மொட்டவிழ்ந்த தேனரும்பே-14

அத்தியாயம்-14

சிவரஞ்சனி தன் அம்மாவின் உடல்நிலை பற்றி சொன்ன போது, ஏதும் கூறாமல் குளித்து விட்டு வந்த ருத்ரனுக்கு அவளுக்கு என்ன பதில் சொல்லவென தெரியவில்லை. சிவாவின் நிலையும் புரிகிறது, தனக்கு தீராத அவமானத்தை தேடி தந்து விட்டவர்களை அத்தனை எளிதாகவும் அவனால் மன்னிக்க இயலவில்லை.

குழப்ப மன நிலையிலேயே ஆடை மாற்றிக் கொண்டிருந்தான்.

இப்படி தானும் முறைத்து நின்றால் காரியம் ஆகப் போவதில்லை என புரிந்து எழுந்தவள், கணவனின் கை பிடித்து தன்னருகில் அமர வைத்துக்கொண்டாள்.

தன் அம்மா செய்தது தவறு என்றாலும் பெரும்பாலும் இது போன்ற சமயங்களில் இப்படிதானே அம்மக்கள் நடந்து கொள்கிறார்கள், மகள் ஓடிச் செல்வாள் என்பதை அவரும் முன்னரே எதிர் பார்த்திருக்க மாட்டார். உங்களை அவமான படுத்த வேண்டும் என்பதல்ல அவரின் நோக்கம்.

அவமானம் செய்த இருவரும் கண்ணுக்கு எட்டாத தூரத்தில் இருக்கும் போது, வயதானவர்களை தண்டிப்பது தரமான செயல் இல்லை, அதனால் நானும்தானே வேதனை படுகிறேன், அதுவும் இந்த சமயத்தில் போய் என்ன  கோவத்தை தூக்கி பிடிப்பது என நிதானமாக சொல்லிக் கொண்டிருந்தாள்.

“சரி போ” என சொல்லி விட்டான்.

அவனை நம்பாமல், “அம்மா வீட்டுக்குதானே போக சொன்னீங்க?” எனக் கேட்டாள்.

“ஆமாம் டி, ஆனா என்னையெல்லாம் வர சொல்ல கூடாது, நீயே ஆஸ்பத்திரி அழைச்சிட்டு போய் காட்டிகிட்டு வா, ராத்திரிக்கு வீடு வந்திடு” என்றான்.

அம்மா வீட்டில் தங்குவது பற்றியெல்லாம் அவள் யோசிக்கவில்லை, இந்தளவு அவன் அனுமதித்ததே அவளுக்கு போதுமானதாக இருந்தது.

“சீக்கிரம்  கிளம்புணுங்க, பதினோரு மணி பஸ் புடிச்சா சீக்கிரம் பட்டுக்கோட்டை போயிடலாம்” என சொல்லிக் கொண்டே கைப்பேசியை எடுத்தாள்.

அப்பாவிடம் விவரம் சொல்லி, அம்மாவை தயாராக இருக்கும் படி சொன்னாள்.

பார்த்துக் கொண்டே இருந்தவன், “அவ்வளோட எல்லாம் பேசிட்டுத்தான் இருக்க ஹ்ம்ம்?” எனக் கேட்டான்.

“டைம் ஆச்சு” என சொல்லி  தயாராக ஆரம்பித்து விட்டாள். அவனும் பெரிது படுத்தாமல் சாதாரணமாகவே எடுத்துக் கொண்டு  விட்டான்.

விரைவாக தயாராகி கைப்பையை எடுத்துக் கொண்டவள் கணவன் வேறு ஏதும் பேசும் முன், “நான் வர்றேங்க” என சொல்லி கீழே ஓடி விட்டாள்.

மாமியாரிடமும் சொல்லிக் கொண்டுதான் அம்மாவை பார்க்க சென்றாள். நேரில் பார்த்த பிறகுதான் அம்மாவின் நிலை மோசமாக இருப்பதே அவளுக்கு தெரிந்தது. கட்டாயப் படுத்தியாவது மருத்துவரிடம் காட்டியிருக்க வேண்டாமா என அப்பாவை கடிந்து கொண்டாள்.

பேருந்தில் அழைத்து செல்வது சரியாக வராது என யோசித்து, கார் ஏற்பாடு செய்ய முயற்சித்தாள். அவர்களுக்கு தெரிந்த டிரைவர் வெளியூரில் இருப்பதாக சொல்லி விட்டான்.

வேறு யாரிடம் உதவி கேட்பாள்? கணவனுக்கே அழைத்து விட்டவள், “அம்மா நடக்கவே சிரம படுதுங்க” என்றாள்.

“ஒன்னுமில்லடி, டாக்டர்கிட்ட காட்டு, சரி பண்ணிடுவாங்க, பயப்படாத” என தைரியம் சொன்னான் ருத்ரன்.

பெற்றோர் முன்பு திடமாக இருந்தவள் கணவனின் ஆறுதலில் உடைந்து போய் விட்டாள். அவள் அழுகிறாள் என தெரியவும் ருத்ரனுக்கு பதட்டமாகி விட்டது.

“ஏட்டி அழுவாத, புள்ள… ஏதாவது பேசு ம்மா” என்றான்.

