மறுநாள் காலையிலே ஆனந்தி பேருக்கு மாற்றினாள் துளசி. பாதுகாப்புடன் வந்த ஆனந்தி, “நான் நினைச்சது எதுவும் நடக்கலை. எனக்கு வேணாம்ன்னு உனக்கு கொடுத்து, திரும்ப என் கைக்கே தான் வந்திருக்கு. பரவாயில்லை. என் அண்ணன் பங்கு உன்கிட்ட இருக்கு இல்லை. போதும்” என்றார்.
அவரின் தைரியம் நன்றாகவே வெளிப்பட, துளசிக்கு நிம்மதி, சமாளித்து கொள்வார்.
“அண்ணி எல்லாம் ஓய்ஞ்சதும் அங்கதான் வருவேன். உங்ககிட்ட தான் வருவேன்” என்று வளர்மதியிடம் சொன்னார் ஆனந்தி.
ஏனோ சட்டென கலங்கிவிட்டார் வளர்மதி. “இப்போவே என்கூட வந்திடு” என்றார்.
“ம்ஹூம். கொஞ்ச நாள் அண்ணி” என்று ஆனந்தி விடைபெற, இவர்கள் வீடு வந்தனர்.
“நான் முதல்ல இருந்து ஆனந்தியை கவனிச்சிருக்கணும். விட்டுட்டேன்” என்று வளர்மதி வருந்த,
“அத்தை. இப்போ நடக்கிறதை மட்டும் வைச்சு பீல் பண்ணாதீங்க. ஆனந்தி மேடமும் மகன் பாசத்துல சிலது செஞ்சுட்டாங்க. இப்போ அதை சரி பண்ண பார்க்கிறாங்க அவ்வளவு தான். முழுக்க, முழுக்க அவங்க சம்மந்தப்பட்டது” என்றான் தேவா.
“சரிதான் தேவா. ஆனாலும்”
“ஆனந்தி மேடம் முதல்ல இருந்து உங்களை சேர்த்து பிடிச்சாங்களா என்ன?”
“இல்லை. அப்பா இருக்கும் போது அப்பாகிட்ட மட்டும் நல்லா இருப்பாங்க. அப்புறம் அம்மா மேல இருக்கிற தவறான புரிதல்ல எங்களை விட்டுட்டாங்க. அப்பறம் அவங்களே தான் புரிஞ்சு திரும்ப வந்தாங்க” என்றாள் துளசி.
“அதே தான். இதுல நீங்க எங்கேயும் தப்பில்லை அத்தை” என்றவன், “நீ வீட்டுக்கு கிளம்பு துளசி” என்று மனைவியிடம் சொன்னான்.
“நீங்க?”
“நான் நைட் இங்க இருந்துட்டு வரேன்” என்று தேவா சொல்ல,
“நானும் இருக்கேன். எப்போ பார்த்தாலும் நீங்க மட்டும் அம்மாவோட இருக்கீங்க” என்றாள் துளசி.
‘போந்தா கோழி சொன்னா மட்டும் கோவம் வரும். ஆனா செய்கை எல்லாம் அப்படித்தான் இருக்கும்’
“நான் என்ன விருந்துக்கா இருக்குறேன். அத்தைகிட்ட பேசணும்”
“நீங்க பேசுங்க. நான் தொல்லை பண்ண மாட்டேன்” என்றாள் நல்லபிள்ளை.
“தொல்லை பண்ணுடி. நிறையவே பண்ணு. ஆனா இங்க இல்லை. நம்ம வீட்ல, நம்ம ரூம்ல வைச்சு பண்ணுடி” என்று மனைவி காதை கடித்தான் கேடி.
“எங்களுக்கு எல்லாம் மட்டும் தான் அடிச்சு சொல்லி கொடுப்பீங்களா? உங்க பொண்ணு சொல் பேச்சு கேட்க மாட்டேங்கிறா”
“ஏங்க? என்ன இது?”
இதென்ன சின்னப்புள்ள தனமா கம்பளைண்ட் பண்றது?
வளர்மதி நொடி தேவாவை கண்டு, “துளசி நீ வீட்டுக்கு கிளம்பு” என்றார்.
“ம்ம்மா” பெண்ணுக்கு இருவர் மீதும் கோவம்.
“சொல் பேச்சு கேட்கணும் துளசி” என்று அன்னை கண்டித்தார்.
வைரவேல் காருடன் வந்து மருமகளை அழைத்து செல்ல, “சாப்பிட்டு கிளம்பு” என்ற அன்னையிடம்,
“நான் என் வீட்டுக்கே போய் சாப்பிட்டுக்கிறேன். நீங்களும், உங்க மருமகனும் மட்டும் சாப்பிடுங்க” என்று கடுப்படித்து சென்றாள்.
அன்று மாலை எதிர்பார்த்தது போல, சுந்தரத்துக்கு விஷயம் தெரிந்துவிட மனிதர் மகனுடன் நேரே தேவாவை தேடித்தான் வந்தார்.
நீதிமன்றம் வரைக்கும் சென்றுவிட்டதால் சந்தோஷை விடுவதை தவிர சுவாதி தந்தைக்கு வேறு வழியில்லை.
