காலையிலும் அவள் எழுவதற்கு முன் வெளியில் சென்று விட்டான். அவளுக்கும் தன் கோவத்தை அவனிடம் காட்ட வேண்டுமாக இருந்தது. இன்று சீக்கிரம் செல்ல வேண்டும் என மாமியாரிடம் சொன்னவள், அவன் வருவதற்கு முன்பே ஏழே முக்காலுக்கு வரும் பேருந்தில் ஏறி சென்று விட்டாள்.
வேலைக்கு வந்த பிறகுதான் அப்படி அவரை தவிர்த்து விட்டு வந்திருக்க வேண்டாம் என வருந்தினாள். மதியம் அழைக்க வருவார், வழியிலேயே பேசி சமாதானம் செய்து விட வேண்டும் என எண்ணிக் கொண்டாள்.
காலையில் தனியாக சென்றவள் மீது கடுங் கோவத்தில் இருந்தவன் மதியமும் அவளை அழைக்க வரவில்லை. இவள் கைப்பேசியில் ஒரு அழைப்பு விடுத்திருந்தால் உடனே வந்திருப்பான், கணவன் அவனாகவே வராமல் போனதில் ஏமாற்றமாக உணர்ந்தவள் பேருந்திலேயேதான் வீட்டுக்கு வந்தாள்.
அவளுக்கு முன்பே வந்து சாப்பிட்டு மீண்டும் வெளியில் சென்று விட்டான் என அறிந்த போது அவளுக்கு பசியெல்லாம் மறத்து போய் விட்டது.
கணவன் மனைவி என்றால் சண்டைகள் சகஜம்தானே, அப்படி சண்டைகள் வர வரத்தான் உறவு கெட்டிப்படும், ஆரோக்கியமான சண்டைகள் அத்தியாவசியம்தான் என நினைத்து வள்ளியும் என்ன ஏது என்றெல்லாம் விசாரித்துக் கொள்ளவில்லை.
முதல் நாள் மதியம் நடந்த விஷயம் அவருக்கும் செங்கமலத்துக்கும் தெரியவே இல்லை.
மருமகளை சாப்பிட வைத்துதான் அனுப்பினார் வள்ளி.
மதியம் தாமதமாக வீடு வந்திருப்பாள், பாவம் எத்தனை நேரம் பசியோடு இருந்தாளோ என வருந்திய ருத்ரன், இன்று இரவு அவளை சமாதான படுத்தி விட வேண்டும் என்ற நினைப்போடுதான் வீடு வந்தான்.
சிவாவுக்கு, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ ஆரம்பித்த பிறகு அத்தனை இனிமையாக சென்ற நாட்களை எல்லாம் கணவனின் ஒரு நாளைய ஒதுக்கம் பின்னுக்கு தள்ளி விட்டது போலிருந்தது.
உடம்புக்கு என்னவோ போலிருக்கிறது என சொல்லி ஏழு மணிக்கெல்லாம் உணவை கொறித்தவள் அவன் வீடு வந்த நேரம் உறங்கிப் போயிருந்தாள்.
அதிகாலை வழக்கம் போல விழித்தவள் படுக்கையை விட்டு எழ, தன்னிரு கரங்களால் அவளை சுற்றி வளைத்துக் கொண்டான் ருத்ரன்.
அவள் திமிற, அப்படியே அவளை படுக்கையில் சரித்தான். அசைய விடாமல் அவளை பிடித்துக்கொண்டவன், “என்னடி கண்ணாமூச்சு காட்டிட்டு இருக்க? என்னைய வுட்டுட்டு பஸ்ல போனவ நீதானே, என்ன செய்யலாம் உன்னை?” எனக் கேட்டான்.
“முந்தாநேத்து நைட்டு என்னை அவாய்ட் பண்ணிட்டு தூங்கல நீங்க?” எனக் கேட்டாள்.
“அம்புட்டு வேலை கெடந்தும் மதியான நேரம் உன்கூட இருக்கலாம்னு நெனச்சா கண்டதையும் பேசி சாவடிச்சது நீதானேடி?”
“கண்டதையும் பேசினேனா? இருக்கட்டும், விடுங்க என்னை? நேத்து பஸ்ல எவ்ளோ கூட்டம் தெரியுமா? நின்னுகிட்டே வந்தேன், வருவீங்க வருவீங்கன்னு போஸ்ட் ஆஃபிஸ் வாசல்ல லூசு மாதிரி நின்னுட்டு இருந்தேன், தள்ளுங்க, வீட்டு வேலைய முடிச்சிட்டு கிளம்பணும், பஸ் போயிடும்” என்றாள்.
“ம்ம்… ஞாயித்து கிழமைல என்ன வேலை பார்க்க போற?” என அவன் கேட்கவும்தான் அன்றைய கிழமையே அவளுக்கு நினைவு வந்தது.
இப்படியா நாள், கிழமை தெரியாத படிக்கு இவர் என்னை பாதிக்கிறார் என தன்னையே நொந்து கொண்டாள்.
“என் கோவம் உனக்கு தெரியாதா? வாயால பேசுற சொல்ல விடுடி, என் மனசு புரியாதா உனக்கு? வதைக்காத புள்ள” என்றான்.