தன்னை சமாளித்துக் கொண்டு காருக்கு ஏற்பாடு செய்து தரும் படி கேட்டாள்.

“கிளம்பி இருங்க, செத்த நேரத்துல கார் வந்திடும்” என்றவனுக்கு சில நொடிகள் யோசனை.

மாமியார் மீது கரிசனம் என்றெல்லாம் இல்லை, யாரோ ஒருவர் உடல்நிலை கேடாகி இருக்கும் போது உதவ மாட்டோமா, தைரியமான என் மனைவி அழுகிறாள், இப்போது அவளுடன் இல்லாமல் பிறகு என்னதான் அவளுக்கு செய்தாலும் அதற்கு அர்த்தம் உண்டா? என தனக்கு தானே எடுத்து சொல்லிக் கொண்டவன் அவனே காரை எடுத்துக் கொண்டு போய் நின்றான்.

ருத்ரனே வந்து நிற்பான் என எதிர்பார்க்காத சிவாவும் உத்தமனும் வியப்படைந்து நின்றனர்.

“நேரமாவுது பாரு, வா” என ருத்ரன் சொல்லவும், எதையும் கேட்டுக் கொள்ளாமல் அம்மாவை அழைத்து வந்து காரில் ஏற்றினாள் சிவா.

  அம்மாவின் அருகில் சிவா அமர்ந்து கொள்ள, “உங்கப்பாவை முன்னால ஏற சொல்லு” என மனைவியிடம் சொன்னான் ருத்ரன்.

உத்தமன் தயங்க, சிவா கண்களால் பேசி அவரை முன் இருக்கையில் அமர வைத்தாள்.

அவர்களை மருத்துவமனையில் விட்டவன் டோக்கன் எல்லாம் போட்டுக் கொடுத்தான். பரிசோதனைகள் எல்லாம் செய்து என்னவென பார்க்க மாலையாகி விடும் என சொல்லப் பட்டது.

மனைவியின் கைப்பையில் சில ஆயிரம் ரூபாய்களை வைத்துக்கொண்டே,   “என்னன்னு பாரு, கிளம்பறப்ப சொல்லு, கூப்பிட வர்றேன்” என்றான் ருத்ரன்.

“கார்டுல பணம் இருக்குங்க” என்றாள் சிவா.

“பணமாதான் கட்டணும்னு சொன்னாங்கன்னா எங்குட்டு போய் எடுத்துக்கிட்டு நிப்ப, வச்சுக்க”  என்றவன் கிளம்பி விட்டான்.

உத்தமனுக்கு அவனிடம் ஏதாவது பேசி சமாதானமாக வேண்டும் என தோன்றுகிறது, ஆனால் நிறைய தயக்கம், முதலில் மனைவியின் உடல்நலத்தை பார்ப்போம், பிறகு நிதானமாக பேசி உறவை உயிர்ப்பித்துக் கொள்ளலாம் என இருந்து விட்டார்.

சுடருக்கு கர்ப்பப் பையில் கட்டி இருப்பதால்  அறுவை சிகிச்சை செய்து கர்ப்பப் பையை அகற்றுவதுதான் தீர்வு என சொல்லி விட்டார் மருத்துவர். காலம் கடத்த வேண்டாம், சீக்கிரம் செய்து விடுங்கள் என  சிவா சொல்ல, உடனே சுடரை அட்மிட் செய்து விட்டார்கள்.

நாளை மறுநாள் அறுவை சிகிச்சை செய்து விடலாம் என சொல்லி நாளைக்கு பணத்தை கட்ட சொல்லியிருந்தனர்.

அம்மாவுக்கு அப்பாவை துணைக்கு வைத்து விட்டு, பணம் ஏற்பாடு செய்ய ஊருக்கு பேருந்து ஏறி விட்டாள் சிவா.

கணவனிடமிருந்து அழைப்பு வந்தது. வேலையாக இருப்பீர்கள்,  அதுதான் பேருந்தில் ஏறி விட்டேன், விவரமும் வீட்டுக்கு வந்த பிறகு சொல்லலாம் என இருந்தேன் என்றவள் அம்மாவின் நிலையை பற்றி எல்லாம் சொன்னாள்.

“கர்ப்பபை எடுக்கிற ஆபரேஷன் எல்லாம் இப்ப நிறைய பேருக்கு நடக்குது, நல்லாகிடுவாங்க” என சொல்லி பேச்சை முடித்துக் கொண்டான்.

என்ன செலவாகும், எப்படி சமாளிக்க போகிறாய் என்றெல்லாம் அவன் கேட்டுக் கொள்ளவில்லை, அவளும் எதிர்பார்க்கவில்லை.

மாமியாரிடம் முன்னர் வட்டிக்கு விட சொல்லி கொடுத்து வைத்திருந்த பணத்தை பெற்றுக் கொள்ளலாம், பிறந்த வீட்டில் தனக்கு போட்டிருந்த ஏதாவது நகையையும் அடகு வைத்து விட்டால் சமாளித்து விடலாம் என யோசித்து வைத்திருந்தாள்.

வீடு வந்த போது வட்டி கொடுக்க வந்த கடன்காரர் ஒருவரிடம்  கறாராக பேசிக் கொண்டிருந்தார் வள்ளி.