மேல் மருத்துவமனை வந்து அம்மாவை பார்த்துக் கொண்டாள்.  மனைவியை அழைத்து செல்வது, கொண்டு வந்து விடுவது என அலுத்துக் கொள்ளாமல் செய்தான் ருத்ரன்.

அடுத்த ஞாயிறு எல்லாம் டிஸ்சார்ஜ் செய்யப் பட்டு விட்டார் சுடர். அன்றைய தினம் ருத்ரனுக்கு மிகுதியான வேலை, ஆகவே டிரைவர் போட்டு கார் அனுப்பி வைத்திருந்தான்.

“தம்பிக்கு இன்னும் கோவமாடி?” என கவலையாக கேட்டார் சுடர்.

“அவருக்கு வேலை இருந்திருக்கும்மா, சீக்கிரம் சரியாகிடும்” என ஆறுதலாக சொன்னாள் சிவா. மாப்பிள்ளையை நேரில் பார்த்து பேசுகிறேன் என உத்தமன் சொன்ன போதும் இப்போது வேண்டாம் என சொல்லி விட்டாள்.

வீடு வந்த பிறகு மாலை வரை அம்மாவுடன்தான் இருந்தாள். தன்னை முன்னிட்டு எங்கே மகளுக்கும் மருமகனுக்கும் சண்டையாகி விடுமோ என சுடருக்கு பயம். ஆகவே, இனி உன் அப்பா பார்த்துக் கொள்வார், பகலில் ஒரு எட்டு வந்து செல், வேறு ஏதேனும் என்றால் கூட நான் சொல்கிறேன், உன் வீட்டுக்கு சென்று விடு என தீர்மானமாக சொல்லி விட்டார் சுடர்.

ஒரு வாரமாவது அம்மாவுடன் இருக்கத்தான் நினைத்தாள், ஆனால் இத்தனை தூரம் உதவுபவர் இங்கு தங்குவதால் கோவம் கொண்டு விடுவாரோ என அவளுக்கும் பயம், ஆகவே புகுந்த வீட்டுக்கு வந்து விட்டாள்.

மனைவியின் வருகை பற்றி  தெரியாமல்தான் வீட்டுக்கு வந்தான் ருத்ரன். ஏன் இப்போதே வந்து விட்டாய், அங்கு இருக்க வேண்டியதுதானே, உன் அம்மாவுக்கு பரவாயில்லையா இப்போது என எந்த பேச்சுகளும் இல்லை.

சுடர் நலமாக இருக்கிறார் என்பதை அறிந்தே இருந்தான். கடமையை முடித்துக் கொண்டு மனைவியும் இங்கு வந்து விட்டாள் என அந்த விஷயத்தை அப்படியே விட்டு விட்டான்.

சிவா நன்றாக யோசித்து பார்த்து இவர் இத்தனை உதவிகள் செய்தாலும் அம்மா அப்பாவிடம் ஒரு வார்த்தை கூட பேசியிருக்கவில்லை என்பதை தெளிவாக தெரிந்து கொண்டாள். அவனது கோவம் வருத்தம் ஏதும் குறையவில்லை, ஆனால் அவளுக்காக ஒதுக்கி வைத்திருக்கிறான்.

கணவனிடம் எல்லா விஷயங்களையும் சலசலப்பவள்தான்,  ஆனால் அவனது மனம் புரிந்து மருத்துவமனை, அம்மா என எதைப் பற்றியும் பேசவில்லை அவள்.

அவளுக்கு கணவன் மீது அளவு கடந்த அன்பு இருந்ததுதான், இப்போது அவன் மீதான மரியாதை மலையளவு  உயர்ந்திருந்தது. நன்றி எல்லாம் சொல்லி அவனை தள்ளி நிறுத்த விரும்பாதவள்,  சலுகையாக அவன் மீது சாய்ந்து  கொண்டாள்.