வார்த்தைகள் கோர்த்தெல்லாம் ஜாலமாக அவனுக்கு பேச வராது, ஆனால் அவன் என்ன நினைக்கிறான் என்பதை அவளால் புரிந்து கொள்ள முடியும். ஜோடனை வார்த்தைகளை எதிர்பார்க்காமல் சமாதானமாகி விட்டாள். அவனுடன் முட்டிக்கொண்டு நிற்பதெல்லாம் அவளுக்கு பிடிக்கவில்லை.
“ரொம்ப கெஞ்சாதீங்க” என்றவள் அவனிடம் தன்னை விட்டுக் கொடுத்து தளர்வாக படுத்துக் கொண்டாள்.
அவளின் நெற்றியில் முத்தமிட்டு ஊடலை முடித்து வைத்தான் ருத்ரன்.
சற்று நேரம் நன்றாக தூங்கி தாமதமாகத்தான் கீழே சென்றனர். கணவன் வெளியில் சென்ற பிறகு மாடுகளை பார்க்க வந்தாள் சிவா.
இங்குதான் மாரி வேலை செய்தாலும் இவளை பார்த்து பேசி நாளாகி விட்டது. ஆதலால் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர்.
“ஓட்டலு நாலு நாளா தொறக்க காணோம் ஆயி, அம்மாக்கு சொகமில்ல போல, என்னாச்சு?” எனக் கேட்டான் மாரி.
தினம் தன் பெற்றோருடன் பேசிக் கொண்டுதான் இருக்கிறாள் சிவா. அவர்கள் விவரம் ஏதும் சொல்லியிருக்கவே இல்லை.
“எனக்கு தெரியாதே ண்ணன், நல்லா தெரியுமா உங்களுக்கு?” எனக் கேட்டாள் சிவா.
அவன், “அட இன்னிக்கு காத்தால இங்குட்டு வாரப்ப கூட உன் அப்பாரை பார்த்தேன் ஆயி, எப்ப ஓட்டலு தொறப்பீயன்னு கேட்டதுக்கு, சொல்றதுக்கு இல்லைனு கை காட்டிட்டு போனாவோ” என்றான்.
உள்ளே வந்த சிவா உடனே தன் மாமியாரிடம் விஷயத்தை சொல்லி, “அம்மாவும் அப்பாவும் எதையோ மறைக்கிறாங்க, ஒரு எட்டு அவங்கள பார்த்திட்டு வர்றேன் அத்தை” என்றாள்.
வள்ளிக்கும் வருத்தமாகி விட்டது. “அவன்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு போ ஆயி” என்றார்.
அவள் யோசிக்க, “இப்பதான் பழைய கோவம் போயிடுச்சே, கேளு சிவா” என செங்கமலமும் சொன்னார்.
அம்மாவை பற்றிய கவலையில் சிவாவுக்கு வேலையே செய்ய முடியவில்லை. வள்ளியும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என சொல்லி அவளை அனுப்பி வைத்து விட்டார்.
மாடி வந்ததுமே அப்பாவுக்கு அழைத்து என்னவென அழுத்திக் கேட்டாள் சிவா. மனைவிக்கு குணமாகாத காரணத்தால் அவரும் சொல்லி விட்டார்.
சுடருக்கு அதீத இரத்தப் போக்கு, மகளிர் நல மருத்துவரை பார்க்கலாம் என உத்தமன் சொன்னதற்கு மறுத்து விட்டு கை வைத்தியத்தில் சரியாகி விடும் என சொல்லி வீட்டிலேயே இருக்கிறாராம்.
“என் பேச்சை கேட்க மாட்டா ஆயி உன் அம்மா, செத்த நீ வந்து சொல்லு, ரொம்ப சோர்ந்து போயிட்டா” என கவலையாக சொன்னார் உத்தமன்.
கண்டிப்பாக வருகிறேன் என சொல்லி விட்டவளுக்கு அம்மாவை நினைத்து கவலையாகவும் கணவனை நினைத்து பயமாகவும் இருந்தது.
ருத்ரன் வரவும் எப்படி ஆரம்பிக்க என தெரியாமல் தடுமாறினாள். அவளை கவனித்து பார்த்தவன், “என்ன என்கிட்ட சொல்ல முடியாத அளவுக்கு பெருசா ஏதாச்சும் பண்ணி வச்சிட்டியா? என்ன புள்ள?” என விசாரித்தான்.
“கோவ படாம கேட்கணும்” என ஆரம்பித்தாள்.
“அப்ப சங்கதி நெசமாவே பெருசுதான், எனக்கு ரொம்பவே பயந்தவதான் நீ, என்னன்னு சொல்லு” என சொல்லிக் கொண்டே குளிக்க தயாரானான்.
அம்மாவின் உடல்நிலை பற்றி சொல்லும் போதே அவளின் கண்கள் கலங்கி விட்டன.
“யார் இருக்கா அவங்களுக்கு? நான்தாங்க பார்க்கணும், கூடாதுன்னு சொல்லிடாதீங்க” என சொல்லிக் கொண்டே கண்களை துடைத்துக் கொண்டாள்.
மனைவியின் அழுகை ருத்ரனை வருத்தம் கொள்ள செய்திருந்தது, ஆயினும் ஒன்றும் சொல்லாமல் குளிக்க சென்று விட்டான்.
கணவன் மீதான கோவத்தில் உடலை குறுக்கிக் கொண்டு படுத்து விட்டவளுக்கு இன்னும் அழுகையாக வந்தது.