சுந்தரத்துக்கு எல்லா இடத்திலும் ஆட்கள் உண்டு. நிச்சயம் கலாட்டா செய்தாவது பத்திரப்பதிவை தடுத்து நிறுத்தியிருப்பார். அதனாலே சந்தோஷை அழைக்க சென்ற நேரத்தை பயன்படுத்தி கொண்டான் தேவா.
கேள்விப்பட்டதும் அவ்வளவு கோவம். “என் உழைப்பை நீங்க என்னடா கூறு போட்டுட்டு இருக்கீங்க?” என்று சத்தமிட்டார் மனிதர்.
ஆனந்தியை ஒருவழி செய்ய வேண்டும் என்று தந்தையும், மகனும் பேசியிருக்க, இப்போது திரும்ப ஆனந்தியிடம் சென்று நிற்க வேண்டுமா?
“நீங்க இரண்டாவது சார். ஆனந்தி மேடம் தான் முதல்ல. அதனால தான் அவங்களுக்கு கொடுத்துட்டோம்” என்றான் தேவா சாதாரணமாக.
“நாந்தான் முதல்ல. பரம்பரை சொத்து வரைக்கும் என் பங்கு இருக்கு” என்றான் சந்தோஷ்.
இவன் திருந்த மாட்டான் என்று தேவாவிற்கு நன்றாக தெரியும்.
“ஆனந்தி மேடம் உன்னை வாரிசுனு சொன்னாதான் இதெல்லாம். தேவைப்பட்டா உன்னை அவங்க மகன் இல்லைன்னு கூட நிரூபிச்சு காட்டுவேன்” என்றான் தேவா தீராத கோபத்துடன்.
“நீ என்வழியில ரொம்ப வர தேவா. உன்கிட்ட இருக்க ஆதாரத்துக்கு பயந்துட்டு உன்னை விட்டு வைக்கலை. பத்தோடு பதினொன்னு என் கணக்கு அவ்வளவு தான். ஏதோ தெரிஞ்ச பையன்னு பார்க்க, நீ அதிகமா சீண்டுற” என்று சுந்தரம் ஒருமாதிரி சொன்னார்.
“சார். என்ன சார்” என்று புன்னகைத்த தேவா,
“தெரிஞ்ச பையன்னு விட்டு வைச்சிருக்கீங்களா? ம்ம். இனி பார்க்காதீங்க சார். உங்களுக்கும், எனக்கும் ஒன்னுமில்லை. மத்தவங்களை என்ன செய்வீங்களோ அப்படியே என்னையும் செய்ங்க. பார்த்துக்கலாம்” என்றான்.
நிதானமா பேசுறான். சுந்தரம் சுதாரித்தார்.
“பின்னாடி ஏதும் வேலை பார்த்து வைச்சிருக்க இல்லை”
“கிரிமினல் கூட பழகியிருக்கேன் சார். போலீஸ் மட்டுமில்லை ஜட்ஜ் வரைக்கும் கூட போயிருப்பேன்”
“நேருக்கு நேரா நின்னிருக்கணும்டா நீ”
“இப்போ கூட நிக்கலாம். வயசானவர் நீங்களே வரணும்ன்னு இல்லை. உங்க மகனை கூட அனுப்பலாம்” என்று சந்தோஷை கைகாட்டினான்.
“என் மகன் மேல கை வைச்சுட்டு நக்கல் பேசுற. அந்த கணக்கு தனியா இருக்கு தேவா. மறந்திடாத”
“என் சித்தப்பா மேல கைவச்சது காந்தி கணக்கா சார்? துரோகம் உங்க ரத்தத்துல இருக்கே. என்கூடவே இருந்து என் சித்தப்பாக்கு ஆக்சிடென்ட் பண்ண உத்தமர் ஆச்சே நீங்க” என்று வெறுப்பாக சொன்ன தேவா,
“துளசிகிட்ட இனி நீங்க வர எந்த காரணமும் இல்லை. பெரியவர் குடும்பத்துக்கும் உங்களுக்கு சம்மந்தம் இல்லைன்னு ஆக போகுது. உங்க விவாகரத்து வழக்கை நாந்தான் நடத்த போறேன்” என்றான் தேவா.
“டேய்” என்று சுந்தரம் இதை எதிர்பார்க்காமல் கத்த,
“கேஸ் கோர்ட்டுக்கு போயாச்சு. மொத்தமா முடிச்சுக்கலாம் சார்” என்று சொல்லி முடிக்கும் நேரம், போலீஸ் வாகனம் வந்து நின்றது.
தேவா கொடுத்த ஆதாரங்களின் அடிப்படையில் சுந்தரத்தை கைது செய்ய வேண்டும் என்றனர்.
சுந்தரம் உடன் வந்த ஆட்கள் குதிக்க, அசால்ட்டாக அவர்களை ஒதுக்கி தள்ளி சுந்தரத்தை அள்ளிக்கொண்டு சென்றனர்.
சந்தோஷால் தடுக்க முடியவில்லை. அவனால் செய்யவும் முடியாது.
“ரொம்ப சந்தோஷப்பட்டுக்காத. என் அப்பாவை வெளியே கொண்டு வர எனக்கு தெரியும்” என்று தேவாவிடம் சவால் விட,